உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -9
சாரல் கவலையாக “இப்போ இந்த பப்புவோட போட்டோ எடுக்க முடியாதே! முகம் சரியானதும் தான் அடுத்து என்ன செய்ய முடியும்னு யோசிக்க முடியும்” என்றாள்.
தாத்தாவும் அதை ஆமோதித்துக் கொண்டார்.சாரலும் தாத்தாவும் இரவு வரை மருத்துவமனையில் இருந்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து தாத்தாவும் பேத்தியும் புதிதாக ஏதோ ஒரு உறவு அவர்களுக்குள் சேர்ந்தது போல் அவனைப் பார்த்து விட்டு வந்தனர்.
பப்புவை பரிசோதனை முடிவும் வந்து இருக்கவும் அதைப் பற்றி மருத்துவர் பேசும் போது பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்.அவன் அதிர்ச்சியில் இருப்பதால் கோமாவில் இருப்பதாகச் சொன்னார்.இவர்கள் இருவராலும் எல்லாவற்றையும் கேட்கத் தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
ஆனால் பப்புவிடம் தாத்தா ஆறுதலாக எதாவது அவனிடம் பேசுவார்.சாரலும் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பாள்.
தன்னால் முடிந்ததாக சில ஆறுதல் வார்த்தைகள் மட்டும் பேசுவார் கோபாலன்.
தாத்தா மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருப்பதால் இப்போது சாரல் தினமும் வந்து பார்த்து விட்டுச் செல்வாள்.
அங்கு வரும் மற்ற நோயாளிகளுக்கு கோபாலனும் சாரலும் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்தார்கள்.பெற்ற பிள்ளைகளும் உடன்பிறந்தவர்கள் என்று எல்லோரும் இருந்தும் யாரும் கவனிக்காமல் விட்டுச் செல்லும் இக்காலத்தில் யாரென்றே தெரியாத ஒருவனுக்கு அதுவும் ஒரு வார்த்தைக் கூட பேசாதவனை வந்து தினமும் சந்தித்து பேசி சிரித்து விட்டு பக்கத்தில் இருப்பவர்களிடமும் செவிலியரிடமும் அவனை கவனித்துக் கொள்ளுமாறு சொல்லிச் சென்றார்கள்.
பப்புவிற்கு சீக்கிரம் விழிப்பு வர வேண்டும் என்று கோவிலில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள் சாரல்.அய்யர் சாரலிடம் “யாரும்மா அது பப்பு புதுசா இருக்கு ரெண்டு நாளாக தினமும் வந்து அர்ச்சனை செய்யுறே?” என்று விசாரித்தார்.
சாரல் நடந்ததைச் சொன்னவள் “அதனால சீக்கிரம் பப்பு கண்ணு முழிக்கனும்னு நீங்க பூஜை பண்ணும் போது வேண்டிக் கோங்க சாமி” என்று சொன்னாள்.
அய்யர் “தெரியாதவங்க மேல எவ்வளவு அக்கறையா இருக்கேம்மா உனக்கு ரொம்ப நல்ல மனசு” என்றார்.
அதைக் கேட்டு சிரித்த சாரல் “பப்பு சிக்கீரம் முழிக்கனும் அதைவிட நான் கடற்கரையை நல்லா சுத்தனும் ஒரு வாரம் ஆச்சு” என்று கவலையாகச் சொல்லி சென்றாள்.
ஒருநாள் அவன் அருகில் அமர்ந்தவள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.இப்பொழுது அவனுடைய தலையில் இருந்த கட்டை அவிழ்த்து இருந்தார்கள்.அவனையே பார்த்தவள் முதலில் வளர்ந்திருந்த முடியில் சின்னதாக ரெண்டு குடுமியும் பின்னர் முகத்திற்கு பவுடரை பூசி நெற்றியில் பொட்டு வைத்து அவனோடு தன்னையும் வைத்து ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்ததும் அவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது.இவள் இப்படி செய்துக் கொண்டிருந்த கலாட்டாவை பக்கத்தில் உள்ளவர்களும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கே வந்த செவிலியர் இவள் செய்த செயலைப் பார்த்து “சாரல் ஏன் இப்படி செய்தே? பப்பு கண்ணு முழிச்சதும் வருத்தப்படுவார்” என்று கண்டித்துச் சென்றார்.
சாரலும் செவிலியர் சொன்னதால் அதை எல்லாத்தையும் துடைத்து பழையபடி மாற்றினாள்.நாட்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது.
இருபது நாட்கள் கழிந்த நிலையில் தாத்தாவும் சாரலும் எப்போதும் போல் காலையில் பப்புவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தனர்.
