• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 3

Vishakini

Moderator
Staff member
பாகம் 3.
அன்று முழுவதும் பரபரப்பாக இருந்தது பூவிழிக்கு. மறுநாள், அவன் வரப்போகிறான், யோசித்து யோசித்து இயலாதவளாக, பெரியவரிடம் சென்றாள்.
~அப்பா.... | என்றாள் தயக்கமாய்.
~சொல்லம்மா....என்னடாம்மா... |என்றார்
~அப்பா, உங்கட மகன், மருமகள் எல்லாரும் வந்து போறவரைக்கும் நான், என் நண்பி வீட்டில தங்கிக்கொள்ளவா?| என்றாள்.
~என்னம்மா, ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?| ஆச்சரியமாய் கேட்டார் பெரியவர்.
~இஞ்ச இடம் நெருக்கடியா இருக்கும்தானே அப்பா| என்றவளிடம்,
~அவையள் ரெண்டுபேரும் மேல மாடியில இருக்கிற அறையில தங்கப் போகினம், நீதான் அண்டைக்கே, என்ர அறைக்குப் பக்கத்தில இருக்கிற கீழ் அறைக்கு மாத்திப்போட்டியே, பிறகென்னம்மா?| என்றார் பெரியவர்.
~அதுக்கில்லை அப்பா, உங்கட மகன், நீங்கள் சொன்னதுக்காக ஏற்றுக்கொள்ளலாம், அனால் மருமகள், ஏதாவது நினைக்கலாம் இல்லையா? அதனாலதான்| என்றாள்.
~அதொண்டும் இல்லை, எனக்கு என்ரை பிள்ளைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் முக்கியம், நீயேன் அப்பிடி இருக்கலாம், இப்பிடி இருக்கலாம் எண்டு நினைக்கிறாய், அது ஒரு பிரச்சினையும் இல்லை, நீ பேசாமல் இங்கயே இரு, நீ போனால் என்ர சாப்பாட்டு முறை மாறி, வருத்தம் ஏதேனும் வந்திடும், பிறகு தெரியும்தானே| என்றார் மிரட்டுவது போல.
அதனைவிட மறுத்து எதுவும் பேசமுடியாததால் உள்ளே சென்றாள் பூவிழி. மனச்சாட்சி கைகொட்டிச் சிரித்தது,
~ஏய் ...உண்மையாவே உனக்கு அவனைப் பாக்க பிடிக்கவில்லையா?| என ஒரு கேள்வியையும் கேட்டுவைத்தது.
அவனுடனான கடந்த காலமும் அவனைப் பற்றிய நினைவுகளும் அத்தனை சுலபமாக மறக்கக்கூடியவையா என்ன, பதிலுக்கு மல்லுக்கட்டியது இன்னொரு மனம்.
அன்று இரவுதான் அவன் வருவதாக இருந்தது, அனைவரும் எதிர்பார்த்தபடி காத்திருந்தனர், பூவிழி மட்டும் நித்திரை வருவதாகச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள். அவள் உடல் அறைக்குள் இருந்ததேயொழிய மனமும் செவியும் ஹாலில் தான் நின்றது. ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வெளியில் ஒரே பரபரப்பு.
~அப்பா| என்ற அவனது ஆழந்த குரல் செவிப்பறையில் மோதி கரைந்தது. கண்ணைக் கரித்தது அவளுக்கு,
~செழியா..வாப்பா.........| என்ற தகப்பனாரின் ஒலியும்
~அண்ணா...|என்ற வண்ணமதியின் அழைப்பும் சந்தோசச்சிரிப்புகளும் தெளிவாகவே கேட்டது.
~மருமகள் வரேல்லையாப்பா..?| என்ற பெரியவரின் கேள்வியும்
~அவ என்னோடையே வாறதாதான் இருந்தது, பிறகு ஒரு அவசர வேலை வந்திட்டதாலை அவ, பிறகு வருவா| என்றான்.
~எவ்வளவு காலம்..ரெண்டுபேருமா வந்திருக்கலாம்| அப்பாவின் ஆதங்கமும் அதற்குப் பதிலே இல்லாத மௌனமும் அங்கிருந்தவர்களைப் போலவே இவளுக்கும் புரிந்தது, ~நீண்ட பிரயாணத்தின் அலுப்பாக இருக்கும்| என எண்ணினாள். யாரோ ஒருவர் மாடியேறுவது தெளிவாகவே புரிந்தது.
