உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 10
ஹரிச்சந்திரணை பார்த்தபடி தன் கம்பெனிக்கு வந்து சேர்ந்துவிட்டான் அதிரன்.
அவர் எப்படியும் ஊருக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என தெரிந்தவன் தான். இப்பொழுது அவனை கண்காணிப்பதும் புரிந்தது. இருந்தாலும் அமைதி காத்தவன் வந்து தன் வேலையை தொடர, அன்றைய வேலைகள் எப்போதும் போலவே நடந்து கொண்டிருந்தது.
அன்று சனிக்கிழமை வேறு. அத்தனை வேலைகள் அதிகமாய் இருக்க, யாருக்கும் நிற்க நேரமே இல்லை.
அஞ்சனா சாப்பிட நேரம் பார்க்க அது மூன்றை தொட இருந்தது.
"தாமஸ் அண்ணா ஏன் இன்னும் கூப்பிடாம இருக்காங்க?" என நினைத்தபடி அவனைத் தேடி அவள் செல்ல, அவனும் வேலையில் தான் இருந்தான்.
"ண்ணா டைம் ஆச்சே!" அஞ்சனா அழைக்க,
"சாரி அஞ்சனா நான் சாப்பிட்டேன். நீ இன்னுமா சாப்பிடல!" என்றவனை அஞ்சனா முறைக்க,
"சாப்பிடுற இடத்துக்கு போகவே இல்லை அஞ்சனா. இங்கேயே நின்னுட்டு தான் சாப்பிட்டேன் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதை கவனிச்சுட்டு சாப்பிட்டும் முடிச்சுட்டேன். சாரி டா!" என்றான் நிஜமாய்.
"சொல்ல மாட்டிங்களா?" என மீண்டும் முறைத்துவிட்டே அவள் சாப்பிடும் இடம் செல்ல, தாமஸ் அஞ்சனாவிற்காக அங்கே சாப்பிடாமல் காத்திருந்தான் அதிரனும் கூட.
"நீங்களும் இன்னும் சாப்பிடலையா சார்?" என அஞ்சனா மட்டும் வர,
"ரொம்ப பசி! இன்னும் காணுமேன்னு இப்ப தான் நினைச்சேன்!" என்ற அதிரன்,
"அவனை எங்க?" என்று கேட்க,
"அவங்க சாப்பிட்டாச்சாம். என்கிட்ட தான் சொல்லலைனு நினைச்சேன். உங்ககிட்ட கூட சொல்லலையா?" என்றாள் சிரித்தவள்.
"சாப்பிட்டானா? என்கிட்ட சொல்லவே இல்ல?" என நிஜத்திற்கும் அதிரனுக்கும் அதிர்ச்சி தான்.
"நேத்து பேசினதை வச்சு கோபத்துல இருக்கானோ என் மேல?" என அதிரன் தனக்கு தானே கேட்டுக் கொள்ள, அது அஞ்சனாவிற்கும் கேட்டது.
"யார் அவங்களா? அதுவும் உங்க மேல கோவப்படுறதா? அவங்களுக்கு மட்டும் இது கேட்கணுமே! உங்களை எல்லாம் எங்க வச்சிருக்கார் தெரியுமா தாமஸ் அண்ணா!" என்ற அஞ்சனா பேசியபடியே அதே ஓட்டத்தில்,
"என் காதெல்லாம் தீயிர அளவுக்கு உங்களை பத்தி மட்டும் தான் பேசுவாங்க. வேணும்னா கேட்டுப் பாருங்க!" என்று சிரித்ததில் அதிரனின் கவனம் முழுதாய் அவளிடம் திரும்பி இருந்தது.
"ஓஹ்! என்னை பத்தி பேசினா உன் காது தீயுதா?" அதிரனும் அதே சிரிப்புடன் கேட்டபின் தான் தான் உளறுகிறோம் என்றே உணர்ந்தவள் திருட்டு விழியாய் விழித்தாள்.
"சாரி சார்! தாமஸ் அண்ணாகிட்ட பேசி பேசி அதே ஃபுளோல உங்ககிட்ட பேசிட்டேன்!" என்றவள் நாக்கைக் கடித்து மன்னிப்பும் கேட்க,
"ஹ்ம்ம்!" என சிறு புன்னகையை கொடுத்த அதிரன் சாப்பிடுமாறு சைகையும் செய்தான்.
