• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 11

Vishakini

Moderator
Staff member
பாகம் 11.
அன்று மாலைதான் விருந்திற்கு நண்பர்களை அழைத்திருந்தான், பொற்செழியன். சமையல் வேலைகள் தடல்புடலாக நடந்துகொண்டிருந்தன, பத்மினியம்மாவோடு சேர்ந்து எல்லாவற்றையும் பூவிழிதான் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருந்தாள். ஓரிருவர் மட்டும் மாலையே வந்துவிட்டனர். அவர்களோடு வெளியே சென்றுவிட்டிருந்த பொற்செழியன் சகல ஏற்பாடுகளும் முடிந்த பின்னர் தான் வந்து சேர்ந்தான்.
அனைத்தையும் தயார் செய்துவிட்டு பரமானந்தத்தாருக்கு வேண்டிய உணவினையும் ஆயத்தப்படுத்திவிட்டு தனது அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள் பூவிழி. வீட்டுக்கு வந்து ஏற்பாடுகளைக் கண்ட பொற்செழியன் அசந்துபோய்விட்டான்.
வரவேற்பிற்காக அவளே தன் கையால் அலங்கார பாவை ஒன்றை வடிவமைத்திருந்தாள். அதன் அழகே தனித்துவமாய் இருந்தது.
"அண்ணா, பூவிழி எப்பிடி ஏற்பாடு செய்திருக்கிறா எண்டு பாத்தீங்களா, அவ எல்லாத்திலையும் செம கெட்டிக்காரி" என்ற தம்பியை ஆழமாகப் பார்த்தவன், "இளா, நீ எனக்கு ஒரு உதவி செய்வியா?" என்றான்.
"என்னண்ணா,? "
"தயவுசெய்து பூவிழியை பெயர் சொல்லி கூப்பிடாதை, அவ உனக்கு வயதுக்கு மூத்தவ, தவிர இந்த வீட்டில எல்லாரையும் தாங்குறா, எல்லாத்தையும் பாத்துப் பாத்துப் கவனிக்கிறா, அம்மா மாதிரி பாத்துக்கொள்ளுறா எண்டு சொல்லிப்போட்டு நீ பெயர் சொல்லிக் கூப்பிடுறது நல்லதில்லை," என்றான்.
"அண்...ணா...எனக்கும் புரியுது, நானும் எப்பிடிக் கூப்பிடுறது எண்டுதான், சரி, பூவிழியம்மா எண்டே கூப்பிடுறன்," என்றவன், "அவங்களை அண்ணி எண்டு கூப்பிடத்தான் எனக்கு விருப்பம், இன்னொரு அண்ணா இருந்திருந்தா, அவனுக்கு அவங்களை கல்யாணம் பண்ணிவைச்சு இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கியிருக்கலாம், நீ கல்யாணம் பண்ணாமல் இருந்தாலாவது உனக்கே ....." திக்கென்றது பொற்செழியனுக்கு, ~கடவுளே.....இவன் என்ன சொல்கிறான்.......| மனம் பதைபதைத்தது.
சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "சரி...சரி என்னுடைய நண்பர்கள் வர்றாங்கள், நான் போறன்" என்றுவிட்டு நகர்ந்தான் பொற்செழியன்.
அண்ணனுக்குள் ஏதோ இருக்கிறது என்பது மெல்லியதாய் புரியத்தொடங்கியது இளஞ்செழியனுக்கு.
எல்லோரும், வீட்டு முன் பக்கத்தில் நின்றிருக்க, பூவிழியை மட்டும் காணவில்லை, மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்தாலும் கண்களால் அவளையே தேடிக்கொண்டிருந்தான், பொற்செழியன்.
தூரத்தில் நின்ற தங்கையை அருகில் வருமாறு அழைத்தவன்,
"பூவிழி எங்கே?" என்றான்.
"தெரியல்லயே அண்ணா, அறையிலதான் இருப்பா" என்றாள்.
"போய் கூட்டிக்கொண்டு வா"
சரி என்றபடி ஓடிச்சென்ற தங்கை, அதே வேகத்தில் திரும்பி வரவும்,
"என்னடா?" என்றான்.
"அண்ணா, அவ, ஏதோ முக்கியமான வேலை இருக்காம், அதனால வரேல்லையாம்," என்றவளிடம்,
"என்னம்மா நீ, வீட்டில எல்லாரும் இருக்கிறம், அவ மட்டும் வராம இருந்தா நல்லது இல்லை தானே, உன்ர பூவிழியம்மா மேல உனக்கிருக்கிற பாசம் உண்மையெண்டா, எப்பிடியாவது கூட்டிட்டு வந்திடு" என்றான்.
