உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 9
"போலாமா ண்ணா! வரிங்களா என்னோட?" என அஞ்சனா வந்து கிளம்பும் நேரம் தாமஸ்ஸிடம் கேட்க,
"நீ போ அஞ்சனா. இன்னும் ஒரு பத்து நிமிஷ வேலை இருக்கு. முடிச்சுட்டு சாரைப் பார்த்துட்டு வர்றேன்!" என்றான் தாமஸ்.
"எந்த சாரைப் பார்க்க போறீங்க?" அஞ்சனா கிண்டலாய் கேட்பது புரியாமல்,
"அதிரன் சார் தான். ஏன்?" என்றான் அவனும்.
"சார்! அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிட்டாங்க. உன்கிட்ட சொல்லல?" என்று கேட்டதை தாமஸ் முதலில் நம்பவில்லை.
அவனே பார்த்தபின் தான் அறிந்து கொண்டான் அதிரன் கிளம்பியதை.
"ஈவினிங் பாக்கணும் சொன்னாங்க தானே! அதான் இருப்பாங்க நினைச்சேன்!" என்றவனைக் கண்டு சிரித்துவிட்டு,
"என்னவோ அவங்க அப்பாவை தேடி போய்ட்டார் போல. நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு வாங்க. நான் போய்ட்டு இருக்கேன்!" என்ற அஞ்சனா கிளம்பிவிட, ஒரு குழப்பத்தோடே தான் வேலையை முடித்துக் கொண்டிருந்தான் தாமஸ்.
"நிஜமாவே அப்பாவை தேடிப் போயிருந்தா நல்லது தானே?" என்றும் நினைக்கத் தவறவில்லை அவன்.
"கண்ணா!" என கண்ணனைக் கட்டிக் கொண்ட அதிரனுக்கு அத்தனை மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு ஏன் வருடங்களுக்கு பின் தன் நண்பனை கண்டுவிட்டவனுக்கு.
"எப்படி டா இருக்க அதி?" என்ற கண்ணன் அதிரனைப் பார்த்து மகிழ்ந்து நிற்க,
"இன்னைக்கு உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல. தேங்க்ஸ் கண்ணா!" என்றான் அதிரன்.
"என்ன தேங்க்ஸ் எல்லாம்..." என அவனை அங்கிருந்த ஒரு ரெஸ்டாரண்ட் உள்ளே அழைத்து சென்றான் கண்ணன்.
கல்லூரி காலம் முதலான நட்பு. என்னென்னவோ நடந்து எங்கெங்கோ சென்று இப்படி வந்து நிற்கின்றது.
அதுவும் கண்ணனை இங்கே காண அத்தனை வருத்தம் அதிரனுக்கு. அதற்குமே தன் தந்தை மேல் தான் அளவில்லாத கோபமான கோபமாய் வந்தது ஹரிச்சந்திரன் மேல்.
"இப்படி தான் டல்லடிப்பியேன்னு பார்க்கலாம் சொன்னேன். என்னவாம் உன் அப்பாக்கு?" கண்ணன் கேட்க,
"இந்த தாமஸ் பார்த்த வேலை கண்ணா. எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. கம்பெனில அவரைப் பார்த்ததும் அவ்ளோ கோவம் வந்துச்சு. எதுவும் பண்ண முடியலையேனு இப்பவும் கூட இரிடேட்டா தான் இருக்கு. இப்ப என்ன பண்றதுனு தான் யோசிச்சிட்டே இருக்கேன். அவ்வளவு எல்லாம் சும்மா விட்டுட்டு போறவர் இல்ல அவரும்!" என்றான் அதிரன் சோர்வாய்.
"அவர் பார்வை அஞ்சனா மேல திரும்பி இருக்கும். அஞ்சனாகிட்ட பேச ட்ரை பண்ண வாய்ப்பிருக்கு இல்ல?" கண்ணன் சொல்ல,
"வாய்ப்பில்ல. அதுவரை நான் சும்மா இருக்க மாட்டேன்னு அவருக்கு தெரியும்!" என்றான் அதிரனும்.