எத்தனை நாட்களுக்கு இல்லை இல்லை எத்தனை வருடங்களுக்கு பிறகான இருவருக்குமான தனிமை. அந்த நினைவே புது உற்சாகத்தை கொடுத்தது அதிரனுக்கு.
"மெய்ட் அக்கா நல்லா சமையல் பன்றாங்க இல்ல!" அதிரன் அவனதை எப்போதும் போல சாப்பிடும் முன் அவளுக்கு எடுத்து வைக்கவும் அஞ்சனா சொல்ல,
"ஹ்ம்! நாட் பேட்!" என்றான் அதிரன்.
"அன்னைக்கு தாமஸ் அண்ணா கேட்டப்பவும் இப்படி தானே சொன்னிங்க? இதுவே நாட் பேட் தான்னா அப்ப எது தான் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லுவீங்க நீங்க?" என்றாள் அவளே.
பேசியபடியே தனது உணவில் கொஞ்சமாய் அவனுக்கு வைக்கவும் மறக்கவில்லை. இது பழக்கமான ஒன்று தான். தாமஸ் இருக்கும் போது மூவருமாய் இப்படி மாற்றிக் கொள்ளும் வழக்கம்.
"நீ கொண்டு வர்ற எல்லாம் நல்லாருக்குமே. தாமஸ் கூட சம்டைம்ஸ் நல்லா செஞ்சி எடுத்துட்டு வருவான். அதை கம்பேர் பண்ணினா இது ஓகேஓகே ரேஞ்ச் தான்!" என்றான் அதிரனும் சாப்பிட்டபடி அவளுக்கு பதிலளித்து.
"அப்போ என் அம்மா சமையல் உங்களுக்கு பிடிச்சிருக்கு. தாமஸ் அண்ணா சமையல் கொஞ்சம் கொஞ்சம் பிடிச்சிருக்கு." அஞ்சனா சொல்ல,
"ஹ்ம்! லைக் வீட்டு சாப்பாடு. அது ஒரு தனி டேஸ்ட் இல்ல" என்றான் அதிரன்.
"சார்! நீங்க சமையலுக்கு குடுக்குற காசு ஒரு வீட்டோட வாடகைக்கு குடுக்குற மாதிரி இருக்கு. அவ்ளோ காசு குடுக்குறீங்கல்ல? அப்போ பிடிக்கலைனா வேற மாத்திக்க வேண்டியது தானே?"
"பிடிக்கலைனு நான் சொல்லலையே! அடுத்து வர்றவங்களுக்கு இவங்களே பெட்டர்னு இருந்தா என்ன பண்றது?" என்றவன்,
"அதோட காசுக்கு சமைக்குறதுக்கும் தன் பசங்க நல்லா சாப்பிடணும்னு சமைக்குறதுக்கு வித்தியாசம் இருக்கே அஞ்சனா! நான் அதை தான் சொல்ல வந்தேன்!" என்று அதிரன் சொல்லிய நொடி,
"ஓஹ்! அப்படி சொல்ல வர்றிங்களா நீங்க?" என்றவள் சொல்லில் அவன் கொஞ்சமாய் புன்னகைத்து தலையசைக்க, சில நொடிகள் தன் எண்ணத்தில் மௌனமாய் இருந்த அஞ்சனா,
"ஏன் சார் தனியா இருந்து கஷ்டப்படுறீங்க? உங்களுக்கு தனியா இருக்க பிடிக்கலைனு தாமஸ் அண்ணா சொன்னாங்க. இதோ இப்ப லஞ்ச்க்கு கூட இவ்ளோ சொல்றிங்க. எனக்கே புரியுது. ஆனா அப்பா வந்தவங்களையும் அனுப்பி விட்டுங்க.!" என்றவள்,
"என்ன டா நம்ம பர்சனல் பத்தி இவ்ளோ கேட்குறாளேனு நினைக்காதீங்க. உங்க முன்னாடி தான் தாமஸ் அண்ணா சோ சைலன்ட். நீங்க அந்த பக்கம் போய்ட்டா அதிரன் சார் பாவம் தெரியுமான்னு உங்களுக்காக அவ்ளோ பேசுவார் என்கிட்ட. அதை தான் நான் முதல்லயே சொன்னேன்!" என்றும் அவளே சொல்ல, அதற்கும் சின்னதாய் சிரித்து மட்டும் வைத்தான் அதிரன்.
