அத்தியாயம் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
மனம் - 10:

புதிய விடுதிக்கு அட்சயா சென்று ஒரு வாரம் கடந்திருந்தது. எதற்கு வம்பு என இம்முறை தனியறையில் இருந்துக்கொண்டாள். அதனை பற்றி மறுநாளே அலுவலகத்தில் அவளிடம் குரு விசாரித்துக் கொண்டான்.

வேலையை விட்டுவிட்டு வீட்டுற்கு வந்துவிடும்படி பரிமளம் அழைக்க அதனை மறுத்துவிட்டாள். வீட்டினர் அனைவரும் அவளை அழைத்து கவனமாக இருக்க சொன்னார்கள். இம்முறை எதையும் மறைக்காமல் குருபிரசாத் உதவியதை வீட்டினரிடம் சொல்லிவிட்டாள், அட்சயா.

அட்சயாவினுடையது சிறிய அறைதான். ஒரு சின்ன கப்போர்ட், பெட் மற்றும் ஒரு டேபிள். அவ்வளவு தான். அந்த வார விடுமுறையில் தான் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைத்தாள்.

வீட்டினரிடமும் பூர்ணிமாவிடமும் பேசியவளிற்கு தனிமை கொடுமையாக இருக்க, அவளின் லேப்டாப்பை எடுத்து அமர்ந்துவிட்டாள். அதில் சிறுவயது முதல் அவளின் அக்கா கங்காவின் திருமணம் வரை எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் இருந்தன. ஒவ்வொன்றாக அதனை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக சுதனின் அக்கா திருமணத்தில் எடுத்த புகைப்படம் வர அதில் கடைசியாக குருபிரசாத்தின் புகைப்படம் இருந்தது.

யாரும் அறியாமல் அவள் ஆழ்மனதின் ரகசியமாக அவனின் புகைப்படத்தை பாதுகாத்து வைத்திருக்கிறாள். அவளின் மனது அவனுக்கு மிக பெரிய தவறிழைத்ததாகவே அவளுக்கு எடுத்துச் சொல்லும்.

மொத்தமாக அவனை பிரிந்த பின் தான் அவளுக்கு பாக்கியத்தின் பேச்சில் இருந்த ஆதங்கம் புரிந்தது. ‘அவங்க வேற கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருப்பாங்க.’ என குருவின் நினைவு வரும் பொழுதெல்லாம் அவளே அவளை தேற்றிக்கொள்வாள்.

குருபிரசாத்தின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அப்படியே படுத்தவளின் நினைவில் கடந்த காலங்கள் அனைத்தும் விரிந்தது.

அன்று,

குருபிரசாத்துடன் வாழ முடியாது என சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்கு வருவதற்கே பொழுது விடிந்திருந்தது. வரும் வழியெல்லாம் அட்சயா கண்ணீரில் கரைந்திருக்க, அவளின் வாழ்க்கையை குறித்த பரிமளத்தின் பேச்சுகளும் குறைந்த பாடில்லை.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் அட்சயாவை அணைத்துக்கொண்டு கங்கா ஒரு மூச்சு அழுதாள் என்றாள், அவளின் கணவன் கோபிநாத்திற்கு அனைவரின் மேலும் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.

யாரிடமும் எதுவும் பேசாமல் காலின் முட்டியில் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்து விட்டாள் அட்சயா. நேற்று குருபிரசாத் அவளுக்கு வாங்கிக்கொடுத்த பூ, அவளின் தலையிலே வாடி போயிருக்க, அதற்கு இணையாக அட்சயாவும் வாடிதான் இருந்தாள்.

“ஐயோ என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே. பண்ணாரியம்மா உனக்கு எத்தனை முறை பொங்கல் வெச்சி கும்பிட்டிருக்கேன். உன் பிள்ளைக்கு இந்த நிலையா..” என பரிமளம் அழ துவங்கினார்.

