மையல் 14
"என்ன பொண்டாட்டி, என்னோட திங்க்ஸை தேடுறியா.?" என்ற கணவனின் வினாவில், 'முகத்தை வச்சு மனசைப் படிப்பானோ இவன்? எல்லாத்தையும் கரெக்டா கண்டு பிடிச்சிடுறான்!' என வியப்பு மேலிட்டது மேகவிக்கு.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.." என்று அவள் சமாளிக்க, "இங்க சுச்சுவேஷன் என்னனு தெரியல, அதுனால என்னோடது எதையும் எடுத்துட்டு வரல நான்! நாளைக்குத்தான் தங்கி இருக்கிற ரூமை வெக்கேட் பண்ணலாம்னு இருக்கேன்!"
"ஓ.. சரி, கிளம்பு இப்ப. நான் தூங்குற டைம் ஆகிடுச்சு."
"உனக்குத் தூக்கம் வந்தா தூங்கு, அதுக்கு எதுக்கு என்ன கிளம்ப சொல்லுற?"
"உன்னோட ரூமுக்குப் போகலயா நீ?"
"ஏன் போகணும்?"
"உன்னோடது எதுவும் இங்க இல்லயே?"
"சோ வாட்? பனியனோட தூங்கிட்டு காலையில சர்ட்டைப் போட்டுக்கிட்டு கிளம்புறேன். இல்லேனா, வீட்டுக்காரனுக்காக உன்னோட சர்ட்டை தர மாட்டியா நீ.?"
சற்றே திகைத்தவள், "ஏது, என்னோட சர்ட்டா?"
"ம்ம்.. இன்னைக்கு நீ ஆஃபிஸுக்கு வியர் பண்ணியிருந்த சர்ட் கூட எனக்கு கரெக்டா தான் இருக்கும். உனக்குக் கொஞ்சம் லூசாதான இருந்துச்சு அது. அதே சைஸ்ல வேற இல்லையா என்ன.?"
"உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா? நான் யூஸ் பண்ணுறதைக் கேட்குற.?"
"இதுல என்ன இருக்கு? நீ மாம்ஸோட சர்ட்டை யூஸ் பண்ணது இல்லையா? நம்ம வீட்டுல, லீவ் டைம்ல எல்லாம் தனா பெரும்பாலும் என்னோட டீசர்ட்டையும் அவளோட லாங் ஸ்கர்ட்டையும் தான் போடுவா. அண்ணன் தங்கச்சி ஒன்னா இருக்கும் போது, இதெல்லாம் நார்மல் தான?"
"அது அண்ணன் தங்கச்சியா இருக்கும் போது, சரிதான். ஆனா நீயும் நானும்?"
"ம்ம்.. நானும் நீயும்.."
"ப்ச்ச்.. என்னோட பொருளை யார் கூடவும் நான் ஷேர் பண்ணிக்க மாட்டேன்!"
"ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ஃபுக்கு இடையில அவங்களையே ஷேர் பண்ணிக்கும் போது, ஒரு சர்ட்டை ஷேர் பண்ணுறதால என்ன குறைஞ்சிடப் போகுது?"
சத்தி உரைத்த வார்த்தைகளின் பொருளை உணர்ந்தவள் திடுக்கிடலுடன் பார்க்க, "எனக்கு என் பொண்டாட்டியைச் சும்மா வச்சு வேடிக்கை பார்க்கிற எண்ணம் எல்லாம் இல்ல. அது அதுக்குனு நேரம் வரும் போது, மொத்தமா எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கத்தான் வேணும். சோ, அதை இப்ப சர்ட்ல இருந்து ஆரம்பிப்போம்.!" என்று உரைத்து மேலும் திணற வைத்தான்.
அதற்கு மறுமொழி பேசிட வழி இல்லாது அவள் அமைதியாய் நிற்க, "வீட்டை ஒட்டடை அடிச்சு கிளீன் பண்ணி வேலை பார்த்ததுல உடம்பு ஃபுல்லா வியர்வை. குளிச்சா தான், தூங்க முடியும். மாம்ஸ் இங்க வந்து போவாரு இல்ல? அவரோட பேண்ட், வேட்டி எதுவும் இருக்கா.?" எனப் பேசியவாறே, அறையில் இருந்த அலமாரிகளைத் திறந்து ஆராய்ந்தான்.
