வணக்கம் மேம் கதைக்கான அடுத்த எபி
உன்னிடத்தில் மனம் மயங்குதே அத்தியாயம் -19
இருள் எவ்வளவு அடர்ந்திருந்தாலும் விடியல் வராமல் போகாது.உங்கள் தற்போதைய வலியும் நிரந்தனமானது அல்ல.
இதுவும் கடந்து போகும்.
சாரல் ஆதித்யாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று கண்விழித்தான் ஆதித்யா.இதை எதிர் பார்க்காத சாரல் என்னசெய்வதென்று தெரியாமல் விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளது செயலை நினைத்து மனதிற்குள் சிரித்தவன் வெளியே “சாரல் சாரல்” என்று அழைத்தான்.
இவளும் ஒன்றுமே தெரியாதது போல் விழிகளைத் திறந்து அவனை பார்த்தாள்.
“உனக்கு சாப்பாடு வந்திடுச்சு நீ நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தே அதான் எழுப்பலை. இந்தா சாப்பிடு” என்று ஒரு சிறிய பையைக் கொடுத்தான்.
அதை வாங்கியவள் திறந்துப் பார்த்தாள்.உள்ளே ஒரு பாட்டில் பழச்சாறும் சான்ட்விச் மற்றும் சில நொறுக்குத் தீனியும் இருந்தது.
அதைப் பார்த்து ஆச்சரியமாக “இந்த நேரம் எப்படி சாப்பாடு இங்கே வந்தது?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
ஆதி “இந்த டிரெயின்ல நாம டிக்கெட் புக் பண்ணும் போது சாப்பாடும் சேர்த்து ஆர்டர் செய்தால் வந்திடும்” என்றான்.
“ஓ அப்படியா! இப்படிக் கூட இருக்கா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
இதுவரை அவள் வாழ்ந்த கடற்ரை சார்ந்த வாழ்வில் இதைப் பற்றி அவள் தெரிய வேண்டியது இல்லை.ஆனால் ராகவன் தற்போதைய வசதிகளைப் பற்றி அவளுக்கு அவன் சொல்லிக் கொடுத்ததும் இல்லை.சாரல் தெரிந்துக் கொள்ளவும் இல்லை என்பது புரிந்தது.
சாப்பிட்டு முடித்து அவள் அப்பொழுது தான் சுற்றும் முற்றும் பார்த்தாள்.அந்த இரயில் வித்தியாசமாகவும் அதே நேரம் மிகவும் நவீனமாக இருந்தது.இரயில் செல்லும் வேகம் மூடியிருந்த ஜன்னலின் வழியே அவளால் உணர முடிந்தது.
இரவு ஒரு மணிக்கு ஏறிய வண்டியில் காலை எட்டு மணிக்கு இருவரும் பெங்களூருக்கு வந்து இருந்தனர்.
இரயில்வே நிலையத்திலிருந்து வெளியே வந்து பார்த்த பொழுது அந்த நகரமே ரொம்ப பரபரப்பாக இருந்தது.எல்லோரும் வேறுமொழி பேசுபவர்களும் இருந்தார்கள்.
சாரல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்.இதற்கு இடையில் செல்லம்மாவிற்கும் சித்தப்புவிடமும் சாரலை தன்னோடு தன் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அவளைப் பற்றி இனி கவலைக் கொள்ள வேண்டாம் எனவும் ராகவனுக்கு சாரலைப் பற்றி எதுவும் தெரிய வேண்டாம் என்று சொல்லி வைத்தான்.
மேலும் தன்னுடைய பொருட்களை கொரியரில் அனுப்பி விடுமாறு சித்தப்புவிடம் சொல்ல அவரும் சரியென்று சொன்னார்.
ஆதித்யா தனது கார் ஓட்டுநரை ஏற்கனவே வரச் சொல்லி இருந்ததால் அவரும் அங்கே வந்து இருக்க இருவரும் வண்டில் ஏறி பயணிக்க ஆரம்பித்தனர்.
சாரல் அந்த காரையே ஆச்சரியமாக பார்த்தாள்.அதன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.ஆதியிடம் எதுவும் பேசாமல் காரின் ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
அரைமணிநேர பயணத்திற்கு பிறகு மேல்தட்டு மக்கள் வசிக்கும் வானளவு உயர்ந்த கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு ஆதித்யாவின் கார் நுழைந்தது.
