செம்புலம் 26
மேதினூர்:
மறுநாள் விடியலும் சற்றுத் தூரலோடே தொடங்கியது. ஒருவழியாகத் தூக்கம் கலைந்து எழ முயன்றவளுக்கு, உடல் வலியால் கை கால்களை அசைக்க முடியவில்லை. கீழே உடைந்து கிடக்கும் வளையல் துண்டுகளோ இரவு நடந்ததைச் சொல்ல, "அய்யோ!" என்று முகத்தில் அறைந்துகொண்டு அழுதாள்.
"இது அப்பா, அம்மாவிற்குத் தெரிந்தால் என்ன ஆகும்? அய்யோ, இனி நான் ஏன் உயிரோடு இருக்கணும்?" என்று அழுதவள், தற்கொலை பண்ணிக்கொள்ள முடிவெடுத்துத் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கும் போது அவளது போனுக்கு அழைப்பு வந்தது.
அழுதுகொண்டே எட்டி எடுத்துப் பார்க்க, அவளது அம்மாவாக இருக்கவும், "ஏன் ஆத்தா என் வாழ்க்கையில இப்படி நடக்க விட்ட?" என்று கதறினாள். கால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கவும், பின்னர் அட்டெண்ட் செய்தவள் "அம்மா..." என்று கதற, "அம்மு... குட்டிமா, என்னடி ஆச்சு?" என்று வள்ளி பதறினார். நடந்ததைச் சொல்ல முடியாமல் அவள் கதற, "கயலு, ராஜாத்தி!" என்று கத்தியவர் அழைப்பை கட் பண்ணிவிட்டு, எதிர் வீட்டில் இருப்பவர்களுக்கு கால் பண்ணி மகளைச் சற்றுப் பார்க்குமாறு பதட்டமாகச் சொன்னார்.
அந்தப் பெண்மணியும் "இதோம்மா" என்று வேகமாக ஓடி வந்து, "கயல், கயல்!" என அழைக்க, அழுது கொண்டிருந்தவளோ அவர் சத்தத்தில் சுதாரித்தாள்.
தான் இருக்கும் கோலத்தைப் பார்த்தால் என்ன ஆகும் என்பது புரிய, "பாத்ரூமில் இருக்கிறேன் பெரியம்மா" என்றாள். "என்னாச்சு கயலு, உடம்பு முடியலையா?" என அவர் கேட்க, "ஆமாம் பெரியம்மா" என்று கண்ணீரோடு சொன்னாள். "இதோ வரேன்" என்றவர் வள்ளிக்கு விஷயத்தைச் சொல்ல, "எனக்கு மனசு சரியில்லைங்க மாமா, உடனே என் மகளைப் பார்க்கணும்" என்று வள்ளி அழுதாள். வேறு வழியின்றி மாறனை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டவர்கள் மேதினூருக்கு வந்து சேர மாலை ஆனது.
"ஆத்தா பேச்சி, என் மனசு எதுக்கு இப்படி அடிச்சிக்குதுனு தெரியலையே? என் பொண்ணுக்கு ஒன்னும் இல்லையே!" என்றவாறு கதவைத் திறந்து உள்ளே போன வள்ளி, "கயலு, கயலு" என்று பெட்ரூமிற்குப் போனாள். தனது தாயின் குரலைக் கேட்டுப் பதறி எழுந்த மகளின் முகத்தில் இருக்கும் கீறல்களும், அவளது ஓய்ந்த தோற்றத்தையும் பார்த்த அந்த அனுபவம் வாய்ந்த பெண்மணிக்கு ஏதோ புரிய, "மாமா... உள்ள வராதீர்கள்!" என்று கத்தினார்.
"என்னடி வள்ளி ஆச்சு?" என்று பதறிப்போய் மணி உள்ளே ஓடி வர, அவர் பின்னே மாறனும் பதற்றத்தோடு வந்தான். "ஐயோ, நான் என்ன பண்ணுவேன்? என் குடி மூழ்கிப் போயிட்டே!" என்று தலையில் அடித்துக்கொண்டு வள்ளி அழ, இவர்கள் கார் தெருவிற்குள் நுழைந்த போதே மழை மீண்டும் தொடங்கியதால் வள்ளியின் கத்தல்கள் மழையின் சத்தத்தில் கரைந்து போனது.
மகளின் தோற்றத்தைப் பார்த்த மணியோ அதிர்ந்து போய் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார். அழுது கொண்டிருந்த வள்ளியோ வேகமாக மகளிடம் போனவர், "யார்டி இதுக்கு காரணம்?" என்று பளார் பளாரென மகளின் கன்னத்தில் அறைந்தார்.
"அத்தை!" என்று எட்டிப் போய் வள்ளியின் கையைப் பிடித்து இழுத்து விட்ட மாறன் "பாப்பா..." என்கவும் "மாமா!" என்றவாறு மயங்கிச் சரிந்தவளைக் கையில் தாங்கியவன், "அத்தை, தண்ணீர் கொண்டு வா" என்றவாறு கயலை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தான்.
