சின்னா 'தி ரோமியோ' - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 7

“லே! முருகேசு நிறுத்து நிறுத்து!” மீண்டும் பெரியாத்தா குரல்கொடுக்க,

"இங்க பாரு ரவுடி பேபி ஒன்! இப்போ எதுக்கு நிறுத்த சொல்ற. ஆறெழு மணி நேரத்துல வரவேண்டிய பசுபதி கோவிலுக்கு எட்டு மணிநேரம் ஆச்சி இன்னும் சேர்ந்த பாடில்ல…

காலைல ஆரம்பிச்ச பயணம். அங்க இங்கன்னு பெட்ரோல் பங்கா நிறுத்தி, உங்கள பாராட்டி சீராட்டி குளுப்பாட்டி கூட்டிட்டு வந்ததுல மணி மூணாச்சி இன்னும் சாப்பிடக்கூட இல்ல” கடுப்பானக் குரலில் எகிறினான் மணிகண்டன்.

ஓட்டல் சாப்பாடு சாப்பிடமாட்டொமென ஒற்றைக்காலில் நின்றனர் ரவுடி பேபீஸ். அவர்களை விட்டு அரவிந்தன் சாப்பிட விரும்பாததால் மணிகண்டனை மட்டும் சாப்பிடச் சொல்ல அவன் முகத்தைத் தூக்கினானே தவிர சாப்பிடவில்லை.

அவர்கள் வயிறு வாடாமல் அங்கங்கு இளநீர், பழச்சாறு, கரும்புச்சாறென்று நீர் ஆகாரமாக அரவிந்தன் வாங்கிக்கொடுக்க அதற்கும் இயற்கையின் அழைப்பில் ஹைவேயில் பெட்ரோல் பங்கு ஒன்று விடாமல் நிறுத்த வேண்டியதாயிற்று.

“நீ ஆம்பள. மரத்தக் கண்டா கால தூக்குவ. பொம்பளைங்க நாங்க அப்படியா! சலம்பாம இறங்கு!" என்று பெரியாத்தா மணிகண்டனை விரட்ட முருகேசன் வண்டியை ஓரங்கட்டினான்.

வண்டி ஹேவேயிலிருந்து கிராமங்களுக்குள் நுழைந்திருந்தது. ஆளாளுக்கு கையில் ஒரு கட்டைப்பையுடன் இறங்க,

“வாங்க சார்! இப்படியே விட்டுட்டு ஓடிடுவோம்" என்றான் மணிகண்டன், இரகசியமாய்.

“ஓட ப்ளான் போடுதியோ! ட்ரைவரு எங்காளுப்பு”

கையிலிருந்த கட்டைப்பையால் அவனை ஒரு இடி இடித்துவிட்டுச் சத்தமாய் சிரித்தார் பார்வதி பாட்டி.

“சார்! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்” என்றான் மணிகண்டன், இறங்கிக்கொண்டே.

“நாம இவங்கள கூட்டிட்டு வந்தோமோ? இல்ல இவங்க நம்மள அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்காங்களா?" என்றதும் அரவிந்தன் சிரித்துவிட,

"இந்த ரவுடிங்களுக்கு ரொம்ப செல்லம் குடுக்கறீங்க சார்" என்றான் தேனீக்களின் பின்னால் சொன்றபடி.

அதற்குள் பக்கத்து தோப்புக்குள் தரைவிரிப்பை விரித்து, கொண்டு வந்திருந்த உணவுகளை கடை பரப்பினர் தேனீக்கள்.

“சார் நான் சொல்லல. எல்லாம் ப்ரீ ப்ளான்ட். நம்மள பந்தோபஸ்த்துக்குதான் கூட்டி வந்திருக்குங்க" என்றதும், எதற்காக ஹோட்டல் வேண்டாம் என்று தவிர்த்தார்கள் என்று புரிய அரவிந்தன் பேண்ட்டை மடக்கி அமர்ந்து விட்டான்.

