2
இல்லத்திலிருந்து நடந்து போய் வெளியே வந்த மதிவதனி வெளியே அவளுக்காகக் காத்து நின்ற அவளின் ஸ்கூடியில் எறினாள். அதன் இருக்கையில் அமர்ந்து கொண்டே நிலாகாலத்தைத் திரும்பிப் பார்க்க மணிமொழியும் இவளை நோக்கி வருவது தெரிந்தது.
“ஐயா அவசர ஜோலியா ஆப்பீசுக்கு போணும்னு ஜொன்னீங்க?”
அவனை வம்பிழுப்பது என்றால் அத்தனை ஆனந்தம் அவளுக்கு எனும்போது அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் ‘சண்டைக்கு வா. பாப்போம்’ என வாயடிப்பது அவளுக்குப் பிடித்த பால்பாயாசம் குடிப்பது போன்றது அவளுக்கு.
அவன் அன்பானவன்தான். அனைவருக்கும் பிடித்தவன்தான். பொறுப்பானவன் தான். புன்னகைக்காரன் தான். ஆனாலும் அவனிடம் ஓர் எல்லையுடனே எல்லோரும் பழக இவளுக்கு அப்படி இருந்ததே இல்லை. ‘அது ஒரு டம்மி பீசு’ எனதான் அவனைப் பற்றி அவள் கருத்து.
அவள் இளநிலை கல்லூரிப் படிப்பு நல்ல முறையில் தேர்வாகி சொந்த பிசினஸ்தான் செய்வேன் என்று அடம் பிடிக்க வீட்டில் எல்லோரும் விழி பிதுங்கினர். அத்தோடு மேலே படிக்க முடியாது என்று ஆட்டமாய் ஆட்டம் ஆட, வீட்டினர் தங்களுக்குத் தெரிந்த எல்லா இடங்களிலும் சென்று புலம்பிக் கொண்டு இருந்தனர். அந்த சமயம் தானாகக் கேட்டு மணிமொழி சொன்ன யோசனைதான் பாத்திரக்கடை வைப்பது.
அதை அவன் மதிவாணனிடம் சொல்ல அவன் அவனே சொல்வதாக தமிழிடம் சொல்லி அவரும் தலையாட்டி விட்டார். தனியார் நிறுவனத்தில் பெரிய அதிகாரியான அவர் அந்தக் கடையை மகன் பெயரில் வைத்து மகளை நிர்வாகிக்க வைத்தார்.
அவரது எதிர்கால, நிகழ்கால, ஏன் கடந்த காலத் திட்டங்கள் எதையும் அறியாமல் இவள் அந்தப் பாத்திரக் கடையில் வேண்டிய மட்டும் பாத்திரங்களை வாங்கிப் போட்டுவிட்டு மேலோட்டமாக நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்குப் பெரிய வேலைகள் வைக்காமல் தமிழ் அதை மறைமுக நிர்வாகம் செய்கிறார். அதனால் இவளும் சிறகாகப் பறக்கிறாள்.
“அவசர ஜோலிதான். அதுக்குத்தான் போறேன். இப்போ இல்லத்தோட விளம்பர நோட்டீஸ் உன்கிட்ட கொடுக்க வந்தேன். நீ என்ன நினைச்ச?” கேட்டுக் கொண்டே வந்த மணிமொழி கையில் இருந்த நிலாகாலம் பற்றிய விபரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்தான் அவளிடம்.
“அடேயப்பா அடேயப்பா நீங்க நோட்டீஸ் குடுத்து தான் இல்லம் பத்தி எனக்குத் தெரியனுமா?” இன்னும் அவனைச் சீண்டும் குரலை விடவில்லை அவள்.
“அப்படி இல்லை. அது இங்கே ரூல்ஸ்”
“அப்போ நான் கிளம்ப முன்னே ஏன் குடுக்கலை?”
“நான் உன்னைக் கிளம்பவே சொல்லலியே? நீயாத்தான் நான் சிரிச்சா அப்படி அர்த்தம் இப்படி அர்த்தம்னு சொல்லிட்டு கிளம்பிட்ட?”
“அதான் எனக்கு வேற வேலை இருக்குன்னு பேச்சை நீங்க கட் பண்ணீங்களே?”
“அப்படி நான் சொன்னா நீ போயிடுவியா?”
