செம்புலம் 8
தேனூர்:
அதன் பின்னர் வந்த நாட்களில், ஆளுக்காள் வள்ளியைப் போட்டி போட்டுக்கொண்டு கவனித்தனர். மசக்கையின் அவஸ்தையோடு நாட்களும் வேகமாக ஓடின.
ஒன்பதாவது மாதம் வளையல் போடலாமென்று பேசிக்கொண்ட காசி - சகுந்தலா தம்பதியினர், விஷயத்தைச் சொல்வதற்காக மரகதம் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கும் போது, டவுனுக்குப் போயிருந்த பழனிசாமியும் வீட்டிற்கு வந்தார்.
"வாங்க மச்சான்!" என்றவரை, "வாங்க மாப்பிள்ளை," என்று வரவேற்றனர். பின்னர் தாங்கள் வந்த விஷயத்தைச் சொல்லவும், "அப்படிங்களா... சரிங்க மச்சான், நாள் பார்த்தாச்சா?" என்று கேட்டார் பழனிசாமி.
"ஆமாங்க மாப்பிள்ளை. அமாவாசையிலிருந்து கணக்கு பண்ணினால் திங்கட்கிழமை அஞ்சாம் நாள் வருதுங்க. இந்த மாதத்தில் அதுதான் கடைசி முகூர்த்தம்."
"ஓ... சரிங்க மச்சான், அப்போ ஆக வேண்டியதைப் பார்க்கலாம்," என மேலும் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்துவிட்டு காசி - சகுந்தலா இருவரும் அங்கிருந்து சென்றனர்.
நாட்களும் வேகமாக ஓட வளையல்காப்பிற்குத் தேவையானதையெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்ததால், அதிகாலையில் வந்த சமையல் ஆள் ஒன்பது விதமான சாதத்தைச் செய்து முடித்துப் பித்தளை குவளையில் கட்டி வைக்க, பொழுதும் நன்கு விடிந்தது. பின்னர், சொந்த பந்தங்களோடு சீர்வரிசைப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருவிலிருக்கும் பழனிசாமி வீட்டிற்கு வந்தனர்.
ஆண்களெல்லாம் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, நல்ல நேரத்தில் வளையல் போடும் நிகழ்வும் ஆரம்பமானது. ஒற்றைப்படை எண்ணிக்கையில் வளையல் போட்டு, மஞ்சள் கலந்த அரிசியைத் தூவி ஆசீர்வாதம் செய்து முடித்ததும், "சரித்தா, நல்ல நேரத்தில் வள்ளியை கூப்பிட்டு கிளம்பலாம்," என்றனர்.
மணியோ, "பிரசவம் இங்கேயே பார்க்கலாமே," என இரண்டு நாட்களாக மனைவியிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தான்.
முதல் பிரசவம் பெண் வீட்டில் பார்க்க வேண்டும் என்ற மரபு என்பதால், வள்ளியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் கேட்பதாக இல்லை. கணவனுக்குத் தன் மேலிருக்கும் அன்பும் ஆசையும் புரிந்தாலும், சடங்கு சம்பிரதாயத்தை ஏற்றுத்தானே ஆக வேண்டுமென்று தனது மாமனார், மாமியாரிடம் சொல்லிக்கொண்டு அப்பா வீட்டிற்குக் கிளம்பினாள்.
சம்பிரதாயப்படி வளையல் போட்டு முடித்து மனைவியோடு மாமனார் வீட்டிற்குப் போக வேண்டும் என்பதால், மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு தனது மாமா வீட்டிற்கு வந்தான்.
அவனின் கோபம் வள்ளிக்கு மட்டும்தான் தெரியும்; மற்றவர்கள் பார்வைக்கு அவன் எப்போதும் போல் அமைதியாக இருப்பது போலவே இருந்தது. தனது ரூமிற்கு வந்து கதவைத் தாழிட்டவள், கட்டியிருந்த புடவையை மாற்ற அவிழ்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வந்தது யார் என்று தெரிந்து மௌனமாகச் சிரித்துக்கொண்ட வள்ளி, கதவைத் திறக்கவும் மணி உள்ளே வந்து கதவைத் தாழிட்டான்.
" ஆஹ, எப்போ அப்பன் வீட்டுக்கு வரலாம்னு காத்துக்கொண்டே இருந்திருப்பியோ, அப்படித்தானேடி," என்றவாறு தனது மனைவியின் கன்னத்தைப் பிடித்துத் திருகினான். அது வலித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வள்ளி அமைதியாக நிற்கவும், "உன்னைத்தான்டி கேட்கிறேன், பதில் சொல்லு," என்றான்.
