அன்பில் வந்த ராகமே - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 23

Member
May 19, 2026
21
65
13
India 🇮🇳
இரு குடும்பமும் இணைந்த நிகழ்வு காட்டுத்தீ போல ஊர் முழுக்க பரவியது.

அதிலும் மாரிமுத்துவை கொலை செய்தது பரிமளா என்ற செய்தி கேட்டு அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி.

இருபது வருடம் கழித்து இப்படி ஒரு திருப்பத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் நெருப்பின்றி புகையாது என்பதால் தெளிவாக தெரிந்து கொள்ள ஒவ்வொருவராக சாரதியின் வீட்டிற்கு படை எடுத்தனர்.

இதற்காகவே காத்திருந்தார் போல சுந்தரவல்லி தன் பேத்தியோடு வாசலில் அமர்ந்து அனைவருக்கும் நடந்ததை விளக்கமாக சொல்வதை வேலையாக வைத்திருந்தார்.

பாதி பேர் அதை நம்பினாலும் மீதி பேருக்கு இது எப்படி? என்ற குழப்பம் இருக்க தான் செய்தது.

கோவில் கணக்கு பார்க்க முரளியோடு சென்ற சாரதியை அனைவரும் வித்யாசமாய் பார்த்தாலும் எதையும் கேட்கும் துணிவில்லை.

முரளியின் கோபம் பற்றி அவர்களுக்கும் தெரியும் அதனாலேயே அவன் எதிரில் எதையும் பேசும் தைரியம் அவர்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

ஆனால் ஊரினுள் வலம் வரும் செய்தி பற்றி சாரதியிடம் விசாரிக்க அவரும் எந்த ஒளிவும் மறைவும் இன்றி நடந்ததை சொல்லி,

“என் பொண்டாட்டி தன்னை காப்பாத்திக்க தான் கொலை பண்ணினா அது குற்றம் இல்லைன்னு சட்டமே சொல்லுது..”

“அது எப்படிப்பா? உன் பொண்டாட்டி பண்ண தப்புக்கு உன் மாப்பிள்ளை ஜெயிலுக்கு போனான் சரி ஆனா அதை குத்தம் இல்லைன்னு சொல்ற?” என்று ஒருவர் கேட்க,

“ஆமா தற்காப்புக்காக செய்ய கூடிய எந்த தடுப்பு முயற்சியும் அது கொலையாகவே இருந்தாலும் குற்றம் இல்லைன்னு Section 100 IPC சொல்லுது. அதேபோல Section 482 CrPC மூலம் கேஸை திரும்ப ஓபன் பண்ண முடியும்..”

“ஏன் பா இதையெல்லாம் அப்போவே சொல்லலை.. அனாவசியமா உன் மாப்பிள்ளை இல்லை தண்டனையை அனுபவிச்சு இருக்காரு..” என்று சாரதியின் அண்ணன் கேட்க,

“பரிமளா ரொம்ப பயந்து போயிருந்தா.. ஏற்கனவே தன்னை பிடிக்காதவங்க மத்தியல எங்கே இதெல்லாம் வெளியே தெரிஞ்சா குடும்ப பேர் கேடுமோன்னு தான் சொல்லலை..”

“இப்போ பெரிய வக்கீல் ஒருத்தர் எங்கப்பா கேஸ் எடுத்துக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. அதனால அவர் குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகறது மட்டுமில்லை மாமியும் தண்டனையில் இருந்து காப்பாற்ற படுவாங்க..” என்றான் முரளி.

அன்று அன்னை மற்றும் மனைவியோடு ஜெயிலுக்கு சென்ற பார்த்தசாரதி, “உண்மை தெரியாம உன்னை புரிஞ்சுக்காக என் தங்கச்சியை தள்ளி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சுடு பாரி..” என்று கையெடுத்து கும்பிட,

“என்ன மச்சான் நீங்க?! முதல்ல கையை இறக்குங்க” என்றார்.

“நீ செய்தது சாதாரண விஷயமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நன்றி கடனை எங்களால அடைக்க முடியாது..”

“இதோ பாருங்க மச்சான், நடந்து முடிஞ்ச எதையுமே நம்மளால மாற்ற முடியாது… இனி ஆக வேண்டிய காரியத்தை பார்க்கலாம்..”