இப்படியாக மறுபடியும் முதலில் இருந்து அவளிடம் பேச்சை வளர்த்துக் கொண்டு இருந்தவன் தனது அலைபேசி அழைக்கவும்,
“ஓகே. நான் கிளம்பறேன். பார்த்துப் போயிட்டு வா. வீட்டுக்குப் போனதும் போன் பண்ணு“ என்று தன் காரை நோக்கிக் கிளம்பினான்.
“வீட்டுக்கு இப்போ போக மாட்டேன்…” எனும் அவளின் சேட்டைக்குரலில் சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறியவன் மீண்டும் இவளைப் பார்த்து தலையசைத்து விட்டு வண்டியைக் கிளப்பாமல் இவளைப் பார்த்துக் கொண்டு அதே மெல்லிய புன்னகையுடன் இருக்க,
“இதோ கிளம்பிட்டேன்…”
அவளும் புன்னகை மாறாமல் தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டுப் பறந்தாள். இன்று இல்லம் செல்வதாகக் கூறியது சனிக்கிழமை. பெரும்பாலும் சனி, ஞாயிறு அவள் பாத்திரக்கடைக்குப் போக மாட்டாள்.
அப்புறம் எதற்குக் கடை வைத்தாள் என்று அவள் அம்மா மலர் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவளைச் செல்லமாக கடிந்து கொள்வதுண்டு.
கடையில் பாத்திரங்கள் கெட்டுப் போகபோவதில்லை. ஆகவே உணவு, மளிகை போன்ற அந்த மாதிரி அக்கறை எல்லாம் தேவை இல்லை அவளுக்கு. அதுதான் அவளுக்கு பரபரப்பைக் குறைக்க மணிமொழி தேர்வு செய்தது. பாத்திரங்கள் விலை கிட்டத்தட்ட முன்கூட்டி நிர்ணயித்து அவள் அப்பா கொடுத்து விடுவார். நுகர்வோர் வந்தால் விற்பது மட்டும்தான் இவள் வேலை.
விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள், மற்றும் பெரும்பாலான சாயங்கால வேளைகளிலும் கூட்டம் இருக்கும். வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வழியில் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குபவர்களில் ஓரளவு பாத்திரம் வாங்குபவர்களும் உண்டே?
ஆக அப்படிப்பட்ட நாட்கள் நேரங்களில் கடையை விட்டு அசைய மாட்டாள். துணைக்கு ஆட்களும் உண்டு. அவள் அப்பாவின் வழி நடத்துதலும் உண்டு. எப்படியோ அவளும் தொழில் அதிபர் தான்.
அப்பா தமிழ் இந்த வருடம் ஓய்வு பெற்று விடுவார் தன் வேலையில். அடுத்து அவர் இங்கே நேரடியாகக் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்தாலும் “அப்படி மட்டும் அவர் சொல்லட்டும், இருக்கு சேதி!” என உண்மையும் பொய்யுமாக மிரட்டிக் கொண்டும் இருக்கிறாள் வனி.
“இது என் கடை. நான்தான் ஓனர். வேணா கருத்து கந்தசாமி கருத்து சொல்லிட்டுப் போகட்டும். கல்லாவுக்கு வந்தா.. மவனே சீவிடுவேன்” வீர வசனம் பேசிய மகளை தலையில் அடித்துக் கொண்டு பார்த்தார் அவள் அன்னை என்றால் சிரிப்புடன் பார்த்திருந்தான் அண்ணன்.
இவள் பேச்சுக்கள் தமிழை எட்டாமலா இருக்கும்? அவர் முகத்தில் எந்த எதிர்வினையும் எப்போதும் போல இப்போதும் இல்லை. ரகசியமாக அதை எட்டி எட்டிப் பார்த்து சலித்தவள்,
“இவரைக் கல்யாணம் கட்ட முன்ன யோசிச்சு இருக்கக் கூடாதா மலரம்மா?” என அன்னையிடமே வாயை விட்டு குழம்புக் கரண்டியால் எப்போதும் போல இவளும் அடி வாங்கிக் கொண்டாள்.
இதோ இப்போது நிலாக்காலத்தில் இருந்து கிளம்பி அம்மாவின் மூட்டு வலிக்கு மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டும். போகும் வழியில் அவளுக்குக் கொஞ்சம் முக அலங்காரப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு…
இப்படி இவள் சிந்தனை மாற, அங்கே மணிமொழியின் சிந்தனைகள் வேறு எதையும் சிந்திக்கவில்லை. தனது அலுவல அறையில் தனது இருக்கையில் அமர்ந்து தன் கையில் இருந்த அலை பேசியையே வெறித்துக் கொண்டு இருந்தான். இவர்கள் இருவரின் எண்ணங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் காலம் வருமா? அதையும் காலம் தான் சொல்ல வேண்டும்.
