உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 3
அலைபேசி சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்க கொஞ்சமும் அதை சட்டை செய்யாமல் கைகள் இரண்டையும் கட்டி தலைக்கு கீழ் வைத்து வெறும் தரையில் படுத்திருந்தான் அதிரன்.
மணி இரவு ஒன்பது. இரண்டு படுக்கை அறை கொண்ட விசாலமான தனி வீடு. அதிரன் மட்டும் அங்கே தனியாய் நடு ஹாலில் படுத்திருந்தவன் கண்கள் மட்டும் இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
எல்லாம் வெறுத்து போன மனநிலை தான் அவனுடையது. இறுதிக்கும் இறுதி முயற்சி தான் அவன் இப்பொழுது மேற்கொண்டு இருப்பதும் கூட.
உலகை வெறுக்க செய்யும் அத்தனையும் கடந்து தனக்கென ஒரு முடிவை எடுத்து இதோ இவ்வளவு தூரம் தனியே வந்து தனக்கென மட்டுமே அவன் பயணமெல்லாம்.
வார்த்தையில் சொல்லிவிட முடியாது அவனின் கவலையை எல்லாம். கேட்பவர்களுக்கும் அவ்வளவு தானா என்றிருந்தால்... ஆம் அவ்வளவு தான். அனைவரின் கவலையும் மற்றவர்களுக்கு அவ்வளவு தான் என்ற அளவு தானே!.
தாமஸுடன் சுற்றிப் பார்த்து சாப்பிட்டுவிட்டு அவனை அவன் அறை முன்பே கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து படுத்தவன் தான்.. இதோ அவனுக்கென்று அழைப்புகள் வந்து கொண்டே இருந்த போதும் எதையும் ஏற்கும் மனநிலை இன்றி படுத்திருந்தான்.
காலையில் இருந்து இவ்வளவு நேரமும் தன்னை அத்தனை வேலைகளுக்கு நடுவே பிஸியாய் வைத்துக் கொண்டவன் இப்பொழுது அப்படி எதுவுமின்றி அமைதியாய் இருந்தான்.
மீண்டும் சில நிமிட இடைவெளியில் அலைபேசி சத்தம் கேட்க, பொறுமை பறந்து எடுத்த போது அது அவன் நண்பனின் அழைப்பு.
சட்டென்று எழுந்து அமர்ந்தவன் உடனே அழைப்பை ஏற்று காதில் வைக்க,
"என்ன டா புது இடம் புது ஊர்.. எல்லாம் எப்படி இருக்கு? செட் ஆகிட்டியா?" என்றான் நண்பன்.
"ஹ்ம் ஆகிட்டே இருக்கு!" என்றவன் அங்கிருந்தே ஹாலை ஒருமுறை அப்பொழுது தான் சுற்றிலும் பார்த்தான்.
"நீ சொல்லு! என்னாச்சு? எதாவது இம்ப்ரூவ்மென்ட்?" அதிரன் கேட்க,
"ஹ்ம்! வரும். உடனே கேட்டா எப்படி?" என்ற நண்பன்,
"இப்போ நீ என்ன பண்றனு கேட்க தான் கூப்பிட்டேன். தனியா என்ன பன்றியோனு ஒரு தாட்!" என்றும் சொல்ல,
"இருக்கேன் டா. இருக்கணுமே. உன்னை நம்பி தான் இருக்கேனே! எல்லாம் ஓகே தானே?" என்றவன் மனம் துடித்தது அந்த கேள்வியில்.
"எதுவும் இல்லை டா. பாசிட்டிவ் நெகடிவ்... எதுவுமே இல்ல. இப்ப தானே வந்திருக்க...!" என்ற நண்பனுக்கும் அவன் நிலை புரிய தான் செய்தது.
"ஹ்ம்ம்!" என்றவன் வாடிய குரலில்,
"சியரப் டா அதி! எவ்வளவோ பார்த்தாச்சு தானே! நம்புவோம்!" என்றான் நண்பன்.
