• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 11

STN - 39

Member
சின்னா - 11

கண்ணில் கனலைத் தேக்கி கடந்த சில நிமிடங்களாக எதிர் வரப்பையே பார்த்து நின்றிருந்தார் சின்னாவின் தாய்மாமா கருணாகரன்.

“நம்ம குணசேகரனய்யா வயல தினைக்கும் பத்து நிமிஷமாச்சும் பார்த்துட்டே நின்னுடுறீங்க! அவருக்கும் உங்களுக்கும்தான் ஆகாதுங்கங்களே!”

வழக்கத்தைப்போல் இன்றும் குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்ட தன்முதலாளியிடம் இன்று தெரிந்தேயாக வேண்டும் என்று கேட்டுவிட்டான் சாத்தப்பன்.

பலமுறை இதேக் கேள்வியை கேட்டிருக்கிறான்தான். ஒன்று புன்னகைத்து கடந்துவிடுவார் அல்லது மௌனித்து கடந்துவிடுவார். ஆனால் இன்று வெறித்தது வெறித்தபடியே நின்றிருந்தார்.

பச்சைப் பசலென பூ வைக்கும் பருவத்திலிருந்த பயிர்கள் அவர் கண்களில் தீயை மூட்டின.

“மூணு வாரம் சென்றா எல்லாம் பூ பிடிச்சிடும்ங்க”

தன் முதலாளி பதில் சொல்லாததில் தானே யூகித்து அவர் கேட்காத கேள்விக்கும் பதில் சொன்னான் சாத்தப்பன்.

“பூக்கும் கதிர்விடாது சாத்தப்பா”

சாத்தப்பனின் கேள்விக்கு முதல்முறையாக வாயைத்திறந்தார் கருணாகரன்.
குரலில் எள்ளல்.

தன் வரப்புப் பக்கம் விலகி நடந்தார்.

“அதெப்படிங்கய்யா! நம்ம சின்னா கிணத்து தண்ணீ சோட போகாதுங்களே!”

“அதனாலதான் சொல்றேன். கதிர்விட்டாலும் அறுவடைக்கு வராது" என்றார் புதிராய். புரியவில்லை சாத்தப்பனுக்கு.

"விளையாடாதீங்கய்யா. வத்தாத ஊத்துத் தண்ணீ நம்ம சின்னா கிணத்துல இறங்குதுங்க. அந்தக் கிணறு இருக்கறவரை இங்கன முப்போகம் விளையும்ங்கய்யா” என்றான் சாத்தப்பன் விடாமல்.

“இந்தமுறை விளையாது" என்று புன்னகைத்தார்.

பேசிக்கொண்டே அதே கிணற்றுப் பக்கம் வந்திருக்க, ஏன் இப்படி உளறுகிறார் என்ற ஆர்வத்தில் உள்ளே எட்டிப்பார்த்தான் சாத்தப்பன்.

அங்கே இளஞ்சோடிகள் அமர்ந்திருக்க கண்டதும் சங்கோஜத்துடன் கருணாகரனை ஏறிட்டான். அவர் செல்ல மகள் அல்லவோ உள்ளே அமர்ந்திருப்பது.

யாருக்கும் தெரியாத விசயமல்ல. அன்பிலரசிக்கு சின்னா. சின்னாவுக்கு அன்பிலரசி என்பது ஊருக்கே தெரிந்ததுதான்.

அதில், “அய்யா பாப்பாக்கு படிப்புதான் முடியப்போகுதுல்லீங்க கல்யாணத்த பண்ணிடலாம்லங்களே! வெண்ணைய கைல வச்சிட்டு மாப்பிள்ளைக்கு அலையவா போறீங்க!” என்றான் சாத்தப்பன்.

"தாராளமா பண்ணிடலாம் சாத்தப்பா! சிவநேசன் இந்த கிணத்தை எம் பொண்ணு பேர்ல எழுதி வச்சா" என்று கொக்கிப் போட்டு நிறுத்தினார்.

“அய்யா!" என்றான் சாத்தப்பன் அதிர்ந்து.

"உங்களுக்கு தெரியாததுங்களா? மூணு தலைமுறையா இரண்டு குடும்பமும் இந்தக் கிணத்துத் தண்ணிய பகிர்ந்துக்கிறாங்க. அதெப்படிங்க சாத்தியமாகும்” என்றான்.

“கிணறு சின்னாவோட நிலத்துலதான இருக்கு!”