"நீ சொல்லு டா என்ன பண்ணனும்? எதுவா இருந்தாலும் பண்ணலாம்? அவளுக்காக இவ்வளவு தூரம் வந்தவன் நீ. இனியும் நீ தான் சொல்லணும்!" என்றான் கண்ணன்.
"என்னால அவ்வளவு தானே முடிஞ்சது. இவ்வளவு தூரம் வந்துட்டேன். ஆனா அவகிட்ட போக முடியலையே! என்னனு நான் சொல்ல? நடந்ததெல்லாம் நடக்காம போயிருந்தா இப்ப நாங்க எப்படி இருந்திருப்போம்!" என்றான் ஆயாசமாய்.
"சரி அதி! அதையே நினைச்சு என்னாக போகுது? பேசாம டாக்டரை கன்சல்ட் பண்ணுவோமா?" கண்ணன் கேட்க,
"நானும் அது தான் நினைச்சேன் கண்ணா!" என்றவன்,
"ஆனா டாகடர் முடியாதுன்னு சொல்லிட்டா? அது தான் பயமா இருக்கு. இல்லைனா எப்பவோ உன்னை ஏற்பாடு பண்ண சொல்லி இருப்பேன்!" என்றான் அதிரன்.
"ஹ்ம்!" என்ற கண்ணன் சிந்தனையில், "எனக்கு ஒண்ணு தோணுது!" என்றான் அதிரன்.
"இதுக்கு மேல என்ன இருக்கு? எதாவது முடியுமான்னு தான் நானும் பாக்குறேன். சொல்லு!" என்றான் அவன் தயக்கத்தில் கண்ணன்.
"பேசாம நான் அஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்கவா?" அதிரன் கேட்க,
"வேண்டாம்னா சொல்றேன்? எப்படினு தான் கேட்குறேன்!" என்றான் கண்ணனும்.
"அதை நீயும் ஆண்ட்டியும் தான் சொல்லணும்!" என்ற அதிரன் கண்ணனின் பார்வையில்,
"எவ்வளவு வெயிட் பண்ண சொல்ற? இப்படியே போய்டுமோனு இருக்கு. நைட்டெல்லாம் தூக்கமே இல்ல. இதோ இப்ப இவங்க வேற வந்துட்டாங்க. இனி அடுத்து அம்மான்னு அவங்களும் கிளம்பி வருவாங்க" என்ற அதிரன்,
"முடியல டா. என்னை பார்த்தாவது அஞ்சனா எதாவது சொல்லுவான்னு நினைச்சேன். ஆனா இப்ப வரை எந்த யூஸ்ம் இல்ல. இனி எனக்கு பிரஷர் தான் அதிகமாகும்." என்றான்.
"அம்மாக்கு நீ வந்த விஷயம் எதுவும் தெரியாது. அது உனக்கே தெரியும். அவளை கஷ்டப்படுத்துற மாதிரி அம்மா எதுவும் பண்ணவும் மாட்டாங்க. அஃப்கோர்ஸ் நாமளும் அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு எல்லாம் பண்ணிட முடியாது. பண்ணவும் மாட்டோம்" என்று கண்ணன் சொல்ல சொல்ல, தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டான் அதிரன்.
"நீ வருத்தப்பட சொல்லல டா. நிஜத்தை சொல்றேன். நம்ம சிட்டுவேஷன் இப்படி இருக்கே. இதுல உன் அப்பா!" என்றவனுக்கு அவரைப் பற்றி பேசவே பிடிக்கவில்லை.
"ப்ச்! முடியல கண்ணா! சித்திரவதையா இருக்கு. வாழவும் முடியாம சாகவும் முடியாம... என்னனு தான் இருக்கேனா நானெல்லாம்!" என்ற அதிரன்,
"சாப்பிட முடியல தூங்க முடியல. ஒரு இடத்துல ரிலாக்ஸ்ஸா உக்கார கூட முடியல டா. அவளுக்கென்ன! எல்லாத்தையும் அழிச்சுட்டு எதுவுமே தெரியாம அவ உண்டு அவ வழி உண்டுன்னு போய்ட்டு இருக்கா. அவளை நினைச்சே நான் படுற பாடு இருக்கே!" என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
"தாமஸ்கிட்ட எதுவும் பேசலையா உன் அப்பா?"