வண்ணமதிக்குச் சொல்லவா வேண்டும், ஓடிச்சென்று விட்டாள், 'அண்ணா என்னவொரு வார்த்தை சொல்லிவிட்டார், பூவிழியை அம்மா மாதிரி நினைக்கிற என்னை, இப்படிச் சொல்லிவிட்டாரே,' என நினைத்தபடியே பூவிழியின் அறைக்குள் நுழைந்தாள். பூவிழி எவ்வளவோ மறுத்தும், அடம்பிடித்து, கேட்டு, கெஞ்சி, அழைத்து வந்தாள் வண்ணமதி.
பனிப்பூ போன்ற வெண்மையான நிறத்தில் , கண்ணாடிக் கற்கள் பதித்த சேலை, தலைமயிரை ஒன்றாக்கி தூக்கி கொண்டை போட்டிருந்தாள், கண்ணுக்கு மையுமில்லை, உட்டில் சாயமும் இல்லை, கழுத்தில் அந்த கறுப்பு மாலையைத் தவிர வேறு நகையும் இல்லை, கையில் கறுப்பு பட்டியாலான சின்ன கடிகாரம், இந்த மெல்லிய அலங்காரத்தில் பேரழகியாய் ஜொலித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான், பொற்செழியன்.
யாரையும் பார்க்காது குனிந்த தலை நிமிராது, வந்தவள், பரமானந்தத்தாரின் அருகில் அமர்ந்துகொண்டாள்.
அவள் மீதான, ஏக்கங்களை தவிர்த்து விடவேண்டும் என நினைத்தாலும், ஏனோ பொற்செழியனால் அது முடியவில்லை.
மெல்லிய புன்னகை ஒன்றை அவனுக்கு தந்தவளுக்கு தானும் ஒரு புன்னகையை பரிமாறிவிட்டு, திரும்பிக்கொண்டான்.

இளஞ்செழியனுக்கு இருப்பு கொள்ளவில்லை, வருகிறோம் என்று சொன்ன நண்பர்களைக் காணவில்லை, வெளியே வந்து, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான், வீட்டின் கேற் அருகில் ஒரு உருவம் தயங்கி தயங்கி வந்துநிற்பது தெரிந்தது. யாராக இருக்கும் என நினைத்தபடி, பூவிழியிடம் சொல்லப்போனான், ஆனால் முதலில் இருந்த இடத்தில் பூவிழியைக் காணவில்லை, வண்ணமதியிடம் சொல்லலாம் என்றால் அவளையும் காணவில்லை, யாரென்று பார்ப்போம் என நினைத்தபடி, கேற்றடிக்குச் சென்றான்.
அந்த உருவம் அலைபேசியில் அழைப்பை எடுப்பதும், பின்னர் அதனையே வெறித்துப் பார்ப்பதுமாய் நின்றது. கேற்றைத் திறந்தான், இவனைக் கண்டதும் அவசரமாய் நிமிர்ந்த அந்தப் பெண் மிரண்டு விழித்தாள்.
மின்குமிழ் வெளிச்சத்தில் அவளுடைய உருவம் நன்றாகவே தெரிந்தது. மெல்லிய நீலநிற சல்வாரில், தலை எல்லாம் கசங்கிப்போய், பயணக்களைப்பு முகத்தில் தெரிய, நின்றவளை வைத்தகண் வாங்காமல் பார்த்தான். அந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது அவனுக்கு,
இவனைக் கண்டதும் அவளும் போக நினைத்து திரும்ப,
~நில்லுங்கோ...நீங்கள்....?|என்றான் கேள்வியாக.
மெல்லத் திரும்பினாள்.
"நீங்கள், அண்ணாட்ட வந்தீங்களா, அவருடைய நட்பா?"; என்றுவிட்டு, சிறு பெண்ணாக இருக்கிற இவள் அண்ணாவின் வயதிற்கு கிட்டவே வரமாட்டாளே என நினைத்தான்.
தலையை அங்கும் இங்குமாய் ஆட்டிய அவள், திரும்பி போக எத்தனிக்க,
"நில்லுங்கோ.....ஏன் திரும்பி போறியள்,?" இவன் கேட்க
அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவளது அந்த மௌனம் அவனுக்கு சற்று கோபத்தை வரவைத்தது.
