உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 23
அஞ்சனாவைக் காணும் ஆசையில் மட்டுமே அந்த கோவிலினுள் நுழைந்திருந்தான் அதிரன்.
கண்கள் அவளைத் தேடி அங்கும் இங்குமாய் சுழல, எங்கும் அவளைக் காணாமல் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வர, ஓரிடத்தில் மட்டும் கூட்டமாய் நின்றனர்.
என்னவோ பிரச்சனை என்றபடி அதைக் கடந்து அஞ்சனாவைத் தேடியவன் கண்களில் எழிலரசி விழ, 'இவரேங்க இங்கே?' என்று தான் நின்றான் அங்கே.
எதையோக் கண்டு பயந்து நிற்பதை போன்ற பாவம் அவரிடம் தெரிய, எதுவும் புரியாமல் சென்றவன் அந்த கூட்டத்தில் அஞ்சனாவையும் கண்டபின் தான் அதிர்ந்தான்.
அன்னை தான் எதுவோ செய்துவிட்டார் என்று நொடியில் அத்தனை பதட்டம் பயம் கோபம் என கூட்டத்தை கடந்து அருகில் வர, அத்தனை கோபமாய் மூச்சு வாங்க நின்றிருந்தாள் அஞ்சனா.
அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறி உள்ளுணர்வு கொடுத்த தாக்கத்தில் நிமிர்ந்து பார்த்த போது தான் அஞ்சனா எழிலரசியைக் கண்டது.
கண்டதும் மனதில் படமாய் விரிந்த கட்சிகளில் முகம் இறுக அவள் அமர்ந்திருக்க, எழிலரசி தான் அவள் முன் வந்து சொடுக்கிட்டு அவளை அழைத்தார்.
அதில் மனதின் வார்த்தைகள் மௌனமாகி இருக்க, அஞ்சனா அசைந்து கொடுக்கவே இல்லை.
"ஏய்!" என்றவள் சத்தத்தில் அருகில் இருந்த சிலர் இவர்கள் பக்கம் திரும்ப, அமைதியை தேடி வந்தவள் அமைதியாய் அங்கிருந்து கிளம்ப தான் நினைத்தாள் அப்பொழுதும்.
உடனே எழுந்து கொண்டு எழிலரசியை தாண்டி செல்ல முயல, அவளை கைபிடித்து இழுத்து தன் முன் நிற்க வைத்தார் எழிலரசி.
இந்தவித தாக்குதலை எதிர்பாராமல் தடுமாறி தான் நின்றாள் அஞ்சனா. மனமும் எரிமலையாய் அவரைக் கண்ட நொடி முதல் கொதிக்க, இதில் அவரின் இந்த வித நடவடிக்கையும் அவளை பாதிக்க, கண்களை கட்டிக் கொண்டு தான் வந்தது முதலில்.
"நினைச்சதை சாதிச்சிட்டோம்னு திமிர் தானே உனக்கு?" என்றவர் கோபத்தில் ஏற்கனவே மனம் அனைத்தையும் நினைத்து நொந்து அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாத அளவில் கலங்கி போயிருக்க, இப்படிப்பட்ட எழிலரசி பேச்சில் கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யமே.
"அவனுக்கு உலகமே தெரியாது. அவன் தான் உன்னை தேடி வந்தான்னா உனக்கு எங்க போச்சு அறிவு? இது தான் சாக்குன்னு மறுபடியும் ஒட்டிக்க பாக்குறியோ!" என்றவர் சொல்லில்,
"இப்ப மட்டும் வாயை மூடல!" என ஒற்றை விரலை நீட்டிவிட்டாள் அஞ்சனா.
"பேசாம போய்டுங்க. இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!" என்றாள் அவளே.
"என்ன சொன்ன? அவ்வளவு எகத்தாளமா?" என்றவருக்கு சட்டென்று பேச்சு வரவில்லை அவள் எதிர்த்து பேசவே.
இப்பொழுது தான் அதிரன் வந்து நின்றது. என்ன நடக்கிறது என புரியாமல் அவன் நிற்க, அன்னை மேல் தான் சந்தேகம் அவனுக்கு.
அந்த நேரம் தான், "உங்க பையனை உங்ககிட்டயே குடுத்துட்டு தானே வந்தேன்? கூட வச்சு காப்பாத்திக்க தெரியல? மறுபடியும் என்கிட்ட வந்து நிக்கிறீங்க என் பையனை குடுன்னு?" என்று எழிலரசியிடம் சண்டைக்கு எகிறிக் கொண்டு அஞ்சனா நிற்க, அருகில் வாயடைத்து நின்றிருந்தார் எழிலரசி.
