• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
வீட்டு முற்றத்தில் நெல்லைக் கொட்டிக் காயவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.சிலர் பெரிய படங்குகனை விரித்துக் கொண்டிருந்தனர்.கமலம் தன்னுடைய அகலத் தொண்டையால் அனைவரையும் ஏய்த்துக் கொண்டிருந்தார்.அடுப்பிலிருந்து கொட்டும் அவித்த நெல் வாசனையை நுகர்ந்தபடி கிளைகளை பரப்பிவிட்டிருக்கும் மாமரத்தடியிலிருந்து புத்தகம் படித்தபடி இருந்தாள் மீரா.

"அவனது தேக்குமர உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாது இருந்தது அவள் தோற்றம்.ஆனால் அது,மற்றவர்களின் பார்வைக்கு மட்டுமே.அவள் மீது அவன் கொண்ட நேசத்தின் ஆழமும் புரிதலும் எல்லை கடந்தது.ஓடிச்சென்று அவன் கைகளுக்குள் அடங்கியவளுக்கு சர்வமும் அவன் காதல் மட்டும் தான்.மனதோடு பொருந்தியவளை அவனும் இன்னும் இறுக அணைத்துக்கொண்டான்."

படித்துக் கொண்டிருந்த மீரா பாதியில் மூடி வைத்தாள்.காதல் அழகான உணர்வு தான்.படிக்கும் போதே சில்லுன்னு இருக்கு.அனுபவித்தா?? தனக்குன்னு ஒருத்தன் வந்து என்மேல் மொத்த காதலையும் கொட்டனும்.எங்க? எப்படி இருக்கான்?

கேம்பஸ் வாழ்வில் காதல் என்ற பெயரில் அவளைத் தாக்க வந்த நிறைய அம்புகளை தட்டிவிட்டவள்.
டைம்பாஸ் காதலில் எல்லாம் என்ன சந்தோசம் இருக்குதோ? பார்க்கும் இடமெல்லாம் ஜோடி போட்டு சுத்துதுங்க.என தலையில் அடித்துக்கொள்வாள்.ஆனாலும், இதுவரை யார்மீதும் சின்ன சலனம் கூட தனக்கு வரவில்லையே.ஒரு வேளை நமக்கு ஃபீலிங்ஸே இல்லியோ?

மீரா... என்ற குரலில் சிந்தனை கலைந்தாள்.

ஹே... அமுதா வா வா.நல்லா கொழுத்து கிழவி மாதிரி போயிட்டியே டி. சிம்ரன் மாதிரி ஒல்லியா இருப்பியே.சரி சரி முறைக்காத உள்ள வா.

சொல்லுவ டி.நானும் பாக்குறன் நீயும் கல்யாணமாகி குழந்தை பெத்துப்ப தானே.அதுக்குப் பிறகு பார்க்குறன்.

கையில் ஒரு குழந்தை இடுப்பில் ஒரு குழந்தையுமாய் இருந்த அமுதா, மீராவின் பள்ளித்தோழி. பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்டவள்.அவள் புகுந்த வீடு பக்கத்து ஊர்தான் என்றாலும் எப்போதாவது ஒரு நாள் தான் சந்திக்க நேரிடும்.

நீண்ட நாள் பிறகு இன்னிக்கு தான் ஊர் வந்திருக்க போல?

ம்ம்..நம்ம நினைச்ச மாதிரி வர முடியுமா.மாமியார் மாமனார் நாத்தனார்னு பல பேர சமாளிச்சிட்டு அம்மா வீட்டுக்கு தங்க வர்ரதுக்குள்ள மாசக்கணக்காகுது.

உன் வீட்டுக்கு நீ வர்ரதுக்கு ஹஸ்பன்ட் அனுமதி இருந்தா மட்டும் போதும்.இதெல்லாம் ஓவர்.

