வணக்கம் மேம் கதைக்கான அடுத்த அத்தியாயம்
உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -16
கோபாலன் தாத்தா ராகவனிடம் “குமார் வேற என்ன சொன்னான்?” என்று கேட்டான்.
ராகவன் “சித்தப்பு கால்ல நல்ல அடியாம்.மாவுக்கட்டு போட்டு இருக்குன்னு சொன்னாரு.அவருடைய போனை காணாம போய்டுச்சாம்.அவரு இருக்கிற ஹாஸ்பிடல் போய் நான் பார்க்கிறேன்” என்றான்.
ராகவனிடம் பப்பு பற்றி என்ன சொல்லி விசாரிக்க? என்று சாரல் யோசித்துக் கொண்டிருக்கும் போது ரேவதி “ராகவன் பப்புவை தேடிப் பாருங்க,ஏற்கனவே அவன் எல்லாத்தையும் மறந்து போய் இருக்கான்.அப்புறம் எங்கேயாவது பிரச்சினைல மாட்டிக்க போறான்” என்று பதற்றமாகச் சொன்னாள்.
இதைக் கேட்டதும் சாரலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.எல்லோருக்கும் பப்புவின் நிலைமையைப் பற்றி தெரியுமா? அதனால் தான் ராகவன் அன்றைக்கு தன் மேல் கோபம் கொண்டானா? என்று யோசித்தாள்.
சாரலைப் பார்த்த ராகவன் “அவனை எப்படியும் கண்டுபிடிச்சி கூடிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு வேகமாகச் சென்றான்.
சாரலுக்கு விழிகளில் கண்ணீர் நிறைத்துக் கொண்டது.தன் மேல் உண்மையான அக்கறையும் பாசமும் கொண்டவர்கள் தான் எல்லாமும் ஆக இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டாள்.
ஆனால் ராகவன் நேரில் சென்று எங்கு தேடியும் பப்புவை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. அப்போது காணாமல் போனவன் இரண்டு வருடம் கழித்து நினைவு திரும்பி தன்னை தேடி வந்திருப்பவனை இப்போது நினைத்து நொந்துக் கொண்டாள் சாரல்.
*****
காலையில் வேலைக்குச் சென்றவன் இரவு எல்லாவற்றையும் முடித்து வந்த ராகவன் “சாரல் இரண்டு நாட்கள் கழித்து மாலையில் நாம எல்லோரும் ஊருக்கு போறோம்.டிக்கெட் எடுத்துட்டேன்.துணி எல்லாத்தையும் எடுத்து வைங்க” என்றான்.
சாரல் விருப்பமே இல்லாமல் தேவையான துணிகளை எடுத்து வைத்தாள்.முதலில் விதுனுடைய துணிகளை பெட்டியில் எடுத்து அடுக்கினாள்.அதைப் பார்த்த ராகவன் “உன்னுடைய துணி எங்கே?”
“இதோ இரண்டு செட் வைச்சு இருக்கேன் போதும்” என்றாள்.
அவனோ விடாப்பிடியாக அவளுடைய அறையில் இருந்த கொஞ்சம் பார்வையாக இருந்த மூன்று சுடிதார் துணிகளையும் கட்டாயப்படுத்தி எடுத்து வைத்தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை இரயில் நிலையத்திற்கு சென்று இரயிலில் ஏறி பயணம் புறப்பட்டனர்.மறுநாள் விடியற்காலையில் மூவரும் தேங்காய்பட்டினம் வந்து இறங்கினார்கள்.
இரண்டு வருடம் கழித்து ஊருக்கு வருவது சாரலுக்கு புதிய அனுபவமாக இருந்தது.எந்த ஊரையும் மண்ணையும் நேசித்து வாழ்ந்தாளோ அதே ஊரை வெறுத்து சென்று விட்டு திரும்பவும் அதே மண்ணிற்கு வருவது சோகமும் மகிழ்ச்சியும் கலந்த ஒருவிதமான மனநிலையை அவள் அனுபவித்தாள்.