அவரைப் பொறுத்தவரை அதிரன் வேண்டாம் என்று ஊரை விட்டு வந்தவள் தான் அஞ்சனா. இப்பொழுது கேள்விபட்ட வரையும் அதிரன் தான் அவளை தேடி வந்துருக்கிறான். அதுவும் இப்பொழுது அரைகுறையாய் இவர் சேகரித்த செய்தி. இப்படி இருக்க, இவளை மிரட்டினால் அவன் தங்கள் வழி வருவான் என்று ஒரு எண்ணத்தில் வந்தவருக்கு இந்த பதில் திகைப்பை தான் கொடுத்தது.
இன்னமுமே அவள் விபத்து செய்தி எல்லாம் தெரியவே இல்லை அவருக்கு. சரியாய் அவள் மீண்டு வரும் நேரம் தான் இவளிடம் சிக்கி இருந்தார் எழிலரசி.
"பையனை அதட்டி வச்சுக்க தெரியல வந்துட்டாங்க ஊரு விட்டு ஊரு வந்து என்னை சொல்ல. எப்ப என் அம்மா அண்ணனை தப்பு தப்பா பேசினீங்களோ அன்னைக்கே உங்க வாயை தச்சு விட்டிருப்பேன். அன்னைக்கு நான் சும்மா விட்டது அதிக்காக மட்டும் தான். இத்தனை வருஷம் விட்டு இப்ப வந்து அதை வாங்கிக்காதீங்க!" என்றவள் பேச்சில்,
"ஏய்!" என எழிலரசி கையை உயர்த்த,
"அடச்சீ! கையை இறக்குங்க!" என்றாள் அவரை விடவும் சத்தமாய்.
"எனக்கா அறிவில்ல? கோவில்ல இத்தனை பேர் முன்னாடி இப்படி பேசுறீங்களே! உங்களுக்கு அறிவு ஸ்டேட்டஸ் எல்லாம் எங்க போச்சு?" என்று சொல்லிய நொடி தான் எழிலரசி தன்னை சூழ்ந்திருந்த கூட்டத்தை. கவனித்து தயங்கினார்.
"அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தோம். அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டிங்க. இது கோவில். இங்கேயும் நீங்க பேசினா பார்த்துட்டு இருப்பேன்னு எப்படி நினைச்சீங்க?" என்ற அஞ்சனா,
"அவ்வளவு பெரிய அறிவு ஜீவி நீங்க தான்னா உன் பையனை போய் அடக்கி வையுங்க. இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கா ஊரை விட்டு வர கூடாதுன்னு சொல்லுங்க. அவ வேலை பாக்குற காரணத்துக்கே அந்த கம்பெனியை வாங்க கூடாதுன்னு சொல்லுங்க. அவளுக்காக காத்திருக்க கூடாதுன்னு சொல்லி கையோட கூட்டிட்டு போங்க!" என அத்தனை பேசினாள்.
"ஆனா உங்களால முடியாதே! அப்போ என்ன செய்விங்க?" என்றும் அவளே கேட்க, அதிர்ச்சியில் எழிலரசி நிற்க, கேட்டுக் கொண்டிருந்த அதிரன் நிலை தான் அதை விட மோசமானது.
"நீங்க வெட்டிவிட நினைச்சது இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் எப்படி வேர்விட்டு நிக்குதுன்னு பார்த்தீங்க தானே? இன்னுமா எங்களை பிரிக்க முடியும்னு நினைக்கிறீங்க?" என்றவள் சொல்லில் தான் எழிலரசிக்கு முழுதாய் புரிந்தது இனி அதிரனை அவளிடம் இருந்து மீட்கவே முடியாது என்று.
அதிரன் உணர்வை எல்லாம் இந்த நிமிடங்களில் சொல்ல வார்த்தையே இல்லை. உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் அவனில் கரைந்து கொண்டிருந்தது.
"நீங்க கேட்கலாம் அன்னைக்கு அதியை பிச்சையா தூக்கி போட்டு போனியேன்னு. என் அம்மா அண்ணாக்காக தான் அன்னைக்கு வேண்டாம்னு ஒதுங்கி வந்தேன். ஆனா இப்போ சொல்றேன். என் அம்மா அண்ணா எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதியும் எனக்கு முக்கியம" என்றவள்,
"உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோங்க!" என்று சொல்லி மீண்டும் தான் அமர்ந்திருந்த இடம் சென்று கண்மூடி அமர்ந்துவிட்டாள்.
இன்னும் பேசவே கேட்கவும் திருப்பி கொடுக்கவும் நிறையவே அவளிடம் இருந்தது. ஆனாலும் தான் பேசிய வார்த்தைகளில் அவளுமே உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.
