• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 33

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 33

இருளும் அது விலகி
புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே
இதயம் அது துடிப்பதற்கு
அர்த்தம் கொஞ்சம் கூடுதே

என்னை விட ஒரு பொருத்தமான அம்மாவை நீங்க அவளுக்கு தர முடியாது, வசீ என்று கூறி கலங்கிய விழிகளுடன் பார்த்தவளை, என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்த்தான் அவன்.
அவனின் பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திருப்பியவள் மெதுவாக தொடங்கினாள்,

உங்ககிட்ட இதை சொல்லணும்னு தான் இருந்தேன். என்னை திருமணம் செய்யப் போறவருக்கு என்னைப் பற்றிய உண்மை தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன் என்றாள்.

அவன் அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஒரு யூகமிருந்தது. அது அவளுக்கு எப்படி தெரியும், எப்பொழுது தெரியும் — அது மட்டுமே அவனுக்குத் தெரிய வேண்டியிருந்தது.

நான்... நான்... என்றவளின் குரலில் ஒரு வித தடுமாற்றம். அவன் இதை எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற பயம் இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை; அவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நான்... என்னை வளர்த்தவர்கள் தான் பரிமளா அம்மாவும் அப்பாவும். என்னைப் பெற்றவர்கள் என்னோட பெரியம்மா மரகதா அம்மா. அப்பா யாருன்னு தெரியாது என்று குரல் உடைந்து சொன்னவளின் கண்களில் தண்ணீர் ஒரு கணமும் நிற்கவில்லை.அப்பா பெயர் தெரியாதவள் என்று யாரேனும் சொல்லி விடுவார்களோ என்று உள்ளுக்குள் குறுகினாள்.

அவன் அதிரவில்லை. மாறாக அவளது முகத்தைத் தன் இரு கரங்களால் தாங்கி, அவளது கண்ணீரை தன் பெருவிரலால் துடைத்தவன், இங்க வா... இங்க உட்காரு என்றான். அவளை தன் அருகில் அமர வைத்தான். அவன் அவளது கைகளை ஆறுதலாய் பிடித்துக்கொண்டு வருடி விட்டபடி , உனக்கு இது எப்போ தெரியும் என்றான்.

ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்னாடி, அம்மா, அப்பா, பெரியம்மா பேசிட்டு இருந்தாங்க. நான் வந்தது அவங்களுக்கு தெரியலை.

அப்பாவுக்கு எனக்கு இந்த உண்மை தெரியறதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. ஆனா அம்மா தான் பெரியம்மா கிட்ட எனக்கு சொல்ல சொல்லி கேட்டிட்டு இருந்தாங்க.

அவர்கள் பேசியதை கண்கள் கலங்க அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் —

அன்று...

அக்கா, மதுகிட்ட சொல்லிடலாம். அவளுக்கு இதைப் பற்றித் தெரிஞ்சுக்குற உரிமை இருக்கு தானே.

வேண்டாம் பரி, அவளுக்கு இது எப்பவும் தெரிய வேண்டாம்.

அக்கா...

இப்ப அவகிட்ட அவ அம்மா யாருன்னு மட்டும் சொல்ல முடியாது; அவ அப்பா யாருன்னும் சொல்லணும், பரி. அது என்னால எப்பவும் முடியாது.

தன் அப்பா யாருன்னு தெரியாம என் மகளா இருக்கிறத விட, அவளுக்கு இவ்வளவு காலமும் நல்ல அப்பாவாக, அம்மாவாக நீங்க ரெண்டு பேரும் இருந்திருக்கீங்க. இத விட என் மகளுக்கு என்ன வேணும், பரி என்றார்.

அக்கா... அப்ப உனக்கு... என்று கண்ணீருடன் பார்த்த தங்கையை அணைத்துக்கொண்டார் மரகதம்.

இதுதான் வள்ளி, நானும் இவ கிட்ட சொல்லறேன் — கேக்க மாட்டேன்குறா என்றார் ஆதங்கமாக.

என் பொண்ணு எதற்கும் கலங்கி நிக்கிறத பார்க்கிற சக்தி எனக்கில்லை என்றார் மூர்த்தி.

