• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 9

STN - 39

Member
சின்னா - 9

“நீங்க போலீஸ்தான தம்பி!” என்றுவிட்டு
அரவிந்தனை நேர்ப்பார்வையாய் பார்த்திருந்தார் சண்முகவேல்.

‘இதுக்காடா காலைலர்ந்து இவ்ளோ அக்கப்போர்’. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே முகச்சவரம்கூட செய்யக்கூடாதென மணிகண்டனை எச்சரித்திருந்தான் அரவிந்தன்.

கிராமம் என்பதால் முடி வெட்டுகூட போலீஸ் பாணியில் இருக்காது அவர்களிடம். இதில் காலையிலிருந்து எத்தனை விசாரணை! அவர்களிடத்தில் எல்லாம் எத்தனைப் பொய்? வாய் வலித்ததுதான் மிச்சம். அச்சம் கொண்டு அவன் அரவிந்தனை நோக்க,

அரவிந்தனின் விழிகளில் எச்சரிக்கைக் கூடியதேத் தவிர பதில் சொல்லவில்லை அவன். மென்நகையுடன் அதே நேர்ப்பார்வை பார்த்திருந்தான்.

சிறு மெச்சுதல் அவரிடம்.

“சிவநேசன் தேர்வு சோடை போகுமா” என்றவர் மனைவியிடம் திரும்பி கண் காட்டினார்.

சில நிமிடங்களில் கையில் பெரிய கொத்துச் சாவியுடன் அவர் வர,

"என்னைக்கும் ஒருநாள், நான் வராம, கவர்மெண்ட்டோ, போலீசோ என்னைத் தேடி வந்தா நல்லா கவனிச்சி அனுப்பச் சொல்லி சொல்லிருக்கான்.

பொண்டும் பொடிசுமா வந்திருக்கீங்க. இராவுல திரும்பிப்போறது சரியா வராது. என்றவர் அந்தச் சாவியை வாங்கி அரவிந்தனின் கைகளில் திணித்தார்.

“எலேய் இசக்கி” என்று குரல் கொடுக்க, தலையிலிருந்த துண்டை அவிழ்த்தபடி, “அய்யா" என்று ஓடிவந்து நின்றான் ஒருவன்.

"இவங்கள நம்ம சிவநேசன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் தங்க வை. அறையவும் சுத்தம் பண்ணிக் குடு” என்றவர்,

அரவிந்தன் மறுக்க வழியின்றி, "இங்கதான தங்குவிய மெல்லப் பேசுவோம்” என்றார்.

மனைவியிடம் திரும்பி, “தோட்டத்துல தண்ணிய திருப்பியாச்சான்னு ஒரெட்டு பார்த்துட்டு வரேன். கவனிச்சிக்க" என்றவர் மனைவியிடம் கண்காட்டிவிட்டு தன் புல்லட்டில் ஏறி புறப்பட்டார்.

“என்ன சார் அவர் பாட்டுக்கு, போலீசாங்கிறார். தங்குங்கன்னு போய்கிட்டே இருக்கார். நீங்களும் சாவிய வாங்கிட்டு பேசாம வர்றீங்க" என்றான் முன்னால் நடந்து சென்ற இசக்கியின் காதில் விழாத வாறு.

“வேறு என்ன சொல்லனும் சொல்லு" என்றான் அரவிந்தன் மென் சிரிப்புடன்.

“அப்போ இங்க தங்கப்போறமா சார்! சின்னா கவனிக்கச் சொன்னாராம், இவர் கவனிக்கிறாராம். இங்க என்ன விருந்து சாப்பிட்டு தங்கி சுத்திப்பார்க்கவா வந்தோம்?" என்றவன் புலம்ப சத்தமிட்டுச் சிரித்தான் அரவிந்தன்.

"அவர் சொன்னது கவனிச்சியா! போலீஸ் தேடி வரும்னு ஏற்கனவே சின்னா கணிச்சிருக்கார். அதுவும் இல்லாம தெரிஞ்சே கேட்கிறார்னு அவரோட நேரான பார்வையே சொல்லுது. போலீஸ் இல்லன்னு அவர்கிட்ட நாடகமாடினா அவர் பார்வையில அது கேவலமாயிருக்கும் மணி” என்றான் அவன்.

"நீ சொன்னாலும் இல்லனாலும் நான் சுத்திப் பார்க்கத்தான் வந்தேன் மணி" என்று சிரித்தவன்,

“சின்னா கவனிங்கன்னு சொன்னது அது இல்லை இது" என்றான் தன் கையிலிருந்த சாவியைக் காண்பித்து.

