உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 14
காலை பதினோரு மணி. கம்பெனி உள்ளே வரும் பொழுதே கொஞ்சம் சோர்வாய் தான் தெரிந்தான் அதிரன்.
வழியில் காலை வணக்கம் சொல்லியவருக்கு பதில் வணக்கம் கொடுத்து வந்தாலும் களைப்பு அதிகமாய் தெரிந்தது அவன் முகத்தில்.
"எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என அதிரன் அறை கதவை தட்டி தாமஸ் காத்திருக்க,
"வா டா!" என்ற குரல்.
"சார்! உங்க அப்பா காலைலே வந்துட்டாங்க!" என்று தாமஸ் சொல்லி அவன் முகம் பார்த்துவிட்டு,
"என்ன சார் ரொம்ப டயர்டா தெரியறீங்க? கண்ணெல்லாம் சிவந்திருக்கு?" என்றான்.
"தூக்கம் வரலையேனு நைட்டெல்லாம் முழிச்சுட்டு இருந்துட்டு மார்னிங் தான் தூங்கினேனே. அதான் லேட்டாகிருச்சு. மேடம் வந்தாச்சா?" என அஞ்சனாவைக் கேட்கவும் தாமஸ் புன்னகைத்து தலையாட்ட,
"ஓகே! நான் வந்து பாக்குறேன். அந்த ஆள் எங்க? போய்ட்டாரா?" என்றான் தந்தையை.
"இல்லயே சார். வெளில தான் நிக்கிறாங்க. நீங்க பாக்கலையா?" என்றான்.
"பார்க்காத வரை நல்லது. விடு. நீ சாப்பிட்டியா?" என்றவன் அடுத்து வேலைகளைப் பற்றி கவனித்து பேச, ஹரிச்சந்திரன் அவன் அறை கதவை தட்டி நின்றார் வெளியே.
"வாங்க!" என்ற அதிரன் தந்தையை எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சலித்துக் கொண்டவன்,
"இங்க வேலை நடக்குற இடத்துல என்ன வேலை உங்களுக்கு?" என்றவன்,
"செக்யூரிட்டி இல்லையா வெளில?" என்றான் தாமஸ்ஸிடம்.
"ரொம்ப பண்ற அதி. அவ்வளவு தான் உனக்கு.... நாலு நாளா நான் எங்க தங்கி இருக்கேன். என்ன பண்றேன்.. எதாவது தெரியுமா டா உனக்கு? உன்னை பெத்ததுக்கு என்னை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க தெரியுமா நீ?" என அத்தனை கோபமாய் அடிவயிற்றில் இருந்து கேட்டார் ஹரிச்சந்திரன்.
"சார்! நான் வேலையை கவனிக்குறேன்!" என்ற தாமஸ் அதன்பின் அங்கே நிற்கவே இல்லை.
"அடுத்தவன் முன்னாடி என்னை என்னல்லாம் பேசுற? மனுஷனா டா நீ? இங்க பார்! ஒண்ணு என்னோட வர்ற வழியைப் பாரு. இல்ல இங்க தான் இருப்பேன்னா அதுக்கான காரணத்தை சொல்லு. அவ ஏன் தனியா வர்றா? நீ எங்க இருக்க? வேணும்னே அவளை அனுப்பிட்டு நீ வர்றியா? என்னை கண்டுக்காத மாதிரி போறா. அவ தூண்டிவிட்டு தானே நீ இப்படி பண்ற?" என்றவரை கண்களில் ஜீவனின்றி பார்த்து வைத்தான் அதிரன்.
