மை டியர் ராவணா வித் லவ் சீதா - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 16

ஊரே அதிரும் வண்ணம் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்த இந்திரராவணனை தடுத்து நிப்பாட்டுவது போல ஓங்கி ஒலித்தது விஜயனின் குரல்..!!

விஜயன், ராவணனின் பால்ய சிநேகிதன்.

" என்னாயிற்று? எதற்காக இப்பொழுது இத்தனை ஆவேசத்தோடு வந்து நிற்கிறாய்??"

" ஒன்னும் தெரியாதவன் போல என்ன கேள்வி கேட்கிறாய் நீ ?? இன்று என்ன நாள் என்று தெரியுமா இல்லையா??"

" என்ன நாள்??"

" அது சரி.. அதையே மறந்து விட்டு தான் இப்படி வயல்வெளியில் நின்று கொண்டு கதையடித்து சிரித்துக் கொண்டிருக்கிறீர்களோ?? முதலில் என்னோடு வா", என்று கூறி அவனுடைய கரத்தை பற்றி இழுத்து சென்றான் விஜயன்.

சற்று தூரம் சென்ற பிறகு கோவத்தோடு தன் நண்பனை ஏறிட்டான்.

" உன் ஜாதகத்தில் இருக்கும் குறை மறந்து போய்விட்டதா?? ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் உன் ஜாதகத்தில் இருக்கும் சாபம் நீங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்று கூடும் திதியில் நீ குலதெய்வ கோவிலுக்கு செல்லவேண்டும்.. அதுவும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கே ஒரு நாள் ஆகும்.. அதுபோக அங்கே சென்று நீ ஒரு நாள் தங்க வேண்டி வரும்.. அந்த நாள் நாளை தான்.. !!

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு இங்கே என்ன கதை வேண்டி கிடக்கிறது உமக்கு?? குலதெய்வ கோவிலில் ஒருவேளை நீ ஒரு நாள் முழுக்க தங்க நேரிடாமல் போய்விட்டால் அதன் பிறகு உனக்கு சாபம் கிடைத்து நீ இவ்வுலகை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிடும்.. மறந்துவிடாதே இந்திர ராவணா", என்று தன் நண்பனை எச்சரித்தான் விஜயன்.

அதன் பிறகு தான் அவனுக்கு அனைத்துமே ஞாபகம் வந்தது..

'ஆமாம் அல்லவா??... ஜாதகத்தில் இருக்கும் சாபத்தை நீக்க வேண்டுமென்றால் நான் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் அதுவும் போவதற்கே ஒரு நாள் ஆகிவிடுமே.. அதன் பிறகு அங்கே ஒரு நாள் முழுக்க நான் தங்க வேண்டும்.. இதை மட்டும் தவறிவிட்டால் அதன் பிறகு நான் இவ்வுலகில் உயிரோடு வாழ்வது கடினம்.. இதை எப்படி நான் மறந்து போனேன்', என்று தலையில் கை வைத்தபடி திகைத்து நின்றான் அவன்..!!

அடுத்த நிமிடமே தாமதிக்காமல் இருவரும் ரதத்தில் ஏறி பயணப்பட்டார்கள் சிவபுரிக்கு..

அங்கே செல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட அவன் பல காடுகளையும் மேடுகளையும் தாண்டி செல்ல வேண்டும்..

அதன்படியே அவர்களும் ரதத்தில் சென்றார்கள்..

சுற்றிலும் காடு அதுவும் அடர்ந்த காடு..

அடர்த்தியான மரங்களும் அதன் நிழலும் பார்க்கும் பொழுதே சற்று அச்சத்தை உண்டு பண்ணியது மனதிற்குள்..!!

நேரம், மதிய வேளையை நெருங்கிக் கொண்டிருந்தது..

ரதம் திடீரென்று ஒரு பள்ளத்தில் இறங்கி தடுமாறியது..

" ஐயோ.. என்ன இது தேரோட்டியே பார்த்து தானே ஓட்டுகிறீர்கள்?? பள்ளத்தில் இறக்கி விட்டீர்களா என்ன??", என்றான் விஜயன்.

" மன்னித்து விடுங்கள் மன்னா.. ஏதோ தெரியாமல் பிழை செய்து விட்டேன்..", என்று கூறியவன் உடனே ரதத்தை விட்டு கீழே இறங்கினான்.

