செம்புலம் 23
தேனூர்:
"மாமா..." என்று வள்ளி கூப்பிட, "சொல்லு, உனக்கு என்ன காரியம் ஆகணும்?" என்றவாறு தனது நெஞ்சின் முடியில் விரல்களால் கோலம் போடும் மனைவியின் தலையைத் தடவிவிட்டபடி மணி கேட்க, "போயா!" என்றாள்.
"ஹா.. ஹா.." என்று சிரித்தவர், "சொல்லுடி" என்க, "வர வைகாசியோட கதிருக்கு 29 ஆரம்பிக்கிது மாமா. இன்னும் ஏன் நாளைக் கடத்தணும்? எத்தனை நாளைக்குத்தான் இப்படி கடையிலேயே புள்ளை சாப்பிட்டுக்கிட்டு இருப்பான்?" என வள்ளி கேட்கவும், "ம்ம்.. எனக்கும் அந்த யோசனைதான் வள்ளி. ஒரு நல்ல நாள் பாரு; உன் அண்ணன் வீட்டிற்குப் பொண்ணு கேட்டுப் போகலாம்," என்றார்.
அதைக் கேட்ட வள்ளிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அண்ணன் வீட்டிற்குப் போய் பெண் கேட்பது என்று முடிவானதும், வீட்டில் ஒருவித மெல்லிய பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வள்ளி பட்டுப்புடவை உடுத்தி, தட்டில் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்குடன் கணவரோடு பக்கத்து தெருவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு வர, அண்ணனும் அண்ணியும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
"என்னத்தா தட்டெல்லாம் பலமாக இருக்கிறது?" என்று சேகர் கேட்க, "அண்ணே, நம்ம கதிருக்கு உன் பொண்ணு மீனாட்சியைத்தான் கேட்க வந்திருக்கோம். உங்களுக்கும் சம்மதம்னா நாம முறைப்படி பேசி முடிச்சிடலாம்," என்றாள் வள்ளி.
"அப்படியா!" என்று திகைத்தவர், "வள்ளி, இதைவிட வேற என்ன நல்ல விஷயம் இருக்கப்போகுது? கதிர் என் பிள்ளை மாதிரி. அவன் கையை என் பொண்ணு பிடிச்சா எனக்குப் பெருமைதான். சம்மதம்மா!" என்று பச்சைக்கொடி காட்டினார்.
"மச்சான், எதுக்கும் மீனுகிட்ட ஒரு வார்த்தை கேளுங்கள்," என்று மணி சொல்ல, "அதுவும் வாஸ்தவம்தான் மச்சான்," என்ற சேகர், தோட்டத்தில் இருக்கும் மகளைக் கூப்பிடுமாறு தனது மனைவியிடம் சொன்னார்.
சிறிது நிமிடத்தில் மீனாட்சியும் உள்ளே ஓடிவந்தவள், பின்னர் தூணின் ஓரம் தயங்கி நிற்க, "அம்மாடி மருமகளே! என் மகனுக்கு உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்கோம், நீ என்ன சொல்ற?" என்று சிரித்துக்கொண்டே மணி கேட்க, அவளோ வெட்கத்தில் தலை குனிந்துகொண்டாள்.
"என்ன மச்சான், உங்க பொண்ணுக்குப் பிடிக்கலையா? சரி, நாங்க வேற இடத்துல பொண்ணு பார்க்கிறோம்," என்று மணி விளையாட்டாகச் சொல்லவும், "ஐயோ மாமா! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை," என்று பட்டென்று மீனாட்சி வாயைத் திறந்தாள்.
அதைக் கேட்டு "ஹா ஹா..." என்று சிரித்தவர், "மருமகளுக்குச் சம்மதம்னு தெரிஞ்சிருச்சு. கயலுக்கு வரன் பார்க்க சொல்லி வச்சிடலாம். முடிந்தால் ரெண்டு கல்யாணத்தையும் முன்ன பின்னர் முடித்துவிடலாமா? நீங்க என்ன சொல்றீங்க?" என்று சேகரிடம் கேட்க, "அப்படியே செஞ்சிடலாம்," என்றார் அவர்.
விஷயம் உறுதியானதும், வள்ளி தன் வீட்டிற்கு வந்து முதலில் கதிர்க்கும், பிறகு கயலுக்கும் ஒரே நேரத்தில் குரூப் வீடியோ கால் செய்தாள்.
"என்னம்மா இந்த நேரத்துல போன்? உடம்பு ஏதும் சரியில்லையா?" என்று பதற்றத்துடன் கேட்டான் கதிர்.