அதே நேரம் அலைபேசியில் இன்னொரு அழைப்பு வருவதற்கான சத்தம் கேட்கவும் காதில் இருந்து எடுத்துப் பார்த்தான்.
'ஹரிச்சந்திரன்!' என்ற பெயரில் அழைப்பு வர, அதை வெறித்தவன், நண்பனின் அழைப்பில் அவனிடம் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தான்.
மீண்டும் மனம் கனமாய் உணர, எதுவும் செய்ய வேலையும் இல்லை என்பதில் இன்னும் அயர்வுடன் சோர்வாய் உணர்ந்தான் அதிரன்.
தூக்கமே இல்லை கொஞ்சமும். நன்றாய் கண்கள் சிவந்த பின் ஒரு தூக்கம். கண் விழித்து மணியைப் பார்த்தால் தூங்கி அரை மணி நேரம் தான் ஆகி இருந்தது.
இப்படியே இரவை தள்ளியவன் காலையில் அசந்து உறங்கி இருக்க, கண் விழிக்கும் பொழுது மணி எட்டை நெருங்கி இருந்தது.
எழுந்து குளித்து கிளம்பி என அலுவலகம் வரும் பொழுது மணி ஒன்பதுக்கு மேல்.
காலையில் இரவை போல இப்படி செய்ய எதுவும் இல்லாமல் சோம்பேறியாய் இருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனதில் அத்தனை நிம்மதி அவனுக்கு.
ஒவ்வொருவராய் வந்து சேர்ந்து அவரவர் இருப்பிடம் நிறைந்து என வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாகி இருக்க, அதிரனின் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்து காலை வாழ்த்தை தெரிவித்தான் தாமஸ்.
"ஹப்பி மார்னிங் தாமஸ். எனக்கு ஒரு ஹெல்ப்!" என்று சொல்லவும்,
"சொல்லுங்க சார்!" என உடனே செய்ய தயாராய் இருந்தான் தாமஸ்ஸும்.
"மார்னிங் ஒரு நேரம் மட்டும் சமையல் பண்ற மாதிரி ஒரு மெய்ட் பார்க்க முடியுமா?" என்றான்.
"உங்களுக்கா சார்?" தாமஸ் கேட்க,
"இல்ல என் பாட்டிக்கு!" என்றான் அதிரனும் சிரிக்காமல்.
தாமஸ் விழிக்க, "மார்னிங் எட்டு மணிக்கு தான் எழுந்தேனே டா. பசி உயிரையே இழுக்குற மாதிரி இருக்கு. எந்திச்சதும் சாப்பிடலைனா என்ன ஆவேனோ? டெய்லி எல்லாம் இப்படி இருக்க முடியாது!" என்றான் அதிரன்.
"அவ்வ்ளோ பெரிய சாப்பாட்டு ராமன் எல்லாம் இல்லை தான். மதியம் சாப்பிடாம கூட மேனேஜ் பண்ணிடலாம். ஆனா நைட்டு சாப்பிட்ட அப்புறம் மார்னிங் தான் சாப்பிடுறோமே! அதுவும் லேட்டாச்சுனா தேவையில்லாத கோபம் டென்ஷன்னு நாளே வேஸ்ட் ஆகிடுது!" என்றும் விரிவாய் கூறினான் அவனே.
"ஆள் பார்க்கணும்னா உடனே கிடைக்கணுமே சார். நான் வேனா கேட்டு பாக்குறேன்!" என்றவன் இன்னும் என்னவோ யோசிக்க,
"ஏதாச்சும் பண்ணுடா. முடிஞ்சவரை சீக்கிரமா!" என்றும் சேர்த்து சொல்ல,
"ஓகே சார்!" என்றவன் அன்றைய வேலைகள் குறித்து பேசி அந்த அறையில் இருந்து கிளம்பும் நேரம்,
"சார்! இன்னும் நீங்க சாப்பிடலையா?" என்றான் நியாபகம் வந்தவனாய்.