அவரின் அழுகையில் அட்சயாவின் கண்களும் கலங்கியது. முயன்று கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

அட்சயத்திருதியில் பிறந்ததால், எந்தவொரு குறையுமின்றி இருக்க வேண்டும் என்றுதான் அவளுக்கு அட்சயா என்றே பெயரிட்டனர். ஆனால், இன்று மகளின் நிலையை பார்த்த ஆவுடையப்பனுக்கும் மனம் கனத்தது.

கோபமாக அவரின் முன்னே வந்து நின்ற கோபிநாத், “எல்லாரும் சேர்ந்து அந்த புள்ளையாய் என்ன பண்ணி வெச்சிருக்கீங்க மாமா?”,

“ஒரு தப்பு நடந்துச்சுனா அதை தட்டி கேட்க மாட்டீங்களா? உங்களால முடியாதுன்னு தான போலீஸ் இருக்காங்க. அங்க போயிருக்க வேண்டியது தான? அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணி வெச்சி எல்லாரும் சேர்ந்து அந்த சின்ன பொண்ணை என்ன பாடு படுத்தியிருக்கீங்க?” என சத்தமிட்டார்.

“போலீஸ் போனா நம்ம பொண்ணு பெரும் வெளிய வருமே மாப்பிள்ளை. அவளோட வாழ்க்கை..” என ஆவுடையப்பன் இழுக்க,

“இப்ப மட்டும் நம்ம அச்சு எப்படி இருக்கா? என்ன ஆகிருக்கு..” என்ற கோபிநாத்திற்கு பொறுக்கவே முடியவில்லை.

ஒருவருடம் முன்பு வரை அவளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அவர். எனவே அவரின் கண்களுக்கு அவள் இன்னும் இரட்டை சடையில் இருக்கும் பள்ளி மாணவியாக தான் தெரிந்தாள். அவளின் நிலையை பார்க்க பார்க்க கோபம் தான் அதிகரித்தது.

“அப்படியென்ன அவசரம். அந்த தம்பி தான் வீட்ல பேசிட்டு சொல்லுறேன்னு சொன்னாங்கலாமே? அவங்களுக்கு டைம் கொடுத்திருக்கலாம் தான?”

ஆவுடையப்பன், “கல்யாணம் பண்ணிட்டு போயே அவங்க வீட்ல ஒத்துக்கல மாப்ள. கல்யாணத்துக்கு கேட்டா மட்டும் சரி சொல்லிருப்பாங்களா? என்னமோ நாங்க நாடகம் நடத்தி பணத்துக்காக கல்யாணம் பண்ண மாதிரி பேசிட்டாங்க.” என்றவருக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.

சோர்ந்து அமர்ந்திருந்த ஆவுடையப்பன் அட்சயாவை மட்டும் தான் பார்த்தார். அனைத்தும் காதில் விழுந்தாலும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

“இருந்தாலும் நீங்க கொஞ்சம் பொறுமையா யோசிச்சிருக்கலாம் சம்பந்தி. ஒருவேளை அந்த பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருந்தா என்ன பண்ணிருப்பீங்க? நம்ம குடும்பத்துலேயே கூட மாப்பிளை பார்த்துருக்கலாம்.” என்றார் கோபிநாத்தின் தந்தை.

“என்னோட அண்ணா பையன் கிட்ட தான் முதல்ல கேட்டாங்க அண்ணா. எல்லாம் தெரிஞ்சும் நம்ம அச்சுவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அவங்க வீட்ல சொல்லிட்டாங்க. அந்த நேரத்துல நாங்க என்ன பண்ணட்டும்?”

“இது நம்ம பொண்ணு வாழ்க்கை. கொஞ்சம் யோசிச்சிருக்கணும்.” என கோபிநாத் மீண்டும் அவரை குற்றம் சாட்டினார்.