" என்னவென்று பார்த்தாயா இப்பொழுது இங்கிருந்து நாம் புறப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நீ என்னவென்றால் இப்படி செய்து விட்டாயே", என்று புலம்பினான் ராவணன்.

" அரை மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் மன்னா.. சிறிது நேரம் காத்திருங்கள்", என்றான் அவன்.

" அதுவரை சும்மா இருக்க வேண்டுமா?? அட கடவுளே.. அதற்குள் அங்கு போய் சேர்ந்து விடுவோமா??"

" அதெல்லாம் இருக்கட்டும்..ஆனால் இப்போது லேசாக பசிக்கிறது.. சாப்பிடலாமா??", என்று ராவணா கேட்கவும்..

விஜயன் முறைத்த வண்ணம் தலையசைத்தான்.

கூடவே அழைத்து வந்திருந்த பணிப்பெண்ணை அழைத்து சாப்பாடு பரிமாறுமாறு கேட்டுக் கொண்டான் இந்திர ராவணன்.

கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வேறு வழி இல்லாமல் மன்னனுக்கு பணிபுரிவதற்காக வந்திருந்த பெண் அவர்களுக்கு சாப்பாடு பரிமாற எழுந்து வந்தாள்..

அதே சமயம் அவள் பெற்ற குழந்தை பசியில் அலற தொடங்கியது கானகமே அதிரும் வண்ணம்..!!

ஒரு பக்கம் பெற்ற குழந்தை அழுது கொண்டிருக்க..

இன்னொரு பக்கம் தலை வாழை இலை போட்டு அமர்ந்தபடி பசியோடு அமர்ந்திருக்கும் மன்னனை பார்த்தாள்..

பெற்ற பிள்ளையா?? கடமையா?? என்று பார்க்கும் பொழுது கடமையை செய்து விடுவோம் பிறகு வந்து பிள்ளையை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு சாப்பாட்டை எடுத்துச் சென்று அவர்களுக்கு பரிமாறத் தொடங்கினாள் அந்த பணிப்பெண்.

இங்கே குழந்தை "வீல் வீல் ", என்று அலறியது..!!

காதை கிழிப்பது போல குழந்தை அங்கு அழுது கொண்டிருக்க இங்கே உணவை உண்ண முடியாமல் இவர்களும் தவித்தார்கள்..

" எங்களுக்கு சீக்கிரம் பரிமாறி விட்டு அதன் பிறகு உன் பிள்ளையை போய் கவனி.. நேரமாகிறது நாங்களும் கிளம்ப வேண்டும்", என்றான் ராவணன் பணிப்பெண்ணிடம்..

அவளும் வேறு வழியில்லாமல் உணவை பரிமாறினாள் கண் கலங்க.. போய் குழந்தையை முதலில் பார் என்று உத்தரவிட்டிருந்தால் ஓடி போய் பிள்ளையை பார்க்கலாம் என்றிருந்தாள்.. ஆனால் அதற்கு வழியில்லாமல் போய் விட்டது..!!

அதே சமயம்..

அங்கே கண்முன்னே கடும் கோபத்துடன் ஒரு முனிவர் தோன்றினார்..!!

" இந்திர ராவணா !!.. இந்த கானகத்தில் அமர்ந்து கடும் தவம் புரிந்து கொண்டிருந்த என்னுடைய கவனத்தை கலைக்கும் விதமாக இந்த குழந்தையின் அழுகுரல் என் தவத்தை நாசம் செய்து விட்டது.. இதற்கு மூல காரணமான உன்னை நான் சும்மா விட மாட்டேன்.. இதற்கான பலனை நீ அனுபவித்தே தீர வேண்டும்.. இந்த க்ஷணமே நீ இவ்வுலகை விட்டு நீங்கி உன்னுடைய சுயத்தை மறந்து நூற்றாண்டுகளை கடந்து வேறொரு கால சக்கரத்தில் சிக்கித் தவித்து சாதாரண மானிட பிறவியாக எந்த வித சக்திகளோ பராக்கிரமங்களோ இல்லாமல் நீ உன் வாழ்க்கையை வாழ போகிறாய்..அதையும் மீறி உன்னுடைய பழைய நினைவுகளை நீ நினைவு கூற நினைத்தாலோ அல்லது உன்னுடைய பழைய நினைவுகள் உன்னைத் தேடி வந்தாலும் சரி அல்லது அதைத் தேடி நீ சென்றாலும் சரி அந்த கணமே உன்னுடைய உயிர் உன் உடலை விட்டு நீங்கிவிடும்.. இதுவே என் சாபம்..!!", என்று விட்டு அந்த முனிவர் அந்த கணமே மறைந்து போனார்.