“இவ்ளோ பசிய வச்சிட்டுதான் வலிக்காத மாதிரியே நடிச்சீங்களா சார்" என்றவனிடம்,

"பேசாம வாடா” என்றான் அரவிந்தன் உரிமையாக. அந்தப் பயணம் சற்று நேரத்திற்குள் கடமையைத்தாண்டி உறவுகொண்டாடியது.

கட்டுச்சோறு ஒருபக்கம், கருவாட்டுக் குழம்பு ஒருபக்கம் வாசனையைத் தூக்கிற்று.

ஆளுக்கொரு தட்டில் சரஸ்வதி பாட்டி பறிமாற, கருவாட்டுக் குழம்பை ஒரு வாய் ருசித்த மணிகண்டனோ கண்மூடி சப்புக்கொட்ட,

“இதுக்காக எவ்ளோ நேரம் வேணும்னாலும் பட்டினிக் கிடக்கலாம். கூட தொட்டுக்கவும் இருந்திருந்தா கலக்கல் ரவுடீ பேபிஸ்” என்று பாராட்டுப் பத்திரமே வாசித்தான்.

" அதுக்கென்ன!” என்றும் சுற்றும் முற்றும் பார்த்த பெரியாத்தா, " லே, அகரா அந்தா தொங்குதுல இரண்டு மாங்கா பிஞ்சி பறிச்சா ஓடு” என்றார்.

“ஆத்தோ, யார் தோப்போ. நான் மாட்டேன் போ" என்றவன் பயந்து மறுக்க, “கேட்டா நம்ம போலீஸ்கார தம்பி அரவிந்தன் பெயரச் சொல்லுடா” என்றதும் அரவிந்தனுக்கு கருவாடுமுள் தொண்டையில் சிக்கிற்று.

மெல்லவும் முடியாமல் அவன் மலங்க மலங்க முழிக்க வாய்விட்டுச் சிரித்தான் மணிகண்டன்.

“இவன் ஒருத்தன்” என்ற பார்வதி பாட்டி அகரனை திட்டிவிட்டு தானே எழுந்து மாங்கா பிஞ்சுகளை பறிக்க,

“யாரு அது தோப்புக்குள்ள?" மணிகண்டன் குரலை மாற்றி மிரட்ட, கையிலிருந்த மாங்காப் பிஞ்சை அவன்மீது தூக்கி எறிந்தார் பார்வதி பாட்டி.

சற்று நேரத்திற்கெல்லாம் அங்கிருந்தக் கல்லை கழுவி, மாங்கா பிஞ்சுகளையும் கூடவே கொள்ளையில் பறித்த பச்சைமிளகாயும் உப்பும் சேர்த்து, நசுக்கி அழகான உருண்டையாக்கி ஆளுக்கு கொஞ்சம் தட்டில் வைத்து எஞ்சிய உருண்டையை வெற்று சாதத்துடன் பிசைந்தார்.

அந்த மாங்காய் பச்சடியுடன் கருவாட்டுக்குழம்பு அப்படி ஒரு ருசியைத் தர பார்வதிபாட்டியின் கரங்களுக்கு முத்தம் வைத்தான் மணிகண்டன்.

“பிச்சிட்ட போ ரவுடி பேபி 2" என்றான்.

அவனுக்கு பெரியாத்தா ரவுடி பேபி 1, பார்வதி பாட்டி ரவுடி பேபி 2, சரஸ்வதி பாட்டி 3. இப்படித்தான் அழைத்துக் கொண்டிருக்கிறான்.

“உண்மையாவே ரொம்ப நல்லாருக்கு பாட்டி" என்ற அரவிந்தனின் வாய்க்கருகில் எஞ்சிய மாங்காய் பச்சடியைப் போட்டு உருட்டிய உருண்டையை அவர் கொண்டு போக நெகிழ்ந்தான் அவன்.

