உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 18
கண்ணனுக்கு விருப்பமில்லை என்றதோடு அதிரன் அஞ்சனாவை நினைக்காமல் எல்லாம் இல்லை.
நான் இப்படி தான். என் காதல் அவள் தான் என நேராய் அவன் மறுப்புக்கும் மறுப்பு வைத்தான்.
"புரிஞ்சிக்கோ அதி! இதெல்லாம் சரி வரவே வராது!" என்று கண்ணன் சொல்ல,
"ஓகே! அஞ்சனா ஓகே சொன்னா?" என்ற அதிரன் கேள்வியில்,
"திமிரா டா உனக்கு. நான் வேண்டாம்னு உன்னை சொல்லிட்டு இருக்கேன். அவகிட்ட பேசுறேன்னு நிக்குற?" என கண்ணன் கோபமாய் சொல்ல,
"லிசன் கண்ணா! சும்மா ஜஸ்ட் லைக் தட்ன்னு நான் உன்கிட்ட இதை பேசல. அஞ்சனா தான் மை எவரிதிங்க்னு முடிவு பண்ணிட்டு தான் பேசினேன். இப்ப நீ வேண்டாம்னு சொல்லவும் நான் எப்படி பேக்கடிக்க முடியும்?" அதிரன் நியாயமாய் கேட்டான்.
"உன் வீட்டுல என்ன சொல்லுவாங்கனு நினைச்சுப் பார்த்தியா? என்ன டா உளறிட்டு இருக்க?" என்ற கண்ணனுக்கு எப்படி புரிய வைப்பது இவனுக்கு என்றே தெரியவில்லை.
"என்ன சொல்லுவாங்க? அம்மா அப்பாக்கு நான் ஒரே பையன். எனக்கு பிடிச்சது அவங்களுக்கு எப்படி பிடிக்காம போகும்?" என்றளவில் மட்டும் தான் அதிரனின் சிந்தனை இருந்தது.
"ஓகே! உனக்கு இஷ்டமில்லைனு உன் முகத்துலேயே தெரியுது. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அஞ்சனாவை. சோ ஒரே ஒரு டைம் சனாகிட்ட பேசிப் பாக்குறேன். அவ வேண்டாம்னு சொன்னா... ஐம் ப்ரோமிஸ் நான் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்!" என்ற அதிரனை அணைத்துக் கொண்டான் கண்ணன்.
அவனுக்கு மட்டும் அதிரனைப் பிடிக்காதா என்ன? ஆனாலும் அதிரனின் மொத்தமும் தங்களில் இருந்து வேறே! என அவன் கலங்க,
"உனக்கும் நடந்தா நல்லாருக்கும்னு தோணுது தானே?" என கண்ணனிடம் கண் சிமிட்டி சிரித்துவிட்டு அன்றே அஞ்சனாவிடாமும் பேசினான் அதிரன்.
"நீ எதாவது பேசி அவளை கன்ஃபியூஸ் பண்ணிடாத. நானே பேசிக்குறேன்!" என கண்ணனிடம் சொல்லிவிட்டு தான் அவளுக்கு அழைத்து பேசினான்.
வழக்கமான நல விசாரிப்புகளுடன் எளிதாய் இலகுவாய் தான் ஆரம்பித்தது அவர்களின் உரையாடல்.
பேச்சு தொடர, "அண்ணா இல்லையா?" என அஞ்சனாவே கேட்ட பின் தான் அமைதியாகி விஷயத்திற்கு வந்தான் அதிரன்.
"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சனா. அதான் கால் பண்ணினேன்!" என்றவன் அழைத்த விதத்தில் அஞ்சனா பக்கம் பெரும் அமைதி.
எத்தனையோ முறை அவனோடு இப்படி பேசி இருக்கிறாள் என்றாலும் இந்த சனா என்ற அழைப்பு இன்று தான் அவனிடம் இருந்து வந்திருக்க, சட்டென்று விழித்துக் கொண்டது அஞ்சனாவின் மனம்.