“நீ சுலபமா சொல்லிட்ட ஆனா சீராட்டி வளர்த்த என் தங்கச்சியை மட்டுமில்லை முரளி அபி முகத்துக்காக கூட அவங்களை பார்க்காம போயிட்ட குற்ற உணர்ச்சி என்னை தூங்க விடலை பாரி..” என்று கண்ணீரோடு சொன்னவர்,

“நானாவது பரவால்ல ஆனா இவ?!” என்று மனைவியை சுட்டி காண்பித்தவர், “பரிமளா ரொம்பவே பட்டுட்டா பாரி. இனியும் நீ இங்க இருக்க வேண்டாம் இப்போவே நான் ஜாமீன் எடுக்கிறேன்..”

“வேண்டாம் மச்சான். இத்தனை வருஷம் இருந்துட்டேன், இன்னும் கொஞ்ச நாள் தானே?!... பாதியில வெளிய வருவதை விட, நிரபராதின்னு தலை நிமிர்ந்து வெளிய வரணும்..” என்றார்.

அவர் முடிவை ஏற்று கொண்டவர்களின் முகம் இன்னும் தெளியாதிருக்கவும், “பரிமளாவோட இடத்துல என் பொண்டாட்டியோ பொண்ணோ இருந்திருந்தா என்ன செய்திருப்பேனோ அதை தான் என் தங்கச்சிக்கும் செய்தேன்..” என்றதில் அனைவரையும் வாயடைக்க செய்திருந்தது.

“இதை எதுக்கு பெருசா பேசிட்டு இருக்கீங்க? என் பொண்டாட்டியும் பெண்ணும் என்னை புரிஞ்சுகிட்டாங்க நீங்க போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க..”

“நான் வந்ததுமே அபி மட்டுமில்லை முரளி ராகவி கல்யாணத்தையும் நடத்த முடிவு பண்ணி இருக்கேன்.. இப்போவே சத்திரம், சமையல் எல்லாத்துக்கும் ஆள் பார்த்து வச்சுடுங்க அப்போ தான் அலைச்சல் இல்லாம குழந்தைங்க விசேஷத்தை கண்ணார பார்த்து ரசிக்க முடியும்..” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

மேலும் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில்.

நீதிமன்ற வளாகம்

முரளி, ராகவி அவள் பெற்றோர் தொடங்கி ஊரில் இருக்கும் முக்கிய நபர்களும் வழக்கின் தீர்ப்பை பார்க்க வந்திருந்தனர்.

பாரிநேயனுக்காக ஆஜாராகி இருந்த வக்கீல் தன் இறுதி வாதங்களை எடுத்து வைத்து கொண்டிருக்க நீதிபதி கூர்ந்து கேட்டு கொண்டிருந்தார்.

“அதுமட்டுமில்லை மை லார்ட், அன்று காவல் துறையினர் மிஸ்டர் பாரிநேயனை கைது செய்தது சூழ்நிலை ஆதராங்களை (Circumstantial Evidence) மையமாக வைத்து தான்…”

“கொலை நடந்த இடத்தில் அவர் இருந்தது, கொலை ஆயுதத்தில் அவரின் கைரேகை இருந்தது போன்ற காரணங்களால் மட்டுமே அவரை குற்றவாளியாக்கி இருக்காங்க. ஆனா…” என்று ஒரு நொடி நிறுத்தி பாரியை பார்த்தவர்,

“அவர் தான் கொலை செய்ததாக சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை உறுதி செய்யப்பட்டதே தவிர அவர் கொலை செய்ததை நேரடியாக பார்த்த சாட்சி (Direct Evidence) என்று ஒருவரையும் காவல்துறை முன் வைக்கவில்லை மை லார்ட்…” என்றார்.

“என் கட்சிக்காரர் கொலையாளி அல்ல என்று திருமதி பரிமளா அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கார். அவரை விசாரணைக்கு அழைக்க அனுமதி தர வேண்டும் மை லார்ட்…” என்றதும்,

“அனுமதி அளிக்கப்படுகிறது…” என்றார் நீதிபதி.

பரிமளா சாட்சிக் கூண்டில் நிற்கவும், “நீங்க தானே பரிமளா?”

