மையல் 13
மூச்சுக் காற்று முகத்தில் உரசும் படியான நெருக்கத்தில் எதிரே இருந்த கணவனைப் பார்த்த மேகவி, "என்ன செய்யிற? தள்ளிப் போ!"
"ஏன்? நான் இப்படி இருக்கிறது உனக்கு எதுவும் டிஸ்டர்பா இருக்கா?"
"நீ பேசும்போது வாய்ல இருந்து எச்சித் தெறிக்கிது, போதுமா?"
மறுத்துத் தலையசைத்து புன்னகைத்தவன், "வாய்ப்பில்ல! பேசுற எனக்கு தெரியாதா, என்னோட வாயசைவு எப்படி இருக்கும்னு. மூச்சுக்காத்து வேணும்னா உன்மேல படுதுனு சொல்லு, ஒத்துக்கிறேன்!"
அவனை முறைத்தவள் கழுத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள, "இந்த மேரேஜையும் என்னையும் அக்செப்ட் பண்ணிக்க டிரைப் பண்ணுனு நான் ஊர்லயே சொன்னேன்? மறந்துட்டியா பொண்டாட்டி.?"
"ஏண்டா இப்படி படுத்துற? கொஞ்சம் என்னை நிம்மதியா தான் இருக்க விடேன்?"
"நான், உன்னோட நிம்மதியைக் கெடுக்கிறேன்னு சொல்லுறியா.?"
"ஆமா! முதல்ல நீ எழுந்திரி. தள்ளி நில்லு! எப்பப்பாரு நசநசனுட்டு!"
"எனக்கு ஒரு கொஸ்டின் இருக்கு, அதுக்கு மட்டும் பதில் சொல்லுறியா?"
"என்ன?"
"நம்ம மேரேஜுக்கு முன்னாடி, நீ நிம்மதியா இருந்தியா என்ன?"
"இப்ப, இது ரொம்ப அவசியமா?"
"டெஃபனெட்லி! முன்னாடி நிம்மதியா இருந்து அது என்னால இப்ப கெட்டுப் போயிருந்தா, நீ சொல்லுறதை ஏத்துக்கலாம். அப்படி இல்லங்கிறப்ப, அந்தப் பழியை இப்படி கட்டுன புருஷன் மேல போடுறது தப்பு இல்லயா? என்னோட பொண்டாட்டி, நியாயமா நடந்துக்குற பொண்ணுனு நினைச்சிருந்தேன். ஆனா, இல்ல போலயே?" என அவன் குரலில் ஏற்ற இறக்கத்தோடு வருத்தத்துடன் உரைக்க, பாவையானவள் இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.
'அப்பாடி! சரியான டிராமா கிங்கா இருப்பான் போல? என்னமா பர்ஃபாமென்ஸ் பண்ணுறான்?' என்று மனதோடு நினைக்க, மெல்ல எழுந்து நின்று அவளை நோக்கி கரத்தை நீட்டினான் கீர்த்தி.
மேகவி என்ன என்பது போல் பார்க்க, "டயர்டா இருப்ப. போ, ஃப்ரஷ் ஆகிட்டு வா. டைம் ஆச்சு டின்னர் சாப்பிடலாம்!"
தனக்கு முன் இருந்த கணவனின் கையைத் தட்டி விட்டவள், "நீ இங்க இருக்கிறதுக்கு நான் இன்னும் ஓகே சொல்லவே இல்ல!"
"நாம இங்க வந்துட்டா, எல்லாம் சரியாகிடுச்சா? ரெண்டு பேரோட பேரண்ட்ஸும் எதையும் பேசாம, விசாரிக்காம அப்படியே விட்டுடுவாங்களா? ஆல்ரெடி எனக்குக் கால் பண்ணிட்டாங்க! நம்ம இஷ்டத்துக்குக் கற்பனை செஞ்சு, பொய் சொன்னா நம்புவாங்க? உன்னோட குடும்பத்தையும், என்னோட அம்மா அப்பாவையும் அந்த அளவுக்கா முட்டாளுனு நினைச்சிருக்க? முதல்ல, அம்மாச்சி கேட்கிற ஒரு கேள்விக்கு, அவங்களை சேட்டிஸ்ஃபை பண்ணுற மாதிரி, திணறாம யோசிக்காம உடனே உன்னால பதில் சொல்ல முடியுமா?"
