சின்னா 'தி ரோமியோ' - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அத்தியாயம் - 3

“ஏதே பேய் ஃப்ரண்டா?”

“நேற்று என்னடான்னா நாய காணோம்னாங்க இன்னைக்கு பேயக் காணோம்ங்கிறாங்க! அய்யோ என்ன விட்ருங்க சார் நான் ஊருக்கே போறேன்” அரண்டு முழித்தான் மணிகண்டன்.

வந்து ஒருவாரமே ஆகியிருந்த மணிகண்டன் வெளிப்படையாகவே அரவிந்தனிடம் புலம்ப, அரவிந்தனுக்கும் ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை.

“பேய் ப்ரண்ட்டுன்னா என்னான்னு தெரியல. என்ன எழவ போலீசுன்னு படிச்சானுகளோ!"என்ற பெரியாத்தா,

“லே..அகரா! இங்கால வாடா! பேய் ப்ரண்டுன்னா இந்த போலீசு அரண்டு முழிக்கான் பாரு! வந்து என்னான்னு சொல்லு!”

பின்னால் திரும்பி குரல் கொடுக்க சுவற்றின் பின்புறம் இருந்து வெளிப்பட்டது ட்ரவுசர் பாண்டியின் தலை.

‘ஓ இது சாரோட வேலை தானா’ மனதுக்குள் நினைத்த அரவிந்தன், எழுந்த புன்னகையை மறைத்துக் கொண்டு அகரனைப் பார்க்க,

“அது பாய் ப்ரண்ட் பெரியாத்தா! எத்தனை வாட்டி சொல்லிக் குடுத்தேன்" என்றான் பாட்டியை இலேசாக முறைத்து.

"என்ன எழவோ! வாய்ல வந்தால்ல சொல்ல!

அந்தா அதேன் சொல்லுறான்ல! என் பாய் ப்ரண்டு! இந்தா இவா பாய் ப்ரண்டும்தான்” என்ற பெரியாத்தா பின்னால் திரும்பி,

“ஏய் சரஸா! என்னடி பல்ல காமிச்சி பராக்கு பார்க்கிறவ!

சின்னா பால் வாங்க வந்தா, பொழுதுசாஞ்சி மாடு மடிசாஞ்சாலும், உங்க இரண்டுபேர் பேச்சும் கொட சாயாது.

ஊருக்கே தண்ணிய ஊத்திப்புட்டு சின்னாக்கு மட்டும் கள்ளிச் சொட்டாட்டம் கறந்து குடுப்பா!

இங்கன கல்லாட்டம் நிக்கிறா. கேளுடி!

சின்னா எங்க போச்சோ என்ன ஆச்சோ!” என்றார் பெரியாத்தா அந்த வயதிலும் மஞ்சள் கிழங்காட்டம் இருந்த சரஸ்வதி பாட்டியிடம்.

“ஏ ஆத்தாங்களா! இப்ப நான் என்ன எழவ காணோம்னு எழுதித் தொலைக்க" என்றான் மணிகண்டன் கடுப்பாகி.

தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக குழம்பி நின்றவன் தன்னை மறந்து அவர்களைப் போலவே கேட்டிருக்க,

“பார்த்தியா பெருமாளு! செத்த நாளுல தம்பி பயலுக்கு நம்ம பேச்சு வந்துட்டு" பகடி பேசிச் சிரித்தார் பெரியாத்தா.

"ஏய் பெருமாளு! உனக்குமா சின்னாவ தெரியாது!” பார்வதி பாட்டி வாய்திறந்து கேட்டிட,

‘அதானே! பெருமாளும் இதே ஊர்தானே!’அரவிந்தனும் அதே கேள்வியுடன் பெருமாளை பார்த்திருந்தான்.

"அவம்தாம் மாமியா, மச்சானுவள கசக்கிப் பிழிஞ்சி வாங்கின சீதனத்துல அங்கன சிட்டிலயே பெரிய ஊட்ட கட்டிட்டு போய்ட்டான்ல! எப்படி தெரியும்! பக்கத்துல வடசேரின்னாலே கால வைக்கமாட்டான்ல!”

அதுவரை வாயையே திறக்காத இரத்தினம் பாட்டி வாயைத் திறந்து புறணி பேச, “புறணின்னா நம்ம இரத்தினம்தான்" என்றார் பெரியாத்தா சிரிப்பில் தன் காதுமடல்கள் ஆட.

