செம்புலம் 28
மேதினூர்:
மறுநாள் இந்தியா கிளம்பிய பாரிஅலவனுக்கு நேரடி பிளைட் கிடைக்காததால், லண்டனில் இருந்து டெல்லிக்கு வந்தான்.
அங்கிருந்து கோவைக்குச் செல்லும் பிளைட்டிற்காகக் காத்திருந்த போது, "பாரி சார்!" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் "வாசு?" என்க, "நான் தான் சார்.
எப்படி இருக்கீங்க? பெரியம்மா, பெரியய்யா நல்லா இருக்காங்களா? கயல் மேடம் கன்சீவாக இருக்காங்களாமே? நல்லவேளைங்க சார் மேடத்தைக் கல்யாணம் பண்ணுனீங்க.
"என் மனசுக்குள் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்தது. ஒரு பொண்ணு பாவம் சும்மா விடாதுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனா ஷாலினி மேடம் மூலமா இதை கேள்விப்பட்ட பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது" என்றான்.
"என்ன வாசு சொல்ற?" என்று பாரி அதிர, "ஆமாங்க சார். போன வருஷம் அந்தப் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் பிசினஸ் மீட்டிங் நடந்தப்ப ஒரு சம்பவம் நடந்ததே..." என்று வாசு சொல்ல ஆரம்பித்தான். ஷாலினி, பாரியை ஒருதலையாகக் காதலித்ததும், அவனைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் போதை மாத்திரை கலந்த தண்ணீர் கொடுக்கச் சொன்னதும், பணத்திற்கு ஆசைப்பட்டுத் தான் கொடுத்ததும், ஆனால் திடிரென காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்த பாரி, அந்த மழை இரவில் கயல்விழி வீட்டிற்குப் போனதைப் பார்த்துப் பயந்துபோய், ஷாலினியிடம் சொல்ல, அவளது ஆலோசனைப்படி சொந்த ஊருக்குப் போய்விட்டதாகவும், கொஞ்ச நாளில் ஷாலினி போன் பண்ணி, பாரி கயலைத் திருமணம் செய்துகொண்டதாகச் சொன்ன பிறகுதான் தனக்கு நிம்மதி வந்ததாகவும், தற்போது டெல்லியில் வேலை செய்வதாகவும் வாசு சொல்லி முடித்தான்.
இதையெல்லாம் கேட்ட பாரிக்கு, அன்று கயல்விழி வீட்டில் வந்து நியாயம் கேட்டதும், மாறன் கத்தியதும் ஞாபகம் வர, 'எவ்வளவு பெரிய பாவம் பண்ணியிருக்கிறோம்!' என்பது புரிந்து, ஷாலினி மேல் கொலைவெறி வந்தது.
ஏர்போர்ட் என்று பார்க்காமல் 'பளார் பளார்' என்று வாசுவை அறைந்தவன் "எவ்வளவு பெரிய பாவம் பண்ண வச்சிருக்கீங்கடா! எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னைக் கொலை பண்ணிடுவேன். தயவுசெய்து என் கண்ணு முன்னாடி நிக்காதே!" என்று கத்திவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு ஏர்போர்ட்டில் உட்கார்ந்திருந்த பாரியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
"யாரோ ஒருத்தன் குழந்தைக்கு நான் இனிஷியல் அப்பனாடி?" என்று அன்று அவன் கேட்ட கேள்வி, இப்பொழுது அவனது நெஞ்சைப் பிளந்தது.
பின்னர் பிளைட் ஏறி கோவை வந்தவன், வேகமாகத் தனது காரை எடுத்துக்கொண்டு ஊருக்குள் சென்றவனோ கயல்விழி வீட்டிற்குப் போக, கேட் பூட்டியிருப்பதைக் கண்டான். அந்த நேரம் வெளியே வந்த காமாட்சி பாட்டி, அவளுக்குப் பிரசவ வலி வந்துவிட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருப்பதாகச் சொன்னார்.
அதைக் கேட்டு வேகமாகத் தனது வீட்டிற்குச் சென்றவன், தாத்தா - பாட்டியிடம் வாசு சொன்னதைச் சொல்லி கதற, "கடவுளே... பெண் பாவம் பொல்லாததாச்சே! எதுக்குப்பா இப்படி ஒரு தண்டனை?" என்று பானுமதி அழவும், "எல்லாம் நாம் வாங்கி வந்த விதி" என்ற ராஜவேலு, பின்னர் மனைவியையும் பேரனையும் அழைத்துக்கொண்டு தனது தங்கையின் மருத்துவமனைக்குச் சென்றார்.
"பாரி, பாரி!" என்ற சத்தத்தில் கடந்த காலத்திலிருந்து மீண்டவனோ, ஷவரை நிறுத்திவிட்டு வெளியே வந்தவன் வேற உடையை மாற்றிக்கொண்டு கதவைத் திறக்க, அங்கு பானுமதி நின்று கொண்டிருந்தார்.
