உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 71

Member
Staff member
May 13, 2026
36
74
18
India
அத்தியாயம் - 6

தருணேஷிடம் பேசிய பிறகு, கௌதமின் கவனம் முழுவதுமாக பவித்ராவின் மீதே இருந்தது. "டாக்டர்கிட்ட அவளை ஒருமுறை கூட்டிட்டுப் போய் கன்சல்ட் பண்ணி பார்க்கலாம் மச்சான்," என்று தருணேஷ் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஆனால், கௌதமிற்கு அதில் ஒரு பெரிய தயக்கம் இருந்தது.

எப்படியும் அவளை ஒரு மனநல மருத்துவரிடம் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி அழைத்துச் சென்றால், 'நமக்கு ஏதோ மனநிலை சரியில்லை என்று இவர் நினைக்கிறாரோ?' என பவித்ரா தவறாக எண்ணிவிடக் கூடாதே என்பதுதான் அவனது கவலை. ஏற்கனவே காயப்பட்டிருக்கும் அவளது மனதை, தனது செயல் இன்னும் ரணப்படுத்திவிடுமோ என்று அஞ்சினான்.

பவித்ராவை அவன் கவனித்த வரையிலும், பகல் நேரங்களில் அவள் இயல்பாகவே இருந்தாள். ஜானகியிடமும் சரண்யாவிடமும் அவள் காட்டும் அன்பு உண்மையானது. அதிதியின் மழலையில் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்தப் பெண், ஒரு சாதாரணத் தோற்றத்தையே தருகிறாள். இவனிடம் மட்டும் அவள் காட்டும் அந்த இடைவெளி, இவனது தயக்கத்தால் இருக்கலாம். இவன் அவளிடம் நெருங்காததால் அவளும் ஒதுங்கியே இருக்கிறாள். அது இருவருக்குமே ஒருவிதமான வசதியைத் தந்திருந்தது. ஆனால், அந்த நள்ளிரவு நடுக்கம்... அது மட்டும் தான் அவனை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

ஒரு வாரம் முழுமையாக அவளைக் கவனித்தான். அந்த ஏழு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே அவள் அமைதியாகத் தூங்கினாள். மற்ற ஐந்து நாட்களும் அதே கதறல், அதே நடுக்கம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத கௌதம், தனக்குத் தெரிந்த ஒரு மனநிலை மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து ஆலோசனை கேட்டிட, அவரோ,.. "கௌதம், நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா இது போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் மாதிரி தெரியுது. ஏதோ ஒரு பழைய சம்பவம் அவங்களை ஆழமா பாதிச்சிருக்கு. போன்ல சொல்றதை விட, அவங்களை ஒருமுறை நேர்ல கூட்டிட்டு வாங்க. அப்போதான் அவங்க மனசுல என்ன இருக்குன்னு என்னால சொல்ல முடியும்," என்று அவர் உறுதியாக சொல்லிவிட்டார்.

இந்நிலையில் பவித்ராவின் அம்மா லலிதா, பெரியம்மா கோமதி, சித்தி வனஜா மற்றும் பெரியம்மாவின் மகள் கவிதா என பெண்கள் பட்டாளமே அவளைப் பார்ப்பதற்காக கௌதமின் வீட்டிற்கு வந்திருந்தது.

வாசலில் அவர்களைக் கண்டதுமே பவித்ராவிற்கு பூரிப்பு தாங்கவில்லை. ஓடிச் சென்று தன் தாய் லலிதாவைக் கட்டிக் கொண்டாள். அந்த அணைப்பில் ஒரு மகளின் ஏக்கம் முழுவதுமாகத் தெரிந்தது. லலிதா அவளது உச்சி முகர்ந்து, "எப்படி இருக்க பவிமா? நல்லா இருக்கியா?" என்று வாஞ்சையுடன் வினவிட, "நான் ரொம்ப நல்லா இருக்கேன்மா! நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா, அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க? ஏன் அவங்க ரெண்டு பேரும் வரல?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை முன்வைத்தாள்.

"உன் அப்பா ஒரு வேலை விஷயமா பக்கத்து ஊர் வரைக்கும் போயிருக்காரும்மா. உன் அண்ணனைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே, எப்போதும் வேலையில பிஸியா இருக்கான். அதான் நாங்க மட்டும் வந்தோம்," என்று லலிதா கூற, பெரியம்மா கோமதியும், சித்தி வனஜாவும் அவளை நலம் விசாரிக்க, அவள் தமக்கை கவிதா அவளது கையைப் பிடித்துக் கொண்டு குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தாள்.

வந்தவர்களை ஜானகி முகம் மலர வரவேற்க, சரண்யா உற்சாகமாக உபசரிப்பில் இறங்கிவிட்டாள், வந்தவர்களுக்கோ அத்தை மற்றும் நாத்தனாருடன் இத்தனை அந்நியோன்யமாகப் தங்கள் மகள் பழகுவதைக் கண்டு பெரும் நிம்மதி ஏற்பட்டது, கசப்பான கடந்த காலத்திற்குப் பிறகு, பவித்ரா இப்படி ஒரு அன்பான குடும்பத்தில் இணைந்திருப்பது லலிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீரையும் வரவழைத்தது.