‘கூட்டா சேர்ந்து கோர்த்து உட்டாளுவ’ பெருமாள் அரவிந்தனை அசடு வழியப் பார்க்க, ‘நீ எல்லாம் மனிதன்தானா?” என்று பார்த்து வைத்தான் அவன்.

“இவளுவ எல்லாம் நாள் கணக்கு வச்சி ஜோடி போட்டு திரிஞ்சாள்வல்ல! அந்த சின்னாவதான் கொஞ்சநாளா காணோமாம்!" இரத்தினம்தான் இரத்தினச் சுருக்கமாக விசயத்தைச் சொன்னது.

“அதென்ன நாள்கணக்கு” ஆர்வத்தில் மணிகண்டன் வாயை விட,

"செவ்வாய்ல பெரியாத்தாகூட பம்புசெட்ல குளிக்கப் போனா விசாலன்(வியாழன்) பார்வதியோட படத்துக்கு போவும். ஒவ்வொருநாள் ஒவ்வொருத்திக்குன்னு ஒதுக்கி வச்சிருக்கும் சின்னா”

“என்னா பொம்பளைக! ஆடி அடங்குற வயசுல ஒரு ஆம்பள கூட ஆடிட்டு திரிஞ்சாளுவ” மணிகண்டனின் காள்விக்கு மீண்டும் இரத்தினம்தான் மோவாயை தோளில் இடித்தார்.

“என்னா இரத்தினம்! ஏன் சின்னாவ உனக்கு புடிக்காதுன்னு சொல்லு! புடிக்காமத்தான் எங்கோட இங்க ஓடி வந்தியாக்கும்!

உனக்கு பயம்டி! ஏன் நீயேதான் உதவாக்கரை புள்ளைய பெத்து வச்சிட்டு ஓடி உழைச்சி குடும்பத்த காப்பாத்துற மருமவள தப்புத் தப்பா பேசித் திரியறவதான!” என்றார் பெரியாத்தா.

ஆகக்கூடி அவர்கள் அடித்த அலப்பறையில் புரிந்தது ஒன்றுதான். பெரிசு முதல் சிறுசுவரை இவர்கள் அனைவரும் தேடுவது சின்னா எனும் ஒரே மனிதனைத்தான்.

இது அகரனின் ஏற்பாடா! இல்லை உண்மையிலயே இவர்கள் சின்னா எனும் மனிதனைத் தேடுகிறார்களா என்பதைத்தான் கிழவிகளின் நக்கலும் நையாண்டியும் கலந்த பேச்சில் அரவிந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

திடிரென பாட்டிகளிடம் சின்ன சலசலப்பு கேட்க அரவிந்தனின் சிந்தை கலைந்தது.

ஸ்டேஷன் உள்ளே புதியதாய் ஒரு பெண் நுழைய அந்த பெண்ணை சற்றே முகத்தைச் சுழித்தபடி பார்த்திருந்தனர் மூதாட்டியர்.

“ஏய் இந்தாம்மா! உனக்கென்ன இங்க வேலை? தொறந்த வாசல்ல ஏதோ நுழையுறா மாதிரி நுழையற!”

சரவணப் பெருமாள் அவசரமாய் விரட்ட முயன்றதில் அவருக்கும் அவள் யாரென தெரிந்திருக்குமென ஊகித்தான் அரவிந்தன்.

“பெருமாள் சார்!” என்று கண்டிப்பு பார்வைப் பார்த்தவன், கேள்வியுடன் அந்த பெண்ணிடம் திரும்பினான்.

"இங்க இ..ன்..ஸ்பெக்டர்" கேள்வி தயக்கத்துடன் வந்தது அந்தப் பெண்ணிடமிருந்து.

வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். கொஞ்சம் எடுப்பாய் புடவை உடுத்தி இருந்தாள். உடுத்தியிருந்த விதத்தில் இருந்த மெலிதான கவர்ச்சி சற்றும் அந்த கிராமத்திற்கு சம்மந்தமில்லாதது.

"சொல்லுங்கம்மா! என்ன வேணும்?” பெண்ணினை பார்வையால் அளந்தபடி கேட்டிருந்தான்.

“மூணுநாளா சின்னா வீட்டுப் பக்கம் வரல சார்" என்றது பெண் தயங்கி.

