மையல் 12
திறந்திருந்த வீட்டைக் கண்டதும் மேகவியின் மனம் திடுக்கிட்டது.
"இந்த ஏரியால திருடன் வர்றதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லையே? சுத்தி சிசிடிவி கேமரா வேற இருக்கு! என்ன ஆச்சு?" தனக்குத்தானே உரைத்த படியே கதவின் கைப்பிடியில் வலது கரத்தைப் பதித்து திருகிப் பார்த்தாள்.
'லாக் எதுவும் உடைஞ்ச மாதிரி இல்ல. கீ வச்சு ஓபன் பண்ண மாதிரிதான் தெரியிது. யாரு செஞ்சிருப்பா. வீட்டோட ஆல்டர்னெட் கீ செக்யூரிட்டிக்கிட்ட மட்டும் தான் இருக்கு. அது, இங்க ஸ்டாரைத் தவிர வேற யாருக்கும் தெரியாதே?' எனச் சிந்தனை எழ, சட்டென்று கைப்பேசியில் இருந்து தோழி தாரிகாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
எச்சரிக்கையுடனே வாயிலைக் கடந்து உள்ளே செல்ல, கைப்பேசி ஒலி வீட்டின் கூடத்தில் இருந்து கேட்டது.
'ஹேய்.. இவதான் வீட்டுக்குள்ள இருக்காளா?' என்று நிம்மதி மூச்சு விட்டவளின் கண்கள் சுற்றத்தைக் கண்டு வியப்பில் விரிந்தது.
"வீட்டைக் கிளீன் பண்ணியாச்சா என்ன? வேலைக்கார அம்மா வந்துட்டாங்களா? பார்றா, நமக்காக ஸ்டார் படு பயங்கரமா வேலை பார்த்து இருக்காளே?" எனச் சிரித்தபடி வர, மறுபுறம் கைப்பேசியை இணைத்தாள் தாரிகா.
உடனே அதனைத் துண்டித்த மேகவி, "ஸ்டார்.." என்று புலனத்தின் வாயிலாக குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டாள்.
"என்ன?"
"வேலைக்கார அம்மா வந்தாங்களா.?"
"இல்ல, வரல."
"அப்ப, வீட்டை இன்னும் கிளீன் பண்ணலயா.?"
"அதெல்லாம் பண்ணியாச்சு?"
"யார் செஞ்சா.?"
"ஹான்.. வீட்டு ஓனரோட ஓனர்!"
"என்னடி சொல்லுற.?" எனத் தட்டச்சு செய்து முடித்த பொழுது, "சிஸ்டர், இந்தாங்க காஃபி!" என்றவாறு சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான் சத்யகீர்த்தி.
'இவன் எங்க, இங்க வந்தான்? ஓனரோட ஓனர்னு இவனைத் தான் சொன்னாளா? மேரேஜ் விஷயம் தெரிஞ்சிடுச்சா என்ன? அச்சச்சோ!" என எண்ணிய மேகவியின் இதயம் ஒன்றே முக்கால் மடங்கு வேகத்தில் துடித்தது.
"தேங்க்ஸ் ப்ரோ.." என்ற தாரிகா அதனை அருந்தத் துவங்க, "உங்க ஃப்ரெண்ட் எத்தனை மணிக்கு வருவாங்க சிஸ்டர்?" எனக் கேட்டவாறு மற்றொரு இருக்கையில் அமர்ந்தான் அவன்.
"ஹஸ்பெண்ட் நீங்க! உங்களுக்குத் தெரியாதா?"
"ரெண்டு பக்க பேரண்ட்ஸும் திடீர்னு பேசி மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. எங்களுக்கு ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுக்கான சான்ஸோ டைமோ கிடைக்கல. சோ.." என்று தோளைக் குலுக்கினான்.
"ஓ... ஆனா க்ளௌட் ஏன் மேரேஜைப் பத்தி எதுவுமே சொல்லல என்கிட்ட?"
"இஷ்டம் இல்லாத கல்யாணம். ஏன் சொல்லணும்னு நினைச்சிருப்பா!"
"ம்ம்.. உங்களுக்கு எப்படி?"
"எனக்கு ஓகே தான். அழகா இருக்கா! நல்ல குடும்பம். கைநிறைய சம்பாதிக்கிறா. இப்படி ஒரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க கசக்குமா என்ன..?"