“நீ அதிஷ்டக்காரி.என் வயசுல ஃப்ரீயா இருக்க.என்னப் பாரு.ஆனாலும் கல்யாண வாழ்க்கையும் சந்தோசம் தான்.அதுலயும் சுதந்திரம் இருக்கு.”

“என்ன சமாளிக்கிறியா..உக்காரு உக்காரு” என கலாய்த்தாள் மீரா.

“ஒரு சமாளிப்பும் இல்ல.நமக்கு சாமர்த்தியம் இருந்தாலே போதும்.எல்லாம் அதுவா கிடைக்கும்” என்றாள் அமுதா.

நீ பதினாறு வயசுல கல்யாணம் பண்ணிட்ட.அப்போ எப்படி?.நீ சின்னப் பொண்ணு வேற.

அவருக்குத் தான் நன்றி சொல்லனும்.அவரு என்ன விட ஏழு வருஷம் பெரியவரு.நான் நிறைய தப்பு பண்ணாலும்.பக்குவமா சொல்லிக் கொடுப்பாரு.அவர் ரொம்ப நல்லவர்.அவள் கண்களில் காதலைப் பார்த்தாள் மீரா.

“ஒன்னு கேட்கவா??உனக்குன்னு ஒரு கனவு கற்பனை இப்டி எதுவும் தோணினது இல்லியா.அதாவது…நமக்கு வர்ர கணவன் இப்டி இருக்கனும் நம்ம லைப் இப்டி இருக்கனும் இந்த மாதிரி...?

“நான் பதினாறுல கல்யாணம் பண்ணவ.நீ சொல்ற கனவு ஆரம்பிக்க முதல்லயே கல்யாணம் பண்ணித் தந்திட்டாங்க.ஆனாலும் இருந்திச்சி.நிறைய படிச்ச கார்ல போற ஒருத்தர் வேணும்டு.நம்ம அப்பவே எவ்வளவு சினிமா பார்த்திருக்கம்.ஆனா இவரு என்ல காட்டுற அன்பு அக்கறைல அது எல்லாமே மறந்துட்டுடி.அந்தக் கனவெல்லாம் நினைச்சா வேடிக்கையா இருக்கு டி.”

மீராவால் அதை ஏற்க சிரமமாக இருந்தது.ட்ரீம் லைஃப் கிடைக்காட்டி சந்தோசம் எப்படி வரும். அந்த வாழ்க்கையில லவ் கிடைக்க வருடக் கணக்காகுமே.அதுக்குள்ள பாதி வயசாகிடும்.உப்பில்லாத வாழ்க்கை.

என்னடி யோசிக்கிற? உனக்கு எக்கச்சக்க கனவு இருக்குது போல.சொல்லேன் கேட்போம்.நான் வந்த காரியத்துக்கு பொருந்துமான்னு பார்க்குறன்.

என்னப் பார்க்க வரல்லியா நீ? என்ன மேட்டர்?

ஒன்னுமில்ல.அப்பாகிட்ட தான் பேசனும்.

அவ்வளவு பெரிய மனுஷியாகிட்டியா? என்ன தவிர்த்து அப்பாகிட்ட பேசப்போற?

நீதான் சொல்லிட்டியே கிழவின்னு.

அதுசரி. இரு வர்ரன்.குட்டீஸ் வாங்க பக்கத்து கடைக்கு போயிட்டு வர்லாம் என்றவள்,அமுதா மதியானம் சாப்பிட்டுப் போ என்ன?
வேண்டாமென்று மறுத்தவளை இருக்கவைத்துவிட்டுச் சென்றாள் மீரா.

அவள் சென்ற பிறகு அங்கே கமலம் வந்தார். “நீ வந்ததை நான் பார்க்கலடிம்மா.மீராதான் சொல்லிட்டுப் போறா.கடைக்கிப் போறாளாம் உன்னோட பேசிட்டு இருக்கட்டாம் என்டு” புடவைத் தலைப்பால் கழுத்தைத் துடைத்தபடி வந்தமர்ந்தார்.

பரவால்ல.நல்லாரிக்கிங்களா பாட்டி?

