பாவை 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
141
33
chennai
என்னவோ பெரிதாக நடந்திருக்கிறது என்று உணர்ந்தவள் மைதிலியின் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாய் தோள்களை பற்ற, மகளின் மடியில் தலைசாய்த்து குலுங்கி அழுதார். அவளின் தந்தை இறந்த அன்றும் மைதிலி இப்படி தான் மகளின் மடியில் முகம் வைத்து அழுததை நினைவு கூர்ந்தவளுக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

கொஞ்ச நேரம் அழுது கரைந்தவர் பின் மகளும் அழுவதை உணர்ந்து எழுந்து அவளை தன் நெஞ்சோடு சேர்த்து கொண்டார். “என்னோட அனுபவத்துல சொல்றேன், ஒரு பொண்ணு தனியா மட்டும் இருக்க கூடாது நிரு. அப்பாவோ, அண்ணன் தம்பியோ, கணவனோ இல்ல மகனோ கூட இருக்கணும். இல்லனா தன்னம்பிக்கையும் மனோதைரியமும் இருக்கணும். இது எதுவுமே கூட இல்லனா கண்ட சொறிநாய்ங்க கிட்ட விஷக்கடி வாங்க வேண்டியிருக்கும். அப்படி என்னை சுத்தி நிறைய நாய்ங்க இருந்துச்சு. இப்போ இருக்கற மனோ தைரியம் அப்போ எனக்கில்லாததும் ஒரு காரணம்.

உன்னை ஹாஸ்ட்ல்ல சேர்த்த பின்னாடி தனியா இருக்கற என்கிட்ட வீட்டு ஓனர் ரொம்பவே வம்பு பண்ண ஆரம்பிச்சாரு. அந்த சமயத்துல உன் பெரியப்பா பொண்ணுக்கு கல்யாணம்னு வந்து கூப்பிட்டாங்க. தனியா இருந்தா தான் பிரச்சனைனு அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கலாம்னு போனேன்.

கல்யாணத்துக்கு முதல் நாள் மண்டபத்துல ஸ்டோர் ரூமை பாத்துக்க சொல்லி சொன்னாங்க, குடிக்க ஜூஸ் கொடுத்தாங்க. என்ன கலந்திருந்துச்சோ தெரியல, நான் உடனே தூங்கிட்டேன். சொந்தக்கார நாய்ங்க யாரோ ஸ்டோர் ரூமுக்கு வந்து குடிச்சுட்டு தூங்கிட்டு இருந்த என்னை நாசம் பண்ணிட்டாங்க. யார் என்னைய நாசம் பண்றாங்கனு தெரியாம கத்துனேன். நான் கத்தறது யாருக்கும் கேட்டுச்சானும் தெரியல. காலியா இருந்த மண்டபத்துல நான் கத்தறத கேக்க யாரும் இல்ல. என்னை மூட்டைங்களுக்கு நடுவுல போட்டு வச்சிருந்தாங்க. யாரும் என்னை தேடியும் வரல. அன்னைக்கு ராத்திரி முழுசும் என்னால எந்திரிக்க முடியல. மறுநாள் காலைல கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் கிளம்பின பிறகு சமாளிச்சு எழுந்து துணிய மாத்திக்கிட்டு வீட்டு பொம்பளைங்க கிட்ட நடந்தத சொன்னேன்.

ஆம்பளைங்க யாருமே ஸ்டோர் ரூம் பக்கம் வரலனு அடிச்சு சொன்னாங்க, அவங்க பொண்டாட்டிங்களும் அதை தான் நம்பினாங்க. நான் போலீஸ்ல கம்ளெய்ன்ட் கொடுக்க போறேன், மெடிக்கல் டெஸ்ட் எடுத்தா யார்னு தெரிஞ்சிட போவுது, யாரையும் சும்மா விட மாட்டேன்னு சொன்னேன்.