" அப்போதே சொன்னேன் என் பேச்சை நீ கேட்கவே இல்லை.. பார்த்தாயா ?? இப்பொழுது எப்படி விதி உன் வாழ்க்கையில் விளையாடிவிட்டது என்று.. அப்போதே கிளம்பியிருந்தால் இந்நேரம் நாம் கானகத்தை கடந்து குலதெய்வ கோவிலுக்கு சென்றிருக்கலாம் ஆனால் நடுவழியில் ரதம் நின்று, இப்பொழுது முனிவரிடம் நீ சாபம் பெற வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.. இதெல்லாம் தேவையா ராவணா??", என்று கூறி தன் நண்பனை பரிதாபமாக விஜயன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே..

ராவணன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து உலகை விட்டு நீங்கினான்..!!

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயன் , உடனே ரகத்தை சரி செய்துவிட்டு அங்கே அரண்மனையில் இருக்கும் ராஜ குருவை சந்திக்க போனான்.

நடந்த எல்லாவற்றையும் கூறி இப்பொழுது என்ன செய்வதென்று அவரிடம் ஆலோசனை கேட்க முனைந்தான்..

" கானகத்தின் நடுவே ஒரு முனிவரால் சாபம் பெற்று ராவணன் இந்த உலகை விட்டு நீங்கி சென்று விட்டான்.. இந்த சாபத்திற்கு விமோசனமே இல்லையா?? மீண்டும் அவன் இந்த உலகத்திற்கு வரவே மாட்டானா?? ", கண்ணீர் தேங்கிய விழிகளோடு தன் நண்பனுக்காக வேண்டினான் அவன்.

" ஒரே ஒரு வழி தான் இருக்கிறது"

" என்ன ராஜகுரு அது??"

"அது....", என்று அந்த புத்தகத்தில் போட்டிருக்கும் வரிகளை அவள் படித்துக் கொண்டிருந்த அதே சமயம் சீதாவின் தோளில் அழுத்தமாக ஒரு கரம் படிந்தது..!!

திடுக்கிட்டு போய் உடனே திரும்பி பார்க்க.. அங்கே இந்திர ராவணன் நின்று கொண்டிருந்தான்..!!

' அட நன்னாரி பயலே.. எப்ப பார்த்தாலும் ஏன்டா இப்படி குறுக்கால வர்ற??.. உனக்காக தானடா இப்படி நான் தேடி தேடி படிச்சிட்டிருக்கேன் ஒவ்வொரு முறையும் இப்படி குறுக்க வந்து காரியத்தை கெடுக்கிறியே இதெல்லாம் உனக்கு நல்லாவா இருக்கு?? நீ பண்ற வேலைக்குதான்டா உனக்கு சாபம் கிடைச்சிருக்கு இப்பவும் வந்து இதே மாதிரி என்னை குறுக்கே வந்து தொல்லை பண்ற.. அப்ப குறுக்க புகுந்து தொல்லை பண்ணதால்தான் அந்த முனிவர் சாபம் கொடுத்து நீ இங்க வந்திருக்க.. இப்ப மறுபடியும் குறுக்கே வந்து என்னை தொல்ல பண்ற..

ஆனா , நான் மட்டும் உனக்கு சாபம் கொடுத்தால் பலிக்கவா போகுது ??என்ன பண்றது.. என் தலையெடுத்து அடுத்து என்ன விஷயம் என்பதை நான் தெரிந்து கொள்ளனும் என்றால் உடனடியாக இந்த புத்தகத்தை நான் வீட்டுக்கு எடுத்துட்டு போகணும் அது மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே வழி .. அங்க போய் நான் நிறுத்தி நிதானமா எனக்கு வேண்டிய விஷயங்களை படித்து தெரிந்து கொள்வேன் ', என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் அவனிடம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.

" உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா சீதா நீ என்னவென்றால் இங்கே வந்து அமர்ந்து கொண்டு அமைதியாக ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறாய்.."

" ஏன் இப்ப சத்தம் போட்டு பேசுற?? இங்கெல்லாம் சத்தம் போட்டு பேசக்கூடாது கொஞ்சம் அமைதியா பேசு.. ஏன் இப்படி கத்துற??"

