உலா வரும் வெண்ணிலா - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,483
113

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 8

"அதி! நான் உன் அப்பா டா. எவளோ... யாரோ ஒரு பொண்ணுக்கா எங்களை இப்படி பேசுவியா நீ? நீ இப்படி பண்ணுவன்னு நாங்க எதிர்பார்க்கல அதி" என்ற ஹரிச்சந்திரன்,

"உன் அம்மா நீ காணும்னு சாப்பிடாம தூங்காம உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல் வீடுனு அலைஞ்சு சுத்தமா முடியாம இருக்கா. நீ என்னன்னா..." என்று கோபமாய் சொல்ல வந்ததை அவன் முகம் பார்த்து ஆயாசமாய் சொல்லி முடித்தார்.

"அதுவும் பேங்க்ல இருந்து இஷ்டத்துக்கு அமௌன்ட் எடுத்திருக்க. வேற வேற இடத்துல இருந்து எடுத்து என்னை சுத்த விட்ருக்க. எதுவும் புரியாம எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா அதி? நீ என்னன்னா இப்படி ஒரு கம்பெனில... ஏன் டா? எங்ககிட்ட கேட்டிருந்தா உனக்காக நாங்க இதைவிட பெரிய கம்பெனியே உருவாக்கி இருப்போமே அதி?" என்றார் இன்னுமே.

"நீங்க உருவாக்கி தரணுமா? எனக்காகவா? யார் நீங்க? எனக்காக இதெல்லாம் கூட செய்விங்களா?" எத்தனை நக்கலாய் வந்தது அதிரன் குரல்.

"உனக்கு செய்யாம வேற யாருக்கு நாங்க செய்ய போறோம் அதி? நீ தான் எங்களுக்கு எல்லாமே! நீ எங்களை தவிக்க விட்டு போனாலும் நாங்க உன்கிட்ட வந்துருவோம்னு இப்பாவது புரிஞ்சுக்கோ. வேற யாரும் நிரந்தரம் இல்ல!" என்று பாசமாய் சொல்லி அழுத்தமாய் பதியவைக்க முயன்றார் தந்தை.

"அதான் செஞ்சீங்களே நல்லா! அது போதாது?" என்ற அதிரன்,

"நான் எப்பவும் அதிரன் ஹரிச்சந்திரன் தான். அந்த அடையாளத்தை எல்லாம் விட்டுக் குடுக்க முடியாது. அதனால தான் எனக்கு தேவையான பணத்தை எடுத்து எனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கிட்டேன். என்ன சொன்னிங்க? நான் தவிக்கவிட்டு வந்தேனா?" என்ற போது நக்கல் குரலோடு வேதனையான புன்னகையும் அதிரனிடம் வர, சுற்றிலும் பார்த்தார் ஹரிச்சந்திரன்.

"நீங்க என்னை தேடுவீங்கனு தெரியும். ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவீங்கனு நான் நினைக்கல. எல்லாம் இந்த தாமஸ்னால!" என்ற அதிரன்,

"இப்பவும் எதுவும் மாறலை. நீங்க மாத்தவும் முடியாது. கிளம்புங்க!" என்றான் சாதாரணமாய்.

"அதி நான் சொல்றது உனக்கு புரியுதா? உன் அம்மாக்கு உடம்பு சரி இல்லை டா!" என ஹரிச்சந்திரன் சொல்ல,

"அதான் நீங்க இருக்கீங்களே! போய் கவனிங்க. வேற என்ன வேலை உங்களுக்கு?" என்றவன்,

"இன்னொரு விஷயம்! இன்னும் ஒரு டைம் உங்க பார்வை அவ மேல விழுந்தாலும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்!" என்ற போது அதிரன் கண்கள் எல்லாம் சிவந்து கோபத்தை வெளிப்படுத்த,

"அதான் சொன்னேனே! அவ தான் உன்னை ஆட்டி வைக்குறா. இப்ப கூட என்னை தெரியாத மாதிரி தானே போனா?" என்று சொல்ல,

'ஹ்ம்! அவளுக்கு என்னையே தெரியாது!' என நினைத்துக் கொண்டவன் தந்தையிடம் அதை சொல்லிவிடவில்லை.

