சின்னா 'தி ரோமியோ' - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 4

கிட்டதட்ட பத்து நாட்கள் கடந்திருந்தது.

அரவிந்தன் விசாரித்த வரையில் சின்னாவை கண்டுபிடித்துத் தரச்சொன்னவர்களில் ஒருவர் கூட அவருக்கு எந்த வகையிலும் உறவில்லை. நிகிலனைத் தவிர..

“யாரு நிகிலனா? அவம் எப்படி வருவான்? அவேம் பொண்டாட்டிதேன் எப்படா சின்னா ஒழியும்னுட்டுல்ல இருந்தா!” பெரியாத்தாவின் அலட்டலில்,

“சும்மா வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சிதோன்னு பேசக்கூடாது! ஊர்மிளாவ சொல்லிக் குத்தமில்ல. நித்தமும் உங்களோட ஊர சுத்திட்டு வருதுன்னுதான் பேச்சா பேசும் அந்த புள்ள.

ஊர்ச் சி….கி அந்த சுந்தரி வீட்ல போய் படுத்துக்கிடந்துட்டு வந்தா நல்ல குடும்பத்துல பிறந்தவ வீட்ல சேர்ப்பாளா? நாள பின்ன அவளப்பத்தி இந்த ஊர் என்ன பேசும்னு இல்லையா!” இரத்தினம் பாட்டி, பெரியாத்தாவிடம் பாய்ந்தார்.

“புருஷனுக்காக கஞ்சி ஊத்துனவ, சர்தான் ஒழிஞ்சிதுன்னு விட்டுட்டா”

இவையெல்லாம் விசாரணை அன்று அரவிந்தனுக்குக் கிடைத்த பதில்கள்.

அரவிந்தனும் மறுநாள் அகரனை அழைத்துக்கொண்டு நிகிலன் வீட்டுக்குச் சென்றுப் பார்த்தான்தான்.

மூடிய வாசலே வரவேற்றது.

“அவேம் காலைலயே குடும்பத்தோட கோவில் குளம்னு சுற்றுலா கிளம்பிட்டானுல்ல. வர பத்து நாள் ஆகுமாம்” மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற ஒருவர் இவர்கள் நிற்பதைப் பார்த்து பதில் அளித்துச் சென்றார்.

“எப்படா ஒழியும்னு பார்த்திருந்திருப்பான் போல” கூடுதல் தகவலாய் அவர் சொல்லிவிட்டுச் செல்ல, அரவிந்தனுக்கு சற்று அதிர்ச்சிதான்.

குடும்பத்தில் ஒருவர் காணாமல் போயிருக்க குடும்பச்சுற்றுலா போக இயலுமா?

பாட்டிகள் சொன்னது உண்மை என்றே தோன்றியது.

சின்னா இல்லாத வீடு நரகமாய்த் தோன்ற குடும்பத்தோடு நிகிலன் கிளம்பியது அரவிந்தன் அறிய மாட்டானே!

இப்படி ஒரு மனிதனைச் சகிப்பதும் கடினம்தானே! என்றிருந்தான் அவன். அரவிந்தனால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயவில்லை.

அன்று என் மனைவியின் பாய் பெஸ்டியைக் காணோம் என்று வந்தவனிடமும் விசாரித்த வரையில் அவனது மனைவி ஃபிலோமினாவிடம் 25 இலட்சம் வரை சின்னா வாங்கியிருப்பது தெரிய வந்தது.

கணவன் வெளிநாட்டில் சம்பாதிக்க, நிலத்துடன் பண்ணை வீடு வாங்கித் தருவதாகச் சொல்லி அந்தப் பணத்தை ஏமாற்றி இருக்கிறான் மனிதன்.

அதுவும் அழகான இடத்தை வயல்வெளியுடன் காண்பித்து, பத்திரப்பதிவும்கூட நடந்ததாக அப்பெண் கூறுகிறாள்‌. ஆனால் பத்திரம் மட்டும் அவள் கைகளுக்கு வந்துச் சேரவில்லை.

அதேப்போல் இரத்தினம் பாட்டியிடமும், அவர் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த பணத்தை சுமார் ஒரு இலட்சம்வரை அவ்வப்போதென்று வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.

எல்லாம் தெரிந்ததும் சரவணப்பெருமாளோ, “சார் எவனோ கிழவிமுதல் குமரிவரை நல்லா ஏமாத்திட்டு ஓடிட்டான் சார்” என்று தீர்ப்பே எழுதிவிட,

"எங்க சின்னா அப்படில்லாம் பண்ணாது” என்று அதற்கும் வரிந்துக் கட்டியது மூத்தோர் கூட்டம்.

