செம்புலம் 18
லண்டன்:
நல்ல நாளில் பூமி பூஜையை தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி செய்தனர். விடியற்காலையில் தேம்ஸ் நதியில் மூடுபனி விலகும்போதே, சேயோன் கையில் வரைபடத்துடன் நதிக்கரையில் நிற்பார். நதியின் ஓட்டத்தையும், காற்றின் திசையையும் கவனிப்பார்.
அதேபோல் மாலை நேரங்களில் நதிக்கரை ஓரம் அமர்ந்து தன் டீமுடன் டீ குடித்துக்கொண்டே சவால்களை விவாதிப்பார். "இந்த நதி நம்ம எதிரி இல்ல, நம்ம நண்பன். இதைச் சிதைக்காம நாம மாலைக் கட்டணும்," என்று தன் ஆட்களுக்கு உற்சாகம் அளிப்பார்.
இரவில் நதியின் அலைச்சத்தம் பின்னணியில் ஒலிக்க, நள்ளிரவு வரை விளக்கு வெளிச்சத்தில் சிமெண்ட் கலவைகளும், இரும்புத் தூண்களும் நிலைநிறுத்தப்படுவதைச் சேயோன் அருகிருந்து பார்ப்பார். அந்த நதிக்கரை வாழ்க்கையே ஒரு தவத்தைப் போல இருந்தது.
தேம்ஸ் நதியின் ஈரப்பதம், கடும் குளிர் என எத்தனையோ தடைகள் வந்தன. ஒருமுறை நதிநீர் மட்டம் உயர்ந்தபோது, சேயோன் பதறாமல் தனது 35 ஆண்டுகால அனுபவத்தைப் பயன்படுத்தி நதிநீரைத் திசைதிருப்பும் தற்காலிக அணைகளை துரிதமாக அமைக்கச் சொன்னார். அவரது துல்லியமான திட்டமிடலால், ஒரு நாள் கூட வேலை நிறுத்தப்படவில்லை.
கடைசி 30 நாட்கள் இருந்தபோது, லண்டனில் கடும் மழை பெய்து தேம்ஸ் நதியில் வெள்ளம் அபாயக் கட்டத்தை எட்டியது. கட்டுமானப் பொருட்கள் வரும் பாதைகள் துண்டிக்கப்பட்டன.
என்ன பண்ணலாம் என்று மற்றவர்கள் பதற்றமாக,சாலைப் போக்குவரத்து முடங்கினால் என்ன, நமக்கு தான் நதி இருக்கே என்கவும், இது சாத்தியமா அப்பா என்று பாரி கேட்க, நம்பிக்கை தான் வாழ்க்கை அலவா.
நீ டேவிட்டிற்கு கால் பண்ணு என்கவும், அப்பா ஏதோ பிளான் பண்ணி விட்டார் என்பது புரிய அவனும் அதேபோல் கால் பண்ணவும் விஷயத்தை சுருக்கமாக சேயோன் சொல்ல, தனது செல்வாக்கைப் பயன்படுத்தியவன் தேம்ஸ் நதியிலேயே பெரிய சரக்குப் படகுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுக்கவும் சிமெண்ட், கண்ணாடி மற்றும் எஸ்கலேட்டர்கள் என அனைத்தும் நதி வழியாகவே கட்டுமான இடத்திற்கு வந்து சேர வேலையும் வழமை போல தொடங்கியது.
இரவு பகலாக இந்த ப்ராஜெக்டிற்காக கணவனும் தனது பிள்ளைகளும் உழைப்பதைப் பார்த்து காஞ்சனாவுக்கு கவலையாக இருந்தாலும் ஒருபுறம் பெருமையாக இருந்தது.
சென்சார்கள் மூலம் நிலத்தடி அதிர்வுகளை 24 மணிநேரமும் கண்காணிக்க மறக்கவில்லை.
பகலில் ஆக்ஸ்போர்டு தெருவில் லாரிகள் வர முடியாது. எனவே, நள்ளிரவு 2 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே பொருட்களைக் கொண்டு வந்து, அடுத்த 6 மணி நேரத்திற்குள் அவற்றைப் பொருத்தும் வேகமான உத்தியைக் கையாண்டார்.
மாலின் ஒவ்வொரு தளத்தையும் வேறொரு இடத்தில் தயார் செய்து, இங்கே கொண்டு வந்து லெகோ பிளாக்குகளைப் போலப் பொருத்தினார்.
திறப்பு விழாவிற்கு இன்னும் 10 நாட்களே இருந்தன. மாலின் பிரம்மாண்டமான கண்ணாடி மேற்கூரை பொருத்தும் போது கிரேன் பழுதானது. லண்டனின் பலத்த காற்றால் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதால் சேயோன் பதற்றமடையவில்லை.
