அத்தியாயம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
அவள் நின்ற வாயிலுக்கு நேரே கூடத்தின் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான், பூபாலன். ஒருநாளுமேயில்லாது நிலத்தில் அமர்ந்திருந்தான். அதுவும் இந்தக் காலையில்! பார்வையோ, நேரே இருந்த வெளிவாயிலில் குத்திட்டு நின்றது.

நெற்றி சுருங்க, தன்னையுமறியாது சில அடிகள் உள்ளே எடுத்து வைத்துவிட்டு நிதானித்தாள், கயல்விழி.

வாயிலில் வைத்துவிட்டுப் போவதுதானே என்று மாஸ்க் கூட அணிந்து வரவில்லை. தயக்கத்தைக் களைந்தது கருத்தில் பதிந்த அவன் தோற்றம். நன்றாக உற்றுப் பார்த்தாள். குளித்திருப்பான் போலும். ஈரத்தோடே ஒரு டீசெர்ட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தான்.

'தப்பித்த தவறியும் உள்ளுக்கு வந்திர வேணாம்.' என்ற எச்சரிக்கையும் மீறி, அவளை, அவனருகில் அழைத்துச் சென்றிருந்தது, ஏதோ நடந்திருக்கு என்ற உள்ளுணர்வு.

அவள் அருகில் சென்று நின்றதையும் உணராதிருந்தான், அவன்.

உள்ளம் பிசைய, "பூபாலன் அண்ணா..." குரல் நடுங்க அழைத்தாள். அவன் அசையவேயில்லை. “பூபாலன் அண்ணா" குரலை உயர்த்தினாள்.

சட்டென்று திரும்பிப் பார்த்தான். கண்கள் இரண்டும் சிவந்து தடித்து...அதோடு...கண்ணீர்...

“என்ன...என்ன நடந்திட்டு? காயு ஓகே தானே? ஏன் இப்பிடி ஈரத்தோட இருக்கிறீங்க?" கேட்டவளுக்கு, 'திரும்பவும் இவருக்கு கொரோனா வந்திட்டோ!' என்ற எண்ணமே.

‘சொல்ல சொல்ல கேட்கிறதே இல்ல. ஒரே காயுட அறைக்க போய் வந்தபடி. சின்னப்பிள்ளைகள விட இவே ரெண்டு பேரும் சரியான மோசம்!' தொடர்ந்து கண்டன முணுமுணுப்பில் இறங்கியிருந்தது, அவளுள்ளம்.

"கயல்...காயு...காயுவ..." அவன் இப்படித் தொடங்க, "காயுக்கு என்ன?" நடுங்கிற்று, அவள் குரல்.

"சாமத்தில சரியா மூச்சு எடுக்கக் கஸ்டப்பட்டாள். ஒரு நாலு மணி போல வந்து...வந்து கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள், கயல்."

“என்ன எழுப்பி இருக்கலாமே. இப்ப எப்பிடி இருக்கிறா?"

"அவ்வளவு இழுப்பிலும் ஹொஸ்பிட்டலுக்கு அடிக்காதீங்க எண்டு கெஞ்சினவள். தனியப் போகப் பயமா இருக்கு எண்டும்... அழுதாள்." குரல் கமறச் சொன்னவன் உள்ளத்து நடுக்கம் குரலில் தெள்ளெனத் தெரிந்திட்டு.

"இப்ப எப்பிடி இருக்கிறா? அது ஒண்ணும் இல்ல சுகம் வந்திரும், யோசியாதீங்க!"

அவள் குரலே கேளாதவன் போன்று சொல்லிக்கொண்டே போனான் பூபாலன்.

“என்னைக் கிட்டவே விடேல்ல. கிட்ட வரச்சொல்லி கையசைத்தாள் கயல். நெருங்க விடேல்ல. என்னவோ சொல்ல அந்தரப்பட்டாள். எல்லாம் என்னால தான். நான் கவனமா இருந்திருக்க கொரோனா இந்த வீட்டுக்க வந்திராது எல்லா?" வேதனையோடு அரற்றினான்.

அவனை எப்படித் தேற்றுவதென்று புரியவில்லை, அவளுக்கு. ‘இவர் இப்பிடியே இருந்து திரும்ப வருத்தத்த இழுக்கப் போறார். காயுக்கு ஒண்ணும் இராது சுகமாகிரும்.’ தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள் போலும். அதேவேளை விறுவிறுவென்று நகர்ந்தவள், பிரணவ்வுக்கு அழைத்தாள்.