"நான் பொய் சொல்லல. சும்மாவும் சொல்லல. இங்க சின்ன துரும்பு அசைஞ்சா கூட நான் போலீஸ் ஸ்டேஷன் போக தயங்க மாட்டேன். இப்ப தான் கொஞ்ச நாளா நிம்மதியா...." என்று சொல்ல வந்ததவன்,

"நிம்மதி இருக்கோ இல்லையோ ஒரு அர்த்தத்தை தேடி வாழ்ந்துட்டு இருக்கேன். மொத்தமா என்னை புதைச்சுட்டு தான் விடுவிங்களா?" என்றவன் கோபத்தில் தாடைகள் எல்லாம் இறுகியது.

"உங்களை தெரிஞ்ச மாதிரி காட்டிக்க அவளுக்கு எந்த அவசியமும் இல்லை. அவளை எப்படி நீங்க டிரீட் பண்ணீங்கனு மறந்து போச்சா?" என்றவன்,

"எனக்கு இப்ப எதையும் பேச பிடிக்கல. அதுவும் உங்ககிட்ட... நீங்க கிளம்புங்க. இனி இது தான் என் வாழ்க்கை. குறுக்க வராதீங்க. இல்ல... மொத்தமா அழிச்சுட்டு தான் விடுவீங்கன்னா.. முடிஞ்சா அதையும் ட்ரை பண்ணுங்க. என்னாலையும் வாழ முடியுமா தெரியல. முடிஞ்ச வரை முட்டி மோதி பாக்குறேன். இல்லைனா நானே என் முடிவை தேடிக்குறேன்!" என்றவன் பேச்சில் மொத்தமாய் ஹரிச்சந்திரன் எண்ணமெல்லாம் ஆட்டம் கண்டது.

"கிளம்புங்கனு சொன்னேன்!" என்றான் மீண்டும்.

"நான் போறதுக்காக வர்ல அதி. உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்!"

"நான் வர்றேன்னு சொன்னேனா? என்னை கூப்பிட வாங்கனு சொன்னேனா?" என அதிரன் கேட்க, என்ன சொல்லி அவனை இங்கிருந்து அழைத்து செல்ல என்று தெரியவில்லை.

கூடவே அவள். அந்த பெண்? அவள் எப்படி இங்கே? இவன் தான் அழைத்து வந்தானா? அவளுடன் தான் தன் மகன் இருக்கிறானா என பயம் சூழ, யாரிடம் கேட்பதென்றும் தெரியவில்லை.

"இன்னும் கேட்கலையா நான் சொன்னது? போங்க! போய் உங்களுக்கு பிசினஸை கவனிங்க. என் வாழ்க்கையை நான் பார்த்துப்பேன். என்னை தேடி யாரும் வர வேண்டாம். யாரும் எனக்கு வேண்டவும் வேண்டாம்!" என அதிரன் அவரை அனுப்புவதில் உறுதியாய் இருக்க,

"அப்படி போக முடியாது அதி. போறதுகக்காக நான் வர்ல!" என்றார் அவன் தந்தையும்.

"அப்ப நான் போறேன். எனக்கு வேலை இருக்கு!" என்றவன் அவரைத் தாண்டிக் கொண்டு தன் வேலையை கவனிக்க செல்ல, செய்வதரியாது நின்றுவிட்டார் ஹரிச்சந்திரன் சில நிமிடங்கள்.

"மெட்டிரியல்ஸ் செக் பண்ணியாச்சா?" என தனக்கு எதிரில் கொண்டு செல்பவற்றைப் பார்த்து கேட்டு அனுப்பி வைத்தவன் அடுத்தடுத்து வேலை நடக்கும் இடங்களுக்கு செல்ல, ஹரிச்சந்திரன் மெல்ல அந்த இடத்தில் இருந்து வெளிவந்து சுற்றிலும் பார்த்தவர் அந்த பெண்ணை தான் தேடினார்.

