• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 7

ரோசி கஜன்

Administrator
Staff member
காரில் அன்பிற்கினியவனும், தென்னவனும் அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு முதலே மீட்டிங் நடக்கும் இடத்திற்கு நிகாரிகா வந்துவிட்டாள்.

அங்கே நவீன முறையில் ஒரு தற்காலிக அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சரியாக இவர்கள் இருவரும் வந்து சேர்ந்த அதே நேரத்தில், இவர்களுக்காகவே காத்திருந்தது போல அந்தக் கூட்டம் தொடங்கியது.

மேடையில் இருந்த பெரிய திரையில் வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்க, நிகாரிகா பேசத் தொடங்கினாள்.

"சூரியகாந்திப் பூக்கள் வெறும் எண்ணெய் எடுப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அதன் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் இதய நாளங்கள் தளர்வடைந்து, ரத்த அழுத்தம் எப்படிச் சீராகக் கட்டுப்படுகிறது என்று இங்கே பாருங்கள்!" என அவள் சுட்டிக்காட்ட, இதயம் சீராகத் துடிப்பது போலவும் நாளங்கள் சாதாரணமாக இயங்குவது போலவும் ஒரு AI வீடியோ ஒளிபரப்பானது.

"அதுமட்டுமில்லாமல், இதில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியமும், மெக்னீசியமும் தாராளமாக இருக்கு. இதனால எலும்புகள் நல்லா உறுதிப்படும். சருமப் பாதுகாப்புக்கும் இது எவ்வளவு சிறந்தது தெரியுமா?' என்று தன் விளக்கக் காட்சியை அங்கிருந்த பாமர மக்களுக்கும் புரியும் வகையில் மிகத் தெளிவாக விவரித்துக் கொண்டிருந்தாள் நிகாரிகா.

எல்லோருக்கும் புரியும்படி பேசி முடித்தவள், சட்டென்று அன்பிற்கினியவனைச் சுட்டிக்காட்டி, “இவர்தான் நம்ம ப்ராஜெக்ட்டோட குவாலிட்டி கண்ட்ரோலர். இவரோட அனுமதி இல்லாம ஒரு விதை கூட இந்த நிலத்துல இறங்கக்கூடாது! அத்துடன் நான் இங்கே இல்லாவிடில் என் சார்பாக.. எனக்கு அடுத்ததாக.. நீங்கள் இவர்கள் இருவரையும் தான் அணுகவேண்டும்.” என்று தென்னவனையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினாள்.

அங்கே வந்திருந்தவர்களில் சிலர் நேற்றும் அவளது கூட்டத்திற்குப் போனவர்கள். அதனால், 'இவர்களுக்கு ஏதோ சின்ன வேலையைத்தான் கொடுத்திருப்பாள்' என்றுதான் அதுவரை நினைத்திருந்தார்கள். ஆனால், இப்போது நிகாரிகாவுக்கு அடுத்த இடத்தில் இவர்கள் இருவரும் நிற்பார்கள் என்றதும், சில உள்ளங்கள் வாழ்த்தினாலும், பல உள்ளங்கள் பொறாமையில் பொங்கின.

அன்பிற்கினியனோ, நிகாரிகா தன்னை அறிமுகப்படுத்தியபோது மட்டும் சாதாரணமாக ஒரு 'வணக்கம்' சொல்லிவிட்டு, வேறு எந்தச் சலனமும் இல்லாமல் அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

தென்னவனோ உடம்பே புல்லரிச்சுப் போனது போல அதிக சந்தோசத்தில் இருந்தான்.

மீட்டிங் முடிந்ததும், நிகாரிகா அவனைத் தனியாக அழைத்து, "எப்படி இருந்தது பிரசன்டேஷன்?" என்று ஒரு மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

"நல்லாயிருந்தது மேடம்" என்று சுருக்கமாகப் பதிலளித்த அன்பிற்கினியவன், பேச்சை வளர்க்க விரும்பாமல், "நாங்கள் கிளம்பலாமா?" என்று கேட்டான்.