"சொல்லுங்கள் பாட்டி" என்கவும் "வா கண்ணா... காலையில் இருந்து பச்சைத் தண்ணீர் கூட நீ குடிக்கவில்லை. வா டீ குடி. எல்லாத்தையும் தாங்க மனசுலையும் உடம்பிலையும் தெம்பு வேண்டும். நடந்ததை விடு, இனி ஆக வேண்டியது என்னவோ அதை மட்டும் பாரு".
"ஹம்...அடுத்த முகூர்த்தம் எப்போது என்று பாருங்கள் பாட்டி. என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் கௌரவமாக அழைத்து வரணும்" என்ற பேரனின் கன்னத்தைத் தடவியவர், "பச்சை உடம்புக்காரி, உடல் கொஞ்சம் தேறட்டும். முறைப்படி அழைத்து வரலாம்" என்றார்.
குழந்தையின் சத்தத்தில் கயலும் தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் "என்னாச்சுமா?" என கேட்க, "பிறந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் போட வேண்டிய ஊசி போட்டிருப்பதால் அந்த வலியில் அழுகிறாள்" என்றார் வள்ளி. மகளின் பக்கத்தில் பேத்தியைக் கிடத்திவிட்டு, கயலை எழுப்பி உட்கார வைக்க, குழந்தையை தூக்கி பசியாற்றியதும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டது.
அதிகாலை மேதினூருக்கு வந்த கதிர், அங்கிருந்து நடந்தே மருத்துவமனைக்கு வந்தான். கதவு மெல்லத் திறக்கப்படும் சத்தம் கேட்டு கயல் நிமிர்ந்து பார்க்க, வாசலில் கதிர் நின்று கொண்டிருந்தான்.
அடர்ந்த தாடியுடன் நின்றிருந்த அண்ணனைப் பார்த்ததும் கயலின் நெஞ்சம் விம்மியது. மெல்லத் தங்கையின் அருகில் செல்ல, கயலின் மடியில் தேவதை போலத் தூங்கிக் கொண்டிருந்தாள் அவனது மருமகள். அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்ததும் கதிரின் கண்கள் கலங்கியது. இத்தனை நாள் தங்கை அனுபவித்த மனவலி, பிரசவ வலி என எல்லாம் அவன் மனக்கண்ணில் வந்து போனது.
கண்ணீர் வழிந்தோட அண்ணனின் கையைப் பிடித்தவள், "அண்ணா... என்னால நம்பவே முடியலண்ணா..." என்று கதறினாள். தன் நடுங்கும் விரல்களால் தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவனுக்குப் பேச முடியவில்லை. மெதுவாகக் குனிந்து கயலின் நெற்றியில் முத்தமிட்டான்.
அந்த முத்தத்தில் ஆயிரம் ஆறுதல்களும், "உனக்காக நான் இருக்கிறேன்" என்கிற தைரியமும் இருந்தது. "ஏன் அழற கயல்? இதோ பாரு, உன்ன மாதிரியே ஒரு குட்டி தேவதை வந்திருக்கா... இது சந்தோஷத்துக்கான கண்ணீராக மட்டும்தான் இருக்கணும்," என்றான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு நெஞ்சை அடைத்தது. "ஐயா" என்று மகனின் தோளைத் தொட்டார் வள்ளி. பின்னர் அவர்களிடம் நலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருக்கவும், நேரம் கடந்து செல்ல, நால்வருக்குமான டிபனை வாங்கிக்கொண்டு கதிர் உள்ளே வரும்போது பாரியும் வந்தான்.
பாரியைப் பார்த்ததும் கயலுக்கு ஆத்திரம் வந்தது. கதிர் கை முஷ்டியை இறுக்கினான். நேராக வள்ளி - மணியின் முன்பு சென்ற பாரி, "நான் செய்த தப்பைச் சரி செய்ய விரும்புகிறேன். சில உண்மைகள் எனக்கு நேற்றுதான் தெரிந்தது. நானும் எங்கள் வீட்டினரும் உண்மை தெரியாமல் தவறாகப் பேசிவிட்டோம், மன்னித்துவிடுங்கள்" என்று கூனிக் குறுகிச் சொன்னான்.
"இவன் மன்னிப்பு யாருக்கு வேண்டும்? மரியாதையாக இவனை வெளியேப் போகச் சொல்லுண்ணா" என்று கயல் கத்தினாள். அந்தச் சத்தத்தில் குழந்தை அழ, "நான் நடந்து கொண்ட செயல் மன்னிக்க முடியாததுதான். ஆனால் என் மனைவியையும் குழந்தையையும் என்னால் விட முடியாது. முறைப்படி உங்கள் வீட்டிற்கு வருகிறேன், அனுப்பி வையுங்கள்" என்றான் பாரி.
"எவன் கூடவும் என்னால் வர முடியாது" என்றாள் கயல். "அதையும் பார்த்துவிடலாம்" என்ற பாரி அங்கிருந்து வெளியேறி நேராக ஷாலினியின் வீட்டிற்குச் சென்றான்.
