உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 20
ஹரிச்சந்திரன் வீட்டு ஹாலில் அரை மணி நேரமாய் அமர்ந்திருந்தனர் கண்ணன், ராஜேஸ்வரியோடு அஞ்சனாவும்.
அஞ்சனாவை அழைத்து வர வேண்டாம் என்று ராஜேஸ்வரி நினைக்க, அதிரன் தந்தை தான் வர சொல்லியதாய் கூறி இருந்தான் கண்ணன்.
ஆனாலும் இப்படி அரை மணி நேரமாய் வந்து காத்திருப்பதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை கண்ணனுக்கு.
அவர் கூறிய நேரத்திற்கு வந்தும் இதென்ன என ஒரு எண்ணமும் எரிச்சலும் வராமல் இல்லை அவனுக்கு.
அந்த நேரத்தில் கூட அதிரனுக்கு அழைத்துப் பார்த்தான் கண்ணன். அழைப்பு செல்லவே இல்லை.
"நீ பேசினியா அஞ்சனா?" என கண்ணன் மெதுவாய் தங்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க,
"அங்க நெட்வொர்க் கிடைக்கல போலண்ணா. அவங்களே கூப்பிடுறேன்னு டெக்ஸ்ட் பண்ணிருந்தாங்க!" என்றாள்.
ஹரிச்சந்திரன் எழிலரசி என வரும் பொழுது கண்ணனும் அஞ்சனாவும் என்னவோ பேசி சிரித்தபடி இருக்க, ராஜேஸ்வரி அந்த வீட்டினை அங்கிருந்தே சுற்றிலும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் சாந்தமாய்.
"வணக்கம்!" என ராஜேஸ்வரி எழுந்து கொள்ள,
"அங்கிள்!" என்று எழுந்த கண்ணனோடு புன்னகை முகமாய் எழுந்து வணக்கம் வைத்தாள் அஞ்சனா.
ஹரிச்சந்திரன் அளவான புன்னகையோடு தலையசைக்க, எழிலரசியிடம் அந்த புன்னகை கூட இல்லை.
அப்பொழுதே சுருக்கென்று ஒரு எண்ணம் எழ, சிறியவர்கள் பேச்சைக் கேட்டு தான் வந்திருக்க கூடாதோ என்று யோசனை தான் ராஜேஸ்வரிக்கு.
கண்ணன் அஞ்சனா இருவரின் மனநிலையும் என்ன பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆவலுமாய் இருந்ததில் முக அளவீட்டை அவர்கள் கவனிக்கவில்லை.
"இவங்க தான் உன் அம்மா சிஸ்டரா கண்ணா?" என ஹரிச்சந்திரன் பேச,
"ஆமா சார்! அம்மா. சிஸ்டர் அஞ்சனா." என கை காண்பித்தான்.
பேசு என்பதாய் ஹரி தலையசையக்கவும் எழிலரசி ராஜேஸ்வரி பக்கம் திரும்பினார்.
"உங்க பொண்ணு அதியை விரும்புறது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?" என அவர் கேட்க, ராஜேஸ்வரிக்கு முன்,
"அதி அஞ்சனா ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்குன்னு நேத்து தான் அம்மாகிட்ட பேசினேன் ஆண்ட்டி! அதியை அவங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால தான் அம்மாவும் உங்களை பார்க்க வந்திருக்காங்க!" என்றான் கண்ணன்.
இடையில் வரும் எண்ணமெல்லாம் இல்லை கண்ணனுக்கு. ஆனாலும் அவர் சுட்டிக் காட்டிய விதம் அவனை பதில் சொல்ல வைத்திருந்தது.
"அதே மாதிரி எங்களுக்கும் பொண்ணை பிடிக்கணும் இல்லையா கண்ணா?" என எழிலரசி கேட்க, இப்பொழுது தான் என்னவோ மூளைக்குள் ஓட, கண்ணன் மனம் திடுக்கிட, அஞ்சனாவிற்குள்ளும் ஒரு அபாய உணர்வு.