" சத்தம் போட்டு பேச கூடாதா ஏன் இது என்ன கோவிலா??"

" கிட்டத்தட்ட கோவில் மாதிரி தான் நீ முதலில் இங்கிருந்து வா போகலாம்", என்று சொல்லி அவன் கைபிடித்து அழைத்துச் சென்றாள் அவள்.

அங்கே அமர்ந்து கொண்டிருந்த லைபரேரியனிடம் சொல்லிக் கொண்டு அந்த புத்தகத்தை எடுத்துச் சென்றாள் வீட்டிற்கு.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் அவன் அசதியில்.

" சீதா கை கால்கள் எல்லாம் என்னவோ தெரியவில்லை லேசாக வலிப்பது போன்று தோன்றுகிறது.. எனக்கு கை பிடித்து விடுவாயா??", என பாவமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு அவன் கேட்கவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளும் அவன் கை பிடித்து விட்டாள்.

எப்படியோ ஒரு வழியாக அவன் தூங்கினால் போதும் மறுபடி அந்த புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தாள் சீதா..

ஆனால் அவனோ..

" நன்றாக இருக்கிறது சீதா.. அப்படித்தான்.. இன்னும் நன்றாக அழுத்தி பிடி.. கால்களிலும் வலிக்கிறது அங்கேயும் அழுத்திவிடு.. அப்படித்தான் சீதா.. இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறது", என்று கூறி ஆயாசமாக கண் மூடினான்..

அப்பாடா.. ஒரு வழியா கண் மூடி தூங்க ஆரம்பித்து விட்டான் இனி கிளம்பலாம் என்று யோசித்த வண்ணம் மெதுவாக கைகளை எடுத்துவிட்டு நகர முற்பட்டாள்..

" என்ன சீதா அதற்குள் எழந்துவிட்டாய்?? இன்னும் கொஞ்சம் அழுத்திவிடு அப்படியே இதோ பார் மேலே சுழல்கிறதே இந்த சக்கரம் அதையும் சூழல விடு அதிலிருந்து காற்று நன்றாக வருகிறது எனக்கும் உறக்கம் வரும் அல்லவா.. அப்படியே கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா..", என்று அடுத்தடுத்த வேலைகளை அவன் சொல்ல அவளும் பற்களை கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்தாள் பொறுமையாக.

" தண்ணீர் மிகவும் ருசியாக இருக்கிறது இங்கெல்லாம்.. சரி எனக்கு லேசாக தூக்கம் வருகிறது சாமரம் வீசுவது போல் எனக்கு வீசி விடுகிறாயா?? நான் அப்படியே உறங்கி விடுகிறேன்.. என்னவோ தெரியவில்லை, மேலே சுழலும் இந்த சக்கரத்திலிருந்து போதுமான காற்று எனக்கு வரவில்லை சாமரம் வீசினால் இன்னும் நன்றாக உறங்குவேன்", என்று அவன் 32 பல்லையும் காட்டி எழுந்து நின்று கேட்கவும் அவளுக்கு கோபம் உச்சந்தலைக்கு சென்றது..

" டேய்.. என்னை போட்டு ஏன்டா இப்படி பாடா படுத்துற??.. எங்க அம்மா அப்பா சொன்ன வேலையை கூட நான் செஞ்சதில்லடா ஆனா நீ சொல்ற எல்லா வேலையும் செஞ்சிட்டிருக்கேன் கடைசியில் என்னையும் உன் அரண்மனையில் வேலை செய்ற பணிப்பெண் மாதிரி ஆக்கிட்டியேடா ?? கால் அமுக்கி விடு, சாமரம் வீசு தண்ணீர் எடுத்து வா அப்படின்னு எத்தனை வேலை சொல்ற?? உன்னை என்ன பண்றேன் பாரு ", என்று கோபத்தோடு எழுந்தவள் உடனே அவன் கழுத்தில் கைவைத்து சுவரொடு சுவராக அவனை நிப்பாட்டினான் சீதா..!!

- தொடரும்..

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
ஓ...இது தான் அவனுக்கு எல்லாம் மறந்து போச்சா.....
ஏண்டா அந்த பாப்பா எப்படி அழுது இருக்கு.....உனக்கு பூவ்வா வேணுமா?????
கொஞ்சம் வெயிட் செய்து இருக்கலாம் நீ.....
விஜயன் தான் இருக்கான்.....எங்க உன் ஆளை காணோம்?????