செம்புலம் 15:
தேனூர்:
"ஏய், எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடி! ஸ்கூல் மாதிரி இல்லாம இது ரொம்ப பெருசா இருக்கே," என்று கயல்விழி மெதுவாகச் சொன்னாள்.
"பயப்படாத கயல்! நாம நாலு பேரும் ஒண்ணா தானே இருக்கோம். எதுனாலும் ஒண்ணா பாத்துக்கலாம்," என்று கவிதா அவளது கையைப் பிடித்து தைரியம் கொடுத்தாள்.
"எனக்கு பயத்தை விட சாப்பாட்டு மேலதான் குறி! இந்த காலேஜ் கேண்டீன்ல சமோசா நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்," என நிலா சொல்ல, அதைக் கேட்ட மூவரும் கலகலவென சிரித்துவிட்டார்கள்.
பின்னர் நால்வரும் அவர்களுக்கான வகுப்பறைக்குள் நுழைந்தனர். அங்கே ஏற்கனவே பல புதிய முகங்கள் அமர்ந்திருந்தன. பேராசிரியர் உள்ளே நுழைந்ததும் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. அவர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார்.
தங்கள் பெயரையும் ஊரையும் சொல்லும்போது கயல்விழிக்குக் குரல் கொஞ்சம் நடுங்கியது. ஆனால், அருகில் அமர்ந்திருந்த மீனாட்சியின் புன்னகை அவளுக்குத் தன்னம்பிக்கை தந்தது. மதிய இடைவேளையில், மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு நால்வரும் அவர்கள் வீட்டுச் சாப்பாட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
நேரமும் கடந்து சென்றது. மாலை கல்லூரி முடிந்து வெளியே வரும்போது, காலையில் இருந்த அந்தப் பயம் மறைந்து, ஒரு புதிய உற்சாகம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. பின்னர் பேசிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தவர்கள், ரயிலுக்காகக் காத்திருந்தபோது, "நாளைக்கு என்ன டிரஸ் போடலாம்?" என கவிதா ஆரம்பிக்க, பேச்சு இன்னும் சுவாரஸ்யமானது. மீண்டும் ஒரு புதிய நாளை எதிர்பார்த்துத் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடின. செமஸ்டர் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, மூவருக்கும் ஒருவித நடுக்கம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக 'பொருட்களின் பண்புகள்' மற்றும் 'இயந்திரவியல்' ஆகிய பாடங்கள் நால்வருக்கும் சவாலாக இருந்தன. கயல்விழியோ இரவு பகலாகப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பாடங்கள் புரிந்தாலும், அந்தப் பெரிய சமன்பாடுகளை மறக்காமல் எழுதுவோமா என்ற பயம்தான் அதிகமாக இருந்தது.
ஆனால், மீனாட்சி மிகத் தெளிவாகத் திட்டமிட்டாள். முக்கியமான சூத்திரங்களை எல்லாம் ஒரு சார்ட்டில் எழுதித் தன் அறையில் ஒட்டி வைத்தாள். இதைப் பார்த்த மாறன், "என் தங்கச்சி நூற்றுக்கு நூறு வாங்காமல் விடாது போலவே!" என்று கிண்டல் பண்ண, அதைக் கேட்ட மீனாட்சிக்கு ரோஷம் வந்தது. "அண்ணா, இந்த பரீட்சையில் நான் ஃபுல் மார்க் வாங்கி காட்டுறேன். அப்படி வாங்கிட்டால் நான் எது கேட்கிறேனோ அதை வாங்கித் தரணும்," என்றாள். "அப்படியா தங்கம்? சரி, நீ வாங்கி காட்டு," என்றான் மாறன்.
தோழிகள் நால்வரும் கான்ஃபரன்ஸ் காலில் பேசிக்கொள்ளும்போது, "ஏய், இந்த பெர்னோலி தத்துவம் படிக்கும்போது எனக்கு ஏன் காத்துல பறக்குற மாதிரி இருக்கு?" என்று நிலா சொல்ல, மற்ற மூவரும் சிரித்தனர். ஆனாலும், அவளும் ரகசியமாக நள்ளிரவு வரை படித்துக் கொண்டிருந்தாள்.
தேர்வு நாளும் வந்தது. காலையிலேயே குளித்துத் தயாரான கயல்விழி, தனது இஷ்ட தெய்வமான பேச்சியம்மனைப் பார்க்க வந்தாள். "எல்லாரும் நல்லா இருக்கணும், நன்கு பரீட்சை எழுதணும்," என்று வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், மீண்டும் புக்கை எடுத்துப் படிக்க, வள்ளி தன் மகளை முறைத்தார்.