நான்கு நிமிடங்களின் தேடலில் சாகரனின் உடை கிடைத்து விட, கைலி வேட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு மனைவியின் ஆடைகளில் இருந்து கழுத்துப்பட்டை இல்லாத ஒரு டீசர்ட்டை உருவி எடுத்தான்.
ஆடவனின் கையில் இருந்த உடையைப் பறித்தவள், "அதான் அண்ணாவோடது இருக்கே? அதையே போடு!"
"அவரோட சர்ட் எனக்கு லூசா இருக்கும் பொண்டாட்டி. உன்னோடது தான் கரெக்ட் சைஸ்.." என மீண்டும் அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு குளியல் அறைக்குள் செல்ல, 'இவனை!' என்று லேசான சினம் துளிர்க்க, பல்லைக் கடித்தபடி பார்த்திருந்தாள்.
'இனி அந்த டீசர்ட்டை என்னால போட முடியாதா.?' என அந்த ஆடையின் மீது பிடித்தம் கொண்ட மனம் வேறு ரகசியமாய் வருத்தம் கொண்டது.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் படுக்கையில் விழ, பத்து நிமிடங்களின் இடைவெளியில் வந்தான் சத்தி.
"என்ன பொண்டாட்டி, படுத்தாச்சா.? பால் எதுவும் குடிக்கிறியா.?"
"எனக்கு எதுவும் வேண்டாம்!" என்று இமைகளைப் பிரிக்காமல் பதில் உரைத்தவள், "தலகானியையும் பெட்சீட்டையும் ஹால்ல சோஃபா மேல வச்சிருக்கேன், எடுத்துக்கோ. செகண்ட் பெட்ரூமை யூஸ் பண்ணாலும் சரி, இல்லேனா அங்கேயே படுத்தாலும் சரி. உன்னோட இஷ்டம்!" எனச் சொன்னவள் அவ்வளவு தான் என்பது போல் இடைவரை இருந்த போர்வையை கழுத்து வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
எதுவும் பேசாமல் மனைவியின் செயல்களைப் புன்னகையுடன் பார்த்திருந்த சத்தி, விளக்கை அணைத்து விட்டு அறைக்குள் இருந்து வெளியேறினான்.
சுவிட்சின் ஒலி கேட்டு கண்களைச் சிறிது மட்டும் திறந்து பார்த்தவள், "ஹப்பா.. போயிட்டான்!" என நிம்மதி மூச்சுவிட, அடுத்த இரண்டாம் நொடி உள்ளே வந்து அவளின் அருகே உடலைச் சாய்த்தான் ஆடவன்.
திகைத்து எழுந்தவள், "ஏய்! என்ன செய்யிற.?" என்று பதற்றத்துடன் வினவ, "அட, என்ன பொண்டாட்டி? இன்னும் தூங்கலயா?"
"முதல்ல, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு நீ!"
"படுக்க வேண்டாமா?"
"அதுக்கு எதுக்கு இங்க வந்த? நான்தான் ஆப்போஸிட்ல இருக்க ரூமுக்குப் போகச் சொன்னேனே?"
"என்னால தனியா எல்லாம் படுக்க முடியாது!"
"ஹான்.?"
"பொண்டாட்டி நீ இருக்கும் போது, நான் எதுக்குத் தனியா படுக்கணும்?"
"இது என்ன புதுசா இருக்கு.?"
"புதுசா..? கல்யாணம் ஆனதுல இருந்து ரெண்டு பேரும் சேர்ந்து தான படுக்கிறோம்? இப்ப என்ன.?"
"அது ஊருல."
"ஏன், இங்க என்ன வித்தியாசமாம்?"
"அங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் இருந்தாங்க. அதோட எக்ஸ்ட்ரா ரூமும் இல்ல. அதுனால ஒரே ரூமை ஷேர் பண்ணிக்கிட்டோம் சரி. இங்க தான் யாரும் இல்லையே? இன்னொரு ரூமும் இருக்கு, அப்புறம் என்ன?"
"நாம ஊர்ல ஒரே ரூம்ல இருந்ததுக்கான காரணம் அது இல்ல."