இன்னும் தனக்கு நினைவு திரும்பிய விஷயத்தையே யாரிடமும் சொல்லி இராத நிலையில் தன் எண்ணமும் மனமும் தெளிவாகி இருக்க, எழிலரசி முன் வந்து நின்றதும் தன்னையும் மீறி தான் வார்த்தைகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருந்தது அஞ்சனாவிடம்.
கூட்டமும் கலைய ஆரம்பிக்க, எழிலரசி பார்வை முழுதும் அவளிடம் என வன்மமாய் பார்த்து நிற்க, அஞ்சனாவைப் பார்த்திருந்த அதிரன் மெல்ல நகர்ந்து அன்னை அருகே வந்தான்.
அவன் வந்து தன் முன் நின்ற பின் தான் அவனை கவனிக்கவே செய்தார் எழிலரசி. அவனைக் கண்டதும் விழிகள் விரிய, சட்டென்று சூழ்நிலையை தனக்கானதாக்க முயன்று,
"பார்த்தியா அதி! நீ கேட்டியா? இல்ல இப்போ தான் வந்தியா? அவ என்ன சொன்னா தெரியுமா?" என எழிலரசி மீண்டும் சத்தமிட, அவர் சத்தத்தில் தான் மீண்டும் திரும்பிய அஞ்சனா பார்வை அங்கே நின்றவனைக் கண்டு விரிந்து கொண்டது.
பலமாய் மூச்சு வாங்க, சுவாசிக்க மறந்தவளாய் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அவளைப் பார்த்தவன் கண்களில் வலியும் வேதனையும் கூடவே அத்தனை காதலும்.
"நான் கேட்டேன் ம்மா. எல்லாத்தையும் கேட்டேன். நான் அவளுக்கு எவ்வளவு முக்கியம்னு இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஏனக்கு அவ எவ்வளவு முக்கியம்னு இத்தனை வருஷம் நான் உங்ககிட்ட பேசாம இருந்ததிலேயே தெரிஞ்சிருக்கணும். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?" என்றான்.
"அவ உன்னை தப்பா பேசுறா அதி. அவளுக்காக போய் இங்க வந்து இவ்வளவு அவஸ்தை படுற நீ. ஆனா அவ உன்னை பிச்சையா தர்றதா சொன்னா தெரியுமா உனக்கு?" என அவள் சொல்லியதை சொல்ல,
"அப்படி சொல்ற அளவுக்கு நீங்க என்ன பண்ணீங்க? நியாயமா பேசுற நீங்க அதையும் சொல்லணும் தானே?" என்று கேட்க, அதை சொல்ல முடியாதே அவருக்கு.
"கூடவே அவ அம்மாவும் அண்ணனும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நானும் முக்கியம்னு சொன்னாளே! அது உங்க காதுல விழலயா?" என்று கேட்க, தொண்டைக்குழி ஏற இறங்கப் பார்த்தாள் அஞ்சனா அவனை.
"அதி! நான் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். நீ அவளுக்கு மட்டும் பேசுற. நான் உன் அம்மா. உனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியாதா? இல்ல அம்மா அப்பாவை பாத்துக்குற பொறுப்பு உனக்கு இருக்குன்னு தெரியாதா? உன்னால ரெண்டு வருஷமா என்ன நிலைமைல இருக்கு தெரியுமா நம்ம கம்பெனி? இதுல namma ஷேர்ஸ்ல இருந்து பணம் எடுத்திருக்க. அதுவும் இவ வேலை பாக்குற ஒரே காரணத்துக்காக அந்த கம்பெனியை வாங்கி இருக்க!" என்று சொல்ல, சிறு புன்னகை அதிரனிடம்.
"சோ! அந்த பணத்துக்காக தான் என்னை தேடி வந்திங்க இல்ல?" என்று அதிரன் கேட்க, தான் உளறிவிட்டது புரிந்தது அவருக்கு.
"கம்பெனி லாஸ் என்னால? அதுக்கு முன்னாடி ரொம்ப நல்லருந்துச்சோ?" என்று நக்கலாய் கேட்டவன்,
"அந்த லாஸ்ஸை ஈடுகட்ட நீங்க என்ன பிளான் பண்ணீங்கனு எனக்கு தெரியாதா? உங்க பார்ட்னரோட ஒரே பொண்ணை உங்க மருமகளாக்க நீங்க பண்ணின கோல்மால் தெரியாது நினைச்சீங்களா?" என கேட்க,
'இவனுக்கு எப்படி தெரியும்?' என அதிர்ந்து பார்த்தார் அவர்.