அங்கே தனியாக இருந்த ஒரு வீட்டிற்குள் நுழையவும் போது அங்கிருந்த காவலாளி கதவை திறந்துக் விட்டான்.
ஓட்டுநர் காரின் கதவை திறக்கவும் ஆதித்யா இறங்கினான்.அவன் சாரலைப் பார்த்து “இறங்கு சாரல் வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்தான்.
அவளது விழிகள் அங்கிருந்த இடங்களை சுற்றி ஒரு பார்வை இட்டது.தானியங்கி கதவில் அவனது கடவுச் சொல்லை போடவும் கதவு திறந்துக் கொண்டது.
சாரல் மெதுவாக ஆதித்யாவிடம் “இந்த வீட்டுக்கு சாவி தேவை இல்லையா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.
அவனோ “தேவையில்லை போன்ல போடுற மாதிரி பாஸ்வேர்ட் போட்டால் போதும். கதவு திறந்துக் கொள்ளும் அப்புறமா உனக்கும் சொல்லித் தரேன்.நீயும் யூஸ் பண்ணிக்க ஈஸியா இருக்கும்” என்றான்.
உடனே சாரல் “நான் இங்கே உன்கூட தங்க மாட்டேன்.நான் தனியா இருந்துக்கிறேன்” என்று சொன்னவள் மனதினுள் ‘இவன் வீட்டுக்குள்ளே யாரெல்லாம் இருப்பாங்கன்னு தெரியலை.இதுல ஒரே வீட்ல தங்கனுமா எப்படி?என்று எண்ணிக் கொண்டாள்.
அவனும் மறுப்பு சொல்லாமல் “சரி அது உன் இஷ்டம்.வேற நல்ல இடமா தேடுற வரைக்கும் இங்கே இருந்து தானே ஆகனும்” என்றான்.
சாரலால் இதற்கு பதில் சொல்ல இயலவில்லை.
வாசலில் நின்றே இருவரும் பேசி முடித்து கதவை திறக்கவும் ஒருநீண்ட பெரிய வரவேற்பறை அங்கே விலையுயர்ந்த இருக்கைகள்,கண்ணாடியிலான அலங்காரப் பொருட்கள் என்று எல்லாமே இருந்தது.
அங்கே நேராக ஒரு வயதான பெண்மணியின் புகைப்படம் இருந்தது.அதைக் காட்டி “இவங்க தான் என்னோட பாட்டி.என் அம்மா இறந்த பிறகு பாட்டி தான் எனக்கு எல்லாமே என்னை வளர்த்து என்னை ஆளாக்கியது.இந்த வீட்டை எனக்காக கொடுத்து இருக்காங்க.சாரல் உனக்கு எப்படி உன் தாத்தா தான் எல்லாமாக இருந்தாங்களோ அதே மாதிரி எனக்கு பாட்டி தான் எல்லாம் செய்தாங்க” என்றான்.
சாரல் மெதுவாக “அப்பா எங்கே?” என்று கேட்டாள்.
“அப்பா அவருடைய குடும்பத்தோடு இருக்காரு” என்று முடித்துக் கொண்டான்.சாரலுக்கு ஆதித்யா எந்த உறவும் இல்லாமல் தனியாக இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டாள்.
நேராக இருந்த அறையைக் காட்டி “இது என்னுடைய அறை.நான் இங்கே தான் இருப்பேன்.இன்னொரு அறையைக் காட்டி “இது கெஸ்ட் வந்தால் தங்க வைக்கிற ரூம் நீ இங்கே இருந்துக்கோ,இது சமையலறை” என்று வீட்டைச் சுற்றிக் காட்டினான்.
சாரலுக்கு ஒன்றுமே புரியவில்லை.இவ்வளவு வசதிகள் இருப்பவன் தேங்காய்பட்டினத்தில் எப்படி அவ்வளவு எளிமையாக தங்களின் குடும்பத்தில் ஒருவனாகவே வாழ்ந்ததை எண்ணி அவளுக்கு வியப்பாக இருந்தது.
சாரலை அங்கே விட்டுச் சென்று நேராக தன் அறைக்குப் போய் கையில் சில துணிகளோடு வந்தான்.