"என்ன நீங்கள், சொன்னால்தானே எதுவும் தெரியும், இப்பிடி கதைக்கப் பயப்படுறீங்கள், எங்கட வீட்டு வாசலுக்கு வந்திருக்கிறியள், நான் எப்பிடி உங்களை கேக்காமல் இருக்கமுடியும்?" என்றான்.
அவள் அப்போதும் எதுவும் பேசாது அவனையே சங்கடமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
இளஞ்செழியனுக்கு அவளது செய்கை விசித்திரமாய் இருந்தது. 'இப்படி ஒரு வெகுளித்தனமா?' என எண்ணமிட்டான்.
எதுவும் பேசாது மீண்டும் ஒருமுறை போனில் அழைப்பு எடுத்துவிட்டு நிறுத்தினாள். அவள் திரும்ப எத்தனிக்க, அவசரமாய் அவ்விடம் வந்தனர், பத்மினியம்மாவும் பூவிழியும்.
"இளா தம்பி, என்ர மருமகள் தான், ஏதோ வேலை விசயமா வந்திருக்கிறா, தங்கிறதுக்கு இஞ்ச யாரையும் தெரியாது, அதுதான் வீட்ட வந்திட்டு காலையில போகச்சொன்னன், பூவிழியிட்ட சொல்லி அப்பாட்டயும் கேட்டன்," பயத்தோடு சொன்ன பத்மினியம்மாவிடம்,
"என்ன பத்மினியம்மா இது, நாங்கள் என்ன உங்களை வேற்று மனுசியாவா பாக்கிறம், இல்ல, நான் தான் அப்பிடி நினைக்கிறனா, ஏன் இவ்வளவு பதற்றம், அதனால என்ன, உள்ள கூட்டிப்போங்கோ, பாவம் நிறைய நேரமா இதிலயே நிக்கிறா,"
என்றவனை நன்றியோடு பார்த்த பூவிழி, புன்னகையுடன்,
"வாம்மா, உன்னுடைய பெயர் இசைநிலாதானே" என்றாள்.
உள்ளம் படபடவென அடித்தது இளஞ்செழியனுக்கு, அந்த நொடியில் அவளது பெயரை அறிந்ததே உலகத்தில் மிக முக்கியமான சந்தோசமானதாகப்பட்டது அவனுக்கு.
அதற்குள் "கோவிக்கதடா, நிறைய நேரம் போன் எடுத்தியா," என்ற பத்மினியம்மா,
~போனை சமையலறையில வைச்சிட்டன், வெளியில நிண்டதில சத்தம் கேக்கயில்ல," என்றார் மன்னிப்பு கோரும், பாவனையில் மருமகளிடம்,
அப்போதும் அவள் தலையை ஆட்டினாளேயொழிய எதுவும் பேசவில்லை.
அவளது வெகுளித்தனம் இளஞ்செழியனுக்குப் பிடித்திருந்தது.
அவளையே பார்த்தான், ஆனால் எங்கே, அவள்தான் நிமிரவேயில்லையே, பூவிழியின் அருகில் நின்றவள், அங்கே இங்கே திரும்பாமல் நின்றாள்.
"பூவிழி...இவ....தங்க.....?"
"என்ன பத்மினியம்மா, அவ என்னுடைய அறையில படுக்கட்டும், நான் கூட்டிப்போய், விடுறன், நீங்கள் அங்க போங்கோ" என்றபடி, அந்தப் பெண்ணின் கைபற்றி அழைத்துச் சென்றாள்.
சின்னப் புன்னகையோடு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனசுக்குள் ஒரு இனம்புரியாத, இன்று வரை அனுபவிக்காத உணர்வு தலைதூக்கியது. அவளுடைய பெயரில் இருந்த இசை அவனுடைய இதயத்தில் ராகமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.

விருந்து ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக கவனித்தபடி, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தாள் பூவிழி.
பொற்செழியனின் மனைவி; அவனருகில் இல்லை, என்பதை நினைத்த பூவிழி, 'என்ன பெண் இவள், அவனோடு கூட வருவதற்கென்ன, அருகில் நிற்பதற்கென்ன, கணவன் என்ற உரிமையோடு அருகில் நிற்கின்ற வரம் கிடைத்திருந்தும் அதனை இப்படி தவறவிடுகின்றாளே, நண்பர்கள் முன்னிலையில் மனைவியோடு நிற்கத்தானே அவனும் ஆசைப்படுவான், அவன் என்ன சாதாரமானவனா,
பூவிழியைப் பொறுத்தவரை பொற்செழியன், தான் இந்த உலகத்திலேயே மிகச்சிறப்பானவன், அழகானவன், புத்திசாலி என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
~அவனோடு இருக்கும் ஒவ்வொரு தருணமும் பொக்கிசம் என வாழவேண்டாமா இந்தப் பெண்,| என நினைத்தாள்.