எந்தவித பந்தா இல்லாமல் வாயைத்திறந்து அவன் வாங்கிக்கொள்ள, “எனக்கு.." என்றான் மணிகண்டன், மைனாக் குஞ்சுபோல் வாயைத் திறந்து.

“உனக்கும் தான். உன்னைய விட்டுட்டா திம்போம். அகரனை விட சின்னப்பையன்லே நீ!" என்றார் பெரியாத்தா.

அரவிந்தனுக்கு அன்னையின் ஞாபகம் வந்துவிட்டது‌. சாப்பிட்டு முடித்து சற்று ஓய்வாக அமர்ந்திருக்க, அன்னைக்கு அழைத்தான்.

"என்னடா அதிசயமாயிருக்கு. நீயே கால் பண்ணியிருக்க!” என்றார் கமலம் அதிசயித்து.

"சும்மாதாம்மா உன் கூட பேசணும்போல இருந்துச்சி” என்றான் அரவிந்தன் நெகிழ்வாக.

உடனே அலைபேசி துண்டிக்கப் பட, அலைபேசி காணொளியில் அழைத்திருந்தார் அவனது தாய்.

தாய் அறியாத சூல் உண்டோ! மகன் இப்படி அழைப்பவனில்லையே என்று தோன்ற உடனே என்ன பிரச்சனையோ என்றே முகம் காண எண்ணினார்.

தாயை அறிந்தவனாக மெலிதாக சிரித்துக்கொண்டவன் அழைப்பை ஏற்க, மகனின் முகத்தைத்தான் முதலாக அவதானித்தார்.

அது வழக்கத்தைவிட வெகுவாக பிரகாசிக்கவும்தான் அவனைச்சுற்றி அமர்ந்திருந்த மூத்த தேனீக்களின் இருப்பைக் கண்டார்.

“ரோமியோ 2.o ‘வ’ கண்டுபிடிக்கப் போறேன்னு சொன்ன, இப்போ உன்னை பார்த்தாதான் ரோமியோ மாதிரி இருக்கு அருமா” என்றார் கேலிக் குரலில்.

கூடவே, " கங்கைக் கரைத் தோட்டம் கண்ணிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே…” என்று ராகமிழுத்து அவர் பாட, " அம்மா” என்றான், போலியாக முறைத்து.

"ஏனாத்தா, எங்களையெல்லாம் பார்த்தா கன்னிப் பொண்ணாட்டமா இருக்கு” என்ற பெரியாத்தா ஊடே புக, அதற்குப் பின் அரவிந்தனின் கைகளுக்கு போன் திரும்பவே இல்லை.

ஒருவர் மாற்றி ஒருவர் கமலம்மாவுடன் கலகலக்க,
“நீ கவலைப் படாத தாய்! அடுத்த வருஷத்துக்குள்ள ஒம் பேரன் உம் மடியில ஒன்னுக்கடிப்பான்.

“அதுக்கு நாங்க பொறுப்பு” என்றதும்,

"எதே” என்றான் மணிகண்டன் அதிர்ச்சியாகி. அவர்களின் வெள்ளைத் தலையையும், சுருங்கிய தோல்களையும் அவன் ஏற இறங்கப் பார்க்க,

"அட கூறு கெட்டவனே! நல்ல பொண்ணா பார்த்து கட்டிவைப்போம்னு சொன்னேன்டா" என்று அவன் மண்டையில் தட்டினார் பெரியாத்தா.

மீண்டும் வண்டி கிளம்பிய இருபது நிமிடங்களுக்கெல்லாம் பசுபதி கோவில் அவர்களை இனிதே வரவேற்க, ஊருக்குள் நுழைந்ததுமே இரம்மியமானக் காற்று அவர்களை அரவணைத்துக்கொண்டது.

பச்சைப் பசெலென கண்ணுக்கு எட்டிய தூரம் வரை குளுமை மட்டுமே ஆதிக்கம் செலுத்திய ஆலிங்கனத்தை விவரிக்க வார்த்தைகள் ஏது?