உனக்கென்ன நீ பேரழகியா இருக்கறதா நினைப்பா? எப்போ பாத்தாலும் இவன் என்னை பாத்தான், அவன் என்னை தொட்டான்னு சொல்லிட்டு இருக்கே. அசிங்கமா இல்ல? சொந்த வீட்டு ஆம்பளைங்க மேல பழி போடறீயே வெளியே யாராச்சும் கேட்டா என்னை நினைப்பாங்க? ஏதோ ஒத்தையா இருக்கியே, நல்லது கெட்டதுக்காச்சும் வந்து போகட்டும்னு பாத்தா எங்க குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பாக்கறீயேனு ஆளாளுக்கு அசிங்கமா பேசினாங்க. வேலை செய்யற இடத்துல கூட யார் கூடவோ சுத்தறேனு கேள்வி பட்டோம். இங்கே இருந்தா உன் இஷ்டத்துக்கு ஆட முடியாதுனு தானே தனியா போயிட்டே. பொண்ணையும் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டு கூத்தடிக்கறனு கேள்விபட்டோம். இப்போ குடும்பத்துக்குள்ளவே ஆள பிடிச்சுக்க இது மாதிரி பொய் சொல்லிட்டு உத்தமி வேசம் போடறீயானு அசிங்கமா பேசினாங்க

அங்கேயிருக்கற யார்கிட்டயும் எனக்கு நியாயம் கிடைக்காதுனு தெரிஞ்சு போச்சு, இனி அவங்ககிட்ட பேசி பயனில்லனு நான் கிளம்பி வந்துட்டேன். போலீஸ்க்கு போய் எனக்கு ஏற்பட்ட அநியாயத்துக்கு நீதி வாங்கறதா இல்ல சாகறதானு குழப்பத்தோட தெருவுல நடந்தப்போ ராஜ்கிட்ட இருந்து போன் வந்துச்சு.

“மைதிலி ரெண்டு நாளா வேலைக்கு வரலயாமே எதாச்சும் உடம்பு சரியில்லையானு” அக்கறையா விசாரிச்சவர்கிட்ட பதில் பேசமுடியாம அழுதேன். உடனே எங்கே இருக்கறேனு கேட்டு நான் இருக்கற இடத்துக்கு காரை எடுத்துட்டு ஒரு மணி நேரத்துல வந்தாரு. அவர் வர வரைக்கும் நான் அப்படியே ரோட்ல நின்னுட்டு இருந்தேன். என்னை கார்ல ஏத்திக்கிட்டு தன் வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அப்போ தான் உன்னோட ஸ்கூல்ல இருந்து உனக்கு ப்ளஸ் டூ குவார்ட்டர்லி டேர்ம் பீஸ் கட்டணும்னு மெசெஜ் வந்துச்சு, உன் நினைப்பு வந்ததும் என் மனசு வேற மாதிரி யோசிக்க தொடங்கிடுச்சு.

‘நீ கவலைபடாத மைதிலி. எல்லார் மேலயும் கம்ளெய்ண்ட் கொடுக்கலாம். மெடிக்கல் டெஸ்ட் எடுத்தா யார்னு தெரிஞ்சிட போவுது. யாரையும் சும்மா விடக்கூடாது. உன்கூட நான் இருப்பேன், நீ தைரியமா இருனு’ ராஜ் சொன்னாரு

“கம்ளெய்ண்ட் கொடுத்தாலும் போலீஸ்காரங்களும் வக்கீல்களும் உனக்கு தெரியாம எப்படி நடந்துச்சுனு விசாரிப்பாங்க. என் புருஷன் இருக்கறவரைக்கும் கெளரவமா இருந்த குடும்பத்தோட மானம் போகும். அதுமட்டுமில்ல இத்தனை வயசுக்கு பின்னாடி இந்த மாதிரி எனக்கு நடந்துச்சுனு தெரிஞ்சா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? சொந்தகாரங்களே என்னை புரிஞ்சுக்காம பேசினாங்க, மத்தவங்க நான் தான் அவங்க கைய புடிச்சு இழுத்ததா பேசுவாங்க. வேணாம் ராஜ் இந்த விஷயம் வெளிய தெரிய வேணாம். பொண்ணுங்களுக்கு மட்டும் விதவை, மலடி, வாழாவெட்டி, வப்பாட்டினு நிறைய பேரு வச்சிருக்கற சமூகம் என்னை இத விட கேவலமா பேசுவாங்க”