தனது 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழைய நண்பரை அழைத்து அவரிடம் பேச, இது சரியா வரும் சேயோன் என்கவும், நவீன இயந்திரங்களுக்குப் பதில், பழமையான கயிறு மற்றும் கப்பிகளைப் பயன்படுத்தி, காற்றின் திசையைத் துல்லியமாகக் கணித்து அந்த 10 டன் கண்ணாடியைப் பாதுகாப்பாகப் பொருத்தி முடித்த பின்னரே அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
இதோ நிச்சயிக்கப்பட்ட அந்தத் தேதியில், லண்டன் மாநகரமே வியக்கும்படி அந்த மால் பிரமாண்டமாக தயாரானது.
லண்டனில் இருக்கும் மிகப்பெரிய பில்டர்களும் அப்படி என்ன பொல்லாத டிசைன் அந்த தமிழ்நாட்டுக்காரன் பண்ணிட போறான் என்று எகத்தாளமாக சொல்லிக் கொண்டு பார்வையிட வந்திருந்தனர்.
தனது தந்தையின் முதல் வெளிநாட்டு ப்ராஜெக்டை வீட்டினர் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது மாமா வீட்டினரோடு தனது தாத்தா பாட்டி வருங்கால மனைவியையும் யாருக்கும் தெரியாமல் பாரியும் வர வைத்திருந்தான்.
திறப்பு விழா அன்று தேம்ஸ் நதியில் படகுகள் வரிசையாக அணிவகுத்து நிற்க, மாலின் மின்விளக்குகள் நதிநீரில் பிரதிபலித்தன. லண்டனின் முக்கியப் பிரமுகர்கள் விழாவிற்கு வந்திருந்தனர்.
ரிப்பனை வெட்டி உள்ளே போனதும் சேயோன், பேசத் தொடங்கினார். "35 வருஷத்துக்கு முன்னாடி இந்த நதிக்கரையில வெறும் பையோட சுத்தினவன் நான். இன்னைக்கு அதே நதிக்கரையில ஒரு மாளிகையை எழுப்ப இந்த லண்டன் எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கு. இது சேயோன் பில்டர்ஸின் உழைப்புக்குக் கிடைச்ச வெற்றி!" என்று உணர்ச்சிகரமாக பேசும் போது அவரது அப்பா அம்மாவோடு மச்சான் வீட்டினரும் அங்கு வருவதைப் பார்த்து அவருக்கு சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை.
பின்னர் சுதாரித்துக் கொண்டவர் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கினார்.
"லண்டன் போன்ற ஒரு நெருக்கடியான இடத்தில், அண்டர்கிரவுண்ட் ரயில்களுக்கு ஒரு சிறு கீறல் கூட இல்லாமல், இவ்வளவு சீக்கிரம் ஒரு மாலை முடிக்க உங்களால் எப்படி முடிந்தது?" என பிபிசி செய்தியாளர் கேட்டார்.
சேயோன் சிரித்துக்கொண்டே சொல்லத் தொடங்கினார். "லண்டன் விதிகளை மதிக்கக் கற்றுக்கொடுத்தது, என் அனுபவம் அந்த விதிகளுக்குள் விளையாடக் கற்றுக்கொடுத்தது!”
"திட்டமிடல் என்பது காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது, அது செயலில் இருக்க வேண்டும். லண்டன் எனக்குக் கொடுத்தது தொழில்நுட்பம், என் மண் எனக்குக் கொடுத்தது விடாமுயற்சி.”
இது எல்லாத்தையும் விட எனது குடும்பத்திற்கு தான் ரொம்ப நன்றி சொல்லணும். நம்மளை புரிந்து கொள்ளும் குடும்பம் இருந்தால் போதும் நம்மால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் அதற்கு நானே சிறந்த உதாரணம் என்கவும், அந்த அரங்கமே கைத்தட்டலால் நிரம்பி வழிந்தது.
"லண்டன் மாநகர வரைபடத்தில் அந்தத் தமிழனின் அசாத்திய சாதனை இதோ நிலைத்து நிற்பதற்கான சான்று இந்த மால்".
எல்லாரும் மால் முழுவதும் சுற்றி பார்த்து வெகுவாக பாராட்டி சென்றனர். அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் ஹப்பாடா என ஓய்ந்து போய் படுத்தனர்.
ஆனால் ஒருவனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. லண்டன் வந்து இரண்டு நாட்களாக மலர்விழி ஒரு வார்த்தை கூட பாரியிடம் பேசாமல் இருப்பதை பார்க்க ஒரு பக்கம் கவலையாக தான் இருந்தது. வேலை என்று இருந்தவன் அவளிடம் பேசுவதற்கான நேரத்தையே ஒதுக்காமல் போய்விட்ட கோவம்தான்.
மெதுவாக தன்னவள் அறைக்குள் நுழைய,பாரியின் பக்கம் முதுகு காட்டிப் படுத்திருந்தாள். அவள் தூங்கவில்லை என்பது அவளது சீரான சுவாசமின்மையிலேயே அவனுக்குப் புரிந்தது.
அவள் கட்டிலின் ஓரத்தில் மெல்ல அமர்ந்த பாரி, தாழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான்:
"எல்லாரும் தூங்கிட்டாங்க... ஆனா இந்த நிலவும் நானும் மட்டும் இன்னும் முழிச்சுக்கிட்டு இருக்கோம். ஏன்னா, ஒருத்தரோட மனசு இங்க இன்னும் காயப்பட்டு இருக்கேன்னு எங்களுக்குத் தெரியும்."