ஃபிலோமினாவும், “ஐ க்னோ மை மேன். ஹீ ஓண்ட் சீட் மீ" என்றாள் கணவனது முறைப்பையும் தாண்டி.

"சார் பணம் போனா போகுது. அதை நான் சம்பாதிச்சுடுவேன். ஆனா அந்த ஆள் கிடைக்கலைன்னா இவ என்னை டைவர்ஸ் பண்ணினாலும் பண்ணுவா!

ப்ளீஸ், எதாச்சும் பண்ணுங்க சார். நான் இந்த வீக் திரும்பிப் போகணும்” என்றுவிட்டுப் போனான் அவளது கணவன்.

யோசனையிலிருந்த அரவிந்தனிடம்,

“சார்! யாரும் பணத்தக் கண்டுபிடிச்சித் தரச் சொல்லல. அந்த ஆளைக் கூட்டி வந்தாலும் திரும்ப ஏமாறத்தான் தயாரா இருக்காங்க நம்ம ஆளுங்க. விடுங்க சார். வேலைய பார்ப்போம்” சொல்லிக்கொண்டே சரவணப்பெருமாள் கிளம்பிவிட,

“அப்படி என்ன வேலைய பார்க்கப் போறாராம்" என்றான் நமட்டுச் சிரிப்புடன் மணிகண்டன்.

அவன் சொன்னது நிச்சயம் சரவணப் பெருமாளுக்கு கேட்டிருக்காது.

அரவிந்தனுக்கு புன்னகை வந்தாலும், சிறு கண்டிப்புடன் ‘ஏன்டா’ என்ற பார்வைப் பார்க்க,

“பின்ன என்ன சார்! வந்த ஒரே கேஸையும் விட்டுட்டு, வர வர எனக்கு போலீஸ்ங்கிறதே மறந்துரும் போல!” என்றவனோ,

“வடிவேல் மாதிரி நானா எவனையாச்சும் கூப்பிட்டு ஏய் நான் போலீசு நான் போலீசுன்னு சொன்னாத்தான் உண்டு!” என்றதும் அவன் சொன்ன விதத்தில் அரவிந்தன் சிரித்துவிட்டான்.

நிகிலன் ஊர் திரும்பாமல் அரவிந்தனாலும் அடுத்தக் கட்டத்துக்கு நகர முடியவில்லை. இவ்வளவு பேசிய பெண்கள் ஒருவரிடமும் சின்னாவின் புகைப்படம்கூட இல்லை.

“ரொம்பத் தெளிவா இருந்திருக்கான் சார்" என்றான் மணிகண்டன்.

இந்த பத்து நாட்களில் அரவிந்தனால் சமாளிக்க முடியாதது அகரன் மட்டுமே. அவன் சொன்னதுபோல் ஸ்டேஷனையெல்லாம் உடைக்கவில்லை.

மாறாக பள்ளி முடிந்ததும் இந்த ஊரிலிருந்து அக்கம் பக்கம் ஊர்களுக்குச் செல்லும் அப்பன், சித்தப்பன், பெரியப்பன், தெரிந்தவர் என்று ஒருவர் விடாமல் பின்னால் தொற்றிக் கொண்டான். டிராக்டர், இருசக்கரவாகனம், லாரி என்று எது கிடைத்தாலும் விடுவதில்லை. அங்கங்கு சின்னாவை தேடிவிட்டே வந்தான்.

அகரனின் மேல் ஒரு கண் வைத்திருந்த அரவிந்தனை பலமுறை இதை நேரில் கண்டுவிட, கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டிய அந்தக் குணமே அகரன்பால் அரவிந்தனை ஈர்த்திருந்தது.

“இது பரீட்சை நேரம் ஒழுங்காக படி!” என்று கண்டித்ததோடு, “யாருக்காக இல்லைனாலும் உனக்காக சின்னாவை கண்டுபிடிச்சித் தருவேன்" என்று வாக்களித்திருந்தான்.

"எனக்கு எங்க சின்னா உசுரோட இருக்குன்னு தெரிஞ்சாலே போதும் சார்! அது எங்கிருந்தாலும் சந்தோசமா இருக்கட்டும்”

கண்கலங்கி சொன்னவனில் அசந்துதான் போனான் அரவிந்தன்‌.

