செம்புலம் 17
லண்டன்:
பாரி மெல்ல ஒரு பட்டனை அழுத்த, கட்டிடத்தின் முகப்பில் இருந்த திரை விலகியது. அங்கே தங்க நிற எழுத்துக்களில், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஜொலித்தது:
“சேயோன் பில்டர்ஸ் - லண்டன்”
அதைப் பார்த்ததும் சேயோன் அப்படியே திகைத்து நின்றார். இந்தியாவில் மிகப்பெரிய பில்டர் ஆக இருந்தாலும், லண்டன் மாநகரில் தன் பெயர் இப்படி ஜொலிக்கும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. "அலவா, இது..." என்று அவர் தழுதழுத்த குரலில் கேட்டார்.
"அப்பா, இது உங்க 35 வருஷ உழைப்புக்கும் நேர்மைக்கும் நாங்க கொடுக்கிற பரிசு. இந்தியாவைத் தாண்டி, உங்க பேர் இங்கேயும் ஒலிக்கணும்னு நாங்க ஆசைப்பட்டோம்." என்கவும், நாங்களா? இன்னொரு கருப்பாடு யார் என்கவும், உங்களின் செல்ல மகளே தான் என்றவாறு பவதாரணி அங்கு வந்தாள்.
மகளை பார்த்து திகைத்த இருவரும் தாரணி…நீ எப்படி இங்கே?. பெங்களூரில் தானே இருக்க, "ஆமா, நீ எதுக்கு இந்த டிரஸ்ல இருக்க?" தாரணி அலுவலக உடையில், மிகவும் கம்பீரமாகக் காட்சியளித்தாள்.
சிரித்துக்கொண்டே சொன்னான், "அப்பா, இந்த கம்பெனியை நான் மட்டும் ஆரம்பிக்கல. தாரணியும் இதுல பார்ட்னர். அதுமட்டுமில்ல..." என்று கூறி ஒரு நேம் பிளேட்டை அவரிடம் காண்பித்தான்.
அதில்:
பவதாரணி சேயோன்
சீப் ஆப்ரேட்டிங் ஆபிசர் - சேயோன் பில்டர்ஸ், லண்டன்
என்று இருந்தது.
"ஆமாப்பா! நீங்கள் பிசினஸை கவனிச்சுப்பீங்க, நான் இந்த கம்பெனியோட ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கவனிச்சுப்பேன். நானும் உங்கள்கூட லண்டன்லயே தங்கி, நம்ம கம்பெனியை இன்னும் பெரிய உயரத்துக்குக் கொண்டு போவேன்," என்று தாரணி உற்சாகமாகச் சொன்னாள்.
தன் இரு பிள்ளைகளும் இணைந்து, இவ்வளவு பெரிய சர்ப்ரைஸை, மிக நேர்த்தியான திட்டமிடலுடன் செய்திருப்பதைப் பார்த்து சேயோன் மற்றும் காஞ்சனா இருவருமே நெகிழ்ந்து போயினர்.
இந்தியாவில் தான் உருவாக்கிய பேரைக் கடல் கடந்து, தன் பிள்ளைகள் இன்னும் பிரம்மாண்டமாக மாற்றி, அதில் மகளையும் ஒரு முக்கியப் பொறுப்பில் அமர்த்தியது சேயோனுக்கு அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது.
மாமா… இன்னும் எவ்வளவு நேரம் வாசலில் நிற்பீங்க உள்ளே வாங்க என்று விக்ரம் சொல்ல நீயுமாடா என்று சிரித்தவாறு அலுவலகத்திற்குள் சென்றதும், அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் "ஹேப்பி 28த் அனிவர்சரி, சார்& மேடம்!" என்று வாழ்த்தி வரவேற்றனர்.
அங்கே தனி அறை, "சேயோன்- பவுண்டர் & சேர்மேன்" என்ற போர்டுடன் தயார் நிலையில் இருந்தது.
அதனுள் அழைத்துப் போய் அவரை உட்கார வைக்க எல்லாரும் கை கட்டினர். பின்னர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, சேயோனை அலுவலகத்தின் முக்கியப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு மிகப்பெரிய, நவீன வசதிகள் கொண்ட 'வார் ரூம்'. அங்கே ஒரு பிரம்மாண்டமான டிஜிட்டல் திரை இருந்தது.
"அப்பா, கம்பெனி திறந்தாச்சு. ஆனா, இதுக்கு உயிர் கொடுக்கப் போவது நீங்கதான். லண்டன்ல ஒரு மிக முக்கியமான புராஜெக்ட்க்கான டெண்டர் இன்னும் ரெண்டு நாள்ல முடியுது. அதுக்கான ப்ளான், டிசைன் எல்லாம் நாங்க தயார் பண்ணிட்டோம். ஆனா, நீங்கதான் இதைத் தொடங்கி வைக்கணும்," என்று பாரி சொன்னான்.
