அத்தியாயம் 13 & 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,719
1,113
113
அன்று காலையில்...

மனைவி இன்னமும் ஓரிரு நாட்களில் குணமாகி வீடு வந்துவிடுவாள், தம் தவிப்புக்கும் பதற்றத்துக்கும் முற்றுப்புள்ளியிட்டு விடுவாள் என்ற நிறைந்த நம்பிக்கையோடு தான் எழுந்திருந்தான், பூபாலன். இருந்தாலும் அவனையும் மீறிய பதற்றம் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அதை விலக்கிவிட்டு வைத்தியசாலையில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் நோக்குடன் ‘ஐ பேட்’ திரையை உயிர்ப்பித்தான்.

வைத்தியசாலையிலோ, “நாங்களே இப்ப கூப்பிட இருந்தம்.” என்றபடிதான் இணைப்பைக் கொடுத்தார்கள்.

அங்கே, முதல் நாளைவிட முன்னேற்றமிருக்கும் என்ற நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு பார்த்தவன் முகத்தில் ஏமாற்றம் பலமாகவே அறைந்தது. அடுத்து வந்த நிமிடங்கள் ஒவ்வொன்றுமே வலு கனத்தோடு நகர முடியாது தட்டுத் தடுமாறிக் கடந்து சென்றன.

எல்லாமே முடிந்திட்டு! கண்ணிமைப் பொழுதில், பெரியதொரு இழுவையோடு மூச்சடங்கிப் போனவளைவிட்டு விழியகற்றாது உறைந்தே போயிருந்தான், அவள் கணவன்.

“ஏய் காயு, உனக்கு ஒண்ணுமில்லடி! பயப்படாத செல்லம், நாங்க எல்லாம் பக்கத்தில தான் இருக்கிறம். கெதியா எல்லாம் சுகமாகிரும்.” தன்னுள் கலந்திருந்தவள் வேதனையைப் பார்த்துச் சற்றுமுன்னர் சத்தமாக வார்த்தைகளை விட்ட வாய், மூட மறந்திருந்தது.

நிமிடமும் கடந்திராது, மனைவியை நோக்கியெழுந்த கை மட்டும் உயிர்ப்பைத் துலைத்த வலிதாங்காது சீவனின்றித் தொய்ந்திற்று!

"அம்மாவ நானும் பார்க்க வேணும், கதைக்க வேணும் பா!" அடம்பிடித்து, தகப்பன் மடியில் வந்தமர்ந்திருந்தாள், லாதி. தாயின் விழிகளோடு பார்வையைக் கலந்து, “இண்டைக்கு நீங்க வீட்ட வந்திர வேணும் மா!’ கட்டளையாகச் சொல்ல இருந்தவள், அங்கு தாய் இழுத்து இழுத்து ஓய, "அம்மா!” வீறிட்டாள். நடப்பவை முழுமையாக விளங்கவில்லை, சிறுமிக்கு. இருப்பினும் தாயின் வேதனை அவள் நெஞ்சிலும் முகத்திலும் பளீர் பளீரென்று அறைந்து துவன்றிடச் செய்திட்டு.

அப்புதிய புலர்வில் நல்ல முன்னேற்றமிருக்கும் என்ற நம்பிக்கையோடு பார்க்க வந்த கயல், அவள் அன்பு காயு படும் பாட்டைக் கண்கொண்டு பார்க்க முடியாது தத்தளித்து நின்றாள். "ஒண்ணுமில்ல காயு!” பூபாலன் வார்த்தைகள் ஓய முதல் ஆரம்பித்திருந்தாள்.

“உமக்குக் கெதியா நல்ல சுகம் வந்திரும். ஒண்டு ரெண்டு நாளில வீட்ட வந்திரலாம், பிள்ளைகள நான் கவனமாப் பாத்துக் கொள்ளுறன். ஒண்டும் யோசிக்க வேணாம், அமைதியா இரும்!" தன்னையும் மீறி சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தவள், கால்கள் தொய்ந்து போக கீழே விழாது எப்படி நிலத்தில் அமர்ந்தாளோ!

ஆதித்தைப் பிடித்திருந்த பிடி இறுகியது. அடிவயிற்றிலிருந்து தொண்டையால் முட்டி மோதி வெளிவர முயன்ற குரல் வெளிவராது நெஞ்சத்தை அடைக்கச் செய்திட்டு. வியர்வை ஆறாகப் பெருக அந்த வீடே கிர்ரென்று சுற்றியது!

கடைசியாக...காயுவுக்கும் விளங்கிவிட்டதோ! மூச்செடுக்க முடியாது கடினப்பட்டுக் கொண்டிருந்தவள் பட்டென்று ஐபாட்டுக்குப் பார்வையைத் திருப்பியிருந்தாள். கணம் தான், ஒளிர்ந்து அடங்கியது அவள் பார்வை. கணவன், அவன் மடியில் அவள் உயிர்...மகள், பின்னால் கயல், அவள் அணைத்துப் பிடித்திருந்த குழந்தை அவள் செல்ல மகன்...ஆதித்!

அவர்கள் விழிகளில் கலக்கமிருந்தாலும் பதைபதைப்பு இருந்தாலும் இவள் மனதில் சட்டென்று ஒர் அமைதி! அதிலும் கயல் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பேரமைதி அல்லவா தந்திட்டு! அலைந்து அந்தரித்த காயு அடங்கியே போய்விட்டாள்.

மூன்றே மூன்று நாட்கள்; கோரிக்கைகள், வேண்டுதல்கள் தயை தாட்சண்யமின்றி மறுக்கப்பட்டுவிட்டன; எண்ணற்ற பயங்கள், பதற்றங்கள், தவிப்பு, அழுகை, கண்ணீர், எல்லாமே உண்மையாகியாயிற்றே!