அதுகில்லைங்க என்ற பரிமளாவை, பரி இந்த பேச்சை நீ இதோட விடணும் என்று இருவரும் சமாதானப்படுத்தினர்.

இத்தனையும் கேட்டு கொண்டிருந்த மதுமதிக்கு உள்ளம் ஒரு நிலையில் இல்லை. ஆனால் சுதாரித்தவள், அவர்கள் பார்க்கும் முன்பாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

வெளியே வந்தவளுக்கு “அம்மா” என்று அவளது பெற்ற அன்னைக்காக மனம் துடித்தது. அவர்கள் என்னைப் பெற்றவர்கள் இல்லையா? அவளால் நம்பவே முடியவில்லை. கனவிலும் கூட அவளால் நினைக்க முடியாத ஒன்று அது.

அவர்களது செல்லப் பெண் அவள். முகிலனை விட அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம். ஒருவேளை அவள் அப்படி நினைக்கக் கூடாது என்பதற்காகத்தானோ அவர்கள் அவள் மீது அவ்வளவு அன்பு வைத்தார்கள்.

அம்மா... அப்பா... என்று உள்ளம் தரையில் விழுந்து துடித்தது. பெரியம்மாதான் அவளது அன்னையா? இனி அவரை எப்படி அழைக்க? அம்மா என்றா, இல்லை பெரியம்மா என்றா?

அவளது பெரியம்மா... இல்லை... இல்லை... அம்மா... அவரது புன்னகைக்கு பின்னால் இவ்வளவு இழப்புகளை மறைத்து வாழ்கிறாரா?

அவளது அப்பா யார்? இதற்கு அவளது அன்னையைத் தவிர யார் பதில் சொல்ல முடியும்? என்னென்னவோ கேள்விகள் மனதில் மோதின.

அன்று யாரிடமும் அவளால் இயல்பாக பேச முடியவில்லை. தன்னை சமாளித்து கொண்டு அவர்களை எதிர்கொண்டாலும், இந்த விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை. தலைவலி என்று சொல்லிக்கொண்டு அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

வேண்டாம்... வேண்டாம்... எந்த உண்மையும் வேண்டாம். அவளுக்கு அவளது பரி அம்மாவே அம்மாவாக இருக்கட்டும். மரகதம் பெரியம்மாவாகவே இருக்கட்டும். அவளுக்குத் தெரியாமல் அவர்கள் மறைத்த உண்மை, மறைத்ததாகவே இருக்கட்டும் என்று அதைத் தனக்குள் புதைத்து கொண்டாள்.

அவள் சொல்லி முடிக்க, வசீகரன் ஒரு பெருமூச்சு விட்டான்.

அவள் அவனை என்ன சொல்வானோ என்று பார்க்க. அவனிடம் பெரும் அமைதி. அந்த அமைதியில் அவள் அவனை கலவரமாக பார்க்க,

ஒரு பெரு மூச்சுடன் அவன் பேச ஆரம்பித்தான்.

எனக்கு இது முன்னமே தெரியும், மது என்றவனை அவள் அதிர்ச்சியுடன் விழி அகல பார்த்தாள்.

உன்னோட அப்பா உனக்கு யாருன்னு தெரியணுமா, மது? என்றவனை இப்போது அவள் புரியாமல் பார்த்தாள்.

அவளது பார்வையை எதிர்கொண்டவன், உன் அப்பா பெயர் மனோ பாலமுருகன். உன் அப்பாவுடைய தங்கை, உன்னோட அத்தை பேரு மீனாட்சி சொக்கலிங்கம். நீ என்னோட சொந்த தாய் மாமா பொண்ணு, மது என்றதும், அவள் சட்டென்று எழுந்து நின்றுவிட்டாள்.

அவளது கையை பிடித்தவன், இரு என்றதும், அவன் அருகில் வலுக்கட்டாயமாக அமர்ந்தாள். இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை.

உங்களுக்கு இது எப்படி தெரியும் என்றவளது குரலில் மிதமிஞ்சிய அதிர்ச்சி.

எனக்கும் ஒரு மூணு, மூணரை வருடங்களுக்கு முன்ன தான் தெரியும் என்றவனிடம்,

அதுதான் எப்படி? என்றாள்.

