• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16


அதுவொரு நீளமான மேசை. வகை வகையான தின்பண்டங்கள் மூன்று அடுக்கு ஸ்டாண்டுகளில் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.


அலங்காரத்திற்காக கிரேக்க பூச்சாடிகளில் வைக்கப்பட்ட வண்ணமலர்கள், அங்கு வந்திருந்த செல்வந்தர்களை காட்டிலும் கர்வம் கொண்ட மேனாமினிக்கிகளாய் இருந்தன‌. அவைகளை விட்டு கண்கள் மீள்வதென்பது பெரும் ப்ரயத்தனம்.


அந்தப் பகுதியிலிருந்த பிரம்மாண்ட பங்களாக்களில் வசிப்போரும் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.


ஆவி பறக்க சிலோன் டீ -கப் அண்ட் சாஸர்களில் சூடுபரப்பிய போது சித்தார்த்தனையே மேய்ந்தன ஆத்மீகாவின் சுந்தர விழிகள். பின்னே சூரியன் மேற்கிலா உதிக்கும்?


அதைக் கண்டு அஞ்சலி தேவி தான் கலவரமடைந்தார்.


அந்த இடத்தில் கோட் சூட் அணிந்திருந்த ஒரே பெண்மணி ஆத்மீகா கண்ணபிரான் தான். அந்த நெருடலில் ஆண்கள் பெண்கள் தொடங்கி அனைவரின்‌ கண்களும் அவள் மீதே இருக்க, அவள் இப்படி அநாகரீகமாய் சித்தார்த்தனை விழுங்குவது, அவருக்கு எரிச்சலை தந்தது.


“மிஸ் ஆத்மீகா கண்ணபிரான் உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?” என்று கவனத்தை அவர் திசை திருப்ப, அப்போதும் ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடியே பதிலளித்துக் கொண்டிருந்தாள்.


பாட்டியின் நிலை இப்படி அவஸ்தையாயிருக்க, பேத்தி லீலாவதியின் நிலை அதல பாதாளத்திற்கு சென்றது. காரணம் வேறு ஜோடி.


குடைமிளகாய் சிவப்பில் சரிகை பார்டரும், பல வண்ணங்களில் பூக்களும் கொண்ட அந்த மாம்பழ வண்ண டிஸ்யூ சில்க்கில் பிரகாசத்தை வாரியிறைத்தாள் லீலாவதி.


அதிலும் அந்த அலைஅலையான கூந்தலை அவள் விரித்து விட்டிருந்த விதமும், ஒற்றை அடுக்கில் நவரத்தினங்களை கழுத்தில் சூட்டியிருந்த நயமும், நிச்சயம் அவளை அப்சரஸ் பட்டியலில் சேர்க்கும்.


அவளின் இத்தகைய அலங்காரத்திற்கு உதவியதோடு மட்டுமல்லாமல், பின்னால் அவசரத் தேவைக்காய் நின்றிருந்த பானுமதியை நினைத்து தான் அவள் முகம் களையிழந்தது.


பின்னே! முன்னால் உட்கார்ந்திருக்கும் ஒருவன் இப்படி அடித்துப் பார்த்தால், வருங்கால நார்த்தனாரை நினைத்து மனம் கலங்காதா?


ஆனால், ஒருமுறை திரும்பி பானுமதியை பார்த்தபோது தான் அவளின் ரத்த ஓட்டமே நின்றுவிட்டது. காரணம் அவள் முகத்திலிருந்த ரத்தவோட்டம் அப்படி.


அதன்பின், விஹானையும் அவளையுமே ரகசியமாக மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள், இருவருக்குமிடையில் இறகுபந்து விளையாட்டு நடைபெறுவது போல.


அவனின் அடாத காதல் பார்வையையும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இமைகள் கவிழ்ந்திருந்த பானுமதியின் நாணத்தையும் கண்டு, ஒரு கட்டத்தில் எரிச்சல் பட்டாள்.


இத்தனை வருடங்களில் எத்தனையோ படித்த செல்வாக்கான ஆண்கள் பானுமதியை நெருங்க முயற்சித்திருப்பதை அவள் அறிவாள்.


ஆனால், அவர்கள் யாரையும் ஏறெடுத்துப் பாராமல், பெண் தோழியுடன் உல்லாசமாய் இருக்க வந்திருக்கும் இவனை ஏன் இவள் காணாததை கண்டது போல் இதயம் அடித்துக் கொள்கிறாள் என்று கோபம் கொண்டாள்.


பானுமதியை உள்ளே அனுப்புவதற்காக கடுத்த குரலில், “பானுமதி!” என்றவள் அழைக்க, பக்கத்திலிருந்த குழந்தை தேநீர் குடுவையை தெரியாமல் கவிழ்த்து விட்டிருந்தது.