சில்லென்று எப்போதும் அவளை அணைத்து அரவணைக்கும் அந்த கடல்காற்று இப்போதும் அதே போல் சாரலை வரவேற்றது.எப்போது இல்லாத ஒரு புதிய உத்வேகம் அவளை தொற்றிக் கொண்டது.
எல்லா மனநிலை அவள் அனுபவித்தாலும் பழைய நினைவுகளும் சாரலை கலங்கடித்தது.சாரலின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்
காலையில் பார்த்த ஊரில் இருந்த தெரிந்த முகங்கள் எல்லாம் மூவரையும் நலம் விசாரித்து சென்றனர்.அவர்கள் யாரும் சாரலை வித்தியாசமாக பார்க்கவில்லை.அதுவே சாரலுக்கு ஒருவித நிம்மதியைத் தந்தது.
விதுன் கடலைப் பார்த்து “ப்பா கடல் எவ்ளோ பெரிசா இருக்குல்ல” என்று பிரமிப்பாய் சொன்னான்.
சாரலோ “ரொம்ப பெரிசு தான் அதே மாதிரி இந்த கடல்கிட்டே நிறைய கதைகளும் இருக்கு” என்று சொன்னாள்.
அவள் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கடலும் அமைதியாக பார்த்துக் கொண்டு தானே இருந்தது.அதை நினைத்து அவள் சொன்னாள்.
சாரலுக்கு ரேவதியின் நினைவுகள் வந்து போயின.அவள் ஒவ்வொரு பாதையை தனியாக நடந்துச் செல்லும் போது அவள் நினைவுகளோ ரேவதியுடன் நடந்து போனதை எண்ணியது.
அவள் இருந்த தெருபக்கம் வரவும் நெஞ்சம் ஒருவித பதற்றத்தை தொற்றிக் கொண்டது.அவள் இது தான் மொத்த உலகம் என்று வாழ்ந்தவளுக்கு இன்று யாரும் பார்க்காமல் கேட்பாரற்று கிடக்கும் தன் வீட்டை பார்க்க அவள் மனம் விரும்பவில்லை.
விழிகளில் கண்ணீரை நிரப்பிக் கொண்டே ராகவன் வீட்டுப்பக்கம் நின்று கொஞ்சம் தள்ளி இருந்த தன் வீட்டை மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
வீடு சுத்தம் செய்து புதிதாக பூச்சு வேலையும் நடந்து இருக்கிறது என்பதை பார்த்து அறிந்துக் கொண்டவளுக்கு யாரு வீட்டை சரி செய்தது என்ற ஆவல் அவள் மனதில் தோன்றியது.
ராகவனும் அதைப் பார்த்தான்.
மூவரும் வாசலுக்கு வரவும் ராகவனின் தந்தை வந்து மூவரையும் வரவேற்று உள்ளே அழைத்தார்.
முதலில் நலம் விசாரிப்புகள் நடந்தது.அடுத்து ராகவன் “தாத்தா வீட்ல யாரு இருக்காங்க?” என்று கேட்டான்.
“செல்லம்மா கிட்டே தானே அந்த வீட்டோட சாவி இருக்கு.கோபாலன் தாத்தாவுடைய மகன் வந்து எவ்வளவோ சண்டை போட்டு வீட்டை வாங்க முயற்சி பண்ணாரு.ஆனால் தாத்தா ரொம்ப உசாரு. அதை சாரலோட அம்மா பேருல ரிஜிஸ்டர் செய்து அது அடுத்து சாரலுக்கு தான் ஏற்பாடு செய்து வைச்சு இருக்காப்ல.அதோட தாத்தாவோட படகையும் சேர்த்து செல்லம்மா தான் பார்த்துட்டு இருக்கு.குமார் சாவி கேட்டானாம் யாரையோ தங்க வைக்கிறதுக்குதுன்னு சொன்னாங்க. அடுத்து பார்த்தால் வீட்டுல பூச்சு வேலை நடந்து இப்போ பளபளன்னு மின்னுது” என்று சொல்லி சிரித்தார்.