இப்படி பக்கத்தில் தான் மட்டும் இருந்தும் இவளிடம் எந்த வித்தியாசமும் இல்லை தானே! என்னவென்று இவளுக்கு பதில் கூற? என அவன் எண்ணங்கள் எல்லாம் அணிவகுத்து நிற்க தான் செய்தது.
"சாரி சார்! என் வாய் இருக்கே! தாமஸ் அண்ணா கூட அப்பப்ப என்னை தட்டி வைப்பாங்க. இப்படி தான் வாயை விட்டுட்டு வாங்கிக் கட்டுறது" அவன் மௌனத்தில் அஞ்சனா சொல்ல,
"அதெல்லாம் எதுவுமில்லை அஞ்சனா. இப்ப எதுவும் சொல்ல முடியாத ஒரு சிட்டுவேஷன் அவ்வளவு தான். உனக்கு சொல்லாம என்ன? கண்டிப்பா சொல்லுவேன்!" என்று அதிரன் சொல்லியதில் கொஞ்சம் வித்தியாசமாய் அஞ்சனா அதிரனைப் பார்க்க, அவன் சாப்பிட்டு முடித்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த நேரம்.
"நீ இன்னுமா சாப்பிடுற?" என வந்துவிட்டான் தாமஸ் அஞ்சனாவை தேடி.
அவளை தனியே அனுப்பிவிட்டாலும் மனம் அத்தனை துவண்டது தாமஸ்ஸிற்கு. அஞ்சனா மட்டுமின்றி அதிரனும் என்ன நினைத்திருப்பான் என நினைத்து இவ்வளவு நேரமும் அவர்கள் வெளிவரவில்லை என பார்த்துவிட்டு அவனே உள்ளே வந்துவிட்டான்.
"வா டா! அவ்ளோ பெரியாளாகிட்டியா நீ? என்னை விட்டுட்டு சாப்பிட்டுட்ட இல்ல?" என்று அதிரன் கேட்கையில் நிஜத்திற்கும் தாமஸ் பாவமாய் தான் விழித்தான் அந்த கேள்வியில்.
"நல்லா கேளுங்க சார்!" என்ற அஞ்சனாவும் தாமஸை முறைத்துவிட்டு டப்பாவை மூடி வைத்து எழுந்துவிட்டாள்.
"என்னவோ மாதிரி இருக்கியே தாமஸ் எனி ப்ரோப்லேம்?" என அதிரன் கேட்க, சொல்லவும் முடியவில்லை மறைக்கவும் முடியவில்லை தாமஸ்ஸிற்கு.
"ண்ணா என்னாச்சு?" என்றாள் இப்போது அஞ்சனாவும்.
"எதுவுமில்ல. வேலை நிறைய இருக்கே. அதான். இன்னும் காணுமேனு பார்க்க வந்தேன்!" என்றான் தாமஸ்.
"சரி வாங்க போகலாம்!" என அஞ்சனா அழைக்கவும் தாமஸ் தலையாட்ட, அதிரன் கொஞ்சம் ஆழமாய் பார்த்தான் அவனை.
"என்னவோ மறைக்குற மாதிரி இருக்கு. ஆனா அப்படியெல்லாம் நீ பண்ண மாட்டியே! ஓகே போய் பாரு!" என்று அவனே கேட்டு அவனே பதிலும் சொல்லிக் கொண்டான் அதிரன்.
வெளியே வந்த பின், "நான் சொல்லணும் நினைச்சேன். சார் சொல்லிட்டாங்க. நிஜமாவே என்னவோ மாதிரி தான் இருக்கீங்க!" என்ற அஞ்சனா,
"ஓகே ஈவினிங் பேசலாம் ண்ணா!" என்று சொல்லி தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள் அஞ்சனா.
காலை அத்தனை வேகமாய் தொடங்கிய வேலைகள் ஐந்து மணிக்குள் எல்லாம் முடிக்கும் நிலைக்கு வர, அதன்பின் தான் கொஞ்சம் ஒய்வாய் அமர்ந்து அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தனர் வேலைகளை.
அதிரன் ஒவ்வொரு வேலையையும் கவனித்து வந்தவன் தாமஸ் நிற்கும் இடம் வந்து அவனருகே நிற்க,
"முடிஞ்சது சார். இன்னும் அரை மணி நேரத்துல அனுப்பிடலாம்!" என்றான் தாமஸ்.