"ஆர் யூ தேர்?" அதிரன் கேட்க,
"ஹ்ம்!" என்றாள். அதற்குள் மனதுக்குள் ஒரு சுய அலசல் வேறு.
"நத்திங் டா. கண்ணாகிட்ட பேசினேன். அவனுக்கு என்னோட ஃபியூச்சர் பிளான் பிடிக்கலைனு சொல்றான். அதான் உன்கிட்ட கேட்கலாம்னு கால் பண்ணினேன்!" என்றவன் பேச்சில் தான் தான் அதிகமாய் நினைத்துவிட்டோமோ என தலையில் தட்டிக் கொண்டவள்,
"அப்படியா? ஏன் அவனுக்கு பிடிக்கல? அண்ணாவையும் பார்ட்னரா சேர்த்துக்க போறேன்னு சொன்னிங்களா? அண்ணாலாம் அதுக்கு சரிபட்டு வராது. அண்ணாக்கு நிறைய அம்பிஷன் இருக்கு. நீங்க தான் உங்க அப்பா ஆபீஸ்ல போய் காலாட்டி உக்காந்திடலாமே!" என விளையாட்டாய் அவள் சொல்ல,
"வெல் அப்ப ஓகே! நீ பார்ட்னரா வா!" என்று சொல்லிவிட்டான் பேச்சோடே. கேட்டவள் தான் அதிர்ந்து அமைதியாகி சத்தமின்றி நின்றுவிட்டாள்.
"நௌ ஆர் யூ தேர்?" மீண்டும் அதிரன் கேட்க, பதிலே இல்லை அவளிடம்.
"ஓகே! உன் அண்ணா மாதிரி சட்டுன்னு முடிவு பண்ணாத. ரெண்டு நாள் ஃபுல் டைம் எடுத்துக்கோ. அப்புறம் கால் பண்றேன் சொல்லு!" என்று சொல்லி வைத்துவிட்டான்.
இவ்வளவுக்கும் ஒரே ஊரில் பக்கத்து பக்கத்து தெரு தான் இருவருக்கும் என்றாலும் இருவருக்கும் பரிச்சயம் தான் என்ற போதும் கண்ணன் அதிரன் நெருங்கியது என்னவோ கல்லூரியில் தான்.
இப்படி சட்டென்று சொல்லி அவன் வைத்துவிட, அஞ்சனாவிற்கு பேச்சே இல்லை. கண்ணன் அழைத்த போதும் பேச மறுத்துவிட்டாள்.
இரண்டு நாட்களில் சொல்லியது போலவே அதிரன் அழைத்தவன், "உன் அண்ணனும் ரெண்டு நாளா பேசலை என்கிட்ட. அவ்ளோ சண்டை போடுறான். பக்கத்துல தான் இருக்கான். நீ சொல்லு" என அதிரன் கேட்க, சில நொடிகள் தான் மௌனம்.
"என்ன சொல்ல? அதான் அண்ணா சொல்லிட்டாங்க இல்ல? இனி என்கிட்ட பேசவே பேசாதீங்க. எனக்கு கால் பண்ணாதீங்க!" என்று சொல்லி உடனே வைத்துவிட்டாள்.
கண்ணனும் கேட்டவன் 'சொன்னேனா?' என்பதைப் போல பார்த்து வைக்க,
"என்ன லுக்கு? சோ வாட்? இப்ப தானே பிடிக்கல. போக போக பிடிக்கும்!" என்றவனை கண்ணன் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் தான் பார்த்தான்.
"அதான் அவ சொன்னா சரின்னு சொன்னியே டா?" என கண்ணன் கேட்க,
"அதுக்குன்னு நோ சொன்னதும் ஓகே சொல்லவா முடியும்? என் லவ் அவ்வளவு சீப்பா போச்சா அண்ணனுக்கும் தங்கச்சிக்கும்?" என்றாலும் அடுத்து அஞ்சனாவை தொடர்பு கொள்ள முயலவே இல்லை.