“ஆமா ஸார்”

“இவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

“அவர் எனக்கு அண்ணன் முறை வேணும்..”

“எப்படி?”

“என் நாத்தனாரோட கணவர் அவர்!!”

“சரி, கொலை நடந்த அன்றைய நிகழ்வுகளை எங்களுக்கு விளக்காம சொல்ல முடியுமா?” என்றதுமே சொல்ல ஆரம்பித்தவர் கண்ணீரோடு அனைத்தையும் சொல்லி முடிக்க அங்கே கனத்த அமைதி.

“இதை ஏன் நீங்க அப்பவே சொல்லல?” என்றார் நீதிபதி.

“ஸார் என்னை காப்பாத்திக்கிறதுக்குள்ள என்.. என்னோட கரு கலைஞ்சுடுச்சு. வீட்டுக்கு போனதும் என்னை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டாங்க..”

“இதற்கு சாட்சி யாராவது இருக்காங்களா?

“எஸ் மை லார்ட்! அன்னைக்கு திருவிழா என்பதால் நிறைய சொந்தங்கள், நட்புக்கள், இவரது கணவர் திரு. பார்த்தசாரதியின் தொழில்முறை நட்புகளில் பலர் அவங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..”

“அவர்களில் மூவரை சாட்சிக்காக அழைக்கிறேன்” என்றதில் அவர்களும் கூண்டில் ஏறி நின்றனர்.

“வழக்கு பற்றின விவரம் உங்களுக்கு தெரியும் தானே?!”

“தெரியும் ஸார்..”

“சரி என்ன நடந்ததுன்னு சொல்லுங்க..” என்றதுமே,

“நாங்க அன்னைக்கு நெருங்கிய சொந்தங்கள் வீட்டுக்கு போயிட்டு சாயந்திரமா சாரதி வீட்டுக்கு வந்தோம். சாப்ட்டுட்டு இருந்தப்போ தான் பரிமளா மழையில நனைஞ்சுட்டு வந்தது…”

“ரத்த போக்கு பார்த்துட்டு சாரதி, அவங்க அம்மா மாமியார் எல்லாரும் உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க…அதுக்கப்புறம் அவங்களுக்கு கர்ப்பப்பை எடுத்துட்டதா தெரிஞ்சுகிட்டேன்..” என்றிட மற்ற சாட்சிகளையும் விசாரித்தார்.

“இது அபார்ஷன் ரிப்போர்ட், இது கர்ப்பப்பை எடுத்ததுக்கான மெடிக்கல் ரிப்போர்ட்…” என்று நீதிபதியிடம் சமர்ப்பித்தார் அவர்கள் வக்கீல்.

அனைத்தையும் சரி பார்த்த நீதிபதி, இறுதியாக பாரிநேயனை நோக்கி, “இந்தக் கொலையை நீங்க செய்யலையா?” என்றார்.

“இல்லைங்க ஸார், என் தங்கச்சி பேருக்கு களங்கம் வரக் கூடாதுன்னு தான் நான் பழியை ஏத்துகிட்டு வந்தேன்..” என்று அவரும் இறுதி வாக்குமூலம் அளிக்க சில நொடிகள் கழித்து நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

“பாரிநேயனுக்கு ஆதரவாக அளிக்க பட்ட ஆதாரங்கள், சாட்சிகள், செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்ததை ஒப்புக்கொண்ட அவரின் வாக்குமூலம் அடிப்படையில் திரு. பாரிநேயனை இந்த கோர்ட் நிரபராதி என்று தீர்ப்பு வழங்குகிறது..” என்றதில் அத்தனை பேர் முகத்தில் மகிழ்ச்சி.

“தற்காப்பிற்காக திருமதி பரிமளா மாரிமுத்துவை கொன்றதும் நிருபிக்க பட்ட நிலையில் ஐபிசி செக்ஷன் 100 அடிப்படையில் அவரை குற்றவாளியாக கருத முடியாது. இத்துடன் இவ்வழக்கு முடிக்கப்பட்டதாக அறிவிக்கபடுகிறது..” என்று தீர்ப்பு சொல்ல அனைவர் முகத்திலும் அத்தனை நேரம் இருந்த அலைகழிப்பு மறைந்து நிம்மதி படர்ந்தது.