அதை கவனித்த பானுமதி பாய்ந்து வந்து குழந்தையை முதலில் அங்கிருந்து அப்புறப்படுத்த, சித்தார்த்தனோ கொட்டிய தேநீர் மற்ற பக்கங்களுக்கு பரவாமல் இருக்க அங்கிருந்த துண்டுதுணியால் அணை கட்டினான்.


மேற்கொண்டு பணியாளுக்காக காத்திராமல் அவனே பீங்காண் துண்டங்களை எடுக்க முற்பட்டபோது, தொண்டையை செருமினாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவன் அவளை‌ நிமிர்ந்து பார்த்ததும், கண்களால் தனது ஆட்சேபனையை தெரிவித்தாள்.


அவனுக்கு அது ஆடு நனைகிறதென ஓநாய் அழுத கதையாய் தெரிந்தது. வீம்பாகவே மேற்கொண்டு பீங்காணை எடுக்கப்போனான்.


தனது கைக்கருகிலிருந்த நீள மெழுகுவர்த்தி ஸ்டாண்டை தட்டிவிட்டாள் அவள்.


அது மேசையில் கவிழ்ந்து ஒரு பகுதியை கருக வைத்தது. தீப்பிழம்புகள் எழுந்ததும் அனைவரின் கவனமும் அப்புறம் திரும்ப, அனைத்து உதவியாளர்களும் ஓடிவந்து தீயை அணைத்து, மேசையை புதிய விரிப்பு கொண்டு அலங்கரித்தனர்.


சித்தார்த்தனுக்கு வேலையில்லாமல் போனது. ஆனால், அவளின் அந்த பிடிவாதம் அவனை வெறுப்படைய வைத்தது.


மற்ற நேரமானால் லீலாவதி இவர்களுள் நடப்பதை சரியாக இனம் கண்டிருப்பாள். ஆனால், இன்றவள் விழிகள் பானுமதி-விஹான் மீது இருந்ததால் அவள் மனப்படகு குழப்ப புயலில் சிக்கியிருந்தது.


ஒரு கட்டத்தில் இவன் தான் அவளின் அந்த முன்னாள் காதலனா என்று சரியாக கணித்து, நீரின் பரப்பு இழுவிசையை குறைத்து, மனக்கப்பலை காப்பாற்றினாள் லீலாவதி.


அவளின் மகள் ஈஷாவோ தனது மற்ற நண்பர்களை புறந்தள்ளி விட்டு, புதிய தோழியான சித்தாராவிற்கு தனது அறையை காட்ட ஆர்வமாக அழைத்துச் சென்றாள்.


லீலாவதி தன்னையும், ஆத்மீகா கண்ணபிரானையும் உற்றுநோக்கும் முன், குழந்தைகளின் பின்னேயே சென்றுவிட்டான் சித்தார்த்தன். இல்லை தப்பித்தான்.


அவன் ஈஷாவின் அறையில் பியானோவில் இசையமைத்து விளையாடியவர்களிடம் சென்று, உன் அப்பா பெயர் என்னவென்று அவசரமாகக் கேட்டான்.


அவன் முகத்தில் மருந்துக்கும் கனிவில்லை.


சித்தாரா திமிராக பார்த்துவிட்டு பியானோவில் மீண்டும் இசை பழகினாள்.


“கேட்டது காதுல விழல?” என்று மிரட்டினான்.


“என் மம்மி ஸ்ட்ரேஞ்சர் கேள்வி கேட்டா பதில் சொல்லக்கூடாது சொல்லியிருக்காங்க” என்று முறைத்துக்கொண்டு சொல்லவும்,


“ஹே சித்தாரா! சித் அங்கிள் ஒன்னும் ஸ்ட்ரேஞ்சர் இல்ல. அவர் ரொம்ப நல்லவரு. நீ பயப்படாம பதில் சொல்லலாம்.” என்றாள் ஈஷா.


“பயமா? நான் பயப்படலையே” என்று தோள்களை குலுக்கினாள் அவன் ரத்தம்.


‘அதே திமிரு. அப்படியே அவளை உரிச்சி வச்சிருக்குல்ல? அதான்.’ என்று காய்ந்தான்.


“பயப்படலைனா பதில் சொல்ல வேண்டியது தான?” என்றாள் ஈஷா.


“என் டாடி பேர் ஆத்மீகா கண்ணபிரான்” என்று மிடுக்காக சொன்னாள் சித்தாரா.


