5.உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -5
எப்போதும் போல் ராகவன் சாரலை அவளுடைய தையல் பள்ளியில் விட்டுச் சென்று இருந்தான்.அவளால் ஒரு மணிநேரம் வரை இருந்தவளால் அதற்கு மேல் இருக்க முடியவில்லை.
ராகவன் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்ன விஷயமே மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தது.அதனால் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதாகச் சொல்லி விட்டு கால் போன பாதையில் நடந்துக் கொண்டிருந்தாள்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவும் எதாவது பழச்சாறு குடிக்கலாம் என்று ஒரு பழச்சாறு கடையில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்தவள் “அண்ணா ஒரு தர்பூசணி ஜீஸ் கொடுங்க” என்று சொன்னவள் யோசனையில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது யாரோ அவளை உற்றுப் பார்ப்பது போலவே இருந்தது.அதனால் தான் இருக்கும் இடத்தை சுற்றி ஒருநோட்டம் விட்டாள்.அங்கே இவளுக்கு எதிரே இன்னொரு நபருக்கு பின்னால் தலையில் தொப்பி அணிந்தபடி ஒருகையை கன்னத்தில் அடவு வைத்தப்படி முகத்தில் முகமூடி அணிந்தபடி அவளையே ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதனை கவனித்தவள் அவன் ஏதோ யோசனையில் இருக்கிறான் போல என்று நினைத்தவள் அவளுக்கு வந்த பழச்சாற்றை குடித்துக் கொண்டே மெதுவாக தன்னை திரும்பவும் நோட்டம் இடுகிறானா? என்று பார்த்தாள்.
அப்பொழுதும் எந்த அசைவும் இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் வேகமாக பழச்சாற்றை அருந்தி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
வேகமாக நடக்கத் துவங்கியவள் எதற்கும் அவன் தன்னை பின்னால் தொடர்ந்து வருகிறானா? என்று பார்த்தாள்.
யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்தவள் அருகில் உள்ள கோவிலில் போய் அமர்ந்துக் கொண்டாள்.நேரம் சென்றதே தவிர அவள் மனம் சரியாகவில்லை.
ஒரு மணிநேரம் கழிந்த நிலையில் அவளருகே கோவிலின் தூண் பக்கமாக யாரோ அமர்ந்து இருப்பதாக தெரிந்தது.
சாரலும் யாரென்று தனது தலையை திருப்பி பார்த்த அந்த நொடி யாரை இனிமேல் தன் வாழ்நாளில் அவள் சந்திக்கக் கூடாது என்று நினைத்து இருந்தாலோ அவன் தான் அங்கே அவளுக்கு மிக அருகினில் உட்கார்ந்து இருந்தான்.
அவனுடைய முகத்தைப் பார்த்த மறுநொடி அவளுடைய உள்ளம் அப்படியே திக்கென்று நின்றது.ஒருவிதமான அதிர்ச்சியும் படபடப்பும் ஒன்றுச் சேர கைகள் நடுங்கத் தொடங்கியது.விழிகள் கண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தது.
அந்நேரம் அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் முகத்தில் தெரிந்த உணர்வுகளுக்கு மாற்றாக அவனோ சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்தது போல் சாரலை பார்த்து மென்மையாக அதே மாறாத நேசத்தோடு பார்வையினில் முகத்தில் புன்னகையோடு அவன் பார்த்ததும் மொத்தமாக தொலைந்தவள் இப்பொழுதும் அவனைப் பார்த்ததும் தொலைந்துக் கொண்டிருக்கிறாள்.
அவனோ “சாரல் நீ சாரல் தானே?” என்று கேட்டான்.
அவனின் பேச்சு சத்தம் கேட்டதும் ஓரளவு நடப்புக்கு வந்தவள் “இ…இல்லை நான் சாரல் இல்லை” என்று வேகமாக அங்கிருந்து எழுந்தாள்.
அவளோடு சேர்ந்து வார்த்தைகளும் மௌனமாகிக் கொண்டிருந்தன என்பதை அறியாத அவனோ “சாரல் சாரல் உங்க பேரு அது தான்னு என் மூளையும் மனசும் சொல்லுது. ஆனால் யார்னு நினைவுக்கு வரலை நான் யார்னு உங்களுக்கு தெரியுமா?” என்று அவன் கேட்ட கேள்வியில் திரும்பி ஒருமுறை அங்கே நின்றுக் கொண்டிருந்தவனை உன்னிப்பாக கவனித்தாள்.
கலைந்த கேசம்,விழிகளில் தெரிந்த அதே பார்வை,முகத்தினில் சரியாக வெட்டப்படாத தாடி,கொஞ்சம் லேசாக கறைபடிந்த உடையோடு நிற்பவனைக் கண்டதும் அப்படியே இரண்டு வருடத்திற்கு பின்னால் அவனை பார்த்தது போல் இருந்தது அவளுக்கு.
அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவனோ “சாரல் சாரல் என்னை உன்கூட அழைச்சிட்டு போ,ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.