“இருக்கன்டிம்மா.நீ எப்படி? புள்ள குட்டின்டு ஆகிட்டாய் போல.நல்லாரு” என மனசார சொன்னார் கமலம்.

பாட்டி….மீராப்பா எப்போ வருவாங்க? என கமலத்தைக் கேட்டாள் அமுதா.

இன்டடைக்கு வர இருட்டாகும்னு தான் சொன்னான்.

அப்படியா?

என்னம்மா விஷயம்?

“இல்ல பாட்டி. எங்க பெரியம்மா மகன் மதன் அண்ணா தெரியுமா? டீச்சரா இருக்காரு.அவரும் மீரா மாதிரியே படிச்சவரு.வீட்டுல பொண்ணு பார்க்குறாங்க.எனக்கு மீரா ஞாபகம் வந்திச்சி.அதான்…. எனத் தயங்கித் தயங்கி முடித்தாள்.

“உம் பெரியம்மான்னா? செந்தூரமா?

“ஓம் பாட்டி அவங்கதான். மதன் அண்ணா மட்டும் தான்.எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதுவுமில்லாம புதுசா வீடு வேற கட்டியிருக்காங்க.வரப்போற மருமகள் தனியா சுதந்திரமா இருக்கனுமாம் அப்படின்டு.”

அப்படியா?? நான் அந்தப் பையனக் கண்ட நினைவு இல்ல.

“அண்ணா வெளியூர்ல படிச்சதால ஊர்ல அவ்வளவா இருந்தது இல்ல.இப்போ இங்கேயே வேலை கேட்டு செட்டிலாகிட்டார். இனிமேல் ஊர்ல தான்”

“கோபாலு வரட்டும் விஷயத்த சொல்லுறன்.”

சரி பாட்டி…என்று விட்டாள்.
கமலத்தோடு அதிகம் பேசமாட்டாள் அமுதா. காரணம் தெரியாத ஒரு பயம்.

பிறகு மாலை நான்கு மணியளவில் தான் வீடு திரும்பினாள் அமுதா.நீண்ட நாளைக்குப் பிறகு கண்டதோழியின் வரவால் மீராவும் சந்தோசமாக உணர்ந்தாள்.

***********
விசாலத்திற்கு என்ன செய்வதென்று தெரியாத கோபம் மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தது. மீரா மீது இருந்த வெறுப்பை காட்ட முடியாமல் இருந்தாள். திருமணமாகி இத்தனை வருஷத்தில் கோபால் ஒரு தடவை கூட தன்னை அடித்ததில்லை.
திட்டுவதைத் தவிர.

அவளுக்குத் தெரியும். மீரா மீது கோபம் காட்டினால் அது தன்பக்கம் தான் திரும்புமென்று.அதனால் அவர் இல்லாத சமையங்களில் மீராவை வசைபாடுவது.ஆனால் அன்று அவளே எதிர்பார்க்கவில்லை இப்படி நடக்குமென்று.தன்னை அடித்த கணவனை தடுத்த மீரா வின் அக்கறை கூட விசாலத்திற்கு நடிப்பாகவே பட்டது.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவளைப் பழி தீர்க்க வேண்டுமென்ற வன்மம் மேலோங்கியது.

இந்திரா விஷயத்தில் முடிவெடுக்க இவள் யார்? தான் வேண்டாமென்று மறுத்ததை அறிந்தும்,மீரா சொல்லிவிட்டாள் என்பதற்காய் இந்திராவை படிக்க வைக்கும் கணவனை எதிர்க்க முடியாமல் போய்விட்டதே.

“விசாலம் இதுக்கெல்லாம் கோபப்பட்டா ஆகாதுடி.
பொறுமையாத் தான் செய்யனும்.
நான் ஒரு யோசனை சொல்லுறன் கேளு.”

