உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 13
தங்களின் பணத்தை அவன் எடுத்து செலவு செய்வதை கூட உரிமையில் தானே எடுத்துக் கொள்கிறான் தங்களிடமே திரும்பி வருவான் என ஹரிச்சந்திரனோடு அவர் மனைவியும் நினைத்திருக்க, அது அப்படி இல்லை என்பது இங்கே அதிரன் பேசியதில் தான் புரிந்தது.
"அது என்ன உங்க பணமா? என் பங்கும் இருக்கே! எனக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்பும் உங்களால. அதை உங்களை வச்சு சரி பண்ணிக்க முடியாது. அதனால தான் உங்க பணத்தை வச்சு சரி பண்ணிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். இருப்பேன். அதை நீங்க கேட்க கூட ரைட்ஸ் இல்ல!" என அதிரன் சொல்ல, அதிர்ந்து தான் நின்று கொண்டிருந்தார் அவன் முன் ஹரிச்சந்திரன்.
"வீட்டுக்கு நான் வர கூடாதுன்னு சொன்னிங்க. வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைனு சொன்னிங்க. அப்புறம் நான் எதாவது டிஸ்டர்ப் பண்ணினேனா உங்களை? இல்லை தானே? அப்புறம் ஏன் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?" என்றான் அதிரன் தந்தையிடம்.
"ஒரு கோவத்துல சொன்னா அப்படியே விட்டுடுவோமா?" ஹரிச்சந்திரன் கேட்க,
"விட்டுடுங்கனு தான் சொல்றேன். உங்களுக்கு நான் வேணும் ஆனா அஞ்சனா வேண்டாம்னா எனக்கு நீங்க யாருமே வேண்டாம். அவ மட்டும் தான் வேணும்" என்றான் அதிரன் ஸ்திரமாய்.
தந்தைக்கும் மகனுக்கும் நடுவே தான் மாட்டிக் கொண்டதை போல விழித்துக் கொண்டிருந்தான் தாமஸ்.
அதுவும் இது அஞ்சனாவைக் கொண்டு நடக்கும் பேச்சு வார்த்தை எனும் போது யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவும் முடியவில்லை தாமஸ்ஸிற்கு.
அவளுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி சொல்கிறான் இன்னுமே நிறைய கேள்விகள் இருக்க, இப்பொழுது தான் தோன்றியது அதிரனிடம் நிச்சயம் நியாயமான கேள்விகளும் இருக்குமென்று.
"நீங்க கிளம்பலாமே! இங்க இவ்வளவு தூரம் வந்தது போதாதா? இன்னும் உங்க வைஃபையும் கூட்டிட்டு வந்து ரோட்ல நிக்க வைக்க போறிங்களா?" என்றவன்,
"உங்களுக்கு தகுதிக்கு என் வீட்டுல நீங்க தங்க முடியாது. நானே வாடகை குடுத்துட்டு தான் இருக்கேன். சோ..." என்றவன் பேச்சில்,
"அதி! அப்பா சொல்றேன் கேளு டா. நீ ஒரு பக்கமா பார்த்துட்டு இருக்க. அந்த பொண்ணு தான் எல்லாத்துக்கும் காரணமே!" என்று அவர் பொறுமையாய் சொல்வதாய் நினைத்து பேச ஆரம்பிக்க,
"போதும்!" என்று கொஞ்சம் சத்தமாய் தான் கூறி இருந்தான் அதிரன்.
"சார்!" என அவன் சத்தத்தில் தாமஸ் அதிரனை அழைக்க,
"இங்கேயும் இந்த சீன் க்ரியேட் பண்ற வேலை வேண்டாம். போய் உங்க வேலையைப் பாருங்க. அவளைப் பேச உங்களுக்கு எந்த ரைட்ஸ்சும் இல்லை. பேசின வரை நிறையவே கேட்டாச்சு!" என்றான் கோபமான கோபமாய்.