காலை ஆறு மணியும் ஆகியிருக்கவில்லை. நல்ல நித்திரையிலிருந்த பிரணவ், கயல் என்று கைபேசியில் ஒளிரவும் என்னவோ ஏதோவென்று பதறிவிட்டான். இல்லையோ அவ்வளவு இலேசில் அழைத்து விடுவாளா என்ன?

அவள் குரல் பதற்றத்தோடு வந்து செவிகளில் மோதி முடியவில்லை, “இன்னும் பத்து நிமிசத்தில அங்க நிப்பன், வையும்.” என்றுவிட்டு அதுக்கு முன்னரே வந்து நின்றான். முகம் கூடக் கழுவியிரான் என்றது அவன் தோற்றம்.

“பிரணவ்...காயு...எனக்கு பயமா இருக்கு.” அவன் கரத்தை இறுகப் பற்றியபடி தன்னை மறந்து பதறினான், பூபாலன்.

“பச் என்னடா நீ சின்னப் பிள்ள போல? அதெல்லாம் ஒண்ணுமில்ல. காயுவுக்கு ஒண்ணும் இராது. அதோட இளம் ஆக்களுக்கு ஒண்ணும் பயமில்லடா. கண்டதையும் யோசியாத! நீ இப்பிடி ஈரத்தலையோட என்னடா இது?” கடிந்து கொண்டான்.

“இந்தாங்க.” துவாய் ஒன்றை பிரணவ்விடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள், கயல். அவளால் இதைவிட என்ன செய்யவியலும் என்று தெரியவில்லை.

“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல, அவளுக்குச் சுகம் வந்திர வேணும்.”

“என்ன கதையடா கதைக்கிற? காயுவுக்கு ஒண்ணும் இல்ல. கெட்டதா ஏன் நினைக்கிற? முதல் தலையைத் துவட்டு!” துவாயை அவன் தலையில் போட்டான், பிரணவ்.

“எனக்கு..எனக்கு அவளோட போக வேணும் போலக் கிடந்தது. கிட்ட விடேல்ல பிரணவ். இப்பக் கொஞ்ச முதல் தான் கயல் ஆக்கள் மேலே வந்திட்டாலும் என்னால இனியும் ஆருக்கும் வருத்தம் வரக்கூடாதெண்டு போய் முழுகினன்.” கண்ணீர் பளபளக்கச் சொன்னபடி அசிரைத்தையாகத் தலையைத் துவட்டினான்.

அந்நேரம் பார்த்து இலங்கையில் இருந்து அவன் அன்னை அழைத்தார். அடுத்து, காயுவின் தாய், சகோதர சகோதரி என்று அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.

பதற்றம் ஏறியதேயொழிய குறையவில்லை.

லாதி விழித்தெழுந்திருந்தாள். விழிகளைச் சுழற்றியவள் மெல்ல, சோம்பலோடு எழுந்தமர்ந்தாள்.

இந்த சில நாட்களாக கண் திறக்கையில் கயல் நிச்சயம் எதிர்ப்படுவாள். இவள் அரவத்தில் சட்டென்று பார்வையைத் திருப்புவாள். மறுநொடி, என்ன கை வேலையாக இருந்தாலும் விட்டு விட்டு அவளை நெருங்கி இறுகிய அணைப்போடு கன்னத்தில் ஒரு முத்தமும் வைத்துவிட்டே காலை வணக்கம் சொல்லுவாள். அந்த, அன்பான, எனக்கு நீ விசேசம் என்ற அரவணைப்பை சிறுமியின் உள்ளமும் வெகு ஆசையாக எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தது. தாய் தந்தைக்கு அடுத்தபடி, ம்ம்... அப்படியெல்லாம் சொல்ல முடியாதபடி காயு, பூபாலனைப் போலவே கயலையும் மிக மிகப் பிடிக்கும், சிறுமிக்கு.

"ஸ்வீட்டி!" அழைத்தபடி இறங்கியவள் பார்வை அயர்ந்துறங்கும் குட்டிச் சகோதரனில். உதடுகளில் உரசி நின்ற சிறு முறுவலோடு தன் நீள விழிகளை அலுப்பாக மூடியபடிகிடந்தான், அவன். சகோதரன் கன்னத்தில் பச் பச் என்று முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது, லாதிக்கு.


மேலதிகமாக வாசிக்க...

அத்தியாயம் 11- 2
அத்தியாயம் 11- 3
 
Last edited:

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Shameem @ Sumithra