“என் வீட்டுக்கு உங்கள் இருவரையும் அழைத்துச் செல்கிறேன். இரண்டு பேருமே அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போகவேண்டியிருக்கும் அதனால் தெரிஞ்சு வைச்சுக்கனும். நாம் மூன்று பேருமே ஒன்றாகச் செல்லலாம். இதோ, எல்லோருக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு வருகிறேன், நீங்கள் காரில் காத்திருங்கள்” என்று அங்கே கூட்டத்தை ஒருங்கினைத்த ஆட்களிடம் பேசச் செல்ல,

அவள் சென்றதும் தென்னவன் முணுமுணுப்பாக, "ஏண்டா... வரும்போதும் நம்மகூடவே வந்திருக்கலாம்தானே? அப்போ மட்டும் நம்மைத் தனியே அனுப்பிட்டு, இப்போ மட்டும் எதுக்குக் கூட வர்றா?"

"அப்ப அவங்க பிரசன்டேஷனைத் தயார் பண்ணிட்டு இருந்திருப்பாங்கடா. நாம கூட இருந்தா அவங்களுக்கு இடைஞ்சல்னுதான் நம்மை வேற வண்டியில் அனுப்பிட்டு, அவங்க கேரவன்ல வசதியாத் தயாராகி வந்திருக்காங்க" என்று யதார்த்தத்தைச் சொன்னான் அன்பிற்கினியவன்.

சிறிது நேரத்தில் நிகாரிகா வர, சொகுசு காரின் பின் இருக்கையில் அன்பிற்கினியவனும் தென்னவனும் அமர்ந்திருந்தனர். தென்னவனைப் பார்த்த நிகாரிகா, "நீங்க முன்னாடி டிரைவர் பக்கத்துல போய் உட்காருங்க" என்றாள் அதிகாரமாக.

"நீங்க முதலாளி... நீங்கதானே முன்னாடி இருக்கணும்?" என்று தென்னவன் இழுக்க, "எனக்கு இப்போ பின்னாடி உட்காரணும்னு தோணுது" என்று சொன்னாள்.

தென்னவன் குழப்பத்துடன் அன்பிற்கினியவனைப் பார்க்க, அவனோ "போ முன்னே..." என்பது போலக் கண்ணாலேயே சைகை காட்டினான்.

மனமே இல்லாமல் தென்னவன் முன்னே சென்று சாரதிக்கு பக்கத்தில் அமர, அன்பிற்கினியவனுக்கு அருகில் நிகாரிகா வந்து அமர்ந்தாள்.

அன்பிற்கினியவன் விலகி அமர்வதற்குப் பதிலாக, அவளுக்கு இன்னும் நெருக்கமாக நகர்ந்து அமர்ந்தான். அவளும் அதை எதிர்க்காமல் அமைதியாக இருக்கவே, தன் நடுக்கத்தை மறைக்க முயன்றபடியே அவள் கையைப் பற்றினான்.

மெல்லத் தொடங்கிய அந்தப் பிடி, அடுத்த நொடியே ஒருவித உரிமையோடும் ஆழமான உணர்வோடும் அவளது மென்மையான கைகளைத் தன் கைக்குள் வைத்து அழுத்தமாகப் பூட்டிக்கொண்டது.

அன்பிற்கினியவனின் கைமேல் தன் இன்னொரு கையை வைத்து அழுத்தி, அவனை ஆசுவாசப்படுத்த முயன்றாள் நிகாரிகா. கண்கள் கலங்கி அவளை ஏறிட்டவன், தன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எங்கே வாய்விட்டு அழுதுவிடுவோமோ என்று அஞ்சியவன், அந்தப் பயத்திலேயே தஞ்சம் தேடுபவன் போல, சட்டென்று அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.