"என்னதான் சொல்லச் சொல்றீங்க? முதல் பிரசவம் அப்பா வீட்ல பார்க்கணும்னு உலகத்துல இருக்கிற வழக்கம் தானே? என்னமோ நான் மட்டும்தான் அதிசயமா அப்பா வீட்டுக்குச் சோறு இல்லாமல் வந்து உட்கார்ந்து இருக்கிற மாதிரி பேசுறீங்களே!"
"ஏன், நீ வாய் திறந்து சொல்ல வேண்டியதுதானே வரமாட்டேன்னு? அது ஏண்டி உன் வாயிலே வரவே மாட்டேங்குது?" என்றான்.
"ஏன் மாமா இப்படிப் படுத்துறீங்க? குழந்தை பிறந்து 16 நாள்ல நாங்க வந்துடுவோம். அடியேய் அந்த 16 நாள் என் நிலைமை என்ன ஆகிறது என்று கொஞ்சம் யோசிச்சியா? நீ இல்லாம எனக்கு அங்க எப்படி இருக்க முடியும்?" என்று அவளை அணைத்துக் கொண்டான்.
பின்னர் அவளைப் பொறுமையாக இழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்தவன், "சும்மா சம்பிரதாயத்துக்கு இரண்டு நாள் இருந்துட்டு வந்துடுறியா," என்றான். அவளுக்கும் அப்படிப் போக ஆசையாகத்தான் இருந்தது. ஆனால், தனது அப்பா அம்மா என்ன நினைப்பார்களோ என்று ஒரு பக்கம் யோசனையாகவும் இருந்தது.
எப்படியோ ஒரு வழியாக வள்ளியும் தனது கணவனைச் சமாதானப்படுத்தினாள். இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் இருந்துவிட்டுப் பின்னர் தங்கள் வீட்டுக்குத் திரும்பிய மணி, காலையில் வயலுக்குப் போகும்போதும் மாலையில் வேலை முடிந்து வரும்போதும் மனைவியைப் பார்த்துச் செல்லாமல் இருப்பதில்லை. இப்படியே இரண்டு வாரங்கள் கடந்தன.
அன்று வழக்கம் போல் மீன் குழம்புக்கு அம்மியில் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும் போது, வள்ளிக்கு வழக்கமாக வரும் இடுப்பு வலியை விட அன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.
"அம்மா!" என்ற மகளின் குரலில் விஷயத்தைப் புரிந்துகொண்ட சகுந்தலா, வேகமாக ஓடி வந்தவர் "பார்த்து எழுந்து வா வள்ளி," என்றவாறு வீட்டிற்குள் அழைத்துப் போய் உட்கார வைத்துவிட்டு, பக்கத்துத் தெருவில் இருக்கும் வைத்தியர் அம்மாவைக் கூப்பிட்டு வரச் சொல்லி கணவரிடம் சொல்ல, அதற்குள் வள்ளிக்குப் பிரசவ வலியும் அதிகமானது.
இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், தாய்க்கு ரொம்பச் சிரமத்தைக் கொடுக்காமல் மணியின் புதல்வன் இந்த உலகைக் காண வெளியே வந்தான். விஷயம் கேள்விப்பட்டு மணியும் அவன் பெற்றோரும் அங்கு வந்துவிட்டனர்.
நாட்களும் வேகமாக ஓடின. குழந்தைக்கு ஊர் வழக்கப்படி 16 முடித்து, 'கதிரவன்' என்று பெயர் வைத்துவிட்டு அன்றே தங்கள் குடும்ப வாரிசையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு பழனிசாமி குடும்பம் வீட்டிற்குச் சென்றது.
குழந்தையும் தத்தித் தவறி நடக்கும் வயதும் வந்துவிட்டது. சுந்தருக்குப் பழனிசாமியின் பங்காளி உறவில் இருந்து 'கலா'வை பெண்ணெடுத்தனர். அவர்களும் அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க, மறாவது வருடத்தில் முதல் வாரிசாகப் பையனைப் பெற்றெடுத்தனர். அவனுக்கு 'மாறன்' என்று பெயர் வைத்தார்கள்.
கதிருக்கு ஐந்து வயது ஆகும்போது மீண்டும் வள்ளி கர்ப்பமானாள். அதேபோல் கலாவும் கர்ப்பமானாள். இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. அது அக்குடும்பத்திற்குப் பேரின்பத்தைத் தந்தது. வள்ளி - மணி தம்பதியர் தங்களது மகளுக்கு 'கயல்விழி' என்றும், சுந்தர் - கலா தம்பதியர் தங்களது மகளுக்கு 'மீனாட்சி' என்றும் பெயர் வைத்தார்கள். வருடங்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடின.
கதிர் தற்பொழுது முதலாம் ஆண்டு அக்ரி படித்துக்கொண்டிருக்கும் போது, மீனாட்சி பெரிய பெண்ணாகிவிட்டாள் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சடங்கு வைத்திருப்பதால் ஊருக்கு வரவேண்டும் என்றும் விடுதியில் இருந்த கதிரிடம் மணி போன் மூலம் சொல்லவும் "சரிங்கப்பா," என்றான்.
இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து நண்பர்கள் கதிரைக் கிண்டல் பண்ண மறக்கவில்லை. அதேபோல வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு கோவையிலிருந்து புறப்பட்டவன், அதிகாலையில் தேனூருக்கு வர, அவனுக்காக மணியும் காத்திருந்தார்.
"ஏங்கப்பா, நான் வரமாட்டேனா?" என அவன் கேட்க, "இருக்கட்டும்ப்பா, கூடப் படிக்கிற சிநேகிதனுங்கள் நல்லா இருக்காங்களா?" என்று கேட்டபடி தனது புல்லட்டை ஸ்டார்ட் பண்ணினார் மணி. "ம்ம்.. நல்லா இருக்காங்கப்பா," என்றபடி அவன் பின்னாடி உட்கார்ந்து கொள்ள, இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
வள்ளி தனது மகனுக்காக வாசலிலே காத்திருக்க, மரகதம் பாட்டியும் பழனிச்சாமியும் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தனர். "அம்மா!" என்றவாறு கீழே இறங்கி வந்தவன், அவள் தோளோடு கையைப் போட்டுக்கொண்டு, "அப்புச்சி, அப்பாயி, நல்லா இருக்கீங்களா?" என்றவாறு திண்ணையில் உட்கார்ந்தான்.
மகனின் தலைமுடியைக் கோதிவிட்ட வள்ளி, வேகமாக உள்ளே போய்த் தயாராக இருந்த டீயை எடுத்து வந்து கொடுத்தார். "எங்க அம்மா டீ போல இந்தத் தமிழ்நாட்டுல யாருமே போட முடியாது," என்று சிரித்துக் கொண்டே குடித்தான்.
"என்ன அப்பாயி, உன் பேத்தி இன்னும் எந்திரிக்கலையா?" என்றான்.
"எப்ப லீவு விட்டார்களோ, உன் தங்கச்சிக்கு விடியற்காலைங்கிறது 10 மணி தான்," என்று மரகதம் அப்பாயி சொல்ல, "என் தங்கச்சியை ஏதும் சொல்லாதீங்க, நான் வரது தெரிஞ்சிருந்தால் அவளுக்குத் தூக்கம் வந்திருக்காதே?" என்றான் கதிர்.
"ம்கூம்...இருப்பதைத்தான் சொன்னேன், இல்லாததை யார் சொன்னார்?" என்று பாட்டி முறுக்கிக் காட்ட, "வயசான காலத்துல மொகரைக்கட்டை இழுத்துக்கிட்டுப் போயிடப் போகுது," என்று பழனிசாமி சிரிக்க, "கிழவனுக்கு ஏத்தம் தான்!" என்றார் பாட்டி.
"எப்பா சாமி, ஆளை விடுங்கள்! இந்தப் புருஷன் பொண்டாட்டி ரோதனையில் நான் தலையிடவில்லை," என்று தலைக்கு மேலே கும்பிடு போட்டு உள்ளே போகும் பேரனைப் பார்த்து இருவரும் சத்தமாகச் சிரித்துவிட்டனர்.
"கதிர், குளிச்சிட்டு வா சாப்பிடலாம்," என்று வள்ளி சமையலறைக்குள் செல்ல, "வாசனை மூக்கைத் துளைக்குதேம்மா!" என்றவாறு தனது ரூமிற்குள் போய்க் குளித்துவிட்டு உடையை மாற்றிக்கொண்டு வெளியே வரவும் காலை ஏழு மணிக்கு டவுனிலிருந்து ஒலிக்கும் பாங்கு சத்தம் கேட்டது.
"அம்மா!" என்றபடியே டிவியை ஆன் பண்ணிவிட்டுத் தரையில் உட்கார்ந்தான்.
"இதோ வந்துட்டேன்," என்றவாறே மகனுக்கு முன்பு தலைவாழை இலையை விரித்து, சூடான இட்லிகளையும் நல்லெண்ணெய் மிதக்கும் நாட்டுக்கோழி குழம்பையும் அதன் மேல் ஊற்றினார் வள்ளி.
"ஆஹா... என்ன வாசனை!" என்றவாறு ருசித்துச் சாப்பிட்டவன் ஒரு பெரிய ஏப்பத்தோடு, "போதும்," என்று எழுந்து போய்க் கையைத் கழுவிவிட்டு மீண்டும் திண்ணையில் உட்கார, தெரிந்தவர்கள் எல்லாம் கதிரைப் பார்த்து நலம் விசாரித்துச் சென்றனர்.
செம்புலம் தொடரும்..
Author: Vishakini
Article Title: செம்புலப் பெயல் நீர் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: செம்புலப் பெயல் நீர் - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.