ஆழியே மெளனம் ஏனோ - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,579
6,562
113
மௌனம் – 12

ஆழினியும், வியன்செழியனும் ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது மணி பதினொன்றை நெருங்கிவிட்டது.

இருவரும் ஒருவித மோன நிலையில் வீட்டிற்கு திரும்பினர்.

இவர்களுக்காக சிந்துஜா உறங்காமல் காத்திருந்தாள். அவர்களின் கார் வரவும், வேகமாக அவர்களது வீட்டிலிருந்து ஓடி வந்தவள்,
" எங்கப் போயிருந்த செழியா? நைட் நேரம் கார்ல போகவும் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்துட்டேன். ஷாப்பிங் பண்ண தான் இந்த நேரத்துல போனீங்களா...." என்று படபடவென வினவினாள்.

“ஆமாம்கா! ஆழினிக்கு…” என்று வியன் செழியன் கூறும் போதே,

"ஆழி, உனக்கு எதுவும் வேணும்னா என்கிட்ட சொல்லியிருக்கலாமே. நானே கூட்டிட்டு போயிருப்பேன். நீ எதுக்கு தம்பியைத் தொந்தரவு பண்ற? அவனும் நாள் முழுக்க வேலை பார்த்துட்டு டயர்டா இருந்திருப்பான். நைட் தூங்காம உனக்காக ஷாப்பிங் வந்திருக்கான்! இது போல சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவனை டிஸ்டர்ப் பண்ணாதே." என்றாள் சிந்துஜா.

"அது வந்து அண்ணி..." என்று ஆழினி ஏதோ கூற வர.

" ஆழினிக்கு பங்ஷனுக்கு ட்ரெஸ் எடுக்கணும்னு உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே அக்கா. நீ தான் கூட்டிட்டு போகல. சரி நீ பிஸியா இருக்கப் போல. அதான் நானே கூட்டிட்டு போயிட்டேன்.”என்றான்.

தம்பியின் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்த சிந்துஜா அமைதியாகி விட்டாள்.

"இதைக் கேட்கவா இவ்வளவு நேரமா முழிச்சிட்டு இருந்த? நீ போய் தூங்கு அக்கா. நாளைக்கு காலையில தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பணும். சீக்கிரம் எழுந்திருக்கணும்.” என்றான்.

ஆழினிக்கோ மனதிற்குள் ஒரு வலி வந்துப் போனது. ‘ எனக்காக முத தடவை அவங்களா வந்து வெளியே கூட்டிட்டு போனாங்க. அது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்புக் கிடையாதே.’ என்று எண்ணி மறுகினாள்.

அவளைத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வியன்செழியன்.

‘எதுக்கு இவ முகம் அடிக்கடி மாறுது.’ என்று யோசித்தவனது, பார்வை காரில் நடந்ததை நினைத்துப் பார்த்தது.

இப்பொழுதும் அவளது மென்மையான விரல்கள், அவனது உதட்டில் குறுகுறுப்பது போல் இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஆழினி அவனைப் பார்க்க.

அவனோ ஆளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையைச் சந்திக்கவே தயங்கினாள். அவனுடன் தனியாக இருக்க பயந்தவளோ,

"நான் அத்தைகிட்ட எல்லாத்தையும் காட்டிட்டு வந்துட்டு வரேன்..." என்று கூறினாள்.

அவளை கிண்டலாக பார்த்தவன், எதுவும் பேசாமல் கையில் இருந்த கடிகாரத்தைக் காட்டினான்.

இந்நேரம் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்பது புரிய நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

வியன் செழியன் இவர்களுக்காக கதவைத் திறந்து காத்திருந்த வேலையாளிடம்,

"சாரி... கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. இதெல்லாம் ரூம்ல மட்டும் வெச்சிடுங்க. காலையில கொஞ்சம் லேட்டா கூட நீங்க எழுந்திருங்க. அம்மாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்," என்று கூறினான்.

ஆழினியோ பதற்றமாகவே நின்றிருந்தாள்.

என்னமோ, இன்றுதான் அவர்களுக்குத் திருமணமானது போல அவள் படபடப்புடன் இருந்தாள்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன், அவள் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றான்.

"என் பேச்சு பிடிக்கலைன்னா நீ ஸ்டாப் பண்ணலாம்‌. விரலை வச்சு வாயை மூடக்கூடாது. இப்படி செய்யணும்." என்று கூறியவன், அவள் இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான்.