சாரல் “இதுல ரெண்டு டிரெஸ்ஸீம் டவலும் இருக்கு. போய் குளிச்சிட்டு வா,டிரெஸ் நீ போடுற மாதிரி இல்லை பேண்ட் டிசர்ட் தான் இப்போதைக்கு இதை போட்டுக்கோ. நான் போட்ட டிரெஸ் நினைக்காதே! புதுசு தான்.சாயங்காலம் கடைக்குப் போய் உனக்கு ஏத்த மாதிரி எடுக்கலாம்” என்றான்.
உடனே சாரல் “நீ வாங்கித் தர எல்லாத்தையும் கணக்கு வைச்சு திரும்ப அதுக்கான பணத்தை உனக்கு திருப்பி தந்துடுறேன்” என்றாள்.
அவனோ “அப்போ டிரெயின்ல வரும் போது டிக்கெட் போட்டேன்ல அதுல இருந்து கணக்கு வைச்சுக்கோ சரியா?” என்று சொன்னான்.
ஆதி சொன்ன பதிலில் கடுப்பானவள் வாய்குள்ளே மெதுவாக “எவ்வளவு திமிரு எப்படி கணக்கு சொல்றான்னு பாரு” என்று புலம்பிக் கொண்டே சென்றாள்.
அவள் குளித்து முடித்து வெளியே வரும் போது வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்டது.
சாரல் மெதுவாக எட்டிப் பார்த்தாள்.அங்கே பாலா வந்து இருந்தான்.அவனோ ஆதித்யாவை அணைத்துக் கொண்டே “எப்படி இருக்கிற ஆதி.திடீர்னு ஒன்னும் சொல்லாமல் மெஸேஜ் அனுப்பிட்டு போய்ட்டே,இப்போ நான் ஏதேச்சையாக வீட்டிற்கு வந்தால் இருக்கே , போன தடவை மூணு மாசம் காணாமல் போன மாதிரி ஆகிட்டியோன்னு நான் கவலைப்பட்டேன்.
பரவாயில்லை எப்படியோ திரும்ப வந்துட்டே சந்தோஷம்” என்றான்.
ஆதியோ சிரித்தபடி “இந்த முறை பழைய விஷயங்கள் எல்லாம் எனக்கு ஞாபகம் வந்திடுச்சு பாலா.அன்றைக்கு நீ கேட்ட கேள்விக்கு என்கிட்ட இப்போ பதில் இருக்கு பாலா.நான் எங்கே இருந்தேன்,எப்படி எல்லாமே” என்று சொன்னான்.
பாலா நம்ப முடியாமல் “உண்மையாக சொல்லுறியா ஆதி?அன்னைக்கு கேட்ட போது எதுவும் கேட்டகாதேன்னு சொன்னே இப்போ மட்டும் எப்படி நினைவு வந்தது?” என்று கேட்டான்.
ஆதித்யா அதற்கு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவன் சாரல் வந்ததைக் கவனித்தவன்
பாலாவிடம் “உன்கிட்ட முக்கியமான ஒருத்தரை அறிமுகப்படுத்தனும்னு நினைச்சேன்” என்று சொல்லவும் சாரல் மாட்டிக் கொண்டேமே! என்று தன் தலையை உள்ளே இழுத்துக் கொள்ளும் நேரம் ஆதி “சாரல் சாரல் ரெடி ஆகிட்டேனா வெளியே வா” என்று அழைத்தான்.
பாலா அவன் அழைத்த பெண்ணின் பெயரைக் கேட்டு அதிர்ச்சியாக ஆதித்யாவைப் பார்த்தவன் “ஹேய் என்ன நடக்குது இங்கே?” என்று கேட்டான்.
உடனே ஆதித்யா பாலாவிடம் “ஹேய் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.முதல்ல சாரலைப் பாரு அப்புறம் நடந்ததை நான் சொல்லுறேன்” என்று திரும்பவும் அழைத்தான்.
சாரல் வேறு வழியில்லாமல் அவன் கொடுத்த உடை ஏற்கனவே அவளுக்கு கையும் காலும் நீளமாக இருந்தது.அதை சுருட்டி உள்ளே மடக்கி ஏனோ தானோவென்று இருவர் முன்னால் போய் நின்றாள்.