காற்றில், விளைந்த நெற்பயிர்களின் வாசம் அடிநெஞ்சுவரை ஆழமாக இறங்க, ஆழ்ந்து சுவாசித்தான் அரவிந்தன். அருந்தவம் புரிந்தாலன்றி நுரையீரலில் நர்த்தனமிடும் மந்தமாருதத்தை அனுபவிக்கக் கூடுமா!

“இப்படி ஒரு சொர்க்கப் பதியை விட்டுட்டா சின்னா அந்தச் சுள்ளிக் காட்டில் வந்து கிடந்துச்சி” என்றார் சரஸ்வதிப் பாட்டி.

ஓரக்காடும் நெல் விளையும் செழிப்பான பூமிதான் என்றாலும் பசுபதி கோவிலுடன் ஒப்பிடுகையில், இந்தப் பசுமையும், குளுமையும் தூய்மையும் ஒப்பற்ற ஒன்றாகவே தோன்றிற்று.

இயற்கையே இறங்கிவந்து ஆட்சி செய்திருந்தாள்.

இரு பக்கமும் வண்டியின் பாதி உயரத்திற்கு வளர்ந்திருந்த நெற்பயிற்களைக் கண்டவர்கள்,

“நெல்லு இவ்ளோ உயரமா" என்று வாயைப் பிளக்க, “சின்னாவின் அறிவுத்தலில் இந்தக் கிராமத்தில் பாதிபேருக்கும் மேல பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடுறாங்க பாட்டி" என்றான் அரவிந்தன் எல்லாம் தெரிந்தவனாக.

அந்த ஊர் மண்ணும், காற்றும், வற்றாத நீர்ப் பாசணமும் அதன் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாயிற்று.

அவன் முகத்தில் ஆழ்ந்த ஒரு அமைதி.

அந்த நெற்புதருக்குள் சின்னாவினுடையது எதுவாய் இருக்கும்? பலமான யோசனையுடனே காட்சிகளில் தீவிரமாயின அவன் கண்கள். அதற்கும் காரணம் இருந்தது.

இந்த இடைப்பட்ட நாட்களில் சின்னாவை பற்றிக் கிடைத்த சிறு துரும்பைக்கூட அவன் விட்டு வைக்கவில்லை.

நேரடியாக நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் அலவலகத்திற்கே சென்று வந்திருந்தான். அதனால்தான் சுந்தரி பெண்ணின் பள்ளிக்கும் பத்திரப் பதிவு அலவலகத்திற்கும் சரவணப் பெருமாளை போகச் சொல்லி அவன் பணித்தது. அவரும் அந்தா இந்தா என்று நாட்களைக் கடத்தி ஒருவேலையை மட்டுமே முடித்திருந்தார்.

அந்த அலவலகத்தில் பகிரப்பட்ட செய்திதான் சின்னாவின் தேடுதல் வேட்டையில் அவனைத் தீவிரமாக்கியது. கூடவே எச்சரிக்கையாயும்.

“தம்பி, சின்னாவ அவார்ட் குடுக்கிறதுக்காக மட்டும் நாங்க தேடல. அவார்ட்க்கெல்லாம் அப்பாற் பட்ட மனுஷன் அவர். அதை அவர் விரும்பினதும் இல்ல.

சின்னா மீட்டெடுத்தது குழியடிச்சான், வேடன் சம்பா மட்டும் இல்ல” என்றவர் ஒரு நிமிடம் நிறுத்தினார்.

நீண்ட யோசனைக்குப் பின், "கருடன் சம்பா” என்றார் தன் ஆழ்ந்த குரலில்.

“இதை நாங்க இன்னும் அதிகாரப் பூர்வமா கவர்மெண்ட்டுக்கே தெரியப்படுத்தல தம்பி.