சற்றே நிமிடத்தில், 'நமக்கென்ன...அவர்களாச்சு ....அவளுடைய புருசனாச்சு...'என எண்ணியபடி நிமிர்ந்தாள், சற்று தூரத்திலேயே எதிரில் நின்றுகொண்டிருந்தான் பொற்செழியன். மெல்லிய சாம்பல் நிறத்தில் ரீசேட் போட்டிருந்தான், கருமை கலந்த அவனது நிறத்திற்கு அந்த நிற ஆடை மிகப்பொருத்தமாய் இருந்தது.
கையில் மணிக்கூடு, அடர்ந்த கறுத்த மீசை, அடர்த்தியாய் தலைமயிர், அளவான உயரம், எடுப்பான தோற்றம், ஒரு வைத்தியருக்கான கம்பீரமான மிடுக்கு, என பார்பவர்கள் திரும்பிப் பார்க்கும் அழகோடு இருந்தவனை வைத்தகண் வாங்காமல் பார்த்தாள்.
ஒரு காலத்தில் அவனை அளவுகடந்து ரசித்திருக்கிறாள்,
'குறிப்பிட்ட ஒன்று யாரிடம் இல்லையோ, அவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்,' எப்போதோ யாரோ சொன்னது இப்போது நினைவில் வந்தது அவளுக்கு.
பொற்செழியன் மட்டும் அவளுக்குச் சொந்தமானவனாக இருந்திருந்தால், அவனை அவள் எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பாள், அவனுக்காக என்னவெல்லாம் செய்திருப்பாள், அவனது, குணத்திற்கும் அறிவிற்கும் அவனருகில் நிற்பது பாக்கியம் ஆயிற்றே, எண்ணங்கள் தறிகெட்டு ஓடுவதை உணர்ந்தவள், தன்னைச் சரிசெய்துகொண்டு நிமிர்ந்தாள், அவள் பார்ப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் பொற்செழியன்.
சங்கடத்தோடு மறுபுறம் திரும்பிக்கொண்டாள் அவள். இதயத்தில் வேதனை வண்டாக குடைய வலியோடு திரும்பினான் பொற்செழியன்.
அப்போது, உள்ளே வந்த நண்பனைக் கண்டதும் கைகொடுத்து வரவேற்றபடி கூட வந்திருந்த புதியவனைப் பார்த்தபடி, பார்வையால் வினா தொடுத்தான்.
"இவனா, என்ர சித்தியின்ரை மகன், வானகன், நேற்றுத்தான் அங்க ஊரில இருந்து வந்தான், இங்கதான், எங்கட பல்கலைக்கழகத்திலையே கொஞ்ச நாளைக்கு வேலை செய்ய எண்டு சித்தி அனுப்பியிருக்கிறா, அதுதான் வந்திருக்கிறான், நாளை மறுநாள் வேலைக்கு வாறார்...எங்கட குடும்பத்தில இவன் தான் சின்னவன், அதோட சரியான சுட்டி, அங்க இருக்கிறவரைக்கும், நான் எண்டா காணும், அண்ணா...அண்ணா எண்டு எப்பவும் பின்னாலயே திரிவான், வந்ததில் இருந்து ஆள் எங்கையும்போகேலாம நிண்டார், புது இடம்தானே, சரி வா விருந்துக்குப் போய்வரலாம் என்று கூட்டிவந்திட்டன்" என்றான்.
"ஓ... சந்தோசம் வாங்கோ" மகிழ்ச்சியோடு சிரித்த பொற்செழியன், இளஞ்செழியனை அழைத்து வானகனைக் கூட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு நண்பர்களிடம் விரைந்தான்.
~அவர் இப்ப, எங்கட வரலாறே கேட்டவர், நீங்கள் ஏன் அண்ணா சும்மா எல்லாத்தையும் அவிட்டுக்கொட்டுறியள்? பொறுங்கோ, அண்ணியிட்டை வந்து போட்டுக்குடுக்கிறன்...| தமையனைக் கடிந்தபடியே சென்றான் வானகன்.