மணி ஒன்றும் புரியாமல் முழிக்க, “இரு" என்றவன்,

“இசக்கி, இந்த ஊருக்கு யார் வந்தாலும் இங்கதான் தங்குவாங்களா?" என்றான் சும்மா தெரிந்து கொள்வதுபோல்.

“அய்யோ இல்லீங்களே! எனக்கே ஆச்சர்யமாதாங்க இருக்கு. சம்முகவேல் அய்யா வீடே மாளிகை மாதிரி இருக்குங்களே!

ஏன் உங்கள இங்க தங்கச் சொன்னாகன்னு புரியலைங்க” என்றான் தலையைச் சொறிந்து.

“பார்த்தியா" என்று அரவிந்தன் கண்ணை காண்பிக்க, மணிகண்டனுக்கு புரிந்தும் புரியாத நிலைதான்.

சின்னாவைப் பற்றிய முழு இரகசியங்களை இன்னமும் மணிகண்டனுக்கே அரவிந்தன் சொல்லியிருக்கவில்லை.

பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் வீட்டுச் சாவியைத் தரவும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். அவன் தேடிவந்ததும் நெற்பயிர்களைத்தானே.

ஏன் அவர் தரவில்லை என்றாலும் அவனே சும்மா பார்க்க ஆவலாய் இருப்பதாகச் சொல்லி சாவியைக் கேட்பதாகத்தான் இருந்தான்.

மறுத்தாலும் அவரிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்லிச் சாவியை பெற்றிருப்பான்தான். அதற்கொரு காரணமும் இருந்தது.

சின்னாவே நம்பி தன் நிலத்தை ஒப்படைத்திருக்கார் என்றால் அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டுமென்று கணித்திருந்தான். அதனால்தான் அவர் போலீசா என்று கேட்டதும் அதிரவில்லை அவன்.

“சிவநேசன் அய்யா போனதுக்கு அப்புறம் வாரத்தில ஒருநாள் கூட்டி மொழுகி பார்த்துக்கச் சொல்வாரே தவிர யாரையும் இங்க தங்க விட்டதில்லைங்க” என்றான் இசக்கி, கூடுதல் தகவலாக.

கூடாரமே ஐம்பது பேர் குறையாமல் தங்கலாம் போல் இருக்க, அங்கேயே கடையை விரித்தனர் மூத்த தேனீக்கள். சுற்றிலும் நாலு அறைகள் மச்சியில் நான்கு அறைகள். அதற்கும் மேல் ஓலையால் வேயப்பட்ட அறை அல்லது வீடேன்று சொல்ல வேண்டுமோ? சகல வசதிகளுடன் இருந்தது அந்தக் குடில்.

அதையொட்டி பெரிய நீள்வட்ட வடிவில் திண்டு கட்டிவிடப் பட்டிருக்க வித்தியாசமாய் இருக்கவும் கேள்வியாய்ப் பார்த்தான் அரவிந்தன். இதேப்போல் செவ்வக வடிவ திண்டை வீட்டின் பக்கவாட்டிலும் கண்டிருந்தான்.

“அது நெல்லு காய வைக்கங்க. சமயத்துக்கு மிளகா, புளி, அம்மா அப்பளத்தக் கூட இங்க காய வச்சி எடுத்துப்புடும்னு சின்னா அய்யாக்கும் அம்மாவுக்கும் சண்டையே வந்துடும்ங்க” என்று சிரித்தான் அவன்.

இரவாகியிருக்க அனைவருக்கும் பசித்தது. “என்னப்பு தங்க வச்சிப்புட்டு வயித்துக்கு ஒன்னையும் காணோம். அடுப்ப பத்த வச்சிருவமா? என்றார் சரசுவதிப்பாட்டி அங்கிருந்த காய்ந்த குச்சிகளைப் பார்த்தபடி.

“கல்வித்தாயே!” என்றான் மணிகண்டன்.

சரசுவதிப்பாட்டி திரும்பிப் பார்க்க, “அதான் வந்ததுமே வீட்டச் சுத்தியிருந்த மா, பலா, வாழை, மாதுளை, கொய்யா, சப்போட்டான்னு ஒன்னு விடாம பறிச்சி முழுங்கியாச்சில்ல! இன்னமுமா பசிக்குது?” என்றவன் கேட்கவும், புல்லட் சத்தம் வாசலை நிறைத்தது.