‘இதுவும் சின்னாவ தேடித்தானா! ஷ்ஷப்பா’ மண்டை சூடானது மணிகண்டனுக்கு.

‘அவன் யாராக இருந்தாலும் மச்சக்காரன்தான். பாட்டிலருந்து பியூட்டிவரை மடக்கிப் போட்டிருக்கான். அதுவும் நாள் கணக்கு வச்சி. யார்ரா நீ! உன்னைப் பார்க்க எனக்கே ஆவலா இருக்கே’ என்றே மணிகண்டனின் யோசனை ஓடியது.

“என்னாடி இது. சின்னா இவகூடத்தான் போயிருக்கும்னு நினைச்சா இவளே தேடி வர்றா!” என்றார் பார்வதி பாட்டி தன் மோவாயில் கை வைத்து.

"ஏன் நீதான் போயேன்!

என்ன இருந்தாலும் சின்னா ஆம்பளடி! அதுக்கு தேவையானது அவகிட்ட கிடைக்காம கிழட்டு சி…கி உன்கிட்டயா கிடைக்கும்” இரத்தினம் இரகசியமாய் பார்வதியிடம் இடித்துக்கொள்ள,

“சின்னா, உங்களுக்கு என்ன வேணும்?" என்றான் அரவிந்தன்.

அரவிந்தனின் கேள்வி அந்த பெண்ணிடமிருந்தாலும், ‘இதுவும் உன் வேலையா?’ என்று அகரனைப் பார்த்திருந்தது.

அது புரிந்தாற்போல், ‘இல்லை’ என வேகமாய் தலையாட்டியது வாண்டு.

“எங்க இருந்தாலும் இந்த மூணுநாளும் சின்னா என்னைத் தேடி ஓடி வந்திடும் சார்" என்ற பெண் இலாவகமாய் அரவிந்தனின் கேள்வியை தவிர்த்து விட்டிருக்க,

“சின்னா உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டேன்" முதல் கேள்வி சற்று அழுத்தத்துடன் வந்தது அரவிந்தனிடமிருந்து.

கையைப் பிசைந்தது அந்தப் பெண்.

“அவ எப்படி சொல்லுவா? கள்ள புருஷன காட்டிக் குடுப்பாளா? அவன் இவள வச்சிருக்கான் சார்!"

புதிதாய்க் கேட்ட கரகரத்த குரலில், ஒட்டு மொத்தப் பேரும் திரும்பிப்பார்க்க, ஆஜானு பாகுவான உடம்புடன் உள்ளே நுழைந்தான் ஒருவன்.

ஊர் தன்மீது காட்டிய ஒட்டுமொத்த அருவருப்பையும் ஒருசேரத் தேக்கி அப்புதியவன்மேல் தன் பார்வையைப் பதித்தாள் அந்தப் பெண்.

முன்பு பார்வையில் இருந்த தயக்கம் மாறி கோபத்தை அவளது முகம் தத்தெடுந்திருக்க, இது எதுவும் அரவிந்தனின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

புதியவனைக் கண்டதும் ‘இவனா’ என்று தலையிலடித்துக் கொண்ட அகரனும் தப்பவில்லை.

வந்தவன் நிச்சயம் மரியாதைக்கு உகந்தவன் இல்லை என்பதையும் யூகித்துக் கொண்டான்.

“புருஷன் என்னைக்கூட கிட்ட சேர்க்க மாட்டா சார்! ஆனா அவன உள்ள வச்சி பூட்டி தாட்பாள் போட்டுப்பா!" என்றவனின் பேச்சு அரவிந்தனுக்கு கோபத்தைக் கொடுத்திருந்தது.

“இது ஸ்டேஷன். உன் வீடில்ல கண்டமாதிரி பேச! என்ன விசயமோ அதை மட்டும் பேசு!" என்றான். கண்டிப்பான தோரணையில் அதேநேரம் அவசரப் படாமல்.

"லே குமரேசா! நீ ரொம்ப யோக்யனாட்டம் பேசுற" என்ற பெரியாத்தாவை “நீ சும்மா கிட கிழவி" என்று அடக்கினான் புதியவன்.

"இவ என் பொண்டாட்டி சுந்தரி சார். அவன் இவ கள்ளப் புருஷன்” என்றான் அந்த குமரேசன்.