அத்தனை சங்கடமான சூழ்நிலை கண்ணனுக்கு. தவறு செய்துவிட்டோம். அன்னையை அழைத்து வந்திருக்கவே கூடாது என மனம் அடித்துக் கொள்ள, கைகள் எல்லாம் வியர்த்து வந்தது அவனுக்கு.
கூடவே அஞ்சனா நிலை. அவளை காணையிலும் அத்தனை பயம்.
"நான் சரியா தானே பேசுறேன்!" மீண்டும் அவர் கேட்க,
"நேராவே பேசலாம் ஆண்ட்டி!" என்று சொல்லிவிட்டான் கண்ணன். அதற்குமேல் என்ன இருக்கிறது. பேசிவிடுவது தான் சரி என்று அவன் சொல்ல,
"நேரா சொல்ல என்ன இருக்கு? உன் வீட்டுல சம்மதம் சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சதா? நீங்க சொல்ல தான் செய்விங்க. ஆனா நாங்களும் சம்மதிப்போம்ணு எப்படி எதிரிபார்த்தீங்க!" என்று ஹரிச்சந்திரன் கேட்க, இறுகிப் போய் நின்றது கண்ணனோடு ராஜேஸ்வரியும் தான்.
"இதை நீங்க அதிகிட்ட சொல்லிருக்கலாமே அங்கிள்? இப்ப எங்களை கூப்பிட என்ன காரணம்?" என கண்ணன் நேராய் கேட்க, அதிரனிடம் பேசுவது போலவே தான் இருந்தது ஹரிச்சந்திரன் எழிலரசிக்கு.
அவனும் இப்படி தானே நேருக்கு நேராய் நின்றான் தங்களுக்கு எதிராய் என்று நினைத்தவர்கள்,
"அவனுக்கும் சொல்லி குடுத்து தானே பேச வச்சீங்க? எங்க மகன் எங்க பேச்சை கேட்குற நிலைமைல இல்ல!" என்றார் எழிலர்சி.
"ம்மா! போகலாம்" என்று கண்ணன் கிளம்ப தயாராகிவிட்டான்.
"நாங்க பேசிட்டு இருக்கோம் கண்ணா!" என்று ஹரிச்சந்திரன்சொல்ல,
"அதி வரட்டும் பேசிக்கலாம்!" என்று மட்டும் சொல்லி எழுந்து செல்லப் பார்க்க,
"அவனை வச்சே வீட்டுக்குள்ள நுழைஞ்சிடற ப்ளனா?" என்ற சொல்லில் மூவர் நடையுமே நின்றுவிட்டது.
கண்களை இறுக மூடி தன் கோபத்தை கண்ணன் மறைக்க, அப்படி எந்த நிர்பந்தமும் இருப்பதாய் தோன்றவில்லை அஞ்சனாவிற்கு.
"நீங்க பேசுற முறை சரி இல்ல. வார்த்தை எப்பவும் வாழ்ந்துட்டு தான் இருக்கும். இப்ப எதுவும் பேச நாங்க தயாரா இல்ல. அதி வரட்டும்" என அஞ்சனா பொறுமையாய் தான் அப்போதும் பேசினாள்.
"நாங்க பேசுற முறை தான் சரி இல்ல. ஆனா நீங்க நடந்துக்குற முறை?" என்று ஹரிச்சந்திரன் சொல்ல,
"அப்பா இல்லாத குடும்பம் அப்படி தானே இருக்கும்" என்று நக்கலாய் புன்னகைத்து கூறி இருந்தார் எழிலரசி.
"உங்களை பேச வேண்டாம்ணு சொன்னேன்!" என எழிலரசி முன் கை நீட்டிவிட்டாள் அஞ்சனா.
"அஞ்சனா! நாம இருக்குற இடம் தான் சரி இல்ல. இவங்ககிட்ட பேசவும் நமக்கு எதுவும் இல்ல" என்று முடிவு செய்துவிட்டவராய் கூறினார் ராஜேஸ்வரி.