“உங்களுக்கு புரியாது மாப்ள. அவன்.. அந்த ரோஷன் என்னலாம் பேசினான் தெரியுமா? இது தான் உண்மைனு அங்க எல்லாருக்கும் நிரூபிச்சாலுமே, சபைல எல்லாரும் நம்ம பொண்ணை தான் குத்தம் சொன்னாங்க. அதுவும் கல்யாணம்னு ஒன்னு நடக்கவே விட மாட்டேன்னு அந்த பையன் சொன்னதை என்னால தாங்கவே முடியல. அதான் என்ன நடந்தாலும் பரவாலனு அச்சுவை அந்த தம்பிக்கு கட்டி வெச்சேன்.”

அவர் சொல்ல சொல்ல அங்கிருந்தவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “அந்த நேரத்துல அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்குறதை விட, எம்பொண்ணு வாழ்க்கை தான் எனக்கு பெருசா இருந்துச்சு. அந்த தம்பியும் நல்லவனா இருக்க போய் கட்டாயப்படுத்தி அப்பவே கல்யாணம் பண்ணி வெச்சிட்டேன். ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்ப புரியது. என்னோட அவசர புத்தியால என் பொண்ணோட இந்த நிலைமைக்கு நானே காரணம் ஆகிட்டேன்.”என தலையில் அடித்துக் கொண்டே அழுதார் ஆவுடையப்பன்.

தோளிற்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை மூவர் இருக்க, இன்னும் சில மாதங்களில் பேரனையே பேத்தியையோ எடுக்கும் நிலையில் இருந்தவர் தன்னிலை மறந்து அழுவதை பார்த்த அனைவருக்குமே மனம் கனத்தது. “போதும் ப்பா. நீங்க யாருக்கும் விளக்கம் கொடுக்க வேணாம். நீங்க எனக்கு நல்லதுன்னு நினைச்சு தான பண்ணீங்க. விடுங்க.” என அவரின் கைகளை பிடித்துக் கொண்டாள் அட்சயா.

“நீயும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் அச்சு. எல்லார் வீட்லயும் பொண்ணு வீடை தங்க தட்டுலயா தாங்குறாங்க? தப்பு நம்ம பக்கம் இருக்கப்ப ஒன்னு ரெண்டு பேச்சை கேட்டு தான் ஆகணும். அதுக்குன்னு உடனே உறவையே முடிச்சிக்கணுமா? அங்க இருக்க அப்படியென்ன பயம் உனக்கு?” என பரிமளம் ஆற்றாமையுடன் கேட்க,

“உங்களுக்கெல்லாம் இவங்க கூட தான் கல்யாணம். இவங்க வீட்ல தான் இனி வாழ போறோம்ன்னு முன்னாடியே தெரிஞ்சி தான ம்மா கல்யாணம் பண்ணீங்க. எவனோ பண்ண தப்புக்கு என்னைய மட்டும் திடீர்னு ஒருத்தரை காட்டி கல்யாணம் பண்ணி வெச்சி அங்க போய் அவங்க கூட வாழுனா? எனக்கு எப்படி இருக்கும்? ஏன் என்னை யாருமே யோசிக்கல?” என அட்சயாவும் அழுகுரலில் கேட்டாள்.

“இவ்வளவு பேசுறவா அடக்க ஒடுக்கமா ஆடாம ஒழுங்கா இருந்திருக்கணும். மெசேஜ் வந்துச்சு போனனு அவ்ளோ சுளுவா சொல்லுற? மண்டபத்துல அத்தனை பேர் கேட்ட கேள்விக்கு நம்மால பதில் சொல்ல முடிஞ்சிதா? எல்லார்கிட்டயுமே விடியோவையும் ஃபோனையுமா காட்டவா முடியும்? நடந்த எல்லாத்துக்கும் நீதான் முத காரணம்.” என பரிமளம் சொன்னது வெகுவாய் அட்சயாவை தாக்கியது.