காயு... காற்றாகியிருந்தாள்! அவளுக்காக விபரிக்கவியலா ஏக்கத்தோடு காத்திருந்தவர்களை ஏமாற்றிவிட்டு மறைந்திருந்தாள். அச்சிறு குடும்பத்தின் இணைப்பு, உயிர்ப்பு, அரவணைப்பு, துடிப்பு எல்லாமே திடீர் அறிமுகத்தில் வந்திருந்த 'கொரோனா' என்ற ஒற்றைச் சொல்லில் செயலிழந்து போயிற்று.

மற்றவர்கள் பார்த்து இரசித்த அவ்வழகிய புறாக்கூடு பெரும் சூறாவளியில் சிக்கிச் சின்னாபின்னமாகி அந்தரத்தில் பிய்ந்து தொங்கிற்று!

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டியிருக்கையில் "ச்சு" என்று கவலைப்படவும் ஆராயவும் பேசவும் பட்ட வியாதி, அருகில் சுற்றம் என்று வருகையில் நிதானத்தையும் கவனத்தையும் உருவாக்கி, தத்தம் வீட்டினுள் வந்ததும் பயத்தையும் பதற்றத்தையும் விதைத்து, இப்போதோ... ஒரேயடியாக செயல் இழக்க வைத்திட்டே! மீள முடியுமா, இதிலிருந்து? மீட்சி பற்றி எவரேனும் எண்ணுவார்களா?

இதேநேரம், பிரணவ் வீட்டில்...

பேஸ்மென்டில் இருந்தவர்கள் மேலே வந்ததில் அவன் மனதில் ஒருவகையான கிலி. கயலுக்கும் கொரோனா வந்துவிட்டால்? அதோடு, அவள் தன் சக்திக்கும் மீறி தன்னை வருத்துவதாகவும் கவலை. ஒன்றும் செய்யமுடியாத நிலை என்பதால் தன்னால் இயன்றதைச் சரி செய்து உதவுவோம் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

வழமை போலவே விடிந்ததும் நண்பன் வீட்டுக்குப் புறப்பட்டிருந்தான்.

“தம்பி நீ என்னதான் விடியவே வெளிக்கிட்டாலும் அயலுக்க ஆராவது பாத்துப் போட்டுச் சொல்லிக் குடுத்தா கண்டபடி ஃபைன் அடிப்பாங்கள் ராசா! ஒருதரம் எண்டா பரவாயில்ல, ஒவ்வொருநாளும் போறியே! சாப்பாடு கொண்டுபோய் வாசலில வச்சிப்போட்டு வந்தாக் காணும் எண்டா கேக்கிறாயும் இல்ல.” யன்னலில் நின்றபடி கவலையாகச் சொன்னார், அவன் தாய்.

“நான் பாத்துக்கொள்ளுறன் அம்மா, ஒண்ணும் யோசியாதிங்கோ. பின்னேரமாத்தான் வருவன். எல்லாருக்குமா சாப்பாடு கொண்டுவந்து அங்க வாசலில வைப்பீங்க தானே?”

“அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல. நீ போறதுதான்...உனக்கும் வரலாம் தம்பி!” அவருக்கு அதுதானே பெரும் பயம்!

‘பூபாலனுக்கு வந்தது இவனுக்கு வர எவ்வளவு நேரமாகும்? சொன்னால் கேக்கிறான் இல்லையே!’

பதறியபடிதான் ஒவ்வொரு நாட்களையும் கழிக்கிறார். பூபாலன் மகனின் நல்ல நண்பன் என்றதையும் கடந்து அவர்கள் குடும்பத்தோடு நெருக்கமானவார்கள். அதையும் விட்டு மகனை இந்தளவு அங்கு இழுப்பது அவன் மனதில் கயல் மீதுள்ள அன்பு என்று அறியாதவரா? மகனை மறுத்த பெண் என்ற கோபம் அவருள் இருக்கே. அதுவே புறுபுறுக்க வைக்கிறது, பயனில்லை என்றும் தெரிந்தே.

“ஓ அம்மா! ஒண்டுக்கும் யோசியாதீங்க, நான் கவனமாத்தான் இருப்பன்.”

“நான் சொல்லிக் கேக்கிற ஆக்களா நீங்க!” இயலாமையோடு சொன்னவர், “தேத்தண்ணி வச்சன் குடிச்சிட்ட தானே?” அலுப்போடு கேட்டார்.

“ஓம் ஓம் போயிட்டு வாறன் மா!” காருக்குள் ஏறியமர்ந்தவன் மனதில் இன்னதென்றில்லாது ஒரு பதற்றம்.

அடுத்த சில நிமிடங்களில் பூபாலன் வீடு வந்துவிட்டான். தன்னிடம் இருந்த மாற்றுச்சாவி மூலம் கராஜைத் திறந்து காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், அங்கிருந்த கதவு வழியாக வீட்டினுள் நுழைந்தான்.

வரவேற்பறையில் கால் வைக்க முதலே லாதியின் அழுகைதான் செவிகளில் மோதியது. ஒருநாளுமே இப்படி அவள் அழுது அவன் கண்டதில்லை, கேட்டதில்லை. என்னவோ ஏதோவென்று உள்ளே ஓடியவன் பார்வையில் முதலில் பட்டதே நிலம் நோக்கித் துவண்டு சரியும் கயல் தான்.


அத்தியாயம்
 

Author: ரோசி கஜன்
Article Title: அத்தியாயம் 13 & 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
745
652
93
Pondicherry
கொரோனா காலத்தை கண் முன் கொண்டு வந்திட்டுது..இது போல் பாதிக்கப்பட்டு உறவை இழந்த குடும்பங்கள் எத்தனை... மனம் கனக்கிறது 😢