கண்ணன் தங்கை தாயிடம் எப்பொழுதும் போல அழைத்துப் பேச, ராஜேஸ்வரி மட்டும் அவ்வபோது தானே அதிரனைக் கேட்டு அலைபேசியை கொடுக்க சொல்லி பேசுவார். அதிரனும் அமைதியாய் பேசி வைத்தான்.
ஐந்தாம் வருடம் முடியும் நேரம். படிப்பை முடித்துக் கொண்டு ஊருக்கே வந்துவிட்ட பின் கண்ணன் அங்கேயே இருக்கும் ஐடியில் வேலையில் சேர்ந்துவிட, அதிரன் தன் தந்தை தொழிலை கவனிக்க வந்துவிட்டான்.
இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலை. அஞ்சனாவிடம் அதிரன் பேசி ஆறு மாதங்களுக்கு மேலாகி இருக்க, அவன் மறந்துவிட்டான் என்று தான் கண்ணனோடு அஞ்சனாவும் நினைத்திருக்க, மீண்டும் அவர்கள் முன் வந்து நின்றான் பிடிவாதமாய்.
ராஜேஸ்வரி வீட்டில் இல்லை. அப்பொழுது தான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்தவள் முடிந்து வந்திருந்து அண்ணனுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சனா.
அதிரன் வரவை அந்த நேரம் இருவருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் வந்தவன் நேராய் அஞ்சனாவிடம் விருப்பத்தை கேட்க,
"அதி! என்ன டா!" என ஆயாசமாய் அழைத்த கண்ணன்,
"நீ ரொம்ப நல்லவன் அதி. உன்னை திட்ட கூட என்னால முடியாது. நீயே புரிஞ்சிக்கோ டா. நம்ம ரெண்டு பேமிலிக்கும் நிறையவே டிஃபரன்ட்ஸ் இருக்கு!" என கண்ணன் சொல்ல, அஞ்சனாவுமே நின்றாள் அவர்களோடு.
"உனக்கு ஏன் டா என்னை பிடிக்கல?" என கண்ணனிடம் அதிரன் கேட்க,
"நான் எப்ப டா அப்படி சொன்னேன்? உளராத நீ. எனக்கு உன்னை எப்பவும் பிடிக்கும். நீ எப்பவும் என்னோட பிரண்ட்டா என்னோடவே இருக்கனும். அதுக்கு தான் நான் சொல்றேன் வேண்டாம்னு!" என பிடிவாதமாய் மறுத்தான் கண்ணன்.
"ஓகே! நீ சொல்லு அஞ்சனா. உனக்கு ஏன் என்னை பிடிக்கல?" என சட்டென அவளிடம் கேட்க, அந்த கேள்வியை எதிர்பாரதவள் அண்ணனைக் கண்டு விழித்தாள்.
"அதி!" என்று இப்பொழுது ஆயாசத்தோடு அழுத்தமும் கொண்டு அழைத்தான் கண்ணன்.
"உன்கிட்ட கேட்டேன் பதில் சொல்லிட்ட. இப்ப சனா சொல்லட்டும்!" என்றான் அத்தனை சாதாரணமாய்.
"சொல்லு அஞ்சனா!" என மீண்டும் அவளிடம் கேட்க,
"நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. அதான் சரி வராதுன்னு சொல்லிட்டாங்களே!" என்று அவளும் தன்மையாய் சொல்ல,
"சரி வர்றது வராதது எல்லாம் இருக்கட்டும். நான் கேட்டது ஏன் என்னை பிடிக்கலைனு" என்றவனை பதில் சொல்லாமல் அஞ்சனாப் பார்க்க,
"ஆக மொத்தம் என்னை பிடிக்காம இல்ல. நம்ம பேமிலி டிஃபரன்ஸ் தான் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்ல?" என்று கேட்க, அமோதிப்பதான அமைதி அவர்களிடம்.
"என் அம்மா அப்பாவோட உன் அம்மாகிட்ட கூட நானே பேசுறேன். எந்த இஸ்ஸுஸ்ஸும் எனக்கில்லை" என்றவன்,
"ப்ச்! எனக்கு பதிலை சொல்லுங்க டா!" என அதிரன் கேட்க, அண்ணனை திரும்பித் திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா.