“மானம் கெளரவம்னு பார்த்தா தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை வேணாமா? அவங்க மேல போலீஸ்க்கு கம்ளெய்ன்ட் கொடுக்கறது தான் சரி. நீ எதுக்கும் பயப்படாதே, என்ன நடந்தாலும் நான் உனக்கு துணையா இருப்பேன்”

“போலீஸ்க்கு சொன்னா மட்டும் அவங்களுக்கு மரண தண்டனையா கொடுக்க போறாங்க? கொஞ்ச நாள்ல வெளிய வந்துடுவாங்க. தினம் எத்தனையோ பொண்ணுங்களுக்கு எதாவது ஒரு இடத்துல கொடுமை நடந்துட்டு தான் இருக்கு. அந்த கொடுமைய வெளி சொல்றதால அந்த பொண்ணுக்கு தான் மனஉளைச்சல் கிடைக்குதே தவிர, தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை எங்கே கிடைக்குது ராஜ்? என் சொந்தகாரங்க பேசின மாதிரி தான் இந்த சமூகமும் பேசும். இவ கூப்படாமலா அவங்க போயிருப்பாங்க? இவ ஏன் ஸ்டோர் ரூம்ல இருந்தா? இப்படி வாய்க்கு வந்தத பேசப் போறாங்க. நான் அவங்க வாய்க்கு அவலா இருக்க விரும்பல. எத்தனையோ கடந்து வந்துட்டேன். இதையும் கடந்துடறேன்”

“ஏன் மைதிலி வெறுத்து போய் பேசறே?”

“எனக்கு நியாயம் கிடைக்கறதுக்காக நான் அலைஞ்சுட்டு இருந்தா, வயசுக்கு வந்துட்ட என் பொண்ணோட எதிர்காலம் என்னாகும் ராஜ்? அவ இப்போ ப்ளஸ்டூ படிக்கறா. இந்த விஷயத்தால அவ மனசு பாதிக்கும், படிப்புல கவனம் சிதறும். சமுதாயத்து மேல அவளுக்கு பயம் வந்துடும், நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன். இந்த விஷயத்தை இப்படியே விட்டுடலாம். கடவுள் இருக்கறது உண்மையா இருந்தா அவங்களுக்கு தண்டனை கிடைக்கட்டும்” என்றார் மைதிலி தீர்மானத்துடன்

அதற்கு மேல் ராஜ் மைதிலியை வற்புறுத்தவில்லை. ஆனால் கடவுள் கொடுக்க போகும் தண்டனைக்காக காத்திருக்காமல், தன் செல்வாக்கினை பயன்படுத்தி திருமணத்திற்கு முதல்நாள் மண்டபத்தில் யார் யார் எல்லாம் உள்ளே சென்றார்களோ, அவர்களின் மீது பொய்வழக்கை போட்டு போலீசை வைத்து அவர்களை அடித்து தனிப்பட்ட முறையில் விசாரிக்க செய்தார். உண்மையை ஒப்பு கொண்ட மைதிலியின் உறவுக்கார ஆண்கள் இருவர் மீது குற்றவாளி கிடைக்காத நிலுவையில் இருந்த கொலை வழக்கை போட்டு வாழ்நாள் கைதியாக்கிவிட்டே மைதிலிக்கு விவரத்தை கூறினார்.