“இருக்கலாம்ங்கய்யா. ஆனா மூணு தலைமுறையா இரண்டு குடும்பமும் ஒன்னு மண்ணா பழகுதுங்களே!

எத விட்டுக்குடுத்தாலும் நம்ம சின்னாவோட அய்யன் (அப்பா) சிவச்சாமி அய்யா, கிணத்த விட்டுக்குடுக்க ஒத்துக்க மாட்டாருங்க. நண்பன் குணசேகரன்னா அவருக்கு உசுருங்க”

‘மூன்று தலைமுறை நட்பு’ இதழ்கள் ஏளனமாக வளைய, வெறுப்பை உமிழ்ந்தன கருணாகரனின் கண்கள்.

அந்த நட்புதானே அன்று நான் கட்டிக்கவிருந்த என் அத்தைமகளை தூக்கிச்சென்று நண்பனிடம் ஒப்படைக்க வைத்தது.

“அதுவும் இல்லாம பொண்ணு வீட்லதானுங்க சீர் குடுப்பாங்க” என்றான் சாத்தப்பன்.

“என் சொத்து மொத்தத்தையும் கூட என் மருமகனுக்கு எழுதிவைப்பேன் சாத்தப்பா. ஆனா இந்த ஒத்தைக் கிணறு” என்று நிறுத்த, எதிரே இருந்த கிணற்றை கண்கள் வெறித்தது.

"இது எனக்கு வேணும்” என்றார் ஒருவிதத் தீவிரத்துடன்.

ஆருயிர் நண்பனுக்காக சிவநேசனின் தந்தை சிவச்சாமி மணப்பெண்ணைக் கடத்தி நண்பன் குணசேகரனுக்கு மணமுடித்து வைத்திருந்தார். இத்தனைக்கும் கருணாகரனின் தங்கையைத்தான் சிவச்சாமி மணம் முடித்திருந்தார்.

சொந்த மச்சானைவிட நட்பு பெரிதென்று அன்று சிவச்சாமி செய்தது அழியா வடுவாய் கருணாகரனின் மனதில் தங்கிவிட்டது.

திருமணத்தன்று மணமகளைக் காணாமல் அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்றது இருபது வருடங்களைத் தாண்டியும் இதோ இன்று நடந்ததுபோல் அவர் எண்சான் உடம்பும் இறுகிற்று.

மகன் செய்த தவறுக்கு சிவச்சாமியின் தங்கை மரகதத்தையே அதே மேடையில் மணம்முடித்து வைத்திருந்தனர் பெற்றோர்கள்.

மரகதம் நல்ல பெண். கணவனை அன்பால் குளிர வைத்தார்தான். ஆனால் அத்தை மகளுக்காக எட்டு வருடங்களாக தன் திருமணத்தைத் தள்ளிப்போட்ட கருணாகரனுக்கு, தான் கண்ட பெருத்த ஏமாற்றத்தைத் தாள இயலவில்லை.

மரகதத்தின் அன்பில் இரணம் ஆறினாலும் புரையோடிப்போயிருந்தப் புண்ணை ஆறவிடவில்லை அவர். வாழ்க்கையின் நீரோட்டத்தில், ஆற்று நீரின் அடியில் தங்கிவிட்ட படிமங்களாய் உறைந்து போய்விட்டது.

அவர் வெறித்து நோக்கிய குணசேகரன் வயலில் பாதி வயல் அவர் அத்தை மகளுக்குச் சொந்தமானது. நிச்சயத்தபடி மணமுடித்திருந்தால் இன்று அவருக்குச் சொந்தமாயிருக்கும். அவர் வரப்புடன் எதிர்வரப்பும் சேர்ந்திருந்தால் இன்று ஊரின் பெருந்தனக்காரர் அவரல்லவோ!

ஆனால் இன்று அந்தச் சொத்தையும் தாண்டி நெஞ்சில் வன்மம் குடிகொண்டிருந்தது. சொத்து சுகத்தை இழந்தாகினும், குணசேகரனை எதோ ஒரு வழியில் பழிவாங்கத் துடித்தார்.

அதற்கு அவர் கண்ணில்பட்டதுதான் இந்தக் கிணறு. இந்தக் கிணறு இல்லையென்றால் குணசேகரன் ஒன்றுமில்லாத பூஜ்ஜியம்.

