• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் 15 , 16 & 17

ரோசி கஜன்

Administrator
Staff member
கொடும் கனாவில் உலாவும் மனநிலையில் இருந்தான், காயுவின் சகோதரன். எப்போதுமே கதை, பேச்சு, பாட்டு, பிள்ளைகளின் ஆரவாரம் என்றிருந்த வீடா இது? அவ்வீட்டின் உயிர்ப்பு அடங்கி விட்டது என்ற உண்மையை, இதோ எட்டு நாட்களாகி ‘எச்சிச்செலவு’ என்ற காரியமும் செய்தாகிய பின்னரும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மூச்சு முட்டியது! இன்னும் தொடர்ந்து நான்கு நாட்கள் இங்கிருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் என்ற நிலைக்கு வந்திருந்தான், அவன்.

குழந்தைக்குக் கூட ஏதாவது விளங்கிற்றோ என்றளவில் அமைதியாகிவிட்டான். அதோடு, அவனுக்கு இலேசான காய்ச்சல், தடிமன். அப்பப்போ கேட்கும் அவன் சிணுங்கல் ஒலிக்குப் போட்டியாக தொலைபேசி அழைப்புகள்! அதையும் கூட எடுத்துக் கதைக்க பூபாலன் தயாராக இல்லை.

“இவளும் உங்களைப் போலத்தான், எனக்கு இப்ப இரண்டு தங்கச்சிகள்!” என்று தான் காயு, கயலை இவர்களிடம் அறிமுகம் செய்திருந்தாள். அந்தச் சொல்லுக்கேற்ப, தாய் சகோதரி அயல்நாட்டிலிருந்தும் வர முடியாத சூழ்நிலையில் எல்லாருக்குமாக நின்று கவனித்து வருபவளில் இவன் பார்வை சென்றது.

பிள்ளைகளையும் கவனித்து, தொலைபேசி அழைப்புகளுக்கும் தெரிந்தவகையில் பதிலளித்து, யாரும் பார்க்காத போதெல்லாம் கண்ணீரில் கரைந்து...அவன் தாய் காலையில் சொன்னது போல ‘இவளுக்குக் காலத்துக்கும் கடமைப்பட்டுள்ளதாகவே’ அவன் மனமும் நினைத்துக் கொண்டது.

“கயல்விழி, நான் பின்னேரமா வெளிக்கிடலாம் எண்டு இருக்கிறன்.”

“ஓ!” என்றவள் வேறு எதுவுமே கதைக்கவில்லை. குழந்தைக்குப் புட்டிப்பாலை பருக்கிக் கொண்டிருந்தவள் பார்வை மடியில் சொகுசாகப் படுத்துக்கிடந்தவனில்.

குழந்தையின் பார்வையும் அவள் முகத்தில் தான். விழிகளில் சிரிப்பு ஒட்டிக்கிடந்தது. பிள்ளைகள் இருவருக்குமே காயுவின் விழிகள்! கயல் பார்வை கண்ணீரால் நிறைந்திட்டு. அதைத் தளம்ப விடாது சூழ்நிலையை உணர வைத்தான், குழந்தை. தன் வலக்கையில் கலைந்து தொங்கிய அவள் பின்னலை இறுகப்பற்றியிருந்தான், அவன். சிக்குக் கூட எடாது முதல்நாள் இறுகப் போட்டிருந்த பின்னலை ஒரே லயத்தில் இழுத்து இழுத்தே தளரச் செய்து கொண்டிருந்தான்.

“சின்னதா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாலும் அம்மா வந்திருவா கயல். அதுவரை நீர் இங்க இருப்பீர் எல்லா? இப்பிடிக் கேட்கவே ஒரு மாதிரிக் கிடக்கு. உமக்குத்தான் சரியான கரைச்சல் தாறம். இல்லாட்டி...நான் லாதியக் கூட்டிக்கொண்டு போகவோ? கொஞ்ச நாளைக்கு. அம்மாவும் அப்பிடித்தான் சொன்னவா.” காயுவின் சகோதரன் முடிக்கவில்லை, விசுக்கென்று நிமிர்ந்தாள், கயல்.

பார்வையோ, தம்மை நோக்கி வந்த பிரணவ்வில். அவனும் காயு இறந்த அன்றே வந்திருந்த பூபாலனின் ஒன்றுவிட்ட தமக்கை விமலாவும் இங்கே தான் இருக்கிறார்கள்.

“அத்தானிட்டக் கேட்கலாம், அவர் முகம் பாத்துக் கதைச்சாத்தானே?” முணுமுணுத்த காயுவின் சகோதரன், அருகில் வந்தமர்ந்த பிரணவ்வைப் பார்த்துச் சின்னதாக முறுவலித்தான்.

தொய்ந்த நடையோடு வந்த லாதி, கயல்விழியை ஒட்டிக் கொண்டமர்ந்து அவள் முதுகோடு தலையைப் புதைத்துக்கொண்டு கண்களை மூடினாள். சிறுமியின் அழுந்திய பிடிக்குள் அவளுக்கு மிகவும் பிடித்த ‘ஸ்நொவ் வைட்’ பொம்மை!

கயல் தலை மெல்லச் சரிந்து சிறுமியின் தலையோடு உரசியது. ‘இவளக் கூட்டிக்கொண்டு போயிருவாரோ! என்னட்டக் கேட்கிறாரா? சொல்லுறாரா?’ மனதுள் பதைபதைத்தாள்.