வள்ளியும் வேகமாகப் போய் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட, அதை வாங்கி கயலின் முகத்தில் தெளித்தவன் மெதுவாக அவளது தலையைத் தடவி விட்டான். சிறிது நொடியில் மூடியிருக்கும் விழிகள் அங்கும் இங்கும் உருள்வது தெரிய, அடுத்த சில நொடிகளில் கண்களைத் திறந்தவள் "மாமா..." என்றவாறு மாறனின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டே எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
"அவனை...!" என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்ட மணியோ வெளியே போக முயல, "மாமா, கொஞ்சம் நிதானமாக இருங்கள்" என்ற மாறன், "பாப்பா, துணிய மாத்திட்டு வா" என்றான்.
அழுதுகொண்டே அவள் நிமிர்ந்து பார்க்க, "சொன்னதைச் செய்" என்றவன் குரலில் பதறி எழுந்தவள், பக்கத்து அறைக்குப் போய் புடவையைக் கட்டிக்கொண்டு வந்தாள். "வாங்க" என்றவனோ அவளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு வெளியே போனவன் அவளைக் காரின் பின் சீட்டில் உட்கார வைக்க, தம்பதிகள் இருவரும் அமைதியாக வந்து உட்கார்ந்ததும் மாறன் நேராக பாரியின் வீட்டை நோக்கி காரை ஓட்டிச் சென்றான்.
இரண்டே நிமிடத்தில் அந்தப் பங்களாவின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, "வாங்க" என்றவன் கதவைத் திறந்து கயலின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே போனவன் "பாரி!" என்று கத்தினான்.
மாறனின் சத்தத்தில் ஹாலில் உட்கார்ந்திருந்தவர்கள் பதறியடித்து எழுந்து திரும்ப, அவர்களுக்குக் கயலின் தோற்றமும், ருத்ர மூர்த்தி போல நிற்கும் மாறனைப் பார்த்தும் ஏதும் புரியவில்லை.
"அய்யா பெரியவரே, எங்கே உங்கள் பேரன்? எங்க வீட்டுப் பொண்ணோட வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு எங்கே போனான்?" என்று அவன் கத்தும் போது பாரியின் கார் உள்ளே வந்தது. 'இது யாருடைய கார்?' என்ற யோசனையோடு பாரி வர, "யாரைப் பார்த்து என்னடா பேசுற?" என்ற சேயோனின் குரல் கேட்டது. "அப்பா" என்றவாறு உள்ளே வந்த பாரியைத் திரும்பிப் பார்த்த மாறனோ, கண் இமைக்கும் நொடிக்குள் பளார் பளாரென அறைந்து தள்ளிவிட்டான்.
மாறனின் ஒவ்வொரு அறையும் இடி போல இறங்க, திடீரென நடந்ததால் பாரியால் சுதாரித்துக்கொள்ள முடியவில்லை. எவனோ ஒருவன் தனது மகனை அறைவதைப் பார்த்த சேயோன், "யார்றா நீ?" என்று ஓடி வருவதற்குள் பல அறைகள் பாரிக்கு விழுந்துவிட்டது. அப்போது "நிறுத்துடா!" என்ற சத்தம் கேட்க, கயல் வீட்டினர் திரும்பிப் பார்க்கவும் ராஜவேலுவின் கையில் இருந்த துப்பாக்கி மாறனை குறி வைத்திருந்தது.
இதைப் பார்த்த வள்ளி, தனது மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ராஜவேலுவை நோக்கி வந்தவரோ நடந்த விஷயத்தைச் சொல்லி அழ, "நோ!" என்று பாரி அலறினான்.
கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே இறக்கிய ராஜவேலு, "என்னம்மா சொல்ற? ஒரு காலமும் என் பேரன் அப்படிப் பண்ணியிருக்க மாட்டான்" என்று சொல்லவும், " அப்போ நாங்கள் பொய் சொல்றோமா?" என்றனர்.
"ஆமாம், உங்க பொண்ணு பொய்தான் சொல்றா! என் மனைவியைப் போல இருப்பதால் இவளை நான் பார்த்தேன், இல்லைன்னு சொல்லவில்லை. ஆனா, என் விரல் நுனிகூட இவள் மேல் பட்டதில்லை" என்றவன் "இதற்கு முன்னாடி உன்னிடம் நான் பேசி இருக்கேனா?" என அவன் கேட்க, "இல்லை" என்றாள் கயல்.