"ரொம்ப தப்பு பண்ற அதி!" என மிரட்டல் குரலில் அவர் மீண்டுமாய் சொல்ல,
"நானா? நான் தப்பா?" என்றவன் ஒரு கசந்த புன்னகையை கொடுத்து,
"தாமஸ் வா போகலாம்!" என்றான்.
"தாமஸ்! நீ சொல்லு! அந்த பொண்ணு இவன் கூட தானே தங்கி இருக்கா?" என தாமஸ்ஸிடம் திரும்பி இருந்தார் ஹரிச்சந்திரன்.
அந்த வார்த்தையிலேயே அவ்வளவு கோபம் தாமஸ்ஸிற்கு. இப்படியா அதுவும் வேறு ஒருவனிடம் மகனைக் கேட்டு வைக்கிறாரே என்பதோடு அவர் கேட்டது அஞ்சனாவையும் சேர்த்து எனும் போது இன்னுமே அதிர்ச்சியும் கோபமும் சேர்ந்தது அவனுக்கு.
"சார்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!" என்றான் அதே கோபத்தோடு.
"தாட்ஸ் குட் தாமஸ். இன்னும் கூட நல்லா கேட்கலாம் நீ!" என்ற அதிரன், "வா டா!" என கைபிடித்து தாமஸ்ஸைக் கூட்டி சென்றான்.
காரில் ஏறியதும் "என்ன சார் இப்படி பேசுறாரு. கொஞ்சம் கூட சென்ஸ்..." என்று சொல்ல வந்த தாமஸ் வார்த்தைகளை நிறுத்த,
"ஹ்ம் சென்ஸ் இருந்தா தானே!" என்றான் அதிரனும்.
தாமஸ் வீட்டுக்கு செல்லும் வழிக்கு அதிரன் கார் நுழைய, பின்னே திரும்பி யாரும் வருகிறார்களா என பார்த்தான் தாமஸ்.
"வரலை. பார்த்துட்டேன்!" என்றான் அதிரன். தாமஸ் வீட்டு வாசலுக்கு முன் வண்டியை நிறுத்திய அதிரன் திரும்பி அஞ்சனாவின் வீட்டைக் கண்டான்.
"அஞ்சனா இப்ப எப்படி இருக்கா சார்? எனக்கு எந்த வித்தியாசமும் அவகிட்ட தெரியல அதான் கேட்குறேன். இது எப்ப சரியாகும்?" என்றான் தாமஸ் தயங்கியே.
"அது தெரிஞ்சா வெயிட் பண்ணிருப்பேனே டா. தெரியாம தானே தினமும் அவளைப் பார்த்து அவளை மட்டும் பார்த்துன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்" என்றவன் சொல்லில் அதிரன் நிலையும் பாவம் என்றே தோன்றியது தாமஸ்ஸிற்கு.
"ஹோப் இருக்கு. ஆனா தானா நடக்கனும். கஷ்டப்படுத்த கூடாது. அதான் வெயிட் பண்றோம்!" என்றான்.
"சார் அஞ்சனாக்கு தனக்கு இப்படி ஆனது தெரியுமா?"
"ஹ்ம் கொஞ்சம் கொஞ்சம். முழுசா தெரிஞ்சா ஹார்ட் வீக் ஆக வாய்ப்பு இருக்காம்!" என்றதும் தாமஸ் அதிர்ந்து "சார்!" என்றான்.
"அப்படி எதுவும் ஆக வேண்டாம். அவளுக்கே தெரியட்டும்னு தான் இப்படி காத்துட்டு இருக்கேன். இவர் வந்து இப்படி தொல்லை பன்றார்!" என்றான் அதிரன் பெருமூச்சுடன்.