மூன்று தலைமுறைக்குமுன் குணசேகரனது பூமியில் கிணறு தோண்டியபோது குறிப்பிட்ட அடியின் கீழ் அனைத்தும் பெரிய பெரிய பாறாங்கற்கள். அதைத் தகர்க்கவே ஆயிரமாயிரம் செலவு செய்தாகவேண்டும் என்ற நிலையில்தான் கைக்கொடுத்துத் தூக்கிவிட்டார் சிவநேசனின் தாத்தா. அன்றுமுதல் இன்றுவரை எழுதப்படாத ஒப்பந்தமாக இரு குடும்பமும் ஒரேக் கிணற்று நீரைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இதைத் தடுக்க தன் தங்கையைத் தூண்டிவிட்டுப் பார்த்தார்.

“உன் கிணத்து தண்ணியிலதான் அவன் கொள்ளை முப்போகம் விளையுது. நீ இங்க நெல்லு காயவைக்கிறேன்னு வெயில்ல வெதும்பற. ஏக்கருக்குன்னு கணக்குபோட்டு காசு வாங்கினாகூட நீ இராணிமாதிரி கால்மேல கால்போட்டு திங்கலாம். நாள பின்ன தண்ணி வத்திப்போச்சின்னா நீதான் நடுத்தெருவுல நிக்கனும் பார்த்துக்க” என்றார் தங்கையிடம் நைச்சியமாக.

திலகவதி நல்ல குணவதி. “தண்ணிக்கு காசா" சிரித்தார். “அள்ள அள்ளத்தான் ஊத்துத் தண்ணி இறங்கும்ணே! உனக்குத் தெரியாததா சொல்லு! அதுவும் இல்லாம எனக்கு என்ன குறை. அதே கிணத்துத் தண்ணி என்னை மட்டும் கைவிட்ருமாண்ணே. விளையறத காய வைக்க இடமில்லாம இங்க தவிச்சிட்டுக் கிடக்காக. அடப்போங்கண்ணே. எல்லாம் அவுங்க பார்த்துப்பாங்க” என்று கணவரைக் கைக்காட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

அதன்பிறகுதான் கருணாகரன் மரகதம் தம்பதியின் அன்புக்கு பாத்திரமாய் அன்பிலரசி பிறந்தாள். அன்று விடிய விடிய தூங்காமல் குழந்தையைத் தட்டிக்கொடுத்த தன் மருமகன் சிவநேசனை கண்கள் பளிச்சிட பார்த்திருந்தார்.

குழந்தையின் தடுப்பூசிமுதல் பால்டப்பாவரை ஆர்வமிகுதியில் குட்டி சிவநேசன் ஞாபகப்படுத்த, அவர் மனதில் விதொயொன்று முளைத்து வளர ஆரம்பித்தது.

“ஊசின்னா எனக்கு பயம் மரகதா! சின்னாவ அழைச்சிட்டு போ! அவங்கிட்டதான் பாப்பா அழமாட்டா” தடுப்பூசி போடக்கூட சிவநேசனுடன் அனுப்பினார். தெரிந்தே தந்தையின் கடமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தாயும் ஊசி குத்தும்போது அழுக, தானாக மடியில் தாங்கிக்கொண்டான் குட்டி சின்னா.

அன்று அவர் விதைத்த அந்த விதை அறுவடைக்குத் தயாராய் காத்திருக்கும் நேரம் வந்துவிட்டது. குதுகலித்தார் கருணாகரன்.

இதுவரை யாரும்கூட அவரது பழிவெறியை உணர்ந்ததில்லை. உணர்ந்துகொள்ள அவர் விட்டதில்லை என்பதே உண்மை.

பல வருடங்களாக நெருப்பு அணைந்துவிடாமல் தனக்குத்தனே எண்ணெய் ஊற்றிக்கொள்கிறார். அதுவும் இந்தக் கிணற்றைப் பார்த்து பார்த்துத்தான் அந்த நெருப்பும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்திருக்கிறது.

வற்றாத ஊற்றைக் கொண்ட கிணறு அவர் நெஞ்சில் எரியும் வன்மத்தையும் வற்றாமல் பார்த்துக்கொண்டதுதான் விந்தையிலும் விந்தை.

கண நிமிடங்களாக பல்வேறு உணர்ச்சிகள் தோன்றி மறைய கிணற்றையே வெறித்து நின்றிருந்த தன் முதலாளி சாத்தப்பனுக்கு புதிது.