"என்னோட கம்பெனிக்கு வந்து வேலை நடக்க விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கிங்க நீங்க. இதுக்கு நான் ஆக்ஷன் எடுக்கலாம். தெரியுமா தெரியாதா?" என்றவன்,
"உங்களோட வர்றதுக்காக உங்களைவிட்டு இங்க நான் வர்ல. இங்க நான் இருக்குற காரணத்தையும் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல. சொல்லிட்டே இருக்க மாட்டேன். கம்பளைண்ட் குடுத்துட்டு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்!" என்று சொல்ல, ஹபைசந்திரனுக்கு அவனை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
மலைத்து தான் நின்றார் அந்த நிமிடம். கெஞ்சவும் செய்தாகிற்று மிரட்டியும் பார்த்தாகிற்று. இதற்குமேல் என்ன செய்ய என அவர் பார்க்க,
"நீங்க எங்க தங்கி இருந்தா... என்ன பண்ணினா தான் எனக்கு என்ன? இங்க பெத்த பையனை தேடி வந்த உங்களுக்கு அவ்வளவு வலிக்குதுன்னா... என்னை என்ன நிலமைல விட்டிங்கனு மறந்து போச்சா உங்களுக்கு? அப்பவும் உங்களை சும்மா விட்டுட்டு வந்தேனேனு நீங்க சந்தோஷம் தான் படனும். இப்படி வந்து பொங்கக் கூடாது!" என்று சொல்ல,
"டேய் அதி! நான் சொல்றதை கேளு டா. அந்த பொண்ணு நல்லவளே இல்ல..." என சொல்லும் முன் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து எழுந்து கொண்டான் அதிரன்.
"கெட் அவுட்!" என்ற வார்த்தையோடு.
"அதி நான்...."
"இதுக்கு மேல எதாவது பேசினீங்க... மனசாட்சினு ஒண்ணு இருக்கா இல்லையா உங்களுக்கு? மொத்தத்தையும் விட்டு ஒருத்தி உலகம் தெரியாம என்ன பாடு பாடுறானு தெரியாம என்ன வார்த்தை சொல்றிங்க அவளை..." என்றவன்,
"மனசாட்சி பத்தி உங்ககிட்ட போய் பேசுவேனா... வெளில போங்க!" என்ற போது மீண்டும் கதவு தட்டப்பட, தன்னை நிதானத்துக்கு கொண்டு வர முயன்று வாசலை கைகாட்டினான் அதிரன் தன் தந்தைக்கு.
"எக்ஸ்கியூஸ் மீ சார்!" என்ற அஞ்சனா குரலில் தந்தையை அழுத்தமாய் பார்த்துவிட்டு "கமின்!" என அவன் குரல் கொடுக்க, காலை வணக்கத்தோடு உள்ளே வந்து நின்றவளை கண்களில் அத்தனை வஞ்சத்தோடு பார்த்து நின்றார் ஹரிச்சந்திரன்.
அவர் பார்வையைக் கண்டவனும், "நீங்க போகலாம் சொன்னேன்!" என சத்தமாய் சொல்ல, ஒரு நொடி பக்கென்றானது அஞ்சனாவிற்கு உள்ளுக்குள்.
"சாரி! நீங்க சொல்லுங்க!" என அவன் கேட்கவும்,
"இந்த டிசைன் சரியா வரலை சார். அங்கிள் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க!" என அவள் சொல்லவும் அவள் கையில் இருந்த துணியின் மெட்டிரியலைப் பார்த்துவிட்டு தனது முன் இருந்த லேப்டாப்பில் அதை அதிரன் ஆராய ஆரம்பிக்க, தயங்கியபடி திரும்பி அங்கே நின்றவரைப் பார்த்தாள் அஞ்சனா.
அவள் பார்க்கும் நேரம் அதிரனைப் பார்த்துவிட்டு அவரும் அஞ்சனாவை அதே கோபத்தோடுப் பார்க்க, விழி சுருக்கியவள் பின் அதிரனைப் பார்க்க,
அதிரனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் அவரை.
மேஜையில் கையூன்றி முறைப்போடு மீண்டும் அதிரன் அவரைப் பார்த்தபின் தான் அங்கிருந்து நகரவே செய்தார் அவர்.