நீண்ட நாட்களின் பின்னர் எல்லோரும் சந்தித்ததால் ஆர்ப்பரித்தனர் நண்பர்கள். ஒருவரையொருவர் கட்டித்தழுவி நட்பில் மகிழ்ந்திருந்ததைக்கண்ட பூவிழி, பொற்செழியனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்தவளாக புன்னகையோடு அவனைக் கடந்து சென்றாள். அவளது மகிழ்ச்சியின் காரணம் அவனுக்கும் தெரியாமல் இல்லை, தன்னுடைய சந்தோசம் தான் அந்த மகிழ்வின் காரணம் என்பதை உணர்ந்தவனுக்கு மனதில் தென்றல் ஒன்று சாரலாய் வீசியது. அவனை அவள் வெறுக்கவில்லை, அவளுக்குள் இன்னும் அவன் மீது பாசம் இருக்கிறது,
~டேய்.......இளா...|சத்தத்தோடு வந்து சேர்ந்தது இளஞ்செழியனின் நட்பு வட்டம், இளஞ்செழியன், படிப்பு முடிந்து பெரிய நிறுவனம் ஒன்றில் பொறியியலாளனாய், வேலைசெய்பவன், பாடசாலை, பின்னர் பல்கலைக்கழகம், என ஒன்றாய் படித்த நண்பர்கள் அவரவர் வெவ்வேறு தொழிலில் இருந்ததால் எப்போதாவது தான் எல்லோரும் சந்தித்துக் கொள்வது, அதுவும் நண்பர்களின் பிறந்தநாள் என்றால் தவறவிடுவதில்லை, கூடிவிடுவார்கள், இன்று அண்ணனின் விருந்து என்றதும் நண்பர்களை அழைத்துவிட்டான்,
எல்லோரையும் கைகொடுத்து அழைத்து வந்தவன், எல்லோரையும் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினான். பொற்செழியனும் எல்லோருடனும் அளவளாவி தன் அன்பை பகிர்ந்துகொண்டான்.
பொற்செழியனின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர், உணவு நேரம் வந்துவிட்டதால், பெரியவர், எழுந்துவிடவும் அங்கே இருக்க சங்கடப்பட்டவளாக, அங்கும் இங்கும் பார்த்தாள் பூவிழி. உள்ளே போகவும் முடியவில்லை அவளால்...வண்ணமதியும் தன் தோழியரோடு பேசிச் சிரித்து விளையாடிக்; கொண்டிருந்தாள்.
"டேய் ....என்னடா...விருந்து சத்தமே இல்லாம, அமைதியா இருக்கு,"
கூக்குரலிட்டான் இளஞ்செழியனின் நண்பன் ஒருவன்.
கூடச்சேர்ந்து ஆர்ப்பரித்தனர் மற்ற நண்பர்கள்.
"டேய் ......இளா..நீதான் நல்லா பாடுவியே,; ஒரு பாட்டுப் பாடுடா...." உந்திவிட, கோரசாக எல்லோரும் இளஞ்செழியனை தள்ளிவிட்டனர்.
புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழி, தம்பியின் இந்த திறமை தெரியாத பொற்செழியனும் விசித்திரமாய் தம்பியைப் பார்த்தான். ~சின்ன அண்ணன் பாடப்போகிறான்|என்றதும் ஓடிவந்தனர் வண்ணமதி குழுவினர்.
வானகனும் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினான்.
கரோக்கியைத் தயார் செய்த நண்பர்கள், மைக்கை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கியவன், பாட ஆரம்பித்தான்.
அப்போது பார்த்து, ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தபடி, தலை துவட்டிக்கொண்டிருந்தாள் இசைநிலா. யன்னலுக்கு எதிர் திசையில் நின்ற இளஞ்செழியனுக்கு அவளது முகம் நிலவொளியில் பிரகாசமாய் தெரிந்தது. துவாயை உயர்த்தி உயர்த்தி அவள் தலைதுவட்ட, நீண்டிருந்த அவளது தலைமுடியில் இருந்து விழுந்த சின்னச்சின்ன நீர்த்துளிகள் மேகத்திலிருந்த மழைத்துளிகளாய் தெரிந்தது இளஞ்செழியனுக்கு.
யாரென்றே தெரியாத அவளின் மௌனம் இளஞ்செழியனுக்குள் ஒருவித ஈர்ப்பை உருவாக்கிவிட, அந்த முகம் காலகாலமாய் தன்னோடு சேர்ந்திருந்த்தைப்போல அவனுக்குள் ஒரு எண்ணம். அவன் பாட ஆரம்பித்தான்.