உடனே தன்னை சுதாகரித்துக் கொண்டவள் “சார் நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது” என்று சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாக செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சென்றதும் மெதுவாக சாரல் அறியாதவாறு பின்தொடர்ந்து சென்றான்.சாரல் நேராக வீட்டிற்கு போய் கதவை அடைந்துக் கொண்டு தன் அறையில் படுத்துக் கொண்டாள்.
அவள் சென்ற வீட்டின் வாயிலையும் தெருவையும் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் மனதிலோ ‘இத்தனை வருஷமாக நான் தேடிக் கொண்டிருந்தது இவளைத் தான்னு என் மனம் சாரலைக் கண்டதும் எப்படி உடனே கண்டுபிடிச்சுத்துன்னு தெரியலை சாரல் இந்த ஒரு பெயரைத் தவிர எதுவும் நினைவில் இல்லை’ என்று எண்ணியவன் சாரலை கோவிலில் எடுத்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இருக்கும் இடத்தில் அருகில் உள்ள சாதாரண அறையை எடுத்து தங்கினான்.
எப்பொழுதும் விதுனை அழைத்து வருவதற்கு செல்லும் சாரல் அன்றைக்கு பள்ளிக்கு செல்லவில்லை.அதனால் ராகவனுக்கு விஷயத்தை தெரிவித்த ஆசிரியர் விதுனை அழைத்துச் செல்லச் சொன்னார்.
ராகவனும் எந்த மறுக் கேள்வியும் கேட்காமல் கொஞ்சன் நேரம் முன்னரே வேலையை முடித்து விட்டு விதுனை வந்து அழைத்துச் சென்றான்.
வரும் வழியினில் விதுன் “ப்பா சாரலுக்கு உடம்பு முடியலையா?” என்று அக்கறையாகக் கேட்டான்.
அவனைப் பார்த்து சிரித்த ராகவன் “ம்ம்… தெரியலை கண்ணு போய் பார்க்கலாம் சாரல் என் மேல கோபத்துலக் கூட இருப்பா” என்று தன் மன எண்ணங்களை பலவாறு சிந்தித்தபடி வீட்டிற்கு வந்தான்.
வீட்டின் முன்னால் இருந்த இரும்புக் கம்பியால் ஆன கதவு பூட்டியிருந்ததது.அதை தான் வைத்திருந்த சாவியால் திறந்தவன் அடுத்து கதவை தள்ளவும் அது திறந்துக் கொண்டது.
உள்ளே வரவும் எல்லாம் காலையில் இருந்த மாதிரியே பொருட்கள் எல்லாம் அங்கங்கே அப்படியேக் கிடந்தது.சாரல் எதாவது கோபத்தில் இருந்தால் தான் எந்த வேலையும் செய்யாமல் தன் அறையில் போய் படுத்து இருப்பாள்.
ராகவனும் ஊருக்கு அழைத்து செல்வேன் என்று உறுதியாகக் கூறியதால் கோபம் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்தவன் அவனுடைய அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
மாலையில் போடும் தேநீரை இருவருக்கும் மேசையில் வைத்து விட்டு “சாரல் எழுந்து வா டீ போட்டுட்டேன்” என்று அழைத்தான்.அவளிடம் எந்த பதிலும் வரவில்லை.
விதுனிடம் “விதுன் சாரலை இங்கே எழுந்து வரச் சொல்லு” என்று அனுப்பினான்.
விதுன் நேராக சாரல் இருந்த அறைக்குச் சென்று மெதுவாக கட்டிலில் ஏறி அவளைப் பிடித்து உலுக்கியபடி “சாரல் சாரல்” என்று அழைத்தான்.அவளோ அதற்கு எந்த பதிலும் காட்டாமல் அப்படியே கிடந்தாள்.
விதுன் கொஞ்சம் எவ்வி சாரலின் கன்னத்தில் முத்தமிட்டபோது அவளது கன்னங்கள் பிசுபிசுப்பாக இருந்தது.உடனே தன் கையால் உதடுகளை அழுந்த துடைத்தப்படி அவளையே கட்டி அணைத்தப்படி பக்கத்தில் படுத்தான்.
தூது அனுப்பிய தன் மகனைக் காணாததால் அறையின் உள்ளே வந்த ராகவன் “விதுன் சாரலை எழுப்ப சொன்னால் என்ன செய்யுற?” என்று கேட்டதும் விதுன் “ப்பா சாரல் அழுதுறா?” என்று சொன்னான்.
உடனே ராகவன் பதற்றமாக சாரலைப் பார்த்தான்.
அவளுடைய முகமோ அழுது வீங்கியபடி இருந்தது.
தலையணை முழுவதும் கண்ணீரால் நனைந்து இருந்தது.
அவளை தன் பக்கமாக திருப்பியவன் “சாரல் என்னாச்சு ஏன் அழுதுட்டு இருக்கே?” என்று கேட்டான்.
அவளிடம் பதிலில்லை.அவனோ தொடர்ந்து “உனக்கு ஊருக்கு வர பிடிக்கலைன்னா விடு வரவேண்டாம், அதுக்காக இப்படி அழுதுட்டு இருக்காதே!” என்று கவலையாகச் சொன்னான்.