“ஏய்! உன் மம்மி பேர் தானே அது?” என்று ஈஷா சந்தேகமாகக் கேட்டாள்.


“என் டாடி பேரும் அது தான். என் மம்மி, உனக்கு மம்மி டாடி ரெண்டுமே நான் தான்னு சொல்லிருக்காங்க”


‘அகம்பாவம். வேற எப்படி சொல்லச் சொல்லும்?’- பொருமினான் சித்தார்த்தன்.


“எனக்குமே என் அம்மா அப்பா ரெண்டுமே என் மம்மி தான்.” என்றாள் ஈஷா பாவமாக.


அவளுக்காக இரங்கினான் சித்தார்த்தன்.


“உன் வயசு என்ன?” என்று அதிகாரமாய் கேட்டான்.


“எங்களை டிஸ்டர்ப் பண்ணாம வெளிய போறீங்களா ப்ளீஸ்?”


அந்த மினி ஜெராக்ஸ் தலையில் ஓங்கி குட்டி வைக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. முயன்று அடக்கி கொண்டான்.


அவன் கீழே வருவதற்காக படிகளில் இறங்கியபோது அவனை எதிர்கொண்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவன் உடல் முழுக்க கோபவெறி பரவியது. கடந்து சென்றான்.


அவள் கைப்பற்றி நிறுத்தினாள். உடனே அசூயையாக அதனை உதறினான்.


உள்ளுக்குள் வலித்தாலும், நிமிர்வாகவே கேட்டாள்: “தாராவை பார்த்தீங்களா? அவக்கிட்ட பேசுனீங்களா?”


“நான் எதுக்கு மேடம் உங்க குழந்தையை பார்க்கனும்? பேசனும்?” என்று உணர்ச்சியற்று ஒலித்தது அவன் குரல்.


“மிஸ்டர் சித்தார்த்தன் அது உங்க குழந்தையும் கூட” என்றவள் குரல் கடுமை பூசியிருந்தது.


“அதுக்கு ஆதாரம் மேடம்?”


“நீங்க யார்கிட்ட ஆதாரம் கேட்கறீங்க தெரியுமா?”


“தெரியும் மேடம். பல ஆண்மான்களை ருசி பார்த்த ஒரு பெண்புலிகிட்ட”


அவள் ஹாஸ்யம் கேட்டது போல் சிரித்தாள்.


“அப்ப டி.என்.ஏ டெஸ்ட் வேணும் உங்களுக்கு?”


“தேவையில்ல மேடம். அதனால எனக்கு ஒரு பலனுமில்ல”


“எனக்கு இருக்கே மிஸ்டர் சித்தார்த்தன்”


“ஸோ, இது தான் உங்க பிளான் இல்லையா? இந்த‌ குழந்தையைக் காட்டி என்னை ஈஸியா பொட்டலம் கட்டி தூக்கிட்டு போயிடலாம்னு நெனச்சீங்கல்ல மேடம்? ஆனா நீங்க தோத்துட்டீங்க. நீங்க எதிர்பார்த்த மாதிரி என் இரக்க சுரப்பிகள் எதுவும் வேலை செய்யல. பிள்ளை பாசம் என் கழுத்து வரை நெறைஞ்சு நிற்கல. அந்த குழந்தையை பார்த்தா எனக்கு கோபம் தான்‌ வருது.” என்று முகத்தை சுளித்தான்.


“சித்தார்த்தன்!” என்று முதல் முறையாய் அவனின் பெயரை மிஸ்டர் இல்லாமல் உச்சரித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


“கத்தாதீங்க மேடம். நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க. புரிஞ்சிக்கோங்க” என்றான்.


அவள் அவனின் சட்டைக் காலரை பற்றினாள்.


அவள் வேண்டி விரும்பிய‌ அவனின் வாசனை‌‌ அவளது நாசியை நிறைத்தது.


“நான் குழந்தையைக் காட்டி என்னைக்கும் பிச்சையெடுக்க மாட்டேன் மிஸ்டர் சித்தார்த்தன். ஏன்னா நான் ஆத்மீகா கண்ணபிரான். நீங்க என்னை இவ்வளவு குறைவா எடைபோட்டிருக்கக் கூடாது. ஆனா போட்டுட்டீங்க. உங்களுக்கு என்ன தண்டனை தரலாம்? ஆறரை வருசத்துக்கு முன்னாடி கொடுத்த அதே தண்டனையை தரலாமா- சட்டப்படி மூணு முடிச்சு போட வச்சு?”


அவள் புருவங்களை ஏற்றியிறக்கிய தோரணையில், தன் காலரிலிருந்த அவள் கையை தட்டிவிட்டான் சித்தார்த்தன்.