முதல், ‘இதில் நீ என்ன சொல்ல இருக்கு? பூபாலன் தானே பதில் சொல்ல வேணும்’ உண்மை நிலையச் சொன்னதுள்ளம்.

குழந்தைகளைத் தன் சொந்தம் போன்று பார்த்துக் கொண்டாலும் அவர்கள் சார்பில் முடிவெடுக்கும் உரிமையற்றவள்தானே இவள். அக்கணம் வரை, காயுவின் மறைவில் உழன்று வலியில் துடித்த உள்ளம், இப்போது, குழந்தைகளின் ‘நாளை’ பற்றிய கவலையைத் தத்தெடுத்துத் திண்டாடியது.

“இண்டைக்கு வெளிக்கிட இருக்கிறன், முப்பத்தியொண்டுக்கு வரலாம். அதுதான் லாதியையும் கூட்டிக்கொண்டு போகலாம் எண்டு நினைக்கிறன்.” பிரணவ்விடம் சொன்னான், காயுவின் சகோதரன்.

“அது வந்து...” பிரணவ் ஆரம்பிக்கையிலேயே, “நோ மாமா! நான் எங்கயும் வரேல்ல!” கயலின் மேல் கையை இறுகப் பற்றியபடி பார்த்த லாதியின் விழிகள் நிறைந்து கரைதட்டி இருந்தன.

“குட்டிம்மா...” எழுந்து அவளைத் தூக்கிக் கொள்ள முனைந்தான், அவன்.

“நோ நோ...” பெருங்குரலெடுத்து அழுதாள், லாதி.

உள்ளே சென்ற பால் வயிற்றை நிரப்ப நிரப்பக் கண்ணயர்ந்து போன குழந்தை திடுக்கிட்டுப் போய் எழுந்து தமக்கையோடு இணைந்து வீரிட்டு அழுதான்.

பிள்ளைகளின் திடீர் அழுகை அறைக்குள் அடைந்து கிடந்த பூபாலனையும் ஓடி வர வைத்திருந்தது.

நண்பர் குடும்பம் ஒன்று கொண்டுவந்து கொடுத்திருந்த உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பூபாலனின் தமக்கை விமலாவும் என்னவோ ஏதோவென்று ஓடி வந்திருந்தார்.

லாதியை விட்டு விட்டு நிமிர்ந்த காயுவின் சகோதரன், “என்ன… என்ன பிரச்சின கயல்? ஏன் அழுகிறாள்?” என்ற மைத்துனனைப் பார்த்தான்.

“இல்ல அத்தான், லாதிய என்னோட கூட்டிக்கொண்டு போகலாம் என்று நினைச்சன். வீட்டில அவள்ட மச்சான் மச்சாளோட விளையாடுவாள் தானே? பொழுது போகும். ஒன்லைன் வகுப்புகள் அங்க இருந்தே போகலாம்.” தயங்கினாலும் சொல்லிவிட்டான்.

“அப்பா!” ஓடிச் சென்று அவன் கால்களைக் கட்டிக்கொண்டழுதாள், லாதி.

அவன் மகளைத் தூக்க, “ச்சு ச்சு..” குழந்தையைத் தட்டிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள், கயல்விழி.

“அதெல்லாம் இப்பத் தேவையில்ல பிரபா. முதல், அவள் ஒருக்காலும் எங்கள விட்டுட்டுத் தனியா எங்கயும் நிண்டதில்ல. காயு... விட்டதும்...இல்ல.” சொல்கையில் அவன் தொண்டையில் துக்கப் பந்து உருண்டு திரண்டு வந்து அடைத்திட்டு. மகளோடு விசுக்கென்று அறைக்குள் சென்றுவிட்டான்.

“அவனுக்கும் பிள்ளைகள் தானே ஆறுதல்.” பூபாலனின் தமக்கை சொல்ல, “ஆனா...தனிய அவரால எப்பிடிச் சமாளிக்க ஏலும்? அதுதான்...” என்றான், சகோதரன்.

“இப்போதைக்கு அந்தப் பிள்ள நிக்கிறா தானே? நானும் கொஞ்ச நாளுக்கு நிப்பன். கெதியா எதையாவது செய்யலாம், பாப்பம்.” பெரியவராச் சொன்னார், விமலா.

அடுத்து வந்த நாட்கள் அது பாட்டில் விடிவதும் இருள்வதுமாகக் கடந்தன.

பூபாலன் பெரும்பாலும் அறைக்குள் அடைந்து கிடந்தான். அவனோடு இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டான், பிரணவ். பூபாலன் வயதில் பெரியவன் என்றாலும் அவன் நண்பன். இப்படியொரு இக்கட்டில் தோள் கொடுப்பது அவசியம். அதையும் விட கயலைத் தனியே எல்லாவற்றையும் சுமக்க வைக்க மனம் ஒப்பவில்லை.

“எத்தனை நாட்களுக்கு இப்பிடியே இருப்பது? தொழிலை விட்டாப் பிடிக்கேலாது. அதுவும் இப்ப இந்த கொரோனாவால நிலைமை வேற சரியில்ல.” ஒரே தொழில் செய்வதால் பிரணவின் தந்தை வலியுறுத்த, கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில் அலுவல்களையும் பார்க்க வைத்தான், பிரணவ்.


மேலும் வாசிக்க....

 

ஷமீம்

New member
கயலுக்கு ப்ரணவ் மேல் விருப்பம் வந்திடுச்சு.
பூபாலனை அவள் அண்ணா என்று தான் அழைக்கிறாள்..இது சரிவருமா? என்ன நடக்க போகுதோ?
 
Top Bottom