அங்கே ஷாலினி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். "வா வா சாப்பிடு" என்று அவள் அழைக்க, "இல்லை, நான் அங்கிள் கூடப் பேசணும்" என்ற பாரி, ஹாலில் உட்கார்ந்திருந்த கார்மேகத்திடம் சென்று, அடக்கப்பட்ட கோபத்தில் அனைத்தையும் சொன்னான்.
அதிர்ந்து எழுந்த கார்மேகம், "ஷாலினி!" என்று கத்தினார். நிதானமாக வந்தவள், "ஏன்பா இப்படிச் சத்தம் போடுகிறீர்கள்?" என்று கேட்டவளிடம், "என்ன காரியம் செஞ்சிருக்க ராஸ்கல்! பாரிக்குத் தண்ணீரில் என்ன கலந்து கொடுத்தாய்?" என்று அவர் கேட்க, ஷாலினிக்கு பயம் வந்தது. "நான் ஒன்றும் பண்ணலைப்பா" என்று அவள் மறுக்க, "ராஸ்கல், மீண்டும் பொய் சொல்றியா? வாசு எல்லாத்தையும் சொல்லிட்டான்" என்றவரோ தனது இடுப்பில் இருந்த பெல்டை கழட்டி விளாசி தள்ளி விட்டார்.
தன் திருட்டுத்தனம் தெரிந்ததும் அவள் நடுங்க, "இன்னொரு முறை என் கண்ணில் பட்டால் வெட்டிப் புதைத்துவிடுவேன்" என்று எச்சரித்துவிட்டுப் பாரி வெளியேறினான்.
அன்று கயல் டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது ராஜவேலு - பானுமதி தம்பதியினர் வந்தனர். உண்மை தெரிந்ததிலிருந்து அவர்கள் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டுவிட்டனர். ஆனால் கயலின் குடும்பத்தினர் அவர்களை மதிக்கவில்லை. "நாங்கள் செய்த தப்பைச் சரி பண்ண ஒரு வாய்ப்பு கொடுங்கள் மணி" என்று ராஜவேலு வேண்டினார்.
"அப்பா, பணத்தைக் கட்டிவிட்டேன்" இனி கார் தான் புக் பண்ணனும் என்று உள்ளே வந்த கதிர், அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தான்.
"தேவையில்லை" என்று வாசலில் ஒரு குரல் கேட்டு எல்லாரும் திரும்ப அங்கே பாரி நின்றிருந்தான். "என் குழந்தையையும் என் வருங்கால மனைவியையும் நானே கொண்டு போய் விடுகிறேன்" என்கவும், "எவன் கூடவும் போக எனக்கு விருப்பமில்லை" என்று கயல் கத்த, "கயல்!" என்று மணி அதட்டியதும் அவள் அமைதியானாள்.
"தம்பி, நடந்தது யார் மேல தப்புன்னு பேசுற சூழ்நிலையில் நான் இல்லை. இப்போதைக்கு என் பொண்ணோட உடல்நிலையும் பேத்தியும் தான் முக்கியம். என் பொண்ணு இங்க வேலை பார்த்துக்கிட்டு இருந்தா. இப்போ குழந்தையோடு போனால் ஊர் என்ன பேசுமென்று எனக்குத் தெரியும். எங்களை நிம்மதியாக விடுங்கள்" என்று மணி சொன்னார்.
"மாமா" என்றார் வள்ளி. மணி கடுப்புடன் மனைவியைப் பார்க்க, "அவர்கள் கூட வரட்டும். இனி நமக்குக் கெட்ட பேரு வந்தால் என்ன வரலையென்றால் என்ன, ஆனால் என் பேத்தி 'அப்பன் பெயர் தெரியாதவள்' என்ற அடையாளத்தோடு ஊருக்குள் காலடி எடுத்து வைப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். கயல், உன்னுடைய விருப்பம் இதில் முக்கியமில்லை. என் பேத்தியின் வருங்காலம் தான் முக்கியம்" என்று உறுதியாகச் சொன்னார்.
வள்ளியின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு பாரி வீட்டினருக்கு நிம்மதி ஏற்பட்டது. கயலுக்கு இது பிடிக்கவில்லை. மணி மற்றும் கதிர் யோசித்துப் பார்த்து, வள்ளி சொல்வது வாஸ்தவம் எனப் புரிந்து அமைதி காத்தனர். பாரி நன்றியுடன் வள்ளியைப் பார்த்து கைகூப்பினான்.
பாரி தனது பி.ஏ மூலம் பிளைட் டிக்கெட் தயார் செய்திருந்தான். "எதுக்குப்பாரி?" என்று ராஜவேலு கேட்க, "கார்ல போனால் ஈவினிங் ஆகும் தாத்தா. நல்ல நேரத்தில் என் பொண்ணு அவளோட அம்மாச்சி வீட்டுக்குப் போகணும்" என்றான் கயலைப் பார்த்தபடி.
"நீ என்ன வேணாலும் சொல்லிட்டுப் போ, எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை" என்ற தோரணையில், அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள் கயல்விழி.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.