உறைநீர் - 3
அவள் தமிழரசி..
மகளிர் நல மற்றும் மகப்பேறு மருத்துவர்..
25 வயதானாலும் இன்னும் வீட்டில் இருக்கையில் பதின் பருவத்துக்குரிய சுட்டித்தனங்கள் அகலாமல் விழியில் குறும்பு கொப்பளிக்க தன்னுடைய இரு அண்ணன்களின் செல்ல குழந்தையாய் வலம் வருபவள்.. கடைக்குட்டி என்பதால் பெயருக்கு ஏற்றார் போல் அவர்கள் இருவருக்கும் அவள் இளவரசி தான்..
அதே சமயம் அவள் கொண்ட மருத்துவப் பணியில் ஈடுபடும் போது அவளுடைய ஆளுமையும் அர்ப்பணிப்பும் அவளின் வேலை செய்யும் திறனும் அதில் இருக்கும் செம்மையும் சீர்மையும் நேர்த்தியும் ஒரு மாறுபட்ட தமிழரசியை நம் கண் முன்னால் நிறுத்தும்.
இப்படி இரண்டு மாறுபட்ட பெண்ணாய் வலம் வருபவளுக்கு இன்னொரு சிறப்பான முகமும் உண்டு..
சமூகத்தில் நிலா சூர்யா போன்று நித்தம் நித்தம் வாழ்வில் போராட்டத்தை எதிர்கொண்டு வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதையும் சிறப்பாக நிர்வகித்து வருபவள் அவள்..
இந்த அறக்கட்டளையில் படிக்க வாய்ப்பில்லாத பெண்களை அவர்கள் விரும்பிய துறையில் மேல் படிப்பு வரை முழுவதுமாய் அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொண்டு படிக்க வைப்பது.. பெற்றோரை.. கணவனை.. இழந்த ஆதரவற்ற பெண்கள்.. தங்கள் வீட்டிலேயே பாலியல் வன்கொடுமை உட்பட பல கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்.. சூர்யா நிலா போன்று வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுப்பாதுகாப்போடு இருக்க இடமும் சுயதொழில் செய்ய உதவியும் செய்து அவர்களுக்குள் வாழ்வதற்கான நம்பிக்கையை விதைப்பவள் அவள்.. அதே சமயம் தமிழ்ச்செல்வனின் தங்கையாக எல்லாவற்றிலும் நேர்மையை மட்டுமே கடைபிடிக்கும் நேர் கொண்ட பெண்ணவள்..
இப்படிப்பட்டவளை தான் அந்த சிட்டி பாபுவின் அயோக்கியத்தனங்களை ஆதாரத்தோடு வெளிச்சம் போட்டு காட்ட அந்தப் பெண்களுக்குள் ஒரு பெண்ணாகவே அனுப்பி இருந்தான் தமிழ்ச்செல்வன்..
இந்த பெண்களைப் பற்றி சொல்லி அவர்களை எப்படியாவது அந்த நரகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து நல்ல வாழ்வை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்ல
அவர்களின் கூடாரத்துக்கே சென்று கையும் களவுமாக அந்தக் கயவனை பிடிக்க தானே அந்தப் பெண்களுக்குள் ஒருத்தியாக போகப் போவதாக அவள் சொன்ன கணமே அதற்கு அவன் முற்றிலுமாக மறுத்து இருந்தான்..
அவனுக்கு அவளை அந்த கும்பலுக்குள் அனுப்புவதில் உடன்பாடே இல்லை.. ஆனால் அவளும் அவன் தங்கை ஆயிற்றே.. அவளுக்குள் இருந்த பிடிவாதம், தைரியம், அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இது எல்லாமே அவனிடமிருந்து அவள் பெற்றது தானே..
எப்போதும் போல பிடிவாதம் பிடித்தவளின் விருப்பத்தை உடைக்க முடியாது அவள் அங்கே செல்வதற்கு ஒப்புக்கொண்டான் அவன்.. ஆனால் அவளுக்கு வேண்டிய அத்தனை பாதுகாப்பு உபகரணங்களும் அவளை சுற்றி வேலியாய் அமைக்கப்பட்டிருக்க அவள் அந்த கும்பலுக்குள் அனுப்பப்பட்டிருந்தாள்..