முன் கண்ணாடியின் வழியாக இதைப் பார்த்த தென்னவன், "ஆத்தி... ரூட் அப்படிப் போகுதா?" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அந்தத் தோள் அரவணைப்பும், காரின் குளிரூட்டியின் மென்மையான இதமும் மெல்ல மெல்ல அன்பிற்கினியவனை ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது.

நிகாரிகாவின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டே வந்த அன்பிற்கினியவன், கார் நிகாரிகாவின் இப்போதைய வசிப்பிடத்தை அடைந்ததும் அவள் மெதுவாகத் தட்டி எழுப்பவே கண் விழித்தான்.

பாதுகாப்பு ஊழியர்கள் தென்னவனுக்கும், நிகாரிகாவிற்கும் கதவைத் திறந்து விட்டுப் பவ்யமாக நிற்க, நிகாரிகாவின் தோளில் அத்தனை நெருக்கமாகச் சாய்ந்து உறங்கி வந்த அவனை, அந்த ஊழியர்கள் எந்தவித சலனமும் இன்றி பார்த்துக் கொண்டிருந்தது அவனுக்குச் சற்றுச் சங்கடமாகவே இருந்தது.

பாதுகாப்புப் படையினர் சூழ, நிகாரிகா முன்னே நடக்க, அவளது அந்தப் புதிய மாளிகையை நோக்கி அடி எடுத்து வைத்தார்கள் அன்பிற்கினியவனும் தென்னவனும்.

அது வெறும் வீடல்ல.. பிரம்மாண்டத்தின் உச்சம்! இதுவரை சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு பங்களா, இப்போது அவர்களின் கண் முன்னால் நிஜமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. உயரமான மதில்கள், நவீனக் கட்டிடக் கலையில் செதுக்கப்பட்ட அந்த மாளிகையின் ஒவ்வொரு செங்கல்லும் நிகாரிகாவின் அந்தஸ்தைப் பறைசாற்றியது.

தன் பக்கத்தில் நின்ற தென்னவனைப் பார்த்தான் அன்பிற்கினியவன்; அவன் வாயைப் பிளந்தபடி அந்தப் பிரம்மாண்டத்தைப் பார்த்து மலைத்து நின்றிருந்தான்.

பாதுகாப்பு ஊழியர்களிடம் அங்கேயே காத்திருக்குமாறு கூறிவிட்டு, இருவரையும் உள்ளே வருமாறு நிகாரிகா வரவேற்று வீட்டுக்குள் அழைத்தாள்.

வீட்டின் கதவைக் கூட ஒரு ஊழியர் ஓடி வந்து திறவுகோல் போட்டுத் திறந்து வைக்க, உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த மெத்மெத்தென்ற சோபாவில் அமர்ந்தனர். அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருப்பதை ரசித்த அன்பிற்கினியவன், "வீடு சூப்பர்!" என்று மெச்சினான்.

பெரிய மாளிகை போல இருந்தாலும், அங்கே ஆள் நடமாட்டமே இல்லாமல் நிசப்தம் நிலவ, "இந்த வீட்ல நீங்க மட்டும்தான் தனியா இருக்கீங்களா?" என்று தென்னவன் ஆச்சரியமாகக் கேட்டான். "இப்போதைக்கு நான் மட்டும்தான். இனிமேல்தான் வேலைக்கு ஆட்களை எடுக்கணும்" என்றாள் நிகாரிகா.

"அப்போ சாப்பாடு?" என்று அன்பிற்கினியவன் வினவ, "சாப்பாட்டு நேரத்துக்கு என் ஆட்கள் வெளியில் இருந்து வாங்கித் தந்துடுவாங்க" என்று அவள் சாதாரணமாகச் சொன்னாள்.

"வர்ற வெள்ளிக்கிழமை எங்க அம்மாவோட முப்பதாம் நாள் காரியம். இப்போ நீங்கதான் எனக்கு முதலாளி... அதனால நீங்க கட்டாயம் வரணும்" என்று அன்பிற்கினியவன் உரிமையோடு அழைத்தான்.

