செம்புலம் 33
லண்டன் குளிரிலிருந்து தப்பித்து, தமிழ்நாட்டின் வெயிலோடும் உறவினர்களின் அன்போடும் தன்னை நனைத்துக் கொண்டிருந்தாள் தாரணி. கையில் இரண்டு வயது மகன் ஆரியனைத் தூக்கிக்கொண்டு தனது அண்ணன் கல்யாணத்திற்காக ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு, கடந்த இரண்டு நாட்களாக ஒருவித மயக்கமும் சோர்வும் இருந்தது.
வெறும் பயணக் களைப்பு என்று நினைத்தவள், அன்று காலை ரகசியமாகச் செய்த பரிசோதனையில் அந்தச் செய்தியை உறுதி செய்தாள். அவள் இரண்டாவது முறையாகத் தாயாகப் போகிறாள்.
மதியம் குடும்பமே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தபோது, தாரணி மெல்லத் தன் அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லவும், "தாரணி... நிஜமாவா?" என்று பாரி அவள் தலையை வருடினான்.
எங்கே உன் புருஷன் என்று பாரி சிரித்துக்கொண்டே கேட்க, அண்ணா அவருக்கு சர்ப்ரைஸா உன் கல்யாணம் முடிந்த பிறகு நானே சொல்லிக்கிறேன் என்று வெட்கத்துடன் தாரணி சொல்ல சரி என்று வீட்டினரும் மௌனமாய் சிரித்துக்கொண்டனர்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்திருக்க,
ராஜவேலுவின் அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை இன்று ஒரு தேவலோகமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
அரண்மனையின் விசாலமான தோட்டத்தில், வாசனை மிகுந்த மலர்களாலும், மின்னும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மணமேடை தயாராக இருக்க, ஒருபக்கம் கெட்டிமேளம் முழங்க, நாதஸ்வர இசை காற்றோடு கலந்து ஊர் முழுக்கப் பாரியின் செல்வாக்கைச் சொல்லிக் கொண்டிருந்தது.
மணமேடையில் அமர்ந்திருந்த பாரியின் கண்கள் மட்டும் வாசலையே தவம் கிடந்தன.
பாரி ஏற்பாடு செய்திருந்த பியூட்டிஷியன் தனது வேலையை முடித்துவிட்டுச் சென்றிருக்க, கயல் மட்டும் அந்தப் பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்றிருந்தவளோ, தலை முதல் கால் வரை தன்னை ஒருமுறை மெதுவாகப் பார்த்துக் கொண்டாள்.
அவள் அணிந்திருந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை, தங்க ஆபரணங்கள், மல்லிகைச் சரம் என அனைத்தும் அவளை ஒரு தேவதையைப் போலக் காட்டியது. ஆனால், கயலின் கவனம் தன் அழகின் மேல் இல்லை; இந்த அழகைப் பார்க்கப்போகும் பாரியின் மேல் இருந்தது.
கயலின் எண்ணங்கள் சட்டென்று மேடையில் அமர்ந்திருக்கப் போகும் பாரியின் பக்கம் திரும்பியது. தன்னை விடவும், பாரி இன்று எப்படி இருப்பான் என்ற கற்பனை அவளை இன்னும் அதிகமாகப் படபடக்க வைத்தது.
" பட்டு வேஷ்டியும், அந்தப் பளபளக்கும் பட்டுச் சட்டையும் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருப்பானே!"
"தங்கக் கரை போட்ட அந்தப் பட்டு வேஷ்டியில், அவன் அள்ளி முடித்திருக்கும் அந்தத் தோற்றம்... நினைக்கும்போதே நெஞ்சுக்கூட்டில் ஒரு மின்னல் அடிக்கிறதே! அந்தத் தூய வெள்ளை நிறப் பட்டுச் சட்டை அவனது நிறத்திற்கு இன்னும் எவ்வளவு எடுப்பாக இருக்கும்?"
"சந்தனப் பொட்டு வைத்த அந்த நெற்றியும், கைகளில் கட்டியிருக்கும் காப்பும்... அவன் என்னைப் பார்க்கும்போது, நான் அவனை எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? அந்தப் பட்டு வேஷ்டியின் மிடுக்கில் அவன் ஒரு ராஜகுமாரனைப் போலவே இருப்பான்."