அம்மாவுக்கு மூட்டு வலித்தைலம் இருப்பில் இருப்பதால் அவசரமாக வனி அங்கிருந்துக் கிளம்பி, அவள் நினைத்தபடி ஊரைச் சுற்றிவிட்டு, கொஞ்சம் நிதானமாக வீட்டுக்குப் போன போது, மலர் வாசலில் உட்கார்ந்து கொண்டு அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்.
“அம்மா ஒய்? எதுக்கு இங்கே உக்கார்ந்து இருக்கீங்க? தமிழ் வந்து என்னைப் புகழ்ந்து பாடவா? உள்ள போங்க மம்மி“ சொல்லிக் கொண்டே வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் செல்ல மலர் இன்னும் முறைத்தார்.
“எதுக்கு இவ்ளோ நேரம்?”
“ம்மா! சொல்லிட்டுத் தானே போனேன்?”
“அதுக்கு? ஒரு போன் பண்ணியாது இங்க இங்க இருக்கேன்னு சொல்லலாம்ல?” என்ற தாயைப் புரியாமல் பார்த்தாள் வனி.
இங்கே இங்கே எல்லாம் போய்விட்டுத்தான் வருவேன் என்று சொல்லிவிட்டுத்தான் போனாள். மீறியும் குழப்பம் என்றால் போனில் கேட்டு இருக்கலாம். அதைவிட்டு இதென்ன?
ஆனால் தமிழ் ஜஸ்ட் நவ் என்பதாக இப்போதுதான் மலருக்கு போன் போட்டு சாமியாடி இருந்தார். அவரே சொன்ன வேலைதான் இல்லத்துக்குப் போவது. இவள் கூடுதலாக கடை கண்ணிகளுக்குப் போவது அவர் லிஸ்டிலேயே இல்லை. இவளும் அம்மாவிடம் மட்டும்தான் சொன்னாள். அப்பாவிடம் சொல்லவில்லை. இருவரில் யாரிடம் சொன்னால் என்ன? என்று விட்டுவிட்டாள். மலரும் இதையெல்லாம் பெரிதாக நினைக்காததால் தமிழிடம் ஏற்கனவே சொல்லி இருக்கவில்லை. ஒரு முறை சொல்ல முயற்சித்து அலைபேசி இணைப்பு கிடைக்கவில்லை அவருக்கு.
கடந்த மூன்று நாட்களாக தனது தொழில் தொடர்பான முகாம் ஒன்றில் இருக்கும் தமிழ் நாளைதான் வீட்டுக்கு வருவார். முகாமில் இருந்து கொண்டே இங்கே ஒவ்வொரு ஆர்டர் போட்டுவிட்டு அதையும் சொத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அடுத்து நிலாக்காலம் போகச் சொன்னவர் அப்புறம் பார்த்தால் இப்போது அதற்கும் போனைப் போட்டு ஒரே ‘நை நை’
“இவ்ளோ நாள் நான் தான் நிலாகாலத்துக்கு போவேன். மீறினா மதி போவான். நாம போகும் போது இவளைக் கூட்டிட்டுப் போவோம். அட இன்னிக்கு மீல்ஸ் டீடெயில்ஸ் தெரிஞ்சா எனக்குத் தெரிஞ்ச கேட்டரிங் இடத்துல ரெண்டு நாள் ஆபர் போடுறான், அதுல சேர்த்து விடலாம்னு பார்த்தேன். மதி போக முடியாதுன்னு சொல்லிட்டான். உனக்கும் முடியலை. அதான் அவளை அனுப்பி வச்சா, இப்படி போனா போன இடம் வந்தா வந்த இடம்னு இருந்தா எப்படி? இதெல்லாம் நீ கேக்க மாட்டியா?” என்று பிளந்து கட்டிவிட்டார்.
கம்மென்று இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை மலருக்கு அப்போது. “சரிங்க சரிங்க” என அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ உளறிவிட்டு போனை வைத்திருந்தார் அவர்.
ஒரு நாளும் இல்லாத திருநாளாக மகள் வெளியே போய் வருவதில் என்ன குறையைக் கண்டார் அவர் கணவர்? ஒன்றும் புரியாமல் மகளுக்கு போனை போட அவள் யாருடனோ பேசிக் கொண்டு இருப்பதாக அலைபேசி தெரிவித்தது.