~அண்ணா...அண்ணா...| என்ற இளையவர்கள் இருவரினதும் பேச்சொலியும் கூடவே மாடியேறியது, அவனுடைய குரலில் ஏதோ ஒன்று மாறுபாடாய் தோன்றியது பூவிழிக்கு.
சொந்த மாமாவின் மகளைத்தானே திருமணம் செய்திருக்கிறான் என அப்பா சொன்னார். ஆனால்..அவனது குரலும் நடையும் துடிப்பற்றிருக்க என்ன காரணம், மனம் அலசி ஆராயத்துடித்தது. ~அவளது பொக்கிஷத்தை கடவுள் சரியான ஒருத்தர் கையில் கொடுக்காமல் விட்டுவிட்டாரோ? அவன் அருமை புரியாதவர்களால் அவனைக் கொண்டாடமுடியாதே|
~ஹோ.....| எனக் கதறி அழவேண்டும் போல இருந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டாள். அவசரமாய் ஓடிச்சென்று எப்போதும் கைப்பையில் இருக்கும் அவனது புகைப்படத்தை எடுத்தாள். அதிலே கன்னத்தை வைத்தபடி சற்றுநேரம் அமைதியாக நின்றவள், கதவின் அருகில் காலடி ஓசை கேட்கவும் அவசரமாய் கட்டிலில் சரிந்து படுத்துக்கொண்டாள். கொலுசின் ஒலியில், அவளை அழைத்துச் செல்வதற்காக வண்ணமதிதான் வருகின்றாள் என்பதை உணர்ந்து கண்களை இறுகமூடிக்கொண்டாள்.
எட்டிப் பார்த்த வண்ணமதியும் 'அவள் நித்திரை' என நினைத்து கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டாள். மெல்ல கண்களைத் திறந்தாள் பூவிழி. போர்வைக்குள் கிடந்த புகைப்படத்தைப் பார்த்தபடி பேசாமல் இருந்தாள். எதற்கென்றே தெரியாது கண்ணீர் அருவியாய் வழிந்தது.
கோடு வரைந்த கண்ணீரோடு கண்ணயர்ந்தாள் பூவிழி.
காலையில் விரைவாகவே எழுந்தவள், சமையல் கூடத்தில் நின்ற பத்மினி அம்மாவிடம், பெரியவருக்கான உணவுகளை வரிசைப்படுத்திச் சொல்லிவிட்டு அவசரமாய் புறப்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டாள்.
எல்லோரும் எழுந்து வெளியே வந்து, ஹாலில் கூடியபோது, பூவிழியை மட்டும் காணவில்லை என்பதை, கவனித்த பரமானந்தத்தார்,
~பூவிழி எங்கேம்மா?| என்றார் மகளிடம்.
~அதான் அப்பா, நானும் பாத்தேன், அவ அறையிலயும் இல்ல, எங்க போனா?| கேள்வியாய் பதில் தந்த மகளைப் பார்த்தவர்,
~உனக்கேதும் தெரியுமா இளா?| என்றார்.
~இல்லப்பா..நானும் காணவேயில்லை,| என்றவன், சமையல் கூடத்தின் பக்கம் திரும்பி,
~பத்மினியம்மா, பூவிழி இருக்கிறாங்களா?| என்றான்.
~இல்லைத்தம்பி, அவ காலையிலயே வேலைக்குப் போயிட்டா, நீங்கள் எல்லாரும் எழுந்ததும் சொல்லச்சொன்னா| என்ற பதிலில் தோளைக் குலுக்கினான் இளஞ்செழியன்.
அப்போதுதான், மாடிப்படியில் இறங்கி வந்தான் பொற்செழியன், மருமகளையும் எதிர்பார்த்திருந்த பரமானந்தத்தாருக்கு, மகனின் தனித்த தோற்றம் சற்று ஏமாற்றம் தான்.
அவ்வேளை பத்மினியம்மா, தேநீரோடு வர, புன்னகையோடு பார்த்து பவ்வயமாய் வாங்கிக்கொண்ட பொற்செழியனை ஆதூரமாய் பார்த்தார் அவர். அப்படியே தகப்பனின் சாயலில் இருந்த அவனைக் கண்டதும் அவருக்குள் ஒருவித பேரானந்தம் இளையோடியது.
அவனைப்போலவே இன்னொரு உருவம் அவரது மனதில் சட்டென உதித்தது.
~என்னப்பா, எப்ப நான் அழைப்பு எடுத்தாலும், வண்ணமதியைவிட பூவிழி.... பூவிழி..என்றுதான் கதைப்பீங்கள், எங்க உங்கட வளர்ப்பு மகளைக் காணவேயில்லை| என்றான் கேலியாக.