சாரலை மேலும் கீழுமாக பார்த்த பாலா யாரென்று ஆதியைப் பார்த்து கண்ணாலேயே கேட்டான்.
ஆதி “இவங்க பேரு சாரல்,இனி என் கூடத் தான் இருக்கப் போறாங்க.அதாவது
இங்கே ஒரு நல்ல இடம் அவங்களுக்கு தங்க கிடைக்கிற வரை” என்று சாரல் ஆதியைப் பார்த்து முறைக்கவும் சேர்த்து சொன்னான்.
சாரல் தன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்று சொன்னாள்.உடனே பாலாவும் மெதுவாக வணக்கம் என்று சொன்னான்.
ஆதி “சாரல் இது பாலா என்னோட ப்ரெண்ட்” என்று அறிமுகப்படுத்தினான்.
அவளோ அவனை பார்த்து லேசாக சிரித்து வைத்தாள்.பாலாவிற்கு நடப்பது ஒன்றும் சரியாகப்படவில்லை.
தாராவிடம் ஆதித்யாவைப் பற்றி சொல்ல முடிவவெடுத்தான்.
அவளுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினான்.
சாரலைப் பற்றி ஒன்னும் சொல்லவில்லை.ஆனால் வீட்டிற்கு வரச் சொன்னான்.
ஆதி சாரலைப் பார்த்து “இந்த டிரெஸ் உனக்கு வசதியா இல்லைன்னு நினைக்கிறேன்.இப்பவே போய் நல்ல டிரெஸ்ஸா எடுத்துட்டு வரலாம்” என்றான்.
சாரல் “இப்போ வேண்டாம் அப்புறமா போகலாம்” என்று அவளுக்கான அறையில் போய் அடைந்துக் கொண்டாள்.
பாலா இதுதான் நேரம் என்று ஆதியிடம் “யாருடா இந்தப் பொண்ணு பார்த்தாலே கிராமத்து பொண்ணாட்டும் இருக்கா? எதுக்கு வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றே? எதாவது பிரச்சினையாகிடுச்சுன்னா என்ன செய்ய?” என்று கேட்டான்.
ஆதி பொறுமையாக “முதல்ல நடந்ததை நான் உன்கிட்ட சொல்றேன்.அப்புறமா நான் செய்றது சரியான்னு சொல்லு” என்று நடந்ததை எல்லாம் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தான்.ஆதிக்கு மலையேறுவது என்றால் ரொம்ப பிடிக்கும் அப்படி அவன் பெங்களூரில் இருந்து முதலில் கொடைக்கானலுக்குச்
சென்று இருக்கிறான்.
பின்பு அங்கு இருந்த சிலபேர் நாகர்கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து அவர்களுடன் சென்று இருக்கிறான்.அப்படி அவன் மலைக்கு ஏறி செல்லும் போது இவனது காலில் சுளுக்கு ஏற்பட்டு காலில் வீக்கம் வந்து இருக்கிறது.
அதனால் இவன் மட்டும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான்.இரண்டு நாள் சிகிச்சை முடிந்து அவன் பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு தனியாக சுற்றிப் பார்க்க வந்துள்ளான்.
தனியாக சென்றதால் வழி மாறி இரவு நேரத்தில் தேங்காய் பட்டினத்திற்கு செல்லும் வழியில் செல்லும் போது சில திருடர்கள் போதையில் அவனது பொருட்களை இவனைப் போட்டு அடித்து பிடுங்கியுள்ளனர்.
பின்பு அதற்காக அவன் எதிர்த்து போராடவும் ஆதியின் தலையில் ஒரு கம்பியால் அடித்து ஆள்அரவமற்ற இடத்தில் கடற்கரையோரம் இவனை வீசி உள்ளனர்.
அங்கு அலைகளில் அலைக்கழித்து கிடந்தவனை சாரல் அவனைக் கண்டுபிடித்து சேர்த்து மற்ற நடந்த விஷயங்கள் இவனுடைய காதலை மட்டும் தவிர்த்து எல்லாவற்றையும் சொன்னான்.