அவள் மாறவேயில்லை. கொஞ்சம் கூட. அதே தேக வேட்டைக்காகத் தான் திரும்பவும் வந்திருக்கிறாள் என்று புழுங்கினான்.


அவள் அவனை வேதனையாய் பார்த்திருக்கும்போதே மிடுக்காக கடகடவென படிகளில் கீழிறங்கினான்.


அவள் மகளை தேடிச் சென்றாள். கதைகள் பேசி விளையாடிக் கொண்டிருந்தவர்களை கீழே செல்லுமாறு துரத்திவிட்டு, தானும் அவர்களை பின் தொடர்ந்தாள்.


அவள் கீழ்ப்படிக்கட்டை அடைந்தபோது கையை நீட்டி வழியை மறித்தார் அஞ்சலி தேவி.


அவர் கழுத்திலிருந்த வைரம் அவள் கண்களை கூசியது. அவரிடம் இருக்கும் பட்டுப் புடவைகளையும், வைர நகைகளையும் அடிக்கடி அணிந்து அழகு பார்க்கவே இந்த தேநீர் விருந்துகளை அவர் நடத்துகிறாரோ என்று யோசித்தவள், கண்களை திருப்பினாள்.


“இது மாதிரி உயர் தரமான டைமண்டை இதுக்கு முன்ன நீ பார்த்திருக்க மாட்ட, அதான்” என்று வன்மத்தை கக்கினார் அஞ்சலி தேவி.


அவர் பேச்சிலிருந்த மாற்றம் முதலில் அவளை திகைக்கவும், பின்பு யோசிக்கவும் வைத்தது.


கேலியாக முறுவலித்தாள்.


அவருக்கு அது கோபத்தை தருவிக்க, “நீ இனிமே சித்தார்த்தனை தொந்தரவு செய்யக்கூடாது” என்றார் அதிரடியாக.


ஆம், அனைத்தையும் கேட்டிருந்தார் அஞ்சலி தேவி. அவரின் கண்களில் செங்காந்தள்கள் பூத்துக் கிடந்தன.


அவளது இதழ்களோ இகழ்ச்சியாய் வளைந்தன.


“இதை சொல்றதுக்கு நீங்க யாரு?” என்றாள் ஆக்ரோசமாக.


“என் வீட்டுல இருந்துட்டு, என்னையே யாருனு கேட்கறியா?” என்று சண்டைக்கோழியாய் விடைத்தார் அஞ்சலி தேவி.


“உங்க வீடு என்ன மகிழ்மதி கோட்டையா? உங்க கட்டளையே சாசனம் ஆகறதுக்கு? இது ஜனநாயக பூமி” என்றாள் கிண்டலாக.


“இங்கப்பாரு! சித்தார்த்தன் என் பேத்தி லீலாவுக்காகவே பொறந்தவன். அவனை நீ என்னைக்கும் அடைய முடியாது” என்றதும்,


அவர் கண்களை உற்று பார்த்தவள், “உங்க பேத்திக்கு தைரியம் இருந்தா என்கூட மோதச் சொல்லுங்க. நானா என்னைக்கும் விட்டுத் தர மாட்டேன் மிஸ்டர் சித்தார்த்தனை” என்று உறுதியாய் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.


திகைத்து நின்றார் அவர்.


உண்மையில் அவருக்கு அவளைவிட சித்தார்த்தன் மேல் தான் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.


அவனை யார் இவளுடன் இணைய சொன்னது? அதனால் தானே பிள்ளை உருவானது என்று ஆத்திரம் கொண்டார்.


கடந்தமுறை சினிமாக்காரியால் தனது மகனை தொலைத்தது போல், இந்தமுறை கார்மெண்ட்ஸ்காரியால் தனது பேரனை இழக்கக்கூடாது என்று தீர்க்கமாய் முடிவெடித்தார்.


அதன்படி விரைவிலேயே லீலாவதிக்கும் சித்தார்த்தனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.



தொடரும்…


சித்தார்த்தனுக்கு ஆத்மீகாவின் மீதுள்ள அளவு கடந்த வெறுப்பு, லீலாவதியின் மேல் காதலாக பரிமாணமெடுக்குமா? அறிவோம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்.

ஏன் டியர்ஸ் நானும் ஒவ்வொரு தடவையும் கருத்துப்பதிவிடுங்கன்னு கதறுறனே! என் மேல பரிதாபம் வருதா உங்களுக்கு? கல்நெஞ்சக்காரங்களா இருங்கீங்களேய்யா. ஹாஹாஹா. ஆனாலும் சொல்றதை நான் நிப்பாட்ட மாட்டேன். கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே!
 
Top Bottom