அந்த கணம் தான் மாடியிலிருந்து இறங்கி வந்தான் கௌதம். மாமியார் வீட்டினரைக் கண்டதும் உபசரிப்பாக, "வணக்கம்... வாங்க" என்று அழைத்தவனுக்கு, அதற்கு மேல் அந்தப் பெண்மணிகளுடன் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அந்த சூழலே அவனுக்குச் சற்று அந்நியமாகத் தோன்றியிருக்கலாம். அதனால், "அக்கா... ஒரு டீ" என்று சரண்யாவிடம் கூறிவிட்டு, தனது மடிக்கணினியுடன் சற்றுத் தள்ளி இருந்த லானில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

வந்திருந்த பெண்களின் பேச்சு ஜானகியிடம் இருந்தாலும், அவர்களின் கவனம் முழுவதும் பின்னால் நடப்பதையே கவனித்துக் கொண்டிருந்தது. அனைவருக்கும் பவித்ரா தான் டீ போட்டு எடுத்து வந்தாள். அனைவருக்கும் கொடுத்து முடித்தவளிடம், "பவித்ரா... கௌதம் டீ கேட்டான்மா, அவனுக்கும் கொடுத்துடுறியா?" என்று சரண்யா கூற, அவளும் மெல்ல தலையசைப்புடன் அவனுக்கும் டீ எடுத்துக்கொண்டு சென்றாள்.

ஹாலில் இருந்து பார்த்தாலே லானில் இருப்பவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பதால், வந்திருந்த பெண்களின் பார்வை கௌதமிற்கு டீ கொண்டு சென்ற பவித்ராவின் மீதே நிலைத்திருந்தது. இருவருக்கும் இடையே ஏதேனும் சிறு உரையாடல் நிகழுமா? இருவரும் வாழ ஆரம்பித்து விட்டார்களா? அந்நியோன்யமாக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசையும் ஆர்வமும் தான் அவர்களுக்குள் மேலோங்கியிருந்தது.

லானுக்குச் சென்ற பவித்ரா, அங்கே மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த கௌதமிடம், "டீ..." என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு, அங்கிருந்த டீபாயில் டீயை வைத்துவிட்டுத் திரும்பிவிட்டாள். ஒரு நிமிடம் கூட அங்கே அவள் நிற்கவில்லை, அவனும் நிமிர்ந்து அவளைப் பார்க்கவில்லை.

இதனை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தம்பதிகளுக்கு இடையே இருக்க வேண்டிய அந்த ஒரு சிறு கண்பார்வை கூட அங்கே பரிமாறிக் கொள்ளப்படாமல் போகவும்... 'என்ன இது, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க?' என்று அவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். லலிதாவின் முகத்திலோ ஒரு மெல்லிய கவலை வந்து அமர்ந்தது.

திருமணமான புதுமணத் தம்பதிகளிடம் இருக்க வேண்டிய அந்த நெருக்கமும் வெட்கமும் இருவரிடமும் இல்லை என்றாலும், ஒரு சிறு பார்வை பரிமாறுதல் கூடவா இருக்க கூடாது? ஒன்றிரண்டு வார்த்தைகள் கூடவா பேசிக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர்களுக்கு ஆதங்கமாக இருந்தது.

பவித்ராவின் அறையில் தான் அவளோடு கூடி இருந்தனர் அவளது தாயும் மற்ற பெண்மணிகளும். அவர்கள் தனிமையில் பெண்ணிடம் ஏதாவது பேசுவார்கள், அவளும் மனம் விட்டுப் பேசுவாள் என்ற எண்ணத்தில் தான் ஜானகி, "கொஞ்ச நேரம் ரூம்க்கு கூப்பிட்டு போமா, அவங்களும் வீட்டை பார்த்த மாதிரி இருக்கும்" என்று கூறி அனுப்பி வைக்க, அவளும் அவர்களைத் தனது அறைக்கு அழைத்து வந்தாள்.

ஆனால் தனியாக மாட்டிக் கொண்ட பவித்ராவிடம் கேள்வி கேட்டே சாகடித்து விட்டனர் அந்தப் பெண்மணிகள்.

"பவித்ரா.. என்னடி நாங்களும் பார்த்துட்டு தான் இருக்கோம். மாப்பிள்ளை கிட்ட நீ இயல்பா ஒரு வார்த்தை கூட பேசுன மாதிரி தெரியல. என்ன தான் நடக்குது உங்களுக்குள்ள?" என்று ஆர்வமும் அதட்டலுமாக ஆரம்பித்தாள் கவிதா.

"ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு உங்க கல்யாணம் முடிஞ்சி, ரெண்டாவது கல்யாணமா இருந்தாலும் கொஞ்சமாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வச்சு இருக்கணும்ல? ஆனா உங்களைப் பார்த்தா அப்படி எதுவும் தெரியலையே. நீங்க ரெண்டு பேரும் தள்ளி தள்ளி நிக்கிறது தான் எங்களுக்குத் தெரியுது" என்றார் வனஜா கவலையுடன்.