“ஆமா டா! கள்ளப் புருஷன்தான். உனக்கென்னடா பொ..டப் பயலே" என்றாள் சுந்தரி ஆங்காரமாக.

“சார் இவன் மேலதான் கம்ப்ளைண்ட் குடுக்க வந்தேன். இவன்தான் சின்னாவ ஏதோ பண்ணிட்டான்” என்று சுந்தரி சொன்னதும் மூதாட்டிகள் அதிர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“அதை கொல பண்ணிடுவேன்னு இவன்தான் குதிச்சிட்டு திரிஞ்சான் சார்! இவன அடிச்சு விசாரிங்க!" என்றாள் அழுகையுடன் சுந்தரி.

"சார்! இதெல்லாம் நாடகம். இரண்டுபேரும் சேர்ந்து என் பொண்ண எங்கயோ ஒளிச்சி வச்சிட்டு காணாம போன நாடகம் ஆடுறாங்க சார்!” என்ற குமரேசன்,

“பெத்த பொண்ணையே அவன் கூட கூட்டிக் குடுத்துட்டா சார் இந்தக் கேடு கெட்டவ!" என்று பாய்ந்தோடி சுந்தரியை அடிக்கப் போக,

நொடியில் அந்தப் பெண்ணின்மீது அடி விழாமல் தடுத்துப் பிடித்திருந்தான் அரவிந்தன்.

“ஸ்டேஷன் வந்து கை நீட்டுற! தொலைச்சுக் கட்டிருவேன்!" என்ற அரவிந்தன்,

கண்டிப்பான பார்வையுடன், “ ஒழுங்கா பேசுறதா இருந்தா பேசு! இல்ல வெளிய போ!" என்றான் தயவு தாட்சண்யமின்றி.

"என்னா சார்! என் பொண்ண கண்டுபிடிச்சி தருவீங்கன்னு இங்க வந்தா என்னையே மிரட்டுறீங்க!

இவ இராசி அப்படி! உங்களையும் வளைச்சிப் போட்டாளா!" என்றவனின் கன்னம் அரவிந்தன் விட்ட அறையில் பழுத்திருந்தது.

“இந்தப் புள்ளைய பாழாக்கிப்புட்டு பேசுறான் பாரு பேச்சு! இன்னும் நல்லா நாலு அப்பு அப்பி விடுய்யா” என்றது பெரியாத்தா.

அறையை வாங்கிக்கொண்டு வெளியில் ஓடியவன், தன் இயலாமையில் சுந்தரியையும் அரவிந்தனையும் மானாவாரியாய் பேசித் தள்ள, கிழவிகள் மறுபக்கம் அவனை ஏசித்தள்ள, சற்று நேரத்தில் ஸ்டேஷனே சந்தைக் கடையானது.

இரண்டுநாள் முன்னர் வரை இந்த ஸ்டேஷன் இப்படிக் கலவரமாகும் என்று யாரேனும் கூறி இருந்தால் அரவிந்தன் சிரித்திருப்பானாயிருக்கும்.

குமரேசனை மூதாட்டிகளிடமிருந்து காப்பதற்குள் பெரும்பாடு பட்டுப்போனார் சரவணப் பெருமாள்.

சற்று நேரத்தில் முழுதாய் இல்லையென்றாலும் ஸ்டேஷன் ஓரளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பியிருக்க, அரவிந்தனின் கட்டளைப்படி மூதாட்டிகளிடம் விவரம் கேட்டு எழுதிக் கொண்டிருந்தான் மணிகண்டன். அவர்களுடன் அகரனும்.

மணிகண்டனின் மனநிலையோ, இது அத்தனைக்கும் காரணமான அந்த சின்னா யாராய் இருக்கும்? என்று சிந்தித்திருக்க,

ஸ்டேஷன் வாசலில் ப்ரேக்கிட்டு நின்றது புதிய இரக ஆடி கார்.

‘இந்த ஸ்டேஷனுக்கு இன்னைக்கு என்னதான் ஆச்சி’ என்றுதான் பார்த்திருந்தான் மணிகண்டன்.

காரிலிருந்து ப்ளூ ஜீன் ஒயிட் டீ சர்ட் சகிதம் இறங்கியவனுக்கு வயது முப்பதிற்குள் இருக்கும். தோற்றம் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை என காட்டிக் கொடுத்தது.

“இன்ஸ்பெக்டர் அரவிந்த்?" என்றான், புதியவன்.