அவர் கதவை திறந்து வெளியே சென்று கதவு மூடிக் கொள்ளும் வரை அஞ்சனா அங்கேயே பார்த்து நிற்க, அதிரன் அதுவரையிலும் அவளைப் பார்த்திருந்தான்.
"அவரைத் தெரியுமா உங்களுக்கு?" என்று அதிரன் கேட்கவும் அஞ்சனா அவனைப் பார்க்க,
"பார்த்த மாதிரி எதுவும்?" என்றான் மீண்டும்.
"உங்க அப்பா தானே சார்?" என்றவள் சொல்லில்,
"ஹ்ம்!" என சலித்துக் கொண்டவன் "அந்தளவுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாம்!" என முணுமுணுக்க, தான் கேட்டதற்கான பதிலை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள்,
"தாமஸ் அண்ணா! உங்க பிரண்ட் அவர் அப்பா மேல உள்ள கோவத்தை என்கிட்ட காமிச்சுட்டார் தெரியுமா?" என முகத்தை உம்மென வைத்து சொல்ல, சிரித்தான் அவன்.
"ஏன் என்ன சொன்னாங்க?" என கேட்கவும்,
"சும்மா அவங்க அப்பாவாச்சே இப்படி சத்தம் போட்டுட்டாரேனு தான் பார்த்தேன். உங்களுக்கு அவரை தெரியுமான்னவர் என்னவோ முணுமுணுன்னு என்னை திட்ட வேற செஞ்சார்!" என்று அஞ்சனா சொல்ல, அதிரன் கேட்ட விதம் என்னவாய் இருக்கும் என்பதோடு அவள் புரிந்து கொண்ட விதமும் வேறு என புரிந்தது தாமஸ்ஸிற்கு.
இப்பொழுது இருக்கும் நாளை மட்டும் தான் அவள் சாதாரணமாய் கடந்து கொண்டிருக்கிறாளே தவிர்த்து தன் கடந்த கால வாழ்க்கையை அவள் பெரிதாய் எடுத்துக் கொண்டு அதை தேட அவள் முனையவில்லை என்பது தான் உண்மை.
இப்பொழுது அதிரனை குறை சொல்லிவிட்டு அவள் நகர, தாமஸ் அஞ்சனாவைப் பற்றிய சிந்தனையோடு வேலையை தொடர்ந்தான்.
"இன்னைக்கு எங்களோட சாப்பிட வருவியா இல்லையா டா?" என அதிரன் அழைத்து கேட்டதும்,
"இதோ வர்றேன் சார்!" என மதிய இடைவெளியில் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
அதிரன் அஞ்சனாவோடு தன் தந்தை பற்றிய சிந்தனையில் இருக்க, தாமஸ் அஞ்சனாவை பற்றி தான் அந்த நேரம் நினைத்துக் கொண்டிருந்தான்.
மூவரும் அமைதியாய் உண்ண, அஞ்சனா தான் அதிரனைப் பார்க்கவும் தாமஸ்ஸை பார்க்கவுமாய் இருந்தாள்.
"ஏன் அப்படி பாக்குற?" நீண்ட நேர அவள் பார்வையில் அதிரன் கேட்டுவிட, அதில் தான் தாமஸ் கூட எண்ணம் கலைந்து நடப்புக்கு வந்தான்.
"ஏன் இப்படி சைலன்ட்டா சாப்பிடுறிங்கனு தான் பார்த்தேன் சார்!" என்றாள் அஞ்சனாவும்.
"ஆமால்ல!" என்ற அதிரன்,
"என்ன தாமஸ்? இன்னும் கோபமா என்ன?" என்று கேட்க,
"இல்ல சார்.. சும்மா தான் ஏதோ யோசனையா இருந்துட்டேன்!" என்றவன்,
"ஏன் அஞ்சனா! உன் அண்ணா இப்ப ஒர்க் பண்ற பிளேஸ் எப்படி?" என்று அவளிடம் கேட்க,
"அவங்க எத்தனை வருஷமா அங்க ஒர்க் பன்றாங்க?" என்றான்.