அப்பொழுதும் மகன் சொல்லிய வார்த்தைகள் அவளிடம் நேரே சென்று பேச தடுத்தது.

அடுத்து என்ன என்று பார்த்து நிற்கும் நேரம், "சார்கிட்ட பேசினீங்களா சார்?" என அவரருகே வந்திருந்தான் தாமஸ்.

அந்த குரலிலேயே அவனை கண்டு கொண்டவர், "நீ தானே அன்னைக்கு போன்ல பேசின?" என்று ஹரிச்சந்திரன் கேட்க,

"ஆமா சார்! நான் தாமஸ்!" என்று சொல்லி இங்கே தான் பார்க்கும் வேலையையும் சொல்ல,

"ஹ்ம்! அதி எங்க தங்கி இருக்கான்? கூட யாரெல்லாம் இருக்காங்க?" என்றார் கட்டளையாய் சொல்ல வேண்டும் என்ற அழுத்தம் கொண்டு.

"சார்?" என்றவனுக்கு மீண்டும் குழப்பமும் தயக்கமும்.

ஏற்கனவே தான் தான் அவர் மகனை தேடி வர காரணம் என்று புரிந்த தாமஸ்ஸிற்கு இப்போதும் மகன் தங்கி இருக்கும் இடம் தெரியாதா என குழப்பமாய் வந்ததோடு சொல்லவா வேண்டாமா என தயக்கமும் வந்தது.

தான் சொல்லி அது அதிரனுக்கு இடையூறாய் ஆகிவிட கூடாதே என்று தான் தயங்கி நின்றான்.

"சொல்லு! அதி எங்க தங்கி இருக்கான்?" என மீண்டும் அவர் கேட்க,

"தாமஸ்! வேலை டைம்ல என்ன அரட்டை? உங்க பெர்சனல் எல்லாம் கம்பெனிக்கு வெளில இருக்கட்டும். இது ஒர்கிங் டைம்!" என வந்துவிட்டான் அதிரன்.

"என் பெர்சனலா?" என வாய்விட்டே சொல்லி ஹரிச்சந்திரனைக் கண்டான் தாமஸ்.

இருவரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து அதிரன் நகர, "சொல்லு! அவன் எங்க இருக்கான்?" என்றார் அவர் மீண்டும் தாமஸ்ஸிடம்.

"சார்! அவர் உங்க பையன் தானே? அவர்கிட்டயே கேட்டுக்கோங்களேன். ப்ளீஸ்!" என்றவன் அவர் அழைக்க அழைக்க நிற்காமல் நகர்ந்துவிட்டான்.

"என்ன ண்ணா ஓடி வர்றிங்க?" எதிரில் வந்த அஞ்சனா தாமஸ்ஸிடம் கேட்க,

"அங்க..." என மூச்சு வாங்க சொல்லியவன்,

"அவர் அப்பாகிட்ட நான் பேசினா என் பெர்சனலை பேசுறேன்னு சொல்லறாரு அதிரன் சார். என்னவோ போ!" என தண்ணீரை எடுத்து குடித்தவன்,

"அப்பாக்கும் பையனுக்கும் நடுவுல போகவே கூடாது போல!" என்றான் மீண்டும்.

"அப்படி என்ன சீன் போடுறாரு உங்க அதிரன் சார். அப்பாவே பையனை தேடி வந்தா அவ்வளவு கசக்குதாமா? நீங்க நாலு கேள்வி கேட்கலாம்ல உங்க தோழர் எம்டியை?" என்றாள் கிண்டலாய்.

"நீ வேற! நான் ஒரு வார்த்தை பேசும்முன்ன அவர் நாலு வார்த்தை பேசிட்டு அங்க நிக்காம போய்ட்டாரு. அவங்க அப்பா தான் என்ன பன்றாரோ நானும் விட்டுட்டு வந்துட்டேன்" என்றவன் மண்டைக்குள் அப்படி என்ன பிரச்சனையாய் இருக்கும் என்ற கேள்வி சுழல ஆரம்பிக்க,

"இங்கேயும் நீ தான் நிக்குறியா?" என கேட்டு அவர்கள் முன் முறைத்து நின்றிருந்தான் அதிரன்.