நேற்றிலிருந்து இதே வார்த்தைகளை பல குரல்களில் பல விதமாக கேட்டு விட்டாள். இன்று அன்னையே சொல்லிவிட உள்ளமெல்லாம் ரணமாய் வலித்தது. ‘அப்படியென்ன நான் பண்ணிட்டேன்? நெருங்கிய தோழியின் அழைப்பில் சென்றேன். அதில் இப்படியொரு குள்ள நரியிடம் சிக்கிக்கொள்வேன் என தெரிந்தா செய்தேன்?’ என மீண்டும் மீண்டும் மனதில் உறுபோட்டவள் கண்களை அழுந்த துடைத்துவிட்டு வேகமாக எழுந்தாள்.

“எல்லா தப்பும் என்மேல தான். என்னால தான் உங்களுக்கு அவமானம் வந்துடுச்சு. நானில்லனா நீங்க எல்லாரும் நிம்மதியா இருப்பீங்க தான.” என சொல்லிக் கொண்டு வேகவேகமாக அறையின் உள்ளே நுழைந்து கதவை சாற்றும் முன்பே, அருகில் சுவரில் சாய்ந்து நின்றிருந்த சபாபதி, அவளை தடுத்து அவளின் கைகளை பிடித்து வெளியே இழுத்தான்.

அவளின் செயலில் பதறிய குடும்பம் முழுவதும் வேகமாக அவளிடம் வந்தனர். “என்னை விடு ண்ணா. நம்ம அம்மாவே என் மேல தான் தப்புன்னு சொல்லிட்டாங்க தான.. என்னை விடு நான் சாக போறேன்.” என திமிறிக்கொண்டு அழுதவளை சபாபதி ஒரு அரைவிட அழுகையுடனே அவனை கட்டிக்கொண்டாள்.

“எனக்கு எதுவுமே பிடிக்கல ண்ணா. எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க. என்னை பத்தி தப்பா பேசுறாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு ண்ணா. இதோ நம்ம அம்மாவே அப்படி தான்னு சொல்லுறாங்க. இனி நானெதுக்கு வாழனும்.” என சபாபதியின் தோளில் சாய்ந்து கதறியவள் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தாள். தங்கையை அந்நிலையில் பார்த்த சபாபதியின் இரத்தம் கொதித்தது.

மகளின் செயலில் மொத்தமாக உடைந்துவிட்டார் ஆவுடையப்பன். “அம்மாடி அழாத மா. நீ இப்படி கண்டதையும் நினைக்க கூடாதுனு தான அவசர அவசரமா அப்பா உனக்கு கல்யாணத்தை பண்ணி வெச்சேன். ஆனா எது நடக்க கூடாதுன்னு நினைச்சனோ அதுவே நடந்துடுச்சே..” என அட்சயாவின் தலையை கோதியவர் அப்படியே அவளின் அருகில் அமர்ந்துவிட்டார்.

“அம்மா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன் அச்சு. அம்மா எதோ கோபத்துல சொல்லிட்டேன். உன்னை சொன்னதுக்கு எனக்கு ரெண்டு அரை கூட கொடுத்துடு டி. எங்க பொண்ணை பத்தி எங்களுக்கு தெரியாதா? எங்களயெல்லாம் விட்டுட்டு போக பார்த்தியா? உனக்கு அந்த கல்யாணம் வேணாம். அவங்களும் வேணாம் விடு. நீ நிம்மதியா இருமா.” என அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் பரிமளம்.

“இனி உன்னை கேட்காம அப்பா எதுவும் செய்ய மாட்டேன் டா. இப்படி பண்ணி எங்களை பயமுறுத்தாத. இனி இப்படி பண்ண மாட்டேன்னு அப்பாக்கு சத்தியம் பண்ணு..” என ஆவுடையப்பன் கையை நீட்டினார்.