நீங்க இவ்ளோதூரம் தேடி வந்ததுலயே இந்த கேஸ்ல உங்க முனைப்பு தெரியுது. அந்த ஒரு காரணம்தான் இந்த விசயத்தை உங்ககிட்ட பகிரத் தோணுச்சி” என்றவர் சில காணொளிகளை அவனுக்குக் காட்டினார்.

அதைக் காட்டி, “இதுதான் கருடன் சம்பா” என்றார்.

அதில், நாலு முதல் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக விளைந்து நின்றன நெற்பயிர்கள்.

“எப்பேர் பட்ட நோயா இருந்தாலும் அதுலருந்து ஒருத்தன் மீண்டுட்டா, திரும்ப பழைய வலிமைக்கு
தெம்பா கட்டு செட்டா உட்கார வச்சிடும் தம்பி இந்த இரகம். இதோட கஞ்சிக்கு அவ்ளோ பவர் இருக்கு. இது ஒரு மெடிசனல் இரகம் தம்பி.

1911 ‘ல’ கள்ளக்குறிச்சி பக்கம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தை வேலுன்னு ஒரு பண்ணையார் உருவாக்கினதுதான் இந்த பயிர். அன்னைக்கு அந்த ஊரே அவரை கேலி பேசி சிரிச்சிதாம். ஆனா அது ஆள் உயரத்துக்கு விளைஞ்சி நின்னப்போ எல்லாம் மலைச்சி போய்ட்டாங்களாம்.

ஒரு காலத்துல கிட்டதட்ட அனைவராலும் பயன்படுத்தப்பட்ட நெல் வகை. பசுமைப்புரட்சின்ற பேர்ல வெளிநாட்டு குறிகிய காலப் பயிர் வகை வந்து காலப்போக்குல இது அழிஞ்சி போச்சி.

இன்னைக்கு நிறையபேர் இந்த கருடன் சம்பாவ மீட்டெடுக்க முயற்சி பண்ணினாலும் அதுல வெற்றி அடைஞ்சவர் சின்னா ஒருத்தர்தான்”

அவர் சொல்வதை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன், ‘இப்போ அதில் என்ன பிரச்சனை’ என்பதாகப் பார்த்திருந்தான்.

“பிரச்சனையே இங்கதான் தம்பி ஆரம்பிக்குது" என்றவர் அடுத்தக் காணொளியை ஓட விட்டார்.

அதில் அதே இரகப் பயிர் சுற்றிலும் வேறு பயிர்களால் சூழப்பட்டு மத்தியில் கொஞ்ச இடத்தில் மட்டும் வளர்ந்து அறுவடைக்கு காத்திருந்தது. அந்தக் காணொளியைக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தவன் ஒரு வெளிநாட்டவன்.

“இதுவும் கிட்டதட்ட அதேப்போலத்தான் இருக்கு. ஆனா..?” என்றவன் கேள்வியாக நிறுத்த,

“இது எப்படி வெளிநாட்டிலன்னு கேட்க வர்றீங்க இல்லையா" என்றவர் சிரித்தார். அதில் விரக்தியும் சற்றே கவலையும்.

“நம்ம பாரம்பர்ய நெல் வகைக்கு அவன் பேட்டர்ன் ரைட் கேட்டு விண்ணப்பிச்சிருக்கான் தம்பி" என்றார் கோபமாக.

"நாம நம்ம பாரம்பரிய நெல்வகைகளை கைவிட்டதன் விளைவு, இன்னைக்கு நம்மளோட நிறைய வெரைட்டிக்கு அமெரிக்காகாரனும், பிலிப்பைன்ஸ் காரனும் பேட்டர்ன்‌ரைட் வாங்கி வச்சிருக்கான்” என்று பொறுமினார்.

“இதையும் பாருங்க" என்று மற்றுமொரு காணோளியை தேடி எடுத்துப் போட, அதில் வெளிநாட்டில் ஓடிய அதேக் காணோளி ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் பசுபதி கோவில் ஊராட்சி உங்களை வரவேற்கிறது என்ற பெயர்ப் பலகையுடன்.