"ஏன் டா ஜாப் மாற போறியா என்ன?" அதிரன் கேட்க,
"எது தாமஸ் அண்ணா உங்களை விட்டு போறதா?" என்றவளை மிதமாய் தாமஸ் முறைக்க, அதிரன் சிரித்துக் கொண்டான் அவள் பதிலில்.
"சொல்லு அஞ்சனா!"
"ஒரு வருஷம் ஆயிடுச்சு. அவங்களுக்கு ஐடி ஒர்க் நல்லாவே செட் ஆகிடுச்சு!" என்றாள்.
"நீயும் தான் மாஸ்டர் டிகிரி முடிச்சிருக்கியே! ஏன் உன் அண்ணா கூட நீ போகல?" என அடுத்ததாய் கேட்க,
"அது....." என்றவளை அதிரனும் கேள்வியாய் தான் பார்த்து நின்றான்.
"உனக்கு செட் ஆகலையா என்ன?" தாமஸ் மீண்டும் கேட்க,
"நான் தான் போனதே இல்லையே!" என்றவள்,
"என்னவோ அதுல இன்ட்ரெஸ்ட் வர்ல. இங்கேயுமா அம்மா போக வேண்டாம்னு தான் சொன்னாங்க. அண்ணா தான் பேசி கண்வின்ஸ் பண்ணி அனுப்பிவிட்டாங்க!" என்றாள்.
'போனதே இல்லையா?' என அவளைப் பார்த்த அதிரன் அவளை முதன்முதலில் பார்த்ததே அவளது ஐடி அலுவலகத்தில் தான்.
"இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்க இருந்திங்க?" என மீண்டும் தாமஸ் அவளிடம் கேட்க, அதிரனுக்கு தாமஸ் பேசுவது புரிந்தது.
"எங்க இருந்தோம்னா நேட்டிவ் காஞ்சிபுரம். அப்புறம்... கொஞ்சநாள் சென்னைல இருந்தோம்... அப்புறம் தான் இங்க வந்தோம்!" என அன்னை தன்னிடம் அவ்வபோது சொல்லியதை நியாபகத்தில் கொண்டு வந்து அவள் சொல்ல, அதிரன் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
"எந்த காலேஜ் படிச்ச நீ? யூஜி பிஜி ரெண்டும் ஒரே காலேஜா இல்லை வேற வேறயா?" என தாமஸ் ஒவ்வொன்றாய் அவளிடம் கேட்க, அனைத்தையும் கூறினாலும் அனைத்தும் அவள் செவி வழி அறிந்த செய்திகள் தான்.
"இப்பவே உங்க வீட்டுல ஒரு பாசிட்டிவ் வைப் இருக்கு. அப்போ நீ உன் அண்ணா எல்லாம் காலேஜ் படிக்கும் போது இன்னும் ரகளையா இருந்திருக்கும் இல்ல அஞ்சனா?" என்று தாமஸ் விடாமல் கேட்க,
'ஏன் டா?' என்ற பார்வையை அதிரன் கொடுக்க, தலையசைத்து கண்ணமர்த்தினான் தாமஸ்.
அதுவரை கலகலப்பாய் இருந்த அஞ்சனா அதன்பின் தன்னைப் பற்றிய சுய அலசலுக்கு விடை தேடி சென்றிருந்தாள்.
அவள் காணாமல் சென்ற கணங்களை நினைவில் கொண்டு வர நினைக்க, அந்த நாட்கள் எல்லாம் அழகாய் கண்முன் விரிந்தது அதிரனுக்கு.
விடை தேடி கண்டு கொள்ள முடியவிட்டாலும் அதில் அதிகமாய் தேங்கிட நினைக்கவில்லை பெண்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.