இருவரும் உள்ளே நுழையவும் வாசலில் நின்ற செவிலியர் சாரலைப் பார்த்து “சாரல் பப்பு கண்ணு முழிச்சிட்டான் போய் பாரு” என்று சொன்னார்.
அதைக் கேட்ட மகிழ்ச்சியில் “எப்போ?” என்று கேட்டனர்.
செவிலியர் சிரித்துக் கொண்டு “ஒரு மணிநேரமாகுது டாக்டர் இப்போத் தான் செக் பண்ணி அவனை வார்டுக்கு மாத்துனாங்க” என்றதும் தாத்தாவை விட சாரல் தான் துள்ளிக் குதித்து அவனை பார்க்கச் சென்றாள்.
நேராக அவன் இருக்கும் வார்டு படுக்கைச் சென்றாள்.இதுவரை விழிகளை மூடி எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் படுத்து இருப்பவன் இன்றைக்கு எழுந்து சாய்வாக அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்தப்படி அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் சாரல் “பப்பு முழிச்சிட்டியா?” என்று கத்திக் கொண்டே எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வேகமாக அவனது இரண்டு கரங்களையும் தன் கைகளால் பிடித்துக் கொண்டு உலுக்கியபடி குதிக்கத் தொடங்கினாள் சாரல்.
அங்கே நடப்பது ஒன்றும் புரியாமல் அவனோ திருதிருவென்று விழித்தான்.பின்னால் கொஞ்சம் விரைவாக வந்த தாத்தா “பப்பு கண்ணு முழிச்சிட்டியா?” என்று கேட்கவும் சாரல் “தாத்தா பார்த்தீங்களா? பப்பு கண்ணை துறந்துட்டான்.இப்போத் தான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்று அவள் குதூகலித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த பப்பு “ஆமா நீங்க ரெண்டு பேரும் யாரு?” என்று கேட்டான்.
உடனே அதுவரை அவனது கையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தவள் பப்புவின் கரங்களை விட்டவள் “எங்களைப் போய் யாருன்னு கேட்ட பாத்தியா?சரியா போச்சு” என்று தன் தலையில் கை வைத்தாள்.
உடனே அவனோ “நான் யார்னு உங்களுக்கு தெரியுமா?” என்று அடுத்த கேள்வியை அவன் கேட்டான்.பப்பு இப்படி கேட்கவும் இருவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்தனர்.
அப்பொழுது பப்புவை தினமும் கவனிக்கும் செவிலியர் வந்து தாத்தாவிடம் “டாக்டர் உங்க ரெண்டுபேரையும் வரச் சொல்லி இருக்காங்க” என்று சொன்னார்.
உடனே தாத்தா “நீ இங்கே இரு பப்பு நாங்க இதோ வந்துடுறோம்” என்று இருவரும் மருத்துவரை பார்க்கச் சென்றார்கள்.
மருத்துவர் அவர்களை உட்காரச் சொன்னவர் “அவன் பெயரு பப்பு நீங்க வைச்சது தானே?” என்றதும் இருவரும் ஆமாம் என்று தலையசைத்தனர்.
ஒருமணி நேரத்திற்கு முன்னாடி சிஸ்டர் அவரை செக் பண்ண போகும் போது கை,கால்களை அசைச்சு இருக்காரு அதை வைச்சு நாங்க அவரை எழுப்ப முயற்சி செய்தோம்.கண்ணை திறந்து மெதுவாக பேசினாங்க” என்று சொன்னார்.
தாத்தா கொஞ்சம் ஆர்வமாக “அந்த தம்பி தான் யார்னு சொன்னாங்களா ஐயா?” என்று கேட்டார்.
உடனே மருத்துவர் “அவரால பேச முடியுது,பார்க்க முடியுது, ஆனால் தான் யார்னு அவருக்கு தெரியலை,பேரு தெரியலை ஊரு எதுவும் நினைவும் இல்லை. எனக்கு தெரிஞ்சு அவருக்கு சார்ட் டைம் மெமரி லாஸ் அதாவது தலையில் ஏற்பட்ட அடியில மூளை அதிர்ச்சியாகி இருக்குன்னு நினைக்கிறேன்.அதனால தன்னுடைய பழைய நினைவுகளை இழந்துட்டாரு,கொஞ்ச நாட்கள்ல அது திரும்பி வர்ற வாய்ப்பு இருக்கு.நல்ல சாப்பாடு,மனதிற்கு நிம்மதி,அமைதியான சூழல் இதெல்லாம் சுற்றி இருக்கும் போது அமைதியில் நினைவலைகள் திரும்ப ஆரம்பிக்கலாம்.ஆனால் மூளை இனி அது தன்னாலே சரி செய்யுற வரை நாம வெயிட் பண்ணி ஆகனும்” என்றார்.