அவள் அமைதியாய் நோக்க, "லைஃபை, நாம நீ சொல்ற மாதிரி லீட் பண்ண முடியாது பொண்டாட்டி! மாம்ஸ் வந்து போவாருனு, நீதான் செக்யூரிட்டிக்கிட்ட கீயைக் கொடுத்து வச்சிருக்க! அப்படி அவர் வரும்போது, நாம தனித்தனியா இருந்தா தெரிஞ்சிடாதா?
அது அவரை அஃபெக்ட் பண்ணும். அந்த விஷயம் அப்படியே ஒன்னும் முடிஞ்சு போயிடாது. டே அண்ட் நைட் செய்யிற யோசிக்கிற ஒவ்வொரு விஷயத்துலயும் ரெஃப்லெட் ஆகும். அதுனால பாதிக்கப்படப் போறது என்னோட தங்கச்சி தான்! தனா லைஃப்ல நடக்குற மாற்றம் என்னோட பேரன்ஸ்க்கு தெரியாம போயிடுமா? உனக்கு, நான் சொல்றது புரியுதா?
நமக்கு இடையில் இருக்கும் உறவு சரியாகிற வரை.. இந்த ஒரு விஷயம், பட்டர்ஃபிளை எஃபெக்ட் மாதிரி சுத்தி இருக்கிற எல்லாரோட லைஃப்லையும் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக்கிட்டே இருக்கும். அண்ட் ஐம் ஸுயர், அதோட ரிசல்ட் அப்படி ஒன்னும் நல்லவிதமா இருக்காது!"
'ஸுயரா! இவன் டிராமா கிங்தான். ஒரே ஒரு சின்ன விஷயம், அதை வச்சு எவ்வளவு பெரிய ஸீனைக் கிரியேட் பண்ணுறான்? நான்தான்.. பிடிவாதம் பிடிச்சு நினைக்கிறதைச் சாதிப்பேன்னா, இவன் எனக்கு மேல இருக்கான். அப்பாவி மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு, அடப்பாவி ரேஞ்சுக்கு வேலை பார்க்கிறான்! மேகா, செம்மையா சிக்கி இருக்கடி! இவன்கிட்ட இருந்து தப்பிக்கிறது, கஷ்டம் தான் போலயே? ஐயோ! எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலயே?' என மனதிற்குள் புலம்பியவள் எதையும் வெளிக்காட்டாது அங்கிருந்து நகர்ந்தாள்.
"பொண்டாட்டி, என்ன எதுவும் சொல்லாம போற?"
"என்ன சொல்லணும்?"
"நம்ம ரெண்டு ஃபேமிலியைப் பத்தி எவ்வளவு தூரம் பேசி இருக்கேன்? அவ்வளவு தானா உன்னோட ரியாக்ஷன்?"
"ம்ம்.." என்று தலை அசைத்தவள், "டயர்டா இருக்கு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கவா நான்.? ஆனா, நீ அதுக்கு கூட விட மாட்டிற!"
"ஹோ.. ஸாரி ஸாரி, நீ போ! ஹான், அப்புறம் பொண்டாட்டி. டின்னரை சாப்ட்டு ரெஸ்ட் எடு! நான் டைனிங் டேபிள்ல எடுத்து வைக்கிறேன். என்ன, வருவ தான?"
"முடியாதுனு சொன்னா விட்டுடுவியா நீ?"
"அதெப்படி? பொண்டாட்டியோட ஹெல்த்தை கவனிக்காம இருக்கிறது, நல்ல புருஷனுக்கு அழகு இல்ல. நான், நல்ல புரு..." என உரைத்தவனின் பேச்சை, "ம்ம்.. புரியிது புரியிது!" என்று பதில் தந்து பாதியிலேயே நிறுத்தினாள்.
"யூ ஆர் ஸுவீட் கேர்ள் பொண்டாட்டி! எப்படி என்னோட மனசைக் கரெக்டா கேட்ச் பண்ணிட்ட?"