அதன்பிறகு, இருவரும் இந்த உலகத்தையே மறந்தனர்.
************

காலையில் கண் விழித்தபோது, எப்போதும் போல அவன் அணைப்பில்தான் இருந்தாள் ஆழினி.

ஆனால், இன்று ஏதோ புதிதாக உணர்ந்தாள். அவனிடமிருந்து விலக மனம் வரவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு அழுதுக் கொண்டே, "எனக்கு விவாகரத்து வேண்டும்..." என்று நின்றவள், இன்று அவனது அணைப்பில் உலகத்தையே மறந்தாள்.

லேசாக செழியன் அசையவும், வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

குளித்து விட்டு வந்தவளுக்கு உலகமே புதிதாகவும், அழகாகவும் தோன்றியது.

உற்சாகத்துடன் இருந்தவள், அதே உற்சாகத்தோடு அவன் வாங்கிக் கொடுத்த லெஹங்காவை மிகுந்த கர்மசிரத்தையுடன் தைத்தாள்.

எப்படியாவது அவனிடம் இருந்து ஒரு பாராட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், சுறுசுறுப்பாக வேலை செய்து மறுநாளே தைத்து முடித்துவிட்டாள்.

அதை அணிந்து அவனிடம் காட்டியவளைப் பார்த்தவன் உண்மையிலேயே திகைத்துப் போனான். அவ்வளவு நேர்த்தியாகவும், அவளுக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது அந்த லெஹங்கா.

"வாவ்!" என்று அவன் வாய்விட்டுப் பாராட்டினான்.

அந்த ஒரு வார்த்தையே அவளது முகத்தில் வெட்கப் புன்னகையை மலரச் செய்தது.

ஆனால் அடுத்ததாக அவன் சொன்ன வார்த்தைகள் அவளை மீண்டும் அவளது கூட்டிற்குள் சுருங்க வைத்தது.

"இவ்வளவு திறமையை வைத்துக்கிட்டு ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்கிற ஆழினி? நம்ம கம்பெனிக்கு வா."

"இல்லை... நான் வரலை," என்று அவள் வேகமாக மறுத்தாள்.

"உனக்குத் திறமை இல்லன்னா பரவாயில்லை. ஆனால் உனக்குத் திறமையும் இருக்கு, ஆர்வமும் இருக்கு. அப்புறம் ஏன்?"

"உங்க கம்பெனிக்கு வர்றதுக்கு எனக்குத் தகுதி இல்லை."

அவள் சொன்ன பதிலைக் கேட்டு அவன் புருவம் சுருக்கினான்.

"நான் தகுதி பார்த்து வேலை கொடுக்கிறவன்னு நினைக்கிறியா? தகுதி மட்டும் பார்த்திருந்தா உன்னையே நான் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்." என்று விஷ கங்குகளாக வார்த்தைகளை விட்டான்.

ஆழினியோ கசப்பாகச் சிரித்தாள்.
"நீங்க எப்படி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். உங்க சூழ்நிலை. வேற வழி இல்லாமல் என் கழுத்துல தாலி கட்டினீங்க.”என்றுக் கூற.

வியன்செழியனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.

“ நீ மட்டும் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்ட. நன்றி கடனை அடைக்கத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட.” என்று வினவினான்.

அந்த வார்த்தை அவளை காயப்படுத்தியது.

கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் ஒரு நொடி அமைதியாக நின்றவன், பிறகு தலையை உலுக்கிக் கொண்டு,

"இந்த பார்வையெல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. உன்னால கம்பெனிக்கு வர முடியுமா, முடியாதா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு."

"முடியாது..."

"முடியாது..."

"முடியவே முடியாது."

அவளது உறுதியான பதில் அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்த, “இன்னும் உனக்கு நன்றிக்கடன் இருந்ததுனா நீ நம்ம கம்பெனிக்கு வந்து தான் ஆகணும். இந்த பங்ஷன் முடியுற வரைக்கும் தான் உனக்கு டைம்.” என்று சொல்லி விட்டு கீழே சென்றான்.

