மை டியர் ராவணா வித் லவ் சீதா - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,560
6,472
113
அத்தியாயம் 17

அடுத்தடுத்த வேலைகளை சரியான நேரம் பார்த்து இப்படி கொடுக்கிறானே என்கிற கோபத்தில் இந்திர ராவணனை சுவரோடு சுவராக நிப்பாட்டி அவன் கழுத்தில் கை வைத்து நெரிக்க தொடங்கினாள் சீதா..

" என்னடா நெனச்சிட்டிருக்க உன் மனசுல??.. நானும் பாத்துட்டிருக்கேன் அடுத்தடுத்த வேலைகளை கொடுத்துட்டே இருக்க.. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது கடைசியில் உன் அரண்மனையில் வேலை பார்க்கிற பணிப்பெண் மாதிரி என்னை மாற்ற பார்க்கிறாயா?? உனக்காக தானடா இத்தனை வேலையும் செஞ்சுட்டிருக்கேன் அதுலயும் குறுக்கால வந்து இப்படி கட்டய போடுற.. உனக்கு நல்லா இருக்கா இதெல்லாம்.. உனக்கு நல்லது செய்யப் போன பாவத்துக்கு தானடா இத்தனை கஷ்டத்தையும் அனுபவிக்கிறேன்.. கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா??", கண்கள் சிவக்க கோபத்தோடு அவனிடம் கேள்வி கேட்டாள் அவள்.

சற்று கோபம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவளின் கைகள் அழுத்தமாக அவன் கழுத்தில் பதிந்து விட அவள் விரல் நகங்கள் கூர்மையாக இருக்கவும் அது அவன் கழுத்தில் கீறல் போட்டது..!!

" கழுத்து வலிக்கிறது என்னை விட்டு விடு சீதா", மிகவும் திணறலாக அவனுடைய குரல் வெளிப்படவும் அப்பொழுது தான் அவளுக்கு சுயநினைவே வந்தது..

' அடடா.. நிஜமாகவே கழுத்தை நெரித்துவிட்டோமோ, கோபத்தில்?? பாவம் இப்படி பேசுகிறானே பேச முடியாதவன் பேசுவது போல ', என்று யோசித்துக் கொண்டே கைகளை விலக்கிக் கொண்டாள்.

அப்போதுதான் கவனித்தாள் அவன் கழுத்தில் லேசாக கீறல் விழுந்து ரத்தம் கசிவதை..

" அச்சச்சோ ரத்தம் வருது.. சாரி சாரி நான் ஏதோ கோபத்தில் இப்படி எல்லாம் செஞ்சுட்டேன் தயவு செஞ்சு மனசுல எதுவும் வச்சுக்காத இரு ஒரு நிமிஷம் இங்கேயே இரு எங்கேயும் போயிடாத வரேன்", என்று சொல்லிவிட்டு வேகமாக பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்து முதலுதவி செய்யும் பாக்ஸை எடுத்து வந்தாள்.

ரத்தம் வடிந்து கொண்டிருந்த இடத்திற்கு மருந்திட்டு சின்ன பேண்டேஜ் ஒன்றை எடுத்து போட்டு விட்டாள்..

" உனக்கு இத்தனை கோபம் வருமா சீதா??"

" இதுக்கு மேலயும் வரும்.. அமைதியா இருந்தா உனக்கு தான் நல்லது"

" ஆனால் ஒரு பெண் பிள்ளைக்கு இத்தனை கோபம் ஆகாதே.. அமைதியின் சொரூபம் தானே ஒரு பெண்.."

" நீ சொல்றதும் சரிதான் ஆனால் இந்த காலத்தில் நீ சொல்ற மாதிரி எல்லாம் இருந்தா தலையில் ஏறி உட்கார்ந்து மிளகாய் சட்னியிலிருந்து பன்னீர் பட்டர் மசாலா வரைக்கும் அறைச்சிட்டு போயிடுவாங்க"

" என்னென்னமோ கூறுகிறாய் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.. சரி அன்று ஒரு நாள் என்னை வெளியே அழைத்துச் சென்றாயே அந்த இடம் உனக்கு நினைவு இருக்கிறதா??"