அவரின் கையை இறுக்கி பிடித்துக் கொண்ட அட்சயா, “எனக்கு எப்படி தூக்கு போடணும்னு கூட தெரியாது ப்பா. ஒரு வேகத்துல தான் அப்படி பண்ண பார்த்தேன். நிஜமா இனி அதை மாதிரி பண்ணவே மாட்டேன். உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன்..” என அழுகையில் கரைந்தவளை கங்காவும் சபாபதியும் தான் சமாதானப்படுத்தினர்.

கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்ட கோபிநாத், “சரி. எல்லாரும் போய் குளிச்சிட்டு வாங்க. சாப்புடலாம். இப்படியே அழுதா வேலைக்கு ஆகுமா? உனக்கு நாளை கழிச்சி பரிட்சை இருக்கு தான அச்சு. அதுக்கு படிக்கணும்ல எல்லாரும் உள்ள போங்க..” என அனைவரையும் விரட்டினார்.

“நீ அச்சு கூடவே இரு கங்கா. அவளை தனியா விடாத.” என கங்காவை அனுப்பிவிட்டு கோபிநாத் திரும்ப, சத்தமில்லாமல் சபாபதி ஃபோன் பேசிக்கொண்டே வெளியேறுவதை பார்த்தார்.

“நீ எங்க போற?”

“அது மாமா.. அந்த ரோஷன் தனியா சரக்கடிக்க வந்திருக்கானாம். என்னோட ப்ரெண்ட் சொன்னான். இன்னைக்கு அவனுக்கு இருக்கு..” என ஆத்திரமாக சொல்ல,

“அவனுக்கு தண்டனை கொடுக்கணும்னா போலீஸ் போ. இல்லனா சும்மா இரு. தேவையில்லாம அவனை அடிக்க போறேன்னு நிக்காத..”

“அதுக்குனு அவனை அப்படியே விட முடியுமா மாமா. அப்பா அவரோட தங்கச்சி பாசத்துக்கு விட்டா. நான் என்னோட தங்கச்சியை பார்க்கணும்ல?” என சபாபதி மேலும் துள்ளினான்.

“விடாத டா. போ போய் அடி. ஆனா அவன் பதிலுக்கு உன்னை ஒன்னும் பண்ண மாட்டான். நம்ம வீட்டு பொண்ணு கிட்ட தான் மறுபடி வம்பு பண்ணுவான். அது தான் உனக்கு வேணும்னா உள்ள கிட்சன்ல கத்தி இருக்கும் எடுத்துட்டு போ.” என கோபிநாத்தின் அதட்டலிற்கு செவி மடுத்தவன் கோபமாக உள்ளே சென்றுவிட்டான்.

பின் அனைவரும் குளித்துவிட்டு வர உருட்டி மிரட்டி சாப்பிட வைத்த கோபிநாத் அட்சயாவின் பாலில் தூக்க மாத்திரை கலந்து அவளை உறங்க வைத்தார். அன்றே துக்கம் விசாரிக்கவென அக்கம் பக்கத்தினர் படையெடுத்தனர்.

மறுநாள் அட்சயாவை கிளப்பிக் கொண்டு சென்னை சென்றனர் கோபிநாத்தும் கங்காவும். உடல்நிலை சரியில்லையென கூறி காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள கோபிநாத்தின் அக்கா வீட்டிலே அவளை தங்கவைத்தனர். அந்த பரீட்சை முடியும்வரை அவளுடனே கங்காவும் இருந்தாள்.

பரீட்சை முடிந்து சேலத்தில் இருக்கும் கங்காவின் வீட்டிற்கு சென்றுவிட்டாள் அட்சயா. ஒருவருடம் முழுக்க ஊர் பக்கமே அவள் வரவில்லை. அந்த ஒரு வருடத்தில் தான் விவாகரத்து வழக்கும் நடந்தது. வழக்கின் விசாரணை அன்று மட்டும் வந்தாலும் அவள் பெயர் அழைக்கும் வரை கங்காவுடனே காரில் இருந்துக் கொள்வாள்.