"இதோ! கிளம்பிட்டேன்!. நீ வராம இருந்திருந்தா கொஞ்சம் முன்னவே கிளம்பி இருப்பேன்!" என்று சொல்லி கார் சாவியுடன் எழ,
"சாரி சாரி சார்!" என்றான் வேகமாய்.
"டேய்! போ டா!" என அவனுக்கு முன் அறையில் இருந்து வெளி வந்தவன்,
"ஜஸ்ட் ஹால்ப் அன் ஹவர்ல வந்துடுறேன். பார்த்துக்கோ!" என்று தாமஸிடம் சொல்லியபடி திரும்பி அங்கே வேலை செய்பவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் அங்கிருந்து கிளம்பி இருந்தான் அதிரன்.
"என்னவாம்? போறவரை இப்படி பார்த்துட்டு நிக்கிறீங்க?" என தாமஸ் பின்வந்து நின்றாள் அஞ்சனா.
"இவரை என்னனு புரிஞ்சிக்க? ஒரு டைப்பான ஆளா இருக்கார். அங்க இருந்து இப்படி தனியா வந்து இருந்து கஷ்டப்படுறாரோனு தோணுது. இவங்க அம்மா அப்பாலாம் என்ன பன்றாங்க இவரை இப்படி தனியா விட்டுட்டு?" என தனக்கு தோன்றிய கேள்விகளை எல்லாம் அவன் அஞ்சனாவிடம் கேட்க,
"கேட்ட கொஸ்டின்க்கு டூ மார்க்ல அன்ஸர் சொல்லுவீங்கன்னு பார்த்தா ஃபைவ் மார்க் கொஸ்டின்ல திருப்பி என்கிட்ட கேட்குறீங்க?" என்றாள் கிண்டலாய் சிரித்து.
"நீ வேற! நேத்து அவர் கூப்பிட்டாரேன்னு..." என கதையாய் சொல்ல வந்த தாமஸ் பின் தன் தலையில் தானே தட்டிக் கொண்டு,
"பசிக்குது சாப்பிட்டு வர்றேன் அதுவரை பார்த்துக்கோன்னு அந்த மனுஷன் என்கிட்ட நம்பி பொறுப்பை ஒப்படைச்சுட்டு போனா உன்கிட்ட கதை பேசிட்டு நிக்குறேன் பாரு நான். சாப்பிடும் போது பேசலாம் அஞ்சனா. போய் வேலையை பாரு!" என்றான் அவளிடமும்.
"நானும் ஒன்னும் கதை கேட்க வரலை ண்ணா. எனக்கு ப்ரோடக்ஷன்ல கொஞ்சம் டவுட் இருக்கு. அதை கேட்க தான் வந்தேன். இப்ப பாக்குறீங்களா?" என்றாள் அஞ்சனா.
"ஓகே டா. நானும் நேத்தே அந்த குவாலிட்டி என்னனு பார்க்க நினைச்சேன்!" என்றவன் அவளுடன் அதைப் பற்றி பேசியபடி அங்கே நகர்ந்தான்.
மதியம் வரை அத்தனை வேகமாய் நகர்ந்தது நேரமும். கொஞ்சமும் நிற்க நேரமில்லை. இந்த வார இறுதியின் ஏற்றுமதியை முடிக்க வேண்டிய கட்டாயம்.
அங்கிருந்த ஒவ்வொரு குழுவின் தலைமை உறுப்பினரான தாமஸ், அஞ்சனா, கிரிதரன், சந்திரன் என நான்கு பேருக்கும் அத்தனை பெரிய பொறுப்பு அது.
அத்தனை பேரும் மதிய உணவை முடித்துக் கொண்டு வேலையைத் தொடர, அஞ்சனாவும் தாமஸும் மூன்று மணிக்கும் சாப்பிட செல்லவில்லை.