" எந்த இடம்??"

" அதான் உண்பதற்கு தின்பண்டங்கள் நிறைய வாங்கித் தந்தாயே அந்த இடம்தான்"

" ஓஹோ ரெஸ்டாரன்ட் போகணுமா?? பசிக்குதா ??"

" பசி என்று இல்லை ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கிறது சீதா.."

" போகலாம் ஆனால் கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருக்கியா நான் சில முக்கியமான வேலைகள் முடிக்க வேண்டியது இருக்கு அதுவரைக்கும் அமைதியா இருந்துட்டா எனக்கும் நல்லது உனக்கும் நல்லது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்"

" நிச்சயமாக நீ வெளியே அழைத்துச் செல்வாய் என்றால் நான் அமைதியாகவே இருக்கிறேன்.."

எப்படியோ இன்னும் அரை மணி நேரத்திற்கு அவனை பக்கத்தில் வரவிடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையோடு மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்தவள் அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்..

விடுபட்டு போன அந்த பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கத் தொடங்கினாள் அவள்..

" மன்னன் சாபம் பெற்று இங்கிருந்து சென்று விட்டானா அப்படி என்றால் அதற்கு விமோசனம் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது அது வந்து.. மீனாட்சிபுரம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலைக்கு கீழே உள்ள ஏடுகளை எடுத்து படித்துப் பார்த்தால்தான் தெரியும்"

" அப்படி என்றால் நான் இப்போதே போய் அங்கே போய் பார்த்து விட்டு வருகிறேன் ராஜ குரு", என்று அவசரப்பட்டு கிளம்ப முயற்சி செய்தான் விஜயன்.

" ஒரு நிமிடம் பொறு.. நீ நினைப்பது போல் அத்தனை சாதாரணமாக உன்னால் அந்த ஏடுகளை எடுத்து விட முடியாது.. குறிப்பிட்ட நேரம் வரும் பொழுது தான் அந்த ஏடுகளை கையில் எடுக்க முடியும் அது அடுத்த நாளா அல்லது அடுத்த வருடமா இல்லை சில நூற்றாண்டுகளுக்குப் பிறகா என்று யாருக்கு தெரியும்??", என்று சொல்லி அவன் தலையில் குண்டை தூக்கி போட்டார் அவர்..

என்னதான் ராஜகுரு இப்படி எல்லாம் கூறினாலும் தன்னுடைய நண்பனுக்காக ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீனாட்சிபுரம் சென்று அவனும் அந்த ஏடுகளை எடுத்து படித்துப் பார்க்க நினைத்தான்..

ஆனால் அவனால் முடியவில்லை ராஜகுரு சொன்னது போலவே நந்தி சிலைக்கு கீழே உள்ள ஏடுகளை அவனால் எடுக்கவும் முடியவில்லை கண்களால் பார்க்க கூட முடியவில்லை..!!

அவனால் மட்டுமல்ல அதன் பிறகு அதை எடுப்பதற்காக முயற்சி செய்த எவராலும் இன்று வரை எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை..!!

இவ்வாறு அந்த புத்தகத்தில் போட்டிருக்க அதை படித்து முடித்ததும் அதிர்ச்சி அடைந்தாள் சீதா..

'யாராலயும் அதை பார்க்க முடியவில்லை என்றால் அப்போ என்னாலயும் முடியாதா?? அவங்களாலயே முயற்சி செஞ்சு முடியாமல் போன ஒரு விஷயம் எப்படி என்னால் மட்டும் முடியும்?? ஆனால், ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தான் தோணுது.. ஏனென்றால் அந்த ராஜகுரு இப்போதே பார்க்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் சில நூற்றாண்டுகள் கடந்து வேண்டுமானால் முயற்சி செய்து பார்க்கலாம் அப்போதும் பார்க்க முடியுமா என்பது உறுதி அல்ல என்பது போல் தானே கூறியிருந்தார் அதனால் நாமே ஒரு முயற்சி செய்து பார்த்து விடலாம்', என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள் சீதா.