ஒரு வாரத்திற்கு முன்னால் இந்த சிட்டிபாபுவின் கையாள் ஒருவன் திரைப்பட இயக்குனர் என்ற பெயரில் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்ய ஆள் எடுப்பதாக சொல்லி ஒரு விடுதியின் முகவரியை கொடுத்து அந்த விடுதிக்கு வந்தால் தமிழ் சினிமாவின் கனவு கன்னி ஆகி விடலாம் என விளம்பரப்படுத்தியிருக்க அந்த நேர்காணலுக்கு சென்ற பெண்களுக்குள் ஒருத்தியாக தானும் சென்றாள் தமிழரசி..
தமிழரசி மட்டுமில்லாமல் அவளோடு கூட இன்னும் இரண்டு பெண் காவலர்களும் அங்கு சென்று இருந்தார்கள்.. ஆனால் இந்தக் கேடுகட்ட தொழிலுக்கு கூட பெண்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான் அந்த கயவன்..
அதில் தமிழரசியோடு வேறு இரண்டு அப்பாவி பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட மற்றவர்களெல்லாம் திருப்பி அனுப்பப்பட்டனர்.. மூவருமே அழகாய் இருந்தது தான் அவர்களுக்கு ஆபத்தாய் முடிந்தது..
மூவருக்கும் ஆடிஷன் நடக்கப்போவதாக சொல்லி தன் காரிலேயே அவர்களை வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றான்..
தமிழரசி எதிர்பார்த்தது போலவே அந்த இடம் பல பெண்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பாலியல் தொழிலில் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்பட்ட ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதி..
அந்த விடுதியில் மொத்தமாக ஐந்து தளங்கள் இருந்தன.. அதில் முதல் தளத்தில் சாதாரணமாக அறை எடுத்து தங்கி இருந்த ஆண்கள் மற்ற நான்கு தளத்திற்கும் காவலுக்கு இருக்கும் சிட்டிபாபுவின் அடியாட்கள்..
புதிதாய் வந்திருக்கும் பெண்களை அங்கே இருந்த வரவேற்பறையில் அமர வைத்து அவர்களை காத்திருக்க சொல்லி அவர்களுக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயக்கமான பிறகு அவர்களை ஐந்தாவது மாடிக்கு இடம்பெயர்த்து விடுவார்கள்..
ஐந்தாவது தளத்தில் மயக்கம் தெளியும் போது அந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பார்கள்..
தமிழரசியோடு மற்ற இரண்டு பெண்களையும் ஐந்தாவது தளத்திற்கு தூக்கிச் சென்று அங்கிருந்த ஒரு அறையில் கிடத்தி விட மற்ற இரு பெண்களும் அந்த மயக்க மருந்து அடங்கிய குளிர்பானத்தை குடித்ததால் மயக்கமாக இருந்தார்கள்..
ஆனால் தமிழரசி தான் அதை குடிக்கவே இல்லையே.. அவர்கள் கண்ணசந்த நேரம் அந்த குளிர்பானத்தை பக்கத்தில் இருந்த பூந்தொட்டியில் கொட்டி விட்டு அதை குடித்து மயக்கம் ஆகிவிட்டதாக நடித்தாள்..
மயக்கமானவர்களை அந்த அறையில் கிடத்திய அந்த ஈனப்பிறவி சிட்டிபாபுவையும் இன்னும் சில ஆட்களையும் அழைத்து வர அந்த அறைக்கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தான்.. அந்நேரம் தன்னிடம் இருந்த மைக்ரோஃபோன் மூலமாக அவளை பின்தொடர்ந்து தன் காவலர் குழுவோடு வந்து அந்த கட்டிடத்தை சூழ்ந்து இருந்த தமிழ்ச்செல்வத்திற்கு தகவல் தெரிவித்து இருந்தாள் அரசி.
தமிழ்ச்செல்வன் எல்லா தளத்திற்கும் ஆட்களை அனுப்பிவிட்டு நேராக சென்றது நான்காவது தளத்தில் நிலா இருந்த அறைக்கு..