மூன்று மணிக்கு தான் அஞ்சனா வந்து அழைக்க, "நீயும் இன்னுமா சாப்பிடாம இருக்க. உன் அண்ணனுக்கு தெரிஞ்சா நான் தொலைஞ்சேன். போ வர்றேன்!" என்றவன் சொல்லி அவள் சென்ற ஐந்து நிமிடங்களில் செல்ல, இன்னும் தனக்காக சாப்பிடாமல் தான் அமர்ந்திருந்தாள் அஞ்சனா.
"நீ இருக்கியே!" என்று சொல்லி தான் மதிய உணவை திறந்தவனுக்கு அதிரனின் நியாபகம்.
"ப்ச்!" என்றவனுக்கு உடனே சாப்பிட மனம் வரவில்லை.
அதிரன் ஒரு துணையை எதிர்பார்க்கிறான் என புரிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது சாப்பிட்டானா இல்லையா என்றும் தோன்ற,
"நீ சாப்பிடு அஞ்சனா. நான் சாரை பார்த்துட்டு வர்றேன்!" என உடனே உணவை முடிவிட்டான்.
"பார்த்திங்களா? என் பிரண்ட்ஷிப்பை கட் பண்றீங்க!" என அஞ்சனா முறைக்க,
"ஹே! அப்படிலாம் இல்லை டா. ஓகே! நான் நைட் வீட்டுக்கு வந்து பேசுறேன். இப்ப சாரை பார்த்துட்டு வர்றேன். நீ சாப்பிடு!" என கெஞ்சலாய் அவன் பார்க்க,
"சும்மா தான் சொன்னேன். ஏன் டென்ஷன் ஆகுறீங்க?" என்று சிரித்தவள் தலையை பிடித்து ஆட்டிவிட்டு சென்றான் அவன்.
அதிரன் கதவை தட்டவும் அவன் வர சொல்ல, "சாப்பிட்டிங்களா சார்?" என்று வந்தவனைக் கண்டு,
"பார்டா! என்ன ஒரு அக்கறை நாலு மணிக்கு?" என்று கிண்டலாய் கேட்டான் அதிரன்.
"இல்ல இல்ல சார்! நான் இப்ப தான் சாப்பிட போனேன். உங்களுக்கு நியாபகம் வந்துச்சு. அதான் கேட்டேன்!" தாமஸ் சொல்ல,
"இவ்வளவு நேரமும் என்ன டா பண்ணின?" என்று கோபம் கொண்டவன்,
"நான் மார்னிங் லேட்டா தானே சாப்பிட்டேன். ஈவ்னிங் போய் பார்த்துப்பேன். இன்னும் டூ ஹவர் தான். நீ போய் சாப்பிட்டு வேலையை பாரு. அண்ட் இனிமேல் இவ்ளோ நேரம் சாப்பிடாம யாரும் வேலை பார்க்க கூடாது ரைட்?" என்றும் அவன் சொல்ல, அதை காதில் வாங்கினாலும்,
"சார்! நீங்க தப்பா நினைச்சுக்கலைனா வாங்களேன். ஷேர் பண்ணிக்கலாம்?" என்று அழைத்தான் தாமஸ்.
"என்ன டா ஷாக் மேல ஷாக்கா குடுக்குற? அவ்ளோ பாவமாவா இருக்கு என்னை பார்த்தா?" என்று சிரித்துவிட்டான் அதிரன்.
"சார்!" என்றவனுக்கு தன் உணவை கொடுக்கவா சாப்பிடுவானா என்று ஒரு எண்ணம். கூடவே அவன்மேல் சின்னதாய் ஒரு நட்புணர்வும் என தயக்கமாய் தான் கேட்டு வைத்தான்.
"ஓகே போலாம் வா. நீயே கேட்குறீயே!" என உடனே ஏற்றுக் கொண்டவனை ஓரளவு கணிப்பில் கொண்டு வந்தான் தாமஸ்.
"இந்த அண்ணாவை.. பசி உயிர் போகுது.." என அஞ்சனா சாப்பிடாமல் அவனுக்காக காத்திருக்க, அவன் அதிரனையும் அழைத்து வந்ததில் அதிர்ந்து விழித்தாள்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.