தாரணி அந்த டிஜிட்டல் திரையில் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் கட்டப்பட வேண்டிய ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்தின் வரைபடத்தை ஓடவிட்டாள்.
லண்டனில் இருந்து நியமிக்கப்பட்டிருந்த அனுபவம் வாய்ந்த ஆர்க்கிடெக்ட்கள் மற்றும் பொறியாளர்கள் அந்த அறையில் இருந்தனர். அவர்கள் சேயோன் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வமாகக் கவனித்தனர்.
சேயோன் அந்த டிஜிட்டல் திரையின் முன் நின்றார். பல தசாப்தங்களாக இந்தியாவில் அவர் கட்டிய கோடிக்கணக்கான சதுரடி கட்டிடங்களின் அனுபவம் அவர் கண்களில் மின்னியது. அவர் லண்டன் ஆர்க்கிடெக்ட்கள் கொடுத்திருந்த ப்ளானை மெல்ல நகர்த்திவிட்டு, ஒரு டிஜிட்டல் பேனாவை எடுத்தார்.
"லண்டன்ல குளிர் அதிகம், அதனால நீங்க கொடுத்திருக்கிற இந்த கிளாஸ் ஸ்ட்ரக்சர்ல 'தெர்மல் இன்சுலேஷன்' போதாது. இதுல 'டபுள் கிளேசிங்' முறையை விட, நான் சொல்ற இந்த 'ஸ்மார்ட் கிளாஸ்' நுட்பத்தைப் பயன்படுத்தினா, கட்டிடத்தோட வெப்பநிலையை இயற்கையாவே பராமரிக்கலாம்," என்று அவர் வரைபடத்தை மாற்றியமைக்கத் தொடங்கினார்.
"முதல்ல, இந்த பவுண்டேஷன் லண்டன் மண்ணோட ஈரப்பதம் இந்தியா மாதிரி இருக்காது. இங்க தேம்ஸ் நதி பக்கத்துல இருக்கு. அதனால, இவங்க கொடுத்திருக்கிற டெப்த் பத்தாது. இன்னும் அஞ்சு மீட்டர் ஆழமா போகணும், அப்பதான் கட்டிடம் ஸ்ட்ராங்கா இருக்கும்."
"ரெண்டாவது, இந்த டிசைன்: இது லண்டன் பாரம்பரியத்தைக் காட்டுது. ஆனா, நமக்குக் கொஞ்சம் நவீனமானத் தோற்றமும் வேணும். இந்த வளைவுகளைக் கொஞ்சம் மாத்தி, கிளாஸ் பேனல்ஸ் வச்சா, வெளிச்சம் அதிகமா வரும், கரண்ட் செலவும் குறையும்."
"மூணாவது, இந்த பட்ஜெட்: நீங்க கொடுத்திருக்கிற மெட்டீரியல் காஸ்ட் ரொம்ப அதிகமா இருக்கு. இதே தரத்துல, இந்தியாவில் இருந்து மெட்டீரியல்ஸ் இம்போர்ட் பண்ணுனா, நமக்கு 20% செலவு குறையும்."
இந்தக் கட்டிடத்தோட மையப்பகுதி இப்படி இருந்தா, நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும். லண்டன் மண் தன்மைக்கு இதுதான் சரி," என்று அவர் விளக்கிய நுட்பம், அங்கிருந்த சீனியர் இன்ஜினியர்களைத் தலைவணங்க வைத்தது.
"இங்க பாருங்க, இந்த கான்கிரீட் கலவையில சில மாற்றங்கள் செஞ்சா, காயுற நேரம் மிச்சமாகும். அப்போ நமக்கு 3 மாசம் முன்னாடியே பில்டிங் ரெடியாகும். டைம் இஸ் மணி!
அவர் சொல்லி முடித்ததும், அந்த அறையில் ஒரு நிமிடம் மயான அமைதி நிலவியது. லண்டன் ஆர்க்கிடெக்ட்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களின் முகத்தில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவர் வரைந்த ஒவ்வொரு கோடும் ஒரு கவிதை போல இருந்தது.
அவர்கள் நினைத்ததோ, "இந்தியாவில் இருந்து வந்திருக்கும் இந்த மனிதருக்கு, லண்டன் சூழ்நிலை பற்றி என்ன தெரியும்?" என்று. ஆனால், சேயோன் கொடுத்த நுணுக்கமான ஆலோசனைகள், அவர்களின் பல வார உழைப்பை ஒரே நிமிடத்தில் இன்னும் சிறந்ததாக மாற்றிவிட்டது.
அங்கிருந்த பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்ட் 'மார்க்', வியப்புடன் தன் சக ஊழியரிடம் கிசுகிசுத்தார், "நாங்க இதைப் படிக்கிறதுக்கு பல வருஷம் ஆச்சு, ஆனா இவர் ஒரு பார்வை பார்த்தே எல்லா நுணுக்கங்களையும் சொல்லிட்டாரே! இவரோட எக்ஸ்பீரியன்ஸ் முன்னாடி நாம இன்னும் சின்ன பசங்கதான்."