"அதுசரி!" எனச் சிரித்தவள், "நல்லவேளை, உங்க மேரேஜ் ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுனீங்க நீங்க. இல்லேனா, என் ஃப்ரெண்டோட வீட்டுக் கதவை உடைச்சிட்டீங்கனு போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்திருப்பேன்!"
மெலிதாய்ச் சிரித்த சத்தி, எதையோ உணர்ந்தது போல் வாயிலின் பக்கம் எட்டிப் பார்த்தான்.
அவனைக் கவனித்தவள், "என்ன ப்ரோ.?"
"யாரோ வந்திருக்காங்கனு நினைக்கிறேன்."
"இல்லயே? ஹால்ல தான இருக்கோம்? வந்தா, எப்படி தெரியாம போகும்..?"
சின்னதாய்ச் சிரித்தவன், "நம்ம கண்ணுல படாம, தள்ளியே இருந்தா?"
"என்ன சொல்லுறீங்க?" என அவள் புரியாமல் வினவ, இருக்கையில் இருந்து எழுந்து வந்தான் சத்தி.
வாயிலில் இருந்து நான்கடி தூரத்திற்கு நடைபாதை போல் நீண்டு பின்னர் கூடத்தின் பகுதி விரிவடையும் படியான அமைப்பைக் கொண்டது, மேகவி குடியிருக்கும் வீடு.
இருவரது பேச்சைக் கேட்டதும், உள்ளே செல்லாமல் அவ்விடத்திலேயே நின்று கொண்டாள் அவள்.
'தோழியை எப்படி எதிர்கொள்வது?' என்ற தயக்கமும், 'தன் அனுமதி இல்லாமல் தனது இல்லத்திற்குள் சத்தி எப்படி நுழையலாம்?' என உண்டான சினமும் பாவையை அங்கேயே நிற்க வைத்திருந்தது.
சுவரின் ஓரமாய் உடை அசைவைக் கண்ட ஆடவன் பின்னிருந்து எட்டிப் பார்த்து, சட்டென்று எதிரே வந்து நின்றான்.
இதை எதிர்பார்த்திடாத மேகவி திகைப்புடன் நோக்க, "ஹாய் பொண்டாட்டி! வெல்கம் ஹோம்!" என்று இடக்கரத்தை பின்பக்கம் வைத்து சற்றே குனிந்து வலது கரத்தால் உள்ளே வரும்படியாய் சைகை செய்து, வரவேற்றான்.
அவனைப் பார்வையால் எரித்தவள், "இங்க எப்படி வந்த நீ?"
"ஆட்டோல!"
"நான் உன்னை வரச் சொன்னேனா?"
"இல்ல."
"அப்புறம் ஏன் வந்த.?"
"இதென்ன கேள்வி? கல்யாணம் ஆனப் பின்னாடி புருஷனும் பொண்டாட்டியும் தனித்தனியாவா இருப்பாங்க? என்ன சிஸ்டர்?" எனத் தாரிகாவிடம் வினவ, "அதான? சேர்ந்து தான் இருக்கணும்!" என தோழியின் கணவனிற்கு ஒத்து ஊதினாள் அவளும்.
"ம்ம்.. உன்னோட ஃப்ரெண்ட் ஸ்டார் கூட சொல்லுறாங்க. கேட்டுக்கோ பொண்டாட்டி!"
அவனை முறைத்தவள் நண்பியின் புறம் திரும்ப, "எப்படி ப்ரோ, ஆள் யாரோ வந்திருக்காங்கனு கரெக்டா சொன்னீங்க?" என்று சற்றே வியப்புடன் வினவினாள் தாரிகா.
"ஐ ஸ்மெல்டு ஹெர்.." என உரைத்தவன் மெலிதாய்ச் சிரித்திட, "ப்ச்ச்ப் ப்ச்ச்ப், பார்றா? புதுசா கல்யாணம் ஆகி இருக்கு இல்ல? சோ, இந்த ஸ்மெல் எல்லாம் கொஞ்சம் தூக்கலா தான் இருக்கும்!"
சத்தி சிரித்து சமாளிக்க, 'என்னடா நடக்குது இங்க?' என்ற ரீதியில் இருவரையும் பார்த்து வைத்தாள் மேகவி. கண்கள் ஏனோ காரணம் இன்றி கணவனின் மீது சில நொடிகள் அதிகமாய் படிந்தது.
