தகிக்காதே குளிர்நிலவே..!(11)

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN46

Member
May 5, 2026
53
80
18
Chennai
அத்தியாயம் -11

உடல்நலம் சரியில்லாத பாரதிக்கு அருண்மொழி அவ்வளவு தூரம் மெனக்கெட்டு உதவியது நந்தினிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

வயிற்றிலும் காதிலும் புகை வராத குறை.

அதன் வெளிபாடே அவனது பணியிடை நீக்கம்.

குறைந்தது ஒரு‌ மாதத்திற்காவது பாரதியும் அருண்மொழியும் சந்திக்காமல் இருப்பார்களே என்ற குழந்தைத்தனமான நப்பாசை அவளுக்கு.

அவளின் அனுமதியின்றியே மெல்ல மெல்ல அவளுடைய இதயத்தை ஊடுருவி இருந்தான் அருண்மொழி.

தன் மனதினை ஆராய விருப்பமில்லாத பேதையவள் தேவையற்ற கோபத்தையும் வெறுப்பையும் அவன் மீது வளர்த்துக் கொண்டாள்.

“மேடம் சத்தியமா ட்ரிங்க்ஸ் நா ஏற்பாடு…” என்றவனை கையமர்த்தி, ” நீங்க போகலாம்னு சொன்னேன் . உங்க கிட்ட பேசுறதுக்கு எனக்கு விருப்பமில்லை..” என முகத்திலடித்தாற் போல பேசினாள்.

ஒரு பெருமூச்சுடன் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு வெளியேறினான்.

தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் நந்தினி.

அவளது மனம் குழம்பித் தவித்தது.

அவனை அவளது மனம் மிகவும் நாடுகின்றது. அதே சமயத்தில் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கின்றாள்.

அவனை மட்டந்தட்டி அவனை விரட்டிக் கொண்டே இருப்பதில் அவளுக்கு ஒரு பரம திருப்தி.

பாரதியுடன் அவனை இணைத்து பார்த்துவிட்டால் அவளது கோபம் தாறுமாறாக சென்று விடுகின்றது.

அவளது மனதில் அருண்மொழி நுழைந்து பல நாட்கள் ஆகிவிட்டதென்பதை உணரவில்லை பெண்ணவள்.

மனம் முழுவதும் குழப்ப ரேகைகள் சூழ்ந்திருந்தது.

அவளது அறையிலிருந்து வெளியே வந்தவன் அமுதனிடம்,” மச்சி…இன்னும் ஒரு மாசம் எனக்கு அஃபிஷியலா லீவ் குடுத்த இருக்காங்க. அடுத்த மாசம் தான் இனி ஆஃபிஸ்க்கு வருவேன். " என்றபடி அவனருகே அமர்ந்தான்.

“ஏன் டா? என்ன ஆச்சு?”

“ நான் தான் பார்ட்டில சரக்கு ஏற்பாடு பண்ணுனேனாம். அதான் ஒரு மாசம் சஸ்பென்ஷன் குடுத்திருக்காங்க. தட்ஸ் ஓகே. மெதுவா தூங்கி மெதுவா எழுந்துக்கலாம். “ என்று கூறி சோம்பல் முறித்தான்.

“அடேய்…இதெல்லாம் அநியாயம் டா.‌ அந்த பரணி எருமை பண்ணுன வேலையினால தேவையில்லாம உனக்கு ஏன்டா சஸ்பென்ஷன்? இரு நானும் பரணியும் போய் சொல்லுறோம். எனக்கென்னவோ உன்னை மட்டும் வேணும்னே வைச்சு செய்யுற மாதிரி தெரியுது டா. “ என்று கூறி எழ முற்பட்டவனை கைப்பிடித்து அமர வைத்தவன், ”அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. நான் பாத்துக்குறேன். நீ உன்னோட வேலையை மட்டும் பாரு. பரணி பேரை இதுல இழுக்காதே…விட்டுடு.‌ ஒரு வேளை இந்த ஒரு மாசம் என்னை பார்க்கமா இருந்தா அவளுக்கு என் மேல லவ் வரலாம் இல்லையா?” என்று நப்பாசையில் கூற அவனை ஒரு மார்க்கமாக பார்த்த அமுதனோ தலையில் அடித்துக் கொண்டு, "திருந்தவே மாட்ட டா நீ..” என்று கணினியில் பார்வையை பதித்தான்.

மறுநாள் அலுவலகத்திற்கு வந்த பாரதியும் விஷயத்தை கேள்விப்பட்டு அவளது பங்கிற்கு அவளும் பேசிப் பார்த்தாள்.

காதல் பித்து அதிகமாகி அவனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தான்.

பாரதிக்கு கோபமாக வந்தது .

நேரே நந்தினியிடம் போய் நின்றாள்.

“மேடம் அருண்மொழியை சஸ்பெண்ட்‌ பண்ணிருக்கீங்களா?”

“ தட்ஸ் தன் ஆஃப் யுவர் பிசினஸ் “ என்றாள் பட்டென்று.