"மேடையின் ஓரத்தில் நான் மெல்ல நுழையும்போது, அவன் தன் வேஷ்டியைச் சரி செய்தபடி என்னை உற்றுப் பார்ப்பானே... அப்போது அவன் கண்களில் தெரியும் அந்தப் பெருமிதத்தையும் காதலையும் நான் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறேன்?"
இப்படியெல்லாம் நினைப்பு வந்த உடனேயே கயலின் முகம் தக்காளிப் பழம் போலச் சிவக்கவும், "நீங்களும் என்னை மாதிரியே தான் தவித்துக் கொண்டிருப்பீங்க என்று எனக்குத் தெரியும்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், தன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டு ஒரு மெல்லிய புன்னகையுடன் அறையை விட்டு வெளியேறினாள்.
சிறிது நிமிடத்தில் கயல் வீட்டினரும் அங்கு வந்து சேர, மனம் கொள்ளா சந்தோஷத்தோடு மாலையை எடுத்த சேகர், தனது தங்கை மகளின் கழுத்தில் போட்டு விடவும், மீனாட்சியும் தாரணியும் அவளை மேடைக்கு அழைத்துப் போனார்கள்.
"மணப்பெண் வராங்க..." என்ற குரல் கேட்டதும் பாரி நிமிர்ந்து உட்கார்ந்தான்.
ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது, அவளது இதயம் முன்பை விட வேகமாகத் துடித்தது. அவள் கண்கள் கூட்டத்தைத் தேடவில்லை; மேடையில் அமர்ந்திருக்கும் பாரியை மட்டுமே தேடின.
தங்க நிற ஜரிகை மின்ன, பாரி நெய்த அந்த அடர் சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் கயல் தேவதையாய் நடந்து வந்தாள். அந்தப் புடவை அவளது மேனிக்கு இன்னும் ஒரு தனி அழகைக் கொடுத்திருக்க, குழந்தையோடு அவள் நடந்து வரும்போது, பாரியின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது.
மணமேடையில் பாரியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்த கயலின் முகத்தில் ஒரு பக்கம் நாணமும், மறுபக்கம் தனது துயரங்கள் தீர்ந்த நிம்மதியும் இருந்தது.
அவளது மடியில், ஒரு பக்கம் மூத்தவன் கயலின் கையைப் பிடித்துக்கொண்டு பெருமையாக அமர்ந்திருக்க, மறுபக்கம் இளையவன் தன் தாயின் கழுத்திலிருந்த மாலையோடு விளையாடிக் கொண்டிருந்தான்.
பாரியின் கம்பீரமான மடியில், அவனது மகளான அந்தப் பச்சிளம் கைக்குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
ஒரு தந்தை, தன் மூன்று பிள்ளைகளோடும், தன் உயிருக்கு உயிரான காதலியோடும் மணமேடையில் அமர்ந்திருந்த அந்தக் காட்சி, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சொந்த பந்தங்களின் கண்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டுப் புடவையில் இருக்கும் மீனாட்சியை கதிரின் கண்கள் அவ்வப்போது திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தது.
பக்கத்தில் எல்லாரும் இருந்ததால் அவளால் ஒன்னும் பண்ண முடியவில்லை. கோவமாக அவள் நிமிர்ந்து அவனை பார்க்கும்போதெல்லாம் ஒற்றை விரால் தன் உதடுகளை தடவி காட்டுபவனை பார்த்தவள், இந்த மாமா என்ன இன்னைக்கு இப்படி படுத்துகிறார் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.
ஐயரும் வழக்கமாக செய்யும் சடங்குகளை செய்து முடித்ததும் தாலிக்கு எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ என்க, அவரிடமிருந்து தாம்பாளத்தை வாங்கிய கலாவோ எடுத்துப் போய் பந்ததில் உட்கார்ந்திருந்த எல்லாரிடமும் காட்டிவிட்டு திரும்ப எடுத்துட்டு வந்து ஐயரிடம் கொடுக்க, அம்பி தாலியை கட்டுங்கோ என்றார்.
சொந்த பந்தங்களின் ஆசீர்வாதத்தோடும், ஊர் பெரியவர்களின் முன்னிலையிலும், அந்தப் புனிதமான மங்கல நாணை பாரி கையில் எடுக்கவும்,பெரியவர்கள் அட்சதை தூவ, மேளச்சத்தம் உச்சத்தை எட்ட, கயலின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான்.