"அவ....எனக்கு மட்டுமா வளர்ப்பு மகள், என்னை மாதிரி இருக்கிற நிறைய வயசானவங்களுக்கு மகளாச்சே, அதனால தான், காலையிலயே தன்ர பணியைப் பாத்துக்கொள்ளப் போயிட்டா| என்ற தகப்பனாரை விசித்திரமாய் பார்த்தான் பொற்செழியன்.
~இந்தக் காலத்தில இப்பிடி ஒரு பெண்ணா, யாரப்பா அது, அவ நல்லா உங்களுக்கு றீல் விடுறா எண்டு நினைக்கிறன்| என்றவனை,
~அண்ணா...| என இடைமறித்தாள் தங்கை வண்ணமதி.
~என்னடா?| தங்கையிடம் குழைந்தது அவனது குரல்.
~இல்லை அண்ணா, பூவிழியம்மா உண்மையிலயே அப்பிடித்தான், அவ இனிமையான உணர்வுகளால சூழப்பட்ட ஒரு மென்மையான மலர்க்கொத்து, தானும் மென்மையாத்தான் நடந்துகொள்ளுவா, மற்றவங்களிடமும் அதையே தான் எதிர்பார்ப்பா, அதுவும் வயசானவங்கள் எண்டா அவ நடக்கிற விதமே தனிதான் என்றவளை ஆச்சரியமாய் பார்த்தான் அண்ணன்.
~அப்பிடியா, மலர்க்கொத்து எண்டா, அவ்வளவு அழகா?| கண்சிமிட்டிய அண்ணனுக்கு, எட்டி முதுகில் ஒன்றுவைத்துவிட்டு,
~அவ சிரிக்கும் மலரே தாண்ணா| என்றான் இளஞ்செழியன்.
~டேய் நீ என்ன அவங்களுக்கு வக்காலத்து வாங்குறாய்?| என்ற அண்ணனிடம்,
~ஐயோ அண்ணா, அவங்க எனக்கு ரெண்டு வயசு மூத்தவங்க, சொல்லப்போனா, அம்மா போன பிறகு நாங்கள் மூண்டுபேரும் ரொம்ப தவிச்சிட்டம், அப்பதான், அவ அப்பாவை ஹொஸ்ப்பிற்றல்ல பாத்தது, அதுக்குப்பிறகு இங்க வேலைக்கு வந்து, எங்களோடயே தங்கிக்கொள்ளவும் வந்தா, அவ வந்து சில நாளைக்குப்பிறகு தான், பத்மினியம்மாவையும் வேலைக்காக கூட்டிக்கொண்டுவந்து சேர்த்தா, உண்மையிலயே அம்மா இல்லையே என்ற ஏக்கம் அவ வந்த பிறகு குறைஞ்சுதான் போச்சு, அப்பாவுக்கு நேரத்துக்கு நேரம் சாப்பாடு, எனக்கு விருப்பமான சமையல் செய்து, மதியத்துக்கு தர்றது, இதோ இவளுக்கு, தலை கசக்கிவிடுறது தொடங்கி பக்கத்தில இருந்து படிக்கவைக்கிறது வரைக்கும் பாத்துப்பாத்து செய்வா, எங்களுக்கு அம்மாவே அவ உருவத்தில வந்த மாதிரித்தான் நினைக்கதோணுது| என்றான்.
தம்பியின் நீண்ட பிரசங்கத்தைக் கேட்டதும், பொற்செழியனுக்குள் சில பல நினைவுகளும் ஓடத்தான் செய்தது. அவன் நேசித்தவளும், அவனது சகோதரரை தாயைப் போல பார்த்துக்கொள்ளக்கூடியவள் தானே, ஆனால்???? விதி ஏன் சதி செய்தது? அதுவும் அம்மாவின் வடிவில்??
மனதை அடக்கிக்கொண்டு நிமிர்ந்தான், தந்தை கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
~அப்பா....என்ன இது...ஏன் கண் கலங்குறீங்கள்?..ஓ..அம்மாவின்ர ஞாபகம் வந்திட்டுதா?| என்றான்.
தலைகுனிந்த தந்தையை ஒட்டி அமர்ந்துகொண்டவன், அவரது கைகளை இறுக்கமாய் பற்றிவிட்டு,
~சரி, நான் போய் குளிச்சிட்டு வர்றன்,| என்றபடி எழுந்துகொண்டவனின் கையைப் பற்றிய தகப்பனார், "செழியா, வண்ணமதியை எப்பிடி கண்ணும் கருத்துமா பாப்பியோ, அதே மாதிரி பூவிழியையும் கண்ணும் கருத்துமா பாத்துக் கொள்ளுவியா?| என்றார்.