"உனக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தக் கொடுக்கல் வாங்கலாவது இருக்கா?" என்றதற்கு "இல்லை" என்று அழுது கொண்டே சொன்னாள். "இதுவரை என் மூச்சுக் காற்றாவது உன்மேல் பட்டதா? உன் வீட்டு வாசல் படி நான் ஏறி இருக்கிறேனா?" என்றதற்கும் "இல்லை" என்றவள், "நேற்று இரவு நீங்கள்தான் என் வீட்டிற்கு வந்தீர்கள்" என்றாள்.
"பொய் சொல்லாதடி!" என்று கத்திய பாரி "இவ்வளவு கேவலமான பிறவியாக நீ இருப்பாய் என்று கனவில் கூட நினைக்கவில்லை. என் மனைவியைத் தவிர எந்தப் பெண்ணையும் நான் மனதாரக் கூடத் தொட்டது இல்லைடி. முதல் முறை உன்னைப் பார்த்தபோது என் மனைவியின் தோற்றத்தில் இருந்ததால் தான் நான் உன்னை அணைத்தேன். அதற்கு அப்புறம் நான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டேனா?" என அவன் கேட்க, அவள் "இல்லை" என்றாள்.
"கேட்டுக்கிட்டீங்களா? எவன் கிட்டையோ கெட்டுப்போன உங்கள் பொண்ணு என்னை காரணம் காட்டுறாளோ, இது உண்மை என்று நம்பி வந்தீங்களே? உங்க மேல நான் வழக்கு தொடுப்பேன்" என்றான் பாரி.
"இல்லை, நீங்கதான் இப்படிப் பண்ணுனீங்க" என்று கயல் அழுதாள். "இப்ப நான் கேட்டதற்கெல்லாம் இல்லை என்று நீதானே சொன்னாய்? இது மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்? நான் கொலைகாரனாக மாறுவதற்குள் இங்கிருந்து வெளியே போங்க. பணக்காரப் பையனை வளைத்துப் போட உனக்கு வேற ஐடியாவே கிடைக்கவில்லையா?.
நிறுத்துடா என்று கத்திய மணி, தேனூர்ல வந்து கேட்டுப் பாரு, மிராசுதாரர் பழனிச்சாமி குடும்பம் எப்படி என்று? "கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதி என் பொண்ணு!" உன் பிச்சக்கார சொத்துக்கா ஆசைப்படுவாள் என்றார்.
"அப்படியா? நான் இப்படி நடந்து கொண்டதுக்கு ஏதாவது சாட்சி இருக்கா? ஆதாரங்கள் இருக்கா?" என்று பாரி கேட்டான். "இருட்டில் நடந்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்களே, இது என்ன நியாயம்?" என்று அழுது கொண்டே கயல் கேட்க, "பொம்பளை இல்லையா, நீ என்ன சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சிட்டியா? நேற்று நான் பிசினஸ் மீட்டிங் போயிட்டு வீட்டுக்கு வரவே வெகு நேரம் ஆயிடுச்சு. காலையில் இதே வீட்டில் இருந்துதான் வேலைக்குப் போனேன். அப்படி இருக்கும்போது எப்படி உன் கூட நான் வந்து தங்கி இருக்க முடியும்? அப்படி நான் இருந்தா அக்கம்பக்கத்தில் யாரும் என்னை பார்த்திருக்க மாட்டாங்களா!" என்றான் பாரி.
ஆதாரம் இல்லாததால், கயலின் குடும்பத்தாரை அங்கிருந்தவர்கள் கேவலமாகப் பேசினர். "நிறுத்துங்கள்!" என்று கத்திய கயல், "உண்மை ஒருநாள் வெளியே வரும், அன்று உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று அழுது கொண்டே வெளியே போனாள். ஆதாரமில்லாத குற்றத்தை நிரூபிக்க வழி இல்லாமல் மற்ற மூவரும் இடிந்துபோய் வீட்டிற்கு வந்தனர்.
"இவ வேலை பார்த்தது போதும், உடனே ஊருக்குக் கிளம்பலாம்" என்று கையில் கிடைத்த துணிமணிகளை எல்லாம் எடுத்துப் போட்டுக்கொண்டு, இரவோடு இரவாகவே கிளம்பி தேனூருக்கு வந்து சேர்ந்தனர். விடியும் போது கயலுக்குப் பயங்கரக் காய்ச்சல். அதிலிருந்து அவள் தேறி வரவே ஒரு மாதம் ஆனது. பின்னர் ஒரு முடிவு எடுத்தவள், "அம்மா, அப்பா... என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?" என கேட்க, "நாங்க பெத்த பிள்ளையை எங்களுக்குத் தெரியாதா?" என்றனர். "அப்போ எனக்காகக் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் வேலைக்குப் போகிறேன்" என்று அவர்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.
நாட்கள் வேகமாக ஓடியது. இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. ஒரு நாள் வேலைக்குக் போயிருந்தவள் மதியச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரவும், வேகமாகப் போய் வாந்தி எடுத்தவளுக்கு அப்போதுதான் தனது மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போயிருப்பது ஞாபகம் வந்தது.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.