அது நாம பிரிந்தப்போ உன்மேல் எனக்கு கோபம் இருந்தது தான். ஆனா கொஞ்ச நாளிலேயே என்னோட தப்பை நான் உணர்ந்திட்டேன் என்றவனை, அவள் இப்போது அப்பட்டமாக முறைத்தாள்.

அவளது முறைப்பை உணர்ந்தவனும், அவளை பார்க்காமல் பார்வையை வேறு பக்கம் திருப்பியவாறு,
நாம பிரிந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் உன்னை தூரத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் வர தான் முயற்சி செய்தேன், ஆனா என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியவில்லை என்றான்.

அப்படி உன்னை பார்க்க வரும்போது தான், ஒரு நாள் நான் மாமாவை உங்க காலேஜ் பக்கத்தில பார்த்தேன் என்றவன் அன்றைய நாளுக்கே சென்றான்.

“மாமா, இங்க என்ன பண்றீங்க?”

அழைப்பில் திரும்பிப் பார்த்தவர், ஆச்சரியமாக விழி விரித்து,
“டேய் குட்டி கண்ணா!” என்று அவனை கனிவுடன் பார்த்தார்.

அவரது அழைப்பில் முறைத்தவன் பார்வையைப் பார்த்தவர்,
“சரி சரி... அப்படி கூப்பிடல...” என்றார்.

“நீ எங்க இங்க?” என்றவரின் கேள்விக்கு,
“என் பிரெண்ட் பார்க்க வந்தேன், மாமா...” என்றான்.

“கேர்ள் பிரெண்டா? இல்ல பாய் பிரெண்டா?” என்று அவர் கேட்க,
“மாமா...” என்று முறைக்க முயன்றவன் புன்னகைக்க, அவரும் புன்னகைத்தார்.

“நீங்க?” என்றவனின் கேள்வியில் தடுமாறியவர்,
“ஒரு பழைய நண்பரை பார்க்க வந்தேன், கண்ணா...” என்றார் சமாளிப்பாக.

“பார்க்க வந்தது நண்பியா, நண்பனா, மாமா?” என்றவனை
“பாடவா!” என்று செல்லமாக தோளில் அடித்தவர்,
“ஆமாம் டா கண்ணா, நண்பியைத்தான் பார்க்க வந்தேன்... உன் அத்தையிடம் சொல்லிட்டாத...” என்றார் குறும்பாக.

“சரி மாமா, சொல்ல மாட்டேன்...” என்றான் புன்னகையுடன்.

“சரி கண்ணா, நான் புறப்படுறேன்...” என்றவரிடம்
“சரி மாமா...” என்று தலையசைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அதுபோல ஆறு மாதத்திற்குள் பலமுறை அவரை அங்கே பார்த்துவிட்டான். முதலில் அவனுக்கு அது வித்யாசமாக தோன்றவில்லை.

ஒரு முறை அங்கே அவரது காரை பார்த்தவன், அவரை தேடிக் கொண்டிருந்தான்.

“என்னங்க தம்பி, அய்யாவையா தேடுறீங்க?” என்று அவரது டிரைவர் அவனது அருகில் வந்து கேட்டார்.

அவன் “ஆம்” என்றதும்,
“தம்பி, சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க... நான் இதை சொல்லக்கூடாதுதான்... கொஞ்ச நாளாவே அய்யா இங்க ஒரு பொண்ணை பார்க்க வர்றார், தம்பி...” என்றார்.

அவனது கூர்மையான பார்வையில்,
“தப்பா சொல்லலிங்க தம்பி... அந்த பொண்ணு கூட ஐயா பேசறதே கூட இல்லைங்க. தூரமா இருந்து பார்த்துட்டு தான் போறார். ஆனா எதுக்கும் கொஞ்சம் கவனிங்க தம்பி... அம்மாவுக்கு தெரிஞ்சா ஏன் சொல்லலன்னு என்னை தான் கேட்பாங்க...” என்றார்.

“பொண்ணா?” என்று அவன் யோசிக்க,

“ஆமாங்க தம்பி... நம்ம நித்யாம்மா வயசு இல்ல... கொஞ்சம் கூட இருக்கும்ங்க...” என்றார்.