'இவன்கூட இந்த ஒரு மணி நேரத்துக்கே நாக்கு தள்ளுதே? இனி எப்படி ஒவ்வொரு நாளையும் தள்ளப் போறேனோ தெரியல!' என எண்ணியவாறு அறைக்குள் சென்றாள்.
'இரவு முழுவதும் பயணம். காலையில் இருந்து அலுவலகப் பணி. இல்லத்திற்கு வந்தப் பின்னரும் கூட சத்தியுடன் வார்த்தைப் போராட்டம்!' என்று மனமும் உடலும் வெகுவாய் சோர்ந்து போய் இருந்தாள் மேகவி.
நீராடி உடைமாற்றி படுக்கையில் விழுந்து கண்களை மூடியவளை, "பொண்டாட்டி ரெடியா? சாப்பிடுவோமா?" எனக் கேட்டு மூடி இருந்த கதவிற்கு பின்னால் இருந்து, விழிக்க வைத்தான் ஆடவன்.
மெலிதான பெருமூச்சை விட்டவள் எழுந்து வர, உணவு மேஜையில் சாப்பாடைப் பரிமாறினான்.
சப்பாத்தியும் காய்கறிகள் நிறைந்த வெள்ளை நிற குருமாவும், கண்முன்னே தட்டில் இருந்தது.
அருகே மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த சத்தியைப் பார்த்தவள், "எந்த கடையில வாங்கின?"
"வாங்கினதா? நான் செஞ்சது பொண்டாட்டி!"
சற்றே வியப்பு மேலிட, "நீயா? சமைக்க தெரியுமா உனக்கு..?"
"ம்ம்.. ஓரளவுக்கு! உனக்குத்தான் தெரியுமே, அம்மா உடம்புக்கு முடியாதவங்க. ஸ்கூல்ல காலேஜ் டேஸ்ல எல்லாம், அவங்களுக்குக் கிச்சன்ல ஹெல்ப் பண்ணுவேன். பெரும்பாலும் அந்த வேலையை தனா தான் செய்யிவா. அவ டென்த் டுவல்த் படிக்கிற டைம்ல, நான் செஞ்சேன். அப்படியே பழகினது தான். நம்ம வீட்டுல அப்பா, நான்னு எல்லாருக்குமே சமைக்க தெரியும். அப்புறம், நீ நம்பி சாப்பிடலாம். ஏற்கனவே பல தடவை நான் செஞ்சு கொடுத்து வீட்டுல சாப்பிட்டு இருக்காங்க. சோ, டோண்ட் வொர்ரி!"
அருந்திய தண்ணீர் டம்ளரைக் கூட நகர்த்தி வைக்காத தன்னை நினைத்து, வார்த்தைகளால் வடிக்க இயலாத ஒருவித அழுத்தத்தை உணர்ந்தாள் பாவை.
அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாது உணவில் கவனமானாள்.
மெச்சும் அளவிற்கு இல்லை எனினும் உண்ணும் படியான ருசியிலேயே இருந்தது, கீர்த்தியின் தயாரிப்பு. உள்ளுக்குள் பாராட்டு வழங்கிக் கொண்டாள் பாவை. அதனை வெளிப்படையாய் உரைப்பதற்குத்தான் மனம் வரவில்லை.
அதேநேரம் மூளையானது, 'மேகா, இதுக்காக எல்லாம் நீ இறங்கிப் போகாத. ஆம்பளைங்க என்னைக்குமே நம்பிக்கையானவங்க கிடையாது. இது மாதிரி சின்ன சின்ன விஷயத்தைப் பார்த்து மனசை மாத்திக்க ஆரம்பிச்சா, பின்னாடி ஏதாவது நடக்கும் போது அதோட வலியை அனுபவிக்கப் போறதும் நீதான். ஒருதடவை ஏமாந்தது பத்தாதா? பீ ஸ்ட்ராங்க் அண்ட் டெட்டர்மையிண்.' என்று எச்சரித்தது.
எதுவும் பேசாமல் அவள் உண்டு முடித்திட.. ஒரு வாரம் ஊரில் நடந்த நிகழ்வைப் போலவே, இன்றும் சத்தியே அனைத்தையும் சுத்தம் செய்ய துவங்கினான்.
