காதல் ராஜ வீதியில் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,482
113
Germany
4

அன்று ஞாயிறுதான். வேலைகளை நிதானமாக செய்யலாம் என்றே காலையில் மனைவியுடன் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார். அங்கே நடந்த இவர்களின் பேச்சுவார்த்தை, விஷயத்தை ஆறப் போடக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தி இருந்தும் அதையும் மீறி அலுவலத்தில் தலைகாட்டி விட்டார்.

மனைவியிடம் சொன்னது போல் தனது அலுவலகத்துக்குப் போய் வேலை பார்க்க முயன்றார் தமிழ். அது முடியாமல் போகவும் எல்லா நாளும் அலுவலகத்தில் தரிசனம் தரும் அவருடைய சேர்மனிடம் சொல்லிக் கொண்டு அவரின் அதிருப்தியை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

தமிழ் அடுத்து நேரே பயணப்பட்டது ஜம்புலிங்கத்திடம். ஜம்புலிங்கம் இருபத்து நான்கு வருடங்கள் முன்பு அவர் மனதின், வாழ்வின் திசையை மாற்றியவர்.

ஜம்புலிங்கம் இப்போது இருப்பது கோவையை ஒட்டிய ஒரு குக்கிராமத்தில். முன்பு அவர் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள ஆலமரத்தூர் என்னும் இன்னொரு குக்கிராமத்தில் இருந்தார். தமிழின் ஒன்றுவிட்ட சகோதரி பூங்கோதை மூலம்தான் ஜம்புலிங்கத்தை தமிழுக்கு தெரியும்.

அப்படி கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாக ஜம்புலிங்கத்தை, அவரின் வாக்குகளைத் தொடர்ந்து வந்த நிலையில், மதிவதனி தன் பதினோராவது வயதில் பூப்பெய்து, அன்று தொடங்கி உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மயங்கி விழுந்தாள்.

அவளுக்கு மருத்துவம் பார்த்த அந்த பெண் மருத்துவர், “குழந்தைக்கு ரத்தம் இல்லை. அதாவது அனீமிக்கா இருக்கா. வேற ஒன்னும் இல்ல. நான் எழுதித் தர்ற மருந்து, டானிக் குடுங்க. அப்புறம் நீங்க வீட்ல செய்யுற சத்து மாவெல்லாம் குடுங்க. நல்ல ரெஸ்ட் குடுங்க. சிக்ஸ்த் தானே படிக்கிறா? பேசாம ரெண்டு மாசம் லீவைப் போடுங்க. அப்படியே இந்த வருஷம் போனா அடுத்த வருஷம் படிச்சிக்கலாம். ஹெல்த் முக்கியம் இல்லியா?” என மருத்துவமனைப் படுக்கையில் கிறங்கிக் கிடந்த மதிவதனியின் மதி முகத்தை கனிவுடன் பார்த்துக் கொண்டு சொன்னார்.

அதன்படி எத்தனையோ சத்தான ஆகாரங்கள் கொடுத்தும், மருந்து மாத்திரைகள் கொடுத்தும் மதிவதனியின் பூமுகம் வாடிக்கிடந்ததுடன் அடிக்கடி சோர்ந்து படுத்துக் கொள்வாள். விடாமல் அவளுக்கான மருத்துவத்தை தொடர்ந்து வந்தாலும் நாளுக்கு நாள் அவள் நிலைமை தேய்ந்து வந்தது.

அப்போது ஊரில் இருந்து மதிவதனியைப் பார்க்க வந்தார் பூங்கோதை. வந்தவர் வதனியின் நிலை கண்டு அங்கலாய்த்து விட்டு ஜம்புலிங்கம் பற்றி நினைவு கூர்ந்தார்.

“கை ராசியான ஜோசியர். சாமியாரும் கூட. ஏற்கனவே அவர் சொல்லி செஞ்ச பரிகாரத்துல தான் உன் மகன் இன்னிக்கு அரும்பு மீசையோட ஜம்முன்னு நிக்கிறான். இப்பவும் போய் கஷ்டத்தை சொன்னா பரிகாரம் சொல்லுவார். நீ அதையும் இதையும் சொல்லாம போய் பாரு” என குழம்பிய அவர் மனதை இன்னும் கலைத்துவிட்டுப் போனார்.