அன்று காலை கல்லூரி வளாகமே அமைதியாக இருந்தது. கயல்விழியின் கையில் இருந்த பேனா நடுங்க, "அடியேய், எனக்கு எல்லாம் மறந்த மாதிரி இருக்குடி!" என்று பயந்து போய் சொல்ல, அவளின் கையைப் பிடித்த மீனாட்சி, "பயப்படாத கயல்! கண்ணை மூடி ஒரு நிமிஷம் யோசி. அந்த விஸ்கோசிட்டி பரிசோதனை செஞ்சதை நினைச்சுப் பாரு, எல்லாம் ஞாபகம் வரும்," என்று தேற்றினாள். நிலா தன் பையிலிருந்து நான்கு புதிய பேனாக்களை எடுத்தவள் "இது நம்ம லக்கி பேனா, சூப்பரா எழுதும் பாரு!" என்று மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தாள்.
மணி அடித்தது. நால்வரும் வெவ்வேறு வரிசைகளில் அமர்ந்தனர். கேள்வித்தாள் கைக்கு வர, "ஆத்தா பேச்சி!" என்றவாறு கேள்விகளைப் பார்த்ததும் கயல்விழிக்கு மெல்லத் தன்னம்பிக்கை வந்தது. மீனாட்சி கடகடவெனச் சமன்பாடுகளை எழுதத் தொடங்கினாள். நிலா, கேள்விகளுக்கு நடுவில் படம் வரைய வேண்டிய இடத்தில் ஸ்கேல் மற்றும் பென்சில் கொண்டு மிக நேர்த்தியாக 'முப்பட்டகம்' மற்றும் 'ஊசல்' படங்களை வரைந்தாள். கவிதா அவளுக்கு நன்கு தெரிந்த ஐந்து மார்க் கேள்விகளை எழுதத் தொடங்கினாள்.
மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வெளியே வந்தபோது, மூவர் முகத்திலும் ஒரு பெரிய நிம்மதி. நிலாவோ, "அந்த 5 மார்க் கேள்விக்கு டயக்ராம் போட மறந்துட்டேன்டி! ஆனா மத்தபடி பேப்பரை நிரப்பிட்டேன்," என்றாள் மூச்சிறைக்க. "சமன்பாடுகள் எல்லாம் கரெக்டா வந்துடுச்சு, கண்டிப்பா நல்ல மார்க் வரும்," என நம்பிக்கையுடன் மீனாட்சி சொன்னாள். "எனக்கு அந்த 'சர்பேஸ் டென்ஷன்' கேள்விதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா மேம் சொன்ன நோட்ஸ் ஞாபகம் வந்தது, எழுதிட்டேன்," என்றாள் கயல்விழி புன்னகையுடன். கவிதாவோ எப்போதும் போல அமைதியாக ஒரு சிரிப்பு சிரிக்க, அவளைப் பற்றித் தெரிந்ததால் யாரும் எதுவும் கேட்கவில்லை.
முதல் செமஸ்டரின் கடைசித் தேர்வுகளை நல்லபடியாக முடித்ததும், புத்தகங்களை எல்லாம் பையில் திணித்துவிட்டு நேராகக் கேண்டீனுக்குச் சென்றவர்களோ பிடித்ததை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தார்கள். செமஸ்டர் விடுமுறை நாளில் வெட்டியாகப் பொழுதைப் போக்காமல், தோழிகள் நால்வரும் அரசாங்கத் தேர்வுக்குப் படிக்க இப்போதே தயாரானார்கள்.
அதோ இதோ என்று நாட்கள், வாரங்கள், மாதங்களைக் கடந்து மூன்று வருடங்களும் ஓடிவிட்டன. மூன்றாம் ஆண்டின் கடைசி செமஸ்டரான 'ப்ராஜெக்ட் வைவா'வை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்த தோழிகள் நால்வரும் கட்டிக்கொண்டனர். படிப்பு முடிந்துவிட்டது என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், இதற்குப் பிறகு அடிக்கடிப் பார்த்துக்கொள்ள முடியாதே என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.
"எதுக்குடி ஃபீல் பண்ணனும்? அதான் போன் இருக்கே," என்று நிலா தேற்றினாள். மேற்கொண்டு யார் யார் என்ன படிக்கப் போகிறோம் என்று பேசிக்கொண்டனர். மீனாட்சி அவளது தாத்தாவைப் போல ஆசிரியராக ஆசைப்பட்டாள். கயல்விழி அரசாங்கத் தேர்வு எழுதப்போவதாகச் சொன்னாள். நிலாவுக்கு ஏற்கனவே திருமணம் பேசி முடித்திருந்ததால், அவள் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்குப்போவதாக இருந்தது. கவிதாவும் கயல்விழியைப் போலத் தேர்வுக்குத் தயாராவதாகச் சொன்னாள். "எத்தனை வருஷம் ஆனாலும் நம்ம நட்பு பிரியக் கூடாது," என்ற உறுதிமொழியோடு வீட்டிற்குப் போனார்கள்.