உண்பதற்காக அமர்ந்த இருக்கையை விட்டு இன்னும் நகராது இருந்த மேகவி, "இங்கேயே இருக்கிற பிளானோட தான் வந்திருக்கியா.?"
அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன் 'ஆம்' என்பதாய் தலையசைத்தான்.
"என் வீட்டுக்கு வந்து, சும்மா எல்லாம் தங்க முடியாது!"
"ஓகே! என்ன செய்யணும்?"
"இது, நான் வாங்கின வீடு. இன்னும் இதுக்கான ஈஎம்ஐ முடியல."
"ம்ம்.. சரி, ஈஎம்ஐய ஷேர் பண்ணிக்கலாம். எவ்வளவுனு சொல்லு, நான் மாச மாசம் உன்னோட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணி விட்டுடுறேன். கூகுள்பே ஃபோன்பே, உனக்கு எது கன்வினியண்ட்?"
"ஊர்ல இருக்க உங்க வீட்டுக்கு, நீ தான லோன் கட்டுற?" என வினவிய மேகவி.. கைப்பேசியில் இருந்து, தமையனின் மனைவிக்கு வீட்டுக் கடனை பற்றிய விபரத்தைக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
சென்னைக்கு வருவதற்கு முன்பான தருணங்களில் அண்ணி நாத்தனார் என்ற பிணைப்பிற்காக ஒருவரிடம் மற்றவர் இயல்பாய் பேச முயன்று, இருவருக்கும் இடையே நல்உறவு உருவாகி இருந்தது.
'தமையனிற்கும் அவனது மனைவிக்குமான புரிதல் வீட்டுப் பொறுப்பில் இருந்து துவங்கட்டுமே?' என, இவள் கேட்டதை பிரார்த்தனா எவ்வித வினாவும் எழுப்பாமல் அனுப்ப துவங்கினாள்.
சத்தி மனைவியின் வினாவிற்கு பதிலளிக்காமல் சின்னதாய்ச் சிரித்திட, "இங்கேயும் தர்றேன்ற? அப்படி எவ்வளவு சேலரி வாங்குற?"
"ரொம்ப எல்லாம் இல்ல பொண்டாட்டி. உன்னை விட கம்மிதான். ஆனா அப்பாக்கிட்ட சொல்லிட்டேன். வீட்டு லோனுக்கு, பாதி அமௌண்ட் தான் கட்ட முடியும்னு. கல்யாணம் ஆகிடுச்சு இல்ல? இனி, ஃபேமிலி மேனா இங்க நம்ம தேவையையும் பார்க்கணும்ல.?"
மேகவியின் விழிகளில் மெலிதான அதிர்ச்சி பரவ, "அங்கிள் என்ன சொன்னாரு?"
"இதுல, அவரு சொல்ல என்ன இருக்கு.? முதல்ல உன்னையும் மருமகளையும் பாரு. முடிஞ்சதைக் கொடு, போதும்னு சொல்லிட்டாரு!"
"ஹேய்.. எப்படி இப்படி சட்டுனு முடிவு எடுக்குறீங்க ரெண்டு பேரும்? ஆன்ட்டியோட ஹாஸ்பிடல் செலவுக்கு வேற பணம் தேவைப்படும் இல்ல? இப்படியே போச்சுனா, நீ லோனை முடிக்கவே பதினஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுமே?"
அவன் வியப்புடன், "பார்றா? இந்த அளவுக்கு நம்ம வீட்டு ஃபினான்சியல் ஸ்டேட்டஸைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்க..?"
"ப்ச்ச்.. பேச்சை மாத்த டிரை பண்ணாத. நீ முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!"
"மேரேஜ் பண்ணிக்கணும்னு முடிவெடுத்த பின்னாடி, இதைப் பத்தி எல்லாம் யோசிக்கத்தான வேணும்? இனி ஒரு ஆறு மாசம் இல்ல ஒரு வருஷத்துல எனக்குப் பிரமோஷன் கிடைச்சிடும். சேலரியும் இன்கிரிஸ் ஆகும். அதுவரை கொஞ்சம் கஷ்டம் தான். மேனேஜ் பண்ணிக்கலாம். நாட் ஆன் இஸ்யூ!"