தமிழ் மலரின் முகம் பார்க்க அவரோ எதிர்பார்ப்புடன் இவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“நீ என்ன சொல்ற மலர்?”

“நான் என்ன சொல்றது? எனக்கு நீங்களும் நம்ம பிள்ளைங்களும் தான் முக்கியம் “

“இல்லை மறுபடியும் போய் அவரைப் பாக்கிறதா?”

“ஆனா முதலில் சொன்ன மாதிரி இப்போ சொல்ல மாட்டார்ல?”

சிறு சிரிப்புடன் “இல்ல. அப்படி இருக்காது. இருந்தா வேற வழி இருக்கான்னு கேக்கிறேன்” என்றார் அவர் கணவர்.

“என்ன? வேற ஏதாவதா? “ என்று முறைத்தார் மலர்.

“போடி!” என்று மனைவியை செல்லமாக அதட்டிவிட்டுக் கிளம்பினார் தமிழ்.

முதன் முதலாக ஜம்புலிங்கத்தை சந்தித்தது மதிவாணனுக்காக. ஆறு வயதான மதிவாணன் தன்னையொத்த சிறுவர்களுடன் விளையாடும் போது தவறுதலாகக் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்திருந்தான். அதைக் குணப்படுத்த பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவனுக்கு குணமாகவில்லை. மகனைப் பார்த்துக் கொண்டே மறுகிய மனைவி தமிழின் மனதுக்குள் பூகம்பத்தைக் கிளப்பினாள்.

அப்போது பூங்கோதை தான் இவரைத் தடுத்தாட் கொண்டார். “நீ ஜம்புலிங்கத்தை போய் பாரு. வழி சொல்லுவார்” என ஆரம்பித்து இவரின் இப்போதைய பிரச்சனைக்கு ஆரம்பப்புள்ளி வைத்திருந்தார்.

“உனக்கு எப்படிக்கா தெரியும்?”

“எனக்கு எப்படி தெரியும்? தெருவுல இருக்கற சுசீலா அடிக்கடி சொல்லுவா. அவ கொழுந்தனுக்கு உடம்பு முடியாம போனப்போ அவன் பொண்டாட்டி அவர்கிட்டதான் கூட்டிட்டு போனாளாம். உடனே சரியாகிடுச்சாம். இப்போ இங்கே இருக்கற வீட்டை வித்துட்டு சென்னையில போய் செட்டில் ஆகிட்டாங்களாம்!”

“சென்னையிலயா?”

“ஆமா. இங்கே இருக்கும்போது சோத்துக்கே சிங்கி அடிச்சாங்களாம். இப்போ சென்னையில பன்னிரெண்டாயிரம் வாடகையில வீடாம். வீட்டுல ஏ.சி யாம்! ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்களாம். ஜம்முன்னு இருக்காளாம் இவ கொழுந்தன் பொண்டாட்ட. இவகிட்ட அவ பீத்தி இருக்கா…”

“அக்கா அதை விடுக்கா. அவர்கிட்ட போனதும் அந்தப் பையன் உடம்பு சரியாகிருச்சா?”

“ஆமா, பின்னே?”

“அப்போ பார்ப்போம் “

“என்ன? நீயும் பாக்கிறியா? சுசீலாகிட்ட சொன்னா அவ புருஷன் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுவா. எல்லாம் எல்லாம் தெரிஞ்சவங்கதான். நம்மகிட்ட ஒன்னும் தெரியாத மாதிரி இருப்பாங்க”

அக்காவைக் கூர்ந்து பார்த்த தமிழ், ‘நீயும் அப்படியா?’ என்று கேட்க வந்தவர், அதை விடுத்து “சரிக்கா. கேட்டு சொல்லு”என்றார்.

பூங்கோதை கேட்டு சொன்னபடி ஆலமரத்தூரில் தனது வீட்டில் கோழிகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டு இருந்த ஜம்புலிங்கத்தை அலுவலத்தில் போராடி அனுமதி பெற்று உடனே போய் சந்தித்தார் தமிழ்.