“சார்" என்று அதிர்ந்து இருக்கையிலிருந்து எழுந்திருந்தான் அரவிந்தன்.

அவனை சிறு மெச்சுதலுடன் பார்த்தவர், “நீங்க நினைக்கிறது நூறு பர்சண்ட் உண்மை தம்பி. அவன் காட்டுற வீடியோ உண்மையில் நம்ம சின்னாவோடது” என்றார் நிதானமாக.

இந்த வீடியோ சின்னா சில வருஷங்களுக்கு முன்னாடி அனுப்பினது. ஆனா துரதிர்ஷ்ட வசமா அது அறுவடைக்குத் தயாரா இருந்த நேரத்தில எல்லாம் தீக்கிரையாகிடுச்சி” என்றார்.

“ சேம்பிள் சீட்ஸ் எதும் எடுக்க முடியாததால நம்மால கருடன் சம்பாவுக்கு பேட்டர்ன் ரைட் வாங்க முடியல. அந்த வீடியோல கருடன் சம்பாவ சுத்தி ஏழு அடி உயரத்தில நிற்கிறதுதான் குழியடிச்சான்” என்றவர்,

“என்ன காரணமோ, சின்னா குழியடிச்சான் பயிர்களுக்கு நடுவுல பத்திரமாத்தான் இந்தக் கருடன் சம்பாவ மீள் உருவாக்கம் பண்ணி இருக்கார். ஆனாலும் அசம்பாவிதம் நடந்தது நம்ம துரதிர்ஷ்டம்.

அதற்குப்புறம் சில மாசங்களா சின்னாகிட்டருந்து எந்தத் தொடர்பும் இல்ல.

பழைய அவரோட அட்ரஸ்ல தொடர்புகொண்ட லட்டர்லாம் ஒன்னு பதிலே இல்ல. இல்லைன்னா எங்களுக்கே திரும்பி வந்துச்சி.

கிட்டதட்ட கருடன் சம்பா திரும்ப கிடைக்கவே கிடைக்காதுன்ற முடிவுக்கு நாங்க வந்திருந்தப்பதான் திடீர்னு ஒருநாள், முதலில் நீங்க பார்த்த வீடியோ எங்க ஆஃபீஸ்க்கு போஸ்ட்ல வந்தது.

எப்படியோ மீண்டும் கருடன் சம்பாவ உருவாக்கி இருக்கார் சின்னா.

அந்த வீடியோ வந்தது ஓரக்காடு போஸ்ட் ஆஃபீஸ்னு தெரிஞ்சிக்கிட்டோம். அப்புறம் சில மெயில்ஸ். அதுவும் சின்னாகிட்டருந்து. ஆனா திரும்ப தொடர்பு கொண்டா பதில் எப்பவாவது வரும். அவர் தொடர்பு கொண்ட போன் நம்பரும் ஒவ்வொருநேரம் ஒவ்வொண்ணா இருந்துச்சி.

திருப்பிக் கூப்பிட்டா ஒன்னு வயசான பாட்டி பேசுவாங்க இல்ல ஸ்கூல் பிள்ளைங்க.

எதுக்காகவோ அவர் தன்னை மறைச்சி வாழ்ந்திருக்கார்.

ஆஹா சேம்பிள் கிடைச்சிடுச்சின்னு நாங்க கொண்டாடின வேளையிலதான் அவர் காணமப் போய்ட்டார்.

அவர் உயிருக்கு ஆபத்தா இருக்குமோன்னுதான் உடனே கமிஷ்னர பார்த்து கம்ப்ளைண்ட் குடுத்தேன்” என்றவர், "அற்புதமான மனுஷன் சார் சின்னா" என்றார்.

“எங்க அய்யா நெல் ஜெயராமனோட ஒவ்வொரு நெற்புரட்சி நடைபயணத்திலும் தவறாம வந்து கலந்துக்குவார்.