" சீதா என்ன இது எப்போது பார்த்தாலும் இந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்து விடுகிறாய் மணிக்கணக்காக?? எனக்கு மிகவும் பசிக்கிறது வா போகலாம்", என்று அவளை அழைத்தான் அவன்.

'அவன் சாபம் பெற்று இங்கே வந்த கதை எல்லாம் சரிதான் ஆனால் அதற்கு விமோசனம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ?? அதை கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால் அதுவும் கடைசி வரைக்கும் கேள்விக்குறியாகவே இருக்கிறதே.. மீனாட்சிபுரம் போனால் தான் எல்லா விஷயத்திற்கும் விடை கிடைக்கும் போல.. இதைப் பற்றி இவனிடம் கேட்கலாம் என்று பார்த்தால் பழைய ஞாபகங்கள் வந்தாலோ அல்லது அந்த நினைவுகளை இவன் தேடி சென்றாலோ இவனுக்கு மரணம் நிச்சயம் என்று முனிவர் கூறியிருக்கிறாரே சாபம் விடும் பொழுது.. அப்படின்னா இவன்கிட்ட போய் இது பற்றி எதுவும் கேட்க முடியாது ', என்று யோசித்துக் கொண்டே அவனுடைய கைகளைப் பற்றி இழுத்துச் சென்றாள் வெளியே..

வழக்கமாக அவனை அழைத்துச் செல்லும் அதே ரெஸ்டாரன்ட் தான்..

அங்கே, அழைத்து வந்து அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்..

அவனுக்கு பிடித்த கட்லெட்டை எடுத்து வர சொல்லிவிட்டு, இவள் ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கினாள்..

" இது என்ன உனக்கு மட்டும் வித்தியாசமான நிறத்தில் அதுவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது..??"

" சாப்பிட்டு பார்", என்று சொல்லி அவனுக்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தாள்.

சாப்பிட்டு பார்த்தவன் கண்களில் பல்பு எரிந்தது..!!

" ஆஹா ஆஹா.. ஜில்லென்று இத்தனை இனிமையாக இருக்கிறதே, ருசியாகவும் இருக்கிறது.. இந்த உணவின் பெயரென்ன?? எனக்கும் இது ஒன்று வேண்டுமே"

" இதுக்கு பேரு ஐஸ்கிரீம்"

" ஐ... அ..... ஹம்.. சரி விடு அது என்னவோ இருந்து விட்டுப் போகட்டும் என்னை பொறுத்த வரைக்கும் இது குளுகுளு கூழ்.. எனக்கும் இது ஒன்று வேண்டுமே", என்று அவன் ஆசையோடு கேட்கவும் வேறு வழி இல்லாமல் இன்னொரு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தாள்..

ரசித்து ருசித்து ஒவ்வொரு ஸ்பூனையும் அவன் சாப்பிடுவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவளும் சாப்பிட்டு முடித்தாள்..

" சீதா இனிமேல் நாம் அடிக்கடி இந்த குளுகுளு கூழை சாப்பிடுவதற்காகவே இங்கே வரலாம் சரியா??"

" அதுக்காகவே நான் ஓவர் டைம் பார்த்து சம்பாரிக்கணும் போலயே..?? சரி சரி வா போகலாம்", என்று சொல்லி அவள் வேகமாக முன்னே நடக்க..

வெகு நேரமாக அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தடியன் அவள் எழுந்து செல்வதை பார்த்ததும் சரியான நேரம் பார்த்து எதிரில் வந்து அவளை இடித்தான்.