மார்க் நேராக சேயோனிடம் வந்தவன் "சார், உங்கள் பார்வை தற்போதைய லண்டன் தரத்தை விட மிக முன்னேறியதாக இருக்கிறது. உங்கள் வழிகாட்டுதலில் பணியாற்றுவது எங்களுக்குப் பெருமை! என்று கைகுலுக்கினார்.
அப்பா மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பதையும், சர்வதேச வல்லுநர்கள் அவரை வியந்து பார்ப்பதையும் கண்ட பாரிக்கும் தாரணிக்கும் கண்கள் கலங்கின.
பாரி மெல்ல தன் அம்மா காதில் சொன்னான், "பார்த்தீங்களா அம்மா, அவருக்கு இதுதான் உண்மையான திருமண நாள் பரிசு."
“30 வருஷத்துக்கு முன்னாடி உங்க அப்பா ஒரு சின்ன செங்கல் வச்சு ஆரம்பிச்சது, இன்னைக்கு லண்டன்ல இவ்வளவு பெரிய சாம்ராஜ்யமா நிக்குது. இதைவிட ஒரு மனைவிக்கு வேற என்ன வேணும்?" என்று பெருமையோடு சொன்னவர், தன் கணவரின் அனுபவ அறிவையும், கூர்மையான திட்டமிடலையும் மற்றவர்கள் பாராட்டுவதைக் கண்டு காஞ்சனா பெருமிதத்தில் கண்கலங்கினார்.
தன் தங்கையின் தோளைத் தட்டியவன், "அப்பாவோட அனுபவம் எப்பவுமே மாஸ்தான். நாம எவ்வளவு படிச்சிருந்தாலும், அனுபவத்துக்கு முன்னாடி நாம இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு" என்றான்.
அன்று மாலை, லண்டன் மாநகரின் வானவேடிக்கைகளுக்கு நடுவே, 'சேயோன் பில்டர்ஸ்' தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஒரு வெற்றியாளரின் அனுபவத்துடன் தொடங்கியது.
28 வருடத் திருமண வாழ்க்கையில், இந்தத் திருமண நாள் சேயோன் மற்றும் காஞ்சனாவுக்கு மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது.
பெருமிதத்துடன் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வர அங்கு டேவிட் அவனது பேமிலியோடு இருக்கவும், நீயும் இதில் கூட்டு கலவாணியா என்க, எஸ் அங்கிள் என்றான்.
பின்னர் பெண்கள் மூவரும் பேசிக்கொண்டே இரவு டின்னரை ரெடிப்பண்ண எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு டேவிட் தம்பதியினர் அவர்களது மகளோடு அங்கிருந்து சென்று விட, பெருமிதத்தில் சேயோனுக்கு தூக்கமே வரவில்லை.
நாட்களும் வேகமாக ஓடியது இன்று தான் டெண்டர் அறிவிப்புக்கான நாள்.வழக்கம்போல தயாராகியவர் தனது இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக்கொண்டு புறப்பட்ட சேயோனுக்கு இது தான் முதல் புராஜெக்ட் என்பது போல சிறிய பதற்றம் இருந்தது.
லண்டன் மாநகராட்சியின் பிரம்மாண்டமான கூட்டரங்கம். ஐரோப்பாவின் டாப் 10 கட்டுமான நிறுவனங்கள் வரிசையாக அமர்ந்திருந்தன. அனைவர் முன்னிலையிலும் 'தேம்ஸ் ரிவர்சைடு மால்' புராஜெக்ட் யாருக்கு என்று அறிவிக்கப்பட இருந்தது.
அறிவிப்பாளர் மேடைக்கு வந்து, "இந்த டெண்டர், 'சேயோன் பில்டர்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது!" என்று சொன்ன அந்த நொடி... அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது.
சேயோனின் கண்களில் லேசான கண்ணீர். இது வெறும் பிசினஸ் அல்ல; அவரது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம். அங்கிருந்த அவரது குழுவினர் கட்டிப்பிடித்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
லண்டனின் இதயப்பகுதியில், தேம்ஸ் நதிக்கரையில் ஒரு அடையாளத்தை உருவாக்கப்போகிறோம் என்ற பெருமிதம் சேயோனின் முகத்தில் மின்னியது.
புராஜெக்ட் கிடைத்த கையோடு, சேயோன் ஒரு அதிரடி முடிவெடுத்தார். நேரத்தை மிச்சப்படுத்தவும், வேலையை 24 மணிநேரமும் கண்காணிக்கவும் தேம்ஸ் நதிக்கரை ஓரத்திலேயே ஒரு தற்காலிக கேபின் அமைத்துத் தனது குழுவுடன் தங்க ஆரம்பித்தார்.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.