அவர் சொல்வதை எல்லாம் சாரல் ரொம்ப கவனமாகக் கேட்டாள்.ராகவனின் தந்தை சாரலிடம் “நான் வேணும்னா செல்லம்மாகிட்டே நீ வீட்டுக்கு வந்து இருக்கேன்னு சொல்லட்டுமா? போய் வீட்டை பார்த்துட்டு வாயேன்” என்றார்.
சாரல் வேகமாக மறுத்து “இப்போ வேணாம் மாமா இன்னொருநாள் பார்த்துக்கலாம்” என்றாள்.
விதுன் சாரலைப் பார்த்து “சாரல் வா பீச்சுக்கு போலாம் ப்ளீஸ் போலாம்” என்று அவளைப் பிடித்து இழுத்தான்.
சாரல் “இப்போ வேண்டாம் விதுன்.சாயங்காலமா போகலாம்” என்றாள்.
அவனும் ஒத்துக் கொண்டான்.சாரலுக்கு தனிஅறை கொடுத்து இருந்தார்கள்.அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.
அவள் ஆடி,ஓடி விளையாடி எப்போதும் அங்கும் இங்குமாக எல்லோரும் நடநந்துக் கொண்டும் பேச்சு சத்தமாக இருக்கும்.ஆனால் இன்றோ தெருவே வெறிச்சோடி காணப்பட்டது.
காலையில் தேநீரும் அவளுக்கு பிடித்த இட்லியும் மீன் குழம்பும் கொடுத்தார்கள்.சாப்பிட்டு அமைதியாக அந்த அறையிலேயே இருந்துக் கொண்டாள்.
ராகவனின் அம்மா அவனிடம் “இன்னும் எத்தனை நாட்களுக்கு இவளை இப்படியே பார்த்துட்டு இருக்கப் போறியா? உன் வாழ்க்கையை பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார்.
ராகவன் “அம்மா நீங்க இப்படி பேசுவீங்கன்னு தெரிஞ்சு தான் நான்ஊருக்கு வர்றது இல்லை” என்று சலித்துக் கொண்டான்.
ராகவனின் அம்மா விடாமல் “இப்போ எதுவும் தெரியாது.நாளைக்கு வயசாகும் போது துணைன்னு ஒன்னு வேணும் கண்ணா, அதுக்காகத் தானே சொல்றேன்” என்று சொன்னார்.
ராகவன் சாரலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனது தாய் “உனக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னா சாரலையே கட்டிக்கோ” என்றார்.
ராகவன் இப்போது எந்த பதிலும் சொல்லாமல் தன் அம்மாவைப் பார்த்தான்.
அவரோ “உன் மனசுல உள்ள எண்ணம் எனக்குத் தெரியும் ராகவா.அன்னைக்கு இந்த ஊரே சாரலை தப்பா பேசினப்போ நீ மட்டும் தான் அவளுக்கு ஆதரவாக இருந்தே.அதோட அன்றைக்கு சாரல் யாருமே இல்லாம தனியா இருந்தப் போதும்.நீ தான் அவளுக்கு துணையாக இருந்தேன்னு தெரியும்.
நாங்க ரேவதியை முதல்ல பேசி முடிச்சிட்டோம்னு நீ எங்க மேல கோபமா இருந்தது எனக்கு இன்றைக்கும் நினைவு இருக்கு.அன்னைக்கே உனக்கு சாரலைப் பிடிச்சி இருக்கு என்று சொல்லி இருந்தால் இந்நேரம் அவளோடு சந்தோஷமா இருந்திருப்பே.இப்போ என்ன நான் வேணும்னா சாரல்கிட்டே உனக்காக பேசட்டுமா?” என்று கேட்டார்.
ராகவன் “இல்லை இப்போ சரியா வராது.நானே அவகிட்ட பேசிக்கிறேன்” என்றான்.
சாரலுக்கு அன்று நடந்த நினைவுகள் எல்லாம் திரும்பவும் தோன்ற ஆரம்பித்தது.