“நீங்க?" மணிகண்டனின் கேள்வியில்,

"ஐ யம் ஸ்டீபன்” என்றதும் அரவிந்தனே அருகில் வந்திருந்தான்.

பெயரைக் குறிப்பிட்டதிலேயே ஊருக்குள் அவன் விசாரித்து விட்டே வந்திருப்பது புரிய, “யா! ஐயம் அரவிந்தன்" என்றான்.

“ஹாய் சார்!” அரவிந்தனிடம் கை குலுக்கியவன்,

“Actually, I came here looking for someone (நான் இங்கு ஒருவரைத் தேடி வந்தேன்).

He is Chinna! (ஹீ இஸ் சின்னா)
என்றதும் ஒட்டு மொத்த ஸ்டேஷனும் அவன் பக்கம் திரும்பியது.

“He’s the reason I came all the way from abroad”

“லே அகரா! தஸ்ஸூ புஸ்ஸூன்னு நம்ம சின்னா பேர் அடிபடுதே! என்னவாம் டா” என்றது பெரியாத்தா, தன் இரகசியக் குரலில்.

“அவரும் உங்க சின்னாவ தேடித்தான் வெளிநாட்டிலிருந்து வந்தாராம்" என்றான் மணிகண்டன் முந்திக்கொண்டு.

"சின்னா உங்களுக்கு உறவா?” அரவிந்தனின் கேள்வியில்,

“ஹீ இஸ் மை ஒய்ஃப்’ஸ் பாய் பெஸ்டி" என்று அசராமல் சொன்னவன்,

"ஃபிலோமினா!” என்று குரல் கொடுக்க, காரிலிருந்து இறங்கியது அப்சரஸ் போன்ற தேவதைப் பெண். வெள்ளை வெளேரென்ற தேகத்தில் அவள் அணிந்திருந்த செர்ரி ரெட் நிற புடவை இன்னும் அழகாக்கி காட்டியது.

அந்தப் பெண்ணின் அழகில் மூக்கில் விரல் வைத்த பெரியாத்தா, “லே மணி! பொண்டாட்டியோட பாய், பெட்சீட்ட காணோம்னுலாமா இங்கன வருவாக" என்றது மணிகண்டனிடம்.

மணிகண்டன் வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள, “ஏய் ஆத்தோ! பாய் பெஸ்டின்னா புருஷனுக்கு ஒரு படி கீழ. ப்ரண்ட்டுக்கு ஒரு படி மேல" என்றான் அகரன்.

"என்னாடி இது!” என மூதாட்டிகள் புரியாமல் முழிக்க,

"உங்களை எல்லாம் விட அதோ அந்த புள்ளைன்னா சின்னாக்கு ஒரு படி மேலயாம்" என்ற மணிகண்டனிடம் மூதாட்டிகள் கொலைவெறியுடன் திரும்ப, குமரேசனை புடைத்தெடுத்ததை கண் எதிரெ கண்டிருந்தவன் உள்ளுக்குள் ஜெர்க்காக,

“நோ… நோ பியூட்டீஸ்! சின்னாவ கண்டுபுடிச்சி தந்ததும் இதை நீங்க அவர்கிட்டயே டைரக்ட்டா டீல் பண்ணிக்கோங்க ப்ளீச்” என்றலறினான்.

சின்னா வருவான்…
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
🤣 😂 என்னாங்கடா இந்த பாய் பிரண்டு சின்னாக்கு வந்த ஜோதனை
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
🤣 😂 என்னாங்கடா இந்த பாய் பிரண்டு சின்னாக்கு வந்த ஜோதனை
இந்த பாட்டிங்களுக்கு பாய் ஃப்ரண்டா இருக்கிறதெல்லாம் ஜோதனை இல்லை டா சாதனை😜
 
  • Haha
Reactions: suji

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
யாருய்யா அவரு எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு🤣🤣🤣🤣🤣
இப்படியா பாட்டிலா beauty வரை ஒருவனால் கரெக்ட் பண்ண முடியும்❤️❤️❤️❤️❤️❤️
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
யாருய்யா அவரு எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு🤣🤣🤣🤣🤣
இப்படியா பாட்டிலா beauty வரை ஒருவனால் கரெக்ட் பண்ண முடியும்❤❤❤❤❤❤
பிறந்த குழந்தை வரை மயக்குவாரு...😂