ஆழினியோ உடைந்து அழுதாள். ‘ கடவுளே! இன்னும் எத்தனை நாளைக்கு நன்றிக்கடனுக்காக, நன்றிக்கடனுக்காக என்ற வார்த்தைகளைக் கேட்டுட்டே இருக்கணும். நான் என்ன பாவம் செய்தேன். பெற்றோர் இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தது என் தப்பா? நல்லா படிச்சது என் தப்பா? ஸ்பான்ஸர் கிடைச்சது தப்பா? அந்த ஸ்பான்ஸர் யாருன்னு மதர் ரிவீல் பண்ணது தப்பா? நான் சாகுற வரைக்கும் இந்த வார்த்தை என்னைத் தொடர்ந்துக் கொண்டே வருமா?’ என்று எண்ணியவள் அப்படியே சோர்ந்து படுத்துக் கொண்டாள்.

கீழே வந்தவனை, அந்த நேரம் அங்கே வந்திருந்த சிந்துஜா,
"என்னடா? என்ன ஆச்சு? உனக்கும், ஆழிக்கும் சண்டையா? அதுக்கு இப்படியா கத்துவ? கீழே வரைக்கும் சத்தம் கேட்குது." என்றாள்.

"ஒண்ணும் இல்லக்கா. அவளுக்கு ஃபேஷன் டிசைனிங்ல திறமை இருக்கு. கம்பெனிக்கு வான்னு சொன்னா வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா," என்று மனைவியைப் பற்றிப் புகார் வாசித்தான்.

சிந்துஜா மெதுவாகச் சிரித்தாள்.

"ஓ! இது தானா? நான் என்னவோ, ஏதோன்னு பயந்துட்டேன். விடுடா. சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டப்பட்டிருக்கா. இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறா. மறுபடியும் அவளை எதுக்காகவும் கட்டாயப்படுத்தாத. அவளுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்ச நாள் இருக்கட்டும்."

அவள் சொன்னதைக் கேட்டவன் அமைதியாக,

"ம்..." என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

ஆனால் அவன் மனம் மட்டும் அமைதியாக இல்லை.

'பாவம்... சின்ன வயசுல இருந்தே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா! நான் கோபப்படாமல், கொஞ்சம் பொறுமையா சொல்லியிருக்கணும்...' என்று தன்னையே குற்றம் கூறிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் மனைவியைத் தேடி மேலே சென்றான்.

கண்களை மூடிக்கொண்டு மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள்.

அவளது போனில்,
“உதிர்வது பூக்களா?
மனது வளர்த்த சோலையிலே
காதல் பூக்கள்
உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்!”

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் இடைவிடாமல் வழிந்தது. அதை பார்த்தவனின் மனமும் வலித்தது.

'இதற்காகத்தான் நான் ஐந்து வருடமாக ஒதுங்கி, ஒதுங்கி போனேன். உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைத்தேன். ஆனா, இன்னைக்கு நானே உன்னை காயப்படுத்திட்டேன்.

உன்னை ஒரு பொக்கிஷம் மாதிரி என் வாழ்க்கையில் வைத்துப் பாதுகாக்கணும்னு எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, உனக்கு ஏன்டி என்னைப் பிடிக்காமல் போனது. நீ மட்டும் என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லியிருந்தா இன்னைக்கு நம்ம வாழ்க்கை இப்படி ஒட்டியும், ஒட்டாமலும் இருந்திருக்காது.

நீ என்னைத் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சுட்ட. பிடிச்ச வாழ்க்கை தான் கிடைக்கல. சரி, கிடைத்த வாழ்க்கையையாவது வாழலாம்னு நினைத்தா, அதுலயும் ஏமாற்றம்தான்.

ஆனா அந்த சூழ்நிலையால மட்டும் கல்யாணம் பண்ணிக்கல. பொண்ணு நீ என்கிறதால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா நீ நாங்க செஞ்ச உதவிக்காக நன்றிக்கடனா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்ன்னு சொன்னதை கேட்டதும் கோபம் வந்துச்சு. அந்த வார்த்தையை நான் மறுபடியும் கேட்கக் கூடாதுன்னுதான் இத்தனை நாளும் உன்னைவிட்டு ஒதுங்கி இருந்தேன்.

ஆனா, இன்னைக்கு நானே எல்லாத்தையும் சொல்லி உன்னைக் கலங்க வச்சுட்டேன்...'
என்று எண்ணியவன், கண்ணீரில் நனைந்திருந்த அவளது முகத்தைப் பார்த்து, தன் கண்களையும் இறுக மூடிக் கொண்டான்.

கதவோரத்தில் நின்றவனின் இதயம் கனத்தது. அவளை இப்படிப் பார்க்க அவனால் முடியவில்லை.
 

Author: Vishakini
Article Title: ஆழியே மெளனம் ஏனோ - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.