ஆனால் நிகாரிகாவோ முகத்தைச் சுருக்கி "ஓ சாரி... அன்னைக்கு எனக்கு ஃபுல் ஷெட்யூல் இருக்கு. நான் ரொம்ப பிஸி" என்று மறுத்தாள்.

"அப்படியா மேடம்… நீங்க கட்டாயம் வருவீங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருப்போம். அப்ப நாங்க கிளம்பட்டுமா?" என்று அன்பிற்கினியவன் சொல்ல...

நிகாரிகா பதில் பேசாமல் பல்லைக் கடித்தாள். 'நீ வராமல் இருந்துதான் பாரேன்' என்ற சவால் அன்பிற்கினியவனின் கண்ணில் தெரிய, 'நீ மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா?' என்று மனதிற்குள் கறுவிய நிகாரிகா, "வர முடியாது!" என்று திமிராகவே சொன்னாள்.

"அப்போ நானும் வேலைக்கு வரமாட்டேன்" என்றவன் விடாமல் தென்னவனைப் பார்த்து, "நான் வராட்டி நீ மட்டும் போவியாடா?" என்று அவனையும் துணைக்கு இழுத்தான்.

தென்னவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. 'இவன் என்ன அந்தப் பொண்ணை லவ் பண்றானா? அந்தப் பொண்ணும் இவனுக்காக இவ்வளவு செய்யுதே!' என்று ஒரு பக்கம் யோசித்தாலும், அன்பிற்கினியவனின் துடுக்குத்தனம் அவனுக்குத் தலைசுற்ற வைத்தது. அப்போது இவர்களின் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்த உயர்ரக நாய் ஒன்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வர, தென்னவன் பயந்து போய் சோபாவின் ஓரத்திற்கு நகர்ந்தான்.

"வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு டீ கூடக் கொடுக்காம என்ன வெட்டிப் பேச்சு? பெரிய பணக்காரியா இருந்தா வந்தவங்களுக்குத் தண்ணி கூடக் கொடுக்க மாட்டீங்களோ?" என்று அன்பிற்கினியவன் அவளைத் அதட்ட, தென்னவன் மயங்கி விழாத குறைதான்.

நிகாரிகாவின் கண்களில் காரம் ஏற, "டீயா? உனக்கு இங்கே பச்சைத் தண்ணி கூடக் கிடைக்காது. கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்பத்தான் துள்ளுற..." என்று அன்பிற்கினியவனை மிரட்டினாள்.

"நான் உங்களுக்கு ஒரு வீடு பார்த்திருக்கேன்... என் வீட்டுக்கு அருகிலேயே அழகான வீடு. அது வேணாமா?" என்று அவன் கூலாகக் கேட்க, தென்னவன் பயந்துபோய் அவன் காதில், "டேய்... கொஞ்சம் வாயைக் குறைடா" என்று கெஞ்சினான்.

"நீ யாருக்குப் பயப்படுற? மேடத்துக்கா?" என்று அவளைப் பார்த்தவன், அவளது அழகையும் ஆளுமையையும் ஒருவித மயக்கப் பார்வையால் அளவெடுத்தான்.

நிகாரிகாவின் பொறுமை பறக்க"மிஸ்டர் அன்பிற்கினியவன்... நீங்க உங்க எல்லையைத் தாண்டிப் போயிட்டு இருக்கீங்க!" என்று எச்சரித்தாள்.

“அதேல்லாம் எப்பவோ தாண்டியாச்சு..”என்று ஒருமாதிரி மயக்கக் குரலில் சொன்னவன், தென்னவனிடம் “வா வீட்டில் சாப்பாடு இல்லாட்டி, வெளியில் பார்ப்போம்.. இங்கே உபசரிப்புச் சரியில்லை”என்று சொல்ல,

அவன் சொன்ன தொனியே அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்த நிகாரிகாவின் கண்களோ கோபத்தில் சிவந்து, அன்பிற்கினியவனை பொசுக்கியது.