சண்முகவேல் பாண்டி அய்யாவும், அவரது மனைவியும் புன்னகையுடன் இறங்கி வந்தனர். ரஞ்சிதத்தின் கையில் பெரிய சாப்பாட்டுக் கூடையிருக்க, இறங்கியதும் அதைத், தான் வாங்கிகொண்டார்.

“நம்ம சின்னாவுக்கும் குடும்பம்னு இருந்திருந்தா இதேபோல மனசொத்த தம்பதியா வாழ்ந்திருக்கும்ல” அவர்கள் ஜோடிப்பொருத்தத்தைக் கண்டு பெரியாத்தாவின் காதில் கிசுகிசுத்தார் பார்வதிபாட்டி.

“ம்ம்.. காலையிலே பார்த்தீல்ல, அவர் கண் காமிச்சதும் அதை புரிஞ்சிட்டு அந்த புள்ள எண்ணையா நின்னத. காலத்துக்கும் நல்லாருக்கட்டும்” என்றார் பெரியாத்தா. அவர்கள் நெருங்கியதும், அரவிந்தன் வரவேற்பாய் புன்னகைத்தான்.

தானும் சிறு புன்னகையை தவழவிட்டு, “எலே இசக்கி, பின்னாடியிருக்க வாழை இலையை அறுத்துட்டு ஓடியா” என்றவர் தானே ஓரமாய் சுருட்டி வைத்திருந்த பெரிய பனை ஓலையால் வேயப்பட்டிருந்த பாயை எடுத்து விரித்தார்.

இசக்கியுடன், வண்டி ஓட்டி வந்த முருகேசனும் சேர்ந்துகொள்ள, இலையுடன் வந்தவர்களையும் சேர்த்து,

“வாங்க, எல்லாரும் சாப்பிடலாம்” என்றழைத்தவர், தானே மனைவியுடன் சேர்ந்து பரிமாறவும் செய்தார். சிறு விருந்தே அங்கு பரிமாறப் பட்டிருக்க, அன்பின் கட்டளையை மீற முடியாமல் வயிறு புடைத்திருந்தது அனைவருக்கும்.

சாப்பிட்டு முடித்து தேனீக்கள் பரிமாற மனைவி மற்றும், விருந்தினர்களுடன் அமர மறுத்துவிட்ட மருகேசனுடன் தானும் சாப்பிட்டு முடித்திருந்தார்.

திண்ணையில் அனைவரும் தளர்வாக அமர்ந்திருக்க, கூடாரத்திலிருந்த கண்ணாடி மறைப்பின் பின்னிருந்த கோப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் அகரன்.

“ஆத்தோவ், இங்க பாரு, என்னோடது மாதிரியே சின்னா தி ரோமியோ கபடி கப்” என்று தன்னுடையதையும் எல்லோரிடமும் துக்கிக் காட்டினான். இரண்டிலும் ஓரே பெயர் பதித்திருப்பதை அதிசயமாய்க் கண்டு.

“இங்க கொண்டு வாப்பா” என்றழைத்தார் சண்முகவேல். இரண்டு கோப்பையையும் பார்வையிட்டு, “சின்னாதான் உனக்கு கபடி சொல்லிக் குடுத்தானா” என்றவர், அகரனின் கோப்பையில் பதித்திருந்த பெயரை நெகிழ்ச்சியுடன் வருடினார்.

கல்லுக்குள்ளும் ஈரம் என்பது இதுதானோ! நொடிநேர கணவரின் முகவாடலை தாங்க முடியாத அவர் மனைவி ரஞ்சிதம்,

“எங்க சின்னா களத்தில இறங்கி நின்னா எப்படி இருக்கும் தெரியுமா?” என்றவர் பெருமையாய் சிலாகிக்க, அந்தப் பெண்மணி நினைத்தது போலவே சண்முகவேல் முகம் சடுதியில் புன்னகையை தத்தெடுத்திருந்தது.

மனைவியை அவர் செல்லமாய் முறைக்கவும் வெட்கமாய் சிரித்தார் அவர். அந்த வயதிலும் அவர்களின் காதல் அனைவரையும் வியக்க வைத்தது.

கணவரை கேலிப் புன்னகையால் பார்த்துக் கொண்டே, “நல்ல திமில் நிறைஞ்ச செவ்வலைக் காளை ஒன்னு ஜல்லிக்கட்டுல தன் திமிலை சிலுப்பி, காலால மண்ணைக் குத்தி புளுதிய பறக்க விட்டா எப்படியிருக்கும்! அப்படியிருக்கும் எங்க சின்னா களத்தில் நின்னா” என்றார் ரஞ்சிதம் கண்ணை மூடி.