தாலி கட்டிய அடுத்த நிமிடம், "யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே." என்றவாறு கயலின் கையை இறுகப் பற்றினான்.
அதைக் கேட்டு சந்தோஷத்தில் திகைத்தவள், மடியில் இருந்த மகன்களை ஒரு கையால் அணைத்துக்கொண்டு, மறு கையால் பாரியின் கரத்தைப் பிடித்துக் கொண்டதும், அவளது கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீர், பாரியின் கைகளில் விழுந்தது. அது வெறும் கண்ணீர் அல்ல; பாரியின் மேல் அவள் முழுமையாகக் கொண்ட காதலின் அத்தாட்சி. இதைப்பார்த்த கூடி நின்ற சொந்த பந்தங்கள் அனைவரும் எழுந்து நின்று அந்த அழகான குடும்பத்தை வாழ்த்தினர்.
பின்னர் வந்திருந்தவர்கள் எல்லாரும் மேடைக்கு வந்து அவர்களுக்கு பரிசு பொருள்களை கொடுத்துச் சென்ற வண்ணம் இருந்தார்கள்.
அப்பொழுது மேடைக்கு வந்த கார்மேகம் அம்மாடி கயல் என்று தனது கைகளைக் கூப்பியவர், பாரி மேல எந்த தப்பும் கிடையாது. எல்லாம் என் மகள் செய்த சூழ்ச்சி. மன்னித்துவிடுமா என்று கேட்கவும், இவ்வளவு பெரிய மனிதர் தன்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்பதை பார்த்து ஐயோ பெரியவங்க நீங்க உங்க கை ஆசிர்வாதம் பண்ண தான் தூக்கணும் என்றாள்.
தீர்க்கசுமங்கலியாக நல்லா இருமா என்று வாழ்த்தி விட்டு அங்கிருந்து போனவருக்கு இதுவரை அவரது மனதில் இருந்த பாரம் இப்பொழுது அவரை விட்டு நீங்கியது போல இருந்தது.
எல்லாம் முடிந்து நல்ல நேரத்தில் மணமக்களை வீட்டிற்கு அழைத்து போனவர்கள் பூஜை அறையில் கயலை விளக்கேற்ற சொல்லவும், ஆத்தா பேச்சி எங்க இருந்தாலும் உன் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்தோடு இருக்கணும் தாயே என்று வேண்டிக் கொண்டவளோ தான் வாழப்போகும் புகுந்த வீட்டில் விளக்கேற்றியதும், இருவரையும் அழைத்து போய் அங்கிருந்த ஹாலில் உட்கார வைத்து மற்ற சடங்கான பாலும் பழமும் கொடுக்க எனக்கு வேண்டாம் என்று கயல் சொல்லவும் நல்லா சாப்பிட்டு தெம்பா இருடி.அப்பதானே மத்ததுக்கு எல்லாம் வசதியாக இருக்கும் என்று அவளுக்கும் கேட்கும்படி பாரி சொல்லவும், அதை காதில் வாங்கினாலும் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
பின்னர் கயலை கீழே இருக்கும் ஒரு ரூமிற்குள் அழைத்துப்போன தாரணி, அண்ணி இங்க நீங்க ரெஸ்ட் எடுங்கள் என்கவும் குழந்தைகளுக்கானும் என்று கேட்க, தம்பிங்க மூணு பேரும் விளையாடுறாங்க பாப்பா அத்தை கிட்ட இருக்கிறாள் என்றவள், அண்ணி உங்களுக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க, கொஞ்சம் காபி மட்டும் போதும். அப்படியே எனக்கு மாத்திக்க டிரஸ் மட்டும் அத்தை கிட்ட சொல்லி எடுத்துட்டு வரணும் என்று கயல் பாவமாக சொல்ல, இதற்கு ஏங்க அண்ணி மூஞ்சியை இப்படி வச்சுக்கிட்டு சொல்றீங்க?.
உங்களுக்கில்லாத காபியா என்று சிரித்தவள், மாத்திக்க டிரஸ் அந்த கபோர்டில் இருக்கிறது.
வள்ளி அத்தை காலையிலேயே கொடுத்து அனுப்பினார்கள் என்றவாறு தாரணி அங்கிருந்து வெளியே போனாள்.
செம்புலம் தொடரும்...
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 33
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.