"ஹ்ம் குட்!" என்ற அதிரன் தாமஸ்ஸையே பார்க்க,
"சார்!" என்று விழித்தான் அவன்.
"என்ன டா கோவம் என் மேல? என்னவோ இருக்கு. ஆனா கோவப்பட தான் உனக்கு தெரியல!" என்ற அதிரனுக்கு தாமஸ் பாவனைகளில் சிரிப்பும் சேர்ந்தே தான் வந்தது.
அதில் தாமஸ் கொஞ்சம் முறைக்கும் பார்வையையும் சேர்த்தே கொடுத்ததில் இன்னும் புருவங்கள் விரியக் கண்டான் அதிரன்.
"உங்க லவ்ஸ் இன்னும் முடியலையா?" என தாமஸ் காதுக்குள் அஞ்சனா சத்தம் கேட்க, திடுக்கிட்டு விழித்ததில், அஞ்சனாவும் விழிக்க,
"அண்ணனும் தங்கச்சியும் நல்லா பண்றீங்க போங்க!" என்று சொல்லி சென்றுவிட்டான் அதிரன்.
"என்ன அஞ்சனா!" தாமஸ் ஆயாசமாய் கேட்க,
"நீங்க இப்படி ஷாக் ஆகுற அளவுக்கு நான் என்ன பூதமா? அதான் திட்டிட்டு போறாங்க!" என்றாள் அஞ்சனா.
"என்னவோ சரி இல்ல. இதையும் பேக் பண்ண சொல்லி அங்கிள் தான் குடுக்க சொன்னாங்க!" என ஒரு பன்டலை அவனிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள் அவளும்.
இதற்குமேல் இப்படி இருப்பது சரியில்லை என்று தோன்றிவிட, ஆறு மணியாகும் வரை பார்த்து நின்றவன் பின் வேலைகளை முடித்துவிட்டு அதிரன் அறைக்குள் நுழைய, அதிரன் அங்கிருந்து கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான் அதே நேரம்.
"வா தாமஸ். மெயில் அனுப்பியாச்சா? கிளம்பிட்டியா?" என்று அதிரன் கேட்டு கையில் கார் சாவியை எடுத்துக் கொண்டான்.
"முடிஞ்சது சார். கிளம்பிட்டேன்!" என்றவன் தயங்கி தயங்கி நிற்க,
"ஒண்ணு சொல்லு இல்ல வேண்டாம்னு தோணுச்சுன்னா சொல்லாத. ஏன் இப்படி தயங்கிட்டு நிக்குற?" என்ற அதிரன்,
"நேத்து நான் பேசினதுல ஹர்ட் ஆகிட்டியா? அதான் சாப்பிட வரலையா?" என்ற அதிரன்,
"யார் மேலயோ கோவம். அப்ப நீ தான் கிடைச்ச. அதுவும் என் பிரண்ட் தானேன்னு தான் அப்படி பேசிட்டேன். சத்தியமா மனசுல இருந்து எதுவும் பேசல டா!" என்று சொல்லி,
"இல்ல பிடிக்கவே இல்லையா என்னை?" என்றும் கேட்டுவிட,
"சார்! என்ன நீங்க? நானே குழம்பிப் போய் நிக்குறேன். நீங்க வேற என்னென்னவோ பேசுறீங்க!" என்ற தாமஸ்,
"என்னவோ எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு" என அவன் முகம் பார்க்காமல் தாமஸ் தயங்கி சொல்லியதில் அதிரன் புன்னகைக்க,
"ஆனாலும் நீங்க பொய் சொல்றிங்க என்கிட்ட. அதான் ஒரு மாதிரி ஆகிடுச்சு." என்ற தாமஸ் அதிரனைப் பார்க்க, அவன் கேள்வியாய் பார்த்து நின்றான் தாமஸ்ஸை.
"நீங்க நேத்து அஞ்சனா அண்ணன் கண்ணன்கிட்ட ரெஸ்டாரண்ட் வாசல்ல பேசிட்டு நின்னதை பார்த்தேன். ரெண்டு பேரும் க்ளோஸ்ன்ற மாதிரி பை சொல்லிக்கிட்டிங்க!" என்ற தாமஸ் அதிரனும் கண்ணனும் சிறு அணைப்பை கொடுத்து விடைபெற்றதை பார்த்ததை தான் அப்படி சொல்ல, கேட்ட அதிரனின் புன்னகை அங்கேயே தொலைந்து நின்றது.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.