"சார்!" என அலமலந்து விழித்த தாமஸ்ஸைக் கண்டு அதிரன் அஞ்சனா இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

"உனக்கு இருக்கு. ஆறு மணிக்கு கிளம்பும் போது என்னை வந்து பாரு!" என்று அவனிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பிவிட்டான் அதிரன்.

"ஷப்பா!" என தலையில் அவன் கைவைக்க, ஹரிச்சந்திரன் கம்பெனியை விட்டு வெளியில் செல்வதைக் கண்டாள் அஞ்சனா.

"அவங்க அப்பா போற வரை வெளில சுத்திட்டு அவர் கிளம்புறார்னு தெரிஞ்சதும் தான் உங்களுக்கு சார் உள்ள போறார் பாருங்க!" என அதற்கும் அஞ்சனா பேச,.

"உன்னை வெளுத்துடுவேன். என்ன சொல்ல போறாரோனு நானே பதறி நிக்கேன். ஓடிரு!" என்றவன் செல்ல சிரித்துவிட்டு தன் இடத்திற்கு நகர்ந்தாள் அஞ்சனா.

உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்து தலையை சாய்த்துக் கொண்டவன் கண்களையும் சில நிமிடங்கள் மூடிக் கொண்டான்.

என்னென்னவோ நிகழ்வுகள் மனதில் அலைஅலையாய் நினைவுகளை எழுப்ப, எழுந்து நிமிர்ந்து அமர்ந்தவன் அலைபேசியை எடுத்து நண்பனுக்கு அழைத்துவிட்டான்.

"என்ன டா இந்நேரம் cal பண்ணிருக்க? நீ ஓகே தானே? அஞ்சனா ஓகே தானே?" என எடுத்ததும் நண்பன் பதறி கேட்க,

"ஓகே தான் டா. ஆனா..." என்றவன் ஹரிச்சந்திரன் வந்த விஷயத்தை சொல்ல, மொத்தமாய் அமைதியாகிவிட்டான் நண்பன்.

"நான் இங்க வருவார்னு எதிர்பார்க்கல. அஞ்சனாவைப் பார்த்துட்டு என்னென்னவோ பேசிட்டார். நானும் விடல. போலீஸ்ல கம்பளைண்ட் குடுப்பேன்னு சொல்லிட்டேன்!" என்றான்.

"போய்ட்டாரா?" நம்ப முடியாமல் நண்பன் கேட்க,

"இங்க இருந்து போய்ட்டார். ஆனா அவ்வளவு சீக்கிரம் கிளம்பிட மாட்டார்னு தான் எனக்கும் தோணுது!" என்றான் அதிரன்.

"இதுக்கு மேலயுமா ரிஸ்க் எடுக்க போற நீ?" நண்பன் கேட்டதில்,

"நான் ரிஸ்க் எடுக்குறேனா? ஏன் டா இப்படி சொல்ற? இது தான் என் வாழ்க்கையே! உனக்குமா புரியல?" என அதிரன் கொந்தளிக்க,

"சரி டென்ஷன் ஆகாத. ஈவ்னிங் மீட் பண்ணுவோம்!" என்றதில் அதிர்ந்த அதிரன்,

"நிஜமாவா கண்ணா?" என ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அதிரன் கேட்க,

"பின்ன? உன் அப்பா தான் இவ்வளவு தூரம் வந்துட்டாரே. இனி ஃபேஸ் பண்ணுவோம் எல்லாத்தையும்!" என்றான் கண்ணனும்.

"டேய்!" என்றவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. கூடவே அவ்வளவு கவலையும் கூட.





 

Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
என்னங்க ரைட்டர்! இப்படி ஷாக் மேல ஷாக் தரிங்க 😳😳😳😳😳😳

அதி friend கண்ணாவா.....

அதில் தான் தாமஸ் மேல இப்படி ஒட்டுதலோ