ராகவன் வந்து பப்புவை காணாமல் போன விஷயத்தை தாத்தாவிடமும் சாரலிடமும் சொன்னான்.
சாரல் பப்புவோடு இருந்தது.தாத்தா பேசி முடித்த மாப்பிள்ளை வீட்டாருக்கும் தெரிய வந்தது.அதனால் அவர்கள் திருமணத்தை நடத்த யோசித்தார்கள்.
ஆனால் கோபாலன் தாத்தா வரதட்சணை அதிகமாக கொடுக்கிறேன் என்று சொல்லவும் அவர்கள் சாரலை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு தான் பிரச்சினை ஆரம்பித்தது.அந்த மாப்பிள்ளை வீட்டில் உள்ளவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள்,சீர் என்று எல்லாமே கேட்டார்கள்.
சாரல் தாத்தாவிடம் ஒருவார்த்தை எதிர்த்து பேசாமல் எல்லாவற்றிருக்கும் சரியென்பது போல் அமைதியாக இருந்தாள்.ஆனால் இரவானதும் பப்புவை எண்ணியும் தன் விருப்பம் இல்லாமல் நடக்கப்போகும் திருமணத்தை நினைத்து வருந்தினாள்.
அதுதான் கோபாலனின் மனதை உடைக்க ஆரம்பித்தது.தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தான் பேச்சிற்காக அமைதியாக இருக்கும் பேத்தியை கவனிக்கத் தொடங்கினார்.
தாத்தாவின் முன்பு அவள் எப்போதும் போல் இருந்துக் கொண்டாள்.ஆனால் சாரல் தன்னைத் தானே வருத்திக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார் கோபாலன்.
அதே போல் அவரின் பேசி முடித்த மாப்பிள்ளை வீட்டிலும் சாரலை விட தாத்தா கொடுக்கப் போகிற வரதட்சணைக்குத் தான் மதிப்பு இருக்கிறது என்று அவர்களின் பேச்சில் புரிந்துக் கொண்டார் கோபாலன்.
பப்புவிடம் இருந்து சாரலை தான் பாதுகாக்கிறேன் என்று எண்ணியவர் மனதில் இப்போது தானே சாரலின் வாழ்க்கையை நாசமாக்குகிறோம் என்று எண்ணினார்.அதே போல் பப்புவும் இந்நேரம் காணாமல் போகவும் என்ன செய்வதென்று தெரியாத மனநிலையில் தனக்குள்ளே அதைப் பற்றி எண்ணி எண்ணியே வேதனை அடைந்தார்.
இத்தனை வருட வாழ்க்கையில் எல்லாவற்றையும் பேசி சிரித்து எல்லோரிடமும் வெளிப்படையாக பழகி அதுவும் கடைசி இருபது வருடமாக சின்ன விஷயத்தைக் கூட சாரலிடம் சொல்லி சிரித்து அழுது,வருத்தப்பட்டு வாழ்ந்தவருக்கு கடைசியில் எல்லாவற்றையும் தனக்குள்ளே பூட்டி வைத்த இரண்டே மாதத்திலான அந்த அழுத்தத்தில் ஒருநாள் தன் உயிரையும் விட்டார் கோபாலன்.
தாத்தாவின் மனதில் உள்ள விஷயத்தை அறியாத சாரல் தான் செய்த காதல் மற்றும் தவறால் தான் தாத்தா இறந்து விட்டார் என்று எண்ணினாள்.அதனால் இனிமேல் பப்பு இல்லை யாராக இருந்தாலும் திருமணமே செய்யாமல் வாழ வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
தாத்தா ஆரம்பத்தில் பேசும் போது தற்கொலை செய்வது பெரிய பாவம் என்றும் அவளே நிறைய ஆட்களை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதால் அந்த காரியத்தை செய்யாமல் தைரியமாக இருந்தாள்.