திடீரென்று தந்தைகேட்ட இந்தக் கேள்வியில் ஒருகணம், அதிர்ச்சியுற்றவன், ~என்னப்பா இது, சரி, அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்து பாத்துக் கொள்ளுறன், அதுக்காக நீங்கள் என்னட்ட கெஞ்சவேணுமா?| என்றான்.
~இல்லப்பா, எனக்கென்னவோ அவ, இந்த வீட்டுக்கு வரமா கிடைச்ச ஒரு பெண் என்றுதான் நினைக்கத்தோணுது, அவளை மாதிரி, நேசிக்கவும் பாத்துக்கொள்ளவும் யாராலயும் முடியாதப்பா, உனக்கு கல்யாணம் ஆக முதல்ல அவளைப் பாத்திருந்தா, நிச்சயமா அவளைத்தான் இந்த வீட்டுக்கு மூத்த மருமகளா ஆக்கியிருப்பன்| என்றார்.
தந்தையின் குரலில் இருந்த அசைவும் வார்த்தைகளும் அந்தப் பெண் மீதான அவரது பாசத்தை தெளிவாகச் சொல்லியது பொற்செழியனுக்கு. வெறுமையான ஒரு புன்னகையைத் தவிர வேறெதையும் சொல்லாது தலையை ஆட்டிவிட்டு நடந்தான் பொற்செழியன்.
அவன் குளித்துமுடித்து சாப்பிட வந்தபோதும் கூட தந்தையின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக்கண்டவன்,
அப்பா...நீங்கள் என்ன ஆசைப்பட்டாலும் நான் செய்துவைப்பன், கவலைப்படாதேங்கோ| என்றான்.
இல்லை ராசா, நீயும் மருமகளும் சேர்ந்து வருவியள் எண்டுதான் நான் நினைச்சுக்கொண்டிருந்தன், ஆனால்..நீ தனிய வந்தது எனக்கு ஒரு மாதிரி கவலையா இருக்கு, அதுதான|; என்றார்.
~அப்பா..வெளிநாட்டு வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான்..| என்றவனிடம் மறுத்து அவரால் எதையும் சொல்லமுடியவில்லை.
~சிறுவயது முதல் தனக்காக எதையுமே வாங்கி அவனுக்குப் பழக்கம் கிடையாது, நினைவு தெரிந்த நாள் முதல், தம்பி, தங்கைக்காகவே யோசிப்பான். அதேமாதிரி வாழ்க்கையையும் அவர்களுக்காகவே தியாகம் செய்துவிட்டவன் என் பிள்ளை, கடவுளே அவனுக்கு எப்பவும் சந்தோசத்தையே கொடுங்கோ| சத்தமில்லாமல் கேட்டுக் கொண்டார்.
அவரது எண்ணமும் சிந்தனையும் அவனுக்கும் புரிந்தது, தலையை மட்டும் ஆட்டினான். அவ்வேளை பரிமாறுவதற்காய் வந்த பத்மினியம்மா, ~தம்பி, சாப்பிடுப்பா, இனிமே உன்ர வாழ்க்கையில எல்லாம் நல்லாத்தான் நடக்கப்போகுது, என்ர உள் மனசு அப்பிடித்தான் சொல்லுது| என்றார்.
எதுவும் சொல்லாது பத்மினியம்மாவைப் பார்த்த பரமானந்தர், சாப்பிடத்தொடங்கினார்.
~வீட்டு விசயத்தை வெளியாளான ஒருவர் தெரிந்து கொண்டாரே என்ற கவலை ஒருபுறமும் அவர் சொன்ன வார்த்தைகள் பலித்துவிட்டால் ....| என்ற நிம்மதி மறுபுறமுமாய் தலையை மட்டும் ஆட்டிவைத்தான் பொற்செழியன்.

 

Gowri Karthikeyan

Well-known member
சோ இவங்க காதல் முறிவுக்கு காரணம் இவன் அம்மா தான்.....
ஏன் இப்படி செய்தாங்க?????
தெரிஞ்சி செய்தாராலா????
இல்ல????
இன்னமும் இவன் அவள் நினைவிலே தான் இருக்கான்....
ஏன் பேரு தெரியலையா????
இல்ல பேரை மாத்தி வெச்சி இருக்கலா
 
Top Bottom