மைதிலிக்கு ராஜ் கடவுளாக தெரிந்தார், ஆனால் அவர் நம்பிய கடவுளோ தண்டனையை அயோக்கியர்களுக்கு கொடுக்காமல் அதையும் மைதிலிக்கே கொடுத்திருந்தார். நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் வேலை நிமித்தமாக ராஜ்ஜின் அறையில் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருந்த வேளையில் மைதிலி மயங்கி விழ, அவர் அவளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த அலுவலக நபர்கள் அதை பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

மைதிலி கயவர்களின் கொடுமையால் கருவுற்றிருந்தாள். மருத்துவர்கள் சொன்ன போது அவள் நம்ப வில்லை, “டாக்டர் நல்லா செக் பண்ணுங்க. இந்த வயசுல எனக்கு எப்படி கரு உண்டாகும்? ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருமுறை தான் எனக்கு பிரீயட்ஸ் வரும்” என்று அவள் சொல்ல,

“மிஸஸ் மைதிலி, உங்க வயித்துல ஒன்னு இல்ல ரெண்டு கரு இருக்கு, அதுவும் நாலு மாசம் முடிஞ்சு போய் இருக்கு. கருவை கலைக்க முடியாது, ஏன்னா உங்க உடம்பு பலவீனமா இருக்கு. அதே சமயம் ரெண்டு குழந்தைங்கள தாங்கற அளவுக்கும் உங்க கர்ப்பப்பை ஆரோக்கியமா இல்ல. நீங்க உங்க உடம்ப கவனமா பாத்துக்கிட்டா, டெலிவரி டைம் நெருங்கறப்போ ஆப்ரேஷன் பண்ணி குழந்தைங்கள வெளியே எடுத்துடலாம். பை த வே உங்க குழந்தைங்களுக்கு அப்பா, ஐமீன் உங்க கணவர் யார்னு சொல்லுங்க, நாங்க மத்த விஷயங்கள விவரமா அவர்கிட்ட பேசிக்கறோம்”

“நான் தேவ்ராஜ் மைதிலியோட ஹஸ்பெண்ட் அன்ட் குழந்தைங்களோட அப்பா” என்று ராஜ் சற்றும் யோசிக்காமல் சொல்ல மைதிலி அதிர்ச்சியுடன் அவரையே பார்த்திருந்தார்.

மருத்துவர் சொன்ன குறிப்புகளை கவனமாக கேட்டுக் கொண்டு ராஜ் மைதிலியை காருக்கு அழைத்து சென்றார்.

“ராஜ் யாருடைய கருனு தெரியாம நீங்க ஏன் இந்த அசிங்கத்த ஏத்துக்கணும்?”

“யாருடையதா இருந்தாலும் அதுங்க உன்னோட ரத்தத்துல உருவானது. உயிர கொல்ற பாவம் உனக்கு வேணாம் மைதிலி. அது உன்னோட குழந்தைங்க, இனி நம்மோட குழந்தைங்க”

“ராஜ் நீங்க எதுக்காக இதெல்லாம் பண்றீங்க? இப்படி பண்றதால தியாகினு பட்டம் கிடைக்க போகுதா? கிடையாது. வயசுக்கு வந்த பொண்ண வச்சிட்டு இருக்கற என்னை நீங்க வச்சிட்டு இருந்ததா பேசுவாங்க. நம்ம ரெண்டு பேரையும் அசிங்கப்படுத்துவாங்க”

“அதப்பத்தி எனக்கு கவலையில்ல மைதிலி. நீ வேலைக்கு சேர்ந்ததுல இருந்து என்னென்ன கஷ்டத்த அனுபவிச்சுட்டு வர்றேனு நானும் பார்த்துட்டு தான் இருந்தேன். நான் தியாகியில்ல, இதுல எனக்கு சுயநலமும் இருக்கு. உன் இடத்துல வேற பொண்ணை நான் கூட்டிட்டு வந்தாலும் அவ என்னோட பணத்துக்காக தான் வருவாளே தவிர, உண்மையா பாசத்துக்காக வரமாட்டா. எனக்கு ஒரு பொண்ணோட காமம் இல்லாத உண்மையான காதல் தேவை, உனக்கு பாதுகாப்பு தேவை. அதுமட்டுமில்ல என் கடைசி காலத்துல என் தலைமாட்டுல என் மனைவியும் மூணு குழந்தைங்களும் எனக்காக அழுவாங்க. என்னை அப்பானு கூப்பிடுவாங்க, எனக்குனு ஒரு குடும்பம் கிடைக்க போகுது”

“அதுக்காக இன்னொருத்தன் குழந்தைய உங்க குழந்தைனு சொல்லுவீங்களா?”