"அம்மா, நான் இப்பதான் சாப்பிடப் போறேன்... ஏன் திடீர்னு கால் பண்ணீங்க?" என்று கயலும் படபடப்போடு கேட்டாள்.
வள்ளி மெல்லச் சிரித்துக்கொண்டே கேமராவைத் திருப்பி, தட்டில் இருந்த பூவையும் பழத்தையும் காட்டினாள். "உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சஸ்பென்ஸ் வச்சிருக்கேன். இப்பதான் மாமா வீட்டுக்குப் போய் வந்தேன். கதிருக்கு நம்ம மீனுவை பேசி முடிச்சுட்டு வர்றோம்!" என்றார்.
இதைக் கேட்ட கதிருக்கு ஒரு நிமிடம் பேச்சே இல்லை. தன் மனதிற்கு பிடித்தவளே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்ற செய்தியை அவனால் நம்பவே முடியவில்லை. "அம்மா... நிஜமாவா? எனக்குத் தெரியாமலே போயிட்டு வந்துட்டீங்களா?" என்று நெகிழ்ச்சியில் அவன் குரல் தழுதழுத்தது. முகம் முழுதும் ஒரு வெட்கச் சிரிப்பு படர்ந்தது.
"ஏய்! நிஜமாவா அம்மா?" என்று கயல் சந்தோஷத்தில் கத்தியவள், பின்னர் இருக்கும் இடத்தை உணர்ந்து சுதாரித்து அசடு வழிந்தாள். மேலும் சிறிது நிமிடங்கள் தனது பிள்ளைகளிடம் பேசிவிட்டு வள்ளி போனை வைத்தார்.
உடனே தன்னவளிடம் பேச வேண்டும் என்று மனம் துடிக்க, மீனுவிடமிருந்தே கதிருக்கு கால் வந்தது. வேகமாக அட்டென்ட் பண்ணியவன் "பொண்டாட்டி..." என்கவும், "ம்ம்.." என்றாள் அவள். "ஆபீஸில் இருக்கேன்டி, ரூமிற்கு வந்து பேசுறேன்," என்று சொல்லிவிட்டான்.
மேதினூர்:
கயலின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தைப் பார்த்த மாணிக்கம் ஐயா, "என்னம்மா சங்கதி?" என்கவும், தனது அண்ணனுக்குக் கல்யாணம் உறுதியானது பற்றிச் சொல்ல, "அப்படியாமா!" என்று அவரும் சந்தோஷப்பட்டார்.
தனது கேபினில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் பாரியின் சிந்தனை எல்லாம் கயலிடமே இருந்தது. 'எவ்வளவு சாஃப்டாக இருக்கிறாள்' என்று நினைக்கும்போதே அவன் உடலுக்குள் ஏதோ செய்ய, தலையை உதறி அந்த நினைவை விரட்டினான்.
வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாரியின் பார்வை, அங்கிருக்கும் ஓட்டு வீட்டைத் தழுவிச் செல்லாமல் இல்லை.
அன்று இரவு டிபன் சாப்பிடும் போது, "பேபிமா..." என்று கார்மேகம் கூப்பிட, "சொல்லுங்கள் டாடி," என்றாள் ஷாலினி.
"எனக்கும் வயசாகிக்கொண்டே போகிறது. ஏதோ ஒன்று ஆவதற்குள் உன்னை ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்து விட்டால் நான் நிம்மதியாக இருப்பேன்," என அவர் சொல்ல, "டாடி!" என்று கத்தியவள், "எனக்கு கல்யாணம் என்பது ஒன்று நடந்தால் அது பாரியுடன் தான்" நடக்கும்.
"இன்னும் ஒரு த்ரீ மந்த்ஸ் பொறுமையாக இருங்கப்பா," என்றவாறு பாதிச் சாப்பாட்டிலிருந்து எழுந்து போகும் மகளைப் பார்த்த கார்மேகம், 'நான் பார்க்கும் மாப்பிள்ளைகூடத்தான் உனக்குக் கல்யாணம் நடக்கும்' என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்.
மறுநாள் காலை... இன்று எப்படியாவது கல்யாணப் பேச்சை பாரியிடம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தவளோ, எதிரில் வந்த கயலைப் பார்த்து அதிர்ந்து போய்க் காரை நிறுத்த, அவளோ போனில் பேசியபடியே அங்கிருந்து கடந்து சென்றாள்.