ஜெயராமன் அய்யாவே தன் கூட வந்த அந்த இளைஞனின் துடிப்புக் கண்டு முதல் கடிதமா அவருக்கு அனுப்பச் சொல்லுவார். எந்தத் தலைபோற காரியமாயிருந்தாலும் வருஷா வருஷம் நடக்கிற நெல் திருவிழால சின்னா தவறாம கலந்துப்பார்” என்றவர் நெகிழ,

"விழால எடுத்த போட்டோஸ் எதும் இருக்கா” என்றான் அரவிந்தன் கடமையாக.

“இல்ல தம்பி. இருந்தா கமிஷனர் ஆஃபீஸ்லயே குடுத்திருப்பனே. ஏனோ சின்னா இப்போல்லாம் திருவிழாக்கு வர்றதே இல்ல" என்றவர் பாவம் அறிந்திருக்கவில்லை.

அந்த ஒற்றைநாளில்தான் சின்னா என்ற மனிதன் தன் மொத்த வாழ்க்கையும் தொலைத்திருந்தான் என.

“இரண்டு மூன்று பழைய போட்டோஸ்தான் இருக்கு” என்றவர் சிலதைத் தேடி எடுத்துப் போட, எதிலுமே சின்னாவின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக புள்ளியாகத்தான் தெரிந்தான் வேஷ்டிக் கட்டிய இளைஞன் ஒருவன்.

“சின்னா ஒருத்தருக்குத்தான் அந்த சீட்ஸ் இருக்கிற இடம் தெரியும். நம்ம நாட்டு பாரம்பரிய விதைகள நிறையவே தொலைச்சிட்டோம்.

மீண்டும் அந்தத் தவறு நடந்திரவே கூடாது தம்பி” என்று அரவிந்தனின் கைகளைப் பற்றிக் கொண்டார் அவர்.

“கூடவே… நம்ம சின்னாவையும்” என்றவரின் குரல் கலங்கி வர, "நிச்சயமா என்னால முடிஞ்சதை செய்வேன் சார்” என்றவன் அவர் விரல்களை இறுகப் பற்றி உறுதியளித்திருந்தான்.

சின்னாவின் உயிருக்கு ஆபத்திருக்கக் கூடும் என்று அறிந்த நொடியிலிருந்து எச்சரிக்கையைக் கடைப்பிடித்தான் அரவிந்தன்.

ஜீப்பைக் கூட பசுபதிக் கோவிலை நெருங்கும் முன் எங்காவது நிறுத்திவிட்டு வேறு வாகனம் பிடித்து ஊருக்குள் நுழைவதுதான் அவனது திட்டமாயிருந்தது.

போலீஸ் தேடுவது தெரிந்தால் அதுவே சின்னாவுக்கு ஆபத்தாய் முடியலாம். அதற்கெனவே போலீஸ் உடையையும் இருவரும் தவிர்த்திருந்தார்கள்.

அந்நேரம் வசமாய் வண்டியோடு பாட்டிமார்கள் வந்து சிக்க, வாகாய் பயன்படுத்திக் கொண்டான் அவன்.

அவன் நினைத்திருந்தால் அவர்களை எளிதாக தவிர்த்திருக்க முடியும். ஆனால் உறவினர்கள் நட்புக்கள் என்ற போர்வையில் அந்த ஊருக்குள் நுழைய அவர்கள் உதவி தேவைப்படவே நொடிநேரத்தில் தன் திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டான். அதுவும் பாட்டிகளின் அலப்பறை அவனது விசாரணை மறைமுகமாய் நடக்க பேருதவியாய் இருக்குமென திடமாய் நம்பினான்.