"இளவேனிற்கால பஞ்சமி.....
அவள் வானில் வந்த பௌர்ணமி......"
பாடலின் இசையில் உருகிக் குழைந்தது அவனது குரல்.
தூரத்தில் நின்றவள் தன் பாட்டைக் கேட்பதாய் நினைத்து அவனும் அவள் நின்ற திசையையே பார்த்தபடி பாடிக்கொண்டிருந்தான்.
பொற்செழியனின் விழிகள் காந்தம் போல பாய்ந்து பாய்ந்து மீண்டது பூவிழியிடம். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவளும், அவனது பார்வையின் வீச்சினை உணர்ந்து விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
'இது சரியில்லை......' புத்தி இடித்துரைத்தது பூவிழிக்கு,
'ஏன் சரியில்லை, அவரைப் பார்த்த, நாளிலிருந்து அவரையே நினைத்துக் கொண்டுடிருக்கும் நான் பார்க்கக்கூடாதா, என் கழுத்தில் போட்டது கறுப்பு நூல் என்றாலும் அதையே தாலி என நினைத்து நான் வாழ்வது உண்மைதானே, அவர் எனக்குதானே முதலில் உரிமையானவர், அதன் பின்பு தானே திருமணம் செய்துகொண்டார்,'
அடம்பிடித்தது மனசு.
அழுகை வந்துவிடும்போல இருந்தது அவளுக்கு. இத்தனை வருடங்களாய், எங்கோ கண்காணாத தேசத்தில் அவன் இருந்தபோது, சிந்திக்காத கலங்காத உண்மை, இப்போது விஸ்வரூபமாய் அவளுக்குள் படர்ந்தது.
கண்முன்னே நிற்கும் அவனை, தான் இழந்துவிட்டேன், என்ற துயரம் எப்போதுமில்லாமல் அப்போது அதிகமாய் அவளை ஆட்டிவைத்தது.
~ஏன்...ஏன் ...அவளைவிட்டுப் போனான், ஏன் இன்னொரு திருமணத்திற்குச் சம்மதித்தான், எப்படி அவனால் முடிந்தது,| ஒரு பக்கம் இப்படி ஓடிய எண்ணத்தை எதிர்த்து நின்றது மறுபக்க மனம்,
~பாவம், அவரே ஒரு இக்கட்டான சமயத்தில கல்யாணம் செய்திருக்கிறார், அவரைப்போய் கோவிக்கலாமா|
தன்னைத்தானே சமாதானம் செய்தவளாய் மௌனித்திருந்தாள் அவள்.
அவள் சிந்தனையில் லயித்திருக்க இளஞ்செழியனின் பாடலும் முடிந்திருந்தது. அவசரமாய் யன்னலைப் பார்த்த இளஞ்செழியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, அங்கே அவனது அவளைக் காணவில்லை.
அவன் பாடி முடித்தபோது, நண்பர் கூட்டமே கைதட்டி ஆர்ப்பரித்தது. அவசரமாய் விரைந்து வந்து தம்பியை அணைத்துக்கொண்டான் பொற்செழியன். அவன் விழிகளில் மின்னிய நீர்த்துளிகளை இளஞ்செழியனும் பார்க்கவேசெய்தான்,
பாட்டைக் கேட்டதும் அழுகிற அளவிற்கு அண்ணனுக்குள் அப்படி என்ன துயரம் இருக்கிறது. அவனுக்குள் ஓடிய வினாவோடு அண்ணனை அணைத்துக் கொண்டான்.

அண்ணன் தன் நண்பர்களோடு, கும்மாளமடிக்க, புதிதாகப் பார்த்த இளஞ்செழியனின் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்துவிட்டு மெல்ல எழுந்துகொண்டான் வானகன். அந்த வீடும் அந்த சூழலும் ஏனோ அவன் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. ஏன், அங்கிருந்த அவனுக்கு அறிமுகமான ஓரிரு உறவுகளும்தான். காலகாலமாய் அந்த வீட்டிற்கும் அவனுக்கும் ஒரு பந்தம் ஏற்படப்போவதைப்போல மனம் அங்கலாய்த்தது. அந்த விசித்திர உணர்வை துடைத்தெறிவது போல அவனது செல்போன் ஒலித்தது.
 

Gowri Karthikeyan

Well-known member
பூவிழி மனதுக்குள்ளே போராடி சோர்ந்து போயிருவா போல🥺🥺🥺🥺🥺
 
Top Bottom