நிச்சயம் இது நல்லதற்கே இல்லை என்று தெரிந்துவிட்டது. வேண்டவே வேண்டாம். இந்த குடும்பத்துடனான சம்மந்தம் தங்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டார் ராஜேஸ்வரி.
அதிரன் எவ்வளவு நல்லவனாகவும் இருக்கட்டும். கட்டுபவன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அங்கே வாழ செல்லும் பெண்ணுக்கு அந்த குடும்பமும் அந்த சூழலும் அமைப்பும் கூட முக்கியம் தானே!.
தன் பெண் அங்கே நிம்மதியாய் வாழ எந்த வழி வகையும் இல்லை என்று தெரிந்தபின் தன் எண்ணத்தில் தெளிந்து தான் அப்படி கூறினார்.
மகள் வருந்த கூடும் மகன் வருந்த கூடும் என தெரியும் தான். இந்த ஒரு நாளுக்காக பிள்ளையின் வாழ்க்கையை மொத்தமாய் ஒரு இருட்டுக்குள் தள்ள தயாராய் இல்லை அந்த அன்னை.
"அவ்வளவு கோவம் வருதா? என் பையன் தான் அறிவில்லாம உன்கிட்ட வந்தான்னா உனக்குமா இல்ல? நீ நல்லவளா இருந்திருந்தா அவன்கிட்ட இல்ல சொல்லிருக்கணும் நிஜம் என்னனு?" என்று ஹரிச்சந்திரன் மேலும் மேலும் பேச, அது அத்தனை ஆத்திரத்தை கொடுத்தது அஞ்சனாவிற்கு.
"உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே! தெரியாமலா நீ அவனை விரும்பின? இல்ல தெரியாம தான் இப்படி எங்க முன்னாடி குடும்பமா வந்து உக்காந்திங்களா?" என்று எழிலரசியும் வார்த்தைகளால் வலியைக் கொடுத்தார்.
"இத்தனை வருஷ வாழ்க்கைல கிடைக்காத ஒண்ணு. என் பையன் மூலமா வரும் போது அதை வேண்டாம்னு சொல்ல எப்படி இந்த லோக்ளாஸ் மைண்ட்க்கு தோணும்?" என இன்னுமின்னும் வார்த்தைகள்.
கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தும் முறையை அவர்கள் தெளிவுப்படுத்த,
"போதும் போதும் போதும்!" என கத்திவிட்டாள் அஞ்சனா.
"அஞ்சனா!" என கண்ணன் அழைத்தும்,
"பேச வேண்டாம்னு சொன்னா புரியாதா உங்களுக்கு?" என்று ஆக்ரோஷமாய் கூறியவள், அங்கே டேபிளில் கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து அப்படியே எழிலரசி முகத்தில் ஊற்றி இருந்தாள்.
இதயத்தின் கனல் குறையவே இல்லை. ஆத்திரமான ஆத்திரத்தில் டம்ளரை தரையில் போட்டு அவள் நொறுக்க, எழிலரசி இப்படி செய்வாள் என எதிர்பாராதவர் தடுமாறி தான் சுதாரித்து முகத்தை துடைத்து நின்றார்.
"இன்னொரு வார்த்தை பேசினீங்க..." என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
தன்னால் தானே தன் குடும்பத்திற்கு இந்த நிலை என்ற எண்ணத்தில்.
"நீங்களும் வேண்டாம் உங்க சொத்தும் வேண்டாம்.." என்றவள் சொல்லில் அவர்கள் கோபமும் குறையவில்லை.