வேண்டுமென்றே இடிக்கிறான் என்பதை அவன் பார்வையிலும் செய்கையிலும் உணர்ந்து கொண்டவள் அவனை முறைத்த வண்ணம் தன் தோள்பட்டையை தேய்த்துக் கொண்டே வெளியே வந்தாள்.

" என்ன சீதா இடித்து விட்டார்களா?? விடு, பாவம்.. தெரியாமல் செய்திருப்பார்கள் நாம் போகலாம்", என்று சமாதானம் கூறினான் ராவணன்.

ஆனால் சற்று நேரத்தில் அவர்கள் வெளியே சென்றவுடன் மீண்டும் அந்த தடியன் வந்து அவளை வேண்டுமென்றே மறுபடியும் இடித்தான்.

இப்போது அவளுக்கு கோபம் தலைக்கேற அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு வேகமாக அவனைப் பார்த்து அவள் திரும்பினாள்..

ஆனால் அதற்குள் அவளை இடித்தவனின் சில்லு மூக்கை உடைத்திருந்தான் ராவணன்..🔥🔥

" என்ன தைரியம் இருந்தால் என் கண் முன்னாடியே என் சீதாவை இப்படி வேண்டுமென்றே இடித்து செல்வாய் ?? முதல் முறை செய்ததை கூட நீ தெரியாமல் செய்துவிட்டாய் என்று நினைத்து மன்னித்து விட்டேன்.. ஆனால் வேண்டுமென்றே நீ மீண்டும் வந்து இப்படி இடிப்பது சரியல்ல.. உன் பார்வையும் சரி நோக்கமும் சரி இரண்டும் சரியில்லை.. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே தீர வேண்டும்", என்று சொல்லிக்கொண்டே அவனை போட்டு வெளுத்து வாங்கினான் ராவணன்..!!

தான் செய்ய நினைத்ததை தனக்கு முன்பாக அதுவும் தனக்காக இப்படி ஒருவரிடம் சண்டைக்கு போகிறானே இவன் என்று நினைத்து மனதிற்குள் பூரித்து போனாள் சீதா..!!

அவனிடம் இவன் சண்டையிடும் காட்சிகளை ஒவ்வொன்றாக தன் மனதிற்குள் படம் பிடித்து ஃபிரேம் செய்து மாட்டிக் கொண்டாள் தன் இதய அறையில்💞💞

" என் சீதாவிடம் யாரேனும் வம்புக்கு வந்தால் இனி இந்த ராவணனின் கோபத்தை சந்திக்க நேரிடும்.. சீதாவை நெருங்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக இந்த ராவணனின் கோபத்தை சந்திக்க வேண்டும்", என்று கர்ஜித்தான் அவன்🔥🔥

"என் சீதா.. என் சீதா", என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை உரிமையோடு கூறுவதை காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

அவனுடைய கம்பிரமான குரலில் என்னுடைய சீதா என்று அவன் சொல்லும் அழகை ரசித்துக்கொண்டிருந்தவளின் மனதில் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டான் இந்திர ராவணன்..💞💞

- தொடரும்..

 

Author: Vishakini
Article Title: மை டியர் ராவணா வித் லவ் சீதா - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
Aww...cute ரெண்டு பேரும்❤️❤️❤️❤️❤️
சீதா....இப்படி எதிர்காலம் அற்ற காதல் உனக்கு வேணும் தானா?????
உன்னை நினைச்சி தான் எனக்கு கவலையே.....
சாபம் நீங்க அவன் போய்ட்டா நீ என்ன செய்வா
 
May 19, 2026
60
12
8
Tiruppur
Aww...cute ரெண்டு பேரும்❤❤❤❤❤
சீதா....இப்படி எதிர்காலம் அற்ற காதல் உனக்கு வேணும் தானா?????
உன்னை நினைச்சி தான் எனக்கு கவலையே.....
சாபம் நீங்க அவன் போய்ட்டா நீ என்ன செய்வா
மிக்க நன்றி மா 🥰 🥰 🥰 ❤️ ❤️ ❤️
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.