ஒருவேளை தமிழ்தான் பேசுகிறாரோ என்று சிறிது இடைவேளை விட்டு கணவருக்கு போன் போட்டுக் கேட்க, “இன்னும் அவகிட்ட நீ போன்லயும் பேசலையா?” என கொதித்து விட, “இதோ இதோ பேசறேங்க” எனச் சொல்லி வைத்து விட்டார்.
தலையைப் பிடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து பார்த்தால் புத்திர பாக்கியம் அப்போதுதான் வீட்டுக்கு உள்ளே வருகிறது.
“என்னடி உனக்கும் உங்க அப்பாவுக்கும் பிரச்சனை? உன்னை இல்லத்துக்கு அவர்தான் போகச் சொன்னார். வரதுக்குள்ள எதுக்கு ஊரைக் கூட்டுறார்?” என்றார் அங்கலாய்ப்பாக.
அதைக் கேட்ட மகள்,“என்ன? என்னை எங்கன்னு அப்பா கேட்டாரா? உங்ககிட்ட சொல்லிட்டுத் தானே போனேன்? நீங்க சொல்லலியா?” என ஆச்சர்யப்பட்டு இவர் குற்றக் கணக்கை ஏற்றவும், இவருக்கு அப்படிக் கோபம் வந்தது.
“ஏண்டி, வீட்டை விட்டு வெளியே போனா நேரம் முன்ன பின்ன ஆகத்தான் செய்யும். என்ன ஸ்கூல் குழந்தையா? நாலு மணிக்கு ஸ்கூல்விடும். நாலு பத்துக்கு வீட்டு வாசல்ல நிக்கணும்னு சொல்றதுக்கு?” என்றார்.
“இதை அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“சொல்ல விட்டாதாத்தானே? ஆமா இத்தனை வருசத்துல இப்படி அவர் கேட்டதில்லையே? தவிர நாமளும் எல்லாம் சொல்லிட்டுத்தான் போவோம்…சரி சரி நீயும் சொல்லிட்டுத்தான் போன. விடு பார்ப்போம். ஐயோ நீ வந்ததும் சொல்லச் சொன்னார். உனக்கு அடிச்சா என்கேஜ்ட்னு வந்துது எங்க ரெண்டு பேருக்கும்”
“ம்? ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் போனப் போட்டு இருப்பீங்க. உங்க அக்கப் போர் இருக்கே? முடியல. இருங்க அப்பாவுக்குப் போடறேன்”
தமிழை அழைத்து தான் வந்து விட்டதைக் கூறி அவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு முடித்து அழைப்பைத் துண்டித்தாள் வனி.
“இன்னிக்கு சமூகம் ஏன் இப்படி டென்ஷன் ஆகுது?” எனத் தாயைக் கேட்டாள் வனி.
“என்னைக் கேட்டா? அவரு கேம்ப் போன இடத்துல செல்போன் சிக்னல் எல்லா இடத்திலும் இருக்காது. அவர் சொன்ன ஊர்ல அப்படித்தான் இருக்கும். சிக்னல் கிடைக்கிற இடத்தில இருந்து போன் பண்ணுவார் போல.நானும் யோசிக்காம விட்டுட்டேன். நீ ஷாப்பிங் போறதை சொல்லாமல் இருக்கணும்னுலாம் விடலை. ஒரு வாட்டி ட்ரை பண்ணேன். ரிங் போகலை. அதுக்குள்ள கீரை வந்துச்சுன்னு வாங்கப் போனேன். சொல்ல விட்ருச்சு. அட நீ என்னச் சின்னக் குழந்தையா? ரெண்டு மணி நேர லேட்டுக்கு ஊரைக் கூட்டிகிட்டு? அந்தாளுக்கு வேற பொழப்பில்ல. விடு“
“சிக்னல் கிடைக்காதுன்னு இப்போதான் கண்டுபிடிச்சீங்களா? சிறப்பு. எங்களுக்கு முதல்லயே தெரியும். அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போனேன். நீங்க என்னடான்னா…”
தாயும் மகளும் பேசியபடி தத்தமது வேலைகளைப் பார்க்க, அங்கே தமிழ் மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமாளிக்க முயன்று கொண்டு இருந்தார்.
“இனி விட மாட்டேன். உங்களால் முடிஞ்சதைச் செஞ்சு பாருங்க“ என்ற மணிமொழியின் குரல் அவர் காதுகளில் ராஜ திராவகத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.
-----------------------------------------------------------
Author: Vishakini
Article Title: காதல் ராஜ வீதியில் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: காதல் ராஜ வீதியில் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.