“சாரி…மேடம். எனக்குத் தேவையான பிசினஸ் தான். அருண்மொழி மேல எந்த தப்பும் இல்லை. ஜூஸ்ல டிரிங்க்ஸ் கலந்தது பரணி தான். நீங்க என்னவோ வேணும்னே அருண்மொழியை டார்கெட் பண்ணுறது போல தோணுது.” என்றாள் அழுத்தமாக.

அவளது குரலில் இருந்த அழுத்தமும் அருண்மொழிக்காக பரிந்து கொண்டு அவள் பேசியதும் நந்தனிக்கு எரிச்சலை உண்டாக்கியது.

கேலியான குரலில், "நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். இந்த விஷயத்தை இங்க இருக்குற யாரும் வந்து என் கிட்ட சொல்லல. ஏன் சம்பந்தப்பட்ட பரணியே வந்து கூட சொல்லல.‌ அப்படியென்ன உங்களுக்கு மட்டும் அருண்மொழி மேல என்ன தனி அக்கறை?” என்றாள் புருவத்தை உயர்த்தி.

அவளது எரிச்சலூட்டும் பேச்சு பாரதிக்கு புரியாமல் இல்லை. வேண்டுமென்றே தர்க்கம் செய்கின்றாள் என்று புரிந்தது.

பாரதி அமைதியாக நின்றாள்.

“சொல்லுங்க மிஸ் பாரதி. அருண்மொழிக்கு இப்படி பரிஞ்சிக்கிட்டு வர்றீங்க. அப்படியென்ன அக்கறை அவர் மேல?” என்றாள்‌.

அவளது மேசையின்‌ மீது இரு கைகளையும் ஊன்றிய பாரதி நந்தினியின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,” கட்டிக்கப் போறவர் மேல நான் தானே மேடம் அக்கறை பட முடியும்? வேற யார் அக்கறை காட்டுவா? அவருக்காக நான் தானே பேச முடியும்? நீங்களா அவருக்காக பேசுவீங்க? சீக்கிரம் கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ண‌ச் சொல்லணும். கல்யாணத்துக்கு கண்டிப்பா உங்களுக்கு அழைப்பு உண்டு…”என்றாள் அவளை விட எள்ளலாக .

நந்தனியோ ,” ஆல் தி பெஸ்ட் பாரதி. உங்க லவ்வை முதல்ல சொல்லுங்க. அப்பறம் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க” என்றாள் சின்னச் சிரிப்புடன்.

அதில் இன்னும் புகைந்தது பாரதிக்கு.

அவளும் விடாமல் நந்தினியை தாக்கும் நோக்கில், "கவலைப்படாதீங்க மேடம் அவரால உங்களுக்கு இனி தொல்லை இருக்காது. விருப்பமில்லாத பொண்ணை தொந்திரவு பண்ண மாட்டார். ஹீ இஸ் எ ஜெம். வாழ்க்கை ஒரு பொண்ணோடவே முடிஞ்சிடாது இல்லையா? உலகத்துல பொண்ணுங்களுக்கா பஞ்சம்? அதுவும் அவரை நல்லா புரிஞ்சி வச்சிருக்குற நானே கூடிய சீக்கிரம் என்னோட லவ்வை சொல்லி அவரை கல்யாணம் பண்ணிக்குறேன் மேடம்…அண்ட் உங்க வாழ்த்துக்கு ரொம்பவே நன்றி" என திமிராகவே கூறிவிட்டு வெளியேறினாள்.

‘பாரதியின் சிபாரிசில் அருண்மொழியை மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ளவதா?’என்ற வீம்பினால் அவனது இடைநீக்கத்தை ரத்து செய்யவில்லை நந்தினி.

பாரதிக்கு நந்தினியின் செய்கை எரிச்சலை மூட்டினாலும் நந்தினியுடன் அலுவலக விஷயத்தை தவிர வேறெதுவும் அதன் பின்னர் அவளிடம் பேசிக் கொள்ளவில்லை .

ஒரு மாதம் எப்படி கழிந்ததென்றே தெரியவில்லை.

அலுவலகத்திற்கு வந்திருந்தான் அருண்மொழி.

வழக்கம் போல அவனை சூழ்ந்து கொண்டது அவனது நண்பர்கள் பட்டாளாம்.

பாரதியும் தன் பங்கிற்கு அவனுடன் நெருக்கமாக இணைந்து நின்றிருந்தாள்.

வெளியே நடப்பதனைத்தையும் தனது அறைக்குள் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஏற்கனவே பாரதி ஏற்றி விட்டுச் சென்ற நெருப்பு மனதில் கனன்று கொண்டிருந்தது.

நாட்கள் மெல்ல நகர்ந்தது.

அருண்மொழி நந்தினியை விரும்புவது பாரதிக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் அவனுக்கான நேசத்தை மனதில் மறைத்து வைத்திருக்க முடியாது அவனிடம் கூற முடிவெடுத்தாள்.

அன்று மாலை அனைவரும் அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டனர்.

அமுதனும் அருண்மொழியும் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“ அருண்…வேலை முடிஞ்சதுன்னா பார்க்கிங் ஏரியாவுக்கு வா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “ என்றாள்.