"ஓகே டா! நீ பார்த்து போ!" என்ற அதிரன்,
"அண்ட்! எதுவா இருந்தாலும் நேரா கேளு டா. ஒரு பிரண்ட்டா அதின்னு கூப்பிட சொன்னேன். இப்ப வரை ஃபால்லோவ் பண்ணல நீ. ஆனா கோவம் மட்டும் வருதில்ல உனக்கு நான் ஒரு விஷயம் மறைக்குறேன்னு!" என்றதில் தாமஸ் விழிக்க,
"நீ சாப்பிட வராதப்பவே ஒரு டவுட்டு தான் என்னவோன்னு. ஸ்கூல் பசங்க மாதிரி வந்து மூஞ்சை தூக்கிட்டு நின்னியே! சிரிப்பு தான் வந்துச்சு" என்று சொல்லவும் சங்கோஜமாய் பார்த்தபடி காரில் இருந்து இறங்கினான் தாமஸ்.
"அப்படி எங்க தான் போவீங்க ரெண்டு பேரும் அடிக்கடி?" என்ற குரலில் தாமஸ் உடனே திரும்ப, காரின் கண்ணாடிவழி அந்த குரலின் உடையவளைக் கண்டான் அதிரன்.
"உங்களுக்கும் தான் சார்! மதியம் நம்மள விட்டுட்டு சாப்பிட்டார் தானே! இப்ப அவர் கூட சேர்ந்துட்டிங்க இல்ல நீங்களும்?" என அஞ்சனா அதிரனிடம் கார் கண்ணாடி திறந்திருந்ததில் அந்த பக்கம் வந்து கேட்க, தாமஸ் உண்மை தெரிந்ததில் பேச்சச்சு அஞ்சனாவையும் அதிரனையும் மாறி மாறிப் பார்த்தான்.
"ஹ்ம் ஆமா அஞ்சனா! ரொம்ப கோவமா இருந்தான். அதான் ஒரு காபி வாங்கிக் குடுத்து சில் பண்ணி கூட்டிட்டு வந்தேன்!" என்று அதிரன் சொல்ல,
"சார்!" என அதிர்ந்து விழித்தான் தாமஸ்.
"ஆமா டா கோவமா தானே இருந்த?" என்ற கேள்வி வேறு அதிரன் கேட்க,
"நிஜமாவா ண்ணா?" என பிடித்துக் கொண்டாள் அஞ்சனா.
"அய்யோ அதெல்லாம் எதுவும் இல்லை டா. நீ என்ன இந்நேரம் வெளில வந்திருக்க?" என்றவன் கைகளில் சாவியையும் ஒரு டப்பாவையும் கொடுத்தவள்,
"உங்க தம்பி ஊருக்கு போய்ட்டாராம். சாவியை அம்மாகிட்ட குடுத்துட்டு போயிருக்காங்க. அதான் அம்மா உங்களுக்கும் சேர்த்து டிபன் பண்ணிட்டாங்க!" என்றாள்.
"ப்ச்! லக்கி டா நீ!" அதிரன் சொல்ல,
"எது இந்த டிபன்க்கா?" என்று இலகுவாய் சிரித்த அஞ்சனா,
"நீங்களும் வேனா வாங்க சார்! அம்மாவை இன்ட்ரோ பண்றேன்!" என்றாள்.
அவள் என்னவோ சிரித்தபடி இயல்பாய் சொல்லிவிட தாமஸ் தான் உண்மை அறிந்து அசைய முடியாமல் நின்றான்.
"கண்டிப்பா ஒரு நாள் வருவேன்!" என்று சொல்லி தான் கிளம்பி இருந்தான் அதிரன்.
"ண்ணா! போய் சாப்பிட்டு தூங்குங்க. குட் நைட்!" என அதிரன் கிளம்பியதும் தாமஸ்ஸிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பிவிட்டாள் அஞ்சனா.
மனம் முழுதும் பாரமாய் இருக்க, இப்படி இத்தனை பிரச்சனை நெருக்கடியோடு இருப்பவருக்கு தானும் அவர் தந்தையை வர வைத்து இன்னும் பிரச்சனையை கொடுத்துவிட்டோமே என்றிருந்தது தாமஸ்ஸிற்கு.
வீட்டிற்கு வந்த அஞ்சனாவிடம் பாலைக் கொடுத்து மாத்திரையையும் நீட்டி இருந்தார் ராஜேஸ்வரி.