ஏனோ இவ்வளவு அன்பை கொட்டிக் கொடுக்கும் ஒரு சிறுவனின் நன்மதிப்பைப் பெற்றவன் தவறானவனாக இருக்கக்கூடுமா? என்று அரவிந்தன் எண்ணிக் கொண்டிருக்கையில்,

“சார், எஸ் பி ஆஃபீஸ்லருந்து ஃபேக்ஸ்” என்று வந்து நின்றான் மணிகண்டன்.

‘இங்க ஃபேக்ஸ் மிஷின்கூட வேலை செய்யுமா’ என்று நினைத்தபடியே அரவிந்தன் அதைக் கையில் வாங்க அதையே பதிலாக்கினான் மணிகண்டன்.

"இந்த ஃபேக்ஸ் மிஷின தொடைச்சி வைக்கும்போதெல்லாம் இது வேலை செய்யுமான்னு யோசிச்சிருக்கேன் சார்! வேலை செய்யுது” என்றான் சிரிப்புடன்.

வந்த தகவல்களை படித்துமுடித்து யோசனையுடன் அரவிந்தன் புருவத்தைச் சொறிய,

“என்னவாம் சார்" என்றான் மணிகண்டன் ஆவலுடன்.

அவனிடமே அந்தக் கடிதத்தை தர சற்று சத்தமாகவே வாசித்தவனின் புருவம் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உயர்ந்தது.

“என்ன சார்! பொம்பளைங்கள ஏமாத்திட்டு ஓடிப்போனவன்னு பார்த்தா செண்ட்ரல் கவர்மெண்ட்லருந்து விருது அறிவிச்சிருக்காங்க” என்றான் குரலில் வியப்பைக் காட்டி.

“ம்ம்…! அதோட ஏப்ரல் 15க்குள்ள சின்னாவ கண்டுபிடிக்கச் சொல்லி இருக்காங்க” என்ற அரவிந்தன், கையிலிருந்த மற்றொருக் காகிதத்தை யோசனையுடன் பார்த்திருந்தான்.

அது, நெல் ஜெயராமன் அவர்களின் ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்திடமிருந்து சின்னாவை பற்றிய தகவலை அறிய வேண்டி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கடிதம். அதையும் கூடவே இணைத்திருந்தனர்.

விசயம் இதுதான். பாரம்பரிய நெல் வகையான குழியடிச்சான் மற்றும் வேடன் சம்பா இரகங்களை மீட்டெடுத்ததன் காரணமாக சின்னாவுக்கு மத்திய அரசின் “Best Genome Saviour Award (தேசிய மரபணு காப்பாளர் விருது)” அறிவிக்கப் பட்டிருக்கிறது.

அதை இதற்குமுன் இந்த விருதைப் பெற்ற நெல்ஜெயராமன் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 15 அன்று வழங்க வேண்டுமென அரசிடம் வேண்டுகோள் வைத்த ‘நமது நெல்லைக் காப்போம் அமைப்பு’ சின்னாவைத் தொடர்பு கொள்ள முயல, சின்னாவிடமிருந்து தகவலோ பதிலோ வராததால், அவர்களின் வேண்டுகோளின் பெயரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி அரவிந்தனுக்கு உத்தரவு வந்திருந்தது.

நெல் ஜெயராமன் அவர்கள் கிட்டதட்ட 174 வகை பாரம்பரிய விதை நெல்லை மீட்டெடுத்தவர். இவர் நம்மாழ்வார் மீது மிகுந்த பற்றுக்கொண்டு அவர்வழி நடந்த இயற்கை விவசாயி.

பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்பதற்காகவே “நமது நெல்லைக் காப்போம்” என்ற இயக்கத்தை உருவாக்கி, திருத்துறைப் பூண்டியில் வருடந் தவறாமல் நெல் திருவிழா நடத்தி வந்தவர். இந்த விழாவில் பாரம்பரிய விதை நெல்லை ஒவ்வொரு விவசாயிடமும் இரண்டு கிலோ அளவில் இலவசமாகக் கொடுத்து அதை அடுத்த வருட திருவிழாவில் இரண்டு மடங்காக்கி தர வேண்டுமென அன்புக் கட்டளையிட்டு விவசாயிகளை ஊக்குவித்தவர். இவரால் இயற்கை விவசாயத்திற்கு திரும்பியவர்கள் ஏராளம்.