"ட்ரை பண்ணினார்" என்றவன் பெருமூச்சோடு நிமிர்ந்தான்.
"தாமஸ் பாவம் டா. முதல்ல இருந்தே நிறைய கேள்வி கேட்டான். இப்ப ரொம்ப பயந்து போய் இருக்கான். அவர் மேல இருந்த கோவத்துல அவனை தான் கத்தி விட்டேன். என்ன நினைச்சானோ!" என அதற்கும் ஒரு கவலை அதிரனிடம்.
"அதெல்லாம் உனக்காக தான் வருத்தப்படுவான்!" என்ற கண்ணன்,
"வந்து அஞ்சனாகிட்ட புலம்ப, அவ காதை மூடிக்கிட்டு போய்டுவா!" என்று சொல்லி சிரிக்க,
"சிரிக்கவா செய்யுற நீ? ஆனா இருக்கு டா உன் தங்கச்சிக்கும். மத்தவனை கூட சமாளிச்சு எதிர்த்து வந்துடுவேன். அவளை டெய்லியும் பார்த்துட்டு பேசிட்டு கடந்து போறது இருக்கே!" என்றவன் பல்லைக் கடிக்க,
"நேத்து கூட அம்மாகிட்ட சொன்னா அதி! எங்க சார்க்கு நீங்க வச்ச பாகற்காய் பொரியல் பிடிச்சிருக்காம். நெக்ஸ்ட் டைம் நிறைய வைங்கனு சொன்னா!" என்று சொல்லி கண்ணன் சிரிக்க, அப்படி முறைத்தான் அதிரன் அவனை.
கொஞ்சமாய் மீட்டெடுக்க கண்ணன் நினைத்தாலும் மொத்தமாய் அனைத்திலிருந்தும் மீண்டு அவள் தான் மிச்சமில்லாமல் வேண்டும் என்று நின்றது அதிரன் மனது.
"முதல்ல எல்லாம் என்கிட்ட பேசவே இல்லை. தாமஸ்கிட்ட தான் எதுவா ஸ்
இருந்தாலும் சொல்லுவா. அவளுக்கும் சேர்த்து தாமஸ் வந்து பேசுவான் என்கிட்ட. இப்ப கொஞ்ச நாளா தான் ஒரு சேஞ்ச். நானும் கொஞ்சம் கவனிச்சு பாக்கலாம்னா எங்க! அவளை நினைச்சே பார்க்க முடியல!" என்றான் அதிரன்.
"சரி டா. எல்லாம் சரியாகும். அதுக்காக தானே நீ வர்றேன்னு சொன்னதும் நானும் சரினு சொன்னேன். ஆனாலும் இப்படி அஞ்சனாக்காக மொத்தமா கம்பெனியை வாங்கிக்குவன்னு நான் நினைக்கல. எனக்கு புரியுது எவ்வளவு அஞ்சனா உனக்கு முக்கியம்னு. ஆனா இன்னுமே எந்த சேஞ்சஸ்ஸும் தெரியலையே! அது தான் எனக்கும் உறுத்தலா இருக்கு!" என்றான் கண்ணன்.
"எவ்வளவு வேனா காத்திருக்கலாம் கண்ணா. ஆனா அதுக்கான பலன் இருக்கணுமே! அஞ்சனா! எப்ப என்னைப் பார்த்து அவளே அதின்னு கூப்பிடுவான்னு ரொம்ப வெயிட் பண்றேன். அதனாலயோ என்னவோ என்னை ரொம்ப காக்க வைக்குறா. மனசெல்லாம் பதறுது. அவ கிட்ட இருந்தா போதும்னு இருக்கு. ஆனா அவளுக்கு நான் யாருனு கூட தெரியல. என்ன கொடுமை டா இதெல்லாம். யாருக்கும் என் நிலைமை மட்டும் வர கூடாது கண்ணா!" அதிரன் சொல்ல,
அவன் தோள் தட்டி சமாதானம் செய்தான் கண்ணன். அதிரனின் நண்பனும் அஞ்சனாவின் உடன்பிறந்த சகோதரனுமானவன்.