அவள் புரியாமல் பார்க்க, "நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. புருஷன் பொண்டாட்டி. அதுனால தான் ஒன்னா இருந்தோம். இங்க வந்த பின்னாடியும் நான் உனக்குப் புருஷன் தான். உறவு மாறாதப்ப, அறையையும் மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல.
நீ, அப்பப்ப மேரேஜ் ஆனதையே மறந்துடுறனு நினைக்கிறேன். அதுனால தான் இந்த மாதிரி எல்லாம் பேசுற! முதல்ல இதுக்கு ஒரு வழி பண்ணணும். காலையில அதைப் பத்திப் பேசுவோம். இப்ப தூங்கலாம், என்ன? குட்நைட் பொண்டாட்டி!" என்றவன் இமைகளை மூடி உறங்குவதற்கு ஆயத்தமாக, கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள் மேகவி.
'இவன் நகர மாட்டான்!' என மூளை எடுத்துரைத்திட, அறையில் இருந்து வெளியேறுவதற்காக தனது தலையணையை எடுத்தாள்.
அடுத்தநொடி பாவையின் கரம் ஆடவனின் வலது கை பிடிக்குள் இருக்க, இடது கரத்தை மனைவியின் இடையில் கோர்த்து இழுத்து படுக்கையில் தன்னருகே படுக்க வைத்திருந்தான்.
"என்ன செய்யிற.?" என்று சத்தியின் பிடிக்குள் இருந்து அவள் விடுபட முயல, "ஒரு வாரத்துக்கும் மேல ஒன்னா டைம் ஸ்பென் பண்ணி இருக்கோம். என்மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வரலனா, நான் என்னதான் செய்யிறது? அப்படி உன்னை என்ன செஞ்சிடுவேன்னு இப்படி பயந்து ஓடுற பொண்டாட்டி? உன்னோட பார்வையில அந்த அளவுக்கா, நான் தப்பானவனா தெரியிறேன்? பேசுறது, உன் பக்கத்துல உட்காருறதைத் தவிர, இதுவரைக்கும் எல்லை மீறி நடந்திருக்கேனா?
உன்னோட விருப்பம் இல்லாம நெருங்கி வர மாட்டேன்னு உனக்குமே நல்லா தெரியும். அப்புறமும் ஏன்..? நீ நடந்துக்குற விதம், என்னோட கேரக்டரை இன்சல்ட் பண்ணுற மாதிரி இருக்கு!" என குரல் மெலிய வினவினான்.
அவனின் பேச்சுத் தொனி பாவையின் மனதை அலைக்கழிக்க அதனைச் சகிக்க இயலாதவள், "ஹேய்.. நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்கல!"
"அப்ப, என்ன தான் பிரச்சனை? ஏன் இப்படி ஓடுற.?"
"நீனு இல்ல, பொதுவாவே எனக்கு ஆம்பளைங்க மேல நம்பிக்கை இல்ல."
"எதுனால அப்படி?"
"ப்ச்ச்.." என்று பதில் உரைக்க மறுக்க, "சரி விடு! சொல்ல வேண்டாம். எப்ப உனக்கு என்கிட்ட இதைப் பத்திப் பேசலாம்னு தோணுதோ, அப்ப சொல்லு! இப்ப தூங்கு!"
"என்னை விடுறியா.?"
"விட்டா, ஓடிப் போயிடுவியே நீ!"
"இல்ல போகல. என்னைப் பிடிச்சிருக்கிறது அன்கம்ஃபர்டா ஃபீல் ஆகுது. தூங்க முடியல."
"ம்ம்.." என்றவன் மெல்ல தனது கரங்களை விலக்கிக் கொள்ள, உடலைத் திருப்பி வசதியாய் படுத்துக் கொண்டாள் மேகவி.
கணவனின் கைப்பட்ட மணிக்கட்டு பகுதியிலும் இடையிலும் ஒருவித அசௌகர்ய உணர்வு தோன்றியது. அவனின் பிடியில் சற்றும் தவறான எண்ணம் இல்லை. அதை அவளின் மனமும் உடலும் அறிந்தே இருந்தது. எனினும்..?
அந்த எனினுமிற்குப் பின்னால் இருந்த பருவகால காதல் தந்த வலியின் நீட்சி, இன்றைய வாழ்விலும் தொடர்வது தான் பெரும் சோகம்! அதில் இருந்து மீள இயலாமல் தவித்தாள் மேகவி.