சாரல் “அப்போ பப்பு இனிமேல் என்ன செய்வான்?எங்கே போய் இருப்பான்?” என்று கவலையாகக் கேட்டாள்.
மருத்துவர் இருவரையும் பார்த்து “அதைப் பத்தி சொல்லத் தான் உங்களை முக்கியமா சந்தித்து பேசனும்னு நினைச்சேன்” என்றார்.
கோபாலன் தாத்தா “என்ன விஷயம் சொல்லுங்க?” என்றார்.
மருத்துவர் “இத்தனை நாளா பப்புக்கு நினைவு இல்லாததால் அவரை நாங்க பார்த்துக் கொண்டோம்.
ஆனால் இனி நாங்க அவரை இங்கே வைத்து கவனிக்க முடியாது,அதனால பப்புவை உங்களோடு அழைச்சுட்டு போங்க பத்து நாளைக்கு ஒரு முறை இங்கே நரம்பு சம்பந்தப்பட்ட டாக்டர் ஒருத்தர் வருவார் அவர்கிட்டே காட்டலாம். பப்புக்கு எப்படி இருபது நாள்ல தன்னால நினைவு வந்து கண்ணை தொறந்து பேசுறாரோ? அதே மாதிரி தன்னுடைய பழைய நினைவுகள் வர்ற வரைக்கும் அவரை நீங்கள் உங்க பாதுகாப்புல பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
இதைக்கேட்டு இருவரும் அமைதியாக இருந்தார்கள்.மருத்துவர் மேலும் “இந்த நிலைமையில் அவரை வெளியே விடுறதும் சரியில்லை.ஏன்னா யாராவது எங்கேயாவது ஏமாத்திட்டா நிலைமை ரொம்ப மோசமாகிடும்.இத்தனை நாளா நீங்களும் நாங்களும் அவரை கவனிச்சுகிட்டது எல்லாம் ஒன்னுமே இல்லாமல் போய்டும் அவருக்கான குடும்பம் நிச்சயம் காத்து இருக்கும்.அதுக்காகத் தானே இத்தனை நாளா கஷ்டப்பட்டோம்,ஆனால் இப்போ அவரை கண்டுக் கொள்ளாமல் விட்டால் நீங்க கஷ்டப்பட்டு காப்பாற்றிய உயிரும் இவ்வளவு நாளாக கவனித்தது எல்லாம் ஒன்னும் இல்லாமல் போய் விடும்” என்று அவனுக்காக பரிந்து பேசினார்.
சில நிமிட யோசனைப் பிறகு கோபாலன் “சரிங்க ஐயா,பப்புவை எங்களோடு அழைச்சுட்டு போறோம்.இனி அவனை நாங்க பார்த்துக்கிறோம்.உனக்கும் சரி தானே மக்கா?” என்று சாரலைப் பார்த்து கேட்டார்.
தாத்தா சொன்னது எதுவாக இருந்தாலும் அதை கண்களை மூடி ஒத்துக் கொள்பவள் இப்போதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சரியென்று ஒப்புக் கொண்டாள்.
மருத்துவர் மிகுந்த மகிழ்ச்சியோடு “ரொம்ப தாங்ஸ் ஐயா,நீங்க மட்டும் தான் எனக்கு ஒரே நம்பிக்கை. பப்புவை போட்டோ போட்டும் இதுவரைக்கும் யாரும் அவரை பத்தி கேட்டு வரலை.அதோடு இன்னும் அவரு சம்பந்தப்பட்ட யாரும் தேடலை போல இருக்கு,இல்லை யாரும் இல்லையான்னும் தெரியலை,ஒரு நோயாளியை நான் குணப்படுத்தினாலும் அவங்க நல்லவிதமா வாழ்ந்தால் தானே நாம செய்யுற கடமை முழுசா சென்றடையும்” என்று சொன்னார்.
தாத்தாவும் சாரலும் எல்லாவற்றிருக்கும் ஆமாம் என்பது போல் தலையசைத்தனர்.சாரல் “பப்புவை எப்போ நாங்க அழைச்சிட்டு போகனும்?” என்று கேட்டாள்.
மருத்துவர் “இரண்டாவது நாள் அழைச்சிட்டு போங்க,அதுக்கு இடையில் அவரு தன்னுடைய தேவைகளை அவரே முடிக்க முயற்சிக்கட்டும்” என்றார்.