தோழியின் அசைவுகளைக் கவனித்து இருந்த மற்றவள், "ஓகே ப்ரோ.. நியூ கப்புள்ஸுக்கு நடுவுல நான் இருந்து டிஸ்டப் பண்ண விரும்பல. கிளம்புறேன்."
"இவ்வளவு நேரம் எனக்குக் கம்பெனி கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சிஸ்டர்."
"தேங்க்ஸுனு வார்த்தையால சொன்னா எல்லாம் ஏத்துக்க முடியாது!"
"அப்ப, இந்த வீக் எண்ட் டிரீட் வச்சிடுவோம்."
"ஐம் வெயிட்டிங் ப்ரோ!" என்றவள் தோழிக்கு இதழ்களைச் சுழித்து அழகு காட்டி விட்டு, கழுத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள்.
"ஏய்.. ஸ்டார்.." என அழைத்த மேகவியின் குரல் எந்த பலனையும் தராது காற்றில் கலந்து கரைந்தது.
அதன் விளைவால் சினம் துளிர்விட, அதனைக் கண்களிற்கு மாற்றி கணவனை நோக்கினாள்.
நடந்த நிகழ்வினால் மெலிதாய் புன்னகைத்த சத்தி, "என்ன பொண்டாட்டி?"
"உனக்கு இங்க என்ன வேலைனு நான் கேட்டேன்?"
"அதான் ஏற்கனவே ஹஸ்பெண்ட் வேலைக்காக வந்திருக்கேன்னு சொல்லிட்டேனே?"
அந்த பதிலில் எரிச்சல் அதிகரிக்க, "எப்படிக் கதவை ஓபன் பண்ண.?"
"கீயை வச்சுதான்!" என்றபடி திறவுகோலை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
"செக்யூரிட்டிக்கிட்ட இருந்தா வாங்கின?"
"எஸ்.."
"என்கிட்ட கேட்காம எப்படி உனக்குக் கீ கொடுத்தாரு அவரு?" எனச் சினத்துடன் கைப்பேசியில் இருந்து காவலாளிக்கு அழைப்பு விடுக்க, அவளின் கரம் பற்றித் தடுத்தான் சத்தி.
"கையை விடு முதல்ல!"
"நமக்கு இடையில இருக்க மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்கு அவர் தலையை உருட்டுறது நியாயம் இல்ல."
"அதெப்படி நியாயம் இல்லாம போகும்? இது என்னோட வீடு. என் பர்மிஷன் இல்லாம உனக்கு எப்படிக் கீயைக் கொடுக்கலாம் அவரு?"
"நீதான ஃபேமிலி மெம்பர்ஸ் வந்து கேட்டா, கொடுங்கனு சொல்லி இருந்த?"
"ஆமா. அண்ணா என்னை அப்பப்ப பார்க்க வருவான். அவனுக்காக சொல்லி வச்சிருந்தேன். ஆனா நீ.?"
"இப்ப, நானும் உன்னோட ஃபேமிலி மெம்பர் தான். அதுவும் இல்லாம, அவங்களைக் காட்டிலும் ஃபர்ஸ்ட் ரைட்ஸ் இருக்கிறது எனக்குத்தான்."
"இப்ப என்ன சொல்ல வர்ற நீ?"
"கல்யாணம் ஆகிட்டா, பொண்ணு புகுந்த வீட்டுக்கும், அவ புருஷனுக்கும் தான் சொந்தம்!"
"நான் என்ன பொருளா, சொந்தமா வாங்கிக்கிறதுக்கு!"
"இல்ல! கன்னிகாதானம் செஞ்சு, தானமா உன்னோட குடும்பம் எங்கக்கிட்ட கொடுத்துட்டாங்க. சோ, உன்னை வாங்கல. தந்திருக்காங்க!"
"நல்லா பேசுற! இப்படிப் பேசிப் பேசித்தான் என்னோட அம்மா, அப்பத்தா, அண்ணானு எல்லாரையும் உனக்கு என்னைக் கட்டிக் கொடுக்கிற மனநிலைக்குக் கொண்டு வந்தியா.?"
மெலிதாய்ச் சிரித்த சத்தி, "சில் பொண்டாட்டி. ஓவர் டென்ஷன் உடம்புக்கு நல்லது இல்ல!"