“அவன் கிட்ட உனக்கென்ன தனியா பேசணும்?” என்று கூறி அவளை முறைத்தான் அமுதன்.

“ உன் வேலையைப் பாரு டா குரங்கே…!” என அவனது தலையில் நங்கென்று கொட்டிவிட்டுச் சென்றாள் பாரதி.

“போடி‌ பிசாசே..! “ என கத்தினான் அமுதன்.

திரும்பி அவனை முறைத்து விட்டு வெளியேறினாள்.

இருவரும் ஏதோ பேசியபடி வெளியே வந்தனர்.

“சரி‌டா மச்சான்…நாளைக்கு பாப்போம். என் ஆளு கிட்ட பேசினேன் டா. வீட்டுல பிரச்சனை ஆகிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியவைன்னு புலம்புறா. என்ன டா பண்றது?” என்றான் அமுதன்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுடா…பாப்போம். அவசரப்படாதே.!” என்றான் அருண்மொழி.

அமுதன் விடைப்பெற்றுச் சென்றவுடன் பாரதி அங்கு நின்றிருப்பதைக் கண்டு அவளருகே வந்து நின்றான்.

தீவிரமாக அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தவள், தன் முன்னே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.

அருண்மொழி தான் தலையை கோதியவாறு நின்றிருந்தான்.

"ஃபோனை ஆராய்ச்சி பண்ணி முடிச்சிட்டன்னா என்ன விஷயம்னு சொல்லலாமே..!” என்றான் .

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ நா சொல்றதைக் கேட்டு சிரிக்கக் கூடாது..” என்றாள் புதிராக.

“ நீ இப்படி சொன்னா தான் எனக்கு சிரிப்பு வரும். சீன் போடாம சீக்கிரம் விஷயத்தை சொல்லு…” என்றான் இரு சக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடியில் கேசத்தை கோதியபடி.

“ம்ம்ச்…என்னைப் பாரு அருண்..” என்று‌ அவனை தன் புறமாக திருப்பி, ”உன்னை மனப்பூர்வமா விரும்புறேன் அருண். நீ என்னோட லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நீ நந்தினியை தான் விரும்புறன்னு தெரியும். ஆனாலும் என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியல…ம்ம்ச்..!ஒருவேளை ஒருவேளை..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாது அவன் முகம் பார்த்து நின்றாள்.

அவனோ இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

பாரதிக்கு தான் செய்வது தவறு என்று தெரியும்.

ஆனால் மனதிலிருப்பதை மறைத்து பழக்கமில்லாதவள் பட்டென்று மனதில் உள்ளதை உடைத்து நேருக்கு நேராக கூறிவிட்டாள்.

“புரிஞ்சு தான் பேசுறீயா பாரதி..?நான் தான்…” என கோபத்துடன் கூற வந்தவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்த நந்தினியை பார்த்தான்.

திடீரென அவனுக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது.

வேண்டுமென்றே குரலை உயர்த்தி, "என்ன சொன்ன பாரதி? நீ சொன்னது சரியா கேக்கலை . கொஞ்சம் சத்தமா சொல்லேன்..” என்றான் ‌பார்வையை நந்தினியின் மீது பதித்தபடி.

பாரதிக்கு பின்னால் நந்தினி வந்து கொண்டிருந்தால் அவளுக்கு நந்தினி வருவது தெரியவில்லை.

“ நான் உன்னை காதலிக்கிறேன் அருண். உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன் டா. லைஃப் லாங் உன் கூட ட்ராவல் பண்ணனும் . உனக்கு அது…” என்றவளை கையமர்த்தி நந்தினியை பார்த்துக் கொண்டே, "எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் பாரதி…” என ஒரே வரியில் நந்தினியின் இதயத்தை நொறுக்கி விட்டான் அருண்மொழி.

பாரதியின் மிக அருகில் வந்து விட்டவள் பாரதி கூறியதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் என்றால் அதற்கு அருண்மொழி பதிலளித்ததை கேட்டு திகைத்தாள்.

அவளது முகத்தை ஒரு கணம் பார்த்தவன் அவளது திகைப்பை கண்டு திருப்தி அடைந்தவனாய், “ஓகே பாரதி…சீக்கிரமா கல்யாண ஏற்பாடு பண்ணச் சொல்றேன்.. எத்தனை நாள் தான் நானும் காத்திருக்குது? சோ இனி டைரக்டா கல்யாணம் தான்..” என நந்தினியை பார்த்துக் கொண்டே கூறி விட்டு சென்றான்.
 
Last edited:

Author: STN46
Article Title: தகிக்காதே குளிர்நிலவே..!(11)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
போச்சி போச்சி....என்ன டா பண்ணி வெச்சி இருக்க....இதில் பாரதி வேற என்ன பண்ணுவா
 
  • Like
Reactions: STN46

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
டேய் அருண், எல்லாத்தையும் ஈஸியாக எடுக்கிற மாதிரி பாரதியோட வாழ்வையும் எடுத்து விட்டாயே. இது எங்க போய் முடியுமோ