“என்னத்த பொறுமையோ.இந்த மனுசனக் கட்டின நாளிருந்து அதத்தாண்டி பண்ணுறன்.என்னப் பொண்ணு கேட்டப்போ அந்தக் கிழவி மீராவுக்காகத் தான் உன்னக் கல்யாணம் பண்ணி வைக்கிறன்டு சொன்னப்போ நான் சாதாரணமா நினைச்சிட்டன்”

இப்ப எதுக்கு பழச பேசுற? புலம்பாம புதுசா பேசலாம் என்றாள் விசாலத்தின் ஒன்று விட்ட சித்தி மகள் அலமு. கிட்டத்தட்ட விசாலத்தின் வயதுதான்.இவளின் தனித்துவமே அடுத்தவர்கள் பற்றி புரளி பேசுவது.வீட்டில் நடக்கும் பெரும்பாலான விடயங்களை புடுங்கி எடுப்பதில் கெட்டிக்காரி. ஆறுதல் என்ற பேரில் இன்னொருத்தருக்கு எதிராக இலகுவாய் திருப்பி விடுவாள்.
இப்போது விசாலத்திற்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

“புதுசா பேச என்ன இருக்காம்? சலித்துக் கொண்டாள் விசாலம்

“இருக்கு.நான் ஒன்னு சொல்லுறன் அதுபோல செய்.நம்ம இந்திரா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடு.அதான் நல்லது.அப்போதான் அவ பங்க சரியா பிரிச்சிக்கலாம்.
இல்லன்னா மீராவுக்கே அதிகமா போயிடும். காசு பணம் படிப்பு இதெல்லாம் அதிகம் அவ கையில விளையாடுது.அதான் இந்த ஆட்டம்.எல்லாம் உம் புருஷன சொல்லனும்.நீதியில்லாம அவமேல மட்டும் பாசம் காட்டுறாரே.பாவம் நம்ம இந்திரா என அநியாயத்துக்கு வருத்தப்பட்டாள்.

வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தாள்.அலமு சொல்லும் யோசனை சரியென்றேபட்டது. இந்தப் பேச்சை எடுத்தாலே கிழவி விடாதுதான்.அவள விடப் பெரியவ இருக்கா என்ன அவசரம் என்டு நந்தி மாதிரி தடுக்க வந்திடும்.ஆனா அதுக்கெல்லாம் சோரக்கூடாது. முதல்ல நல்ல பையனா நம்மளே பார்த்து வச்சிட்டு தான் அவர்கிட்ட நச்சரிக்கனும்.உடனே அதற்குரிய வேட்டையில் தீவிரமாக இறங்கினாள் விசாலம்.

அதன் முதல் படியாய் வீட்டுக்கு வந்தவள்“மீரா உங்கிட்ட பேசனும்”என்ற விசாலத்தை
ஆச்சர்யமாக பார்த்தாள் மீரா.என்கூட என்ன பேசப்போறாங்க என நினைத்தவளாய் “சொல்லுங்க சித்திம்மா” என்றாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை அப்படி அழைத்ததாய் ஞாபகம்.

“நான் இந்திராவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கன். இத நான் உங்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லதான்.ஆனாலும் ஏன் சொல்றன்னா உன்ன வச்சிட்டு இந்திராவுக்கு கல்யாணம் பண்ண உங்கப்பாவும் பாட்டியும் சம்மதிக்க வாய்ப்பில்ல.ஏதாவது சொல்லிக் குழப்பிடுவாங்க. அப்படி ஏதும் சொன்னா நீதான் பார்த்துக்கனும்.”

“சரி”. என்பதுடன் நகர்ந்தாள்.

மீராவின் மனதில் சின்னதாய் ஒரு வருத்தம்படர்ந்தது.இந்துவிற்கு இப்போதானே பதினெட்டு வயது.அதுக்குள்ள கல்யாணமா?இதுபத்தி அவரிடம் பேசினால் நிச்சயம் விளங்க வாய்ப்பில்லை.வீண் சண்டை தான் வளரும்.அப்பா பார்த்துக்கட்டும் என விட்டுவிட்டாள்..