"என்னோட ஈஎம்ஐய நானே பார்த்துக்கிறேன். நீ, உன்னோட ஃபேமிலியைப் பாரு!"
"ஜஸ்ட் எ கைண்ட் இன்ஃபர்மேஷன்.. அது என்னோட ஃபேமிலி மட்டும் இல்ல, உன்னோட குடும்பமும் தான்.. உனக்கு அவங்க மாமனார் மாமியார்!"
"ம்ம்.. ம்ம்.." என்றவள் எழுந்து செல்ல, "பொண்டாட்டி நாளைக்கு லஞ்சுக்கு என்ன வேணும்.?"
சற்றே நிதானித்தவள், "என்ன கேட்ட?"
"மதியத்துக்கு என்ன சமைக்கனு கேட்டேன்? அப்புறம் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு டிஃபன் எதுவும் செய்ய முடியாது. டைம் இருக்காது. லஞ்சுக்குச் சமைக்கிறதையே தான் காலையிலயும் சாப்பிடணும். ஓகே தான உனக்கு.?"
"இதுக்கு எல்லாம் எந்த அவசியமும் இல்ல. நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன்."
"எத்தனை நாளைக்கு.?"
"இது என்ன கேள்வி?"
"லைஃப் லாங்காவா? குடும்பம் நடத்துற முறை, இது இல்ல பொண்டாட்டி. உனக்குச் சமைக்கத் தெரியாதுனு மாம்ஸ் சொன்னாரு. அதுனால தான், அந்தப் பொறுப்பை நானே எடுத்துக்கிட்டேன். ஒரே வீட்டுல இருக்கிறதுனு முடிவு பண்ணியாச்சு. அப்ப, அதுக்கு ஏத்த மாதிரி நம்ம லைஃப் ஸ்டைலையும் கொஞ்சம் மாத்திக்கிறதுல தப்பு இல்லையே?
கோவில் இல்லாத ஊர்லயும், அடுப்படி இல்லாத வீட்டுலயும் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க. கிச்சன் எதுக்கு, பூஜை பண்ணவா.? அங்க சரியா வேலை நடக்கும் போது, உடம்புல பெரிய பிரச்சனை வர விடாம நம்ம கட்டுப்பாட்டுல வச்சுக்கலாம். என்ன புரிஞ்சிதா.?"
அவனது பேச்சைக் கேட்ட பின்னர் தான், வீட்டிலும் சமையல் அறையிலும் நடந்திருக்கும் மாற்றங்களைப் பார்வையிட்டாள் மேகவி.
சத்தி தான் தூய்மை செய்தான், முன்னரே அறிந்து கொண்டாள். ஆனால் அதை கருத்தூன்றி கவனிக்கத்தான் இல்லை.
என்றும் வாடாத காகித பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் இருந்து, இன்று ஊதுபத்தியின் மெலிதான வாசத்தோடு மலரின் மணமும் நாசியைத் தீண்டியது. அவளின் கணினி மேஜை முதல் காலணி அலமாரி வரை அனைத்தும் நேர்த்தியாய் அடுக்கப்பட்டு இருந்தன.
சமையல் அறையில் ஒரே மாதிரியான டப்பாவிற்குள் மளிகைப் பொருட்கள் அடங்கி இருக்க, புதியதாய் அரைப்பானும் கிரே வண்ணத்தில் தென்பட்டது.
ஏதோ தோன்றிட சட்டென்று அறைக்குள் சென்றாள். நீராடுவதற்காக முன்பு வந்த பொழுது சோர்வினால் எதையும் கவனிக்காது விட்டு விட்டாள். தற்போது அலமாரிகளைத் திறந்து பார்க்க, அவளின் உடைகள் மட்டுமே இருந்தன.
'அப்பாடா! ரூம் இன்னும் அப்படியே தான் இருக்கு. அந்தப்பக்கம் இருக்கிற ரூம்ல அவனைத் தங்கிக்க சொல்லலாம்!' என எண்ணியபடி திரும்பிட, அறை வாயிலின் நிலையில் சாய்ந்து நின்றபடி மனைவியை பார்த்திருந்தான் சத்தியகீர்த்தி.
Author: Vishakini
Article Title: மையல் மீளுதே மேகவியே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மையல் மீளுதே மேகவியே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.