விடுதலையாகி ஊருக்குள் காலடி வைத்த பாரிநேயனை, ஊர் மக்கள் பெரும் கொண்டாட்டத்தோடு வரவேற்றனர்.

பெண்ணின் மானத்தை காப்பாற்ற பாரி சென்ற எல்லை, அங்கே இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இத்தனை வருடங்களாக ஜாதியை காரணம் காட்டி அவரை ஒதுக்கி, இழிவாக பேசியவர்கள் பார்வை உண்மை அறிந்த நொடியில் இருந்து வேறாக மாறி போக பாரியும் அவர்கள் மனதில் உயர்ந்து நின்றார்.

வழி முழுவதும் பூத்தூவி, பேண்ட் வாத்திய முழக்கத்தில் அமர்க்களமாக அவரை அழைத்து வந்தனர். பல வருடங்களாக காத்திருந்த அன்பும் மரியாதையும் அந்த வரவேற்பில் கிடைக்க பாரிநேயனின் மனம் நெகிழ்ந்திருந்தது.

கோவிலில் வழிபாடு முடித்த பிறகு, அங்கிருந்து வீடு வரை அவரோடு நடந்து சென்ற மக்கள் அவர் மீதான பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

வீட்டின் வாசலில் தேவமங்கை, பரிமளா, ராகவி மூவரும் காத்திருந்தனர்.

கண்களில் கண்ணீரும் இதழ்களில் புன்னகையுமாக ஆலம் சுற்றி அவரை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

பல வருடங்களுக்கு பிறகு தன் வீட்டிற்கு திரும்பிய பாரிநேயன் முன்பு வீடு தவிர்த்து தரிசு நிலமாக இருந்த அந்தப் பரந்த ஏக்கர் நிலம் இன்று பெரும் பண்ணை, பிரமாண்டமான தொழிற்சாலை, அலைமோதும் தொழிலாளர்கள் என முழுமையாக மாறியிருப்பதை கண்டு வியப்பில் உறைந்தார்.

“இத்தனையும் முரளியோட உழைப்புங்க..” என்று நெகிழ்ச்சியோடு தேவமங்கை சொல்ல அவருக்கு பெருமை தாளவில்லை.

தந்தை இல்லாத பிள்ளை தறுதலை என்ற சொல் வழக்கை பொய்யாக்கிய மகனை பெருமை பொங்க பார்த்தவருக்கு கண்கள் ஆனந்த கண்ணீரில் நிறைந்து போனது.

“முதல்ல சின்ன அளவுல இருந்த பேக்டரி இவ்ளோ பெரிய அளவுல இருக்கிறதுக்கு காரணம் நம்ம மருமகள்.. அன்னைக்கு மலேசியா ஆர்டர் வந்ததா சொன்னேனே இப்போ இன்னும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யறான்..”

“என்னை வெறுத்து ஒதுக்கின மகனையே என்னோடு சேர்த்து வச்ச என் மருமகளோட கெட்டிகாரத்தனம் எனக்கு தெரியாதா?!” என்று புன்னகைத்தவர் வீடும் இரண்டு அடுக்குகளில் விஸ்தாரமாக்க கட்டப்பட்டிருப்பதை கண்டு இமைக்கவும் மறந்து போனார்.

“ஃபோட்டோவுல பார்த்ததுக்கும் நேரில் பார்க்கவும் நிறைய வித்யாசம் மங்கை..” என்றார் ஆச்சர்யத்தோடு.

முரளி அவரிடம் பேசாமல் இருந்த நாட்களில், சிறப்பு அனுமதி பெற்று வார்டன் மூலம் புகைப்படங்களை அனுப்பி, மகனின் வளர்ச்சியை அவருக்கு தெரியப்படுத்திய மங்கையின் அக்கறை நினைவு வர அவர் மனம் மனைவிக்காக உருகியது.

அபிராமி அவருக்கு காஃபி கொண்டு வந்து கொடுக்க அதை வேகமாக குடித்து முடித்த பாரியின் கால்கள் அதற்கு மேல் வீட்டில் ஒரு நொடி கூட தங்கவில்லை.