ஆனால் சாரலை சுற்றியிருந்த சூழ்நிலை வேறாக இருந்தது.கோபாலனுக்கு பயந்து அந்த ஊரில் உள்ளவர்கள் சாரலை விட்டு வைத்தவர்கள் அவர் இறந்த அன்றைக்கே அந்த உடல் இருக்கும் போதே எல்லோரும் சாரலை கேவலமாகப் பேசினார்கள்.
அதிலும் சாரலின் தாய் மாமன்களும் அவர்களது குடும்பமும் எங்கே சாரலைத் தங்கள் தலையில் யாரிடமாவது பொறுப்பைக் கொடுத்து அவளை பார்க்க வேண்டிய நிலைமை வந்து விடுமோ? என்று எண்ணி மூன்றாவது நாள் காரியம் முடிவதற்குள்ளேயே சாரல் எது செய்தாலும் அவளை வேதனைப்படுத்தினார்கள்.
இதற்கு மேல் இங்கிருந்து அவமானம் படுவதை விட வேற எங்கேயாவது சென்று விடலாம் என்று யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் சாரல்.
சாரல் எந்த ஊருக்கு செல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதை ராகவன் அவளை பேருந்து நிறுத்தத்தில் கண்டு அவளிடம் நிறைய பேசி தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டு அவளுக்கு ஒரு கடையில் வேலையும் வாங்கி கொடுத்தான் ராகவன்.
இதைப் பற்றி ஊரில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று சாரல் கேட்டுக் கொண்டதால் அவன் ரேவதியிடமும் சொல்லவில்லை.
தன் தோழியும் சகோதரியுமாக இருந்த சாரலின் வாழ்வில் நடந்த முடிவுகளால் ரேவதி மனமுடைந்து போனாள்.இருந்தாலும் சாரல் எங்கேயாவது வாழ்ந்தாலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தாள்.
ஆனால் விதி ரேவதி வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.ஏழாவது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியில்லை என்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஆலோசித்தனர்.
அதன்படி அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக அளவு இரத்த போக்கினால் ரேவதி இறந்து போனாள்.குழந்தையும் இறந்தே பிறந்தது.
இலட்சத்தில் ஒருவருக்கு இது போல் நடைபெறும்.அது அன்பாக எல்லோரையும் நேசித்த உள்ளமும் சாரலின் பாசம் கொண்ட உயிர்கள் எல்லாம் இந்த உலகத்தில் மொத்தமுமாக காணாமல் போனது.
ரேவதியின் இறுதி சடங்கிற்கு வந்தவள் அவள் இந்த வீட்டை வெளியேறும் போது அவளும் அங்கிருந்து சென்றாள்.
பின்பு ராகவன் தன் குழந்தையை தனியாக அவனே கவனித்துக் கொள்வதாகவும் அவனுக்கு உதவியாக சாரலிடம் கேட்டாள்.முதலில் பகல் முழுவதும் அவனைப் பார்த்துக் கொண்டு இரவில் விடுதி செல்வாள்.
ஆனால் விதுனிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது சாரல் இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது.அதனால் அவனோடு தங்கி இருந்து குழந்தை வளர்க்க உதவினாள் சாரல்.
நடந்ததை எல்லாம் எண்ணியவள் அப்படியே தூங்கிப் போனாள்.
பின்னர். மதிய உணவு சாப்பிட்டு முடித்து விட்டு மூவரும் செல்லம்மாவை பார்க்கச் சென்றார்கள்.
சாரலைக் கண்டவர் எதுவும் பேசவில்லை.அமைதியாக இருந்தார்.ராகவன் தான் “அத்தை” என்று பேச வரும் போது செல்லம்மா “இப்போ எதுக்கு இந்த ஓடிப் போனவளை திரும்ப இங்கே கூடிட்டு வந்தே? இன்னும் இந்த ஊர்ல அசிங்கப்படணும்னா?” என்று கேட்டார்.
ராகவன் “அத்தை கோபப்படாதீங்க நான் சொல்றதை முழுசா கேளுங்க” என்று அவன் சமாதானம் செய்ய வந்தான்.