அங்கே கடைத் தெருவில் நடந்த இன்னொரு விபத்தில் தான் மறந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன.ஆனால் கடைசி மூன்று மாதத்தில் நடந்த விஷயங்கள் மறந்து போனது என்றும் மன அமைதிக்காக வெளியூருக்கு இப்போது சென்றிருந்த நேரத்தில் திரும்பவும் சாரலை பாண்டிச்சேரியில் சந்தித்தது வரை எல்லாமே சொன்னான்.
இதை எல்லாம் கேட்ட பாலா “ஆதி உண்மையாகவா சொல்றே? என்னால நம்பவே முடியலைடா எவ்வளவு பெரிய கஷ்டமெல்லாம் பட்டு இருக்கே. எனக்கு தெரியாமல் போச்சுதே” என்று வருத்தப்பட்டான்.
ஆதி “நான் அந்த ஊர்ல எனக்கு டிரீட்மெண்ட் பார்த்த டாக்டரைப் பார்த்தேன்.அவரு சில போட்டோஸ் காட்டுனாங்க நீயே பாரு” என்று அவன் கோமாவில் இருந்த புகைப்படங்களும் அருகில் சாரலும் தாத்தாவும் உடன் இருப்பது எல்லாவற்றையும் பார்த்து பாலா முழுமையாக நம்பினான்.
பாலா “சாரல் எல்லோரையும் போல இல்லை வேற மாதிரி பொண்ணு,இந்த காலத்துல இப்படியும் இருப்பாங்களா? என்னால நம்ப முடியலை.அன்னைக்கு சாரல் ரிஸ்க் எடுக்கலைன்னா உன்னையே எங்களால் பார்க்க முடிஞ்சு இருக்காதுல்ல”என்று வியந்து சாரலை பாராட்டியவன் வருந்தப்பட்டும் கொண்டான்.
ஆதி “இப்போ சாரலுக்கு ஒரு பிரச்சினை அவளுடைய தாத்தாவும் இறந்து போய்ட்டாரு,துணைக்கு யாருமில்லை நான் அங்கே தங்கி இருந்ததால் ஊர்ல தப்பா பேசவும் திரும்ப அங்கே போக முடியாது அதான் இங்கே கூடிட்டு வந்தேன்.
அவளுக்கு என்ன தேவையோ அதை செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்று சொன்னான்.
பாலா நீண்ட பெருமூச்சு விட்டவன் “இப்போ உன்னுடைய இந்த மறதிக்கு என்ன செய்ய போறே?”
“நான் அந்த ஊர் டாக்டரை பார்க்கவும் அவரு இந்த மாதிரி நினைவுகள் வந்து வந்து போறதுக்கு காரணம் மூளை திடீரென்று அதிர்ச்சியாகும் போது அது தன்னோட நினைவுகளை இழந்து திரும்ப நினைவுப்படுத்திக் கொள்ளும்னு சொன்னாரு.அதனால ஏற்படுகிற சின்ன குழப்பத்தினாலத் தான் மூளை சில விஷயங்களை மறந்திடு விடுகிறது என்றும் இங்கே இருக்கிற நரம்பியல் சம்பந்தப்பட்ட டாக்டரை பார்க்கச் சொன்னாங்க” என்று சொன்னான்.
பாலாவிற்கு எல்லாம் மலைப்பாக இருந்தது.நண்பர்கள் இருவரும் பேசிய விஷயங்களில் நேரத்தை பார்க்காமல் இருந்து விட்டனர்.அது நண்பகலை கடந்து இருந்தது.
பாலா “சாப்பிட எதாவது ஆர்டர் பண்ணட்டுமா? சாரலுக்கு என்ன வேணும் கேட்கலாமா?” என்று கேட்டான்.
பாலாவிற்கு சாரல் மேல் தோன்றிய அக்கறையை பார்த்து சிரித்தவன் “இரு கேட்டுட்டு வரேன்.எப்படி இருந்தாலும் அவளுக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.ஆனால் வேண்டாம்னு நீங்க என்ன சாப்பிடுறீங்களோ அதே போதும்னு சொல்லுவா நீயே பாரு” என்று சாரல் இருக்கும் அறைப்பக்கம் சென்று “சாரல் உனக்கு சாப்பாடு என்ன ஆர்டர் பண்ணட்டும்?”
“எதுவாக இருந்தாலும் ஓகே” என்றாள்.அதைக் கேட்டு பாலாவும் ஆதியும் சிரித்துக் கொண்டனர்.