தென்னவனுக்கு அவனின் இரட்டைப் பேச்சுப் புரியாவிட்டாலும் நிகாரிகாவின் கோபத்தில் பயந்தவன் “வாடா போவோம்” என்று அன்பிற்கினியவனின் கைகளைப் பிடித்து இழுத்தபடி, "மேடம் நாங்கள் கிளம்புகிறோம்” என்று சொல்ல,

நிகாரிகா "இல்லை... என்னுடன் வாருங்கள். சிமெண்ட் லோடு வந்து இறங்கிவிட்டதா என்று பார்க்க வேண்டும்" என்று கூறிவிட்டு விறுவிறுவென முன்னே நடந்தாள். இம்முறை டிரைவரைத் தடுத்துவிட்டு, தென்னவனை வண்டியை ஓட்டச் சொன்னவள், அவனுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

"நான் என்ன வெறும் வேலைக்காரன் தானே... அதான் என்னை மட்டும் பின்னால் உட்கார வச்சாச்சு" என்று அவள் காதுபடவே அன்பிற்கினியவன் முணுமுணுத்தான்.

"உன்னோட ஜம்பம் என்கிட்ட வேகாது. வர்றதா இருந்தா வாயை மூடிக்கிட்டு வா, இல்லைன்னா வண்டிய விட்டு இறங்கிப் பின்னாடி வர்ற வண்டியில வா" என்று கறாராகச் சொன்னவள், அவனது அடுத்த பேச்சைக் கேட்க விரும்பாமல் ப்ளூடூத் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு போனில் மூழ்கினாள்.

***

அவர்கள் நிலத்திற்கு வந்து இறங்கியபோது, அங்கே தற்காலிகமாக ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு, தொழிலாளர்கள் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவ அன்பிற்கினியவன் முன்வர, "நீங்க மேற்பார்வை பார்த்தால் போதும்" என்று அவனைத் தடுத்தாள் நிகாரிகா.

அவர்கள் நிலத்திற்கு வந்து இறங்கியபோது, அங்கே தற்காலிகமாக ஒரு பெரிய ரென்ற் போடப்பட்டு, தொழிலாளர்கள் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவ அன்பிற்கினியவன் முன்வர, "நீங்க மேற்பார்வை பார்த்தால் போதும்" என்று தடுத்தாள் நிகாரிகா.

"எந்த வேலையா இருந்தாலும் கீழே இறங்கிச் செஞ்சாதான், அந்த நுணுக்கம் நமக்குத் தெரியும். வாடா..." என்று தன் சட்டைக் கையை மடித்துவிட்டுத் தென்னவனையும் அழைத்துக்கொண்டு வேலைக்குள் இறங்கினான் அன்பிற்கினியவன். அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிகாரிகா.

சிமெண்ட் மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தவன், வண்டியிலிருந்து மூட்டை தூக்குபவன் களைப்பாக இருப்பதை உணர்ந்து, "நீ இங்கே அடுக்குப்பா... நான் தூக்கிட்டு வர்றேன்" என்று களத்தில் இறங்கினான்.

வண்டியிலிருந்து மூட்டையைத் தூக்கிக்கொண்டு வரும்போது, தரையில் இருந்த ஒரு கல்லை கவனிக்கத் தவறிவிட்டான் அன்பிற்கினியவன். பாரமான சிமெண்ட் மூட்டையுடன் நிலைதடுமாறிக் கால் இடற, கைப்பிடி நழுவி மூட்டை கீழே விழுந்தது. வேகம் தாங்காமல் அவன் அப்படியே ஓரத்தில் இருந்த நீரோடையை நோக்கிச் சாய,

"இனியன்!" பதற்றத்தில் அலறியே விட்டாள் நிகாரிகா.
 
Top Bottom