கடைசியாக, விவாகரத்தான அன்று தான் குருபிரசாத்தின் அப்பாவையும் அம்மாவைவும் நேராக சந்தித்தாள். அதுவும் கையொப்பம் போட வேண்டும் என்ற நிலையில் தான் குருவையும் அருகில் பார்த்தாள். அதனாலே அவர்கள் வீட்டில் யாரையுமே அட்சயாவிற்கு தெரியாது.

இரண்டாம் வருடம் படிப்பையும் முடித்து விவாகரத்தையும் வாங்கிவிட்டு ஒருவருடம் கழித்து தான் அவளின் சொந்த வீட்டிற்கு சென்றாள்.

மறுநாளே ஆவுடையப்பனின் தங்கை சுடர்மணி அவரின் கணவர் ராசைய்யா மற்றும் ரோஷனுடன் சேர்ந்து அட்சயாவை பெண் கேட்டு வந்துவிட்டனர். காலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்த அட்சயா அவர்களை பார்த்து அலறிய சத்தத்தில் அக்கம் பக்கமும் கூடிவிட்டனர்.

இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் சரிவராது என முடிவெடுத்தார் ஆவுடையப்பன். அன்றே காவல் நிலையம் சென்று ரோஷனின் மேல் புகாரும் கொடுத்துவிட்டார்.

அங்கும் வந்த சுடர்மணியின் கெஞ்சலில், “இனி உன் பையனால எங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு எழுதி கொடுக்க சொல்லு சுடர். அப்படி அதை மீறி எதாவது பண்ணா உள்ள தூக்கி வைக்க சொல்லிடுவேன்.” என இறங்கி வர அவர் சொல்வதை வேகவேகமாக எழுதிகொடுத்தான் ரோஷன்.

“இனி அந்த பொண்ணுக்கு என்ன நடந்தாலும் முதல் சந்தேகம் உங்க பையன் மேல தான் வரும். பார்த்துக்கோங்க.” என் எச்சரித்தார் காவலர்.

“இதோட உனக்கும் எனக்கும் உறவு முடிஞ்சி போச்சு.” என ஆவுடையப்பனும் அங்கிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அட்சயாவை எங்கும் தனியாக அனுப்பவே மாட்டார்கள். எங்கு சென்றாலும் அண்ணனுடனோ அல்லது அப்பாவுடனோ தான் செல்வாள்.
 

Author: STN - 92
Article Title: அத்தியாயம் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
கடைசி வருடம் பரீட்சைக்கு முன் வீட்டிற்கு வந்திருந்தாள் அட்சயா. “அம்மா நான் குளிக்க போறேன்.” என அறையின் கதவை சாத்திவிட்டு சென்றாள்.

அந்நேரம் அவர்களின் பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரின் மகள் பூப்பெய்தியிருந்ததால் பரிமளத்திடம் சொல்ல வந்திருந்தார்.

“ரொம்ப சந்தோசம் சரசு. விஷேஷமா பண்ண போறீயா?”

“ஆமா க்கா. எல்லாருக்கும் சொல்ல போகணும். என்னோட மாமியார் வீட்ல தான் இருக்காங்க. இருந்தாலும் கொஞ்சம் அடிக்கடி எட்டி பாருங்க.” என்றார்.

பரிமளம், “அதுக்கென்ன சரசு. நம்ம அச்சு கூட இப்ப வீட்ல தான் இருக்கா. நாங்க பாத்துக்குறோம். நீங்க போய்ட்டு வாங்க..” என்றிட,

“என்னோட பொண்ணுக்கு இப்ப தான் ஒரு நல்லது நடக்க போகுது. அங்க அச்சுவை நீங்க கூட்டிட்டு வர வேணாமே. நான் தப்பாலாம் சொல்லல க்கா. உங்களுக்கு புரியுது தான.” என்றவர் சென்று விட்டார்.