நாட்கள் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன.கோபால் மனதில் மீராவின் திருமணம் பற்றிய கவலை குறைந்தது போலிருந்தது. காரணம் அமுதா சொன்ன வரன் தான்.விசாரித்த மட்டில் குறையேதுமில்லை. மதன் பார்க்க நன்றாகவே இருந்தான்.மீராவிடம் பேசுவது மட்டும் தான் பாக்கியாக இருந்தது.அவள் சரியென்றாள் தான் மாப்பிள்ளை வீட்டில் பேசமுடியும்.

பொழுது சாயும் நேரம் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு தேனீரை குடித்துக் கொண்டிருந்தார் கோபால். என்னங்க..? என்ற அழைப்பில் திரும்பியவர் சொல்லு விசாலம். என்ன??அவர் மனது இலேசாக இருந்தது.மீராவின் கல்யாணம் பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தார்.

அது...நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.

“சொல்லேன்.நான் மட்டும் தானே இருக்கன்.மீராவும் அம்மாவும் தோப்புப் பக்கம் போவதாகச் சொன்னாங்க.இந்திராவையும் காணோம்.அவ எப்போதும் பொழுது சாய்ந்த பிறகு தானே வர்ரா. கேட்டா பயந்தபடி மெதுமெதுவாக பதில் வரும்.அவ சொல்லும் ஒன்னுமே எனக்கு விளங்காது.இந்திரா எங்க போறா?எப்போதும் இருட்டு பொழுதுல தான் வர்ரா. விசாரிச்சியா?

“அவ விபரம் இல்லாத மண்ணு.எங்க போவா.எல்லாம் அவ தோழி வீட்டுக்குத்தான்.இங்க இருந்தா பொழுதும் போகனுமே புள்ளக்கி.”

ம்ம்ம்….அப்போன்னா சரிதான்.என்ன சொல்ல வந்த?

“எல்லாம் நம்ம இந்திரா கல்யாண விஷயம் தான்.’

எங்கோ பார்த்தபடி பேசியவர் இப்போது அவள் பக்கம் பார்வையைத் திருப்பினார்.

“நல்ல பையன்.எல்லாருமே நல்லமுன்னு தான் சொன்னாங்க. பள்ளிக்கூட டீச்சர்.அவர் அம்மாகிட்ட போய் நம்ம அலமு கேட்டிருக்கா. போட்டோ கூட காட்டியிருக்கா. எனக்கே தெரியாது.ஆனா சம்மதம்னு சொன்னாங்களாம்.நீங்க சரின்னா போய் பார்த்து பேசி முடிச்சிடலாம்.

உனக்கு அறிவே இல்லியா. மூனு வயசு பெரியவ மீராவ வச்சிக்கிட்டு இந்திராவுக்கு கல்யாணம் பேசுற.என் கோபத்த கிளறாத. உனக்கு அவ மேல அக்கறை இல்லாம இருக்கலாம்.ஆனா எனக்கு இருக்கு.

“அப்போ இந்திரா உங்க பெண் இல்லியா?”

இரண்டு பேரும் என் பொண்ணுங்க தான்.நீதான் பிரிச்சிப் பார்க்குற.
இந்திராவுக்கு என்ன அவசரம்?? மீராவுக்குப் பார்த்துட்டு பண்ணலாம்.

“இந்திரா நான் பெத்த பொண்ணு. எனக்கு அவ மேல மட்டும் தான் அக்கறை வரும்.அவள் குரல் உயர்ந்தது. நானும் எத்தனை வருஷமா பொறுத்துப் பார்க்குறது.எல்லாத்துக்கும் அவளயே தானே தூக்கிக் கொண்டார்றீங்க.நீங்க சம்மதிக்கப் போவதில்லன்னு எனக்குத் தெரியும். ஏன்னா எல்லா சொத்தையும் அவளுக்கே கொடுத்திட்டு எம்பொண்ண ஓட்டான்டியா ஆக்கப் போறீங்க.” அநியாயமாக பழிபோட்டுப் பேசினாள் விசாலம்.