அவள் அசையவில்லை. ஆனால், அவளது விரல்கள் போர்வையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டதை அவன் கவனித்தான்.
"இன்னும் தூங்கலன்னு எனக்குத் தெரியும்... ஆனா ஏன் இந்தப் போர்வைக்குள்ள இவ்வளவு கோபத்தை ஒளிச்சு வச்சிருக்க?".
அவள் பதில் சொல்லவில்லை. போர்வைக்குள் இருந்து ஒரு சிறு விம்மல் சத்தம் மட்டும் கேட்டது. பாரிக்குத் தன் தவறு புரிந்தது. மெல்ல அவளது போர்வையை விலக்கி, அவளது கைகளைப் பற்றினான்.
"சாரிடா... வேலை நெருக்கடியில உன் கிட்ட பேச முடியாமல் போயிடுச்சு.ஆனா, என் மனசு முழுக்க நீதான் இருந்த..."
அவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள். கண்களில் தேங்கியிருந்த கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். "வேலை முக்கியம்தான் அத்தான், இல்லைன்னு சொல்லலை. ஆனா, இத்தனை நாட்களில் ஒரு போன் கூடவா உங்களுக்கு பண்ண நேரம் இல்லை?, அது போகட்டும் என் அழைப்பை கூட நீங்கள் ஏற்கவில்லையேனு கலங்கினாள்”.
"உண்மைதான், நான் செஞ்சது தப்புதான். ஆனா உன் மேல இருக்குற அதீத நம்பிக்கையில, 'அவ புரிஞ்சுப்பா'னு நினைச்சுட்டேன். இப்போ புரியுது, என் அன்பு உனக்கு வெளிப்படையாத் தெரியணும்னு நீ ஆசைப்படுறதுல தப்பில்லை. இனிமே எவ்வளவு பிஸியா இருந்தாலும், இந்த பாரியோட முதல் பார்வை உனக்குத்தான்," என்று உறுதி அளித்தான்.
தனது அத்தான் பொய்யான வாக்குறுதிகள் தரமாட்டான் என்பது புரிந்து சமாதானம் ஆனவள் அவனின் தோளில் சாய்ந்து கொள்ள, லவ் யூ டி விழி என்று அவளை அணைத்து உச்சந்தலையில் முத்தமிட, லவ் யூ டூ அத்தான் என்றாள்.
சரி... தூங்கு.. நாளைக்கு நாம் இந்தியா கிளம்பணுமே என்றவன் அடுத்து நம்ப கல்யாணம் தான் என்று கண்ணடிக்க போங்க அத்தானென்று வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள்.
மறுநாள் பொழுதும் வர, தாரணி விக்ரம் கிட்ட மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு மற்றவர்கள் பாரி- மலர் திருமண வேலையை பார்க்க இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர்.
மாறா இன்று நாள் நல்லாயிருக்கு பத்திரிகை அடிக்க கொடுக்க போகணும் என்று ராஜவேலு சொல்ல, அதற்கு என்னங்க மாமா. தாராளமாக போயிட்டு வரலாம் என்றான்.
இரண்டு வீட்டிலும் கல்யாண வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது. புடவை எடுக்க வேண்டிய நாளும் வர வேலை இருக்கிறது என்று பாரியால் வர முடியாமல் போனது தெரிந்து மலருக்கு தான் கோவம் வந்தது.
எப்போ பார் பிசினஸ் பிசினஸ்... அதையே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய தானே என்று கோவமாக மெசேஜ் அனுப்பிய அடுத்த நொடி வா அலவா என்கும் சத்தம் கேட்டு வேகமாக மலர் திரும்ப, பாரியும் சிரித்தபடி தன்னவளைப் பார்த்து கண்ணடித்தான்.
அய்யா பாரி...உன் பொண்டாட்டிக்கு இங்கு இருக்கும் எந்த புடவையும் பிடிக்கலையாம். இனி புதுசா தறி வாங்கி தான் நெய்யணும் என்று பானுமதி சொல்ல, நீங்கள் மற்றவர்களுக்கு எடுங்க பாட்டி இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவனோ அங்கே மலை போல் குவிந்திருக்கும் புடவைகளை கலைத்து விட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அதிலிருந்து மூன்று புடவைகளை எடுத்து மலரின் கையில் கொடுத்தவன் போய் மேல வச்சு காட்டு டி.
இதையாவது நீயே செய்ய முடியுமா?.இல்லை நானே தான் கட்டி விடணுமா டி?. எதாக இருந்தாலும் எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை என்றான்.
தான் ஆசைப்பட்ட போல தன்னவனே புடவைகளை தேர்ந்தெடுத்ததை நினைத்து உள்ளுக்குள் குதூகலமாக இருக்க, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தை இடம் வலமாக முறுக்கி காட்டிவிட்டு அங்கிருந்து போனாள்.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.