வள்ளி, " உன் மவளுக்கு படிப்பு முடிஞ்சிடுச்சில்ல? வேலையெல்லாம் கத்துக்கொடு. நாளை பின்ன போறவன் வீட்டில் தெரியலன்னு சொல்லக் கூடாது," எனச் சொல்லவும், "அப்பாயி... நான் வேலைக்குப்போகணும். கல்யாணம் கில்யாணம் எல்லாம் இப்பப் பேசாதீங்க," என்றாள் கயல்விழி.
"என்னடி புதுக்கதை கட்டுற? நீ ஆசைப்பட்டனு படிக்க வச்சாச்சு, இப்ப வேலைக்கா?" என்று மரகதம் கேட்க, மணி குறுக்கிட்டார். "அம்மா, அதெல்லாம் உங்க காலம். இப்பப் பெண்கள் எல்லாம் சுயமா சம்பாதிக்கணும், அதுதான் நல்லது," என்கவும், "என்னமோ பண்ணிட்டுப் போங்க," என்று சொல்லிவிட்டார்.
அன்று இரவு வழக்கம் போல் எல்லாரும் சாப்பிட்டுப் படுத்துவிட்டனர். மறுநாள் காலையில், எப்பொழுதும் சீக்கிரமாக எழுந்திருக்கும் கணவர் இன்னும் எழுந்திரிக்காததைப் பார்த்த மரகதம், "என்னங்க?" என்று அவரை எழுப்ப, உடல் சில்லிட்டிருந்தது. "மாமா!" என்று அவர் கத்தியதில், வீட்டினர் உள்ளே ஓடி வந்தனர். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாகத் தன் கூட நகமும் சதையுமாக இருந்த கணவர் இந்த உலகத்தில் இல்லை என்பதைப் புரிந்த பாட்டி, நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்.
பெரிய வீட்டுச் சாவு என்பதால் கூட்டமும் அதிகமாக இருந்தது. கதிர் இரண்டு வாரம் லீவு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான். பதினாறாம் நாள் காரியம் முடிந்த பிறகு, கதிர் வேலைக்குச் செல்லத் தயாரானான். எப்பொழுதுமே மங்களகரமாக இருக்கும் மரகதம் பாட்டி, இப்பொழுது பொட்டு இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் கயல்விழி அழுதாள். "எனக்கு என்னடி ராசாத்தி? இருக்கும்போது உன் தாத்தா என்னை மகாராணி போலத்தான் வச்சிருந்தாரு. இப்ப என்னை விட்டுட்டுப் போயிட்டாரு," என்று கலங்கிய பாட்டி, பேத்தியைத் தேற்றினார்.
மீனாட்சியின் அண்ணன் மாறனுக்குச் சொந்தத்தில் ஒரு பெண் அமைய, அவர்கள் திருமணம் நல்ல முறையில் முடிந்தது. மீனாட்சி தற்போது அருகிலுள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தாள்.
கயல்விழி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்க தேர்வு வரவும் கவிதாவும் அவளும் ஒரே சென்டரில் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தார்கள்.
நாட்கள் நகர, அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டும் வந்தது. கயல்விழிக்கு 'மேதினூர்' என்ற ஊரில் வி.ஏ.ஓ போஸ்டிங் கிடைத்தது. கவிதாவிற்கு அவர்கள் பக்கத்து ஊரிலேயே போஸ்டிங் கிடைத்தது. இதைத் தெரிந்து கொண்ட கயல்விழிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
அவர்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்தவர்கள்; இதுவரை யாரும் அரசாங்க உத்தியோகத்திற்குப் போனதில்லை. முதல் முறையாகத் தங்கள் தலைமுறையில் ஒரு பெண் பிள்ளை அரசாங்க உத்தியோகத்திற்குப் போவதை நினைத்து மணி சந்தோஷப்பட்டார். அந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிடாயை வாங்கி, பேச்சியம்மனுக்குப் படையல் போட்டு ஊருக்கே விருந்து வைத்தார்.
ஊர் பெயரைத் தெரிந்த உடனே கதிருக்கு நிம்மதியாக இருந்தது. ஏனென்றால், அவனின் நண்பன் முகம்மதும் அந்த ஊரைச் சேர்ந்தவன்தான். அவனிடம் தங்கைக்கு அங்கு வேலை கிடைத்திருப்பதைச் சொல்ல, "சந்தோஷம்டா! பிரச்சனையே இல்லை, அங்க என் அப்பா அம்மா இருக்கும்போது என்ன கவலை?" என்றான் முகம்மது.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.