சாரல் ராகவன் கவலைப்படுவதைக் கண்டு மெதுவாக கண்களைத் திறந்து “ராகவ் என்னை ஊருக்கு கூடிட்டு போ.நானும் உன்னோடு வரேன் எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை” என்றாள்.
அவளின் பதிலில் அதிர்ச்சியாகப் பார்த்த ராகவன் “என்ன விஷயம்னு சொல்லு சாரல்.ஏற்கனவே எல்லாத்தையும் மறைத்து அவஸ்தைப்பட்டது பத்தாதா? இன்னும் ஏன் அதே தவறை செய்றே?” என்று அவளைப் போட்டு திட்டினான்.
சாரல் மெதுவாக “இன்னைக்கு நான் ஆதியை பார்த்தேன்” என்றாள்.
ராகவன் புரியாமல் “யாரைப் பார்த்தே சாரல்?” என்று திரும்பவும் கேட்டான்.
சாரல் எச்சிலை மெதுவாக விழுங்கியபடி “நா… நான் இன்னைக்கு பப்புவை பார்த்தேன்” என்றாள்.
ராகவன் சற்று அதிர்ச்சியாகி “ப…பப்புவா அவன் எப்படி இங்கே வந்தான்? வாய்ப்பில்லை அவன் நாம இருக்கிற இடம்? அவனுக்கு நீ யாருன்னு தெரிஞ்சுதா?” என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான்.
சாரல் கொஞ்சம் பயந்தவாறு “என்னை சாரல்னு அழைச்சி என்கிட்டே வந்தான்” என்றாள்.
சாரல் சொன்னதைக் கேட்டதும் ராகவன் ஏதோ ஒன்றை ஆழமாக யோசித்தபடி “சாரல் நீ எங்கே வெளியே போனே?சொல்லு” என்று இவளுடைய தவறை முதலில் கண்டுபிடித்துக் கேட்டான்.
சாரல் திருதிருவென்று விழித்தாள்.என்னத் தான் அவள் தன் தவறை மறைக்க நினைத்தாலும் அவளுடைய செயல்பாட்டினாலே மாட்டிக் கொள்வாள்.அப்படித் தான் இன்றைக்கு ராகவனிடம் தானாகவே சிக்கிக் கொண்டாள்.
“அ..து அ…து” என்று திணறினாள்.
ராகவன் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு “நீ முதல்ல எங்கே போனேன்னு சொல்லு” என்று கண்டிப்போடு கேட்டான்.
சாரல் வேறுவழியில்லாமல் ராகவனிடம் “ராகவா நீ ஊருக்கு போகனும் சொன்னேன்ல அதான் கொஞ்சம் பீலிங்கா இருந்துச்சுன்னு க்ளாஸை பாதியிலே விட்டுட்டு கடற்கரைக்கு போகலாம்னு நடந்தேன்” என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.
ராகவன் “அவன் உன்னை பாலோ பண்ணி வந்தானா?” என்று கேட்டான்.
சாரல் மறுப்பாக “இல்லை ராகவன் அவன் கண்ணுக்கு தெரியாத மாதிரி நான் வந்துட்டேன்” என்றாள்.
ராகவன் “அவனை பார்த்தது எல்லாம் இருக்கட்டும் இப்போ எதுக்காக அழுதுட்டு இருக்கே?” என்று சாதாரணமாகக் கேட்டான்.
சாரல் புரியாமல் பார்த்தாள்.ராகவன் தொடர்ந்து “அதான் எதுவும் வேணாம்னு முடிவு பண்ணியாச்சுல்ல பிறகு எதுக்கு தேவையில்லாமல் அழுதுட்டு இருக்கே சாரல் வா டீ குடிக்கலாம்” என்று அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான்.
சாரலுக்கு ராகவனின் செய்கை வித்தியாசமாக இருந்தது.பப்புவின் பெயரை கேட்கவும் அவன் தன்னிடம் கோபம் கொள்ளாமல் ரொம்பவும் பொறுமையாக நடந்து கொள்வது ஆச்சரியமாக இருந்தது.
ராகவன் அமைதியாக தேநீரை குடித்தவனின் எண்ணங்களோ பலவாறு யோசித்தது.அதை எதிரே இருந்த சாரலிடம் காட்டிக் கொள்ளாமல் முகத்தை எப்போதும் போல் வைத்துக் கொண்டவன் பப்பு தங்களை கண்டுபிடிப்பதற்குள் இங்கிருந்து ஊருக்கு முதலில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
தனது அறையில் பப்பு என்றீ சாரல் சொன்ன ஆதித்யா சாரலின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நிழலாக ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தமும் அவள் தன்னை ஏதோ ஒரு பெயரை இட்டு அழைப்பது போலவும் தோன்றவும் விழிகளை இறுக மூடியபடி தலையில் கைவைத்து அப்படியே சரிந்தான்.
ராகவன் சாரல் சொன்ன விஷயத்தைக் கேட்டதில் இருந்து அவளை ஒருவேலையும் செய்ய விடாமல் அவனே எல்லாவற்றையும் பார்த்து செய்துக் கொண்டிருந்தவனின் முகமோ இறுக்கமாக மாறிக் கொண்டிருந்தது.
Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.