மகனுக்கு உடம்பு சரியில்லை, தலையில் அடி என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. அவர் வீட்டைச் சுற்றி போட்டிருந்த முள் வேலியின் படலை தள்ளிக் கொண்டு தமிழ் நுழையும் போதே ஜம்புலிங்கம் சொல்லிவிட்டார்.

“என்னப்பா பையனுக்கு மண்டையில் பலத்த அடியா?”

அந்தக் கேள்வியில் பெரிதாக ஒன்றும் அதிர்ந்து விடவில்லை தமிழ். எப்படியோ சுசீலா உளறி இருப்பாள். யார் மூலமாகவோ தெரிந்துகொண்டு சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டே அடுத்த அடியை இவர் எடுத்து வைக்க,

“வேலை பாக்கிற இடத்துல பணம் திருட்டு போய் இருக்குமே? போலீஸ் விசாரணை வரை போயிட்டு வந்து இருப்பியே?” என்றார் ஜம்புலிங்கம்.

அதில் ஆடி விட்டார் தமிழ். அது உண்மைதான். மலரிடம் கூட இந்த விஷயம் அவர் சொல்லி இருக்கவில்லை. ரகசியமாக போலீஸ் விசாரணை மேற்கொள்வதால் எந்த ஊடகத்திலும் வரவில்லை. அப்படி இருக்க இவருக்கு எப்படித் தெரிந்தது?

தமிழ் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து சிரித்த ஜம்பு வெற்றிப் பெருமிதம் எல்லாம் படவில்லை.

“எல்லாம் இருக்கறதுதான். என்கிட்ட வந்துட்டல்ல? இனி நான் பார்த்துக்கறேன்”

அதன்பின் ஜம்பு இவர் குடும்பம், அதன் முக்கிய நிகழ்வுகள் குறித்து என்ன சொன்னாலும் அது சரியாகவே இருந்தது. அதில் முழு சரணாகதி அடைந்த தமிழ்,

“இப்போ பையன் சரியாகணும். அதுதான் முக்கியம். என் பிரச்சனை பத்தி கவலை இல்லை. என்மேல தப்பு இல்லை. ஆனா சுத்தி வளைச்சு நான் பொறுப்பு இல்லாம இருந்ததாலதான் திருட்டு போச்சுன்னு சொல்லலாம். சொல்லிட்டு போகட்டும். இந்த மடம் இல்லைன்னா சந்தை மடம். அதை நான் பார்த்துக்கறேன்” என்றார்.

“உன் பையன் பிரச்சனை சுளுவா தீர்ந்துந்திடும். ஆனா உன் ஆபிஸ் பிரச்சனை உன் மானத்தைக் கப்பல்ல ஏத்திரும்”

“என்ன சொல்றீங்க?”

“பணத்தை நீதான் எடுத்ததா சொல்லி இருப்பாங்களே?”

திகைத்து நின்றுவிட்டார் தமிழ்.

“அப்படி சொன்னாங்கதான். ஆனா நான்தான் எடுக்கலைன்னு ப்ரூவ் பண்ணிட்டேனே? அதுக்கு அப்புறம்தான் இங்கே வர லீவ் குடுத்தாங்க. இல்லைன்னா எனக்கு லீவ் குடுத்தே இருக்க மாட்டாங்க “

தமிழ் என்னவோ ஜம்புதான் போலீஸ் என்பதுபோல் பயந்து பதில் சொன்னார்.

“ஆனா இது உன்னை சிக்க வைக்கிற சூழ்ச்சி. இந்த நேரம் உன்னைப் பத்தி தப்பு தப்பா போட்டுக் குடுத்து உன்மேல பழியை மாத்த முயற்சி நடக்குது”

இதற்கும் மேல் ஜம்பு சொல்லும் பரிகாரத்தை செய்யாமல் இருப்பாரா தமிழ்?

“என்ன செய்யணும் சாமி?”

தமிழின் நாக்கு தானாக மடங்கியது. கைகள் தானாக வாயைப் பொத்தியது. உடல் குறுக்கிக் கொண்டது. கம்பீரமாக தன் வீட்டு வாசலுக்கு வந்த தமிழை பார்த்தது போலவே இப்போதைய தமிழையும் பார்த்தார் ஜம்பு.

“ஒவ்வொண்ணுக்கு ஒவ்வொரு பரிகாரம். உனக்கு எது முதல்ல வேணும்?”