அறையைத் திறந்து கொண்டு உள்ளே போனவன் கையை அறுத்துக் கொள்ள முனைந்த நிலாவை கண்டதும் அதிர்ந்து தான் போனான்.. ஆனால் ஒரு நொடி தான் அந்த அதிர்வு.. அடுத்த நொடி அவனின் போலீஸ் மூளை அடுத்தடுத்த வேலையில் இறங்கி இருந்தது..
அண்ணன் சொன்ன வழி தவறாமல் எல்லாவற்றையும் செய்து முடித்த தமிழரசி தன் சட்டையில் இருந்த ஒரு பொத்தானில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கேமராவை எடுத்து தன் அண்ணனிடம் கொடுத்தாள்..
"என்னண்ணா எல்லாம் பர்ஃபெக்டா ரெக்கார்ட் ஆயிடுச்சா?"
அவள் கேட்கவும் "எல்லாமே ரெக்கார்ட் ஆயிடுச்சு டா தங்கம்.. அதுலயும் இந்த ஆபரேஷன்ல ஹைலைட் என்ன தெரியுமா? இதோ இவனோட ஆளு அந்த மூதேவி அங்க மயங்கி இருந்த உங்ககிட்ட அந்த இன்டர்வியூ எதுக்கு நடத்தினாங்க.. ஏன் நடத்துனாங்க.. யாரு நடத்தினாங்க.. எங்க கூட்டிட்டு வந்தாங்கன்னு அந்த இடத்தோட முழு ஹிஸ்டரியையும் புட்டு புட்டு வெச்சிட்டான்.. இதுக்கு மேல இந்த நாய்ங்களால தப்பிக்கவே முடியாது.."
சிட்டி பாபுவை தீவிரமாக முறைத்தபடி "இவனை எல்லாம் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போக கூட தோணல.. இங்கேயே அப்படியே போட்டு தள்ளிட்டா என்னன்னு தோணுது.." என்றவன் இடுப்பில் கைகளை குற்றி ஒரு பெருமூச்சு விட்டு "ஆனா நம்ம சட்டத்தை கையில் எடுத்துக்க கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக தான் இவனை எல்லாம் இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்கேன்.. ராஸ்கல்.. பொர்ர்ர்றுக்கி நாயி.." பல்லை கடித்துக் கொண்டு அழுத்தமாய் சிட்டிபாபுவை பார்த்தபடி உறுமி இருந்தான் தமிழ்ச்செல்வன்..
"சரி நான் அப்ப கிளம்புறேன்ணா.. இப்பதான் என் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்ததுன்னு மலரக்கா சொன்னாங்க.. ஹாஸ்பிடல்ல ஒரு எமர்ஜென்சி கேஸ்.. சி செக்சன்.. ரொம்ப க்ரிட்டிகல் டெலிவரி.. நான் உடனே கிளம்பணும்" என்றாள்.
மலர் அந்த காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு கான்ஸ்டபிள்.. அவளிடம் கைபேசியை கொடுத்துவிட்டு தான் நேர்காணல் அறைக்குள்ளேயே சென்றாள் அரசி..
எப்படியும் கைப்பேசியோடு உள்ளே சென்றால் அந்த கைபேசியை அவர்களின் பாதுகாப்பு கருதி தன் இடமிருந்து அந்த கயவன் கைப்பற்றி விடுவான் என்று உணர்ந்து அதை வெளியே அமர்ந்திருந்த மலரிடம் கொடுத்து விட்டு போயிருந்தாள் அரசி.. அவள் எண்ணியது போலவே அவளோடு கடத்தப்பட்டிருந்த மற்ற இரு பெண்களின் கைபேசியும் அந்த கயவர்களால் கைப்பற்றப்பட்டு இருந்தது..
"சீக்கிரம் போடா.. குழந்தை பத்திரம்.. கொஞ்சம் டென்ஷனா இருந்தாலும் ஒரு 10 மினிட்ஸ் அமைதியா இருந்துட்டு அப்புறம் தியேட்டர் போ.. சரியா?" என்று அவன் வாஞ்சையோடு அவள் தலையை வருடி சொல்ல "அண்ணா இதெல்லாம் நீங்க எனக்கு சொல்லணுமா? எனக்கு ஒரு டென்ஷனும் இல்லை.. எனக்கு பாதுகாப்பா என் பக்கத்துல நீங்க இருக்கும் போது என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. சரி நான் கிளம்புறேன்.." என்ற படி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
அதே நேரம் தமிழ்ச்செல்வனின் கைபேசிக்கு சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது..