எதுவும் கேட்காமல் வாங்கி போட்டுள் கொண்ட அஞ்சனா அடுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டாள்.
கண்ணன் வந்தவன் தங்கையை கண்டுவிட்டு தான் சாப்பிட அமர்ந்தான்.
"ஒண்ணு நீ கல்யாணம் பண்ணிக்கோ கண்ணா! இல்ல அவளுக்காவது மாப்பிள்ளை பாரு!" என ராஜேஸ்வரி எப்போதும் போல மகனிடம் சொல்ல, தங்கையை இப்படி பார்த்துக் கொண்டு திருமணம் செய்து கொல்ல இஷ்டம் இல்லாதவன் தங்கைக்காக அதிரன் காத்திருப்பதை அன்னையிடம் சொல்ல முடியாமல் அமைதி காத்தான்.
"அவளுக்கு பழசெல்லாம் நியாபகம் வருதோ வரலையோ இன்னும் நாம இப்படியே எப்படி இருக்க முடியும்? ரெண்டு பேருக்குமே வயசாகிட்டு போகுதே!" என்றார் அன்னை.
"ம்மா! என்ன வேணும்னா அப்படியே இருக்கோம்? என்னனு சொல்லி அவளுக்கு கல்யாணத்தை பண்ண? இல்ல அவளை இப்படி வச்சுட்டு நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க? இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் ம்மா. அப்புறமா இதெல்லாம் பேசுவோம்!" என எப்போதுமான பதிலை தான் இப்பொழுதும் கூறி இருந்தான் கண்ணன்.
"உங்களுக்கு என் கவலை எங்க புரிய போகுது? சுத்தி இருக்கவங்க எல்லாம் என்கிட்ட தானே கேட்குறாங்க!" என்ற அன்னை, பெற்றவறாய் கலங்கி போய் தான் இருந்தார்.
மகளுக்கு நியாபகம் வந்தாலும் கஷ்டம் தான் இவருக்கு. வரவில்லை என்றாலும் கஷ்டம் தான் என்ற நிலை.
ராஜேஸ்வரி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கண்ணனுக்கு அழைத்துவிட்டான் அதிரன்.
அவரிடம் ஆறுதலாய் பேசிவிட்டு தனியே வந்து அழைப்பை கண்ணன் ஏற்க, அன்றைய தினத்தை மொத்தமாய் அவனிடம் ஒப்புவித்தான் அதிரன்.
"என் கண்ணுல அந்த மனுஷனை பட சொல்லிடாத அதி! அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்!" என்ற கண்ணன் குரலின் கோபத்தையும் ஆதங்கத்தையும் அதிரனை விட யாரால் அறிந்திட முடியும்?.
"அம்மா இப்ப தான் கல்யாணம்னு பேசிட்டு இருந்தாங்க!" என்று கண்ணன் சொல்ல,
"ஹ்ம்! பண்ணிக்குறேன் டா! குடுத்துடு" உடனே வந்தது அதிரன் குரல். அதில் கண்ணன் புன்னகைத்து,
"சரி தான்! அப்பாவைப் பார்த்ததும் ரொம்ப பொங்குறியே!" என்று கிண்டல் பேசிய கண்ணன்,
"நான் சொன்னது என் கல்யாணம்!" என்றான்.
"பண்ணிக்கோ! எப்படியும் எல்லாரும் பண்ணி தானே ஆகணும். அப்படியாவது அவளும் கொஞ்சம் நிம்மதியா சந்தோசமா இருக்கட்டும்" என்றான் அதற்கும் உடனேயே.
"பண்ணுவோம்! எல்லாருக்கும் நல்லது நடந்தா தானே நானும் எல்லாத்தையும் யோசிக்கலாம். முதல்ல உன் அப்பாக்கு இருக்கு. அதுக்கப்புறம் தான் அடுத்த நல்ல காரியம் எல்லாம்!" என்று சொல்ல,
"சனாவை நீ பாரு டா. அந்தாளை நான் பாத்துக்குறேன்!" என்றிருந்தான் அதிரன்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.