இவர் மத்திய அரசின் “Best Genome Saviour Award (தேசிய மரபணு காப்பாளர் விருது)” மற்றும் தமிழக அரசின் “சிறந்த இயற்கை விவசாயி விருது” விஜய் டிவியின் “இயற்கை விதைநெல் மீட்பாளர் விருது" மற்றும் "சுற்றுச் சூழல் சாம்பியன் விருது” இவரது மறைவுக்குப் பின் இவரது அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

இன்னைக்கு நாம சத்துன்னு வாங்கிச் சாப்பிடுற கருப்புக் கவுனி, யானைக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, பூங்கார் முதலியவை இவர் மீட்டெடுத்த நெல் வகைகளே!

(ஒரு தலைச்சிறந்த மனிதனுக்கு என்னால் முடிந்த சின்ன நினைவுக் கடத்தல் அல்லது நினைவுக் கூறலே இந்த அத்தியாயம்🙏)

கூடுதல் தகவல்: குழியடிச்சான் - மண்ணில் ஆழமா வேறூன்றி வளரும், குறைந்த தண்ணீர் உள்ள இடங்களுக்கும் பொருந்தக் கூடியது. வறட்சியைத் தாங்கும்

வேடன் சம்பா - காடு வாழ்ந்த மக்கள் பயன் படுத்தியது. கடின சூழ்நிலையைத் தாங்கும். Pest resistance, அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்கக் கூடியது.

கதைக்குள் போகலாம்.

இப்போது சின்னாவின் குணநலன்களைத் தாண்டி கண்டுபிடித்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில் இருந்தான் அரவிந்தன்.

கூடுதலாக இரண்டு நாட்களை விழுங்கிக் கொண்டு ஒருவழியாக நிகிலன் குடும்பத்துடன் ஊர் திரும்பியிருக்க, அவன் அளித்த தகவல்தான் மேலும் அதிர்ச்சியளித்தது.

“சின்னா உங்களுக்கும் உறவில்லையா" அதிர்ச்சியில் மணிகண்டன் கூவியே விட்டான்.

அரவிந்தனும் உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், “ஏன் இதை முன்பே சொல்லவில்லை?” என்ற கேள்வியுடன் மூத்தோர் படையைத் திரும்பிப் பார்த்தான்.

ஆம் அரவிந்தனின் ஜீப் விசாரணைக்காக நிகிலனின் வீடு வந்து சேரும்முன் செய்தியறிந்து மூத்தோர் கூட்டம் ஊரில் பாதியை கூட்டிக்கொண்டு நிகிலனின் வாசலில் நின்றது. அதில்தான் அரவிந்தனின் இந்தப் பார்வை,

“எங்களைப் பொறுத்தவரை சின்னா நிகிலன் குடும்பம்தான். அது எங்க குடும்பத்தில ஒன்னு” என்று முகத்தை வெட்டினார் பெரியாத்தா.

“ஏங்க பெரியாத்தாங்க! இதை முதலே சொல்லி இருந்தா இந்த பத்துநாள் வேஸ்ட்டா போயிருக்காதுல்லங்க!" மணிகண்டன் கிண்டலடிக்க, “மணி” அதட்டினான் அரவிந்தன்.

"லே! எங்க குடும்பம்தாங்கிறேன். திரும்ப திரும்ப கேட்பியோ! இப்பதான் தெரிஞ்சிட்டில்ல கண்டுபிடி!” என்ற பெரியாத்தா, அதேத் தோரணையில் மணியை விலாசிவிட்டு

“எய்யா நிகிலா! நீ சொல்லுய்யா பார்ப்போம். சின்னா உனக்கு யாருமில்லன்னு" என்று நிகிலனிடம் முடித்தார்.

அரவிந்தன் நிகிலனைப் பார்க்க, கண்கள் கலங்க, உடல் இறுகி நின்றிருந்தான் அகிலன். அவன் கைகள் தோளிலிருந்த மகளை இறுகப் பற்றியது.

ஊர்மியிடமிருந்து சிறு கேவல் வெடிக்க அறைக்குள் ஓடியிருந்தாள்.

“கூட இருக்கும்போதெல்லாம் கரிச்சி கொட்டிப்புட்டு, ஊருக்கு முன்னாடி சிலுப்புறா பாரு” என்றார் இரத்தினம்.