இதில் அவன் அவர்களை பயன்படுத்திக்கொண்டானா இல்லை அவர்கள் அரவிந்தனை பயன்படுத்திக் கொண்டார்களா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

எல்லாவற்றையும் நினைத்தபடி ஆளுயரம் வளர்ந்த பயிர்களை பார்வையிட்டுக் கொண்டே வந்த அரவிந்தனுக்கு சின்னா இந்த ஊரில் இருக்கக் கூடும் என்பதில் எள்ளளவும் நம்பிக்கையில்லைதான். ஆனால் அந்த சேம்பிள் சீட்ஸ்?

அதேநேரம் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பிரதானக் கட்டிடத்தில்,

“I heard his movements are being noticed outside.”

(அவனின் நடமாட்டம் வெளியில் இருப்பதாகக் கேள்வி பட்டேன்) என்ற ஒரு ஆங்கில குரலைத் தொடர்ந்து,

“அவன் காதல் அப்பேற் பட்டது சார்" என்று கடகடவெனச் சிரித்தது ஒரு தமிழ் குரல்.

“Finish him off once you get the samples.” என்ற குரலைத் தொடர்ந்து, “கண்டிப்பா சார்” என்றது அந்த எட்டப்பனின் குரல்.

சின்னா வருவான்…

(மந்த மாருதம்- மெல்ல வீசும் தென்றல். பதி- இருப்பிடம்/வசிக்கும் பகுதி)


மக்களே! இதில் வரும் நெற்பயிர்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு போரடிக்கிறதா?

இன்று அரசி உணவைச் சாப்பிடாதே உடல் எடைகூடும், நீரழிவு நோய் வரும் என்றெல்லாம் நம்மை வேறு உணவுப் பழக்கத்திற்கு மாற்றியமைத்து விட்டார்கள்.

ஆனால், உடல் எடையைக் குறைக்கவென்றே பிசினி அரிசி என்றொருவகை உண்டென்றென்பதை நாம் அறிவோமா?

நீரழிவைக் காக்க மாப்பிள்ளைச் சம்பா, குள்ளக் காரு. ஏன் பிள்ளை பிறந்தவுடன் பால் சுரக்க “பால் குடவாளை” என்றே ஒரு இரகம் உண்டு.

யானைக்கட்டி போரடித்த பாரம்பரியத்தைக் கொண்டவன் எம் தமிழன்.

அந்த பாரம்பரியத்துக்கு சிறப்பு சேர்த்தவர்கள் ஒரு சிலரையாவது உங்களுடன் பகிர முடிந்த சிறு மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்.
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: suji

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
Great info. 👍 👌 👍. பாட்டிகள்தான் கேடி பார்த்தா இந்த அரவிந்து கேடீக்கே கேடியா ரவுடீஸ் Use panni இருக்கான்.பாரம்பரீய நெற்பயிற்கள் விளக்கம் அருமை. நீரழிவு நோய் Just lifestyle changes we can reverse it . Best millets and parampariya arisigal
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
Great info. 👍 👌 👍. பாட்டிகள்தான் கேடி பார்த்தா இந்த அரவிந்து கேடீக்கே கேடியா ரவுடீஸ் Use panni இருக்கான்.பாரம்பரீய நெற்பயிற்கள் விளக்கம் அருமை. நீரழிவு நோய் Just lifestyle changes we can reverse it . Best millets and parampariya arisigal
போலீசாச்சே...😝
நன்றிப்பா...🥰🥰🥰
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
சரியா சொன்னீங்க ரைட்டர்.....இப்படி தான் நாம நிறைய நெல் வகைகளை துளைத்து விட்டோம்.....
இப்ப தான் இப்படி இருப்பதை எல்லாம் கேள்வி பட்டோம்.....
யாரு அந்த எட்டப்பன்????
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சரியா சொன்னீங்க ரைட்டர்.....இப்படி தான் நாம நிறைய நெல் வகைகளை துளைத்து விட்டோம்.....
இப்ப தான் இப்படி இருப்பதை எல்லாம் கேள்வி பட்டோம்.....
யாரு அந்த எட்டப்பன்????
உண்மைதான்... நிறைய வகைகள் இப்போ இல்ல...