“என்னதான் நீங்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியப்படாதுங்கய்யா. சிவச்சாமி அய்யா ஒருநாளும் தன் நண்பனுக்கு துரோகம் பண்ண மாட்டாருங்க” என்றான் சாத்தப்பன்.

சாத்தப்பனுக்கு கிணற்றுக்குள் இருக்கும் இளஞ்சோடி நினைவுக்கு வந்தனர்.

‘கிணற்றையும் கருணாகரனையும் மாறி மாறிப் பார்க்க, தொண்டையைக் கணைத்தார் கருணாகரன்.

அந்தச் சத்தத்தில், “மாமா அப்பா" என்றாள் அன்பிலரசி பயந்த பாவனையில்.

கிணற்றுக்குள் குரல் மந்தமாய் கேட்டிருந்தது.

“ஏன்டி, மாமா ஐ லவ் யூன்னு ஊருக்கு முன்னாடி கத்தும்போது உங்கப்பன் கண்ணுக்குத் தெரியலையா? மாந்தோப்புக்குள்ள குடுமிப்புடி சண்டை போட்டீங்களே அப்போ தெரியலையா உங்கப்பன். ரொம்ப பயம்தான்” என்றான் கேலிக்குரலில்.

“பெத்துப்போட்டதோட சரி! ஆசிரமத்துல தூக்கிப்போடுறமாதிரி என் கையில உன்னை தூக்கிக்குடுத்துட்டு, இந்த வயசிலயும் உங்கப்பனும் ஐத்தையும் ஜாலியா திரியுதுங்க. என்ன பிரயோஜனம் எனக்கு ஒரு கொழுந்தியாக்கு துப்பில்ல” என்ற சின்னாவின் காதைப் பிடித்துத் திருகினாள் அன்பிலரசி.

“கொழுந்தியா கேட்குதோ? பிச்சுருவேன் பிச்சி. என்னை வளர்த்தது உனக்கு அவ்ளோ சலிப்பா இருக்கா மாமா. நான் போறேன் போ" மூஞ்சைத் தூக்கியவள் எழுந்து கொள்ள இழுத்து உட்கார வைத்தான்.

“அப்பா என்னை தேடித்தான் வந்திருக்கும் மாமா. விடு"

“அதெல்லாம் உங்கப்பனுக்கு நீ இங்கதான் இருக்கன்னு தெரியும்" என்றான் அசட்டையாக.

அதேநேரம், “அன்பா ரொம்பநேரம் ஈரத்துல இருக்காத விரசா வீட்டுக்கு வா அப்பத்தா. என்ற கருணாகரனின் குரல் கிணற்றுக்குள் ஓங்கி ஒலித்தது.

‘நான் சொல்லல்ல’ என்பதாய் பார்த்தான் சின்னா.

“புள்ளைய கூட்டி வரும்போது வரப்ப நம்ம தோப்புப்பக்கம் வெட்டிவிட்டுட்டு வா மருமகனே" என்று அவனுக்கும் வேலை வைத்தார்.

“அப்பா! மாமா உரம் வாங்க சந்தைக்கு போகுது. நீயே வெட்டிவிட்டுட்டு போப்பா" என்றாள் அன்பிலரசி, தகப்பனுக்கு பதில் குரலாய் சத்தமாக.

சடையைப் பிடித்து இழுத்தான் சின்னா. “என் முடிவை நீ எடுக்காதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்"

கண்டிப்புடன் சொன்னவன், "நான் பார்த்துக்கிறேன் மாமா! நீங்க கிளம்புங்க!” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.

‘நல்ல குடும்பம்’ சாத்தப்பனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.

தந்தை போடும் கணக்கு மருமகனுக்கு புரியவில்லை. மகள் போடும் கணக்கு அப்பனுக்கு புரியவில்லை.

நொடியில் தன் மாமனுக்காய் வரிந்துக் கட்டிக்கொண்டு வந்த அன்பிலரசியை நினைத்தான்.

“நம்ம புள்ளையே சிவநேசன் தம்பிமேல உயிரையே வச்சிருக்குதுங்களே. தம்பிக்கும்தான் பாப்பான்னா கொள்ள பிரியம்ங்க" என்றான்.

ஹாசியத்தைக் கேட்டதுபோல் சிரித்தார் கருணாகரன். அந்தப் பிரியத்தை வரவைத்தவரே அவர்தானே.