“ஏய் இரத்தினம்! அன்னைக்கு அந்த பிள்ளைக்காக நீதான வக்காலத்து வாங்கினவ. நேர்ல கண்டா ஏசுவியா?” என்று பார்வதி பாட்டி பாய,

“அதுவும் நிசம்தான். இதுவும் நிசம்தான்! ஒரு ஆம்பள எவ்ளோ பேச்சத்தான் தாங்குவான்” என்று தோளில் இடித்தார் இரத்தினம்.

எதற்கும் பதில் சொல்லவில்லை நிகிலன். ஒவ்வொருவரிடமும் தன்னை நிருபிக்க வாதாடிக் கொண்டேயிருந்தால் எப்போது வாழ்வது என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டிருந்தான்.

“சொல்லுங்க நிகிலன்! சின்னா உங்களுக்கு உறவில்லையா? எப்படி பழக்கம்?" அரவிந்தன் நிகிலனின் உடல்மொழியை அவதானித்தபடி கேள்வி கேட்க,

“போக்கத்தவன் வேல போலீஸ் வேலங்கிறது சரியாதான் இருக்கு. திரும்ப திருப்ப அதேயேல்ல கேட்கானுவ" கூட்டத்திலிருந்து பார்வதிப் பாட்டி தலையை நீட்ட, எரிச்சலில் கையிலிருந்த குறிப்பேட்டை பொத்தென்றுக் கீழே போட்டான் மணிகண்டன்.

“சார்! ஒன்னு மட்டும் தெரிஞ்சிருச்சி. இவங்கள வச்சிட்டு நாம இந்த விசாரணைய முடிக்கப் போறதில்ல. இதுக்குதான் பெருமாள் சார் நைசா கழன்றுகிட்டார்” என்ற மணிகண்டனை பார்வையால் அடக்கினான் அரவிந்தன்.

ஊரில் இதெல்லாம் சகஜம். பக்கத்து வீட்டில் ஒன்றென்றால் ஊரே கூடும். அவர்களை அனுப்பிவிட்டு விசாரிப்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமற்றது. அதுவே வீண் பிரச்சனையைக் கிளப்பும்.

எனவே அரவிந்தன் காரியத்தில் கண்ணாக நிகிலனைப் பார்க்க,

“இல்ல!" என்றான் அவன் எங்கோ பார்த்து.

“எங்க கல்யாணத்து அன்னைக்குதான் முதல் முதலா சின்னாவ பார்த்தோம்” என்றதும்,

"பேப்பர்லல்லாம் வந்துச்சே அவேங் கல்யாணம். நீ படிக்கலையா?” என்றது பெரியாத்தா.

"பெரியாத்தோவ், நீ இப்போ வாய மூடல…" என்ற மணிகண்டன் எகிறிக்கொண்டுப் போக,

“உன் பெயர்ல மட்டுமில்லலே. உங்காத்தா உன் வாய்லயும் மணிய கட்டி உட்ருக்காலே"

பதிலுக்குப் பதில் பெரியாத்தாவும் சண்டைக்கு நின்றார்.

“நீ பெரியாத்தா இல்ல பெரிய அண்டா" வாய்த்துடுக்காய் மணிகண்டனும் முறைத்து நிற்க, மூத்தோர் மொத்தமும் மணிகண்டனை வார்த்தைகளால் மொத்தியெடுக்க, அங்கே நிலவரம் கலவரமானது.

தேன் கூட்டிலா கல் எறிவது? ‘இவன வச்சிக்கிட்டு’ விசாரணையைப் பாதியோடு நிறுத்தி அரவிந்தன் எழுந்து கொண்டான்.

“சின்னாவோட ரூம பார்க்கலாமா?”

தன்னைக் காக்க துணைக்கு வருவான் என்று அரவிந்தனை நம்பி, மூத்த தேனீக்களிடம் சிக்கி முழி பிதுங்கி நின்றவனை, சிறு புன்னகையுடன் அரவிந்தன் கடந்து செல்ல,

‘யோவ் உன்ன நம்பிதானயா வந்தேன்’ என்று அதிர்ச்சியானான் மணிகண்டன்.

சின்னா வருவான்...
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
அச்சோ என்னால சிரிச்சி முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣
என்னலே இப்படி பண்றீங்க😂😂😂😂😂😂😂😂
மணி - பெரியத்தா கான்வோ 😅😅😅😅😅😅😂
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
அச்சோ என்னால சிரிச்சி முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣
என்னலே இப்படி பண்றீங்க😂😂😂😂😂😂😂😂
மணி - பெரியத்தா கான்வோ 😅😅😅😅😅😅😂
நன்றி...😉