நீங்க பண்ணின எதுவும் தப்பில்ல. நான் பண்ணின லவ் மட்டும் தான் தப்பு இல்ல?" என்றவன்,
"என்னை கூட வச்சு பார்த்துக்க எப்பவாச்சும் நினைச்சீங்களா? பிஸினஸ் பிசினஸ்னு ஓடி என்னை எப்பவும் ஹாஸ்டல்ல தான் வச்சீங்க. அப்ப கூட எனக்கு எதுவும் தெரில. நானா உங்ககிட்ட கேட்ட ஒண்ணுனா அது என் சனா தான்!" என அவளை திரும்பிப் பார்க்க, அவள் கண்களிலும் கண்ணீர்.
"எனக்காக உங்களைத் தேடி வந்த அவளை குடும்பதோட அவமானப்படுத்தி அனுப்பி இருக்கீங்க. அது தப்பில்லயா ம்மா?"
"ஒரு பையனா உங்களைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. அதை எப்பவும் மறக்க மாட்டேன். ஆனா! நீங்க செஞ்சதையும் மறக்க மாட்டேன்!" என்றவன்,
"இவ்வளவு வருஷமும் இவளுக்காக மட்டும் தான் அமைதியா இருந்தேன். இதோ இப்பவும் நீங்க வரலைனா இன்னமும் அமைதியா தான் இருந்திருப்பேன்!" என்று சொல்லி அஞ்சனாவை அவன் முறைக்க, இமை தாழ்த்திக் கொண்டாள் அவள்.
"சனாக்கு எதுவுமே தெரியாது. நேத்து வரை அவளுக்கு என்னையே தெரியாது!" என்றவனை புரியாமல் பார்த்தார் எழிலரசி.
இப்ப உங்ககிட்ட அதை சொல்லி எந்த யூஸ்ஸும் இல்ல. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம். அவளும் சரி. நானும் சரி. எங்களுக்கு நாங்க போதும். வேற யாரும் வேண்டாம். அதுவும் என் அம்மா அப்பாவா எங்க ரெண்டு பேருக்கு நடுவில நீங்க வேண்டவே வேண்டாம்" என்றவன்,
"நிச்சயம் உங்க பையனா உங்களுக்கு தர வேண்டியதை தந்து தான் ஆவேன். அது என் கடமை. ஆனா என் லைஃப்ல இனி நீங்க குறுக்க வர வேண்டாம்!" என்று முகத்துக்கு நேராய் சொல்லியவனை அதிர்ந்து அவர் பார்க்க,
"அப்படி மீறி வந்தா கம்பளைண்ட் குடுக்க நான் ரெடி!" என்று முடித்தான்.
அஞ்சனா வீட்டைக் கண்டுபிடித்தபின் இன்று தான் அஞ்சனா தனியே வெளியே வந்ததை கவனித்து அவளை பின் தொடர்ந்து வந்து அவளிடம் பேசி அதிரனை மீட்க எழிலரசி மேற்கொண்ட முயற்சி என்னவோ அதிரனுக்கு சாதகமாய் தான் முடிந்திருந்தது.
ஆனாலும் இத்தனை முடிவாய் மகன் பேசுவான் என எதிர்பாராதவர் திகைத்து போயிருக்க,
"நீ கிளம்பு அஞ்சனா!" என்றான் அதிரன் அவளிடம்.
எதுவும் பேசாமல் தன்னை போக சொல்கிறானே என அவளும் அதிர்வும் குழப்பமுமாய் அதிரனைப் பார்க்க,
"போ!" என்றான் மீண்டுமே.
அதிரனை மட்டும் திரும்பிப் பார்த்தபடி அவள் செல்ல, "அதி!" என மகனிடம் வந்தார் அன்னை.
"நீங்க பேசினதை நானுமே கேட்டேன் ம்மா. என் அம்மா தானே நீங்க? கொஞ்சமும் என் மேல பாசம்னு இல்லையா?" என்று கெட்டவனை பதில் சொல்லாமல் அவர் பார்க்க,
"உங்க தேவைக்காக மட்டும் தான் நீங்க என்னை தேடி வந்திருக்கிங்கனு இன்னுமா எனக்கு புரியாதுனு நினைக்குறிங்க?" என்றவன்,
"உங்களுக்கு என்ன? உங்க கம்பெனி லாஸ்ல போக கூடாது. அவ்வளவு தானே?" என்றவன்,
"அதுக்கு நான் பொறுப்பு. குறுக்க வழி எல்லாம் எனக்கு தெரியாது. நான் சம்பாதிச்சு அதை சரி பண்ணிடுவேன். உங்களையும் அப்பாவையும் பிள்ளைன்ற பொறுப்புல நிச்சயம் கவனிச்சுப்பேன். கடமையை தட்டிக் கழிக்குறவன் இல்ல நான்!" என்று சொல்ல, எழிலரசிக்கு வார்த்தையே வரவில்லை மகனின் இந்த விதமான பேச்சில்.
Author: Vishakini
Article Title: உலா வரும் வெண்ணிலா - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உலா வரும் வெண்ணிலா - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.