தாத்தா “சாப்பாடு என்ன கொடுக்கனும்”
மருத்துவர் “இரண்டு நாளைக்கு லேசான ஆகாரம் கொடுங்க.அப்புறமா நல்ல சாப்பாடு போதும்,கொடுக்கிற மாத்திரையும் மருந்தும் சிகிச்சையும் ரொம்ப முக்கியம்” என்று பல ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பினார்.
தாத்தாவிற்கு தான் செய்தது சரியா? என்று விளங்காமல் யோசனையில் வந்துக் கொண்டிருக்க சாரலுக்கு ஒன்றும் இல்லாத விஷயத்தையே ரேவதி இப்படி பேசுகிறாள்.இதில் பப்புவையும் தங்களோடு அழைத்துச் சென்றாள் என்ன நடக்கும்? என்று அவள் தன் யோசனையில் நடந்தாள்.
இருவரும் திரும்பவும் பப்புவை பார்க்க வந்தனர்.அதுவரை யோசனையில் அமர்ந்து இருந்தவன் இவர்கள் இருவரையும் பார்த்தவன் “சாரல் சாரல் நீ தானே” என்று அவளைப் பார்த்து கேட்டான்.
தாத்தாவைப் பார்த்து “தாத்தா நீங்க தானே எப்பவும் என்கிட்ட பேசுவீங்க நான் கேட்பேன் தெரியுமா?” என்று அவன் காதைக் காட்டி கையை அசைத்து சொல்லவும் இருவரும் நம்ப முடியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர்.
பப்பு தொடர்ந்து “நீ யாரு?” என்று கேட்டான்.
சாரல் திருதிருவென்று விழித்தவள் சட்டென்று “நான் தான் உன்னோட ப்ரெண்ட்” என்று சொன்னாள்.
பப்பு “அப்படியா! எப்போது இருந்து ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கோம்?” என்று கேட்டான்.
சாரல் சிரித்துக் கொண்டே “சின்ன வயசுல இருந்து இருக்கோம்.இப்போ அதெல்லாம் யோசிக்காதே!” என்று சொன்னாள்.அடுத்து அவன் தாத்தாவைப் பார்த்து கேட்பதற்குள் கோபாலன் “நீ என்னுடைய பேரன் சரியா? எப்போதுன்னு கேட்க கூடாது” என்று சொன்னதும் சரியென்று ஒத்துக் கொண்டான்.
சாரல் தாத்தாவை அங்கே உட்கார வைத்து விட்டு அவனுக்கு குடிக்க பாலை வாங்கிக் கொடுத்தாள்.அதை வாங்கியவன் உதட்டுக்கு அருகே கொண்டு முகர்ந்து பார்த்து “எனக்கு வேண்டாம்” என்று கொடுத்தான்.
சாரல் அவனிடம் விடாப்பிடியாக மல்லுக்கட்டி பாலை குடிக்க வைத்தவள் மருந்தையும் கொடுக்கவும் தூங்கி போனான்.
தாத்தா சாரலிடம் மெதுவாக “பப்புவை எங்கே தங்க வைக்கலாம்?” என்று கேட்டார்.
சாரல் “தாத்தா சித்தப்புவோட தங்க வைக்கலாம்.சாப்பாடு நம்ம கொடுத்துக்கலாம்.
யாராவது பப்புவை பத்தி கேட்டால் என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டாள்.
“அவனைப் பத்தி யாருக்கும் தெரியாதுல்ல. அதனால வெளியூர்ல இருக்கிற என் நண்பனோட பேரன் ஊரை சுத்திப் பார்க்க வந்து இருக்கான் கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சொல்லிக்கலாம்.
இல்லைன்னா இந்த ஊர் சனங்க தேவையில்லாததை பேசுவாங்க நாம அதுக்கு பதில் சொல்லியே முடியாது,இப்படி பதில் பேசினால் யாருக்கும் தெரியாது, நம்ம மூணு பேருக்கு தெரிஞ்சதாகவே இருக்கட்டும்” என்று முடிவெடுத்துக் கொண்டார்கள் தாத்தாவும் பேத்தியும்.
அன்றைய இரவு தாத்தா பப்புவுடன் தங்கிக் கொண்டார்.மறுநாள் காலையில் பப்புவிற்கு இட்லியும் கொஞ்சம் கெட்டிச் சட்னியும் எடுத்து வந்தாள்.
தாத்தாவை வீட்டிற்கு அனுப்பி விட்டு அவனை சாப்பிடச் சொல்லி கொடுத்ததற்கு “எனக்கு வேண்டாம்” என்று முகத்தை திருப்பிக் கொண்டான்.