"சொல்லு.." என்றான்.
"சார் நிலா கண்ணு முழிச்சிட்டா சார்.. ஆனா எழுந்ததிலிருந்து என்னை ஏன் காப்பாத்துனீங்க? நான் செத்துப் போறேன்னு பினாத்திக்கிட்டு இருக்கா சார்.. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. அவளை சமாளிக்கறதே பெரும்பாடா இருக்கு.. மறுபடியும் ஏதாவது பண்ணிக்குவாளோனு பயமா இருக்கு சார்" என்க
"ம்ம்.. நான் உடனே வரேன்.." என்று சொல்லி அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.. அதே மருத்துவமனையில் தான் அரசியும் வேலை செய்து கொண்டிருந்தாள்.. வெளியே வந்தவன் அப்போதுதான் அரசி தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்புவதை பார்த்து
"அரசிமா.. ஒரு நிமிஷம்.. அந்த நிலா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா போல.. மறுபடியும் ஏதாவது பண்ணிக்குவாளோன்னு பயமா இருக்குனு அவ கூட இருந்த பொண்ணு ஃபோன் பண்ணா.. நானும் ஹாஸ்பிடல் வரேன்.." என்று சொல்லிவிட்டு அரசியோடு வண்டியில் ஏறிக்கொண்டான்..
அரசியும் வண்டியை ஓட்டியபடி "பாவம்ணா.. அவங்களோட இந்த வாழ்க்கை ஒரு சாபம் மாதிரி.. தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு மட்டும் கொடுக்கணும்னு நினைக்கிற பொக்கிஷத்தை.. ஒவ்வொரு நாளும் எவனோ ஒருத்தன் அனுபவிக்கிறப்போ அவங்களை உயிரோடு எரிக்கிற மாதிரி இருக்கும்.. இந்தக் கொடுமை யாருக்கு நடந்தாலும் வாழணுங்கற எண்ணமே இல்லாம போயிரும்.. அவங்க உடம்பு மறுத்து போய்டும்ணா.. இதோட நானும் நிறைய பேரை பாத்துட்டேன்.. ஒவ்வொருத்தரும் ஏதோ ரோபோ மாதிரி எந்த ஒரு ஆசையோ பெரிய லட்சியமோ இல்லாம வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க.. என்னதான் நம்ப அவங்களுக்கு ஒரு தொழில் ஏற்படுத்திக் கொடுத்து அவங்களை சுயமா சம்பாதிக்க வச்சு கம்பீரமா நிக்க வச்சாலும் அவங்க நம்பிக்கையையும் வாழணும்கற அவங்க ஆசையையும் சுக்கு நூறா உடைக்கிறதுக்கு இந்த சமூகத்தில பல பேர் இருக்காங்கண்ணா.. எந்த தப்பும் செய்யாம தண்டனை அனுபவிக்கிறவங்க அவங்க.. அவங்க இப்படி ரியாக்ட் பண்றதுல எந்த ஆச்சரியமும் இல்லை.. நிச்சயமா அந்த நிலாக்கு கவுன்சிலிங் தேவை.. நீங்க போய் அவங்க கிட்ட பேசி எப்படியாவது அவங்களை கவுன்சிலிங் ஸெஷன் அட்டென்ட் பண்ண வைங்க.. ஹாஸ்பிடல்ல நம்ம சுனிதா இருக்கா இல்ல.. அவ கிட்ட நான் கவுன்சிலிங் ஸ்லாட் கேட்கிறேன்.. எப்படியாவது ஒரு நாலஞ்சு ஸெஷன் அட்டென்ட் பண்ணாங்கன்னா ஓரளவுக்கு சரியாயிடுவாங்க.."
அண்ணன் தங்கைக்குள் அடிக்கடி நடக்கும் சம்பாஷனைகள் இவை. ஏனென்றால் இப்படி பல பெண்களுக்கு
தன்னுடைய தெய்வானை அறக்கட்டளை மூலம் உதவி கொண்டிருக்கிறாள் அரசி..
நீர் உறையும்..
Last edited by a moderator:
Author: STN - 72
Article Title: 3. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 3. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.