மகள் பிறந்தபோதே, இவள் உன்னவள் என்ற விதையை ஆழமாக சின்னாவினுள் விதைத்திருந்தார்.

குழந்தையிலேயே தன் பொறுப்பைக் கைவிட்டதன்மூலம் மகள் பொறுப்பை முழுவதுமாய் சின்னாவை ஏற்க வைத்திருந்தார். இன்று வரை அன்பிலரசியின் கல்லூரிக் கட்டணம் முதற்கொண்டு சின்னாதான் கட்டுகிறான்.

பணத்திற்கு குறைவில்லை. சிவச்சாமிக்கு ஈடான சொத்து வைத்திருப்பவர்தான் கருணாகரன். ஆனால் மகள் என்ன படிக்கிறாள் என்பதைத்கூட அறியாதவர்போல் நடந்துகொள்வார்.

“நம்ம மருமகன் மரகதா” என்று நைச்சியமாக பேசிப்பேசியே மனைவியையும் அதே மனநிலைக்கு கொண்டு வந்திருந்தார். அண்ணன் மகன்தானே அவனுக்கு இல்லாததா! உரிமையாக விட்டுக்கொடுத்துவிட்டார் மரகதமும்.

ஆரம்பத்தில் சிவச்சாமி திலகவதி தம்பதி, குழந்தைகளிடம் என்ன பேச்சிது என்று யோசித்தாலும் கிராமத்தில் அத்தைப்பெண் மாமா பையனுக்கென்று பேசவது வழக்கம்தானே என்று விட்டுவிட, நாளடைவில் மகன் அன்பிலரசி மீதுக் கொண்டிருந்த தீராப் பாசம் அவர்களையும் மாற்றிவிட்டது.

அதுவும் சிவநேசனும் அன்பிலரசியும் ஒற்றையாய் நின்றுவிட, பெண்பிள்ளை இல்லாத திலகவதிக்கு அன்பிலரசி என்றால் உயிர்.

கருணாகரனும் ஒன்றும் அத்தனை மோசமானவர் அல்ல. தங்கை, தங்கைக் குடும்பம் என்றால் பிரியம். அதுவும் ஒருவேலையையும் செய்யவிடாமல் தன் வயலையும் சேர்த்தே பார்த்துக்கொள்ளும் மருமகன் என்றால் கொள்ளைப் பிரியம்தான். சிவச்சாமியிடம் ஆரம்பத்தில் விலகிநின்றாலும் பின்னர் பழக்கப்பட்டுவிட்டார். இருந்தும் அவரையும் அறியாமல் ஒரு ஒதுக்கம் வந்துவிடுவதும் உண்டு.

அவரின் ஆலமர விழுதாய் பரவி விரிந்து வேர்விட்டுப்போன இந்த ஒற்றை ஆசையைத்தவிர அனைத்தும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

வெளியில் மகளின் படிப்புப் பற்றி தெரியாததுபோல் நடித்தாலும், உண்மையில் மகள் படிப்பு முடியும் அந்தத் தருணத்திற்காக தவமாய் தவமிருக்கிறார். அதுவும் படிப்பு முடியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று திடமாய் மறுத்துவிட்ட மருமகனுக்காக மட்டுமே!

மனதுக்குள் போட்டு வைத்த இருபது வருடக் கணக்காயிற்றே!

மருமகன் வரப்பை பார்த்துக்கொள்வதாகச் சொன்னதால் அங்கிருந்து கிளம்பி வரப்பைத் தாண்டிய சின்னாவின் தோட்டத்திற்குள் இருவரும் நுழைந்திருந்தனர். நுழைந்ததுமே மரமல்லிகை வாசம் இருவரின் மூக்கைத் துளைத்தது.

சின்னாவின் தோட்டத்திற்குள் நுழைந்தால் குறுக்கு வழியாக அவர் வீட்டை அடைந்துவிடலாம்.

“கொஞ்சம் முன்னாடி சாத்தியப்படாதுன்னியே சாத்தப்பா. அங்கப் பார்” என்று தூரத்தில் தெரிந்த குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டினார் கருணாகரன்.

பழத்தோட்டத்தின் நடுவில் மரமல்லி மரங்கள் நீண்டு வளர்ந்திருக்க, அதன் வேர்ப்பகுதி குறிப்பிட்ட இடைவெளியில் வட்டவடிவில் நடப்பட்டு கொஞ்சதூரம் வளர்ந்ததும் போன்சாய் மரங்களைப்போல் குடைபோல் நிழல்தரும் விதமாய் வளைத்து பின் மீண்டும் நீண்டு வளர்ந்திருந்தது.