தூங்க முயன்றாள். அயர்ச்சி இருந்தும், உறக்கம் வர மறுத்தது.
'என்னோட கேரக்டரை இன்சல்ட் பண்ணுற மாதிரி இருக்கு!' எனச் சற்று முன்னர் சத்தி உரைத்தது நினைவிற்கு வந்து, அவளின் உணர்வுகளை இம்சித்தது.
"நான்கூட அவ ரொம்ப திமிரானவ. நம்மக்கிட்ட எல்லாம் பழக மாட்டான்னு நினைச்சேன்டா. ஆனா.. போய் பேசுனதும், சிரிச்சுக்கிட்டே என்கூட வந்துட்டா! இப்ப எல்லாம், நான் என்ன சொன்னாலும் செய்யிறா தெரியுமா.? என்ன கேரக்டரோ? இதெல்லாம் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, எப்படி இருக்கும்?" என நண்பர்களிடம் தன்னைப் பற்றி உரைத்துச் சிரித்தவனின் சொற்கள் இன்று மீண்டும் செவியினில் கேட்க, தனது இயல்பைத் தொலைத்து எச்சில் விழுங்கியபடி சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
உறங்கத் துவங்கி சில நொடிகளே ஆனதால், மனைவியின் அசைவில் உடனேயே விழிப்பு தட்டிவிட்டது சத்திக்கு.
இமைகளைப் பிரித்தவன், எழுந்து விளக்கை ஒளிர விட்டான்.
"என்னாச்சு.?"
அவனது முகம் பார்ப்பதைத் தவிர்த்தவள், "ஒன்னும் இல்ல."
"தூங்க முடியலயா.?"
"ம்ம்.."
"நான் இங்க இருக்கிறது தான் பிரச்சனையோ?"
அவள் அமைதி காக்க, "சரி, நான் அந்த ரூம்லயே படுத்துக்கிறேன்! நீ, ரெஸ்ட் எடு!" என்றவன் அங்கிருந்து நகர,
"கீர்த்தி.."
சற்றே நிதானித்தவன், 'என்ன?' என்பது போல் பார்க்க, "நான் உன்னைத் தப்பா நினைக்கல சரியா?"
மெலிதாய் சிரித்த சத்தி, "என்ன திடீர்னு?"
"ஒருத்தரோட கேரக்டரை கொஸ்டின் பண்ணுறது எவ்வளவு வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ, அந்தத் தப்பை நான் செய்ய மாட்டேன்!"
"ம்ம்.." என மனைவியின் அருகே அமர்ந்தவன், "ஆனா, தப்பானவங்களும் இங்க இருக்காங்க தான செய்யிறாங்க.? அந்த மாதிரியான ஆட்களோட கேரக்டரை கொஸ்டின் பண்ணாம இருந்தா, அதுவே பெரிய தப்பாகிடும்!"
"அப்படியான ஆளுங்களோட எனக்கு டச் இல்லையே? பொதுவாவே அந்த மாதிரியானவங்களை, ஸ்டார்ட்டிங்லயே கட் பண்ணீடுவேன். நான் சொன்னது, என்னைச் சுத்தி இருக்கிறவங்களை மட்டும் தான்."
"ஓகே! வேற ஏதாவது சொல்லணுமா?"
"ம்ம்.. கேட்கணும்!"
"என்ன?"
"ஏன், நான் என்ன சொன்னாலும் விடாம ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்க..?"
அவளைப் பார்த்துச் சிரித்தவன், "இதுக்கான பதிலை, நம்ம ஃபர்ஸ்ட் நைட்லயே நான் சொல்லி இருந்தேன். மறந்துட்டியா? யோசி, ஞாபகத்துக்கு வரும்! சரி, இப்போதைக்கு உன்னை டிஸ்டப் பண்ணுறதுல விருப்பம் இல்ல எனக்கு. படு!" என்று உரைத்துவிட்டு தனக்கான படுக்கையோடு அறையில் இருந்து வெளியே சென்றான் சத்திய கீர்த்தி.
Author: Vishakini
Article Title: மையல் மீளுதே மேகவியே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மையல் மீளுதே மேகவியே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.