அவர் மூடிய கண்களுக்குள், சுற்றி ஊரே கூடியிருக்க, விசில் சத்தம் எட்டுத் திக்கிலும் பறக்க,

தன் புஜங்கள் சிறு மலைக்குன்றாய் உயர்ந்து நிற்க, கரை படியாத இதழ்கள் “கபடி.. கபடி,, கபடி இலயம் மாறாமல் ஸ்ருதி எழுப்ப, எதிராளியின் நகர்வை கூர்மையாய் அவதானித்தது அவனது கூரிய விழிகள்.

கபடி… கபடி… என்றதன் தாளம் தப்பாமல் செருப்பு அணியாத கால்களை மாற்றி மாற்றி செம்மண் புளுதியில் அவன் அழுத்தி எடுத்ததில் அவனைச் சுற்றி ஒரு புளுதிப் படலமே உருவாகியிருக்க, அவனின் கால்களின் அடுத்த நகர்வு என்னவாயிருக்கும் என்று எதிரியால் கணிக்க முடியாததாக்கியிருந்தது அந்த புளுதிப்படலம்.

சுற்றிலும் “சின்னா…சின்னா…” என்ற கத்தலில் தன் மீசையை நீவி விட்டுக்கொண்டான் அந்த இளைஞன்.

அதேநேரம், “அப்படி அந்த நெற்பயிரெல்லாம் எங்கதான் ஓளிச்சி வச்சிருக்க மாமா” என்றாள் சின்னாவின் மடியில் படுத்திருந்த பைங்கிளி.

“கருடன் எங்கடி இருக்கும்” என்றான் அவனும் அவள் மூக்கைக் கிள்ளி.

“சிகரத்துல.., மலை உச்சியில…, பாறை இடுக்குல” அவள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வர, அவன் சிரிப்புடன் தலையாட்டி மறுத்துக் கொண்டே வந்தான்.

“இதுக்குதான் ஒழுங்கா படி படின்னு சொன்னேன் கேட்டியா? பாரு கொஞ்சமும் மூளை வேலை செய்யறதில்ல” என்று சிரித்தவனில்,

“அது வேலை செஞ்சிருந்தா உன்னைய காதலிச்சிருப்பேனா மாமா” என்றவள் அவனிடம் கொட்டு வாங்கியே அடங்கினாள்.

தலையைத் தடவி சினுங்கியவளோ, “உன் உயிருக்கு ஆபத்திருக்குன்னு தெரிஞ்சும் நான் கூப்பிட்டதும் ஏன் சின்னு ஓடிவந்த” என்றவள் அவன் கணிவான பார்வையையே பரிசாகப் பெற, தன் கண்களை மூடிக்கொண்டாள்.

சில நொடிகளில் அவள் துயில் கொள்வதை சீராக ஏறி இறங்கிய மூச்சுக் காற்று உறுதிப் படுத்த, “என் உயிர் உன்கிட்டல்ல இருக்குடி” என்றவன் அவள் நெற்றியில் இதழ்பதித்துவிட்டு எழுந்துகொண்டான்.

தினசரி வழக்கமாய் அவள் தலையணைக்கு அடியில் மரமல்லி பூக்களை தூவிவிட்டவன், ஜன்னலோரம் வந்து நின்றான். கூர் விழிகள் வெள்ளியின்றி நிர்வாணமாய் காட்சியளித்த நீலவானை வெறித்திருக்க அவன் நினைவுகளும் பின்னோக்கி சென்றிருந்தது.

அன்று அத்தனை விசில் சத்தங்களுக்கு நடுவே “மாமா… ஐ லவ் யூ” என்று கத்தி விசிலை பறக்கவிட்டாள் அவள்.

சின்னா வருவான்...
 

Gowri Karthikeyan

Well-known member
Aww so cute.....
சின்னா - அன்பா காதல் இங்க யாருக்கும் தெரியாதா?????
அரவிந்தன் இவனும் அந்த விதைக்காக தான் வந்து இருக்கானா
 

STN - 39

Member
Aww so cute.....
சின்னா - அன்பா காதல் இங்க யாருக்கும் தெரியாதா?????
அரவிந்தன் இவனும் அந்த விதைக்காக தான் வந்து இருக்கானா
அரவிந்தனுக்கும் தெரியாது..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.
Top Bottom