சாரல் வெளியே எழுந்து வந்து “ஆதி இனிமேல் சாப்பாடு கடையில வாங்காதே! சமையலுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே வீட்ல வாங்கி வை நானே சமைச்சுத் தரேன்,நீ எனக்காக செய்ற உதவிக்காக நான் செய்றதா இருக்கட்டும்” என்றாள்.
ஆதியும் சரியென்று தலையசைத்துக் கொண்டான்.சாப்பாடு வரவும் மூவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்.சாரலுக்கு முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.ஆனால் பாலா அவளிடம் எந்தவொரு பகட்டும் இல்லாமல் எப்போதும் போல ஆதியிடம் பேசுவதைப் போல் பேசினான்.ஏனென்றால் அவன் நண்பனின் உயிரை காப்பாற்றி இருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு பெரிதாக இருந்தது.
அதோடு சாரல் ஆதித்யாவை காப்பாற்றியதை பற்றியும் இதே போல் நடந்த சில சம்பவங்களையும் பத்தி கேட்டு அறிந்துக் கொண்டான்.
சாரல் சொல்வதை எல்லாம் கேட்கும் பொழுது அவனுக்கு ஏதோ சகாசம் செய்தது போல் இருந்தது.
பாலா வீட்டிற்கு போகாமல் இங்கே இருக்கவும் மூவருமாக சாரலுக்கு உடை வாங்கச் சென்றார்கள்.அங்கே அவன் அழைத்துச் சென்ற இடங்கள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகத் தான் கண்டாள்.மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை அவள் இப்போது பார்க்கத் தொடங்கினாள்.
அங்கே ஆதியை விட பாலாத் தான் அவளுக்கு ஏற்ற உடைகளைத் தேர்வு செய்துக் கொடுத்தான்.அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கினார்கள்.
சாரல் பாலாவிடம் “நீங்க என்ன வொர்க் பண்ணுறீங்க?” என்று கேட்டாள்.
அவன் தனது சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையைப் பற்றி சொல்லவும் அவனிடம் நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள்.
பாலாவும் ஏதோ வருடக்கணக்கில் பழகியது போல் சாரலிடம் பேசியபடி வந்தான்.
சாரலுக்கு புது கைப்பேசி வாங்கி அதில் பாலா தான் முதலில் அவனுடைய எண்ணை பதித்தான்.அடுத்து ஆதியின் எண்ணை பதித்தான்.பாலா சாரலின் எண்ணை தன்னுடைய கைப்பேசியில் பதித்தும் கொண்டான்.இதை எல்லாம் ஆதி கவனித்தபடியே வந்தான்.
வீட்டிற்கு வந்தவுடன் ஆதியைப் பார்த்து பாலா “எந்த ஒரு அலட்டலும் வெளிப்படையான மனிதர்களை பார்த்து ரொம்ப நாளாச்சு ஆதி.இன்னைக்கு முழுக்க சாரல்கிட்டே எந்த பொய் சாயம் பூசின சிரிப்பையும் நான் பார்க்கலை ஒரு நல்ல ப்ரெண்ட்டை சந்திச்சதில் சந்தோஷமா இருக்கு” என்றான்.ஆதி எல்லாவற்றிருக்கும் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.
சாரல் பாலாவிடம் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் சீக்கிரமா சமைச்சுடுவேன் சாப்பிட்டு போங்க” என்றாள்.ஆதி ஏற்கனவே சாரல் சொன்ன பொருட்களை ஆர்டர் கொடுக்கவும் அது எல்லாமே வந்து இருந்தது.
பாலா சரியென்று சொல்லவும் பொடி தோசையும் முட்டை தோசையும் கெட்டிச் சட்னியும் வைத்தாள்.அந்த வீடே பொடி தோசையின் மணத்தில் நிறைந்து இருந்தது.
அப்பொழுது வீட்டின் அலாரமணியை யாரோ அடிக்கவும் பாலா சென்று பார்க்க தாரா தான் வந்து இருந்தாள்.காலையில் அவன் வரச் சொன்னதுக்கு இப்போது வந்து இருந்தாள்.
பாலா தலையில் அடித்துக் கொண்டான்.தாரா ஏன் தான் இப்படி ஆதித்யாவின் விஷயத்தில் இவ்வளவு கவனம் குறைவாக இருக்கிறாளோ? என்று எண்ணியபடி கதவை திறந்தான்.