"நீயும் இல்லைனா நான் என்னாகி இருப்பேனோ கண்ணா. என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அண்ட் நீ புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு என்னை யாரும் புரிஞ்சிக்கல டா. ஈவேன் என் அம்மா அப்பா. பையனை விட அவங்க சந்தோஷம் தான் அவங்களுக்கு முக்கியமா போச்சுல்ல?"
கொஞ்சமும் நடந்ததில் இருந்து வெளிவர முடியாமல் அதிரனின் புலம்பல் தொடர,
"இப்படி தான் தினமும் ஈவ்னிங் தனியா இருந்து ஃபீல் பண்ணிட்டு இருக்கியா? உன் மனசுக்கே நல்லது தான் டா நடக்கும். அதுவும் அஞ்சனா! அவ மனசுக்கும் நிச்சயம் நல்லது தான் நடக்கும்" என புன்னகைத்த கண்ணன்,
"சரி டைம் ஆச்சு. கிளம்பலாமா? அம்மா தேடுவாங்க!" என்றான்.
"ஹ்ம்!" என்ற அதிரனும் எழுந்து கொண்டான். வெளியே வந்த பின், "தேங்க்ஸ் ஃபார் எவரிதிங்க் கண்ணா!" என அதிரன் அணைக்க,
"ரொம்ப யோசிக்காத. போய் ரிலாக்ஸ்டா இரு. உன் அப்பா மேலயும் ஒரு கண்ணு வச்சுக்கோ. எங்க இருக்கார்னு கவனிச்சுக்கோ!" என எச்சரித்தே அனுப்பி இருந்தான் கண்ணன்.
வீட்டிற்கு வந்த அதிரன் பல சிந்தனைகளோடு ஹாலில் அமர்ந்து கொண்டான்.
"அதி! அதிரன்! அதிரன் அஞ்சனா! அதிரனின் அஞ்சனா! ஓஹ் மை காட்! எவ்ளோ அழகா இருக்குல்ல?" அஞ்சனாவின் குரல் அதிரனின் காதுகளில் இசையாய் நீந்த, அந்த நாட்களுக்கே சென்றுவிட வேண்டுமாய் ஒரு தவிப்பு.
தன் கைகளில் கிடைத்த பொக்கிஷத்தை சில நொடிகளில் தவறவிட்டு இப்பொழுது தவித்துக் கொண்டு மனம் துடிக்க அமர்ந்திருந்தான் அதிரன்.
மேலும் பல நிமிடங்கள் அந்த நினைவுகளில் கரைந்தவனை தொடர் அலைபேசி அழைப்பு கவனத்தை சிதற வைக்க, எடுத்து பார்த்த போது கண்ணன் தான் அழைத்து முடித்து,
"சாப்பிட்டு தூங்கு டா ராஸ்கல்!" என அனுப்பி இருந்தான்.
தன் வாழ்க்கை செல்லும் திசை புரியாமல் தானே ஒன்றை உருவாக்கி அதில் நேரத்தை கொடுத்து தன் அவளையும் தூரம் நின்று பார்த்து என நாட்களை கடந்து கொண்டிருக்கிறான்.
என்றேனும் ஒருநாள் வந்துவிடுவாள் தன்னிடம் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் நெஞ்சம் சில நாட்களாய் அவளை கைகளில் பறித்திட பரிதவித்துக் கொண்டிருந்தது.
அடுத்த நாள் எப்போதும் போல கம்பெனிக்கு கிளம்பிய அதிரன் சாலையில் கவனமாய் பார்த்துக் கொண்டு செல்ல, தூரத்தேயே கண்டு கொண்டான் ஹரிச்சந்திரனை.
கம்பெனிக்கு திரும்பும் வழியில் நின்று தன்னை அவர் தேடிக் கொண்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தவன் முகம் முழுதும் கோபத்தின் சுவடுகள்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.