ஆனால் செல்லம்மா “நன்றி கெட்டவள்.பாசமே இல்லாதவள்,சின்ன குழந்தையிலிருந்து அவளை பொத்தி பொத்தி என் சித்தப்பாவோடு வளர்த்தேன்.என்கிட்ட என்ன நிலைமைன்னு சொல்லி இருந்தால் அவளுக்கு நான் துணையாக இருக்க மாட்டேனா? ஏதோ அநாதை மாதிரி ஓடிட்டாள்.நன்றி கெட்டவள்” என்று சாரலை திட்டியபடியே அழுதார்.
அவரின் அன்பை சரியாக புரிந்துக் கொள்ளாத சாரல் இப்போது அவர் பேசுவதின் மூலம் தான் செய்த தவறை உணர்ந்தவள் செல்லம்மாவின் அருகில் போய் அவரது கையைப் பிடித்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
சில நேரங்களில் நாம் உண்மையான அன்பையும் அக்கறையும் வைத்திருப்பவர்களின் நிலையை காலம் கடந்து தான் தெரிந்துக் கொள்கிறோம்.
அப்படித்தான் செல்லம்மா சாரல் மேல் வைத்திருந்த உண்மையான அக்கறையை இப்போது புரிந்துக் கொண்டாள்.
சாரல் “என்னை மன்னிச்சிடுங்க சித்தி.அன்னைக்கு நான் உங்ககிட்டே சொல்லிட்டு போய் இருக்கனும்.ஏற்கனவே தாத்தாவை மனவேதனை அடைய வைச்சு கொன்னுட்டோமேன்னு நான் வருத்தத்தில் இருந்தேன்.
அதான் உங்களுக்கும் ரேவதிக்கும் அதே கஷ்டத்தை கொடுக்க வேண்டாம்னு தான் போய்ட்டேன்” என்று அழுதாள்.
செல்லம்மா “எப்பவும் பெற்றவங்க அவங்க குழந்தைகளை பாரமாக நினைக்க மாட்டாங்க சாரல்.ரேவதியை போல நீயும் எனக்கு மகள் தான்.அன்றைக்கு ரேவதி நீ பப்புவை விரும்புறேன்னு சொன்னதும் உனக்காக பேச வந்ததே நான் தான்.அதனால தேவையில்லாத விஷயங்களை எண்ணி உன்னை நீயே வருத்திக்காதே சாரல்” என்று அவரும் சாரலுக்கு ஆதரவாகப் பேசினார்.
சாரலுக்கு நடப்பது எல்லாமே கனவாகத் தோன்றியது.எந்த ஊருக்கு தான் வந்தால் வருந்துவோம் என்று நினைத்தாளோ இப்பொழுது அந்த இடமே அவளுக்கு
திரும்ப ஆறுதலை தரத் தொடங்கியது.
விதுன் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தான்.அதனால் சாரல் முதலில் விதுனை அழைத்துக் கொண்டு கடலுக்குச் சென்றாள்.
கடற்கரை நெருங்கி நெருங்கி நடக்கும் போது அவள் விழிகளில் தன்னை அறியாமலேயே கண்ணீர் நிரப்பிக் கொண்டது.
அந்த அலைகளின் பேரிச்சல் அவளுக்கு தாய் வீடு வந்த உணர்வு.கடலலையில் அவளின் பாதங்கள் படவும் அவளின் தாத்தாவும் அம்மாவும் சாரலை அணைத்தது போல் ஒரு உணர்வு.
அதை அவள் விழிகளை மூடி உணர்ந்துக் கொள்ளும் தருணம் அவளுக்கு அருகினில் ரொம்ப ஆதரவாக அதே நேரம் யாரோ நிற்பதை உணர்ந்து கண்களைத் திறந்தாள்.
அவளுக்கு மிக நெருக்கமாக தனிமையில் உணர்ந்தவளுக்கு இணைவாக அங்கே ஆதித்யா முகத்தில் புன்னகையோடு நின்றான்.அதை பார்த்தவள் அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.
Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.