"இது விளையாட்டு இல்லை டா அதி!" கண்ணன் சொல்ல,
"கண்ணா ஃபிரம் தி வெரி ஃபர்ஸ்ட் நான் சொல்லிட்டு தான் இருக்கேன்... நான் விளையாடல. அண்ட் பொண்ணுங்க விஷயத்துல நான் என்னைக்கும் விளையாடி நீ பார்த்திருக்கியா?" என அவனிடமே திருப்பி விட்டான் அதிரன்.
"அவ பயந்துட்டா டா!" என அஞ்சனாவைக் கண்ணன் காட்ட,
"நான் என்ன உங்களை பயமுறுத்திட்டா இருக்கேன்?" என முறைத்த அதிரன், சில நொடிகள் இடைவெளி எடுத்துக் கொண்டு,
"ஓகே" இது லவ் மேரேஜா நடத்திக்க நான் ஆசைப்பட்டேன். அது உங்களுக்கு பிடிக்கல. அப்போ நான் அம்மா அப்பாவோட பொண்ணு கேட்டு வந்து கல்யாணத்தை நடத்திக்குறேன்!" என்றவன்,
"அப்ப தருவ தானே உன் தங்கச்சியை?" என கேட்க,
"டேய்! அதி!" என மீண்டுமாய் அணைத்துக் கொண்டான் கண்ணன்.
அஞ்சனா கவலையாய் நிற்க, "சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன். நீ இவ்ளோ பேசும் போது என்னால சொல்லாம இருக்க முடியல" என தங்கையைக் கண்ட கண்ணன்,
"அஞ்சனாக்கும் எனக்கும் உன்னை அவ்வளவு பிடிக்கும். நீ எனக்கு மாப்பிள்ளையா வந்தா எனக்கு கசக்குமா டா?" என்று கேட்க, அப்போதும் முறைத்து தான் பார்த்தான் அதிரன்.
"அஞ்சனாக்கும் உன்னை பிடிக்கும்!" என்று சொல்ல, சட்டென்று ஸ்வாரசியம் பொங்க அஞ்சனாவைக் கண்டான் அதிரன்.
"இப்ப தான் உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தோம் நீ வர்றதுக்கு முன்ன கூட. இது நீ நினைக்குற அளவுக்கு சாதாரண விஷயமில்ல" என்றான் கண்ணன்.
"சரி! அசாதாரணமாவே இருக்கட்டுமே! ஏன் நீ இருக்க மாட்டியா என் பக்கம்?" என்று அதையும் அவ்வளவு எளிதாய் கேட்டு வைத்தான் அதிரன்.
எத்தனை பணம் செல்வாக்கு இருக்கட்டுமே! தான் பாரததா என்பதோடு அன்னை தந்தையை தன் கணிப்பிற்குள் அடக்கிவிட்டான் அதிரன்.
"சனா எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் எனக்கு முக்கியம் டா. அதான் நீ பார்த்துக்க மாட்டியா என்ன?" என்று கேட்டு அதிரன் உருக வைக்க,
"ரொம்பத்தான்!" என்றாள் அஞ்சனா அப்போதும் விளையாட்டாய்.
அஞ்சனாவின் எண்ணம் திருமணம் காதல் என்றெல்லாம் சிந்தித்து இருக்கவில்லை. சாதாரனப் பேச்சு வார்த்தைகள் தான் என்றிருக்க, என்று முதன் முதலில் தன் காதலை கேள்வியாய் கேட்டு வைத்தானோ அன்று முதல் சிறு விதையை விதைத்திருந்தான் அஞ்சனாவிடம்.
அவளுமே கண்ணன் போல இதெல்லாம் தன் குடும்பத்திற்கு தேவையா என்றளவில் நினைத்திருக்க, இப்பொழுது மறைக்கவும் முடியவில்லை அண்ணன் தன்னிடம் நேரடியாய் கேட்ட போது. உண்மையை மறைக்காமல் கூறி இருந்தாள்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.