“எங்க போறீங்க ப்பா? ரெஸ்ட் எடுப்பீங்க வாங்க..” என்று அபி அழைக்க, “இருக்கட்டும் அபி, முதல்ல நான் எல்லாத்தையும் சுத்தி பார்த்துட்டு வரேன்..” என்றவர் மனைவியோடு கிளம்பி விட்டார்.

அன்று இரவு உணவு அமர்க்களப்பட்டது. ராகவி, அபிராமி, உதவி செய்ய பரிமளாவோடு சேர்ந்து சமையலை முடித்தார் தேவமங்கை. அத்தனையும் பாரிக்கு பிடித்த பதார்த்தங்கள்.

அனைவரும் ஒன்றாக அமர, ராகவியும் அபிராமியும் பரிமாறினார். இது கனவா நினைவா என்று அவ்வப்போது எழுந்த ஐயத்துடன் உணவை முடித்து கொண்ட பாரி சாரதியோடு பேசி கொண்டிருக்க முரளிக்கு அழைப்பு வந்தது.

மறுபுறம் அன்று அபிராமியை பார்த்து சென்ற மாப்பிள்ளையின் தந்தை.

“பாரிநேயன் நிரபராதி” என்ற செய்தியை அறிந்தவுடன் உடனே முரளியை தொடர்பு கொண்டிருக்கிறார்.

அன்று முரளி அவரிடம் அழைத்து மன்னிப்பு கேட்ட நொடியே அவரின் கோபம் முழுவதும் கரைந்து போயிருந்தது. மகனுக்காக அடுத்த பெண் பார்க்கும் விஷயத்தையும் காலவரையின்றி ஒத்தி வைத்திருந்தார்.

ஏற்கனவே, அவரின் மகனுக்கு அபிராமி மிகவும் பிடித்திருந்ததால், அன்றே பூ வைத்து உறுதி செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவர்கள் வந்திருந்தார்கள்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததால், அந்த முயற்சி நிறைவேறவில்லை.

இப்போது நிலைமையே மாறி இருந்தது.

பாரி ‘நிரபராதி’ என்பதும், அதுவும் ஒரு பெண்ணின் மானத்தை காப்பாற்ற தன் வாழ்நாளையே தியாகம் செய்திருப்பவர் என்பதும் தெரிந்த நிலையில், அவர் மீதான மரியாதை பல மடங்கு உயர்ந்தது. அதோடு, அவர்களின் குடும்பத்தின் மீதான மதிப்பும் மேலும் வலுவடைந்தது.

அன்று இரவு உணவுக்காக அனைவரும் அமர்ந்திருந்த போது, மாப்பிள்ளையின் தந்தை மீண்டும் குடும்பத்தினரிடம் அந்த விஷயத்தை தொடங்கினார்.

மகன் உட்பட அனைவரும் மகிழ்ச்சியோடு அவர் முடிவை ஏற்றுக்கொண்டனர்.

முரளியிடம் விஷயத்தை தெரிவிக்கவும், “ரொம்ப சந்தோஷம் ஸார், ஆனா அபி விஷயத்துல நான் இப்போ தனியா எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா கிட்ட இதைப் பற்றி பேசறேன்… அம்மா அபியோட முடிவை தெரிஞ்சுக்கிட்டு, அவரே உங்களுக்கு தொடர்பு கொள்வார்…” என்று கூறி அழைப்பை வைத்தவன் பாரி, சாரதியிடம் விஷயத்தை சொல்ல அவர்களுக்கும் மகிழ்ச்சி.

“அந்த மாப்பிள்ளையை அபிக்கு ரொம்ப பிடிச்சிருந்ததா மங்கை சொல்லி இருந்தா மச்சான்..” என்றார் சாரதியிடம்.

“அப்போ இந்த சம்பந்தத்தையே முடிச்சுடலாமே” என்று சாரதி சொல்ல மகள் மனைவி முடிவை அறிந்து கொண்ட பாரி அடுத்த வாரத்தில் வரக்கூடிய சுபதினத்தில் அபிராமியை பெண் பார்க்க வர சொல்லிவிட்டார்.
 
Last edited:

Author: STN 23
Article Title: அன்பில் வந்த ராகமே - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.