அந்த அமைப்பு மரத்தின் உட்புறம் ஒரு மினி சைஸ் குடில் ஒன்றை உருவாக்கியிருக்க, அந்தக்குடிலைச் சுற்றி மரமல்லி மலர்கள் உதிர்ந்து தேவலோகத்தை பூமியில் சிருஷ்டித்தது போல் காட்சியளித்தது.

அதற்குள் இதுவரை சாத்தப்பன் வந்ததில்லை. மா பலா வாழை என்று அனைத்துக் கனிகளும் நிறைந்த அந்தத் தோப்பில் அவ்வப்போது வேலைக்கென ஆட்கள் வந்தாலும், அந்த இடம் மட்டும் யாரும் எளிதில் நுழையாதவாறு இரும்பு வேலியால் தடுக்கப்பட்டிருக்கும்.

“சின்னப் புள்ளையில மரமல்லி புடிக்கும் தலையில வச்சிவிடுன்னு எம்பொண்ணு அடம்பிடிச்சான்னு அடிச்சிப்புட்டா மரகதம். மறுநாளே இங்கன மரத்தைக் கொண்டுவந்து நட்டிப்புட்டான் எம்மருமகன்.

அவகூட வாழ்றதுக்காகவே இந்த இடத்தைப் பார்த்து பார்த்து அவளுக்கு புடிச்சாமாதிரி சீரமைச்சிட்டு இருக்கான்” என்று தன் மீசையைக் கர்வமாய் நீவி விட்டார்.

சிறுபிள்ளையில் ஏனோதானொவென்று வைத்திருந்த மரங்களுடன் மேலும் மரங்களை நட்டு, பார்த்து பார்த்து அந்தக் குடிலை உருவாக்கியிருந்தான் சின்னா.

“எம்மக முன்னாடி பிசாத்துக் கிணறு அவனுக்கு தூசிமாதிரி" என்றார் சின்னாவை அறியாதவராக.

"சிவநேசன் ஒத்துக்கிட்டாலும் அவங்க அய்யன் ஒத்துக்கணுமில்லைங்க” என்றான் சாத்தப்பன்.

அதற்கும் கடகடவெனச் சிரித்தார் கருணாகரன். சின்ன புள்ளைல என் மக ஆசைப்பட்டான்னு மரங்களை கொண்டு நட்டிவச்ச என் மருமவனுக்கும் விவரம் தெரியாத வயசுதான சாத்தப்பா.

மகனுக்காகன்னு இந்த இடத்துக்கு காவலுக்கு ஆளைப்போட்டு கம்பிப்போட்டு உரம்போட்டுன்னு ஆரம்பத்துல ஊட்டி ஊட்டி வளர்த்ததெல்லாம் அவங்கப்பன்தான்.

அன்னைக்கு அப்பன் பாதுகாத்தது. இன்னைக்கு எம்மவ போற வழி வார வழின்னு ஒரு இடம் விடாம அங்கங்க இந்த மரத்த நட்டி வச்சி ஊரெல்லாம் வாசமா வச்சிருக்கான் எம்மருமவன்.

எம் மகளுக்காக எம்மருமவன் வருவான். அவன்‌ மகனுக்காக சிவச்சாமி வருவான். வந்துதான் ஆகணும்” என்றார் ஒருவித பிடிவாதக்குரலில்.

சின்னா வருவான்...
 

suji

Member
அவங்க காதலுக்கு ஒளிமயமான எதிர்காலம் போல
 

Gowri Karthikeyan

Well-known member
கருணா....இதெல்லாம் ஒரு பிழைப்பா?????
இந்த மரகதம் நல்லா தானே இருந்து இருக்கு.....
இப்ப இப்படி திட்டிட்டு இருக்காங்க......
அவங்க பெண் போய் கல்யாணம் பண்ணதிலா
 

STN - 39

Member
கருணா....இதெல்லாம் ஒரு பிழைப்பா?????
இந்த மரகதம் நல்லா தானே இருந்து இருக்கு.....
இப்ப இப்படி திட்டிட்டு இருக்காங்க......
அவங்க பெண் போய் கல்யாணம் பண்ணதிலா

சம்பவம் இருக்கு...😜
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom