உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 7
"அண்ணாவை எல்லாம் நம்பாதீங்க சார்! அவங்க வீட்டில எப்பவோ பொண்ணு பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அவர் தான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கார்!" என்று அஞ்சனா அதிரனிடம் சொல்ல,
"அப்படியா தாமஸ்? சொல்லவே இல்ல?" என்றான் ஆச்சர்யமாய் அதிரன்.
"அஞ்சனா!" என அவளை முறைத்த தாமஸ்,
"அதெல்லாம் எதுவுமில்லை சார். இவளுக்கு நேரம் போகலைனு என்னை கோர்த்து விடுறா!" என்றான் தாமஸ்.
நேரம் மதியம் இரண்டை தாண்டி இருந்தது. தாமஸ் உடனே அதிரனும் சாப்பிட பழகி இருக்க, அஞ்சனாவிற்கு எப்போதும் தாமஸ் உடன்தான் உணவு நேரம் என்பதால் மூவருமே நன்றாய் பேசி என அந்த நேரம் இலகுவாய் தான் செல்லும்.
இப்பொழுதும் அப்படி தான் சென்றுகொண்டிருந்தது.
"பொய் சொல்றாங்க பொய் சொல்றாங்க. போன சன்டே தான் இவங்க அம்மாகிட்ட போன்ல பேசினேனே. எனக்கே அவங்க சொல்லி தான் தெரியும். நமக்கெல்லாம் சொல்லவே இல்லை பாருங்களேன்!" என்று அஞ்சனா இன்னும் தொடர,
"அஞ்சனா! அது சும்மா அவங்க வேலை இல்லாம பார்த்து வச்ச வேலை. வேண்டாம்னு நான் அம்மாகிட்ட சொல்லியும் ஒரு வாரமாச்சு!" என்றான் முறைத்த தாமஸ்.
"ஏன் டா? கல்யாணம் தானே பண்ணிக்க வேண்டியது தானே?" அதிரன் கேட்க,
"சார்! நீங்க வேற! அக்காக்கு மேரேஜ் முடிஞ்சே ரெண்டு மாசம் தான் ஆகுது. அதுக்கே மூச்சு முட்டி போச்சு. இன்னும் ரெண்டு தங்கச்சிங்க இருகாங்க. அவங்களுக்கு தான் அடுத்தடுத்து பண்ணனும் சார். இப்ப போய் எனக்கு பேசிட்டு இருக்காங்க!" என்றான் தாமஸ்.
"உங்களுக்கும் வயசு போகுதே! அதனால அம்மா பார்த்திருப்பாங்க. எப்படியும் அவங்களுக்கு அடுத்து பண்ணனும் தானே உங்களுக்கு? அதுக்கு முன்னாடியே பண்றதுல என்ன வந்திட போகுது?" அஞ்சனா கேட்க,
"வித்தியாசம் இருக்கு அஞ்சனா. மேரேஜ்னு ஆகிட்டா நான் என்னோட வைஃப்னு அது ஒரு தனி குடும்பமா ஆகிடும். தனியா போனா தான் தனிக் குடித்தனம்னு இல்ல. மேரேஜ் ஆனாலே அது ஒரு தனி ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கு. அதுக்கப்புறம் தங்கச்சிங்க கல்யாணத்துக்கு சேர்த்து வைக்குறது எல்லாம் என்னோட விருப்பம் மட்டும் எடுபடாது. வர்ற பொண்ணும் சம்மதிக்கணும். எல்லாருக்கும் அவங்கவங்க விருப்பம் வெறுப்புன்னு இருக்கும்" என்றவன் பேச்சில் அஞ்சனா விழிகள் விரித்து கேட்க, அதிரன் தாமஸ்ஸின் இந்த முதிர்ந்த எண்ணத்தில் கொஞ்சம் வியப்பும் புன்னகையுமாய் பார்த்திருந்தான்.
"அதனால என்ன சொல்ல வர்றேன்னா.. முதல்ல தங்கச்சிங்களை நல்லபடியா கல்யாணம் பண்ணி குடுத்துட்டா அடுத்து வர போற பொண்ணை நல்லா பார்த்துக்கலாம் இல்ல? அது தான் விஷயம்!" என்றவனுக்கே பெருமூச்சு வந்தது நீளமாய் பேசியதில்.
"இவ்வளவு யோசிக்கணுமா ஒரு கல்யாணம் பண்ணிக்க?" என அஞ்சனா வியப்பை காட்ட,
"அப்புறம்! ஆமா உன் அண்ணா எப்படி? உனக்கு அப்புறம் தானே கல்யாணம் பண்ணிப்பாங்க?" தாமஸ் கேட்க,
"அண்ணாக்கு தான் ஃபர்ஸ்ட் பார்க்கணும். வர போற அண்ணியோட கொஞ்ச நாள் டைம் ஸ்பென்ட் பண்ணனும். அப்புறம் அவங்க குழந்தையோட ஜாலியா இருக்கணும்னு நான் தான் அம்மாகிட்ட சொல்லிட்டே இருப்பேன். அப்போ எல்லாம் அண்ணா எனக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுவாங்க. நான் முடியாதுன்னு சொல்லுவேன். இப்ப தான் புரியுது ஏன்னு!" என்றாள் அஞ்சனாவும்.
சில நிமிடங்களில், "ஆமா அப்போ நீங்க சார்? உங்க வீட்டுல எத்தனை பசங்க?" என அஞ்சனா தன் போக்கில் அதிரனிடம் கேட்டுவிட, அதை கேட்டதையே அதிரன் எதிர்பார்க்கவில்லை என்றால் கூடவே அவள் கேட்பாள் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
சில நொடிகள் தடுமாறி தான் விழித்தான் அவள் கேள்வியில்.
"ஆல்ரெடி உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுருப்பாங்கல்ல? நீங்க இங்க தனியா இருக்கீங்களே! துணை வேணும்னு எப்படியும் பார்க்க ஆரம்பிச்சு இருப்பாங்கல்ல?" என்று அஞ்சனா அவள் போக்கில் அதிரனிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதிரன் அமைதியாய் இருக்க, தாமஸ் தான் 'இப்படி பேசுபவள் இல்லையே அஞ்சனா!' என்பதாய் அவளைக் கண்டான்.
இந்த நேரம் தான் ஹரிச்சந்திரன் வந்ததும் அஞ்சனா அதிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததுமே.
"இவளா?" என்று அவ்வளவு அதிர்வு ஹரிச்சந்திரனுக்கு. அந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டி அவர் அப்படியே நின்றுவிட, தாமஸ் தான் அவரை முதலில் கண்டான்.
'யாரிது?' என புருவங்களை சுருங்கக் கண்டவன்,
"சார்! யாரோ வந்திருக்காங்க!" என்றான் அதிரனிடம்.
அஞ்சனா கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த அதிரன் சாதாரணமாய் தான் திரும்பினான் தாமஸ் சொன்னதும்.
அங்கே நிச்சயம் அவனும் தந்தையை எதிர்பார்க்கவில்லை. தேடி வருவார் என தெரியும் தான். இப்படி இந்த நேரத்தில். அதுவும் அஞ்சனாவைக் கண்டு அவர் நின்றிருப்பதும் புரிந்தது.
"உங்களை பார்க்கவா? எதுவும் டீலர்ஸ்ஸா?" தாமஸ் கேட்க,
"ஹ்ம்!" என்று தாமஸ்ஸை முறைத்துப் பார்த்த அதிரன்,
"அப்பா!" என்றான்.
"அப்பாவா?" என்று தாமஸ்ஸும் பார்க்க, அஞ்சனாவும் இவர்களை தான் மூவரையுமாய் மாறி மாறிப் பார்த்தாள்.
"சாப்பிடுங்க!" என்று சொல்லி அதிரனும் சாப்பாட்டில் கவனம் வைக்க, அடுத்த வாய் உணவு இறங்கவில்லை தாமஸ்ஸிற்கு.
தந்தையை சென்று அழைக்கவில்லை அதிரன். அவரும் அதற்குமேல் அங்கே நெருங்காமல் இருக்க, அவன் பார்த்தபடி இருந்தான்.
அஞ்சனா சாப்பிட்டு முடிக்கும் நிலையில் இருக்க, "டேய்! சாப்பிடுன்னு சொன்னேன்!" என்றான் அதிரன் மீண்டும் தாமஸ்ஸிடம்.
தாமஸ் முடிக்கும் வரை அஞ்சனாவும் அங்கே இருக்க, அதிரன் அதன்பின் தான் வேண்டுமென்றே அத்தனை மெதுவாய் உண்பதாய் தோன்றியது உடன் இருந்த இருவருக்கும்.
"போலாம்!" தாமஸ் அஞ்சனாவிடம் வாயசைக்க, அவளும் தலையாட்டி எழுந்து கொண்டாள்.
"நாங்க கிளம்புறோம் சார்!" தாமஸ் சொல்ல,
"நீ தான் அவரை வர சொன்ன. பேசல?" அதிரன் அவனிடம் பேச்சை வளர்க்க, மலங்க விழித்தான் அவன்.
மகன் தன்னிடம் வருவான் என ஹரிச்சந்திரனும் அங்கேயே நின்றார் என்றாலும் பார்வை எல்லாம் இன்னும் அதிர்ச்சி மீளாமல் மகனிடமும் அவன்முன் சாதாரணமாய் நின்ற பெண்ணிடமும் தான்.
'இது எப்படி சாத்தியம்?' என மீண்டும் மீண்டும் அந்த பெண் தானா என்று வேறு அவர் கூர்ந்து பார்க்க, கவனித்தா அதிரனும் அவர்களை அனுப்ப நினைக்கவில்லை.
"சார்! அப்பாவை போய் பாருங்களேன். நாங்க அப்புறம் பேசுறோம்!" நல்லபிள்ளையாய் மெதுவாய் தாமஸ் கூறினான். நீண்ட நேரமாய் அதிரன் அவரை காத்திருக்க வைப்பதாய் தோன்றியது அவனுக்கு.
'அதானே! என்ன இவன்?' என்று தான் அஞ்சனா பார்வையும் இருந்தது.
"நான் வர சொல்லலையே!" என்ற அதிரணை பதட்டமாய் தாமஸ் பார்க்க,
"விட்டா அழுதுடுவ போலயே!" என்று சிரித்தான் அதிரன்.
"சார்! கோச்சுட்டு வந்துட்டிங்களா? அதான் சமாதானம் பண்ண வந்திருக்காங்களா?" அஞ்சனா கேட்டுவிட,
"அஞ்சனா!" என பார்வையால் மிரட்டினான் தாமஸ்.
"சமாதானமா? சம்மந்தம் பேச கூட வருவாங்க!" என்ற அதிரன் சொல் சுத்தமாய் புரியவில்லை இருவருக்கும்.
"நாங்க அப்புறம் வர்றோம் சார்!" என்று அஞ்சனாவை அழைத்துக் கொண்டு நிற்காமல் நகர்ந்துவிட்டான் தாமஸ்.
"நீ என்ன என்னென்னவோ கேட்குற அவர்கிட்ட? அவங்க பேமிலி பத்தி தான் அவர் பேசவே மாட்டுறாரே! அவர்கிட்ட போய் கூட பிறந்தவங்க எத்தனை பேர்னு எல்லாம் கேட்குற நீ?" என வெளியே வந்த தாமஸ் அஞ்சனாவிடம் கேட்க,
"நீங்க தானே அவர் எதுவுமே சொல்ல மாட்டுறார்னு புலம்புனீங்க? கூடவே அன்னைக்கு போன் பண்ணி அவங்க அப்பாகிட்ட போட்டு குடுத்ததும் நீங்க தானே? அதான் நான் கேட்டா எதாவது தேறுமானு கேட்டுப் பார்த்தேன். மனுஷன் கல்லு மாதிரி கரையவே மாட்டுறார் ண்ணா!" என்றாள் அஞ்சனா.
"இது விளையாட்டா போச்சா உனக்கு? என்னவோ பெரிய பிரச்சனை போல. நீ கேம் விளையாடுற. பேசாம இரு. இப்பவாச்சும் அப்பாவும் பையனும் சேரட்டும்!" என்றவன் வேலையை பார்க்க செல்ல, அஞ்சனாவும் அதன்பின் தன் வேலையில் கவனமானாள்.
அதன்பின் உடனே எல்லாம் அதிரன் தன் தந்தை அருகே செல்லவில்லை. அவரும் பொறுத்து பொறுத்துப் பார்த்தவர் தானே அவனருகில் முன்னேறிவிட்டார்.
அத்தனை ஆர்வமாய் மகனைக் காண வந்தவர் தான் என்றாலும் கூட இருந்தவளைக் கண்டபின் அந்த உற்சாகம் எல்லாம் வடிந்தோடி இருந்தது.
மனைவி எழிலரசியிடம் கூட தான் பின்பு பேசுவதாய் சொல்லி வைத்துவிட்டார். இவருக்கே இப்படி இருக்க மனைவிக்கு தெரிந்தால் என்னவாகுமோ என்று ஆனது ஹரிச்சந்திரனுக்கு.
"என்ன அதி இதெல்லாம்? நீ எப்படி இங்க வந்த? யார் சொல்லி வந்த? உன்னை எங்கெல்லாம் நாங்க தேடினோம் தெரியுமா? இது யார் கம்பெனி? இங்க எப்படி நீ?" என வந்ததும் அத்தனை அத்தனை கேள்விகள் எல்லாம் ஒரே பதிலுக்காக தந்தையிடம் இருந்து வர, அதிரன் அவர் முகத்தையே தான் பார்த்தபடி இருந்தான்.
"சொல்லு டா. உன்கிட்ட தான் கேட்குறேன். நீ எப்படி இங்க? அதுவும் அந்த பொண்ணு? என்ன நடக்குது இங்க? அப்போ வேணும்னே தான் எங்களை விட்டுட்டு வந்து அந்த பொண்ணோட வாழ்ந்துட்டு இருக்கல்ல நீ?" என கோபமாய் கேட்டும் அவன் அப்படியே இருக்க,
"அப்போ எல்லாத்துக்கும் காரணம் அவளும் அவளை சேர்ந்தவங்களும் சேர்ந்து நடத்தின நாடகம் தான் இல்ல? அவங்க கூட சேர்ந்து எங்களையே ஒதுக்கி வச்சுட்டு இப்படி வந்து உனக்குன்னு ஒரு இடத்தை உருவாக்கி இருக்க? உன்னை சொல்லி தப்பில்ல. அவங்களை எல்லாம் சும்மா விட்டேன் இல்ல." என்று ஹரிச்சந்திரன் சொல்ல, அப்போதும் எதுவும் பேசாமல் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்துவிட்டு அழைப்பை ஏற்க காத்திருந்தான் அதிரன்.
"இனியும் உன்கிட்ட பேசிட்டு இருந்தா சரி வராது. நான் பாத்துக்குறேன். இன்னைக்கே இந்த நிமிஷமே நாம ஊருக்கு போறோம்! அவளை நான் பாத்துக்குறேன்" என்று சொல்லி அவனிடம் இருந்து நான்கு அடிகள் எடுத்து வைக்க,
"அதி! அதி எங்க டா இருக்க? ஏன் டா இப்படி பண்ணின? நாங்க அவ்வளவு வேண்டாதவங்க ஆகிட்டோமா உனக்கு?" என்று அதிரன் அலைபேசியில் எழிலரசி குரல் கேட்கவும் நின்றுவிட்டார் ஹரிச்சந்திரன்.
"போலீஸ் ஸ்டேஷன் போவேன். மிஸ்டர் ஹரிச்சந்திரன் மேல கம்பளைண்ட் குடுப்பேன். இப்ப இந்த நிமிஷம் என் கம்பெனியை விட்டு அந்த ஆள் வெளில போகலைனா நான் சொன்னதை செய்வேன். உங்க ரெண்டு பேரால இன்னும் ஒரு சின்ன கீறல் அவ வாழ்க்கைல வந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன். புரியுதா?" என்று அதிரன் சொல்ல, அவனை திரும்பிப் பார்த்தார் அவன் தந்தை.
"என்ன அதி சொல்ற? ஏன் இப்படி பேசுற?" என்ற எழிலரசி குரலுக்கு எந்த பதிலும் சொல்லாமல் தந்தையை அத்தனை ஆழ்ந்து அமைதியான பார்வை அதிரன் பார்க்க, அவன் வழியிலேயே சென்று அவனை அழைத்து செல்லும் முடிவுக்கு வந்திருந்தார் ஹரிச்சந்திரனும்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.