‘அச்சுவை கூட்டிட்டு வர வேண்டாம்.’ என்று சொன்ன இதே பெண்மணி தான் அவரின் மகளிடம், “அச்சு அக்காவை மாதிரி தான் நீயும் நிறைய மார்க் எடுத்து பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்.” என அட்சயாவை முன் மாதிரியாக காட்டியிருக்கிறார்.

அவர் சென்றாலும் அவர் சொல்லிவிடடு சென்ற வார்த்தைகள் ரீங்கரமாக சுற்றிக்கொண்டே இருந்தது. ஒரு நல்ல காரியம் என்னும் பொழுது அட்சயாவை விலக்குவதை பார்த்த தாயின் உள்ளம் புழுவாக துடித்தது.

அறைக்குள் இருந்து அனைத்தையும் கேட்ட அட்சயாவிற்கும் கண்கள் கலங்கியது. ‘நா அங்க இருந்தா என்ன ஆகிடுமாம்?’ என மனம் எடுத்துக் கொடுக்க இரண்டு நாட்களிலே, “ஹால் டிக்கெட் வாங்க வர சொல்லிருக்காங்க ம்மா.” என சென்னைக்கு புறப்பட்டுவிட்டாள்.

படிப்பை முடித்து மீண்டும் சேலத்திற்கு வந்திருந்தாலும் அவளின் வீடே அவளுக்கு அந்நியமாக தெரிந்தது. சிறிது நாட்களில் வேறொரு திருமண பேச்சை எடுத்தனர். அதை கேட்டவுடனே அவளுக்கு குருபிரசாத்தின் நினைவு தான் வந்தது.

ஆனால் வீட்டினர் யாரும் அவனின் பெயரை எடுக்கவே மிகவும் யோசித்தனர். கல்யாணம் செய்து வைத்ததால் தான் தற்கொலை வரை சென்றால் என்பதால் அவ்வளவு சுலபத்தில் அவளிடம் குருப்ரசாத்தை பற்றிய பேச்சை அவளின் முன் எடுக்க யோசித்தனர்.

எவ்வளவு பார்த்தும் ஒரு வரன் கூட அட்சயாவிற்கு அமையவில்லை. அவளின் கடந்த காலத்தை கேட்டு, பேசி, அலசி, ஆராய்ந்து பின் நிராகரித்தனர். என்ன செய்வது என்றே அவர்களுக்கும் தெரியவில்லை. என்னதான் வீட்டினர் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் வீட்டில் நடப்பது அவளுக்கு தெரியாமலும் இல்லை.

‘நமக்கு திருமணம் நடக்காது.’ என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. அப்படியிருக்கையில் தான் வேலைக்கு செல்கிறேன் என நின்றாள்.

கோபிநாத்தின் மூலம் வீட்டில் பேசி வேலைக்கு செல்ல அனுமதியும் வாங்கிவிட்டாள். நீங்க சொல்றவங்களை நிச்சயமா கல்யாணம் பண்ணிக்குறேன் என சம்மதத்துடன் சென்னைக்கு புறப்பட்டாள். அப்படி சொல்லி இங்கிருந்தும் திருமணத்தில் இருந்தும் தப்பி விடலாம் என்பது அவளின் எண்ணம்.

ஆனாலும் விதி அவளை குருபிரசாத்தின் முன்னே தான் நிறுத்தியது. வாழ்வில் அவனை மீண்டும் காண்பாள் என அவள் நினைக்கவே வில்லை. குருவை பார்த்தவுடன் அவளின் மனம் ஆட்டம் காண துவங்கியது.

அவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற செய்து மனதில் எதோ ஒரு மூலையில் அவளுக்கு இனிக்க தான் செய்தது.
ஆனாலும் அவருக்கு நான் ஏற்றவளில்லை என்ற அவளின் மீதே அவள் கொண்டுள்ள குற்றவுணர்வு அவளை அவனின் முன்னே நிற்காமல் ஓட செய்தது.