“இன்னொருமுறை இந்த வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது. இந்த விஷயத்தை பத்தி நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நாம கல்யாணம் பண்ணிக்குவோம் மைதிலி. பொறக்க போற குழந்தைங்க கெளரவமா நம்ம குழந்தைங்களா பொறக்கட்டுமே”

“நிருஷி?”

“அவகிட்ட இதப்பத்தி பேசி முடிவெடுக்கற வயசு அவளுக்கில்ல. அதுக்கான நேரமும் நம்மகிட்ட இல்ல. அத்தோட அவ இப்போ ப்ளஸ்டூ படிக்கறா. நாம ரெஜிஸ்டர் மேரஜ் பண்ணிக்குவோம். அவளோ எக்ஸாம் முடிஞ்ச பிறகு நமக்கு கல்யாணம் ஆனத சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம்”

மைதிலி தீவிரமாக யோசித்தார். அவர் இருக்கும் நிலையில் இந்த திருமணம் மிகவும் அவசியம். கணவனை இழந்தவள் கர்ப்பம் என்றால் இந்த ஊர்உலகம் எப்படியெல்லாம் பேசும்? நிருஷியை வளர்க்கவே கஷ்டப்பட்ட தன்னால் இன்னும் இரு ஜீவன்களை வளர்க்க முடியுமா? அத்தோடு தனக்கும் தன் மகளுக்கும் ராஜ் மட்டுமே எதிர்பார்ப்பில்லாத அன்பையும் பாதுகாப்பையும் வழங்க கூடியவர் என்று யோசித்தவருக்கு ராஜ் முடிவு சரியென்று தோன்ற தன் சம்மதத்தை தெரிவித்தார்.

இருவரும் காலம் தாழ்த்தாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ராஜ்ஜின் பெரியப்பா மகள் மாலினியும் அவரின் கணவரும் தான் சாட்சி கையெழுத்து போட வந்திருந்தனர். தனியாக தம்பியை அழைத்து மாலினி விசாரித்தபோது, இப்போது உடல்நிலை சரியாகிவிட்டது என்று பதில் சொல்லி அவர்களின் வாயையும் அடைத்துவிட்டார்.

“கல்யாணத்துக்கு பிறகு நடந்தது எல்லாம் உனக்கே தெரியும் நிருஷி. உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் நானும் ராஜ்ஜும் உன்னை கூட்டிட்டு போக வந்தப்போ உன் முகத்துல வெறுப்பை பார்த்து எனக்கும் அசிங்கமா இருந்துச்சு. அந்த நேரத்துல நான் உண்மைய சொன்னா ராஜ்ஜோட நிலைமையையும் சேர்த்து சொல்ல வேண்டியதா இருக்கும். எனக்கு வாழ்க்கை கொடுத்தவரோட அந்தரங்கத்த என் மகளா இருந்தாலும் உனக்கு சொல்ல மனசு வரல. யார்கிட்டயோ நாசமாகி குழந்தை வாங்கிக்கிட்டேன்னு சொல்லவும் அசிங்கமா இருந்துச்சு. உண்மைய சொல்லணும்னா உன்னை சந்திக்கவே கூச்சப்பட்டேன்.

அன்னை பட்ட அவலங்களை கேட்டதும் “நீ இவ்வளவு கொடுமையை அனுபவிச்சது தெரியாம, நானும் என்பங்குக்கு உன்னை குத்தி கிழிச்சிருக்கேனே, என்னை மன்னிச்சிடும்மா” என்று நிருஷி தாயின் காலை கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.