"உங்க பையனை மட்டும் உங்க முன்னாடியே எடுத்துட்டு போக என்னால முடியும்" என்றவளை அதிர்ந்து அவர்கள் காண,
"அந்த பயம் தானே உங்களை இவ்வளவு பேச வைக்குது? எங்களை பிடிக்கல. எங்க அதி என்னை கல்யாணம் பண்ணிடுவாங்களோனு தானே இவ்வளவு பேசுறீங்க? அதே அதியை உங்களையும் உங்க இந்த சாம்ராஜ்யத்தையும் விட்டு கூட்டிட்டு போக என்னால முடியும்!" என்றவள்,
"ஆனா எனக்கு அதி வேண்டாம். அவரை பிச்சையா உங்ககிட்டயே குடுத்துட்டு போறேன். திரும்ப என் கண்ணுல பட்டுடாதிங்க!" என்று சொல்லி தான் அண்ணனுடம் அன்னையுடனும் அங்கிருந்து திரும்பி இருந்தாள் அஞ்சனா.
தானும் நினைத்தது தான் என்றாலும் மகள் இத்தனை தெளிவாய் தங்களுக்காக பேசியதிலும் என கண்ணீருடன் தான் வெளிவந்தார் ராஜேஸ்வரியும்.
கண்ணனுக்கு சொல்லவே தேவை இருக்கவில்லை. அவனும் தான் அத்தனை மறுத்தானே அதிரனிடம். கேட்காமல் இப்படி ஒரு நிலை ஆகிவிட்டதே என அவனும் உள்ளுக்குள் நொறுங்கிவிட்டான்.
அதிரன் முக்கியம் தான். அதற்காக அன்னையை விட்டுக் கொடுக்கவா? அதுவும் அவன் இல்லாத பொழுதில் இப்படி அழைத்து வைத்து பேசியவர்களை வேறு எப்படி வாயடைக்க செய்வதாம் என எண்ணங்கள் எல்லாம் அதிரனைத் தேடியும் அவனை தேடவே கூடாது என்றும் மாறி மாறி வந்ததில் கண்ணீர் நின்றபாடில்லை அஞ்சனாவிடம்.
எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள் அவனிடம். "எனக்கு என்னவோ பயமாவே தான் இருக்கு!" என்று அவன் குடும்பத்தை பற்றி அவள் சொல்லிய பொழுதுகளில் எல்லாம் அழகாய் பேச்சை மாற்றி, அவர்கள் சம்மதித்துவிட்டதாய் சொல்லி ஏமாற்றிவிட்டான் தானே என கோபம் ஒரு நேரம் என்றால்,
'எந்த அளவிற்கு தன்னை காதலித்து இருந்தால் இப்படி உண்மையை மறைத்து தங்களை அதை யோசிக்க விடாமல் செய்திருப்பான்' என ஒரு நேரம் அவனுக்காகவே பரிந்து வந்தது மனது.
"ண்ணா! அம்மா கூட வீட்டுக்கு போங்க. நான் வந்துடுறேன்!" என்றவளை தனியே விட இருவருமே மறுத்தனர்.
"ம்மா ப்ளீஸ்! எனக்கு எதுவும் இல்ல. நான் என்ன சின்ன குழந்தையா? இல்ல கோழையா? பத்து நிமிஷத்துல வந்துடுவேன்!" என்று சொல்ல,
"அஞ்சனா! ப்ளீஸ் டா. வீட்டுக்கு போவோம் முதல்ல!" என மறுத்தான் அண்ணன்.
"புரிஞ்சிக்கோங்க ண்ணா!" என்றவள் கெஞ்சல் பார்வையில், மனம் வதைக்க தான் அவளை பார்த்து சென்றான் கண்ணன் அன்னையுடன்.
நேராய் ஒரு பார்க்கில் சென்று அமர்ந்துவிட்டாள் அஞ்சனா. மனம் சமன்படவில்லை. தான் சொல்லி வந்த வார்த்தைகளுக்கு சமன்பட போவதில்லை என்று தெரியுமே!.
சில நிமிடங்கள் மருகல். சில நிமிடங்கள் கோபம். சில நிமிடங்கள் காதல் என மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, அந்த சுழலில் மாட்டிக் கொண்டவள் மீள முடியாமல் அழைத்தாள் அதிரனுக்கு.
எடுத்துவிட வேண்டும். அவனிடம் மொத்தத்தையும் கதறிவிட வேண்டும் எனும் பேராவலோடு காத்திருந்தாள்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 20
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.