'இறந்து போன மலர் எப்படி உயிரோட வர முடியும்?' என்று கண்களைக் கசக்கிவிட்டு ஷாலினி பார்க்க, அவளைக் காணவில்லை. 'ஒருவேளை மலரோட ஆவியா இருக்குமோ?' என நினைத்தவளுக்குப் பயம் வர, காரைத் திருப்பிக்கொண்டு நேராக வீட்டிற்கு வந்துவிட்டாள். 'நாம் பார்த்தோமோ? அப்போ அது யார்? ஒருவேளை நம்ம பிரம்மையோ?' என்று யோசித்தவளுக்குத் தலையைப் பிய்த்துக்கொள்ளவதுப் போலிருந்தது.
ஒருவாம் கடந்திருக்க...வட்டாட்சியர் அலுவலகத்தின் அந்தப் பழைய கட்டிடத்தில், புழுதி படிந்த கோப்புகளுக்கு நடுவே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் கயல். சமீபத்தில்தான் வி.ஏ.ஓ ஆகப் பொறுப்பேற்றிருந்த அவளுக்கு, அந்த ஊர் நில விவகாரங்களைக் கையாள்வதே பெரும் சவாலாக இருந்தது.
அப்போதுதான் அவன் உள்ளே நுழைந்தான். கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த கயல், அப்படியே சிலையாக உறைந்து போனாள். அங்கே நின்றது பாரி! அவனை இந்தச் சூழ்நிலையில் அவள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த அதிர்ச்சியில் கயலின் கையில் இருந்த பேனா கீழே விழுந்தது.
அவளது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டு, பின் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இத்தனை நாட்களாக அவள் நினைக்காமல் இருந்த அந்த நாளின் நினைவுகள் அலைமோத, முகத்தில் அதிர்ச்சியை மறைக்க முடியாமல் தவித்தாள். ஆனால் பாரியோ எந்தச் சலனமும் இல்லாதது போல் முன்னேறி வந்தான்.
அவன் கண்களில் அணிந்திருந்த அந்த விலை உயர்ந்த கறுப்புக் கண்ணாடி அவனது பார்வையை முழுமையாக மறைத்திருந்தது. அவன் எங்கே பார்க்கிறான், யாரைப் பார்க்கிறான் என்பது அவனைத் தவிர எவருக்கும் தெரியாது. அவன் கையில் ஒரு நிலப்பத்திரம் இருக்கவும் "மேடம்," என்றவன் நிலம் தொடர்பான கோப்புகளை அவளிடம் நீட்டினான்.
கயல் தன் நடுங்கும் கரங்களால் அதை வாங்கியவள் தடுமாற்றத்தோடு படித்து முடித்து, தலைகுனிந்து கையெழுத்திட முயன்ற போது, அந்த கறுப்புக் கண்ணாடிக்குப் பின்னால் இருந்த அவனது கண்கள் அவளையே ஊடுருவிப் பார்ப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.
அந்தக் கண்ணாடி அவனுக்கு ஒரு கவசமாக இருந்தது. அவன் எதார்த்தமாக வந்தது போலக் காட்டிக் கொண்டாலும், அவனது மொத்தக் கவனமும் கயலின் ஒவ்வொரு அசைவின் மீதும் இருந்ததை மறுக்க முடியாது. அவளது பதற்றம், அவளது தடுமாற்றம் அனைத்தையும் அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து கையெழுத்தைப் போட்டவள், அவனின் முகத்தைப் பார்க்காமலே பத்திரத்தை நீட்ட, அதை வாங்கும்போது அவனது கரங்கள் அவள் கரங்களில் உரசவும், மின்சாரம் தாக்கியது போல இருவரும் உணர்ந்து கொண்டனர். கயலோ பட்டென்று கைகளை இழுத்துக்கொண்டாள்.
அமைதியாக வெளியே வந்த பாரி, "ஊஃப்..." என்று பெருமூச்சு விட்டவன் 'இது தப்பு. நமக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது இப்படி ஒரு வயசுப் பெண்ணைப் பார்ப்பது தவறு' என்று மூளை சொன்னாலும், அவனது மனமோ தன் மனைவியைப் போலவே இருப்பவளை ரசிக்கச் சொல்லியது.
தனது பக்கத்தில் இருக்கும் ஜன்னல் வழியாகக் கயல் பார்க்க, பாரி அங்கு ஜீப்பின் மேல் சாய்ந்து நிற்பதும், அவன் இந்தப் பக்கம் திரும்பப் போவது தெரிந்ததும் இவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.