“அழாதே நிருஷி, உன்னோட ரெண்டுகட்டான் வயசுல அம்மாவுக்கு கல்யாணம் ரெண்டு குழந்தைங்கனு இருந்தா, உன்னையும் இந்த சமூகம் கேலியா பேசியிருக்கும், அதனோட வெளிப்பாடு தான் உன் பிடிவாதமும் கோபமும். அது எங்களுக்கு நல்லாவே புரிஞ்சது, உன்கிட்ட விளக்கமா சொல்லி புரிய வைக்கறதுக்கான காலம் வரட்டும்னு நாங்களும் காத்திட்டு இருந்தோம்.

ப்ளஸ்டூ முடிஞ்சதும் உடனே காலேஜ்க்கும் ஹாஸ்டல் போறேனு போயிட்டே. உன்னை எங்களால நெருங்கவே முடியல. ஆரம்பத்துல குழந்தைங்க மேல வெறுப்பா இருந்ததால, நான் சரியா மருந்துங்கள சாப்பிடாம இருந்தேன். அதுங்க பொறக்கும் போது ரொம்ப சின்னதா இருந்துச்சுங்க, ஐசியுல ஒரு மாசம் வச்சிருந்தாங்க. இந்த வயசுல ஆப்ரேஷன், ஆரோக்கியமில்லாத ரெண்டு குழந்தைங்க, இதுல நீ வேற என்னை விட்டு ரொம்பவே விலகி போக ஆரம்பிச்சே. இதையெல்லாம் நான் கடந்து வர்றதுக்கு ராஜ்ங்கிற ஒத்த மனுஷன் தான் காரணமா இருந்தாரு.

தாலிகட்டின புருஷனா எனக்கும் குழந்தைங்களுக்கும் பணிவிடை செஞ்சாரு, உனக்கு என்ன தேவைனு எனக்கும் முன்னாடி தெரிஞ்சுக்கிட்டு நீ கேக்காமலே உனக்கு எல்லாத்தையும் செஞ்சாரு. ஆனா அதையெல்லாம் நீ ஒருமுறை கூட யோசிச்சு பார்த்ததில்ல. வார்த்தைங்கள நெருப்பா அள்ளி வீசிடுவேனு உன்கிட்ட வந்து பேசறதுக்கே எங்களுக்கு பயம். நீயா புரிஞ்சுப்பேனு நாங்களும் காத்திருந்தோம், நீ படிச்சு முடிச்சதும் உன்னை ராஜ் தன்னோட சொந்த கம்பெனிக்கு எம்டி ஆக்கணும் நினைச்சாரு. ஆனா நீ வேற இடத்துக்கு வேலைக்கு போயிட்டே.

கடைசிவரைக்கும் நீ அவரை புரிஞ்சுக்கிட்டு அப்பானு கூப்பிட மாட்டியானு அவர் ஏங்காத நாளில்ல. குழந்தை பெத்துக்க முடியாத ஒரு பொண்ணு தன்னை அம்மானு அழைக்க குழந்தையில்லயேனு ஏங்கறது போல தான் அவரோட ஏக்கம் இருக்கும். இப்போ சொல்லு நிருஷி, அவரை தவிர அப்பானு நீ கூப்பிடறதுக்கு தகுதியான ஆள் இந்த உலகத்துல யாராச்சும் இருக்காங்களா?”

இல்லை என்று பலமாக தலையசைத்தாள் நிருஷிகா.

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
Hmm ராஜ் நல்லவர் தான்.....பாவம் பா மைதிலியும்.....
அடியே அவசர குடுக்கை.....இப்ப புரியுதா உண்மை என்னனு
 
  • Love
Reactions: STN - 94

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
457
63
Pondicherry
கதையின் ஆரம்பத்தில் ராஜ் மீது நம்பிக்கை வரவில்லை.. இப்ப புரியுது..
 
  • Love
Reactions: STN - 94

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.