“சரி அண்ணா, நான் பார்த்துக்கிறேன்... நீங்க இதையெல்லாம் அத்தைக்கிட்ட சொல்ல வேண்டாம்...” என்றான் அவரை பற்றி அறிந்தவனாக . தெரிந்தால் ஒரு ஆட்டம் ஆடி விடுவார் அவனது அத்தை லலிதா.

“திரும்பவும் வரும்போது எனக்கு தகவல் சொல்லுங்க... என்னோட செல் நம்பர் இருக்குதானே...” என்றான்.

“சரி தம்பி... நான் உங்க கிட்ட சொன்னேன்னு அய்யாவுக்கு தெரியக் வேண்டாம் ...” என்றார் பாவமாக.

அவரை கனிவுடன் பார்த்தவன்,
“சொல்ல மாட்டேன் அண்ணா...” என்றான்.

“சரிங்க தம்பி...” என்றவர், மீண்டும் பாலமுருகன் வரும் வரை காரின் அருகில் நின்றுகொண்டார்.

அவனுக்கு அப்போதிருந்தே யோசனை. அவரிடம் எப்படி கேட்பது?
ஆனால் முதலில் அந்த பெண் யார்? அவளுக்கும் மாமாவுக்கும் என்ன சம்பந்தம்? — அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தான்.

அப்படியே ஒரு மாதம் ஓடியது.

அடுத்த மாதம் டிரைவர் அவனை அழைத்தார்.

அவனும் அந்த கல்லூரிக்கு சென்றான். பாலமுருகன் கவனிக்காமல், அவன் அவரை கவனித்தான்.

அவர் யாரை பார்க்க வந்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள வந்தவனுக்கு — அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன.

அவர் மதுமதியை தான் ஒருவித தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் விழிகளில் அவளை நிரப்பிக் கொண்டிருந்தார்.

அவரது பார்வை அவனுக்கு தவறாகத் தெரியவில்லை.
கன்றை தேடும் பசுவைப் போல, பரிதவிப்புடன் அவர் நின்றிருந்தார்.

அவனுக்கு குழப்பம்.
மதுவுக்கும் மாமாவுக்கும் என்ன சம்பந்தம்...?

நினைக்க நினைக்க மண்டை காய்ந்தது அவனுக்கு.

அதற்குமேல் தாங்க முடியவில்லை.
அவன் நேராக மாமாவின் முன்னால் சென்று நின்றான்.

அவனது திடீர் வரவில் அவர் சற்றுத் திகைத்தாலும், உடனே தன்னை சமாளித்து,
“கண்ணா...” என்றார் வழக்கம்போல் கனிவுடன்.

அவரை அவன் கூர்ந்து பார்த்தான்.

“என்ன கண்ணா, அப்படி பார்க்குற?” என்றார் அவர்.

“மாமா... உங்ககிட்ட பேசணும்...” என்றான்.

“சொல்லு கண்ணா...” என்றவரது கண்களில் தெரிந்த ஆதூரம், அவனது உள்ளத்தை நெகிழச் செய்தது.

“வாங்க... பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு... அங்க போய் பேசலாம்...” என்றான்.

அவருக்கு உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும்,
என்ன வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும்... தன் தவறை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,
“சரி வா, போகலாம்...” என்றார்.

இருவரும் அங்கே சென்றனர்.

இருவருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டு, அவன் அவரையே பார்த்தான்.

“என்ன கண்ணா... இந்த மாமன்கிட்ட ஏதாவது கேக்கணுமா?” என்றார்.

“மாமா... அது...”

அதற்குமேல் அவனால் கேள்வியை சொல்ல முடியவில்லை.

“சொல்லு கண்ணா... என் குட்டி கண்ணாவுக்கு என்ன கேக்கணும்?”

அவரது அந்த பாசமான குரலை பார்த்தவனுக்கு இன்னும் தயக்கம்.
ஆனால் இறுதியில் தைரியம் கொண்டு,

“அந்த காலேஜ்ல... அந்த பெண் யார், மாமா?” என்று திக்கித் திணறி கேட்டுவிட்டான்.

அவரும் இதை எதிர்பார்த்திருந்ததால், அதிர்ச்சி அடையவில்லை.

நிதானமாக அவனை நோக்கிப் பார்த்தவர்... பின்னர் பேசத் தொடங்கினார்.
 
Last edited by a moderator:
Top Bottom