அலைபேசியின் சத்தத்தில்
கண்ணைவிழித்து பார்த்த அட்சயா நிகழ்காலத்திற்கு வந்திருந்தாள். அழைத்தது பரிமளம் தான். அவரிடம் பேசிவிட்டு வைத்தவளிற்கு லேப்டாப் திறந்திருப்பது தெரிய அதனை மூடி எடுத்து வைத்தாள்.

பின், எழுந்து தன்னை சரி செய்தவள் உண்டு விட்டு மறுநாள் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
கோபி மட்டும் தான் குடும்பத்தில் உருபடி....அவர் பேசுவது தான் கரெக்ட்.....
எம்மா சுடர்....கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்ல தானே....
ஆவு இவங்களுக்கு தான் நீங்க அப்படி பண்ணிகளா?????
இதை அன்னைக்கே செய்து இருந்தா இவளோ ப்ராப்ளம் இருக்காது இல்ல.....
இவளோ தான் உங்க தொங்கச்சி.....பார்த்துக்கோங்க.....
அவன் இவளோ பண்ணியும் அவனுக்கே பொண்ணு கேட்க வராங்களே.....எவளோ தைரியம்????

இதே போல ஒரு பையனுக்கு அவங்க பூரியை கொடுப்பாங்களா????

சபா மாறி நல்ல பையனுக்கு தானே கொடுப்பாங்க.....

என்னை கேட்டா பூரிக்கு அப்படி ஒரு பையனை பார்த்து கட்டி வைக்கணும்.....

பூரி மேல எந்த கோபமும் இல்ல.....

பட் இது என்ன இப்படி ஒரு மனநிலை?????

தன் பையன் ஆயிரம் பொறுக்கி தனம் பண்ணுவான்....அவனை ஒன்னும் சொல்லாம நல்லா படிச்ச, அவனை பிடிக்கவே இல்லனு சொல்ற பொண்ணுக்கே கட்டி வைப்பாங்களா?????

ஆவு இப்பயாவது சுதாரிச்சாரே சந்தோஷம்
 
  • Love
Reactions: STN - 92

STN - 92

Active member
Staff member
May 5, 2026
80
200
33
Chennai
கோபி மட்டும் தான் குடும்பத்தில் உருபடி....அவர் பேசுவது தான் கரெக்ட்.....
எம்மா சுடர்....கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்ல தானே....
ஆவு இவங்களுக்கு தான் நீங்க அப்படி பண்ணிகளா?????
இதை அன்னைக்கே செய்து இருந்தா இவளோ ப்ராப்ளம் இருக்காது இல்ல.....
இவளோ தான் உங்க தொங்கச்சி.....பார்த்துக்கோங்க.....
அவன் இவளோ பண்ணியும் அவனுக்கே பொண்ணு கேட்க வராங்களே.....எவளோ தைரியம்????

இதே போல ஒரு பையனுக்கு அவங்க பூரியை கொடுப்பாங்களா????

சபா மாறி நல்ல பையனுக்கு தானே கொடுப்பாங்க.....

என்னை கேட்டா பூரிக்கு அப்படி ஒரு பையனை பார்த்து கட்டி வைக்கணும்.....

பூரி மேல எந்த கோபமும் இல்ல.....

பட் இது என்ன இப்படி ஒரு மனநிலை?????

தன் பையன் ஆயிரம் பொறுக்கி தனம் பண்ணுவான்....அவனை ஒன்னும் சொல்லாம நல்லா படிச்ச, அவனை பிடிக்கவே இல்லனு சொல்ற பொண்ணுக்கே கட்டி வைப்பாங்களா?????

ஆவு இப்பயாவது சுதாரிச்சாரே சந்தோஷம்

சுடர் மாதிரி ஆளுங்களுக்கு பையன் ஒரு மாதிரி பொண்ணு ஒரு மாதிரி.

பூரி😓

நன்றி dear❤️
 
  • Love
Reactions: Gowri Karthikeyan