சாரல் எவ்வளவோ சொல்லியும் அவன் மறுத்து பேசவும் வேறு வழியில்லாமல் சாரல் அவனுக்கு ஊட்டி விட்டாள்.அவள் இட்லியை ஊட்டி விட ஆரம்பித்ததும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் கண்ணீர் நிரப்பிக் கொண்டது.
அதைப் பார்த்து சாரல் “ஏன் அழுற மாதிரி இருக்கே பப்பு? என்னாச்சு?” என்று கேட்டாள்.
அவனோ “தெரியலை சாரல்” என்றதும் தன் அணிந்திருந்த துப்பட்டாவை லேசாக நீட்டியவள் “சரி சரி சீக்கிரம் காரணம் தெரிஞ்சுடும் கண்ணைத் துடை” என்றாள்.
அவனும் சிறுபிள்ளை போல் அவள் சொன்னதை அப்படியே அச்சு பிறழாமல் செய்தான்.
சாரல் அவனைப் பற்றி அறிந்துக் கொள்ளவும் நினைவு ஏற்படுவதற்கும் “உனக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்டாள்.
அவனோ ரொம்ப நேரம் யோசித்தான். எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.அதனால் “உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்” என்று அதே கேள்வியை சாரலைப் பார்த்து திரும்ப கேட்டான்.
சாரல் மெலிதாக புன்னகைத்துக் கொண்டவள் “எனக்கு மீன் குழம்புன்னா ரொம்ப பிடிக்கும். ஏன்னு தெரியுமா? என் தாத்தா எனக்காக ஆசையா பிடிச்சிட்டு வர மீனை சால்னால போட்டு நல்லா புளிப்பும் காரமும் வைச்சு தந்தா சூப்பரா இருக்கும்” என்று சொன்னாள்.
அவள் சொல்வதை ஆச்சரியமாக கேட்டவன் “எனக்கும் அதே போல செய்து தருவியா?” என்று கேட்டான்.
“ம்ம்… இனி எங்க வீட்டுக்குத் தானே வரப்போறே பப்பு கட்டாயம் செஞ்சு தரேன்” என்றாள்.அவனும் சரியென்பது போல் தலையசைத்தான்.
மாலையில் வீட்டிலிருந்து சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த சாரலிடம் ரேவதி வந்தவள் “இன்னைக்கு ஹாஸ்பிடல் போகலையா? ஏன் என்னாச்சு?” என்று விசாரித்தாள்.
சாரல் “அந்த ஆளை அவன் வீட்ல உள்ளவங்களை வந்து கூடிட்டு போய்ட்டாங்க” என்று பொய் சொன்னாள்?
ரேவதி சாரல் சொன்னதை நம்பாமல் “ஏன் கடல்ல விழுந்து தற்கொலை செய்ய பார்த்தானாம்?” என்றதும்
“ஏதோ குடும்ப பிரச்சினை போல அதான் இப்படி நடந்துகிட்டானாம்”
சாரல் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ரேவதி “என்ன சாரல் சாப்பாடு நல்ல பலமா இருக்கு யாரு வர்றாங்க?” என்று கேட்டாள்.
“தாத்தாவோட ப்ரெண்ட் பேரன் ஊருல இருந்து வர்றாங்க அதனால தாத்தா கறி எடுத்து சமைக்கச் சொன்னாங்க” என்றாள்.
“இங்கே வந்துட்டு எப்போ பயணம்?”
“தெரியலை கொஞ்ச நாளைக்கு இங்கேத்தான் இருப்பாங்களாம்”
“ஓ… அப்படியா! இங்கே உங்களோடு தங்க வைக்க போறீங்களா?”
“இல்லை குமார் சித்தப்புவோட தங்க வைக்கனும்னு தாத்தா சொன்னாங்க சாப்பாடு மட்டும் எங்களோடு என்று சொன்னாங்க”
“எப்போ வருவாங்க?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க, நீ கொஞ்சோம் நெய் சோறு சாப்பிட்டுட்டு போ” என்று அவளுக்கு நெய் சோறும் கறி சால்னாவும்,நாலைந்து காய்களும் கொஞ்சம் ஆட்டுக்கறி முள்ளும் போட்ட தால்சாவும் கொடுத்தவள் ரேவதி வயிறார சாப்பிட்டு முடித்தாள்.
பப்புவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகனும் என்றதும் ஒருநாள் முன்னர் தாத்தாவும் பேத்தியும் துணிக்கடைக்குச் சென்று அவனுக்கு புதிதாக நாலு செட் பேண்ட் சட்டை வாங்கி அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு அவனிடம் கொடுத்தார்கள்.பப்புவும் இது தனக்கானது என்று வாங்கி வைத்துக் கொண்டான்.
Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.