“என்ன ஆனாலும் எனக்கு முதல்ல பையன்தான் வேணும்!”

“அப்போ ரெண்டாவதா பொண்ணை பெத்துக்கோ!”

இவர் என்ன சொல்கிறார்? அவர் பேசிக் கொண்டு இருப்பதென்ன? இவர் சொல்லிக் கொண்டு இருப்பது என்ன? ட்கமிழ் பொறுமையை வரவழைத்துக் கொண்டு பேசினார்.

“சாமி, பையன் ஆபரேசன் பண்ணிதான் பொறந்தான். அடுத்து அஞ்சு வருசத்துக்கு பிள்ளை பெற வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. தவிர அவளுக்கும் உடம்பு வீக்கா இருக்கு. அதனால் அடுத்த பிள்ளை வேண்டாம்னு இருக்கோம்”

“வேண்டாமா? விடு. அதை அப்புறம் பாப்போம். உன் ஆபீஸ் பிரச்சனை எப்போ தீரும் தெரியுமா?”

“எப்போ?”

“உன் மக இந்த பூமியில உதிச்சதும் அந்தப் பிரச்சனை அப்படியே கரைஞ்சு காணாம போய்டும். அதுக்கு முன்னே நான் சொல்ற மலைக்கோவிலுக்கு போய் சில பரிகாரம் செய்”

“அது சரிதான் சாமி. ஆனா நாங்கதான் அடுத்தப்பிள்ளை வேண்டாம்னு இருக்கோமே?”

“உன் மக உன் மனைவி வயித்தில் கருவானதும் உன் மகன் பிழைப்பான். அவ இந்த பூமியில் பிறந்ததும் உன்னைப் பிடித்த பீடை விலகி நிம்மதி அடைவாய். இதுக்கு மேலே உனக்குப் பரிகாரம் இல்லை. உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ”

“இல்லைங்க சாமி. அவளுக்கு உடம்பு சரியில்லை. வீக்கா இருக்கா”

“எல்லாம் சரியாகிடும். உன் பேரப்பிள்ளைகள் கூட உன் மனைவி ஓடியாடி விளையாடுவா. நீ பார்ப்ப!”

அத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் ஜம்புவின் வார்த்தை சில்லென்ற அருவி நீராக தமிழின் மனதைத் சீராட்டியது.

“சாமி, தட்சணை?”

“உன் பிரச்சனை தீரட்டும். நீயே தேடி வருவ. அப்போ கேக்கிறேன். போயிட்டு வா!’

என்ன இருந்தாலும் அலுவலகத்தில் அவருக்கு எதிராக யாரும் பேசியிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் அலுவலத்திற்கு சென்ற தமிழ் தன் வாழ்நாள் அதிர்ச்சியை சந்தித்தார்.

ஆம்! அவர் மட்டுமின்றி அலுவலக மிகவும் நம்பிய அலுவலக பியூன் தான் இவரைப் பற்றி உயர் அலுவலர்களுக்கு தவறான தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

அப்படி அவன் ரகசியமாக சேர்மனிடம் சொல்லிக் கொண்டு இருந்தபோது கையும் மெய்யுமாக அதைப் பிடித்தாலும் மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை தமிழுக்கு.

அவர்கள் இருவரும் இவரைப் பார்த்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் “ எல்லாம் போலீஸ் முடிவுதான் இறுதி “ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

ஆக இன்னும் இந்த கேஸ் முடியவில்லை என்பதை விட முடிக்க விடவில்லை என்பது புரிய, மகனின் உடல்நிலையும் கவலைக்கிடமாக தமிழ் தன் மனைவியிடம் மனம் விட்டுப் பேசினார்.

ஆலமரத்தூரில் இருந்து வந்ததில் இருந்து இவர் என்ன சொல்லுவார் என்று இவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்த மலர் கணவர் சொல்லுக்கு மறுசொல் சொல்லவில்லை.

இப்படியாகத்தான், இதற்காகத்தான் மதிவாணன் தங்கையாக மதிவதனி பிறந்தாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
380
83
Chennai
Nice.... இப்ப மதி பிறக்க வரை சரி ஓகே.....
இதில் மணி விஷயம் எங்க எப்படி வந்து இருக்கும்????