அவனைக் கனல் பார்வைப் பார்த்தவள் உள்ளே சென்று இருக்கையில் அமர, "செக்யூரிட்டிக்கிட்ட இதைப் பத்திக் கேட்டு, பாவம் அவரை சங்கடப்படுத்தாத!" என்றபடி பின்னோடு வந்தான்.
"ஏன்? உன்னோட திருட்டுத்தனம் வெளிய தெரிஞ்சிடும்னு பயமா?"
மறுத்துத் தலை அசைத்து, "இதுல நான் எந்த தப்பும் செஞ்சதா நினைக்கல. அப்புறம் இந்த வீட்டுல திருடுறதுக்கு என்ன இருக்கு? வேணும்னா உன்னைத் திருடலாம்!" எனக் கேலியாய் உரைத்தவன்,
அடுத்த நொடியே தீவிர மனோபாவத்திற்கு மாறி, "பொண்டாட்டி! அவரு கீ தர முடியாதுனு தான் சொன்னாரு. நான்தான் கம்பல் பண்ணி வாங்கினேன். குடும்பம் குழந்தைகனு வாழுற மனுஷன். நீ ஏதாவது செய்யப் போயி, அது அவங்க லைஃபை அஃபெக்ட் பண்ணிடக் கூடாது இல்ல. அதான் சொல்லுறேன்!" என்றான்.
தவறு இழைக்காத ஒரு நபரின் மீது பழி போடுவதில் அவளிற்குமே விருப்பம் இல்லை. எய்தவன் எதிரே நின்றிருக்க அம்பாய் செயல்பட்ட நபரைக் குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அதனால் இந்த நிகழ்வினை வேறுவழி இல்லாது அப்படியே விட்டுவிட முடிவெடுத்தாள்.
"அப்படி என்ன சொன்ன அவர்கிட்ட? உடனே சாவியைக் கொடுத்திருக்காரு.?" எனச் சத்தியிடம் வினவ,
"உண்மையைச் சொன்னேன், அப்புறம் மொபைல்ல இருந்த நம்ம மேரேஜ் ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுனேன். அப்பக்கூட மனுஷன் நம்பலயே.? அந்தப் பொண்ணு எப்பவும் போல தான் இருக்கு. கழுத்துல தாலி எதுவும் நான் பார்க்கலயே? பொய்யான ஃபோட்டோவைக் காட்டி ஏமாத்தவா பார்க்கிறனு சண்டைக்கு வந்துட்டாரு பொண்டாட்டி!"
அதைக்கேட்டு அவள் சிரித்திட, "கடைசியில.." என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தினான்.
நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், "கடைசியில.." எனக் கேட்க, "மாம்ஸுக்கு வீடியோ கால் போட்டுப் பேச வச்சேன். அவரு, நான் வீட்டு மருமகன்னு சர்டிபிகேட் கொடுத்தப் பின்னாடிதான் நம்புனாரு!"
"ஓ.. அப்ப கீ விஷயத்தை உன்கிட்ட சொன்னதே, என்னோட அண்ணன் தான்!"
"யா யா.."
"அவனுக்கு இருக்கு, அப்புறம் பேசிக்கிறேன் எனக்கு முன்னாடி பிறந்தவனை!"
"அவசரம் இல்ல. மெதுவா ஒரு ரெண்டு மூனு மாசம் கழிச்சுப் பேசிக்கலாம். மாம்ஸும் தனாவும் ஹனிமூன் போக பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போதைக்கு இதைப் பத்திப் பேசி அவங்க மூடை ஸ்பாயில் பண்ண வேணாம். என் தங்கச்சியோட சந்தோஷத்தைப் பறிக்க நான் விரும்பல, ப்ளீஸ்.."
"ஓகே, தனாக்காக நான் இதை விடுறேன். ஆனா, நீ இங்க இருக்க பர்மிஷன் கிடையாது. கிளம்பு!" என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பட்டென்று உரைத்தாள்.
இருக்கையில் அமர்ந்திருந்த பாவையின் முன்பு நின்றிருந்த சத்தி சட்டென்று உடலை வளைத்து, அவளின் இருபக்கமும் இரண்டு கரங்களைப் பதித்து முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் படியாய் நிலத்தில் மண்டியிட்டான்.
ஆடவனது இந்த செய்கையை எதிர்பார்த்திடாத மேகவி, திடுக்கிடலுடன் நோக்கினாள்.
Author: Vishakini
Article Title: மையல் மீளுதே மேகவியே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மையல் மீளுதே மேகவியே - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.