கேட் வாசலை தாண்டி அவள் குரல் ஒலித்தது.உள்ளே வந்த மீராவுக்கு கேட்காமல் விடுமா என்ன? கோபமாய் திட்ட வாயெடுத்த பாட்டியை அடக்கியபடி “வா பாட்டி இங்க இருப்பம்.அவங்க பேசட்டும்.”என பாட்டியை இழுத்து வைத்தாள் மீரா.

“கத்தாம பேசுறியா? நீ நினைக்கிற மாதிரி என்னால ஆட முடியாது.”

“ஓஹ்..அந்தக் கிழவி சொன்னாத் தான் கேட்பீங்க? என்ட பேச்சுக்கு எப்போ காது கொடுத்தீங்க?. உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு புளுங்கிப் புளுங்கி கிடந்ததுக்கு பதிலா தனியாவே வாழ்ந்திருக்கலாம்.இவ்வளவு நாள் அடங்கிக் கிடந்த வன்மங்களை கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பா அடித்து விடுவாரோ எனப் பயந்தவள் “பாட்டி நீ வராத. எதாவது பேசிட்டே இருப்ப.நான் போய் பார்க்குறன்” என்றவாறு உள்ளே சென்றாள் மீரா.அவள் நினைத்தது போலவே நடந்திருந்தது.

மீராவை கண்டதும் ஆத்திரம் பெருக, “படிப்பு படிப்புன்னு ஊர்விட்டு ஊர் போனவ யார் கூடயாவது ஓடிப்போய் இருக்கவேண்டியது தானே” என்றாள் விசாலம்.

ஆவேசமாக நெருங்கியவரை,”அப்பா விடுங்கப்பா வேண்டாம்.” என கோபாலை தடுத்தவள், விசாலம் பக்கம் திரும்பி,”என் மேல ஏன் இவ்வளவு கோபம்னு எனக்குத் தெரியல்ல.எனக்கு நினைவு தெரிந்த நாள்ல இருந்த என் வேலய முடிஞ்ச அளவு நானேதான் பார்த்துப்பன்.
உங்கள அத பண்ணிக் கொடு இதப் பண்ணிக் கொடுன்னு தொந்தரவு செய்த நினைவு கூட எனக்கில்ல. இந்து மேல அப்பாவுக்கு பாசம் இல்லன்னு எத வைத்து முடிவு பண்ணீங்க? அவதான் அப்பாக்கூட அவ்வளவா பேசமாட்டா. ஒதுங்கியிருப்பா. நான் அப்டியில்ல நல்லாவே பேசுவன்.அது என்ட இயல்பு.அதனால வேணும்டா உங்க பார்வைக்கு அப்படி விளங்கலாமே தவிர அவருக்கும் எல்லா அக்கறையும் அன்பும் இருக்கு.என்ன பொறுத்தவரைக்கும் ஒழுக்கம் ,படிப்பு இதுதான் விலை மதிக்க முடியாத சொத்து.அது என்கிட்ட இருக்கு.வேற எதுவும் வேணாம்.

“அப்பா…..இந்துக்கு இவங்க சொல்ற வரனையே பாருங்க.ப்ளீஸ்ப்பா வீண் வாக்குவாதம் வேண்டாம்.” என நீளமாய்ப் பேசி முடித்துவிட்டாள் மீரா.

கோபாலுக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது.அவ ஆசப்பட்டு கேட்ட ஒரே விஷயம் ஊரோட மாப்பிள்ளை தான்.அதனால்தான் இந்த வரன் மீராவுக்கு பொருந்தி வந்ததாக மனதில் நிம்மதி தோன்றியது.ஆனால் கடைசியில் இப்படி முடிந்துவிட்டதே கடவுளே..என நொந்துகொண்டார்.

பாவம்….ஊர் ஊராய் அலைவதே தன் மகளின் விதி என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
Top Bottom