உள்ளே வந்ததும் தாராவிற்கு தோசையின் வாசனை அடிக்கவும் அவளோ கண்களை மூடி “ஆதி பாட்டி இறந்ததிற்கு அப்புறம் உன் வீட்ல இன்னைக்குத் தான் அந்த சாப்பாடு வாசனையை நான் ஸ்மெல் பண்றேன்” என்றவள் அவனை கட்டியணைத்து நலம் விசாரித்தாள்.
இதை எல்லாம் எதிரே இருந்த சமையலறையில் வேலையைப் பார்த்துக் கொண்டே சாரல் கவனித்துக் கொண்டாள்.
தாரா “ஆமா அங்கே இருக்கிறது யாரு? வாசல்ல வேற புதுசா ஒரு லேடீஸ் ஷீ இருக்கு” என்று கேட்டாள்.
பாலா அவரமாக “நான் சாரலை உனக்கு அறிமுகப்படுத்துறேன்.
என்னோடு வா” என்று தாராவின் கரங்களைப் பிடித்து சாரலிடம் நிறுத்தியவன் “சாரல் இவள் தான் தாரா எங்களுடைய பெஸ்ட் ப்ரெண்ட் நாங்க மூணு பேரு எப்பவும் ஒன்னா இருப்போம்” என்று சொன்னான்.
சாரல் அதிர்ச்சியில் வாயை தன் கரங்களால் பொத்தியவள் “நீங்க சித்தாரா பெரிய டிசைனர் தானே எங்க இன்ஸ்டியூட்ல எல்லோரும் உங்க டிரெஸ்ஸஸ் வீடியோ பார்ப்பாங்க” என்று சிலாகித்துச் சொன்னனவள் அவளிடம் கைக்குலுக்க தன் கையை கொடுத்தாள்.
சித்தாராவிற்கு தன்னைப் பற்றி புகழ்ந்து பேசவும் ஒரே சிரிப்பாக இருந்தது.சாரலிடம் கைக்குலுக்கவும் சாரல் தாராவுடன் ஒரு சுயபடம் ஒன்று எடுத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்த பாலா “ஹேய் சாரல் வா நாம ரெண்டுபேரும் ஒன்னாக போட்டோ எடுக்கலாம்” என்று இவர்கள் இரண்டு பேர் தனியாக அப்புறம் தாராவுடன் சுயபடம் நிறைய எடுத்தனர்.
இதை எல்லாம் பார்த்த ஆதி சற்றே பொய் கோபம் கொண்டு “இங்கே நான் எவ்வளவு பெரிய மாடல் இருக்கேன். என்னை கண்டுக்காமல் எடுக்கிறீங்க,அதுவும் நான் வாங்கி கொடுத்த போன் என்னை ஒரு போட்டோ எடுத்துக்கோங்க” என்று அவனும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டான்.
இறுதியில் நால்வரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.எல்லாவற்றையும் எடுக்க பாலா அவளோடு உதவினான்.
தாரா “இப்பவாது சொல்லு சாரல் யாரு? இத்தனை நாளா எங்கே போயிருந்தே?” என்று கேட்டாள்.
ஆதித்யா நடந்த எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை அவளிடம் சொன்னான்.
எல்லாற்றையும் பொறுமையாகக் கேட்ட தாரா ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தாள்.சாரல் மூவரும் தனியாக பேசுகிறார்கள் என்றெண்ணி தன் அறையில் போய் படுத்தவள் உடல் அசதியில் அப்படியே தூங்கிப் போனாள்.
நாம் விரும்பியபடி எல்லாம் நடக்காது.நாம் நினைத்தவர்கள் எல்லோரும் நம்முடன் இருப்பதில்லை.
ஆனால் நடந்ததை ஏற்றுக் கொள்ளும் மனநிலை வந்து விட்டால் வலிகள் குறைகின்றன.குழப்பங்கள் விலகுகின்றன.மனம் அமைதியை தேடத் தொடங்குகிறது.
உண்மையில் வாழ்க்கையின் மிகப்பெரிய பக்குவம் என்பது ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வது தான்.
Author: Vishakini
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னிடத்தில் மனம் மயங்குதே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.