"நீ சொல்லு பவி.. மாப்பிள்ளை கிட்ட நல்லா பேசுறியா இல்லையா நீ? இல்ல இன்னும் அவரை பார்த்துப் பயந்து விலகி தான் இருக்கியா?" என்று கோமதி அவளது கையைப் பிடித்துக் கொண்டு அதட்டலாகக் கேட்டிட,
அவள் தாய் லலிதா வாயைத் திறந்து எதுவும் கேட்கவில்லை என்றாலும், அவரது தவிப்பான மனதிலும் இதே கேள்விகள் தான் தொக்கி நின்றன. தன் மகள் மீண்டும் ஒருமுறை வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாது என்ற பயம் அந்தத் தாயின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்து நின்ற பவித்ராவோ... "அப்படி எல்லாம் இல்லை பெரியம்மா.. அவர் வேலை விஷயமா பிஸியா இருக்கார், அதான்.." என்று மழுப்பலாகச் சொல்ல,.. "பிஸியா இருந்தா ஒரு டீ கொடுக்கும்போது கூடவா நிமிர்ந்து பார்க்க மாட்டாங்க? பவி.. உண்மையைச் சொல்லு. உனக்கு அவர் மேல ஏதாவது வருத்தமா? என்று கோமதி வினவ, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை பெரிம்மா" என்று மெல்லிய குரலில் மறுத்தாள் பவித்ரா.

அவளது மழுப்பலான பதில் கோமதிக்குத் திருப்தி அளிக்கவில்லை. "இங்கே பாரும்மா, எனக்கு உன்னோட நிலைமை புரியுது. ஆனா எத்தனை நாட்களுக்குத்தான் நடந்ததையே நினைச்சுட்டு இருப்ப சொல்லு?" என்று வாஞ்சையுடன் அவளது தோளைத் தொட்டவர், மேலும்..
"நீ விலகி விலகிப் போறதுனால தான் மாப்பிள்ளையும் உன் பக்கத்துல வர மாட்டேங்கிறாரு. பாவம், அவருக்கும் பல கஷ்டங்கள் நடந்திருக்கு. அதையெல்லாம் நீ தான் உன் அன்பால மறக்கடிக்கணும். அவர் ஆம்பளப் பையனா இருந்தாலும் உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி நிற்கிறாரு போல. நீதானேம்மா அவர்கிட்ட பேசி ஒன்னா வாழ ஆரம்பிக்கணும்? அவருக்கும் ஆசை பாஷையெல்லாம் இருக்காதா?" என்று யதார்த்தத்தை அவளுக்குப் புரிய வைக்கும் விதமாகப் பல அறிவுரைகளைக் கூறியவர்..
"நான் சொல்றதை மனசுல வச்சுக்கிட்டு இனி நடந்துக்கோமா. நல்ல குடும்பம் உனக்கு அமைஞ்சிருக்கு. உன் வாழ்க்கையை நீதான் பார்த்துக்கணும்" என்றவர் அடுத்த கொஞ்ச நேரத்தில் கிளம்பியும் விட்டனர்,..

பெரியவர்கள் விடைபெற்றுச் சென்றாலும், பவித்ராவின் மனதிற்குள் கோமதி சொன்ன வார்த்தைகள் தான் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தில் அவளது எண்ணங்கள் அலைபாய்ந்தன.

'பெரியம்மா சொன்னது உண்மையா இருக்குமோ? நான் ஒதுங்கி இருக்கிறதுனால தான் அவரும் தள்ளி நிக்கிறாரோ?' இந்த கோணத்தில் அவள் இதுவரை யோசித்ததே இல்லை. தனக்கு இருக்கும் பயத்தைப் போலவே, அவனுக்கும் ஒரு காயம் இருக்கும் அதனால் தான் தள்ளி நிற்கிறார் என்று எண்ணினாள், அவர்கள் கூறிய பின்னர் தான் தன் மௌனத்தினால் அவனது மனதை தான் காயப்படுத்துகிறோமோ என்ற குற்ற உணர்வு மெல்ல துளைக்க ஆரம்பித்தது.

'அவங்க சொன்ன மாதிரி அவருக்கும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும்? நான் தான் விலகி நின்னு அவரை கஷ்டப்படுத்துறேனா?' என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தவளுக்கு, கௌதமின் மௌனம் கோபமா அல்லது அவளது பயத்திற்காக அவன் கொடுக்கும் இடைவெளியா என்ற குழப்பம் விஸ்வரூபம் எடுத்தது.

மௌனமாக வெகுநேரம் யோசித்தவளுக்கு இனி தான் தான் இந்தத் தடையை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிய, இன்றே இதைப் பற்றி அவரிடம் பேசிவிட வேண்டும் என்ற திடமான முடிவையும் எடுத்தாள்.

 

Author: STN - 71
Article Title: உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
பரவலா அவளை நிர்பந்திக்காம யதார்த்தத்தை சொல்லிட்டு போய் இருக்காங்க.....நல்லது.....
இப்ப பவி என்ன பண்ண காத்திருக்காலோ